இலங்கை சோ.ச.க. கொவிட்-19 வைரஸை எதிர்கொள்ளவும் தொழில்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைப்புவிடுக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை அரசாங்கம், மே 26 முதல் "பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிட்டு" அனைத்து மாவட்டங்களிலும் பகல்நேர ஊரடங்கு உத்தரவை நீக்குவதன் மூலம், மேலும் தொழிலாளர்களை உலகளவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அபாயத்திற்கு முகங்கொடுக்கத் தள்ளியுள்ளது.

நாட்டில் மேற்கொள்ளப்படும் குறைந்தமட்ட தினசரி பரிசோதனைகளிலேயே ஒரு வாரத்தில் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மே 26 அன்று 1,319 இலிருந்து நேற்று 1,643 ஆக அதிகரித்துள்ளது. உத்தியோகப்பூர்வமாக மரண எண்ணிக்கை 11 ஆகும்.

தொற்றுநோயை "கட்டுப்படுத்துவதில்" அரசாங்கத்தின் "செயல்திறனை" தூக்கிப்பிடிப்பதற்கு இந்த குறைவான உத்தியோகப்பூர்வ எண்ணிக்கை பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சுயாதீன மதிப்பீடுகளின்படி, பரவல் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருக்க கூடும் மற்றும் சமூகப் பரவல் தொடங்கியுள்ளன.

படையினர் கொழும்பில் ஒரு ரயிலில் ரோந்து செல்கின்றனர்(Photo: WSWS)

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவினதும் அவரது அரசாங்கத்தினதும் தேசியவாத வாய்ச்சவடால் இருந்தபோதிலும், கொரோனா வைரஸுக்கு தேசிய எல்லைகள் எதுவும் தெரியாது. தொற்றுநோய் உலகளவில் பரவி வருகிறது. நேற்று நோய்த்தொற்றாளர்கள் எண்ணிக்கை ஆறு மில்லியனாக உயர்ந்துள்ளதுடன், இறப்பு எண்ணிக்கை 4 இலட்சத்தை நோக்கி அதிகரித்து வருகின்றது. அயல் நாடான இந்தியாவில், கிட்டத்தட்ட 200,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். சர்வதேச அளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.

மத்திய மற்றும் தென் அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஆபிரிக்காவில் கொவிட்-19 தொற்றுநோய் இன்னும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைத் தலைவர் வைத்தியர் மைக் ரயன் மே 25 அன்று தெரிவித்தார். "முதல் அலையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் கைவிடப்பட்டால், தொற்றுநோய் பரவும் விகிதம் மீண்டும் விரைவாக அதிகரிக்கக் கூடும்" என்று அவர் எச்சரித்தார்.

அரசாங்கங்கள், தொழிலாளர்களை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்ற நிலையில், பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள், தொழில் இழப்பு, அடக்குமுறை மற்றும் பட்டினிக்கும் எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்பு வளர்ச்சயிடைந்து வருகின்றது. இந்தியாவில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரசாங்க அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பங்களாதேஷில், வேலை இழப்புகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான ஆடைத் தொழிலாளர்கள் ஆறு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரேசிலில், சுகாதார ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்த அதே வேளை, சிலி நாடு போராட்டங்களில் மூழ்கியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட பிரதான முதலாளித்துவ மையங்களில், மக்களை பொறுப்பற்ற முறையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்குவதை தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர்.

ஆடைத் தொழில், பொது சுகாதாரம் மற்றும் சமுர்தி நலத்திட்டம் உட்பட இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் கடந்த பல வாரங்களாக தங்களைத் தற்காத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொற்று அபாயத்துடன் வேலை வாங்குவதற்கும், பெரும் வணிகத்தின் இலாபங்களை அதிகரிப்பதற்குமாக, தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருப்பதாக தவறான சித்திரிக்கும் அரசாங்கத்தின் பிரச்சாரத்தால் தவறாக வழிநடத்தப்படக் கூடாது, என்று சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாளர்களை எச்சரிக்கின்றது.

ஜனாதிபதி இராஜபக்ஷவி ன்பதில்

ஆரம்பத்தில் இருந்தே, கொவிட்-19 வைரஸுக்கு இராஜபக்ஷவின் பதில் விஞ்ஞானப்பூர்வமற்றதாக இருந்தது. ஜனவரி மாதமே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் சீன சுற்றுலா பெண் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். எனினும் இராஜபக்ஷ தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு பூட்டுதலை அல்லது விளைபயனுள்ள பரிசோதனைகளை அமுல்படுத்த மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக, "ஏனைய நாடுகளில் சிறந்த மருத்துவ வசதிகள் இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களை எங்களது முயற்சிகளின் மூலம் குணப்படுத்த முடிந்தது," என்று அவர் அறிவித்தார்.

இராஜபக்ஷ தனது நிர்வாகத்தை இராணுவமயமாக்குவதை தீவிரப்படுத்துவதற்கான ஒரு சாக்குப்போக்காக இந்த தொற்றுநோயை சுரண்டிக்கொண்டார். அவர் கொவிட்-19 தடுப்பு செயலணியின் தலைவராக இராணுவத் தளபதியை நியமித்ததுடன், சமீபத்தில் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமித்தார்.

இராஜபக்ஷ மார்ச் தொடக்கத்தில் பாராளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் 25 அன்று பொதுத் தேர்தலை நடத்த அழைப்பு விடுத்த போதிலும், வளர்ந்து வந்த உலகளாவிய தொற்றுநோய்களுக்கு மத்தியில் தேர்தல்கள் ஆணைக்குழு அதை ஒத்திவைக்க தள்ளப்பட்டது. ஒரு வர்க்கப் போருக்கான தயாரிப்பில், எதேச்சதிகார நிறைவேற்று அதிகார ஆட்சிக்கு செல்வதற்கு அரசியலமைப்பில் உள்ள தடைகளை அகற்றுவதற்காக, தனது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெறும் எதிர்பார்ப்பில் ஒரு முன்கூட்டிய தேர்தலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்.

ஒட்டுண்ணி நிதிய தன்னலக்குழு மற்றும் மாபெரும் கூட்டுத்தாபனங்களின் நலன்களின் பேரில், பொருளாதாரத்தை திரும்பவும் திறப்பதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் ஐரோப்பிய அரசாங்கங்களும் மீண்டும் வேலைக்குச் செல்லுமாறு விடுக்கின்ற அழைப்பை இராஜபக்ஷவும் எதிரொலிக்கின்றார். இலங்கையின் பலவீனமான முதலாளித்துவ வர்க்கம், வெளிநாட்டு கடன் தவணை தவறுதலின் விளிம்பில் உள்ளதுடன் பொருளாதார நடவடிக்கைகளை புதுப்பிக்க ஏங்குகின்றது.

வேலைத்தள நிலைமைகள்

தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்த, அரசாங்கம் பாதுகாப்பான வேலைத் தளங்களை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனங்களில் கிருமி நீக்கம் செய்தல், ஊழியர்களுக்கான வசதிகளை சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி உட்பட சுகாதார “வழிகாட்டுதல்களை” சுகாதார சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

கொட்டாவையில் பயணிகள் பேருந்தில் ஏறுகின்றனர். சமூக இடைவெளி சாத்தியமில்லை (Photo: WSWS)

இருப்பினும், பெரும்பாலான வேலைத் தளங்கள் மிகவும் நெரிசலானவையாகவும் சமூக இடைவெளியை பேணுவது சாத்தியமற்றதாகவும் உள்ளன. வெகுஜன சோதனைகளை நடத்த அரசாங்கம் மறுத்துவிட்டது. அறிகுறியற்ற நோய்பரவலை அடையாளம் காணுவதற்கு தொழிலாளர்கள் பி.சி.ஆர். (பாலிமரேஸ் தொடர் எதிர்வினை) சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. சில தொழிலாளர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டுள் போதிலும், போதுமான சுகாதார வசதிகள் கிடையாது. மேலும், தொழிலாளர்கள் நெரிசலான பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணித்து வேலைக்குச் செல்ல வேண்டும். இதனால், தொழிலாளர்கள் தங்களை அறியாமலே தொற்றுநோயால் பாதிக்கப்படும் பெரும் ஆபத்து உள்ளது.

இலங்கையில், சுமார் 10 சதவீத சுகாதார ஊழியர்களுக்கு மட்டுமே தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பி.பி.இ.) வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் பலருக்கு பி.சி.ஆர். சோதனை நடத்தப்படவில்லை. பெரும்பாலான மருத்துவமனைகளில் ஊழியர்களுக்கு பாதுகாப்பான வசதிகள் கிடையாது. அதே நேரம், தொற்றுநோயின் சுமை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படுகிறது. சில வணிகங்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. ஏனைய வேலைத் தளங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள போதிலும் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் மட்டுமே மீண்டும் வேலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தனியார் துறையில் ஊதியங்கள், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்கள் போன்ற போராடிப் பெற்ற உரிமைகள் வெட்டப்படுவதோடு வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நாள் கூலி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்க ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே மீண்டும் வேலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஒரு சிறிய தொழிலாளர் படையை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், மற்றவர்கள் வேலை இழக்கும் சாத்தியம் உண்டு.

50 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர் படையைக் கொண்ட, சுயதொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் ஆபத்தில் உள்ளது. பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் சரிந்துவிட்டன அல்லது கடுமையான நெருக்கடியில் உள்ளன.

ஹைட்றாமனி ஆடைத் தொழிற்சாலையின் மஹரகம வேலைத் தளம் (Photo: WSWS)

பூட்டப்பட்டிருந்த காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை வழங்குவதில் அரசாங்கம் வெறுக்கத்தக்க வகையில் தவறிவிட்டது. அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில், அரசாங்கம் ஒரு மாதத்திற்கு 5,000 ரூபாய் (நாளொன்றுக்கு 27 அமெரிக்க டொலர் அல்லது அதற்கும் குறைவான) அற்பத் தொகையை வழங்கத் தொடங்கிய போதிலும், ஜூன் மாதத்தில் அந்த கொடுப்பனவை நிறுத்திவிட்டது.

மத்திய கிழக்கில் கொவிட்-19 பரவுகின்ற நிலையிலும் அங்கிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை திருப்பி அழைப்பதை நிறுத்தியமை, முழு தொழிலாள வர்க்கத்தின் மீதுமான அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை காட்டுகிறது. பெரும்பாலானவர்கள் விசா இன்றி சிக்கித் தவிக்கின்றனர். மத்திய கிழக்கில் உழைக்கும் பல மில்லியன் தெற்காசிய தொழிலாளர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்கள் உள்ளனர். கட்டார், குவைத் மற்றும் துபாயில் உள்ள ஆட்சிகள், புலம்பெயர் தொழிலாளர்களை வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கின்றன.

பெரும் வர்த்தகங்கள் லாபத்தைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளன. பணப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள அரசாங்கம், ஆரம்பத்தில் சுமார் 300 பில்லியன் ரூபாயை வங்கிகள் மூலம் நிதி உதவியாக பெரும் வர்த்தகங்களுக்கு செலுத்தியது. கூட்டுத்தாபன உயரடுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதமளவில், மலிவான கடனை கோருவதோடு தடையற்ற சுரண்டலை முன்னெடுக்க "பழைய தொழிலாளர் சட்டங்களை" அகற்றக் கோருகின்றது.

வேலைத்தள நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்பு!

இந்த கொடூரமான தாக்குதல்களில் இருந்து தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, தொழிலாளர்கள் பெரும் வணிகத்தின் கருவியாக மாறியுள்ள தொழிற்சங்கங்களை நம்ப முடியாது. தொழிலாளர்களின் பல பிரிவினர் போராட்டங்களுக்கு வந்துள்ள போதிலும், அவர்கள் தொழிற்சங்கங்களின் வீதித் தடைகளை எதிர்கொள்கின்றனர்.

முதலாளிமார் மற்றும் தொழில் அமைச்சருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுள்ள இந்த தொழிற்சங்கங்கள், மீண்டும் வேலைக்கு அழைக்கப்படாத தொழிலாளர்களுக்கான ஊதியத்தை வெட்டுவதற்கு ஒப்புக் கொண்டு, அவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதற்கு வழி வகுத்துள்ளன.

இந்த கொடுக்கல் வாங்கல்களின் ஒரு பகுதியாக, இந்த தொழிற்சங்கங்கள், எஸ்குவல் பல்தேசிய ஆடைத் தொழிற்சாலை குழுமத்தில் உள்ள தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு குழிபறித்துவிட்டு, தொழிலாளர்களை "கட்டாய ஓய்வை" ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திப்பதற்கான வழியை நிறுவனத்திற்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளன. சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கமும், மற்றும் இலங்கை வணிக, தொழில்துறை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கமும் இந்த பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்கள் பல நிறுவனங்களில் நடந்து வருகின்றன.

மேற்கூறிய இரண்டு உட்பட ஐந்து தொழிற்சங்கங்கள், கடந்த வாரம், 35 கம்பனிகள் ஊதியங்களையும், வேலைகள் மற்றும் பிற உரிமைகளையும் வெட்டிக் குறைப்பதாக தொழில் அமைச்சருக்கு புகார் அளித்துள்ளன. எவ்வாறாயினும், இந்த பயனற்ற வேண்டுகோள்கள், தொழிலாளர்களின் எந்தவொரு போராட்டத்தையும் தடுப்பதை இலக்காகக் கொண்டதாகும்.

பாதுகாப்பான வேலைத்தள நிலைமைகளுக்கும், தொழில்கள், ஊதியங்கள் மற்றும் ஏனைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் போராடுவதற்காக, தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புமாறு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

இந்த குழுக்கள், பின்வரும் பணிகளைச் செய்வதற்காக, தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பகமான பிரதிநிதிகளை உள்ளடக்கி இருக்க வேண்டும்:

* நம்பகமான விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார நிபுணர்களுடன் ஆலோசிப்பதன் மூலம் வேலைத்தளத்தில் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் கொவிட்-19 வைரஸில் இருந்து அதிகபட்ச பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

* வழக்கமான பரிசோதனைகள், சமூக இடைவெளி, தனிப்பட்ட பாதுகாப்பு கவசங்களின் சரியான பயன்பாடு மற்றும் நிறுவனங்களை தீவிரமாக சுத்தம் செய்தல் உட்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய வேண்டும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குமான செலவுகளையும் நிறுவனங்களும் அரசாங்கங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

* ஒரு தொழிலாளி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவன் அல்லது அவள் தனிமைப்படுத்தப்பட்டு, ஊதிய இழப்பு இல்லாமல் சரியான சிகிச்சையைப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

* அனைத்து தொழில்கள், ஊதியங்கள், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதிய உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்படுகின்ற எந்தவொரு தொழிலாளிக்கும் நிர்வாகக் கணக்கீடுகளின்படி அன்றி, முழு இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.

இந்த அடிப்படை உரிமைகளுக்காக போராட, வேலைநிறுத்தங்கள் உட்பட வர்க்கப் போராட்ட வழிமுறைகளை இந்த நடவடிக்கை குழுக்கள் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது, பாதுகாப்பான வேலை நிலைமைகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டமானது உலகளவியதாக இருப்பதன் காரணமாக, அவர்கள் தீவு முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களை அணுகுவதோடு போராட்டங்களை ஒருங்கிணைக்க சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும்.

சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், சிங்களம் மற்றும் தமிழில், சுகாதாரம், ஆடை தொழில் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள தொழிலாளர்கள், அதே போல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும் நான்கு இணையவழி செய்திப் பக்கங்களை வரும் வாரங்களில் தொடங்குவதற்கு முன்முயற்சி எடுத்து வருகின்றன.

சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுங்கள்

உழைக்கும் மக்களின் இழப்பில் ஒரு சிலரது லாபத்தை அதிகரிப்பதை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பினுள் தொழிலாள வர்க்கத்தால் தனது உரிமைகளைப் பாதுகாக்க முடியாது, என்று சோ.ச.க. வலியுறுத்துகிறது. இராஜபக்ஷ அரசாங்கம் இலாப அமைப்பைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதுடன் நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் முதுகில் சுமத்துவதற்கு இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வாதிகாரத்தைத் தயார் செய்துகொண்டிருக்கின்றது.

வர்க்கப் போராட்டம் வெடிக்கும் நிலையை நோக்கி வளர்ச்சியடைவதையிட்டு பீதியடைந்துள்ள, வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி, அதில் இருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் பல்வேறு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் உட்பட ஒவ்வொரு ஸ்தாபன அரசியல் கட்சியும் அரசாங்கத்தை ஆதரிக்கின்றன.

தொழிலாளர்கள் ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு கன்னையில் இருந்தும் பிரிந்து, சோசலிசக் கொள்கைகளைச் செயல்படுத்தும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராட வேண்டும்.

சமூகத்தின் பெரும்பான்மையினரின் நலனுக்காக, உற்பத்தியானது பகுத்தறிவான மற்றும் விஞ்ஞானபூர்வமான மறுசீரமைப்பிற்காக பிரதான நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

இலங்கையில் உள்ள தொழிலாளர்கள், உலகம் பூராவும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றுபடுவதன் மூலம் மட்டுமே இந்த போராட்டத்தை முன்னெடுக்க முடியும். அரசாங்கத்தின் தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக, தொழிலாள வர்க்கமானது இன மற்றும் மத பாகுபாடுகளைக் கடந்து ஐக்கியப்பட்டு கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்டிக்கொள்ள வேண்டும்.

தெற்காசியா மற்றும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிக்க சோசலிச சமத்துவ கட்சி போராடுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த முன்னோக்கிற்கான போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு கல்வியூட்ட, ஒழுங்கமைக்க மற்றும் அணிதிரட்டுவதற்கு ஒரு புரட்சிகரக் கட்சி அவசியமாகும். ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்திற்காகப் போராடும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் அழைப்புவிடுக்கின்றோம்.

Loading