இலங்கையை சீனாவிற்கு எதிராக அணிசேர நெருக்குவதற்காக அமெரிக்கா புதிய "மனித உரிமைகள்" தீர்மானத்தை முன்நகர்த்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கொழும்பு ஊடக அறிக்கையின்படி, “இலங்கை தொடர்பான நடுநிலை குழு”, மனித உரிமைகள் பிரச்சினைகள் சம்பந்தமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி.) ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளது. இந்த குழுவில் பிரிட்டன், கனடா, ஜேர்மனி, வடக்கு மாசிடோனியா மற்றும் மொண்டினீக்ரோ ஆகிய நாடுகள் அடங்கும்.

சீனாவின் “செல்வாக்கிலிருந்து” விலகுமாறு இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ அரசாங்கத்தை நெருக்கும் இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் வாஷிங்டன் இருப்பதை சகல அறிகுறிகளும் காட்டுகின்றன.

2014 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய புகலிடம் கோருவோருக்கு விசேட ஒருதடவை உதவித் திட்டம் ஊடாக சிறப்பங்காடி வரவுச் சீட்டுகளை யு.என்.எச்.ஆர்.சி. வழங்கியது. (UNHRC)

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பாசிச ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு மத்தியில் வாஷிங்டனை அரசியல் கொந்தளிப்பு மூழ்கடித்து வந்திருந்தாலும், சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ வியூகங்கள் தொடர்கின்றன. இலங்கையை அதன் போர் தயாரிப்புகளில் ஒருங்கிணைத்துக்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.

மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள யு.என்.எச்.ஆர்.சி. இன் 46 வது அமர்வுக்கு இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்படும். புதிய தீர்மானத்திற்கு இணை நிதியுதவி வழங்க நடுநிலை குழுவின் வேண்டுகோளை கொழும்பு அரசாங்கம் நிராகரித்ததாக சண்டேடைம்ஸ் தனது வார இதழில் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தின் உள்ளடக்கம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால் கொழும்பை தனக்குப் பின்னால் அணிசேர்த்துக்கொள்வதற்காக, அமெரிக்கா ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில், அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை பாசாங்குத்தனமாக சுரண்டிக்கொண்டுள்ளது.

புலிகளுக்கு எதிரான கிட்டத்தட்ட 30 ஆண்டுகால இரத்தக்களரி இனவாத யுத்தம், 2009 மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்க காலத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது ஜனாதிபதியாக இருக்கும் அவரது தம்பி கோடாபய இராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து, இந்த கொடூரமான இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.

யுத்தத்தின் இறுதி வாரங்களில், குறைந்தபட்சம் 40,000 பொதுமக்கள் படுகொலைக்கும், அதே போல், பல புலி தலைவர்கள் கொல்லப்படுவதற்கும், போரின் முடிவில் சரணடைந்த நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போவதற்கும் இலங்கை இராணுவமே பொறுப்பு, என்று ஐ.நா. நிபுணர் குழுக்கள் மதிப்பிட்டுள்ளன.

வாஷிங்டன், போருக்கும் மற்றும் மஹிந்த இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சிக்கும் ஆதரவளித்தது. எவ்வாறாயினும், இராணுவ உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கிய சீனாவுடன் இராஜபக்ஷ கொண்டிருந்த நெருக்கமான உறவுகளை எதிர்த்த அமெரிக்கா, அவரது அரசாங்கத்தை பெய்ஜிங்கிலிருந்து தூர விலக்குவதற்காக யு.என்.எச்.ஆர்.சி. இல் பல தீர்மானங்களை கொண்டுவந்தது.

இறுதியாக, வாஷிங்டன் மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கும், அவருக்கு பதிலாக, 2015 ஜனவரியில் தேர்தல்கள் மூலம் அமெரிக்க-சார்பு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கும் ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை மேற்கொண்டது.

சிறிசேன நாட்டின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவிற்கு ஆதரவாக மாற்றினார். பதிலுக்கு, போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்வதற்கும், 2015 அக்டோபரில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க உள்நாட்டு “கலப்பு நீதிமன்றங்களை” உருவாக்கக் அழைப்புவிடுத்த யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கும் வாஷிங்டன் உதவியது. இத்தகைய நீதிமன்றங்கள் ஒருபோதும் நிறுவப்படவில்லை.

கடந்த மார்ச் மாதம், தற்போதைய இராஜபக்ஷ அரசாங்கம், இந்த தீர்மானத்திற்கும் அதன் தொடர்புடைய யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானங்களுக்கும் தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. இராஜபக்ஷவின் அரசாங்கம், எந்தவொரு போர்க்குற்றமும் நடக்கவில்லை என மறுத்து, அதன் இராணுவத்தை பாதுகாக்கிறது. போரை ஆதரித்த கொழும்பில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதே நிலைப்பாட்டையே எடுத்துள்ளன.

ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இராஜபக்ஷ ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் உள்ள தளபதிகளை பிரதான நிர்வாகப் பதவிகளுக்கு நியமித்து, இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வாதிகார ஆட்சியை விரைவாக நிலைநிறுத்துகிறார்.

இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களை விமர்சிப்பதை எதிர்த்து, ட்ரம்ப் நிர்வாகம் யு.என்.எச்.ஆர்.சி. இல் இருந்து விலகியபோதும், புதிய யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்திற்காக தமிழ் கட்சிகளின் ஆதரவைப் பெற, வாஷிங்டன் அவற்றை அணுகியது.

டிசம்பர் நடுப்பகுதியில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதர் அலினா டெப்லிட்ஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனை சந்தித்தார். சுமந்திரன் தனது கட்சியின் ஆதரவை டெப்லிட்சுக்கு உறுதிப்படுத்தினார்.

பின்னர், சுமந்திரன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வட மாகாண சபையின் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரைச் சந்தித்தார். ஊடகங்களின்படி, யு.என்.எச்.ஆர்.சி.க்கு ஒரு பிரேரணையை தயாரிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தூதர்களும் பொன்னம்பலத்துடன் தொலைபேசி உரையாடல்களை நடத்திய அதே நேரம், பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் சாரா ஹால்டன், டிசம்பரில் சுமந்திரனுடன் தனியாக கலந்துரையாடினார்.

இந்த முற்றிலும் ஊழல் நிறைந்த முதலாளித்துவ தமிழ் தேசியவாதக் கட்சிகள், குறிப்பாக சீனாவுக்கு எதிராக, அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களை நீண்ட காலமாக ஆதரித்து வருவதுடன், அதற்கு பிரதிபலனாக ஏகாதிபத்திய சக்திகளதும் இந்தியாவினதும் ஆதரவுடன் தங்களது சலுகைகளை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றன.

போர்க்குற்ற விசாரணைகள் பற்றியோ அல்லது தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக உரிமைகள் குறித்தோ அவர்களுக்கு உண்மையான அக்கறை கிடையாது. 2015 இல் அமெரிக்க ஆதரவுடன் நடந்த ஆட்சி மாற்ற நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான பங்கு வகித்தது. பின்னர், சுமந்திரன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துடன் இணைந்து போர்க்குற்ற விசாரணையை நசுக்குவதற்கு வழிவகுத்த 2015 அக்டோபர் யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்தை வரைவதற்கு உதவினார்.

கடந்த வாரம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இராஜதந்திரிகளுடன் திரைக்குப் பின்னால் நடந்த சூழ்ச்சிகளுக்குப் பிறகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர்கள் மற்றும் பிற தமிழ் பிரமுகர்களும் யு.என்.எச்.ஆர்.சி. உறுப்பு நாடுகளுக்கு ஒரு புதிய தீர்மானத்தை கோரி கடிதம் எழுதினர். பாதுகாப்பு பேரவை மற்றும் பொதுச் சபை உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் “வேறு பொருத்தமான மற்றும் பயனுள்ள சர்வதேச பொறுப்புக்கூறல் வழிமுறைகள்” ஊடாக, “இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றி விசாரிக்க கோருமாறு யு.என்.எச்.ஆர்.சி.க்கு அந்த கடிதம் வேண்டுகோள் விடுத்தது.

கடந்த வாரம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இராஜதந்திரிகளுடன் திரைக்குப் பின்னால் நடந்த சூழ்ச்சிகளுக்குப் பிறகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, டி.என்.பி.எஃப் மற்றும் டி.பி.ஏ தலைவர்கள் மற்றும் பிற தமிழ் பிரமுகர்கள் யு.என்.எச்.ஆர்.சி உறுப்பு நாடுகளுக்கு ஒரு புதிய தீர்மானத்தை கோரி கடிதம் எழுதினர். ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச்சபை ஆகிய ஐநா வின் துணை உறுப்புகளிடம், இன அழிப்புக் குற்றம், யுத்தக்குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பன சம்பந்தமான விசாரணைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் மற்றும் ஏனைய பொருத்தமான சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறையை உருவாக்குமாறும் அந்தக் கடிதம் ஐநா மனித உரிமை கவுன்சிலை கோரியது.

இந்த கடிதம், யு.என்.எச்.ஆர்.சி. தலைவரிடம் "மேலே குறிப்பிட்டபடி நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பான விஷயங்களை ஐ.நா. பொதுச்செயலாளரிடம் மீண்டும் எடுத்துக் கூறுமாறு" கேட்டுக்கொள்வதுடன், "நடப்பு வன்முறைகளுக்காக இலங்கையை தொடர்ந்து கண்காணிக்குமாறு மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்துக்கு (OHCHR) கட்டளையிடுமாறும்" கோருகின்றது.

சிரியாவிற்கு எதிராக அமைக்கப்பட்டது போன்ற ஒரு "சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை" அமைக்குமாறும் அந்தக் கடிதம் கோருகிறது. ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட, சிரியாவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு, தமிழ் கட்சிகள் ஆதரவளிக்கின்றன என்பதே இதன் அர்த்தமாகும்.

மனித உரிமை மீறல் விசாரணைகள், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பவற்றுக்காக தமிழ் மக்கள் தொடர்ந்து போராடுகின்றபோது, இந்த தமிழ் கட்சிகள், தங்களது இழிவான வகிபாகத்தின் ஒரு பகுதியாக, உதட்டளவு சேவையை மட்டுமே செய்கின்றன. தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து ஆக்கிரமிப்பு இராணுவ ஆக்கிரமிப்பை வெளியேற்ற அவர்கள் ஒருபோதும் கோரவில்லை.

உலகளாவிய தொற்றுநோயின் தாக்கத்தால் ஏற்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத பொருளாதார வீழ்ச்சியை இராஜபக்ஷ அரசாங்கம் எதிர்கொள்கிறது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, பொருளாதார உற்பத்தி கடந்த ஆண்டு 3.9 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டுக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர் உட்பட, அடுத்த நான்கு ஆண்டுகளில் பாரிய வெளிநாட்டு கடன் திருப்பிச் செலுத்துதல்களை எதிர்கொண்டுள்ள அரசாங்கம், அதன் பணப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பெய்ஜிங்கின் பக்கம் திரும்பியுள்ளது.

அமெரிக்க இராணுவ வியூகங்களையும் ஆத்திரமூட்டல்களையும் எதிர்கொள்ளும் பெய்ஜிங், கொழும்புக்கு கடன்களையும் மானியங்களையும் வழங்குவதன் மூலம் அதன் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள ஆர்வமாக உள்ளது. இது பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதற்கான அதன் உந்துதலின் ஒரு பகுதியாகும்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ அக்டோபரில் இலங்கைக்கு விஜயம் செய்து கொழும்பு அமெரிக்காவுடன் அணிசேர வேண்டும் என கோரினார். அப்போது, ஒரு செய்தியாளர் கூட்டத்தில், "மோசமான ஒப்பந்தங்கள், இறையாண்மையை மீறுதல் மற்றும் நிலம் மற்றும் கடலில் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு கொள்ளைகாரனாக நாங்கள் காண்கிறோம்," என அவர் அறிவித்தார்.

தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதி உதவி தொடர்பாக டிசம்பர் 21 அன்று அமெரிக்க காங்கிரசுக்கு வழங்கப்பட்ட மசோதா, "சீன மக்கள் குடியரசின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறையாண்மையை வலியுறுத்துவதில் அமெரிக்க நிதி உதவி தொடரும்," என பிரகடனம் செய்கின்றது.

மற்றொரு எச்சரிக்கையில், வாஷிங்டன் கடந்த மாதம், 49 பில்லியன் ரூபாய் (480 மில்லியன் டாலர்) அமெரிக்க மிலேனியம் சேலஞ்ச் கோப்பரேஷன் மானியத்தை "பங்காளர் நாட்டின் ஈடுபாடு இல்லாததால்" நிறுத்தியது.

பிரதானமாக, இராஜபக்ஷ ஆட்சி பெய்ஜிங்குடன் வளர்த்து வரும் உறவுகள் குறித்து அதிருப்தி தெரிவிப்பதற்காகவே, சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் முக்கிய மூலோபாய பங்காளிகளில் ஒருவரான இந்தியா, அதன் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை இந்த மாதம் கொழும்புக்கு அனுப்பியது.

இராஜபக்ஷ ஆட்சிக்கு எதிரான ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், இனப் பாகுபாடற்று தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலமாகவே, போர்க்குற்றங்கள் பற்றிய உண்மையான விசாரணையை நடத்தவும், இலங்கையில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சங்களையும் முடிவுக்குக் கொண்டுவரவும் முடியும்.

இந்த போராட்டம், ஏகாதிபத்திய போர் தயாரிப்புகளுக்கு எதிரான போராட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. இலங்கையை அணிசேர்த்துக்கொள்வதற்கான சமீபத்திய அமெரிக்க நடவடிக்கைகள், சீனாவுக்கு எதிரான அதன் புவிசார் மூலோபாய ஆக்கிரமிப்பின் மேம்பட்ட கட்டத்தைக் காட்டுகின்றன. இது பேரழிவு தரும் போர்களின் ஆபத்தை முன்கொணர்கின்றது.

Loading