மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஈக்குவடோர் அரசாங்கம் "வரவிருக்கும் நாட்களில்" அதன் இலண்டன் தூதரகத்திலிருந்து ஜூலியன் அசான்ஜை வெளியேற்ற இருக்கிறது என்பதை மறுத்து, வாரயிறுதி வாக்கில், அது அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு அரசியல் தஞ்சமளிக்கப்பட்டிருப்பதை நீக்குவதற்கான அதன் அச்சுறுத்தலுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள் மற்றும் ஏனைய சர்வதேச உரிமைகளுக்கான அமைப்புகள் உட்பட, அதிகரித்த எதிர்ப்பு எழுந்தது.
அந்த அறிக்கை, ஜனாதிபதி லெனின் மொரேனோ அரசாங்கம் "சில மணி நேரங்களில் அல்லது சில நாட்களில்" அத்தூதரகத்திலிருந்து அசான்ஜை வெளியேற்ற இருப்பதாக ஈக்குவடோர் அரசின் "உயர்மட்ட ஆதார நபர்" ஒருவரிடம் இருந்து விக்கிலீக்ஸிற்கு தகவல் கிடைத்திருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை விக்கிலீக்ஸ் வெளியிட்ட எச்சரிக்கைக்கு விடையிறுப்பாக இருந்தது.
அது அக்கட்டிடத்திலிருந்து அசான்ஜை வெளியேற்ற தயாராகி வருகிறது என்பதனை ஈக்குவடோர் அறிக்கை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் வெளியேற்றப்பட மாட்டார் என்றோ அல்லது எதிர்காலத்தில் எந்தவொரு தருணத்திலும் பிரிட்டன் பொலிஸ் காவலுக்குள் தள்ள அவர் நிர்பந்திக்கப்பட மாட்டார் என்றோ அது எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை, "வரவிருக்கும் நாட்களில் நடக்காது" என்று மட்டுமே அந்த அறிக்கை குறிப்பிட்டது. விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் குறிப்பிட்டதைப் போல, “வரவிருக்கும் நாட்கள்" என்பது வெறும் ஒரு வெற்று வார்த்தை அதற்கு வெவ்வேறு விதத்தில் பொருள்விளங்கப்படுத்த முடியும்.
அந்த அறிக்கை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் வாலென்சியாவின் கருத்துக்களையும் மறுத்துரைக்கவில்லை, அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டதை "தன்னிச்சையாக" முடிவுக்குக் கொண்டு வருவது சர்வதேச சட்டமீறல் என்றாலும் கூட, வெள்ளியன்று அவர் அறிவிக்கையில், அதுபோன்ற நடவடிக்கை எடுக்க அவரது அரசாங்கத்திற்கு உரிமை இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அந்த அறிக்கை, "INA ஆவணங்கள்" குறித்த செய்திகளை விக்கிலீக்ஸ் ட்வீட் செய்த உண்மையை இரண்டு முறை மேற்கோளிட்டது, அந்த ஆவணங்கள் ஊழல், பொய்சாட்சியம் மற்றும் மோசடியில் மொரேனோ அரசாங்கம் உடந்தையாய் இருந்ததை ஆவணப்படுத்துகிறது. அந்த ஆவணங்களை கடந்த பெப்ரவரியில் ஈக்குவடோரின் எதிர்தரப்பு சட்டவல்லுனருக்கு கசிய விட்டதற்கு அசான்ஜ் தான் பொறுப்பு என்று ஆதாரமின்றி வாதிட்டு, அந்த ஆட்சி அசான்ஜ் மீதான தாக்குதல்களை அதிகரிப்பதற்கான ஒரு சாக்குபோக்காக அதைப் பயன்படுத்தி உள்ளது.
ஞாயிறன்று காலை தூதரகத்திற்குள் இரண்டு ஆயுதமேந்திய பிரிட்டன் பொலிஸ் அதிகாரிகள் சென்றனர் என்பது அசான்ஜ் எதிர்கொண்டிருக்கும் தொடர்ச்சியான அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது. பல நிமிடங்கள் அக்கட்டிடத்திற்குள் இருந்த அவர்கள் அங்கே என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை.
அத்தூதரகத்திற்கு வெளியே அசான்ஜின் பாதுகாப்புக்காக தொடர்ந்து போராடி வருகின்ற விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையிலான பிரிட்டிஷ் பொலிஸ் குறித்தும், அப்பகுதியில் பின்புல நடவடிக்கைகளாக தெரிவதையும் ஆவணப்படுத்தி உள்ளனர்.
இன்று காலை இணையத்தள பத்திரிகையாளர் Cassandra Fairbanks, தூதரகத்தில் ஓர் அடையாளம் தெரியாத கார் அதன் ஒரு சக்கரத்திற்கு அருகே இணைக்கப்பட்ட விளக்குகளைக் காரணமின்றி அணைத்து அணைத்து எரியவிட்டதைப் படமெடுத்தார். அதை செய்தவர்களில் ஒருவர் அந்த வாகனத்தை விட்டு வெளியில் வந்து, "அதொன்றும் பிரச்சினை இல்லை" என்று கூறுவதற்கு முன்னதாக, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் எந்த பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று வினவினார்.
பிரிட்டன் மற்றும் ஈக்குவடோரிய அரசாங்கங்கள் அசான்ஜை வெளியேற்றுவதற்கான ஒரு "மூலோபாயத்தில்" ஏற்கனவே உடன்பாடு எட்டியிருப்பதாக வாரயிறுதி வாக்கில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட குற்றச்சாட்டைப் பின்தொடர்ந்து இந்த அச்சுறுத்துகின்ற பொலிஸ் நடவடிக்கைகள் வருகின்றன.
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜோடிக்கப்பட்ட பிணையெடுப்பு குற்றச்சாட்டுக்கள் மீது பிரிட்டன் பொலிஸால் உடனடியாக கைது செய்யப்படலாம் என்பதை அந்த ஆவணம் தெளிவுபடுத்தியது. இது, அமெரிக்க போர் குற்றங்கள், பெருந்திரளான மக்கள் மீதான உளவுபார்ப்பு மற்றும் சட்டவிரோத இராஜாங்க சூழ்ச்சிகளை விக்கிலீக்ஸ் வெளியிடுவதில் அசான்ஜ் வகித்த பாத்திரத்திற்காக அவரைத் துரத்திக் கொண்டிருக்கும் அமெரிக்காவிடம் அவரை ஒப்படைக்கும் சட்ட நடைமுறைகளைச் சுலபமாக்கும்.
அசான்ஜை அத்தூதரகத்திலிருந்து வெளியேற்றுவதற்காக, அதிகரிக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் கீழ்தரமான சூழ்ச்சிகள் குறித்து நிறைய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.
தனிநபர் பிரத்யேக உரிமைக்கான ஐ.நா. சபையின் முதன்மை சிறப்பு செய்தியாளர் Joseph Cannataci அசான்ஜைச் சந்திப்பதற்கான அவரின் முயற்சிகளைக் காலவரிசை கிரமமாக பிரசுரித்துள்ளார். விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்குத் தஞ்சம் வழங்கப்பட்டிருப்பதை முடிவுக்குக் கொண்டு வர ஈக்குவடோரிய அரசாங்கத்தினது முயற்சிகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க காரணி என்னவென்றால், அவர் மீதான அதன் மலைப்பூட்டும் கண்காணிப்பானது ஐ.நா. மற்றும் பரந்த சர்வதேச புலன்விசாரணைகளின் கீழ் வந்து கொண்டிருக்கின்றன என்றது அறிவுறுத்துகிறது.
Cannataci இன் தகவல்படி, அந்த ஆட்சி அவரின் தனிப்பட்ட அந்தரங்க மரியாதையை மீறியுள்ளளதாக குற்றஞ்சாட்டி அசான்ஜ் மற்றும் அவரின் சட்ட வல்லுனர் குழுவிடம் இருந்து மார்ச் 29 இல் ஒரு மின்னஞ்சல் குறிப்பும் ஓர் ஆதாரபூர்வமான புகார் ஆவணமும் அவர் பெற்றிருந்தார். மொரேனோ ஆட்சி அமெரிக்க உளவுத்துறை முகமைகளின் சார்பாக அசான்ஜை உளவுபார்த்து வருவதாக விக்கிலீக்ஸ் வழக்கறிஞர்கள் முன்னதாக வாதிட்டுள்ளனர்.
அன்று அசான்ஜைச் சந்திப்பதற்கான Cannataci இன் முயற்சிகள் வெற்றி அடையவில்லை, ஏனென்றால் தூதரகம் அவர் அழைப்புகளுக்கு பதிலளிக்கவும் இல்லை அல்லது திரும்பி கூப்பிடவும் இல்லை.
அசான்ஜ் உடனான ஒரு சந்திப்பு கோரி மார்ச் 31 இரவு Cannataci ஈக்குவடோரிய அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் செய்தார். ஏப்ரல் 1 வரையில் அவருக்கு எந்த பதிலும் வரவில்லை.
ஏப்ரல் 2 இல், பிரிட்டனுக்கான ஈக்குவடோரிய தூதர் Jaime Marchan, ஒரு சந்திப்புக்கான கோரிக்கை தலைநகர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக பதிலளித்தார். அதன்பின்னர் சிறிது நேரத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் வாலென்சியா கையெழுத்திட்ட ஒரு கடிதத்தில், அசான்ஜ் ஈக்குவடோரிய ஜனாதிபதியின் தனிப்பட்ட பிரத்யேக மரியாதையை "மீறி" இருந்ததாக கூறி, மொரேனோவிடம் இருந்து Cannataci ஒரு புகாரைப் பெற்றார்.
மொரேனோ அதே நாளில், அவரின் ஐபோனின் தகவல்கள் மற்றும் ஜிமெயில் கணக்குகளை அசான்ஜ் தனிப்பட்டரீதியில் "ஊடுருவி" எடுத்ததாகவும், இவை INA ஆவணங்களில் உள்ளடங்கி உள்ளன, அவர் அரசாங்கத்தைச் சூழ்ந்துள்ள ஊழல் மோசடிக்கு விக்கிலீக்ஸ் ஸ்தாபகரே பொறுப்பாவார் என்றும் கூறி, விஷமத்தனமான பேட்டி ஒன்று அளித்தார்.
அசான்ஜ் உடனான சந்திப்புக்கான கோரிக்கை மேற்கொண்டு முன்நகராதவாறு, Cannataci இன் சந்திப்புக்கான மற்றொரு ஏப்ரல் 3 தேதி கோரிக்கையை மார்சன் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவோ அல்லது அதற்கு பதிலளிக்கவோ இல்லை. இதற்கு சில நாட்களுக்குப் பின்னர், தூதரகத்திலிருந்து அசான்ஜ் வெளியேற்றப்பட இருக்கும் தகவல் கிடைத்திருப்பதாக விக்கிலீக்ஸ் அறிவித்தது.
இந்த காலவரிசை கிரமமான சம்பவங்கள், ஊழல்பீடித்த மற்றும் நெருக்கடிக்குள் சிக்கிய ஓர் ஆட்சி அகதி பதிப்பாசிரியர் ஒருவரின் மனித உரிமைகள் மீதான அதன் மீறல்களைப் பொய்கள், தட்டிக்கழிப்புகள் மற்றும் அருவருக்கத்தக்க சூழ்ச்சிகளைக் கொண்டு மூடிமறைக்க முயன்று வருவதன் மீது ஓர் அதிர்ச்சியூட்டும் சித்திரத்தை வழங்குகிறது. மூத்த அரசு அதிகாரிகள் INA ஆவணங்கள் கசிந்ததற்கு அசான்ஜ் தான் பொறுப்பு என்று, அவை பிரசுரிக்கப்பட்டு பல வாரங்களுக்குப் பின்னர், திடீரென ஏன் கூறத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதை இது விளக்குகிறது. அசான்ஜிற்கும் அந்த கசிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது மொரேனோ ஆட்சிக்கு நன்கு தெரியும், ஏனென்றால் அது மார்ச் 2018 இலேயே அசான்ஜின் இணைய மற்றும் தகவல்தொடர்புகளைத் துண்டித்துவிட்டது.
இந்த சூழ்ச்சிகள், மொரேனோ அரசாங்கத்துடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ள அமெரிக்க அரசாங்கத்துடனான நெருக்கமான ஒத்துழைப்பில் நடத்தப்பட்டன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஈக்குவடோரிய அச்சுறுத்தல்கள், ட்ரம்ப் நிர்வாகம் செல்சியா மேனிங்கை சிறையில் அடைத்திருப்பதுடன் பொருந்தி உள்ளன. அமெரிக்க இராணுவத்தின் ஈராக் மற்றும் ஆப்கான் போர் தகவல் பதிவேடுகளையும் நூறாயிரக் கணக்கான இராஜாங்க இரகசிய ஆவணங்களையும் 2010 இல் விக்கிலீக்ஸிற்குக் கசியவிட்ட தைரியமான அந்த ஆவண வெளியீட்டாளரை, அசான்ஜிற்கு எதிராக நீதியரசர்கள் விசாரணையின் முன்னால் பொய்சாட்சி அளிக்க மறுத்ததற்காக, சிறையில் அடைத்துள்ளது.
நீதித்துறை புலன்விசாரணையின் முன்னால் நிற்கக்கூடிய அளவுக்கு, அசான்ஜை அயல்நாட்டிலிருந்து கொண்டு வருவதற்கான ஒரு சட்டபூர்வ வழக்கு ட்ரம்ப் நிர்வாகத்திடம் இல்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. ஈக்குவடோரிய மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் சட்டவிரோத சூழ்ச்சிகள் தொடர்ந்து அம்பலமாகி வருவதும் அசான்ஜிற்கு வழங்கப்பட்ட தஞ்சமளிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அவர்களின் முயற்சிகளைச் சிக்கலுக்கு உள்ளாக்கும்.
அசான்ஜைப் பாதுகாக்கவும் மற்றும் அவருக்கு எதிரான சதிகளைத் தோற்கடிக்கவும் விக்கிலீக்ஸ் தீர்மானகரமாக இருப்பது அவர் வழக்கறிஞர்களில் ஒருவரான ஜெனிபர் ரோபின்சன் சனிக்கிழமை ஆஸ்திரேலியாவில் Channel Seven இன் "சன்ரைஸ்" நிகழ்ச்சிக்கு அளித்த ஒரு பேட்டியில் மிகவும் பலமான வெளிப்பாட்டைக் கண்டது.
“உலகெங்கிலுமான அரசாங்கங்களின் போர் குற்றங்கள், மனித உரிமை துஷ்பிரயோகங்கள் மற்றும் ஊழல்கள் குறித்து தகவல் வெளியிட்டதற்காக" முந்தைய ஈக்குவடோரிய அரசாங்கத்தால் அசான்ஜிற்கு தஞ்சம் வழங்கப்பட்டது என்பதை ரோபின்சென் சுட்டிக்காட்டினார். அசான்ஜ் சிட்னி சமாதான விருது மற்றும் 2011 இல் நிகரில்லா பத்திரிகையியலுக்கான வால்க்லே விருதுகளை பெற்றிருப்பதை அவர் நினைவுகூர்ந்தார்.
நடவடிக்கைகளைப் பிரசுரித்ததற்காக "ஓர் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் அமெரிக்காவில் வழக்கில் இழுக்கப்படுவது" “தீவிரமான நிலைமை" என்று ரோபின்சன் எச்சரித்தார். “இதுவே எகிப்து, அல்லது துருக்கியாக இருந்திருந்தால், ஆஸ்திரேலிய அரசாங்கம் அதை விமர்சித்திருக்கும் என்பதோடு அதன் குடிமக்களுக்காக முன்நின்றிருக்கும்,” என்று கூறிய அப்பெண்மணி, “ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த விடயத்தில் ஏன் அதை செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
2012 இல் அப்போதைய தொழிற் கட்சி அரசாங்கம் அவரைப் பாதுகாக்கவில்லை என்பதால் தான் அசான்ஜ் ஈக்குவடோரிய தூதரகத்தில் தஞ்சம் கோர நிர்பந்திக்கப்பட்டார் என்று ரோபின்சன் குறிப்பிட்டார். அமெரிக்காவிடம் ஒப்படைப்பதில்லை என்ற உத்தரவாதத்துடன் அசான்ஜைப் பாதுகாப்பாக ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு வர ஆஸ்திரேலிய அரசாங்கம் தலையிட வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.
ஆஸ்திரேலியா "தெளிவாக இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது,” என்பதை அந்நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கதாகும். அசான்ஜின் மோசமடைந்து வரும் உடல்நலம் குறித்து அவரின் உடனிருந்தவர் கவலை வெளியிட்டார்.
ரோபின்சன் விவரித்த அந்த முதல்கட்ட கோரிக்கையை அடைவதற்கும், அசான்ஜிற்கான அதன் கடமைப்பாடுகளை நிறைவேற்ற ஆஸ்திரேலிய அரசாங்கத்தை நிர்பந்திப்பதற்கும் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மக்கள் உரிமைகளுக்கான அனைத்து பாதுகாவலர்களின் ஒரு பாரிய அரசியல் இயக்கத்தைக் கட்டமைப்பது அவசியமாகிறது. போர் மற்றும் சமத்துவமின்மைக்கு பெருந்திரளான மக்களிடையே உள்ள கோபம், மற்றும் வர்க்க போராட்டத்தின் மேலெழுச்சிகளுக்கு மத்தியில், இந்த தீர்க்கமான போராட்டமானது சர்வதேச அளவில் அரசாங்கங்கள் இணைய தணிக்கை மற்றும் எதேச்சதிகாரத்தை நோக்கி திரும்பி இருப்பதற்கு எதிரான பரந்த போராட்டத்திலிருந்து பிரிக்கவியலாததாகும்.