இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கடந்த வாரம், ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை (யு.என்.எச்.ஆர்.சி) கூட்டத்திற்கு “இலங்கை தொடர்பான தனிக் குழு” ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. இந்த தீர்மானம் இலங்கை இராணுவத்துக்கும், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது நடந்த, போர்க்குற்றங்கள் உட்பட மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துகிறது.
'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்' என்ற தலைப்பிலான இந்த தீர்மானம், எந்தவொரு மாற்றங்களுடனும் மார்ச் 22 அன்று யு.என்.எச்.ஆர்.சி.யில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
இந்த தனி குழுவில் இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, வட மசிடோனியா, மொண்டிநீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் அடங்கும். வாஷிங்டன் இந்த குழுவில் உறுப்பினராக இல்லை என்றாலும், அது தீர்மானித்தின் பின்னணியில் இருந்துகொண்டு, கடந்த டிசம்பரில் அதை முன்னிலைப்படுத்தியது. இதற்கு முன்னதாக அமெரிக்க-சார்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட இலங்கையில் தமிழ் குழுக்களுடன், இங்கிலாந்து தூதர்கள் கலந்துரையாடி இருந்தனர்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கென் கடந்த வாரம் யு.என்.எச்.ஆர்.சி. கூட்டத்தில் வீடியோ மூலம் உரையாற்றி, இந்த ஐ.நா. பேரவையில் அமெரிக்கா மீண்டும் இணைந்துகொள்வது பற்றி அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி பைடனின் நிர்வாகம் 'ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை” அதன் வெளியுறவுக் கொள்கையின் “மையத்தில் வைக்கிறது' என்று பிளிங்கென் பாசாங்குத்தனமாக அறிவித்தார்.
“சிரியா மற்றும் வட கொரியாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், இலங்கையில் கடந்தகால அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் தென் சூடான் நிலைமை குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் உட்பட, உலகெங்கிலும் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தீர்மானங்களை ஆதரிக்க, இந்த பேரவையை ஊக்குவிக்கிறோம்,” என அவர் அறிவித்தார்.
அமெரிக்க ஏகாதிபத்தியமே உலகின் மிகப் பெரிய போர்க்குற்றவாளி ஆகும். கடந்த மூன்று தசாப்தங்களில் மட்டும், மத்திய கிழக்கு, பால்கன், ஆப்கானிஸ்தான் மற்றும் ஏனைய இடங்களில் அடுத்தடுத்து போர்களைத் தொடங்கி, இலட்சக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளையும் அது படுகொலை செய்தது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் பிளிங்கென், உண்மையில் அர்த்தப்படுத்தியது என்னவென்றால், பைடென் நிர்வாகமானது அதன் முன்னோடிகளைப் போலவே, மற்ற நாடுகளை வாஷிங்டனின் புவி மூலோபாய நலன்களுக்கு ஏற்ப வளைத்துப் போடுவதற்கு, மனித உரிமை மீறல்களை இழிந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளும் என்பதையே ஆகும். சீனா மற்றும் ரஷ்யாவின் மனித உரிமை மீறல்களை பிளிங்கென் தனது வீடியோ உரையில் கண்டனம் செய்தார்.
பிளிங்கெனின் பேச்சுக்கும், தனிக் குழு தீர்மானத்திற்கும், இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. மாறாக, பெய்ஜிங்குடனான உறவுகளை முறித்துக் கொள்ளவும், சீனாவுடனான வாஷிங்டனின் மோதலை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை 'வற்புறுத்துவதே' அதன் இலக்காகும்.
பணப் பற்றாக்குறையில் வாடும் கொழும்பு ஆட்சி, சீன முதலீடுகள் மற்றும் கடன்களைச் சார்ந்து வருவதாக வாஷிங்டன் கவலை கொண்டுள்ளது. கடனில் மூழ்கியுள்ள இலங்கை பொருளாதாரம், முன்னெப்போதுல்லாத கொந்தளிப்பில் உள்ளது. இது கொவட்-19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி வீழ்ச்சி மற்றும் நாட்டின் நாணய மதிப்பு சரிவையும் எதிர்கொள்கிறது.
புலிகள் உட்பட, 'இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வன்முறைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையை' தனிக் குழு தீர்மானம் கோருகிறது. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரால் 'பொறுப்புணர்வை முன்னேற்றுவதற்காக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான ஆதாரங்களை பாதுகாத்து பகுப்பாய்வு செய்வதன் முக்கியத்துவத்தை' இது அறிவிக்கிறது. இத்தகைய சான்றுகள் ஐ.நா.வின் உறுப்பு நாடுகளில் 'தொடர்புடைய நீதி நடவடிக்கைகளை ஆதரிக்க' பயன்படுத்தப்படும், உதாரணமாக, போர்க்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வழக்குத் தொடர பயன்படுத்தப்படும்.
தீர்மானத்தில் சேர்க்கப்படவில்லை என்றாலும், ஜனவரி மாதம் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிச்சல் பச்லெட்டின் அறிக்கை, குறிப்பாக “பொறுப்புக்கூறல்” தவறியமையை சுட்டிக்காட்டி, இதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிபாரிசு செய்ய முன்மொழிந்துள்ளது. இலங்கையில் 'மனித உரிமை மீறல்கள் என்று நம்பத்தகுந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களின்' மீது பயணத் தடைகளை விதித்தல் மற்றும் சொத்துக்களை முடக்குவது உட்பட குறிப்பிடத்தக்க தடைகளுக்கு பச்லெட் அழைப்பு விடுத்தார்.
கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய பச்லெட், “இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு” எதிராக மற்ற நாடுகளில் நீதித்துறை நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆதரவளித்தார்.
1983 இல் தொடங்கிய புலிகளுக்கு எதிரான 30 ஆண்டுகால யுத்தத்தின் போது, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களும் அதன் இராணுவமும் ஏராளமான போர்க்குற்றங்களைச் செய்தன. இலங்கையின் ஆளும் உயரடுக்கு மற்றும் ஊடகங்களும், கொழும்பின் கொடுமைகளை மூடிமறைக்க புலிகளின் பயங்கரவாத மற்றும் ஜனநாயக விரோத செயல்களைப் பயன்படுத்திக்கொண்டன.
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, நான்கு ஆண்டுகளில் எளிதில் முறிந்து போன 'யுத்த நிறுத்தத்திற்கு' பின்னர், அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின், அதே போல் இந்தியாவின் ஆதரவோடும் 2006 இல் மீண்டும் போரைத் தொடங்கினார். அப்போதைய பாதுகாப்பு செயலாளரும், இப்போது ஜனாதிபதியுமான அவரது சகோதரர் கோட்டாபய இராஜபக்ஷவே, இந்த இரத்தக்களரி இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.
யுத்தத்தின் இறுதி மாதங்களில், ஐ.நா. மதிப்பீடுகளின்படி சுமார் 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் இராணுவத்தில் சரணடைந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வெறுமனே 'காணாமல் போயுள்ளனர்.' இந்த போர்க் குற்றங்கள் குறித்து வாஷிங்டன் ஒருபோதும் தீவிரமாக கவலைப்படவில்லை.
கொழும்பு அதன் கொடூரமான போரைத் தொடர்வதற்கு நிதி உதவி மற்றும் ஆயுதங்களை பெறுவதற்காக பெய்ஜிங்கை பெரிதும் நம்பியிருந்தது. பைடன் துணை ஜனாதிபதியாக இருந்த, அப்போதைய ஒபாமா நிர்வாகம், சீனாவை சுற்றி வளைத்து தனிமைப்படுத்துவதற்காக அதன் “ஆசியாவில் முன்னிலை” கொள்கையை தொடங்கியதுடன் மற்றும் சீனாவுடனான இராஜபக்ஷவின் உறவுகளுக்கு விரோதமாக இருந்தது.
வாஷிங்டன் யு.என்.எச்.ஆர்.சி.யைப் பயன்படுத்தி இலங்கை மீது ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து பெய்ஜிங்கிலிருந்து இராஜபக்ஷவை தூர விலக்குமாறு நெருக்கியது. அது தோல்வியுற்ற போது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றவும், அவருக்கு பதிலாக மைத்ரிபால சிறிசேனவை நியமிக்கவும் ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை அது திட்டமிட்டது.
சிறிசேனாவும் அவரது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை வாஷிங்டன் மற்றும் அதன் மூலோபாய பங்காளியான இந்தியாவுக்கு சார்பாக மாற்றியமைத்தனர். புதிய ஆட்சி உடனடியாக இலங்கை இராணுவத்தை சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கத் தொடங்கியது. அதற்கு பதிலாக, வாஷிங்டன் இலங்கைக்கு ஒரு சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான அழைப்புகளை அடக்க உதவியதுடன், 'உள்நாட்டு நீதித்துறை பொறிமுறை' என்று அழைக்கப்படும் ஒரு தீர்மானத்தின் பின்னால் அதன் ஆதரவைத் திருப்பியது.
2019 மற்றும் 2020 தேர்தல்களில் முறையே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் மஹிந்த இராஜபக்ஷ ஆட்சிக்கு திரும்பியதைத் தொடர்ந்து, வாஷிங்டனும் புது டெல்லியும் கொழும்பு பெய்ஜிங்குடனான உறவுகளை வளர்ப்பது குறித்து தொடர்ந்து கவலைகளை எழுப்பியுள்ளன.
சீனாவுடன் பொருளாதார உறவுகள் மட்டுமே இருப்பதாக அறிவித்து வாஷிங்டன் மற்றும் புது டெல்லியை சமாதானப்படுத்த கொழும்பு எதிர்பார்க்கின்றது. எவ்வாறாயினும், இராஜபக்ஷ ஆட்சி தனது எதேச்சதிகார ஆட்சிக்கு முண்டுகொடுப்பதற்காக இராணுவத்தை பெரிதும் நம்பியுள்ளதுடன் எந்தவொரு போர்க்குற்ற விசாரணையிலிருந்தும் அதைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளது.
கடந்தவாரம் யு.என்.எச்.ஆர்.சி.யில் உரையாற்றிய இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, பச்லெட்டின் அறிக்கையை நிராகரித்தார். '[அறிக்கையில்] உள்ள பரிந்துரைகள் மற்றும் முடிவுகள், இலங்கைக்கு எதிராக சில சக்திகள் இடைவிடாமல் முன்னெடுத்த, முன்திட்டமிடப்பட்ட, அரசியல்மயப்படுத்தப்பட்ட மற்றும் பாரபட்சமற்ற நிகழ்ச்சி நிரலை பிரதிபலிக்கின்றன' என்று அவர் அறிவித்தார்.
தனி குழு தீர்மானம் குறித்து குணவர்தன எதுவும் கூறவில்லை என்றாலும், ஜனாதிபதி ராஜபக்ஷ, இலங்கைக்கு ஆதரவளிக்கக் கோரி யு.என்.எச்.ஆர்.சி. உறுப்பு நாடுகளுக்கு கடிதம் எழுதினார். இலங்கை மீதான தீர்மானம் தொடர்பாக யு.என்.எச்.ஆர்.சி.யில் தலைதூக்கும் இராஜதந்திர யுத்தம், ஒருபுறம் அமெரிக்காவிற்கும் மறுபுறம் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஆழமான புவிசார் அரசியல் பதட்டங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஜெனீவாவில் சீனாவின் நிரந்தர பிரதிநிதியான தூதுவர் சென் சூ, இலங்கையில் 'மனித உரிமைகளை தீவிரமாக ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பாராட்டினார். ”
எந்தவொரு நாட்டையும் பெயர் குறிப்பிடாமல், 'மனித உரிமைகள் மீதான அரசியல்மயமாக்கல் மற்றும் இரட்டை நிலைப்பாடுகளை சீனா எதிர்க்கிறது, அதே போல், ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு மனித உரிமைகளை பயன்படுத்திக்கொள்வதையும் எதிர்க்கிறது' என்று சென் கூறினார்.
அமெரிக்க அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக கொழும்பில் அதன் செல்வாக்கை பராமரிக்கவும் மேம்படுத்தவும் சீனா ஆர்வமாக உள்ளதே அன்றி, அது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து எந்த கவலையும் கொண்டிருக்கவில்லை. ரஷ்யாவின் யு.என்.எச்.ஆர்.சி. தூதர் 'இலங்கையின் உள் விவகாரங்களில்' தலையிடுவதை எதிர்த்து இதே போன்ற அறிக்கைகளை வெளியிட்டார்.
அதன் பிராந்திய மற்றும் உலகளாவிய செல்வாக்கின் காரணமாக, கொழும்பு, இந்தியாவின் ஆதரவைப் பெறவும், யு.என்.எச்.ஆர்.சி.யில் தீர்மானத்தை தோற்கடிக்கவும் ஆர்வமாக உள்ளது. ஆனால் வாஷிங்டனைப் போலவே, புது டெல்லியும் சீனாவுடனான இராஜபக்ஷவின் உறவுக்கு விரோதமாக உள்ளதுடன் மேலும் 2015 இல், மஹிந்த இராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கான அமெரிக்க ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கும் ஆதரவளித்தது.
எவ்வாறாயினும், இலங்கை கடந்த மாதம், அரசுக்கு சொந்தமான சொத்துக்களை தனியார்மயமாக்குவதற்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பின் மத்தியில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை ஒரு கூட்டு முயற்சியாக ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலம் புது டெல்லிக்கு கோபத்தை ஏற்படுத்தியது,
இராஜபக்ஷ ஆட்சியை ஆதரிக்கும் அதிதீவிர வலதுசாரி தேசியவாத சக்திகளும், இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தூண்டி விட்டன. மூலோபாய ரீதியில் அமைந்துள்ள துறைமுகத்தில் காலடி எடுத்து வைப்பதில் ஆர்வமுள்ள இந்தியா, இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதற்கான பிரச்சாரத்தின் பின்னணியில் சீனா இருப்பதாக குற்றம் சாட்டியது.
தனிக் குழு தீர்மானத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல், ஐ.நா.வின் இந்திய தூதர் மணி பாண்டே, தமிழ் சிறுபான்மையினரின் 'அபிலாஷைகளை' தனது நாடு ஆதரிக்கிறது என்றார். 'நல்லிணக்கத்திற்கு' தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், தமிழ் உயரடுக்கினருக்கான அதிகாரப் பகிர்வு ஏற்பாடாக இருக்கும், இலங்கையின் அரசியலமைப்பில் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் அவர் கொழும்புக்கு அழைப்பு விடுத்தார். இத்தகைய எந்தவொரு அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டிற்கும் கொழும்பு உடன்படாத அதே வேளை, இந்தியா அடுத்தடுத்த அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க, இலங்கையில் உள்ள தமிழ் முதலாளித்துவ கட்சிகளை தொடர்ந்து பயன்படுத்துகிறது.
இலங்கையை வழிக்கு கொண்டுவருவதற்கான தீவிர முயற்சிகள், சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் திட்டத்தின் மேம்பட்ட தன்மையை சுட்டிக்காட்டுகின்றன. இராஜபக்ஷ ஆட்சி தனது அரசியல் சமநிலை முயற்சிகளை கைவிட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் தயாரிப்புகளுடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதையே வாஷிங்டன் தெளிவுபடுத்துகிறது.