முன்னோக்கு

கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைக்கு!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் வேகமாக கட்டுப்பாட்டை மீறி வருகிறது. கோவிட்-19 இன் முதல் தொற்றுக்குக்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர், புதிய தொற்றுக்கள் அதிகபட்சமாக உள்ளன. அலட்சியம், திறமையின்மை மற்றும் நனவான கொள்கையுடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் நடவடிக்கைகளின் நேரடி விளைவாக, நிலைமை கொடிய பேரிடராகவும் மிகமோசமானதாகவும் உள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய் ஒரு உலகளாவிய பேரழிவு ஆகும், இருபத்தியோராம் நூற்றாண்டின் வரலாற்றில் அதன் தாக்கம் இருபதாம் நூற்றாண்டில் முதலாம் உலகப் போரின் தாக்கத்தை விட குறைவாக இருக்கப்போவதில்லை.

கடந்த ஐந்து மாதங்களின் அனுபவம், அமெரிக்கா முன்னணியில் உள்ள முக்கிய முதலாளித்துவ அரசாங்கங்களின் பிரதிபலிப்பு பேரழிவுக்குக் குறைவானதல்ல என்பதை மிகத் தெளிவுபடுத்தியுள்ளது. ஏகாதிபத்திய-முதலாளித்துவக் கொள்கைகளை கட்டளையிடும் பெருநிறுவன நிதிய தன்னலக்குழுக்களின் வர்க்க நலன்கள், விஞ்ஞான ரீதியாக வழிநடத்தப்படும், சமூக ரீதியாக முற்போக்கான, ஜனநாயக, சமத்துவ மற்றும் தொற்றுநோய்க்கு மனிதாபிமான ரீதியாக பதிலளிக்க அனுமதிக்காது. உலக மக்கள்தொகையில் பெரும்பான்மையினரின் சமூக நலன்களுக்கு மேலாக இலாபத்திற்கான உந்துதல், தனிப்பட்ட செல்வம் மற்றும், தொழிலாள வர்க்கத்தின் மீதான எல்லையற்ற சுரண்டல் ஆகியவை முழுமையான முன்னுரிமையைப் பெறுகின்றன.

ஜூன் இறுதி வாரத்தில் நாம் நுழையும் போது, 450,000 க்கும் அதிகமானோர் ஏற்கனவே இறந்துவிட்டனர் என உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமிட்ட முயற்சியையும் கைவிட்டு முன்கூட்டிய மற்றும் பொறுப்பற்ற முறையில் "வேலைக்குத் திரும்புதல்" நடவடிக்கையானது உலக சோசலிச வலைத் தளம் பலமுறை எச்சரித்தபடி, புதிய தொற்றுக்களின் தீவிர எழுச்சிக்கு விரைலேயே வழிவகுத்துள்ளது.

அமெரிக்காவில் தொற்றுநோய் நாடு முழுவதும் பரவி வருகிறது, இது மனித வாழ்க்கைக்கு ஒரு பயங்கரமான எண்ணிக்கையாக உள்ளது. ஏறத்தாழ எட்டு ட்ரில்லியன் டாலர்களின் மொத்த செல்வத்துடன் கிட்டத்தட்ட 300 பில்லியனர்கள் வசிக்கும் உலகின் பணக்கார நாட்டில், உலகில் எந்தவொரு நாட்டையும் விட அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இது, அமெரிக்க சமுதாயத்தின் அழுகிய நிலையினதும் முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று தோல்வியினதும் ஒரு பதிலளிக்க முடியாத வெளிப்பாடாக உள்ளது.

மார்ச் தொடக்கத்தில் இருந்து, அமெரிக்காவில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 120,000 இனை கடந்துவிட்டது. ஜூன் 21 அன்று, 25,000 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இது இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததைவிட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏறக்குறைய இரண்டு டஜன் மாநிலங்களில் தொற்றுக்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றன. கலிபோர்னியாவில், கடந்த இரண்டு வாரங்களில் புதிய தொற்று 48.3 சதவீதம், டெக்சாஸ் 114 சதவீதம், புளோரிடா 168 சதவீதம், அரிசோனா 142 சதவீதம், ஜோர்ஜியா 47 சதவீதம் அதிகரித்துள்ளன.

இந்த விகிதத்தில், வைரஸ் பரவுவதைத் தடுக்க எந்தவொரு ஒருங்கிணைந்த திட்டமும் இல்லாத நிலையில், கோடை இறுதிக்குள் வைரஸால் பாதிக்கப்படவிருக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை கால் மில்லியனுக்கும் அதிகமானதாக இருக்கும். இதனால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையோர் தொழிலாளர்களாக இருப்பார்கள், அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்படுபவர்கள் தொழிலாள வர்க்கத்தின் ஏழ்மையான பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருப்பர்.

மேற்கு ஐரோப்பாவில், தொற்றுநோய் பரவுவது நிறுத்தப்பட்டதாகவும் அதன் பொருளாதாரத்தை பாதுகாப்பாக மீண்டும் திறக்க முடியும் என்ற கூற்றுக்களுக்கும் அப்பால் நோய்த்தொற்று விகிதம் மீண்டும் அதிகரித்து வருவதற்கான ஆபத்தான அறிகுறிகள் அங்கே உள்ளன. மேற்கு ஜேர்மனியில், 1,300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைசெய்யும் குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவிலிருந்து குடியேறிய தொழிலாளர்களை கொண்ட ஒரு பெரிய இறைச்சி பதனிடும் ஆலையில், வார இறுதியில் நடந்த சோதனையில் கோவிட்-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூட்டுதல் நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இறைச்சி பொதி செய்யும் மற்றும் பிற தொழிற்சாலைகளில் பல தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக "சமூக நோயெதிர்ப்பு சக்தி" க்கு ஒரு மாதிரியாகக் கருதப்பட்ட சுவீடனில் நோய் தொடர்ந்து பரவுவது குறிப்பிடத்தக்கது, அங்கு கடந்த இரண்டு வாரங்களில் புதிய தொற்றுக்கள் 22.2 சதவீதம் அதிகரித்துள்ளன.

ஏகாதிபத்தியத்தால் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட, தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில் உள்ள பாரிய வறுமை நிலையை கருத்தில் கொள்கையில், தொற்றுநோய் அவர்களின் மட்டுப்படுத்தப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு முறையையும், பலவீனமான சமூக பாதுகாப்பு வலைப்பின்னல்களையும் மூழ்கடிக்க அச்சுறுத்துகிறது.

தெற்காசியாவில் புதிய தொற்றுக்களும் இறப்புக்களும் கடுமையாக அதிகரித்து வருகின்றன. இந்தியாவில், இப்போது 440,000 தொற்றுக்களும் 14,000 இறப்புகளும் பதிவாகியுள்ளன. ஜூன் 21 அன்று, 11,484 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, ஸ்டேட் நியூஸ் படி, இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததைவிட 32.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் புதிய இறப்புகளின் எண்ணிக்கை 88.5 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் புதிய தொற்றுக்கள் 87.6 சதவீதம் அதிகரித்துள்ளன. நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் ஏனைய நோயுற்றவர்களுக்கும் சிகிச்சையளிக்க முடியாத நிலையில் மக்கள் மற்ற நிலைமைகளாலும் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தானில், 3,590 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 63.6 சதவீதம் அதிகரித்துள்ளது, மேலும் இறப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 70 சதவீதம் அதிகரித்துள்ளது. பங்களாதேஷில், புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 43.6 சதவீதமும், புதிய இறப்புகளின் எண்ணிக்கை 33.3 சதவீதமும் அதிகரித்துள்ளது. மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை பங்களாதேஷில் 115,000 க்கும் மேல் உயர்ந்துள்ளது, 1,500 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

ஆப்பிரிக்காவில், தொற்று முதலில் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 100,000 தொற்றுக்களாவதற்கு 98 நாட்கள் எடுத்தது. ஆனால் இது 100,000 இலிருந்து 200,000 ஆக இரட்டிப்பாக 18 நாட்கள் மட்டுமே எடுத்துள்ளது. தென்னாபிரிக்காவில் மட்டும் இப்போது 100,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் உள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. எகிப்தில் 50,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் உள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் 22.2 சதவிகிதம் புதிய தொற்றுக்கள் அதிகரித்துள்ளன.

இலத்தீன் அமெரிக்காவில் இந்த தொற்றுநோய் பெரும் எண்ணிக்கையில் உள்ளது. பிரேசிலில், நாட்டின் பாசிச ஜனாதிபதி ஜெயர் போல்சனாரோ வைரஸைத் தடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் நிராகரித்த நிலையில், 1.1 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இது உலகின் இரண்டாவது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். ஜூன் 21 அன்று கிட்டத்தட்ட 30,000 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இது இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததைவிட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அங்கு 51,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், தினசரி இறப்பு எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளது. மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நகரமான Sao Paulo இல் 220,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததைவிட 32.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

மெக்சிகோவில், பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 180,000 க்கும் அதிகமாக உள்ளது, இதில் 21,825 பேர் இறந்துள்ளனர். புதிய தொற்றுக்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததைவிட 100 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன. மேலும் புதிய இறப்புகள் 155 சதவீதமாக உள்ளன. சிலியில், புதிய தொற்றுக்கள் 66.7 சதவீதம் அதிகரித்துள்ளன. ஈக்குவடோரில் அவை இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததைவிட 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன.

வெளிப்பட்டுவரும் உலகளாவிய பேரழிவு, ஆளும் வர்க்கத்தால் மேற்க்கொள்ளப்பட்ட கொள்கைகளின் நேரடி விளைவாகும். "சமூக நோயெதிர்ப்பு சக்தி" என்ற திட்டம் முதன்முதலில் முன்மொழியப்பட்டபோது, அது பரவலாக மனிதாபிமானமற்றது மற்றும் பொறுப்பற்றது என்று கருதப்பட்டது. இதை விஞ்ஞானிகள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் உலகளவில் கண்டனம் செய்தனர். ஆனால் அப்போது அதை உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டன. ஒரு வர்ணனையாளர் ஒப்புக் கொண்டபடி, COVID-19 தொற்றுநோய்க்கான கொள்கை இப்போது அவ் அரசாங்கங்களை முழுவேகத்தில் "கிழித்தெறிகிறது."

ஆரம்பத்தில் இருந்தே, ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் பிற உலக அரசாங்கங்களின் பிரதிபலிப்பானது, பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பற்றியதால் அன்றி, பெருநிறுவன மற்றும் நிதி தன்னலக்குழுவின் நலன்களால் கட்டளையிடப்பட்டது. மார்ச் மாத இறுதியில் வோல் ஸ்ட்ரீட்டுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களை இறைத்த பின்னர், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரச்சாரம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.

ஆளும் வர்க்கத்தின் நோக்கம், ஊதியங்களைக் குறைப்பதற்கும், சுரண்டலை அதிகரிப்பதற்கும், பணக்காரர்களுக்கு பிணை எடுப்பதற்கு பாரிய சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்கும், உலக அளவில் வர்க்க உறவுகளின் அடிப்படை மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும் நிலைமையை சுரண்டுவதாகும். நிதி தன்னலக்குழுவின் நலன்களுக்கும் பெரும்பான்மையான மக்களின் நலன்களுக்கும் இடையிலான இடைவெளியானது தொற்றுநோய்களின்போது பங்கு மற்றும் பங்குச் சந்தைகளின் தொடர்ச்சியான உயர்வுகளில் கோரமான வெளிப்பாட்டைக் கண்டது. இது சமகால மதிப்பில் போரின் இலாபத்திற்கு சமமானதாகும்.

கொரோனா வைரஸைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டைப் பொறுத்துள்ளது. வைரஸைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளான அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துதல், தனிமைப்படுத்தல், வெகுஜன சோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல் ஆகியவை ஆளும் வர்க்கத்தின் இலாப நலன்களுக்கு எதிராக இயங்குகின்றன. இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்குமான உதவியை உறுதி செய்வதற்கு சமூக வளங்களை பெருமளவில் திருப்பிவிட வேண்டும்.

மேலும், தொற்றுநோய்க்கு எதிரான ஒரு தாக்கம்மிக்க போராட்டத்திற்கு பொருளாதார, விஞ்ஞான, தொழில்துறை மற்றும் தகவல் வளங்களை திட்டமிட்ட ஒருங்கிணைத்தல் தேவைப்படுகிறது. இந்த அத்தியாவசிய சர்வதேச கூட்டுழைப்பு தேசிய-அரசு அமைப்பு முறையில் வேரூன்றியுள்ள முதலாளித்துவத்தின் கீழ் சாத்தியமற்றது. ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கமும் எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் சொந்த தேசிய நலன்களை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளன.

மருந்து நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக்கொண்டு, தகவல்களைப் பகிர்வதை தவிர்த்து தங்கள் “வணிக இரகசியங்களை” பாதுகாக்கின்றன, தகவல்களை பகிர்ந்துகொள்ளும் கூட்டு முயற்சியின் மூலம், பயனுள்ள சிகிச்சை நுட்பங்களை உருவாக்கவும் இறுதியில், COVID-19 எதிர்ப்பு தடுப்பூசிக்கும் உதவுகின்றன.

உலக சுகாதார அமைப்பிலிருந்து ட்ரம்ப் நிர்வாகம் விலகியிருப்பது தேசிய ஏகாதிபத்திய அரசியலின் அழிவுகரமான தன்மைக்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும். ஆனால் இதைவிட இன்னும் ஆபத்தானது என்னவெனில், புவிசார் அரசியல் அனுகூலத்தைத் தேடும் இந்த இழிந்த முயற்சிகள், தொற்றுநோய்க்கு சீனாவை குறை கூறுவதற்கும் அதன் மூலம் அதன் பிரதான போட்டியாளருக்கு எதிரான போருக்கான அமெரிக்காவின் தயாரிப்புகளை நியாயப்படுத்துவதற்கும் ஆகும்.

தொற்றுநோயைத் தடுத்து மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்?

தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பை முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் இருந்து எடுக்க வேண்டும். தொற்றுநோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், இப்போது ஆபத்தில் இருக்கும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த தொழிலாள வர்க்கத்தின் பாரிய நடவடிக்கை அவசியமாகும். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் முதன்மையானதாக இருந்தாலும் அது ஒரு மருத்துவ பிரச்சினை மட்டுமல்ல. அது எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மற்றும் அரசியல் போராட்டத்துடன் தொடர்பானதாகும்.

அத்தகைய இயக்கத்தின் வளர்ச்சிக்கான சாத்தியப்பாடு இந்த நெருக்கடியின் தர்க்கத்திலிருந்தே எழுகிறது.

உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தில் எதிர்ப்பு பெருகி வருகிறது. தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான எந்தவொரு முறையான திட்டமும் இல்லாமை, சுகாதார வசதிகளின் பேரழிவுகரமான நிலை, எண்ணற்ற உயிர்களை ஆபத்திற்குள்ளாக்கும் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள், வேலை இழந்த மில்லியன் கணக்கானவர்களுக்கு முதலாளித்துவ அரசாங்கங்கள் தேவையான அளவிலான சமூக ஆதரவை வழங்க மறுப்பது, பரவலான சமூக சமத்துவமின்மை, இராணுவவாதத்தின் இடைவிடாத வளர்ச்சி மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் காரணமாக கோபமாக அதிகரித்து வருகிறது.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தீவிரமயமாக்கல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஆளும் வர்க்கம் அறிந்திருக்கிறது. "இடதுசாரி தீவிரவாதிகளுக்கு" எதிரான ட்ரம்ப்பின் கோபமும், ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிராக இராணுவத்தை நிலைநிறுத்த அவர் மேற்கொண்ட முயற்சியும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

மினசோட்டாவில் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும், பொலிஸாரின் மிருகத்தனமான பிற சம்பவங்களிலும் ஆரம்ப வெளிப்பாட்டைக் கண்ட வளர்ந்து வரும் சமூக கோபம், முதலாளித்துவத்திற்கு எதிரான சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய வர்க்க நனவான இயக்கமாக அபிவிருத்திசெய்யப்பட வேண்டும்.

ஆளும் வர்க்கத்தின் வக்காலத்து வாங்குபவர்கள், “சிகிச்சையை நோயை விட மோசமானதாக விடவேண்டாம்” என்று வற்புறுத்துகையில், தொழிலாளர்கள் அடிப்படை சமூக நோய் முதலாளித்துவம் என்றும், தொற்றுநோய் இந்த நோயின் அறிகுறியாகும் என்றும், இதற்கான சிகிச்சை சோசலிசமே என்றும் பதிலளிக்க வேண்டும்.

தொற்றுநோயைத் தடுத்து நிறுத்துவதற்கும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு முழு வருமானத்தை வழங்குவதற்கும் அவசரகால நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக செல்வந்தர்களால் திரட்டிவைக்கப்பட்டுள்ள பாரிய தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி விடப்பட வேண்டும். பிரம்மாண்டமான வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும், இது ஒரு பகுத்தறிவான மற்றும் விஞ்ஞான ரீதியான திட்டத்தின் அடிப்படையில் இயங்க வேண்டும். போர் மற்றும் அழிவு ஆகியவற்றிற்கு செலவிடப்படும் பாரிய வளங்கள் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பிற சமூகத் தேவைகளுக்கு நிதியளிக்க திசை திருப்பப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த புரட்சிகர இயக்கம் அபிவிருத்தியடைந்து வருகிறது என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நம்புகிறது. அத்தியாவசிய தந்திரோபாய, மூலோபாய மற்றும் வேலைத்திட்ட வழியை வழங்குவதன் மூலம் இந்த இயக்கத்திற்கு உதவுவதே எமது இயக்கத்தின் பணியாகும். ஆனால் இந்த பிரமாண்டமான பணிக்கு ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டமைக்க வேண்டும். மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் இந்த போராட்டத்தில் எங்களுடன் இணையுமாறு, உலகின் சோசலிச மறுஒழுங்கமைப்பின் அவசியத்தை அங்கீகரிக்கும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Loading