இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லெட்டின் அறிக்கை, சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை உட்பட தடைகளை இலக்கு வைத்து, “மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று நம்பத்தகுந்தவர்கள்” மீது யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிபார்சு செய்கின்றது.
வரவிருக்கும் மனித உரிமை பேரவையின் (UNHRC) 46வது கூட்டத் தொடருக்காக தயாரிக்கப்பட்ட 17 பக்க அறிக்கை ஜனவரி 27 அன்று பகிரங்கப்படுத்தப்பட்டது. யு.என்.எச்.ஆர்.சி. இன் அடுத்த கூட்டத் தொடர், பெப்ரவரி இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு, மார்ச் 19 வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
பச்லெட்டின் அறிக்கையில் இலங்கையின் 'குற்றவியல் பொறுப்புணர்வை முன்னெடுப்பதற்கும்' அதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கும் உறுப்பு நாடுகளுக்கு முன்மொழியப்பட்ட 'விருப்பங்கள்' அடங்கியுள்ளன. உறுப்பு நாடுகள், அவற்றின் சொந்த தேசிய நீதிமன்றங்கள் முன்னிலையில், 'இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரும் செய்த குற்றம் பற்றி விசாரணை நடத்தவும் குற்றவியல் வழக்குகளை தொடரவும் செயலில் ஈடுபட முடியும்', என அது தெரிவிக்கின்றது.
இலங்கை அரச நிர்வாகங்களில் இராணுவமயமாக்கலை சுட்டிக் காட்டுகின்ற அறிக்கை, அரசின் பிரதான பதவிகளுக்கு சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட்ட இராணுவ அலுவலர்களின் நியமனங்கள்; அரசியலமைப்பில் உள்ள பாதுகாப்புகள் நீக்கம்; ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல்; கொவிட்-19 காரணமாக மரணித்த உடல்களை கட்டாயமாக எரித்தல் என்பவற்றினையும் சுட்டிக்காட்டுகின்றது. இந்த நடவடிக்கைகளை, சிவில் நிர்வாகம் மற்றும் மனித உரிமைகள் மீதான ஜனாதிபதி இராஜபக்ஷ அரசாங்கத்தின் தடைகள் என மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை விபரிக்கின்றது.
யுத்தத்தின் இறுதி மாதங்களில், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இரத்தக்களரி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத் தாக்குதலுடன் தொடர்புடைய யுத்தக் குற்றங்களை இந்த அறிக்கை மேற்கோள் காட்டுகின்றது. இந்தப் பிரிவினைவாத இயக்கம் 2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்டது.
இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான பாகுபாடற்ற முறையிலான தாக்குதல் காரணமாக சுமார் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர்கள் அறிவித்துள்ளனர். ஒரு தொகையான தமிழ் புலிகளின் தலைவர்கள் சரண்டைந்தபோது, குருதி உறையவைக்கும் வகையில் கொல்லப்பட்டார்கள். தாங்களாக முன்வந்து இராணுவத்திடம் சரண்டைந்த நூற்றுக் கணக்கான இளைஞர்கள் காணாமல் போனார்கள்.
தற்போது ஜனாதிபதியாக இருக்கும் கோட்டாபய இராஜபக்ஷ, தனது மூத்த சகோதரரான மஹிந்த இராஜபக்ஷ ஆட்சியின் கீழ் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, இந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்திருந்தார்.
1983 ஜூலையில் ஆரம்பிக்கப்பட்ட 30 வருட இனவாத மோதல்களின் போது, தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்கள் ஏராளமான யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்தன. அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் மஹிந்த இராஜபக்ஷ ஆட்சியின் கீழ் 2006 இல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தின் இறுதி ஆண்டுகளில், தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தீவிரமடைந்ததைக் கண்டது.
இந்த மிருகத்தனமான அடக்குமுறை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்த வலயங்களில் மட்டுமன்றி, தெற்கில் ஊடகவியலாளர்களும் அரசாங்கத்தை விமர்சித்த மற்றவர்களும் கடத்தப்பட்டனர், “காணாமல் ஆக்கப்பட்டனர்” அல்லது கொல்லப்பட்டனர்.
இதன் முன்னோடிகளைப் போலவே, தற்போதைய இராஜபக்ஷ அதிகாரத்துவமும் சகல யுத்தக் குற்றச்சாட்டுக்களையும் கடுமையாக மறுப்பதோடு, சகல இராணுவ அதிகாரிகளுக்கும் சட்டப் பாதுகாப்புக்கும் அழைப்பு விடுக்கின்றுது. தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தமிழ் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக விரோத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம், கொழும்பு தனது சொந்த குற்றங்களை மூடிமறைப்பதற்கு முயற்சிக்கின்றது.
எவ்வாறாயினும், இலங்கை ஆளும் உயரடுக்கும் 1948 முதல் அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுமே யுத்தத்திற்கான முக்கிய பொறுப்பாளிகளாகும். அவை தொழிலாள வர்க்கத்தை இன ரீதியாக பிரித்து, பலவீனப்படுத்துவதன் மூலம், முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டு கொடுக்க, தமிழர்-விரோத பேரினவாதத்தை தொடர்ந்து பயன்படுத்துகின்றன.
இராஜபக்ஷ ஆட்சியை வாஷிங்டனின் பூகோள மூலோபாய சுற்று வட்டத்துக்குள் கொண்டுவருவதற்காக நெருக்குவதன் பேரில், இலங்கை மீதான ஒரு மனித உரிமைகள் தீர்மானத்தினைக் கொண்டுவரும் அமெரிக்காவின் நகர்வுகளின் மத்தியிலேயே பச்லெட்டின் அறிக்கை வெளிவந்துள்ளது. 2019 நவம்பரில் இராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, தனது சீன-விரோத யுத்த உந்துதலுக்குள் கொழும்பை மேலும் இணைத்துக் கொள்வதற்கா அமெரிக்கா நெருக்கி வருகின்றது. இந்த நிகழ்ச்சி நிரல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிர்வாகத்தின் போது முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு பதிலாக அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையில் சிறிசேன 2015 இல் ஜனாதிபதியானார். முதலீட்டுத் திட்டத்துக்காகவும் மற்றும் யுத்தத்தின் போது இராணுவ உபகரணங்களை வழங்கியதற்காகவும் இராஜபக்ஷ ஆட்சி சீனாவுடன் பேணிய நெருக்கமான உறவுகள் சம்பந்தமாக, வாஷிங்டன் எதிராக இருந்து வந்துள்ளது.
சிறிசேன – விக்ரமசிங்க நிர்வாகம் வாஷிங்டனுக்கு ஆதரவாக தனது வெளிநாட்டு கொள்கைகயை உடனடியாகவே மாற்றிக்கொண்டு, இலங்கைப் படைகளுக்கும் அமெரிக்க இராணுவத்துக்கும் இடையிலான நடவடிக்கைகளை பலப்படுத்தியது.
அதற்கு ஈடாக, 2015 அக்டோபரில் யு.என்.எச்.ஆர்.சி. இல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வாஷிங்டன் உதவியது. இது இலங்கை தீர்ப்பாயங்கள் மூலம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒப்புதல் அழிப்பதன் மூலம் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான அழைப்புகளை அடக்குவதற்கு கொழும்புக்கு உதவியது. இந்த தீர்ப்பாயங்கள் ஒருபோதும் நிறுவப்படவில்லை.
வாஷிங்கடனும் மற்றும் இப்பிராந்தியத்தில் அதன் மூலோபாய பங்காளியான இந்தியாவும், கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் மஹிந்த இராஜபக்ஷவும் பதவிக்கு வந்ததையிட்டு மிகவும் கவலையடைந்துள்ளன. அதே நேரம், கொவிட்–19 தொற்றுநோய் கூர்மையான தாக்கத்தை ஏற்படுத்தி, இலங்கையின் பொருளாதாரத்தை பெரும் கடன் சுமைக்குள் தள்ளியுள்ளதால், இராஜபக்ஷ ஆட்சியானது சீனாவின் முதலீடு மற்றும் கடன்களை பெறுவதன் பக்கம் மிகவும் வேகமாக திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் இலங்கை மீதான ஐ.நா. கோர் குழு – பிரிட்டன், கனடா, ஜெர்மனி, மாசிடோனியா மற்றும் மொன்டெநீக்ரோ– ஐ.நா. மனித உரிமை பேரவையில் மனித உரிமை மீறல் பற்றிய தீர்மானத்தினை சமர்ப்பிக்கும் திட்டம் உள்ளதாக அறிவித்திருந்தது.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் இலங்கை மீதான “அந்த முக்கியமான அறிக்கையை நாங்கள் மிகவும் கவனமாக ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம்” என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் நெட் பிறைஸ் கடந்தவாரம் டுவீட் செய்துள்ளார். இலங்கையின் எதிர்காலம், ”இன்று உரிமையை மதிப்பதில் மற்றும் கடந்த காலத்தினைக் கையாளுவதில் அர்த்தமுள்ள அடியை எடுத்து வைப்பதிலேயே தங்கியுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
மனித உரிமைகள் பற்றிய அமெரிக்க “கவலைகள்” மற்றும் இதே போல அறிக்கைகளை விடும் மற்றைய பெரும் வல்லரசுகள் அனைத்தும் ஒரு தொகை யுத்தக் குற்றங்கள் மற்றும் ஏனைய அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளன. மனித உரிமைகள் பற்றிய அவற்றின் அறிக்கைகள் இழிந்த மற்றும் பாசாங்குத் தனமானவை ஆகும்.
கொரணா வைரஸ் தொற்றினால் அதிகரிக்கப்பட்டுள்ள பூகோள நெருக்கடியின் மத்தியஸ்தானமாக உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் பூகோள மேலாதிக்கத்தினை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சிகளை ஆக்கிரோஷமாக தொடர்கின்றது. அமெரிக்க ஜனாதிபத்தி பைடனின் நிர்வாகத்தின் கீழும் இது தொடர்வதுடன் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி உட்பட இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள், அமெரிக்கா தலமையிலான புதிய மனித உரிமைகள் ஆட்டத்தில் அணிவகுத்துள்ளன.
அமெரிக்க மற்றும் பிரிட்டன் இராஜதந்திரிகள், தமிழ் கூட்டமைப்பு அதேபோல் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களுடன் மனித உரிமைகள் தீர்மானம் பற்றி கலந்துரையாடியுள்ளனர். 'சிவில் சமூக குழுக்களுடன்' சேர்ந்து, இந்த கட்சிகள் யு.என்.எச்.ஆர்.சி தலைவருக்கு இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும் அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும் கடிதம் எழுதியுள்ளன.
2015 இல், தமிழ் கூட்டமைப்பு கொழும்பில் அமெரிக்க தலமையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு ஆதரவளித்ததுடன், சிறிசேன–விக்ரமசிங்க அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தது. சீனாவுக்கு எதிரான புவிசார் அரசியல் மற்றும் இராணுவ கட்டியெழுப்பலுக்கும் தமிழ் தேசியவாதக் கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. “சர்வதேச சமூகத்தின்” “மனித உரிமைகள் பற்றிய அக்கறைக்கு” தமிழ் கட்சிகள் வழங்கும் ஆதரவு, வடக்கு மற்றும் கிழக்கில் சர்வதேசத்தின் ஆதரவுடன் ஒரு அதிகாரப் பரவலாக்கலைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியாகும். “சர்வதேச சமூகம் எனப்படுவது அமெரிக்கா மற்றும் ஏனைய பெரும் ஏகாதிபத்தியங்களை தமிழ் கட்சிகள் அழைக்கும் ஒரு சொற்றொடர் ஆகும்.
இலங்கையின் வெளி விவகார செயலாளர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே, ஐ.நா. மனித உரிமை பேரவையின் அறிக்கைக்கு பதிலளிக்கையில், யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக “நிரூபிப்பதற்கு எதுவும் இல்லை' என சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார். “இலங்கை போதுமான அளவு அமைதியாகவும் எங்களை இழிவுபடுத்த முயற்சிக்கும் எந்த நாட்டையும் விட ஸ்திரமாகவும் உள்ளது,” என அவர் கூறினார்.
யு.என்.எச்.ஆர்.சி. அறிக்கை முந்தைய அறிக்கைகளை விட 'மோசமானது' என்று கொலம்பகே ஒப்புக் கொண்ட போதிலும், ஒரு நீதித்துறை பொறிமுறையை நிறுவுவதைத் தவிர, முந்தைய யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்திற்கான 'கிட்டத்தட்ட அனைத்து கடமைகளும்' முந்தைய நிர்வாகத்தால் நிறைவேற்றப்பட்டதாக வலியுறுத்தினார். “இங்கிருந்தும் மற்றும் புலபெயந்தவர்கள் மத்தியில் இருந்தும் ஒரு நிழல் அறிக்கையினால் தயாரிக்கப்பட்டதே இந்த தீர்மானம், என அவர் கூறினார்.
சகல யுத்தக் குற்றச் சாட்டுகளையும் நிராகரிக்கும் இராஜபக்ஷ ஆட்சியானது, இராணுவத்தினைக் காட்டிக் கொடுத்துவிட்டதாக, சிறிசேன–விக்ரமசிங்க நிர்வாகத்தினை தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றது. 2015 ஒக்டோபரில் உருவாக்கப்பட்டிருந்த யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகி விட்டதாக கடந்த வருடம் மார்ச் மாத்தில் ஜனாதிபதி இராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
தீவிரமடைந்து வரும் அமெரிக்கத் தலைமையிலான அழுத்தம் குறித்து கடுமையாக பதற்றமடைந்துள்ள இராஜபக்ஷ நிர்வாகம், எந்தவொரு போர்க்குற்ற விசாரணையையும் தவிர்க்க ஆர்வமாக உள்ளது.
ஜனவரி 22 அன்று, ஒய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலமையில் மூன்று பேர் கொண்ட ஒரு புதிய விசாரணை ஆணைக்குழுவை இராஜபக்ஷ நியமித்திருந்தார். முந்தைய ஆணைக்குழுக்கள் ஏதேனும் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தியுள்ளனவா என்பதைக் கண்டறிவதும் அவற்றின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பதை ஆராய்வதுமே இதன் பணி ஆகும். நேரத்தை கடத்துவதற்கான மற்றொரு அவநம்பிக்கையான சூழ்ச்சி இதுவாகும். முந்தைய அமெரிக்க அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆட்சியால் முன்னர் இரண்டு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
கொலம்பகே, ஜனவரி 24 அன்று, “நாங்கள் யு.என்.எச்.ஆர்.சி. உடன் தொடர்பு கொள்ள விரும்புகிறோம், மேலும் அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணுகிறோம். அமெரிக்கா இலங்கையுடன் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், என சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு கூறினார்.
இலங்கை சம்பந்தமான செயற்பாட்டு குழு, 'மனித உரிமைகள் கடமைகளை நடைமுறைப்படுத்த எங்களுக்கு இன்னும் ஒரு வருடம், கால அவகாசம் வழங்கும் ஒரு ஒருமித்த தீர்மானத்தை முன்மொழிந்தது... தீர்மானத்தின் வரைவு கூட்டாக தயாரிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். புதிய தீர்மானத்தின் உரையைக் காண நாங்கள் இப்போது காத்திருக்கிறோம்,” என அவர் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கையும், திரைக்குப் பின்னாலான அழுத்தங்களும் கொடுக்கல் வாங்கல்களும், வாஷிங்டன் சீனாவுக்கு எதிரான அதனது போர் திட்டங்களின் பாதையில், மற்றொரு ஆட்சி மாற்ற நடவடிக்கை அல்லது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வது உட்பட, நடவடிக்கைகளோடு நின்று விடாது என்பதையே தெளிவுபடுத்துகின்றன.