இலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்! தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

புதன்கிழமை நடைபெறும் இலங்கையின் பொதுத் தேர்தலில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கட்சி அழைப்பு விடுக்கின்றது. கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மொத்தம் 43 வேட்பாளர்களை கட்சி நிறுத்தியுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய்க்கும், அதிகரித்துவரும் சர்வாதிகாரம் மற்றும் ஏகாதிபத்திய யுத்தத்தின் ஆபத்துக்கும் பதிலளிக்கும் வகையில், ஒரு சோசலிச மற்றும் சர்வதேச திட்டத்தின் அடிப்படையில், இன பிளவுகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே.

இதுவரை 18 மில்லியன் மக்களைப் பாதித்து சர்வதேச அளவில் 690,000 பேரை காவுகொண்டுள்ள கொரோனா வைரஸ், உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியை துரிதப்படுத்தியுள்ளதுடன் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காணப்படாதளவு பொருளாதார மந்தநிலையை உருவாக்கியுள்ளது. வெகுஜன எதிர்ப்பு மற்றும் புரட்சிகர போராட்டங்கள் தலைதூக்குவதை எதிர்கொண்டுள்ள ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் இந்த எதிர்ப்பை நசுக்குவதற்கு இராணுவ மற்றும் பாசிச சர்வாதிகாரங்களைத் தயாரிக்கின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த நெருக்கடியின் மையத்தில் உள்ளது. ட்ரம்ப் நிர்வாகம், போராட்டங்களை நசுக்குவதை நோக்கமாகக் கொண்ட பொலிஸ் அரச நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான அதன் இராணுவ மற்றும் அரசியல் ஆத்திரமூட்டல்களை முடுக்கிவிட்டுள்ளது. இது மனிதகுலத்திற்கு பேரழிவு விளைவுகளுடன் மூன்றாம் உலகப் போரின் அபாயத்தை துரிதப்படுத்தி வருகிறது.

உலகளாவிய நெருக்கடி இலங்கையில் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக கொந்தளிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆதரவோடு பெரும் வர்த்தகர்கள் முன்னெடுத்து வரும் வேலை வெட்டுக்கள், ஊதிய வெட்டுக்கள் மற்றும் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளுக்கு எதிராக தொழிலாளர்களின் எதிர்ப்பு வளர்ச்சிகண்டு வருகின்றது.

என்ஃபீல்ட் தோட்டத் தொழிலாளர்களுடன் சோ.ச.க. உறுப்பினர் காண்டீபன் கட்சியின் வேலைத் திட்டம் பற்றி விளக்குகிறார்

உத்தியோகபூர்வ உற்பத்தித் துறையில் சுமார் 400,000 தொழில்கள் அழிக்கப்பட்டுள்ள அதே நேரம், அரசாங்கம் தனது சிக்கன மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளை திணிப்பதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10,000 துறைமுகத் தொழிலாளர்கள் கடந்த வாரம் நடத்திய வேலைநிறுத்தம், அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க போராட்டங்களின் ஒரு அறிகுறியாகும். முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் நேற்று அந்த வேலைநிறுத்தத்தை நிறுத்திக்கொண்ட நிலையில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 ஆண்டுகால இனவாதப் போரினால் உருவாக்கப்பட்ட எதிர்ப்பு உட்பட, பல தசாப்தங்களாக குவிந்து வரும் ஆழ்ந்த அமைதியின்மை தீவு முழுவதும் அதிகரித்து வருகின்றது.

ராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சிகள் அனைத்தும் உழைக்கும் மக்கள் மீது காட்டும் ஈவிரக்கமற்ற வர்க்க அணுகுமுறையை இந்த தொற்றுநோய் அம்பலப்படுத்தியுள்ளது. உண்மையான நிலைமையைப் பற்றிய ஒரு போலி சித்திரத்தை காட்டுவதற்காக, அரசாங்கம் வெகுஜன சோதனையை முன்னெடுப்பதை நிராகரிப்பதோடு தொற்றுநோய் விகிதங்கள் குறைவாக இருப்பதாக கூறிக்கொள்கின்றது.

சர்வதேச அளவில் அதன் சகாக்களைப் போலவே, இலங்கை அரசாங்கமும் உழைக்கும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைக்கு அன்றி, தனியார் இலாபத்திற்கே முன்னுரிமை அளித்துள்ளது. பெருவணிக கோரிக்கைகளுக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி ராஜபக்ஷ, பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களை பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ், குறைந்த ஊதியங்கள் மற்றும் அதிகரித்த உற்பத்தித்திறன் இலக்குகளின் கீழ் வேலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸைக் கொண்டு வரலாம் என்று கூறி, 40,000 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் இருந்து திரும்புவதை இலங்கை அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

தொழிலாளர்களின் வளர்ந்து வரும் இயக்கத்தை அடக்குவதற்குத் தீர்மானித்துள்ள ஜனாதிபதி ராஜபக்ஷவும் அவரது ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கும் ஜனாதிபதிக்கு எதேச்சதிகார அதிகாரங்களை வழங்குவதற்கும் மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். "வலுவான அரசாங்கத்திற்கான" அவரது அழைப்பு இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான ஒரு சங்கேத மொழி ஆகும்.

கொவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதாக போலியாக கூறிக்கொண்டு, ராஜபக்ஷ, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு செயலாளராக நியமித்தமை உட்பட பல தளபதிகளை பிரதான பதவிகளில் உயர்த்தியுள்ளார்.

எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கும் ஆளும் அரசாங்கத்துக்கும் எந்த அடிப்படை வேறுபாடுகளும் இல்லை. ஜனாதிபதியின் சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டிய இரண்டு அனைத்து கட்சி கூட்டங்களிலும் அவை பங்கேற்றதுடன் தொற்றுநோய்க்கு நிர்வாகத்தின் அனைத்துவிதமான பதில் நடவடிக்கைகளையும் ஆதரித்தன. ஏப்ரல் 27 அன்று, ஐ.தே.க., ஐ.ம.ச. தமிழ் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளும் தோட்ட தொழிற்சங்கங்களும், பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டினால் ஜனாதிபதிக்கு "நிபந்தனையற்ற ஆதரவு" அளிப்பதாக உறுதியளித்தன.

புரட்சிகர தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் பற்றிய பீதியில், “எதிர்” அரசியல் கட்சிகள் அனைத்தும் ராஜபக்ஷவின் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றன. நிர்வாகம் இராணுவமயமாக்கப்படுவதை யாரும் எதிர்க்கவில்லை.

ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாச, தேர்தலுக்குப் பின்னர் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கத்தை அமைத்தால், ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் "பணியாற்ற முடியும்" என்று அறிவித்துள்ளார். ராஜபக்ஷ அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிக பாராளுமன்ற ஆசணங்களை வெல்ல விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ராஜபக்ஷவிடமிருந்து ஒரு சில சலுகைகளைப் பெறுவதற்கு ஈடாக, அவரது சர்வாதிகாரத்தை தமிழ் கூட்டமைப்பு ஆதரிக்கும்.

தனது கட்சி வென்றால் நெருக்கடியைத் தீர்க்க மற்றொரு சர்வதேச நாணய நிதிக் கடனைப் பெற பேச்சுவார்த்தை நடத்துவதாக, ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் தனது முந்தைய அரசாங்கத்தைப் போலவே அதிக சிக்கன நடவடிக்கைகளை சுமத்த தயாராக இருக்கிறார்.

அதே சமயம், ஸ்ரீ.ல.பொ.ஜ.ம.உ மற்றும் அதன் பேரினவாத சக்திகளும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் சமூக பதட்டங்களை இனவாத ரீதியில் திசை திருப்பிவிடும் முயற்சியாக தமது முஸ்லிம்-விரோத மற்றும் தமிழர்-விரோத கூச்சல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளன. இதற்கு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் தங்களது சொந்த இனவாத மற்றும் தேசியவாத பிரச்சாரத்துடன் பிரதிபலித்துள்ளன.

நவசமசமாஜக் கட்சி ஏகாதிபத்திய சார்பு ஐ.தே.க. உடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறது. அதன் தலைவர் விக்ரமபாஹு கரணாரத்ன மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்திற்கான ஐ.தே.க. வேட்பாளர் ஆவார்.

தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன இயக்கத்தையும் தடுக்க தொழிற்சங்கங்களுடனும் ஏனைய இடது குழுக்களுடனும் போலி "இடது" முன்னணியை உருவாக்குவதை முன்நிலை சோசலிசக் கட்சி ஊக்குவித்து வருகிறது. "நெருக்கடியை எதிர்கொள்ள" அரசாங்கத்திற்கு உதவுவதற்காக கொரோனா பரவிலன் போது முன்நிலை சோசலிசக் கட்சி இரண்டு முறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் சோசலிச சமத்துவக் கட்சியானது (சோ.ச.க.) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் அதன் சக சிந்தனையாளர்களுடன் இணைந்து, அரசாங்கத்திற்கு எதிரான மற்றும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீதான பெருவணிக தாக்குதல்களுக்கு எதிரான தனது போராட்டத்தை ஆழப்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே, சோ.ச.க. மார்ச் 28 அன்று "இலங்கையில் கொரோனா வைரஸ் நெருக்கடி: தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு வேலைத்திட்டம்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய முயற்சிகளின் ஒரு பகுதியாக இலங்கைத் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்தது.

ஏப்ரல் 18 அன்று வெளியான, “இலங்கை: பாதுகாப்பற்ற தொற்றுநோய் நிலைமையில் வேலைக்கு திரும்புவதை எதிர்த்திடுவோம்! தொழில் அழிப்பு செய்யாதே! என்ற எங்கள் அறிக்கை, வேலைக்கு திரும்ப வேண்டும் என்ற ராஜபக்ஷவின் கோரிக்கையை நிராகரித்தது.

ஜூன் 2 அன்று, “இலங்கை சோ.ச.க. கொவிட்-19 வைரஸை எதிர்கொள்ளவும் தொழில்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைப்புவிடுக்கின்றது” என்ற தலைப்பில் கட்சி மற்றொரு அறிக்கையை வெளியிட்டது.

ஜூன் 9 அன்று, "இலங்கை ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய இன்னொரு முன்நகர்வாக இராணுவ செயலணியை ஸ்தாபித்துள்ளார்", என்ற தலைப்பில் சோ.ச.க. ஒரு அறிக்கையை வெளியிட்டு, இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து தொழிலாள வர்க்கத்தை எச்சரித்தது.

அவற்றுக்குப் பிரதிபலித்த இராஜபக்ஷ அரசு, எங்கள் கட்சியை குறிவைத்து. இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள வடக்கில், சோ.ச.க.வின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவர் உட்பட எங்கள் கட்சி வேட்பாளர்களின் வீடுகளுக்கு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சென்று விசாரணை செய்ததில் இது கூர்மையாக வெளிப்படுத்தப்பட்டது.

ஜூன் 23 வெளியான அறிக்கையில் அனைத்துலகக் குழு விளக்கியுள்ளபடி, “தொற்றுநோய்க்கு எதிரான ஒரு விளைபயனுள்ள போராட்டத்தை முன்னெடுக்க பொருளாதார, அறிவியல், தொழில்துறை மற்றும் தகவல் வளங்களை முறையாக ஒருங்கிணைப்பது அவசியமாகும். இந்த அத்தியாவசிய சர்வதேச ஒத்துழைப்பு தேசிய-அரசு அமைப்பில் வேரூன்றியுள்ள முதலாளித்துவத்தின் கீழ் சாத்தியமற்றது. ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கமும் எல்லாவற்றிற்கும் மேலாக, தனது சொந்த தேசிய நலன்களைக் கொண்டுள்ளன...

“தொற்றுநோய்க்கான எதிர் நடவடிக்கைகளின் நிர்வகிப்பை முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் இருந்து அபகரிக்க வேண்டும். தொற்றுநோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், இப்போது ஆபத்தில் இருக்கும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன நடவடிக்கை அவசியமாகும். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டமானது அடிப்படையில் ஒரு மருத்துவ பிரச்சினை மட்டுமல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, அது சமூக மற்றும் அரசியல் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட விடயமாகும்.”

இலங்கையில் சோ.ச.க. முன்னெடுத்து வரும் போராட்டத்தின் அடிப்படை இதுவே ஆகும். பாதுகாப்பான வேலைத் தளத்திற்காகவும், தொழில்கள், வேலை நிலைமைகள் மற்றும் ஊதியங்களைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலைத் தோற்கடிப்பதற்கும் போராடுவதற்கு, சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புக் குழுக்களை அமைக்குமாறு நாங்கள் தொழிலாளர்களை அழைக்கின்றோம்.

தொழிலாள வர்க்கம் வங்கிகளையும், பெரிய நிறுவனங்களையும், பெருந்தோட்டங்களையும் கைப்பற்றி, பொருளாதாரத்தை ஒரு சிலரின் லாபத்திற்காக அன்றி, பெரும்பான்மையினரின் நலனுக்காக பகுத்தறிவுடன் மறு ஒழுங்கு செய்ய வேண்டும். இதுவே, இராஜபக்ஷ மற்றும் அவரது ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தயாரித்து வரும் சர்வாதிகாரத்திற்கு ஒரே பதில் ஆகும்.

இந்த திட்டம் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கமுடியாமல் இணைக்கப்பட்டுள்ளது. 2015 இல், பெய்ஜிங் பக்கம் சாய்ந்திருந்த மஹிந்த ராஜபக்ஷவை வெளியேற்றி இலங்கையை அமெரிக்க போர் உந்துதலுடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைப்பதற்கு ஜனாதிபதியாக மித்ரிபால சிறிசேனாவை நியமித்தது, இலங்கையில் ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை வாஷிங்டன் திட்டமிட்டது. அமெரிக்காவுடன் நெருக்கமான இராணுவ உறவைப் பேண வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை டிரம்ப் நிர்வாகம் பலமுறை எச்சரித்துள்ளது.

சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் போருக்கு எதிரான இயக்கத்தை கட்டியெழுப்ப, இலங்கை தொழிலாள வர்க்கம் அதன் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படல் வேண்டும். பிற்போக்கு முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் போலி-இடது வக்காலத்து வாங்கிகளதும் தேசியவாத கந்தல்களுக்கு எதிராக, இந்த புரட்சிகர சர்வதேச வேலைத் திட்டத்திற்காகவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் அதன் சகோதர கட்சிகளும் போராடுகின்றன.

தெற்காசியாவிலும், சர்வதேச அளவிலும் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்புவதற்கு அதில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Loading