இலங்கை தோட்டத் தொழிலாளர்களை கம்பனி, பொலிஸ் மற்றும் தொழிற்சங்கங்களும் வேட்டையாடுவதற்கு எதிரான போராட்டத்தை சோ.ச.க. வழிநடத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

எம். தேவராஜா இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழுவின் நீண்டகால உறுப்பினர் ஆவார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கட்சி முன்னெடுக்கும் போராட்டத்திலும், தீவின் தொழிலாள வர்க்கத்தின் இந்த முக்கிய பிரிவினர் மத்தியில் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பும் போராட்டத்திலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். மே 1 அன்று உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் நடத்திய 2021 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் அவர் இந்த உரையை ஆற்றினார்.

2021 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் எம். தேவராஜா ஆற்றிய உரை

தோழர்களே,

உலகளவில் வளர்ச்சியடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை, இந்தியா மற்றும் தெற்காசியாவின் ஏனைய பகுதிகளிலும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் தலைதூக்கி வருகின்றன.

இலங்கையில் இலட்சக்கணக்கான தேயிலை மற்றும் இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பெப்ரவரி 5 ஆம் திகதி தங்கள் அன்றாட ஊதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்தக் கோரி வேலைநிறுத்தம் செய்தனர். ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளியும் பிரதான தோட்டத் தொழிற்சங்கமுமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்திற்கும் தோட்ட கம்பனிகளுக்கும் எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்காக இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுக்கவில்லை. மாறாக, தங்களின் அன்றாட ஊதியத்தை மிக அற்ப அளவு உயர்த்தக் கூட கம்பனிகள் தொடர்ந்து மறுத்து வருவதால், தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் கோபத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.

இலங்கையின் மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தில் உள்ள மஸ்கெலியாவில் ஓல்டன் தோட்டத்தின் சுமார் 500 தொழிலாளர்கள், 1000 ரூபாய் நாள் சம்பளம் கோரியும், தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்தும், பெப்ரவரி 2 முதல் மார்ச் 26 வரை தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிக்க மறுத்த போதிலும், தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர். வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள், தோட்ட முகாமையாளரின் பங்களாவுக்கு முன்னால் நடத்திய காத்திரமான போராட்டத்தை பற்றிக்கொண்ட ஓல்டன் தோட்ட நிர்வாகமும் பொலிசும், வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் மீது பாரதூரமான பழிவாங்கலை கட்டவிழ்த்துவிட்டுள்ளன.

இந்த வேட்டையாடலின் ஒரு பகுதியாக, 20 தொழிலாளர்களும் இரண்டு இளைஞர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, ஒரு உள்ளூர் நீதவானால் விளக்கமறியலில் அடைக்கப்பட்டனர். பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளில் மட்டுமே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஓல்டன் நிர்வாகம், கைது செய்யப்பட்ட 20 பேர் உட்பட 38 தொழிலாளர்களை வேலை நீக்கியுள்ளது. 38 தொழிலாளர்களும் இரண்டு இளைஞர்களும் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இந்த வேட்டையாடலுக்கு ஆதரவாக தோட்ட நிர்வாகத்துடனும் பொலிசுடனும் ஒத்துழைக்கின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான் கைது செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலைக் கூட தயார் செய்து கொடுத்துள்ளது. தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட, தோட்டத்தில் செயல்படும் ஏனைய அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களைப் பாதுகாக்க எதுவும் செய்யாமல், இந்த பழிவாங்கலுக்கு உடந்தையாக இருக்கின்றன.

நாள் சம்பள உயர்வுக்காகவும் நிர்வாகம் திணித்துள்ள வேலைச் சுமையை குறைப்பதற்காகவும் தோட்டத் தொழிலாளர்களை முன்னெடுக்கும் போராட்டங்களை, இந்த அடக்குமுறை மூலம் நிறுத்த முடியாமல் போயுள்ளது. அடுத்தடுத்து தோட்டங்களில் தொழிலாளர்கள் போராட்டங்களில் இணைந்துகொள்கின்றனர். இந்த நிலைமைகளின் கீழ், இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, இந்த போராட்டங்களை ஒன்றிணைப்பதற்கும் அவர்களுக்கு ஒரு சோசலிச முன்னோக்கை வழங்குவதற்காகவும் நடவடிக்கைக் குழுக்களை கட்டயெழுப்புவதற்காக ஓல்டன் தோட்டத்திலும் ஏனைய வேலைத் தளங்களிலும் பலம்வாய்ந்த முறையில் தலையிட்டுள்ளது.

இவ்வாறு தோட்டக் கம்பனியும் நிர்வாகமும் கட்டவிழ்த்து விட்டுள்ள வேட்டையாடலுக்கு எதிராக ஓல்டன் தொழிலாளர்களைப் பாதுகாக்கின்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது சோசலிச சமத்துவக் கட்சி, இது ஆளும் உயரடுக்கும் பெரு வணிகமும் இராஜபக்ஷ அரசாங்கமும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ள தாக்குதலின் ஒரு பகுதி ஆகும் என்று தெளிவுபடுத்துகிறது. ஓல்டன் தொழிலாளர்கள் மீதான அனைத்து போலி குற்றச்சாட்டுகளையும் விலக்கிக்கொள்ளுமாறும், வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக மீண்டும் வேலை கொடுக்குமாறும் நாங்கள் கோருகின்றோம். இந்த பிரச்சாரம், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரதும் பரந்த ஆதரவைப் பெற்றுள்ளது.

தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ந்து வரும் எதிர்ப்பிற்கு பிரதிபலிக்கும் தெற்காசியாவின் ஆளும் வர்க்கங்கள், உலகெங்கிலும் உள்ள தங்கள் சகாக்களைப் போலவே, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் இனவாதத்தைத் தூண்டிவிடுவதோடு, சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கான தங்கள் திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளன. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலை தூக்க முயற்சிப்பதாக கூறிக்கொண்டும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைப் பற்றிக்கொண்டும், இலங்கையில் இராஜபக்ஷ அரசாங்கம் தமிழர்-விரோத, முஸ்லீம்-விரோத பேரினவாதத்தைத் தூண்டிவிடுகிறது.

இலங்கையில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் முதலாளித்துவக் கட்சிகளும், தங்களது சொந்த பிற்போக்கு தேசியவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் அதே முறையில் பதிலளித்துள்ளன. இதன் மூலம் அவையும் தொழிலாள வர்க்கத்தை இன ரீதியில் பிளவுபடுத்த ஒத்துழைக்கின்றன.

கொழும்பில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் புலிகளுக்கு எதிராக நடத்திய கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால தமிழர்-விரோத இனவாத யுத்தம், 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது. புலிகளின் இந்த தோல்வியானது வெறுமனே ஒரு இராணுவ தோல்வி மட்டுமல்ல. அது அதன் பிற்போக்கு, திவாலான முதலாளித்துவ பிரிவினைவாத வேலைத் திட்டத்தின் விளைவும் ஆகும். அந்தக் கொள்கையின்படி, புலிகள் இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு முற்றிலும் விரோதமாக இருந்ததுடன், ஏகாதிபத்திய சக்திகளிடம், பிரதானமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆளும் வர்க்கம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அவற்றின் கூட்டாளியான இந்திய முதலாளித்துவத்திற்கும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த சக்திகள், கொழும்பு அரசாங்கங்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் என அவர்கள் கூறிக்கொண்டனர்.

2009 இல் புலிகளின் இராணுவத் தோல்விக்குப் பிறகும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழேயே உள்ளதுடன் தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறை தொடர்வதானது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் சாக்குப்போக்கில் 30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இனவாத யுத்தத்தின் உண்மையான வர்க்க தன்மையை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகள், தமிழ் உயரடுக்கின் சிறப்புரிமைகளை தக்கவைத்துக்கொள்ள, சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் உயரடுக்குகளுக்கு இடையில் ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை செய்துகொள்வதற்கு கொழும்பை நெருக்குவதற்காக ஏகாதிபத்தியங்களின் தயவை நாடியுள்ளன. இதற்காக அவை, சீனாவுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இந்தியாவினதும் இராணுவ-மூலோபாய தாக்குதலை ஆதரிக்கும் பிற்போக்கு ஏகாதிபத்திய சார்பு கொள்கைகளைத் தொடர்கின்றன. அதே வழியில், 2015 ஜனவரியில் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தை நீக்கி சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தை நியமிப்பதற்காக இந்தியாவின் உதவியுடன் அமெரிக்கா முன்னெடுத்த ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக ஆதரவளித்தது. வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்த நிலைமைகளின் கீழும், சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்ட சிக்கன நடவடிக்கைகள் உட்பட, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய நிலைமைகளின் கீழும் கூட, சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்துடன் தமிழ் கூட்டமைப்பு முழுமையாக ஒத்துழைத்தது.

சோசலிச சமத்துவக் கட்சி, தேசிய பிரிவினைவாதத்தை முற்றிலுமாக நிராகரிப்பதுடன், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலம், முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசுவதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே, ஜனநாயக உரிமைகளை வெல்ல முடியும் என்று வலியுறுத்துகிறது. இதற்காக, அரசியல் மாற்றத்தைச் செய்யக் கூடிய ஒரே முன்னணி சமூக சக்தியான தொழிலாள வர்க்கம், முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும், அவர்களின் ‘இடது’ ஒட்டுண்ணிகளிடமிருந்தும் சுயாதீனமாக தன்னை ஒழுங்கமைத்து அணிதிரள வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் இந்த ஐக்கியப்பட்ட இயக்கத்தின் நோக்கம், முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து, தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதாகும்.

Loading