இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா செவ்வாய்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்தார். தனது X கணக்கில் கருத்துத் தெரிவித்த ஜோர்ஜிவா, சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்பு கடனுடன் தொடர்புடைய 'மறுசீரமைப்பு முயற்சிகளைத் தொடர்வதில் அதிகாரிகள் கொண்டுள்ள அர்ப்பணிப்பால் தான் ஊக்கப்படுத்தப்பட்டதாக' கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (வலது) மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன், 22 அக்டோபர் 2024 அன்று வாஷிங்டனில் சந்தித்தபோது
https://www.wsws.org/asset/9c20f2b7-951b-4a3a-bfb7-b9cf4f0b3461?rendition=image1280
இலங்கைக் குழுவில் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஜனாதிபதி திசாநாயக்கவின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் அடங்குகியிருந்தனர். ஹுலங்கமுவ, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக உள்ளார்.
ஜனாதிபதி அனுர திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி./தே.ம.ச.) புதிய அரசாங்கம், இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியக் குழுவிடம், தற்போதைய வரி விதிப்பைப் பேணுவதாகவும், ஏனைய அனைத்து சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கும் இணங்குவதாகவும் முன்னரே உறுதியளித்திருந்தது. இதில் தொழிலாளர்கள் மீதான வரி அதிகரிப்பு, சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்களில் வெட்டுக்களை முன்னெடுத்தல் மற்றும் ஒட்டு மொத்தமாக அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கலும் அடங்கும். ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியானது, நவம்பர் 14 அன்று நடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர், அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது பற்றி பேசுவதாகக் கூறியது.
அமைச்சரவைப் பேச்சாளரும் சிரேஷ்ட அமைச்சருமான விஜித ஹேரத் அக்டோபர் 9 செய்தியாளர் மாநாட்டில் பேசிய போது, 'பொருளாதாரம் பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால்' அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரலையும் குறிப்பாக சர்வதேச அரச கடன் பத்திரங்கள் தொடர்பானவற்றை மாற்றாது, என்று கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் அப்படியே தொடரும் என்பதாகும்.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கு உலக வங்கி போன்ற பிற சர்வதேச கடன் வழங்குநர்களிடமிருந்து கடன்களைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு கடனின் அடுத்த தவணை மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது. இந்த வாரம் வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டங்கள், அனைத்து வரிகளையும் உயத்துதல் மற்றும் குறைந்தபட்சம் 500,000 அரச வேலைகளை அழித்தல் உட்பட முன்னாள் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து சிக்கன நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அரசாங்கம் அர்ப்பணித்துக்கொண்டுள்ளதை சர்வதேச நாணய நிதியத்துக்கும் உலக வங்கிக்கும் மேலும் உறுதிப்படுத்திக்கொள்வதற்கு நடத்தப்பட்டதாக அமைந்தது.
உச்சபட்ச ஏழ்மையை எதிர்கொண்டுள்ள இலங்கை மக்கள், தனது தேர்தல் வாக்குறுதிகளுக்கு ஏற்ப புதிய அரசாங்கம் ஓரளவாவது சமூக நிவாரணங்களை வழங்கும் என்று நம்புகின்ற நிலையில், சர்வதேச வங்கியாளர்களுக்கான இந்த உறுதிமொழிகள், திசாநாயக்க ஆட்சியை, இலங்கை வெகுஜனங்களுடன் வெடிக்கும் மோதலுக்கு கொண்டு வரும்.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை திணிக்க அரசாங்கம் அரசு எந்திரத்தை அணிதிரட்டும்போது இந்த மாயைகள் உடைந்துவிடும். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களை அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, ஒரு சோசலிச மற்றும் அனைத்துலகவாத வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டுவதற்கு, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இந்த பொதுத் தேர்தல்களில் தலையிடுகிறது. திட்டமிட்ட சமூகத் தாக்குதல்களுக்கு முடிவுகட்டுவதற்கான ஒரே வழிமுறை இதுவே ஆகும்.
நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க வெளியிட்ட 'தேர்தலுக்கு முந்தைய வரவு செலவுத் திட்ட நிலை அறிக்கையின்' படி, இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரசாங்க வருவாய் 41 சதவீதத்தால் அதிகரித்து 2,557 பில்லியன் ரூபாயை (8.7 பில்லியன் டொலர்) எட்டியுள்ளது. இந்த அதிகரிப்புக்கு, பெரும்பாலும் 41 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ள, மொத்தம் 2,348 பில்லியன் ரூபா வரி வசூலே காரணமாகும். அடிப்படையில் இந்தச் சுமையை சுமப்பவர்கள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளே ஆவர்.
இருப்பினும், 2025 வரவு செலவுத் திட்டத்தின் முதன்மை நிலுவையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதமாக உயர்த்துவதற்கு, அரசாங்க வருவாய் அதிகரிக்கப்பட வேண்டும் மற்றும் அரச செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோருகிறது. இது 2023 இல் 0.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகரிப்பை உள்ளடக்கும். வெகுஜன வேலையின்மை ஏற்படுவதோடு மில்லியன் கணக்கான இலங்கையர்கள் பெரும் வறுமையில் தள்ளப்படவுள்ளனர் என்பதே இதன் அர்த்தமாகும்.
அரசாங்கம் அதிக வருவாயைப் பற்றி பெருமிதம் கொள்கிறது ஆனால் இது எவ்வாறு அடையப்பட்டது?
சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, விக்கிரமசிங்க அரசாங்கமானது பெறுமதி சேர் வரியை (VAT) 18 சதவீதமாக உயர்த்தியது. இதை தற்போதைய நிர்வாகம் தொடரும். இந்த வரியானது, மக்கள் உயிர்வாழ்வதற்காக நம்பியிருக்கும் கிட்டத்தட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் விதிக்கப்படுவதுடன் மாதத்திற்கு ஐந்து மில்லியன் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட சிறு வணிகங்கள் மீதும் தாக்கங்களை ஏற்படுத்தும்.
வருவாய் அதிகரிப்பின் மற்றொரு கூறு முன்கூட்டிய தனிநபர் வருமான வரி (APIT) மற்றும் நிறுத்திவைத்தல் வரி ஆகும். இது முதன்மையாக மாதம் ஒன்றுக்கு 100,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தனிநபர்களையும் ஓய்வுபெறுபவர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பை பொறுத்து அவர்களையும் பாதிக்கிறது. இந்த வரி வருவாய் 16 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து, கிட்டத்தட்ட 625 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டுக்கான அரசாங்க வருவாய் இலக்கை 4,127 பில்லியன் ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
உழைக்கும் மக்களுக்கு இந்த கொடூரமான வருவாய் பெறும் நடவடிக்கைகளின் விளைவுகள் என்ன?
2022 ஆம் ஆண்டிலிருந்து அதிக வரி விதிப்புகளும் தொடர்ச்சியான உயர் பணவீக்கமம் மக்கள் தொகையில் 26 சதவிகிதத்தினரை அல்லது நான்கில் ஒருவரை வறுமையில் வாழ நிர்ப்பந்தித்துள்ளது. ஒக்டோபர் 10 அன்று வெளியிடப்பட்ட இலங்கை பற்றிய உலக வங்கியின் பின்னூட்டம், 2024ல் 'உணவுப் பாதுகாப்பின்மை அதிகமாக உள்ளதுடன் வறுமை ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளது' என்றும் இது 2026 வரை தொடரும் என்றும் தெரிவிக்கிறது.
2023 ஆம் ஆண்டின் அரசாங்க தரவுகளின்படி, நான்கு பேர் கொண்ட குடும்பம் வாழ்வதற்கு குறைந்தபட்சம் 103,000 ரூபாய் தேவைப்படுகிறது. எவ்வாறாயினும், உண்மையான ஊதிய விகிதங்கள் 2022 இல் 27 சதவீதமும், 2023 இல் 23 சதவீதமும் குறைந்துள்ளன. பல தொழிலாளர்கள் மாதத்திற்கு 25,000 முதல் 30,000 ரூபாய் வரை மட்டுமே சம்பாதிக்கிறார்கள். இதன் அர்த்தம் தொழிலாள வர்க்கத்தின் கணிசமான பகுதியினர் தங்களின் குடும்பங்களை கொண்டுநடத்த மேலதிக நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதுடன் பல தொழில்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர்.
அரசாங்க வருவாயில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளபோதிலும், 1.4 மில்லியனுக்கும் அதிகமான அரச ஊழியர்களுக்கு முன்னாள் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பற்றாக்குறையான ஊதிய உயர்வை திசாநாயக்க இடைநிறுத்தியுள்ளார். இது 2025 ஜனவரி முதல் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும், அரசாங்க செலவின வெட்டு கோரிக்கைகளை இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தவில்லை. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டங்களுக்காக தயாரிக்கப்பட்ட நிதி கண்காணிப்பு அறிக்கையானது, 'கடன் நிலைத்தன்மை' மீது கவனம் செலுத்தி, கடன்கள் வேகமாக அதிகரித்து வரும் நாடுகளில் கடன் அளவை உறுதிப்படுத்துவதற்கு, முன்பை விட பெரிய அளவில் அரசாங்க செலவின வெட்டுக்களை முன்னெடுக்க வேண்டி வரும் என்பதை தெளிவுபடுத்துகிறது.
ஜே.வி.பி./தே.ம.ச., முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் பரவலாக வெறுக்கப்படும் பாரம்பரியக் கட்சிகளின் எதிர்ப்பாளர்களாக காட்டிக்கொண்டு, செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடிந்தாலும், புதிய அரசாங்கமானது பலவீனமான மற்றும் நிலையற்ற ஆட்சியாக உள்ளதுடன், இலங்கை வெகுஜனங்களுடன் அரசியல் மோதல் போக்கிலேயே உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, 2022 ஏப்ரலில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் வெளியேற்றிய, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன இயக்கமொன்று மீண்டும் வெடிக்கக் கூடிய ஆபத்து பற்றி அது நன்கு அறிந்திருக்கிறது.
இதனால்தான் ஜே.வி.பி./தே.ம.ச., பாரம்பரிய ஆளும் கட்சிகள் மீது ஆழமாக வேரூன்றியுள்ள பொதுமக்களின் அதிருப்தியை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்ற அதே நேரம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடமும் அவற்றின் சிக்கனத் தாக்குதல்களை செயல்படுத்துவதாக உறுதியளித்து, அவநம்பிக்கையான முறையில் தனது வாயின் இருபுறமும் பேசி வருகிறது.
ஜே.வி.பி./தே.ம.ச., அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வெடிக்கும் தவிர்க்க முடியாத வெகுஜன அதிருப்தியை நசுக்குவதற்கு, தற்போதுள்ள ஜனநாயக விரோதச் சட்டங்களைப் பயன்படுத்தத் தயங்காது என்பதை உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திசாநாயக்க அரசாங்கம், தங்களின் சமூக உரிமைகள் மீது தாக்குதல் தொடுத்து, பொலிஸ்-அரச அடக்குமுறைகளைத் தயாரிப்பதை எதிர்த்துப் போராட, தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் தயாராக வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலைத் தளங்களிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் தங்களுடைய சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்களை அழைக்கிறது. இதுபோன்ற குழுக்களை கிராமப்புற ஏழைகள் தங்கள் பகுதிகளிலும் அமைத்துக்கொள்ள வேண்டும். ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. இந்த மாநாடு தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்களின் நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
சோசலிச கொள்கைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடுவதற்கு, கிராமப்புற ஏழைகளையும் ஒன்றிணைத்துக்கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான கட்டமைப்பாக இந்த மாநாடு அமைய வேண்டும்.
நவம்பர் 14 பாராளுமன்றத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் தலையீட்டிற்கு அடித்தளமாக இருப்பது இந்த வேலைத்திட்டமே ஆகும். சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பு, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் மொத்தம் 41 வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடுகிறது. எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும், சோசலிச அனைத்துலகவாதத்துக்கான கட்சியின் பிரச்சாரத்தில் பங்கேற்குமாறும், ஏனைய தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டிக்கொள்ள போராடுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சியில் சேர விண்ணப்பிக்குமாறும் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் படிக்க
- இலங்கையின் ஜே.வி.பி. ஜனாதிபதி மூர்க்கத்தனமான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு உறுதியளிக்கிறார்
- இலங்கையின் பெரும் வர்த்தகர்கள் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்க விரைந்துள்ளனர்
- போருக்கும் சிக்கன வெட்டுக்களுக்கும் சர்வாதிகாரத்துக்கும் எதிராக, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்துக்காக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றது