ஜூலியன் அசாஞ்சின் சுவரோவியம் பேர்லினில் திரைநீக்கம் செய்யப்பட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பேர்லினில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) தலைமையகமான வில்லி பிராண்ட் ஹவுஸுக்கு எதிரே விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின் பாதுகாப்பிற்காக, 20 மீட்டர் உயர சுவரோவியத்தை சுவரோவியவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

#freeassangeyesterday என்பதை தாங்கிய சுவரோவியம், செய்தியாளரின் தொடர்ச்சியான தடுப்புக்காவல் தொடர்பாக கவனத்தை ஈர்த்ததற்காக விக்கிலீக்ஸால் பாராட்டப்பட்டது. இது விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட கூட்டுகொலை ஒளிப்பதிவின் ஆண்டு நிறைவைக் குறித்ததுடன், மேலும் லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரக புகலிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அசாஞ் பிரிட்டிஷ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையும் குறிப்பிடுகின்றது.

வில்லி பிரண்ட் அலுவலகத்தின் முன்னை யூலியன் அசாஞ்சின் சுவரோவியம்(credit: WSWS media)

"கூட்டு சிலுவையில் அறையப்படுதல்" என்ற சுவரோவியம் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதாகும். அசாஞ்சிற்கு ஒரு செய்திதுறை என்று எழுதப்பட்ட உடல் கவச ஆடை அணிந்து புகைப்படக்கருவி கழுத்தில் தொங்கவிட்டபடி பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கக் கொடி உச்சியில் பதித்த ஒரு சிறை கண்காணிப்பு கோபுரத்தின் மீது சிலுவையில் அறையப்பட்டுள்ளதாக அதில் காட்டப்படுகின்றது. அவரது காலடியில் இராணுவ படையினரும் மற்றும் மேலே ஹெலிகாப்டர்களும் பறக்கின்றன. இதன் பின்னணியில் எண்ணெய் கிணறுகள் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கட்டிடம் காட்டப்படுகின்றது.

1999 முதல் சாந்தி, சிக்னல் மற்றும் டப்தார் ஆகியோரை கொண்ட கூட்டு கலைஞர்களுடன் கேப்டன் போர்டர்லைன் இந்த சுவரோவியத்தை தயாரித்தார். அவர்களின் வலைத் தளத்தின் படி அசாஞ்சின் சுவரோவியம் சாந்தி மற்றும் சிக்னலின் வேலையாகும். கேப்டன் போர்டர்லைனின் “முக்கிய செயல்பாடு உலகளவில் சமூக விமர்சன மற்றும் அரசியல் சுவரோவியங்களை வரைவதுதான். ஆனால் வீதிக்கலை பிரச்சாரங்கள், திரைக்காட்சிகள், அசைவூட்ட படங்கள், திரைப்படங்கள் மற்றும் கலைக்கண்காட்சி ஆகியவை அவர்களின் கலை கருவிகளில் அடங்கும்.”

ஏப்ரல் 5, 2010 அன்று ஈராக்கில் இடம்பெற்ற கூட்டுகொலை ஒளிப்பதிவை விக்கிலீக்ஸ் வெளியிடப்பட்ட 11 வது ஆண்டு நிறைவுக்கு சற்று முன்னர் இந்த சுவரோவியம் வெளியிடப்பட்டது. ஜூலை 12, 2007 அன்று அமெரிக்க இராணுவத்தால் படமாக்கப்பட்ட இந்த காட்சிகள், சட்டவிரோத, புதிய காலனித்துவ அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பின் இரத்தக்களரியான போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தின.

ஈராக்கிய தலைநகர் பாக்தாத்தில் நிராயுதபாணியான பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது அப்பாச்சி ஹெலிகாப்டரில் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அது காட்டியது. எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படுத்தாத தங்கள் தேவைகளுக்காக செல்லும் ஒரு குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்று படையினர் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். அங்கீகாரம் வழங்கப்படும்போது, இரண்டு ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் உட்பட 18 பேர் வரை கொல்லப்பட்ட ஒரு படுகொலையை படையினர் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இந்த பயங்கரம் கொலையாளிகளின் கொண்டாட்டத்தையும் மற்றும் இரத்த வெறியையும் கொண்டிருந்தது.

கேப்டன் போர்டர்லைன் சுவரோவியத்தின் 34 வினாடி அசைவூட்டபடங்களையும் உருவாக்கியுள்ளார். எண்ணெய் கிணறு அமுக்கிகள் மற்றும் இராணுவ விமான ஜெட் முன்னும் பின்னுமாக பறந்து பொதுமக்கள் மீது குண்டு மழை பெய்ததைக் கேட்கிறோம்.

இந்த காட்சிகள் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் மீது அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆயினும்கூட, ஒரு தசாப்தத்தில், 2007 இன் படுகொலைக்கு அல்லது ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்ட சட்டவிரோத படையெடுப்பிற்கு காரணமானவர்கள் யாரும் நீதியின் முன் கொண்டு வரப்படவில்லை.

கூட்டு கொலைக் காட்சிகளிலிருந்து பின்விளைவுகளை சந்தித்த ஒரே நபர்கள், அதை உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர்களான ஒளிப்பதிவை கசியவிட்ட அமெரிக்க இராணுவ செல்சியா மானிங் மற்றும் அதை வெளியிட்ட அசாஞ் மட்டுமே.

அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் ஆவணங்களை கசியவிட்டதற்காக மானிங் ஒரு வருட தனிமைச் சிறை உட்பட ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்தார். 2017 ஆம் ஆண்டில் ஒபாமா ஜனாதிபதி பதவியின் முடிவில் ஜனாதிபதி மன்னிப்பு இன்றி அவரது தண்டனை மாற்றப்பட்டது. ஆனால் பின்னர் அசாஞ் இற்கு எதிராக பயன்படுத்தக்கூடிய தகவல்களை வழங்க மறுத்ததற்காக மானிங் துன்புறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீண்டும் உளவியல் அதிர்ச்சிக்கு ஆளானதுடன் மற்றும் போதுமான மருத்துவ கவனிப்பு அணுக மறுக்கப்பட்டு மற்றும் தண்டனைக்குரிய நிதி நடவடிக்கைகளால் முடக்கப்பட்டார்.

அசாஞ் மீதான தாக்குதல் இன்னும் வெறித்தனமாகவும் விரோதமாகவும் உள்ளது. ஒளிப்பதிவு வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே ஸ்வீடன் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை விசாரணை தொடங்கப்பட்டது. அதன் நோக்கம் அசாஞ்சை நிந்தனைக்குள்ளாக்குவதும், சர்வதேச அளவில் தாராளவாத மற்றும் போலி இடது சக்திகளின் ஆதரவைப் பெறுவதும், அமெரிக்காவிற்கு ஒப்படைப்பதும் ஆகும்.

2010 இல், அப்போதைய அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் ஜோ பைடென் அசாஞ்சை ஒரு "உயர் தொழில்நுட்ப பயங்கரவாதி" என்று அழைத்தார். அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் பெருகிய முறையில் மேற்கொள்ளப்பட்ட நீதித்துறைக்கு அப்பாற்பட்ட கொள்கைகளுக்கு ஏற்ப, அவரது படுகொலைக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது.

போலி பிரச்சாரம் பயனற்றுப்போனபோது, தொழிற்கட்சித் தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான பிரிட்டிஷ் முடிக்குரிய வழக்குத்தொடுனர் அலுவலகம், பின்னர் அங்கு தனது பணிக்காக ஸ்வீடிஷ் புலனாய்வாளர்களுக்கு, “நீங்கள் எதற்கு அஞ்சத்தேவையில்லை!!! ” என்று எழுதியது.

இத்தகைய முயற்சிகளை எதிர்கொண்டு, அசாஞ் ஈக்வடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு அவர் ஏழு ஆண்டுகள் தன்னிச்சையாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார். அமெரிக்காவில் அவரை கைது செய்ய இரு கட்சி அழைப்புகள் வந்தன. 10 ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸுக்கு 2018 இல் ட்ரம்ப் நிர்வாகம் ஈக்குவடோர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கடிதம் எழுதியிருந்தனர்.

தூதரகத்தில் அவரது ஆண்டுகள் முழுவதும் அமெரிக்க அமைப்புகளால் அசாஞ் உளவு பார்க்கப்பட்டார். வக்கீல்கள் மற்றும் மருத்துவர்களுடனான சிறப்பு தொடர்புகள் கண்காணிக்கப்பட்டு அவரது தனிப்பட்ட ஆவணங்கள் திருடப்பட்டன. அவரது கடத்தல் அல்லது படுகொலைக்கான திட்டங்கள் குறித்து சிஐஏ தொடர்ந்து விவாதித்தது.

சுவிடிஷ் விசாரணை இறுதியாக வீழ்ச்சியடைந்த 2019 ஆம் ஆண்டில், ஈக்குவடோர் ஜனாதிபதி லெனின் மோரேனோ அசாஞ்சை பிரிட்டிஷ் பொலிஸிடம் ஓப்படைக்க ஒப்புக்கொண்டார். அவரது அரசியல் புகலிடம் ஒருதலைப்பட்சமாகவும் சட்டவிரோதமாகவும் நிறுத்தப்பட்டது. மேலும் ஏப்ரல் 11, 2019 அன்று, பிரிட்டிஷ் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெளிவாக உடல்நிலை சரியில்லாத அசாஞ் தூதரகத்திலிருந்து வெளியே இழுத்து வந்தனர்.

அப்போதிருந்து, அசாஞ் ஒரு போலி விசாரணையில் முடிவடைந்த ஒரு போலி-சட்டரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானார். பிணை மீறலுக்காக அதிகபட்ச தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட அவர், பெல்மார்ஷின் அதிகபட்ச பாதுகாப்பு சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்த தண்டனையை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் அவர் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவராக இருந்தபோதும் எந்தவொரு குற்றமில்லாமல் தண்டனை பெற்றார். சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் பெரிதும் பரவியபோதும். அவருக்கு முறையான சட்ட அணுகல் மற்றும் அவரது பாதுகாப்புக்கு தேவையான பொருட்கள் பலமுறை மறுக்கப்பட்டன. அவரது விசாரணையில் அவர் ஆரம்பத்தில் ஒரு கண்ணாடி கூண்டில் இருக்க வைக்கப்பட்டு அவரது வழக்கறிஞர்களுடன் தொடர்பு கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டார்.

இந்த தொடர்ச்சியான தடைகள் அமெரிக்க அரசாங்கத்தின் பிரச்சாரத்தை அதிகரிக்கவும் குற்றச்சாட்டுகளை குவிக்கவும் அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டபோது முன்வைக்கப்பட்ட ஆரம்ப குற்றச்சாட்டு, கணினி ஊடுருவலுக்கான சதித்திட்டத்தை மட்டுமே சுமத்தியது. இதற்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆறு வாரங்களுக்குப் பின்னர், 1918 உளவுச் சட்டத்தின் கீழ் 17 குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டு, மொத்தமாக 170 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணையின் முதல் கட்டம் ஏற்கனவே முடிந்தபின் முன்வைக்கப்பட்ட மேலும் குற்றச்சாட்டு, குற்றச்சாட்டுகளின் கட்டமைப்பை விரிவுபடுத்தியது. ஏகாதிபத்தியத்தை அம்பலப்படுத்தக்கூடிய எந்தவொரு தகவல்துறை நடவடிக்கைக்கும் வழக்குத் தொடரப்படும் என்பது மேலும் வெளிப்படுத்தப்பட்டது.

அசாஞ் மீதான தாக்குதல் அனைத்து பத்திரிகை சுதந்திரத்தையும் நோக்கியது, அடிப்படை பத்திரிகை நடைமுறைகளை குற்றவாளியாக்குவது மற்றும் அவற்றை தேசத்துரோகம் அல்லது உளவுபார்ப்பதுடன் ஒப்பிடுவது என்று கேப்டன் போர்டர்லைன் கூறுவது சரியானதே.

ஆகவே, இந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி மாவட்ட நீதிபதி வனேசா பரெட்ய்சர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிராக தீர்ப்பளித்தபோது ஆச்சரியமாக இருந்தது. எவ்வாறாயினும், அவரது அரசியல்ரீதியாக கணக்கிடப்பட்ட தீர்ப்பு அமெரிக்காவில் அசாஞ்சின் சிறைவாசம் அவரது மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என்ற அடிப்படையில் மட்டுமே ஒப்படைக்கப்படுவதைத் தடுத்தது. சுதந்திரமான பேச்சு மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை மறுப்பது மற்றும் ஜனநாயக உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வது உள்ளிட்ட குற்றச்சாட்டு வழக்கின் மற்ற எல்லா கூறுகளையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

இது ஒரு அமெரிக்க மேல்முறையீட்டை எளிதாக்கும் நோக்கம் கொண்டது, இதை நீதித்துறை நன்றியுடன் ஒப்புக் கொண்டது. இதற்கிடையில், பரெய்ட்சர் மீண்டும் அசாஞ்சின் ஜாமீனை மறுத்தார். இப்போது அவருக்கு எதிராக சட்டரீதியான குற்றச்சாட்டுகள் கூட இல்லாமல் உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு இருக்கிறார். பதவிக்குவந்த பைடென் நிர்வாகம் அவருக்கு எதிரான பிரச்சாரத்தை புதுப்பித்து வருகிறது.

முக்கிய சுவரோவியம் ஒரு சரியான நேரத்தில் வந்துள்ளதுடன் மற்றும் வரவேற்கத்தக்க எதிர்ப்புமாகும். ஆனால் சமூக ஜனநாயக கட்சி தலையிடும் என்ற நம்பிக்கைகள் தவறாகும். கடந்த ஆண்டு முன்னாள் கட்சித் தலைவர் சிக்மார் காப்ரியல் அசாஞ்சின் சுதந்திரத்திற்கான அழைப்பில் கையெழுத்திட்ட பல முன்னாள் மத்திய அமைச்சர்களில் ஒருவராவார். அவர் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது (ஜனவரி 2017-மார்ச் 2018) மற்றும் துணைவேந்தராக (டிசம்பர் 2013-மார்ச் 2018) அசாஞ்சிற்கு உதவவும் புகலிடம் வழங்கவும் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. அவர் அவ்வாறு செய்யவில்லை மற்றும் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பின்னோக்கிப் பார்த்தால் கூட அவர் அவ்வாறு செய்திருக்க மாட்டார் என கூறியிருந்தார்.

அவர் கூறினார், “இது போன்ற வழக்குகளை பகிரங்கமாக கையாளாத முடியாது இருக்கும் மத்திய அரசின் ஒவ்வொரு உறுப்பினரையும் நான் புரிந்துகொள்கிறேன். எனது தற்போதைய நிலைமைக்கும் எனது கடந்த காலத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். ” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது நடைமுறை விளைவுகளை ஏற்படுத்தாத வரையில் மட்டுமே அவர் அசாஞ்சிற்கு ஆதரவாக இருக்கிறார்.

காப்ரியல் தொடர்ந்து, "நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நபர்களுடன் பழகுவது, எங்களுக்கு அந்நியர்கள், சில சமயங்களில் எங்களுக்கு வித்தியாசமாக தோன்றும் அல்லது கடுமையான குற்றங்களைச் செய்தவர்கள்" பற்றி பேசினார். அசாஞ் என்ன செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் என்ற என்பதை அவர் குறிப்பிடவில்லை.

கேப்டன் போர்டர்லைன் சுவரோவியம், அசாஞ்சின் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ள உண்மையான பிரச்சினைகள் மற்றும் அவருக்கு எதிராக பயன்படுத்தப்படும் உண்மையான சக்திகள் எவை என்பதை நினைவூட்டுகிறது. ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தியதால் அசாஞ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஒரு அரசியல் தாக்குதலாகும். உண்மையான குற்றவாளிகளை நீதிக்கு முன்னால் நிறுத்துவதற்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திலிருந்து அவரது தலைவிதியும் சுதந்திரமும் பிரிக்க முடியாதவை.

Loading