மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இக்கட்டுரையானது மூன்று பகுதித் தொடரில் முதலாவது பகுதி ஆகும்.
பகுதி 1 | பகுதி 2
வரலாறு முழுவதும், இளையோர்களின் போராட்டங்கள் பெரும்பாலும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கங்களை முன்கூட்டியே சுட்டிக்காட்டியுள்ளன. கென்யாவில், ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ மற்றும் அவரது ஊழல் நிறைந்த முதலாளித்துவ அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கோரி நாடு தழுவிய போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய பின்னர், ‘ஜெனரேஷன் Z’ (Gen Z) என்று அடிக்கடி குறிப்பிடப்படும் நாட்டின் இளம் தலைமுறையினர், வர்க்கப் போராட்டத்தின் பரந்த தீவிரமயமாக்கலுக்கு வழிவகுத்துள்ளனர்.
இந்தக் கட்டமானது, குறைந்த ஊதியங்கள், நிலையற்ற வேலை நிலைமைகள் மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விமான நிலைய ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரவலான வேலைநிறுத்தங்களால் அடையாளப்படுத்தப்படுகிறது.
தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்களை ரூட்டோவின் (Ruto ) ஆட்சிக்கு எதிராக மட்டுமல்லாமல், இப்போது செல்வந்த பில்லியனரான ரைலா ஒடிங்கா (Raila Odinga ) தலைமையிலான எதிர்க்கட்சியான ஆரஞ்சு ஜனநாயக இயக்கம் (Orange Democratic Movement), தொழிற்சங்கங்களின் மத்திய அமைப்பு (COTU-Central Organization of Trade Unions) மற்றும் செல்வாக்குமிக்க கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதகுருமார்களின் ஆதரவுடன் கூடிய, அமெரிக்கா மற்றும் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளால் ஆதரிக்கப்படும் சுதந்திரத்திற்குப் பிந்தைய 60 ஆண்டுகால முழு அமைப்பிற்கும் எதிராகத் தங்களைக் காண்கின்றனர்.
இந்த எதிர்ப்பானது, சர்வதேச நாணய நிதியம் (IMF) தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்கள் மீது திணித்துள்ள வரி உயர்வுகள், புதிய கட்டணங்கள், மற்றும் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் சிக்கன நடவடிக்கைகள் வடிவிலான தாக்குதல்கள் குறித்த பெரும் மக்கள் கோபத்தால் உந்தப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்று நோய்க்குப் பின்னரும், உக்ரேனில் ரஷ்யா மீதான நேட்டோவின் போருக்குப் பின்னரும் மோசமடைந்துள்ள வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் 67 சதவீதம் வரை உயர்ந்துள்ள இளைஞர்களின் வேலையின்மை ஆகியவற்றுக்கு மத்தியில், IMF-இன் கைக்கூலிகளாகச் செயல்படும் ஆளும் உயரடுக்கால் இந்த நடவடிக்கைகள் செயற்படுத்தப்படுகின்றன.
கென்ய ஆளும் வர்க்கத்தால் தொழிலாளர்களைப் பிளவுபடுத்த நீண்ட காலமாகத் தூண்டிவிடப்பட்ட பழங்குடிப் பிரிவுகளைக் கடந்து செல்லும் இந்த இயக்கமானது, ஆபிரிக்கா முழுவதும் பரந்த மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது. வெறுக்கப்படும் போலா டினுபு (Bola Tinubu) ஆட்சிக்கு எதிராக நைஜீரியாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆகஸ்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், ஊழல் மற்றும் IMF இன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக 10 நாள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தின் போது, அவரது பாதுகாப்புப் படைகள் பல டசின் மக்களைக் கொன்றதுடன் 700-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தன. உகாண்டாவில், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்துவரும் ஜனாதிபதி யோவேரி முசேவேனி (Yoweri Museveni), அண்டை நாடான கென்யாவைப் போல பரந்த அளவிலான ஆர்ப்பாட்டங்களைத் தவிர்ப்பதற்காக, ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடங்க முயன்ற நூற்றுக்கணக்கானோரை முன்கூட்டியே கைது செய்தார்.
இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களும் ஒரு முட்டுச்சந்தியில் நிற்கின்றனர். “ஜனாதிபதி வில்லியம் ரூடோ இன்று பதவியில் இருக்கும் இரண்டு ஆண்டுகளைக் குறிக்கும் நிலையில், அவரது நிர்வாகமானது அதிகாரத்தின் மீதான அவரது பிடியை அச்சுறுத்தும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை எதிர்த்துப் போராடுகிறது” என்று “ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் தேசம்” என்ற தலைப்பின் கீழ் நேஷன் (Nation) நாளிதழ் ஒரு சமீபத்திய கட்டுரையில் குறிப்பிட்டது.
எனினும், தற்போதைய நிலையில் அப்படியே விடப்பட்டால், ஒரு தெளிவான வேலைத்திட்டம், முன்னோக்கு மற்றும் அரசியல் தலைமை இல்லாத நிலையில், இந்தப் பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர் இயக்கமானது IMF இன் சிக்கன நடவடிக்கைகளின் முழு தாக்கத்தையும் திணிக்கவும், அமெரிக்காவுடனான போர்க் கூட்டணியை ஆழப்படுத்தவும் உறுதிபூண்டுள்ள ஆளும் உயரடுக்கை தோற்கடிக்கப் போதுமானதாக இருக்காது என்பது நிரூபணமாகும். அமெரிக்காவானது ஐரோப்பாவில், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராகப் போர் தொடுத்து வருகிறது, எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு முழுவதும் நடக்கும் பரந்த போரின் ஒரு பகுதியாக பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு ஆயுதம் வழங்குகிறது, மேலும் பசிபிக் பகுதியில் சீனாவுக்கு எதிரான போருக்கு முன்கூட்டியே தயாரிப்புகளை மேற்கொள்கிறது.
கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தங்களது போராட்டங்கள் ஒரு முட்டுச்சந்தை அடைந்துள்ளன என்ற உணர்வு இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. ஊழல் நிறைந்த அரசியல் நிறுவனத்தை அகற்றுவதற்கான அழைப்புகளைத் தவிர வேறு எதுவும் முன்னேற்றமடையவில்லை. வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, தொழிற்சங்கத் தலைவர்கள் அவர்களின் போராட்டங்களைக் காட்டிக்கொடுக்க ரூட்டோவுடன் திட்டமிட்டு இணைந்து செயல்படுகின்றனர்.
கென்யாவில் 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்தும், பலர் கடத்தப்பட்டும் நடந்த இரத்தக்களரி சம்பவங்கள், முன்னாள் காலனித்துவ நாடுகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளின் ஜனநாயக விரோத மற்றும் தொழிலாள வர்க்க விரோதத் தன்மையை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டுகின்றன. சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்குப் பின்னரும், முதலாளித்துவம் அடிப்படை ஜனநாயகப் பிரச்சினைகளைத் தீர்க்கவோ, பழங்குடியினர்களின் பிளவுகளை கடந்து செல்லவோ, காலனித்துவ சக்திகளால் திணிக்கப்பட்ட செயற்கையான எல்லைகளைக் களைந்தெறியவோ மற்றும் ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரத்தைப் பாதுகாக்கவோ முற்றிலும் இயலாயக்கற்றதாக உள்ளது.
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வியை தீவிரமாக விரிவுபடுத்துதல், அடிப்படை வீட்டுவசதிகளை வழங்குதல் ஆகியவை இனி இலாப அமைப்புமுறையுடன் இயைந்து இருக்க முடியாது. சமூகத்தை அடிப்படையில் சோசலிசத்துக்கான மாற்றத்தைச் செய்வதைத் தவிர வேறு எதுவும் போதுமானதாக இருக்காது.
கென்யாவிலும், சர்வதேச அளவிலும், தொழிலாள வர்க்கம் முழு முதலாளித்துவ ஒழுங்கமைப்பிற்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்திற்குள் தள்ளப்பட்டு வருகிறது. முன்வைக்கப்பட்டுள்ள பணி என்னவென்றால், கிராமப்புற வெகுஜனங்களுடன் கூட்டணி வைத்து ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்காகப் போராடுவதாகும். இது பொருளாதாரத்தை சமூக உடைமையாக்கி, வங்கிகள், பெரிய தோட்டங்கள் மற்றும் பெரும் நிறுவனங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அரசை நடத்தும் ஒட்டுண்ணித்தனமான அடுக்கின் முறைகேடாக ஈட்டிய செல்வத்தைக் கைப்பற்றும். ஒவ்வொரு தொழிற்சாலை, பணியிடம், தோட்டம் மற்றும் சுற்றுப்புறமும் ஆளும் வர்க்கத்தின் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பின் மையமாக மாற வேண்டும்.
கென்ய தொழிலாளர்களின் கூட்டாளிகள் ஆபிரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள அவர்களது வர்க்கச் சகோதர சகோதரிகள் ஆவர். இவர்களும் மோசமடைந்து வரும் சமூக நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். ஒரு சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டமானது அவசியமாக ஒரு சர்வதேசப் போராட்டமாக இருக்கிறது.
இந்த நிகழ்வுகளானது வர்க்கப் போராட்டத்தின் மையத்தன்மையையும் ஒரு சோசலிச இயக்கத்திற்கான புறநிலை அடிப்படையையும் உறுதிப்படுத்தியிருப்பதுடன், வர்க்கப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வரலாற்று ரீதியாக அடித்தளமிடப்பட்ட ஓர் அரசியல் மூலோபாயம் தேவை என்பதையும் அவை உறுதிப்படுத்தியுள்ளன.
கென்யா போன்ற நாடுகளின் பரிணாம வளர்ச்சி லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை நிரூபிக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட இக்கோட்பாட்டில், அக்டோபர் புரட்சியில் லெனினுடன் இணைத்தலைவராக இருந்த ட்ரொட்ஸ்கி, சுயாதீனமான அரசியல் பங்கை வகிக்க இயலாத கிராமப்புற மக்களை தனக்குப் பின்னால் அணிதிரட்டிக்கொண்டு, தொழிலாள வர்க்கம் நேரடியாக அதிகாரத்திற்காகப் போராட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யா அல்லது இன்றைய கென்யா போன்ற தாமதமாக முதலாளித்துவ வளர்ச்சி அடைந்த நாடுகளில், முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்ற இலாயக்கற்றுள்ளது என்று அவர் விளக்கினார். 19ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவப் புரட்சிகளுடன் தொடர்புடைய ஜனநாயகப் பணிகள் - காலனித்துவ ஆட்சியைத் தூக்கியெறிதல், தேசிய ஐக்கியம், பழங்குடிப் பிளவுகளையும் ஏகாதிபத்தியத்தால் வரையப்பட்ட எல்லைகளையும் கடந்து வருதல், மற்றும் விவசாயப் பிரச்சினைக்கான தீர்வு ஆகியவை - தொழிலாள வர்க்கத்தின் பொறுப்பில் விழுந்தன. இது, சர்வதேச அளவில் மட்டுமே நிறைவேற்ற முடியும், சோசலிச நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தொடங்க நிர்ப்பந்திக்கப்படும். தற்போது உலகையும் அதன் வளங்கள் மற்றும் சந்தைகளையும் ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய சக்திகளுடன் பிணைக்கப்பட்டுள்ள, விசேடமாக தொழிலாள வர்க்கத்தைக் கண்டு அச்சமடைந்துள்ள முதலாளித்துவ வர்க்கம், இவற்றைச் செயல்படுத்த முடியாது, செயல்படுத்தவும் மாட்டாது.
ஒரு குறிப்பிட்ட நெருக்கடியில் முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் எவ்வளவு தீவிரமாக வெளிப்பட்டாலும் அல்லது ஒரு தேசிய சூழலில் அழுத்தங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், தொழிலாள வர்க்கமானது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் வெளிப்படுத்தப்பட்ட சர்வதேசியவாத மூலோபாயத்தில் வேரூன்றியிருந்தால் மட்டுமே சோசலிசத்திற்கான போராட்டம் முன்னாக்கிச் செல்ல முடியும்.
சுதந்திரப் போராட்டத்தின் துரோகம்
கென்யாவின் சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிரான “இரண்டாவது விடுதலை”யிலும் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடானது சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது கென்யா என அழைக்கப்படும் பிரதேசம் 1888 முதல் 1895 வரை பிரிட்டிஷ் பேரரசுடன் வன்முறையாக இணைக்கப்பட்டது. தொடர்ந்து வந்த காலனித்துவ அரசாங்கங்கள் பழங்குடி கிளர்ச்சிகளை அடக்குவதற்கும், பூர்வீக மக்களிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றுவதற்கும், வரி வசூலிப்பதற்கும், காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய மலிவான தொழிலாளர்களை தொடர்ந்து வழங்குவதற்கும் பலாத்காரத்தை நம்பியிருந்தன. 1910-களில், கிழக்கு ஆபிரிக்காவின் மையத்தில் ஒரு “வெள்ளையர் நாட்டை” (“white man’s country”) உருவாக்கும் நோக்கில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஐரோப்பிய குடியேற்றவாசிகளை இப்பகுதிக்கு வரவழைக்கத் தொடங்கியது. அதே வேளையில், ஆபிரிக்க மற்றும் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த கென்யர்கள் இனரீதியாக பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டனர். இவையனைத்தும் 1920-களில் வெகுஜனப் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் முதல் தொழிற்சங்கங்கள் என்ற வடிவில் முதல் வெடிப்புத்தன்மை கொண்ட தொழிலாளர் போராட்டங்களுக்கு வழிவகுத்தன.
1930-களின் நடுப்பகுதி முதல் 1950-கள் வரை, காலனித்துவ ஆபிரிக்கா மற்றும் ஆசியா பெரும் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்களால் உலுக்கப்பட்டன. 1934-இல் எழுதப்பட்ட “போரும் நான்காம் அகிலமும்” என்ற நூலில், ட்ரொட்ஸ்கி சோசலிசத்திற்கான போராட்டத்தில் காலனித்துவ மற்றும் அரைக்காலனித்துவ நாடுகளிலுள்ள வெகுஜனங்கள் வகிக்கவிருக்கும் முற்போக்கான பங்கை விளக்கியிருந்தார்:
அவர்களின் போராட்டம் இரட்டை முற்போக்குத் தன்மை கொண்டது: பின்தங்கிய மக்களை ஆசியவாதம், பிரிவினைவாதம் மற்றும் அந்நிய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, அவர்கள் ஏகாதிபத்திய அரசுகள் மீது வலுவான தாக்குதல்களை நடத்துகிறார்கள். ஆனால் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் தாமதமாக நடைபெறும் புரட்சிகள் தேசிய அரசுக்கு ஒரு புதிய மறுமலர்ச்சி காலகட்டத்தைத் தோற்றுவிக்க இயலாது என்பதை முன்கூட்டியே தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அரைக்காலனித்துவ நாடாக இருந்த ரஷ்யாவில் தாமதமாக நடைபெற்ற ஜனநாயக மாற்றம் சோசலிசப் புரட்சிக்கான அறிமுகமாக மட்டுமே இருந்ததைப் போலவே, காலனித்துவ நாடுகளின் விடுதலையானது வெறுமனே உலக சோசலிசப் புரட்சியில் ஒரு பிரம்மாண்டமான அத்தியாயமாக மட்டுமே இருக்கும்.”
போருக்குப் பிந்தைய காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்களின் ஜனநாயகப் பணிகள், சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும். ஆனால் அந்தப் பாதை ஸ்டாலினிசத்தால் தடுக்கப்பட்டது.
1917 அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயும், அரசு இயந்திரத்திற்குள்ளும் ஸ்டாலினிசம் தோன்றியது. ஐரோப்பாவில், குறிப்பாக ஜேர்மனியில், புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் தொழிலாள வர்க்கம் அனுபவித்த தோல்விகளின் நிலைமைகளின் கீழ், ஸ்டாலினிசம் மார்க்சிச சர்வதேசியவாதத்திற்கு எதிரான ஒரு தேசியவாத எதிர்வினையாக உருவெடுத்தது. இது தொழிலாள வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய சலுகை பெற்ற, பழமைவாத அதிகாரத்துவத்தின் பிரதிநிதியாக வெளிப்பட்டது. அதன் கண்ணோட்டமானது, போல்ஷெவிக் புரட்சி அடிப்படையாகக் கொண்டிருந்த சர்வதேசியவாத முன்னோக்கை நிராகரித்த, மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்த “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற தேசியவாதக் கருத்தாக்கத்தில் சுருக்கப்பட்டிருந்தது.
சர்வதேச அளவில், ஸ்டாலினிஸ்டுகள் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவை ஆதரிப்பதற்கான கோட்பாட்டு நியாயப்படுத்தலை மீண்டும் உயிர்ப்பித்தனர் - இது ஆரம்பத்தில் போல்ஷெவிக்குகளின் எதிரிகளான மென்ஷெவிக்குகளால் முன்வைக்கப்பட்ட இரண்டு-கட்டப் புரட்சி என்ற கருத்தாகும்.
இரண்டு கட்டக் கோட்பாட்டின்படி, காலனித்துவ மற்றும் அரை-காலனித்துவ நாடுகளுக்கு முதலில் ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி தேவைப்படுகிறது. இது, தேசிய அரங்கில் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கிடையேயான வர்க்கப் போராட்டம் எழுவதற்கான அடிப்படையை உருவாக்கும் ஒரு முதலாளித்துவ வளர்ச்சிக்கான காலத்தை உருவாக்கும். இதனால், வரையறுக்கப்படாத பிந்தைய காலத்தில் சோசலிசத்திற்கான போராட்டத்தை உள்ளடக்கிய இரண்டாவது கட்டத்திற்கான அடித்தளம் அமைக்கப்படும்.
முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவு அல்லது காலனித்துவ ஆட்சியால் வளர்ச்சி தடுக்கப்பட்ட “உள்நாட்டு முதலாளித்துவத்தின்” ஒரு பிரிவு அவசியமாக ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகிக்கும் என்று ஸ்டாலினிஸ்டுகள் வாதிட்டனர். அதற்கு ஒரு புரட்சிகர தோற்றத்தை வழங்குவதற்காக, ஸ்டாலின் அதை நான்கு வர்க்கங்களின் கூட்டுக் கூட்டணியாக முன்மொழிந்தார் – அதாவது தொழிலாளர்கள், விவசாயிகள், நகர்ப்புற நடுத்தர வர்க்கம், மற்றும் “தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கான பிரிவு” என்று குறிப்பிடப்படும் தரகு அல்லாத (non-comprador) முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகள். இந்தத் தேசிய ஜனநாயகக் கடமைகள் பூர்த்தியாகும் வரை சோசலிச நடவடிக்கைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
1925-1927 ஆண்டு சீனப் புரட்சியானது, ஸ்டாலினிச முன்னோக்கு பிரதிநிதித்துவம் செய்த அபாயங்கள் குறித்த ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகளுக்கு ஒரு பேரழிவான உறுதிப்படுத்தலை வழங்கியது.
சீன முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சியான சியாங் கே-ஷேக் தலைமையிலான கோமின்டாங்கை ஆதரிக்குமாறு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை (CCP) ஸ்டாலின் வழிநடத்தினார். இவ்வாறு செய்ததன் மூலம், 1925இல் வெடித்த சீனப் புரட்சிக்கு ஸ்டாலின் சவக்குழி தோண்டுபவராக மாறினார். இது 1927 ஏப்ரலில் சியாங் கே-ஷேக்கும் அவரது படைகளும் ஷாங்காய் தொழிலாள வர்க்கத்தைப் படுகொலை செய்வதற்கு வழிவகுத்தது. 1927 ஏப்ரலுக்குப் பின்னர், “இடதுசாரி” கோமின்டாங்கிற்குள் நுழையுமாறு CCP க்கு உத்தரவிடப்பட்டது. அது பின்னர் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் இயக்கத்தை சியாங் கே-ஷேக்கைப் போலவே கொடூரமாக நசுக்கியது. CCP தலைமையின் ஒரு பெரும் பிரிவினர் முதலாளித்துவ தேசியவாத சக்திகளால் கொலை செய்யப்பட்டனர்.
இந்தப் பேரழிவுகளின் பின்னணியில், அவற்றுக்கான தனது சொந்த அரசியல் பொறுப்பை மறைப்பதற்காக, ஸ்டாலின் கான்டனில் (Canton) ஒரு கிளர்ச்சியை நடத்துமாறு சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உத்தரவிட்டார். புரட்சிகர எழுச்சி மங்கிக்கொண்டிருந்த நிலையில் இதற்கு வெற்றி பெறும் வாய்ப்பே இல்லை. இந்தப் புதிய பேரழிவிலிருந்து தேவையான படிப்பினைகளைப் பெற்ற ட்ரொட்ஸ்கி, அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, கான்டன் தொழிலாளர்களின் திட்டம் மாஸ்கோ வலியுறுத்தியதைப் போல ஒரு “முதல் கட்டத்தில்” நின்றுவிடவில்லை என்றும், மாறாக வங்கிகள், பெரு நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்தை தேசியமயமாக்குவதற்கும், முதலாளித்துவ குடியிருப்புகளைப் கைப்பற்றுவதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டினார். “இது ஒரு கேள்வியை எழுப்புகிறது,” என ட்ரொட்ஸ்கி எழுதினார், அதாவது “இவையே ஒரு முதலாளித்துவப் புரட்சியின் வழிமுறைகள் என்றால், சீனாவில் தொழிலாளர் வர்க்கப் புரட்சி எப்படி இருக்க வேண்டும்?”
இந்தத் தோல்வி 20ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் நீண்டகாலத் தாக்கத்தைக் கொண்டிருந்தது. இது சீனத் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக இருந்த இளம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவை உண்மையில் குறித்தது. கிராமப் புறங்களுக்குத் தப்பியோடிய மாவோ சேதுங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் எஞ்சியவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியை அடிப்படையில் விவசாயிகளை மையமாகக் கொண்ட அமைப்பாக மீண்டும் நிறுவினர்.
1930களில், ஸ்டாலினிச அதிகாரத்துவமானது நனவுபூர்வமாக எதிர்ப்புரட்சிகரப் பாத்திரத்தை ஏற்றது. சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான அரசியல் படுகொலையை நடத்தியதுடன், உலகளவில் புரட்சிகரப் போராட்டங்களையும் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்களையும் ஒடுக்குவதில் உலக ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைத்தது. ட்ரொட்ஸ்கி 1940இல் ஒரு ஸ்டாலினிச முகவரால் கொலை செய்யப்பட்டார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஸ்டாலினிசம் மீண்டும் முதலாளித்துவத்துடனான புரட்சிகரக் கணக்குத் தீர்த்தலைத் தடுத்தது. மேற்கு ஐரோப்பாவில், ஸ்டாலினிச அதிகாரத்துவம் மக்கள் இயக்கங்களை நிராயுதபாணியாக்கி, காலனிகளை அப்போதும் கொண்டிருந்த பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு ஆதரவளித்தது. இந்நாடுகளில் பொருளாதார மந்தநிலை, பாசிசம் மற்றும் போர் ஆகியவை பெரும்பான்மையான மக்களின் பார்வையில் முதலாளித்துவத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைத்திருந்தன. ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காலனித்துவ மக்களுக்கு எதிராகப் போர் தொடுத்த ஜெனரல் சார்ல்ஸ் டு கோல் தலைமையிலான பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசாங்கத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து கொண்டது.
ஆபிரிக்காவில் ஸ்டாலினிசத்தின் எதிர்ப்புரட்சிகரப் பங்கு
காலனித்துவ நாடுகளில், ஸ்டாலினிசம் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை திட்டமிட்டுக் காட்டிக்கொடுத்தது. தனது குறுகிய நலன்களைப் பின்பற்றி, சோவியத் அதிகாரத்துவம் ஏகாதிபத்திய நாடுகளுடனான பனிப்போர் மோதலின் ஒரு பகுதியாக ஆபிரிக்கா முழுவதும் தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தது. ஆனால் சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்துவத்தின் நிலையை சீர்குலைக்கும் சோசலிசப் புரட்சிகளை ஊக்குவிக்கும் நோக்கம் அதற்கு இருக்கவில்லை.
தென்னாபிரிக்காவிற்கு வெளியே ஆபிரிக்காவில் 10,000 உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்டிருந்த சூடானில், ஸ்ராலினிஸ்டுகள் 1969 இல் தேசியவாத காஃபார் நுமேரி (Gaafar Nimeiry) அதிகாரத்திற்கு வர உதவினார்கள். அதற்கடுத்த ஆண்டு மாஸ்கோ எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. தன்னுடைய இஸ்லாமியவாத எதிர்ப்பாளர்களைத் தோற்கடிக்க அவற்றைப் பயன்படுத்திய பின்னர், நுமேரி அனைத்து கம்யூனிஸ்ட் கட்சி மந்திரிகளையும் அவருடைய அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றி, கட்சி உறுப்பினர்களை சிறையில் அடைத்து கொன்றார்.
தென்னாப்பிரிக்காவில், ஸ்டாலினிசமானது தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியை (CPSA) “கருப்பர், கலப்பினத்தவர் மற்றும் வெள்ளையர் உட்பட அனைத்து இனங்களுக்கும் முழுமையான சம உரிமைகளுடன், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குடியரசை நோக்கி ஒரு படியாக, சுதந்திர பூர்வீக தென்னாப்பிரிக்கக் குடியரசு” என்ற முழக்கத்தை ஏற்கத் திணித்தது. இதன் அர்த்தமானது, சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை விட “தேசிய ஜனநாயகப் புரட்சிக்கான” போராட்டத்திற்கு, அதாவது ஒற்றையாட்சி அரசில் சம வாக்குரிமைக்கான முன்னுரிமை அளிப்பதாகும்.
1950களில், தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (CPSA) முதலாளித்துவ தேசியவாத ஆபிரிக்க தேசிய காங்கிரசுக்குள் (ANC) செயற்பட்டு, “புரட்சிகர தேசியவாதத்தை” முன்னெடுத்தது. இதை அது தனது “சிறப்பு வகை காலனித்துவம்” என்ற கோட்பாட்டுடன் இணைத்தது. இதன்படி, கறுப்பின தென்னாப்பிரிக்கா வெள்ளையர் ஒடுக்குமுறையாளர்களின் “காலனி” என்றும், எனவே முதல் கட்டமானது ANC தலைமையிலான தேசிய விடுதலை என்றும், இரண்டாவது கட்டமானது CPSA தலைமையிலான சோசலிசம் என்றும் கருதப்பட்டது. CPSA ஆனது 1955ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ANC இன் சுதந்திர சாசனத்தை வரைந்தது. சோசலிச சொற்றொடர்களால் மூடப்பட்டிருந்தாலும், இது ஒரு சோசலிச வேலைத்திட்டம் அல்ல, மாறாக தேசியவாத மற்றும் முதலாளித்துவ பண்பைக் கொண்டிருந்தது.
கென்யாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும் பல ஆண்டுகளாக அதன் சில பத்திரிகைகளின் ஆசிரியருமாக இருந்த மக்கான் சிங் (Makhan Singh) போன்ற ஸ்டாலினிச முக்கியஸ்தர்கள் - தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டவர்கள் - தொழிலாள வர்க்கத்தை ஜோமோ கென்யாட்டா (Jomo Kenyatta)போன்ற பழமைவாத தேசியவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட கென்யா ஆபிரிக்க ஒன்றியத்தின் (KAU) முதலாளித்துவ தேசியவாத சக்திகளுக்குக் கீழ்ப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தனர்.
தொழிலாள வர்க்கத்தை வெறுத்த கென்யாட்டா, முதலாளித்துவ தனியார் சொத்துரிமையைப் பாதுகாத்தோடு, ஏகாதிபத்தியம் திணித்த எல்லைகளில் ஒரு முதலாளித்துவ அரசை உருவாக்கினார். மக்கள் மத்தியில் தீவிரமயமாக்கல் வளர்ந்து வரும் சூழலில், சிங்குடன் தன்னை இணைத்துக் கொள்ள அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். சிங் அவருக்குத் தீவிரம் கொண்டவர் என்ற நற்சான்றிதழ்களை வழங்கினார்.
1947இல், சிறந்த வேலை நிலைமைகள் மற்றும் ஊதியம் கோரி சுமார் 15,000 தொழிலாளர்கள் நடத்திய மொம்பாசா பொது வேலைநிறுத்தத்தை கென்யாட்டா காட்டிக்கொடுத்தார். ஆபிரிக்க தொழிலாளர் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த வேலைநிறுத்தத்தில், கென்யாட்டா காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்களைப் பாதுகாக்க மறுத்தார். கைது செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களுக்கு ஆதரவாக நடத்தப்படும் எந்த அனுதாப வேலைநிறுத்தங்களையும் அல்லது கூட்டங்களையும் சட்டவிரோதமானவை என்று கண்டித்தார். எதிர்காலக் குறைகளை தனிப்பட்ட முதலாளிகளிடம் கொண்டு செல்லுமாறு அவர் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினார். “உங்கள் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக எழுதுங்கள், அவற்றை உங்கள் முதலாளிகளிடம் கொடுங்கள், வேலைநிறுத்தம் செய்யும் உங்கள் எண்ணத்தை அவர்களுக்கு முன்னறிவிப்பு செய்யுங்கள், பின்னர் தேவைப்பட்டால் வேலைநிறுத்தம் செய்யுங்கள் - இதுவே சரியான முறை” என்று அவர் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த வேலைநிறுத்தம் 1945 மற்றும் 1950க்கு இடையில் ஆபிரிக்கா உட்பட உலகெங்கிலும் பரவிய தொழிலாளர் இயக்கங்களின் ஒரு பெரும் அலையின் பகுதியாக இருந்தது. இக்காலகட்டத்தில், தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தங்களையும் பாரிய ஆர்ப்பாட்டங்களையும் ஒழுங்கமைத்தனர். இவை தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றிய ஒரு மார்க்சிச-ட்ரொட்ஸ்கிய கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டின. இக்கட்சியானது கண்டம் முழுவதும் பத்து மில்லியன் கணக்கான விவசாயிகளை அணிதிரட்டும் ஒரு புரட்சிகர விவசாய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் வெகுஜன விவசாயிகளை வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். இது அவர்களை உள்நாட்டு ஒடுக்குமுறையாளர்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தில் ஒன்றிணைக்கும்.
1945இல் தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, செனகல், எகிப்து, கானா, சூடான், உகாண்டா ஆகிய நாடுகளிலும், 1947இல் தங்கனீக்காவிலும் (தற்போதைய தான்சானியா), 1948இல் சான்சிபாரிலும் பொது வேலைநிறுத்தங்கள் வெடித்தன. டகார் (Dakar) மற்றும் தார் எஸ் சலாம் (Dar es Salaam) நகரங்களிலும் நகரம் தழுவிய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன.
சிங் 1935ஆம் ஆண்டில் கென்யா தொழிலாளர் தொழிற்சங்கத்தை (Labour Trade Union of Kenya) நிறுவினார். இது நாட்டின் முதல் வெகுஜன தொழிற்சங்கங்களில் ஒன்றாக இருந்தது. 1949ஆம் ஆண்டில், அவர் ஆபிரிக்க தொழிற்சங்கவாதியும் கென்யா ஆபிரிக்க ஒன்றியத்தின் (KAU) உறுப்பினருமான பிரெட் குபாயுடன் இணைந்து கிழக்கு ஆபிரிக்க தொழிற்சங்க காங்கிரஸை (EATUC) இணைந்து நிறுவினார். சிங், ஸ்டாலினிஸ்டுகள் மற்றும் தேசியவாதிகள் அடங்கிய மார்க்சிச ஆய்வுக் குழுவிற்கும் தலைமை வகித்தார். இடதுசாரி சார்புடைய, சுதந்திரத்திற்கு ஆதரவான செய்தித்தாளான பிரபல டெய்லி க்ரானிக்கிளின் (Daily Chronicle) ஆசிரியர் பொறுப்பில் அவர் செல்வாக்கு செலுத்தியதோடு, மேலும் அதற்கு தொடர்ந்து பங்களிப்பாளராகவும் இருந்தார்.
1950ஆம் ஆண்டில் கென்யா ஆபிரிக்க ஒன்றியமும் (KAU) கிழக்கு ஆபிரிக்க தொழிற்சங்க காங்கிரசும் (EATUC) கூட்டாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், சிங்கும் குபாயும் முக்கிய தீர்மானத்திற்கு ஒரு துணைத் தீர்மானத்தை முன்மொழிந்தனர். இது ஒரு சுதந்திர முதலாளித்துவ அரசையும், சோசலிசத்திற்கான போராட்டத்திற்கான எந்த அழைப்பிலிருந்தும் பிரிக்கப்பட்ட ஒரு முதலாளித்துவ ஜனநாயக அரசாங்கத்தையும் நிறுவ வேண்டும் என்று கோரியது. அது “கிழக்கு ஆபிரிக்கப் பிராந்தியங்களின் முழுமையான சுதந்திரம் மற்றும் இறையாண்மை, இப்பிராந்தியங்கள் அனைத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் இப்பிராந்திய மக்களுக்கு மட்டுமே பொறுப்புக்கூறக்கூடிய ஜனநாயக அரசாங்கத்தை நிறுவவும், மேலும் இத்தீர்வு விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியது.
சோசலிசத்திற்கான பாதை, பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, தேசிய அரசின் முதலாளித்துவ ஜனநாயக வளர்ச்சியின் நீண்டகால கட்டத்தின் வழியாக முன்னேறும் எனக் கூறப்படுகிறது.
1950ஆம் ஆண்டில், நைரோபி பொது வேலைநிறுத்தத்தின்போது, சிங் மற்றும் குபாய் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நைரோபி, மொம்பாசா, கிசுமு மற்றும் நகுரு ஆகிய இடங்களில் 1,00,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தம் சுதந்திரம், உயர் ஊதியம், மேம்பட்ட வேலை நிலைமைகள் மற்றும் தொழிற்சங்கங்களின் அங்கீகாரம் ஆகியவற்றைக் கோரியது. இது காலனித்துவ தொழிலாளர் கொள்கைகள் மற்றும் இனப் பாகுபாடு மீதான பரவலான அதிருப்தியைப் பிரதிபலித்தது. இந்த வேலைநிறுத்தம் காலனித்துவப் பொருளாதாரத்தை முடக்கியது, இதனால் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகள் பெருமளவில் கைதுகளை மேற்கொண்டனர். கிழக்கு ஆபிரிக்க தொழிற்சங்க காங்கிரஸ் (EATUC) மீண்டும் தொழிலாள வர்க்கத்தை கென்யாட்டாவின் கென்யா ஆபிரிக்க ஒன்றியத்திற்கு (KAU) கீழ்ப்படுத்தியது. மேலும் காலனித்துவ அரசாங்கத்துடன் கூடுதல் மோதலைத் தவிர்க்க வேலைநிறுத்தத்தை அதன் உச்சக்கட்டத்தில் கைவிட்டது.
வரலாற்றாசிரியர் டேவ் ஹைட் (Dave Hyde) “நைரோபி பொது வேலைநிறுத்தம்: எதிர்ப்பிலிருந்து கிளர்ச்சி வரை (The Nairobi General Strike: From Protest to Insurgence)“ என்ற நூலில் குறிப்பிடுவதாவது: “கிழக்கு ஆபிரிக்க தொழிற்சங்க காங்கிரஸ் (EATUC) காலனித்துவ அரசை சீர்திருத்தும் நோக்கம் கொண்ட கென்யா ஆபிரிக்க ஒன்றியத்தை (KAU) பின்பற்றியது. KAU இந்த அரசின் அடித்தளங்கள் அசைக்க முடியாதவை என்று கருதியது. இந்த அடித்தளங்கள் கடுமையான பிளவுகளின் அறிகுறிகளைக் காட்டியபோதும், ‘ஒதுக்கப்பட்ட நைரோபி’ மக்களிடையே KAUவின் ஏற்கனவே பலவீனமான ஆதரவு முற்றிலும் மறைந்த பிறகும், EATUC தேவையான திருப்பத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்தச் சூழலில் தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொழிலாளர் கட்சிக்கான கோரிக்கைகளை முன்வைக்காதது குறிப்பிடத்தக்கது. மாறாக, வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க மறுத்ததன் மூலம் கவனத்தை ஈர்த்த KAUவிற்கு புத்துயிரளிக்க அவர்கள் பாடுபட்டனர். பரவலான சந்தேகத்திற்கு உள்ளாகியிருந்த ஒரு நேரத்தில், குறைந்துவரும் ஆதரவை மீண்டும் அந்த அமைப்பின் பக்கம் திருப்பிவிட அவர்கள் முயன்றனர்.”
ஒரு சுயாதீனமான தொழிலாளர் கட்சிக்கான அழைப்பு வெறும் கிளர்ச்சி தந்திரோபாயத்தை விட அதிகமானதாக இருந்திருக்கும். அது கென்யா ஆபிரிக்க ஒன்றியம் (KAU) மற்றும் தான்சானியா, உகாண்டாவில் உள்ள பிற தேசியவாதத் தலைவர்களுக்கு எதிராக கிழக்கு ஆபிரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வளர்ச்சி குறித்த ஒரு திட்டவட்டமான மூலோபாயக் கருத்தாக்கத்தை உள்ளடக்கியிருக்கும். ஸ்டாலினிஸ்டுகளால் வழிநடத்தப்பட்ட கிழக்கு ஆபிரிக்க தொழிற்சங்க காங்கிரஸ் (EATUC) இதை மேற்கொள்ளும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. இது மேற்கொண்டிருந்தால், தனிமைப்படுத்தப்பட்ட பொருளாதாரப் போராட்டங்களைத் தாண்டி, சோசலிசத்திற்கான போராட்டத்தில் காலனித்துவ மற்றும் உள்நாட்டு முதலாளித்துவ வர்க்கத்திற்கும், KAUவில் உள்ள அதன் அரசியல் கருவிகளுக்கும் எதிரான ஒரு அடிப்படை அணிதிரட்டலை நோக்கிச் செல்வதாக இருந்திருக்கும்.
1930களில், “தேசிய காங்கிரசின் செயல்பாடுகள் குறித்து தனக்குப் போதுமான அறிமுகம் இல்லை” என்பதை ஒப்புக்கொண்ட போதிலும், ட்ரொட்ஸ்கி தென்னாப்பிரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தொடர்பான அணுகுமுறை குறித்து ஒரு தொடர் பரிந்துரைகளை வழங்கினார். இவை முதலாளித்துவ தேசியவாத கென்யா ஆபிரிக்க ஒன்றியத்திற்கு (KAU) எதிராக ஒரு கென்ய சோசலிச இயக்கத்தால் பின்பற்றப்பட்டிருக்க முடியும். ட்ரொட்ஸ்கி அதில் கூறியதாவது:
1. அனைத்து சந்தர்ப்பங்களிலும், அது வெள்ளை ஒடுக்குமுறையாளர்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளின் அணிகளில் உள்ள அவர்களின் பேரினவாத முகவர்களால் தாக்கப்படும் போது, போல்ஷிவிக்-லெனினிஸ்டுகள் [ட்ரொட்ஸ்கிஸ்டுகள்] காங்கிரஸை பாதுகாப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
2. போல்ஷிவிக்-லெனினிஸ்டுகள் காங்கிரஸின் வேலைத்திட்டத்தில் உள்ள பிற்போக்குத்தனமான போக்குகளின் மீது முற்போக்கானவற்றை முன் வைக்கின்றனர்.
3. போல்ஷிவிக்-லெனினிஸ்டுகள் காங்கிரசின் மேலோட்டமான, சமரசக் கொள்கையின் காரணமாக, அதன் சொந்தக் கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையை உள்நாட்டு மக்கள் முன் அம்பலப்படுத்துகின்றனர். காங்கிரசுக்கு மாறாக, போல்ஷிவிக்-லெனினிஸ்டுகள் புரட்சிகர வர்க்கப் போராட்டத்திற்கான வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்கின்றனர்.
4. சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டால், காங்கிரசுடன் தனித்த, அவ்வப்போதைய ஒப்பந்தங்கள் அனுமதிக்கப்படலாம். ஆனால், அவை கண்டிப்பாக வரையறுக்கப்பட்ட நடைமுறைப் பணிகளின் எல்லைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். அதேசமயம், நமது சொந்த அமைப்பின் முழுமையான சுதந்திரத்தையும், அரசியல் விமர்சன உரிமையையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
கிழக்கு ஆபிரிக்க தொழிற்சங்க காங்கிரஸின் (EATUC) தொழிலாள வர்க்கத்திற்கான துரோகங்கள், மத்திய கென்யாவில் கிக்குயு விவசாயிகள் மத்தியில் பெருந்திரள் தீவிரமயமாக்கல் நடந்த காலகட்டத்தில் நிகழ்ந்தன. இவ்விவசாயிகள் பிரிட்டிஷ் குடியேற்றக்காரர்களின் நில பறிப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். அரசியலமைப்பு மற்றும் அமைதிவழி மூலம் தேசிய சுதந்திரத்தை அடைய வேண்டும் என்ற கென்யா ஆபிரிக்க ஒன்றியத்தின் (KAU) நோக்கத்தில் அவர்கள் படிப்படியாக நம்பிக்கை இழந்தனர். 1947 முதல் 1952 வரை, KAUவின் தலைமை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்ய பல முறை முயன்றது, ஆனால் இம்முயற்சிகள் ஒவ்வொன்றும் நிராகரிக்கப்பட்டன.
கிராமப்புற மக்களிடமிருந்து அதிகரித்துவரும் எதிர்ப்பிற்கு மத்தியில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கிளர்ச்சியின் சாத்தியத்தை எதிர்கொண்டது. போருக்குப் பிந்தைய காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் 1949இல் சீனப் புரட்சியுடனும், 1950 ஜூனில் கொரியப் போர் வெடித்ததுடனும் உச்சத்தை அடைந்தன. இக்காலகட்டத்தில், இந்தோ-சீனா மற்றும் அல்ஜீரியாவில் பிரெஞ்சுப் படைகளாலும், இந்தோனேசியாவில் டச்சுப் படைகளாலும், மலாயாவில் (இன்றைய மலேசியா) பிரிட்டிஷ் படைகளாலும் காலனித்துவ எதிர்ப்புப் போர்கள் நடத்தப்பட்டன. 1952இல், காலனித்துவ அதிகாரிகளுக்கு எதிரான வெளிப்படையான எதிர்ப்புச் சம்பவங்கள் கென்யா முழுவதும், குறிப்பாக கிராமப்புறங்களில் பரவியபோது, லண்டன் 1952 முதல் 1960 வரை அவசரநிலையை அறிவித்தது. அவர்கள் கென்யாட்டா உட்பட கென்யா ஆபிரிக்க ஒன்றியத்தின் (KAU) தலைவர்களைக் கைது செய்தனர், கிழக்கு ஆபிரிக்க தொழிற்சங்க காங்கிரசை (EATUC) தடை செய்தனர், மற்றும் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தினர்.
மெள மெள கிளர்ச்சி
பிரிட்டிஷ் குடியேற்றக்காரர்களின் நிலப் பறிப்பு மற்றும் கடுமையான காலனித்துவக் கொள்கைகளால் தூண்டப்பட்ட ஆயிரக்கணக்கான தீவிரமயமாக்கப்பட்ட விவசாயிகள், காலனித்துவ எதிர்ப்பு மெள மெள (Mau Mau - “கென்யா நில விடுதலை இராணுவம் - KLFA”) இயக்கத்தைத் தொடங்கினர். இந்தக் கிளர்ச்சியானது கிக்குயு, மேரு மற்றும் எம்பு சமூகங்களிடையே ஆழமாக வேரூன்றியிருந்த மனக் குறைகளால் தூண்டப்பட்டது. மிதவாத கென்யாட்டா தலைமையில் அதிருப்தி அடைந்த டெடன் கிமாதி (Dedan Kimathi) போன்ற கென்யா ஆபிரிக்க ஒன்றியத்தின் (KAU) தீவிர குட்டி-முதலாளித்துவ பிரிவுகளால் இது வழிநடத்தப்பட்டது.
ஆபிரிக்க மெள மெள சாசனம் (The African Mau Mau Charter) இயக்கத்தின் குட்டி முதலாளித்துவ அரசியல் வேலைத்திட்டத்தை வரையறுத்தது. இவ்வேலைத்திட்டமானது கென்யாவில் ஒரு ஆபிரிக்க அரசாங்கத்தை அமைத்தல், அரசுப் பணியை ஆபிரிக்கமயமாக்குதல், வெளிநாட்டுப் படைகளை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திரும்பப் பெற வைத்தல், வெளிநாட்டுச் சட்டங்களை நிராகரித்தல், குடியேற்றக்காரர்களால் கைப்பற்றப்பட்ட நிலங்களை மீட்டெடுத்தல், முக்கிய வணிக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ஆபிரிக்கர்களின் கைகளில் ஒப்படைத்தல், மற்றும் அடக்குமுறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தல் ஆகிய கோரிக்கைகளை உள்ளடக்கியிருந்தது.
மெள மெள போராளிகள் மத்திய கென்யாவின் காடுகளுக்குச் சென்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் காலனித்துவ கூட்டாளிகளுக்கு எதிராக கெரில்லாப் போரை நடத்தினர். பெரும்பாலும் தற்காலிக ஆயுதங்களுடன் ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் வீரத்துடன் எதிர்த்து நின்றனர். இப்போர் நூறாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டதுடன், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பெருமளவிலான சித்திரவதை, ஒடுக்குமுறை மற்றும் ஒரு மில்லியன் வரையிலான கிக்குயு மக்களை சிறைமுகாம்களில் கொடூரமாக அடைத்து வைத்ததையும் தாண்டி எதிர்த்து நின்றது. மோதலின் விளைவாக, பட்டினி, நோய் மற்றும் தடுப்பு முகாம்களில் துன்புறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் 300,000 பேர் வரை இறந்திருக்கலாம். கிமாதி (Kimathi) கைது செய்யப்பட்டு, ஒரு போலி விசாரணைக்குப் பிறகு 1957இல் தூக்கிலிடப்பட்டார். மேலும் 1,100 கென்யர்கள் தூக்கிலிடப்பட்டனர். 1959ஆம் ஆண்டளவில், போராளிகளின் சிறு குழுக்கள் மட்டுமே காடுகளில் உயிர் பிழைத்திருந்தன.
தீவிரமயமாக்கப்பட்ட விவசாயிகளின் ஜனநாயகக் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு, சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஆபிரிக்கா முழுவதும் மற்றும் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாளர்களுடன் கூட்டு சேர்ந்து, போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் தலைமை தேவைப்பட்டது. ஆனால் தொழிலாள வர்க்கமானது அதன் ஸ்டாலினிச மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாத தலைமையால் தடுக்கப்பட்டது. இந்தத் தலைமையானது, தொழிலாள வர்க்கம் கென்யா ஆபிரிக்க ஒன்றியத்தின் (KAU) தேசியவாத, முதலாளித்துவ-சுதந்திர இலக்குகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று வலியுறுத்தியது.
கெரில்லாப் போராட்டத்தை தோற்கடிப்பதிலும், தொழிலாள வர்க்கம் தலையிடுவதைத் தடுப்பதிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வெற்றிக்கு, கென்யாவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆட்சியின் எதிர்கால சிற்பிகளான டாம் ம்போயா (Tom Mboya) போன்ற முதலாளித்துவ தேசியவாதிகள் உதவினர். கென்யா தொழிலாளர் கூட்டமைப்பின் (KFL) தொழிற்சங்கத் தலைவராக, அவரது தொழிற்சங்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தொழிற்சங்க காங்கிரஸின் (Trades Union Congress) ஆதரவைப் பெற்றதுடன், சிஐஏவின் முன்னணி அமைப்பான சுதந்திர தொழிற்சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பால் (International Confederation of Free Trade Unions) பெருமளவில் நிதியுதவியும் பெற்றது.
தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்க காலனித்துவ அதிகாரிகளால் ம்போயா பல முறை பயன்படுத்தப்பட்டார். 1954 ஏப்ரலில், கிராமப்புறங்களில் நடந்த கெரில்லா போருக்கான நகர்ப்புற ஆதரவை முறியடிக்க, பிரிட்டிஷாரால் நைரோபியில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் அன்வில்’ என்ற நடவடிக்கையின் கொடூரத்தை எதிர்த்து, நைரோபியின் போர்க்குணமிக்க தொழிலாளர்களால் அறைகூவல் விடப்பட்ட பொது வேலைநிறுத்தத்தை தடுக்க கென்யா தொழிலாளர் கூட்டமைப்பின் (KFL) தலைமையானது, காலனித்துவ அதிகாரிகளுடன் கூட்டுச்சேர்ந்தது. இந்த நடவடிக்கையின் போது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். ம்போயாவின் பின்னாளைய விளக்கத்தில், அவர் இவ்வாறு கூறுவார்:
1954இல் தீவிரவாதிகள் பேருந்து புறக்கணிப்பை திணித்தனர். இந்தப் புறக்கணிப்பில் தொழிற்சங்கங்களை ஈடுபடுத்த சிலர் முயன்றனர். தொழிற்சங்கங்கள் இந்த யோசனையை உறுதியாக நிராகரித்தன. பேருந்து புறக்கணிப்பை வெற்றிகரமாக திணித்த உடனேயே, பயங்கரவாதிகள் ஒரு பொது வேலைநிறுத்தத்தை திணிப்பதாக மிரட்டினர். இந்த அச்சுறுத்தலை ஒடுக்க [காலனித்துவ] அரசாங்கம் கூட்டமைப்பின் உதவியை நாடியது. அச்சமின்றி, தங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலையிலும், அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் வேலைநிறுத்தத்திற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு, அந்த அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒடுக்குவதில் வெற்றி பெற்றனர். தீவிரவாதிகளால் பல தலைவர்கள் மிரட்டப்பட்டபோதிலும், அவர்கள் அஞ்சாமல் வேலைநிறுத்த மிரட்டலை எதிர்கொள்ளச் சென்றனர்.
அடுத்த ஆண்டு, 1955இல் நாட்டையே முடக்கியிருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான மொம்பாசா துறைமுகத் தொழிலாளர்களின் வலுவான வேலைநிறுத்தத்தை ம்போயா தடுத்து நிறுத்தினார். தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை ஊதியப் பிரச்சினைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், காலனித்துவ அதிகாரிகளுக்கு எதிராக தங்கள் வலிமையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் ம்போயா வலியுறுத்தினார்.
1959இல் மெள மெள இயக்கம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த நான்கு ஆண்டுகளில் வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சி ஏற்பட்டது. இது தோட்டத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி மற்றும் அரசு ஊழியர்களை உள்ளடக்கியது. குறிப்பிடத்தக்க வகையில், கென்யா, உகாண்டா மற்றும் தங்கனீக்கா (தற்போதைய தான்சானியா) ஆகிய நாடுகளின் இரயில்வே தொழிலாளர்களின் கிழக்கு ஆபிரிக்க அளவிலான வேலைநிறுத்தமும் நடந்தது. இவை 1963இல் சுதந்திரம் பெறுவதற்கு வழிவகுத்தன. பழமைவாத கென்யா ஆபிரிக்க ஒன்றியத்திற்கு (KAU) கீழ்ப்படிந்து நடந்தபோதிலும், பெருந்திரளான தொழிலாளர்களின் அணிதிரட்டல்களும், வேலைநிறுத்தங்களும், ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவலாக வெடித்த வர்க்கப் போராட்டங்களும் சேர்ந்து, கென்யா மீதான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டைத் தக்க வைக்க முடியாத நிலையை உருவாக்கின.
இது லங்காஸ்டர் ஹவுஸ் மாநாடுகளில் (ஜனவரி 1960, பிப்ரவரி 1962 மற்றும் செப்டம்பர் 1963) நடைபெற்ற சுதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது. இம்மாநாடுகளை ஜோமோ கென்யாட்டா (Jomo Kenyatta - மெள மெளவை “புழு” என கண்டித்தவர்) மற்றும் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் ( Raila Odinga) தந்தையான ஜராமோகி ஒகிங்கா ஒடிங்கா ( Jaramogi Oginga Odinga) ஆகியோர் வழிநடத்தினர். அவர்கள் நிறுவிய கென்யா ஆபிரிக்க தேசிய ஒன்றியம் (KANU) என்ற கட்சியானது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை பேரம்பேசி உருவாக்கியது. இக்கட்சியானது பின்னர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக உண்மையில் ஒரு கட்சி ஆட்சியாக நிலைத்திருந்தது.
சுதந்திரம் மற்றும் அதற்குப் பிறகு (Freedom and After, 1963) என்னும் நூலில் சுதந்திரத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் எம்போயா கூறியபடி, அவர்களின் தேசியவாத இயக்கம் வெளிப்படையாக மார்க்சிசத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டது:
ஒரு தேசியவாத இயக்கத்திற்கு கருத்தியல் பற்றிய விவாதங்களுக்கோ, பொருளாதார மற்றும் சமூகத் திட்டங்களில் உள்ள வேறுபாடுகளுக்கோ நேரமில்லை. ஆபிரிக்காவில் சமூகம் - குறைந்தபட்சம் சாம்பேசியின் வடக்கில் - முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் நிலமற்றவர்கள் என்று பிரிக்கப்படவில்லை. ஐரோப்பாவில் காணப்படும் அடிப்படை வர்க்க வேறுபாடுகள் ஆபிரிக்காவில் இல்லை. அதற்குப் பதிலாக, புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடுகளில் மக்களிடமிருந்து தனது வலிமையைப் பெறும் ஒரு அரசாங்கத்தை நீங்கள் காண்கிறீர்கள். இது அனைவருக்கும் கல்வி, கூடுதல் மருத்துவமனைகள், சிறந்த உணவு, அனைவருக்கும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்கான அதிக வாய்ப்புகள் பற்றி பேசுகிறது. [...] அங்குள்ள பிளவுகள் பழங்குடி அல்லது தனிப்பட்ட அபிலாசைகளை கொண்டிருக்கலாம், ஆனால் மிகவும் அரிதாகவே உண்மையான கருத்தியல் அல்லது வர்க்க வேறுபாடுகள் இருக்க முடியும்.
ம்போயாவின் கருத்துக்கள் விரைவில் மறுக்கப்பட்டன. ஆபிரிக்காவில் வர்க்கங்கள் நிச்சயமாக இருந்தன, மேலும் அவர் புதிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையே வெளிப்படுத்தினார். புதிய அரசுகள் தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகரப் போராட்டங்களின் வளர்ச்சியை திட்டமிட்டு ஒடுக்குவதுடன், பொருளாதாரத்தை உலகச் சந்தையின் தேவைகளுக்கு கீழ்ப்படியச் செய்வதையும் உறுதிப்படுத்தும். இந்த உலகச் சந்தை, முன்பு நேரடியாக ஆட்சி செய்த அதே சில ஏகாதிபத்திய சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்தது. சுதந்திரம் வழங்குவது 2ம் உலகப் போருக்குப் பிந்தைய ஏற்பாடுகளின் ஒரு முக்கிய அங்கமாக மாறியது. இதன் மூலம் ஏகாதிபத்தியம் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது.
தொடரும்...