முன்னோக்கு

அமெரிக்க தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு: வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் போர் தொடர்பான மௌனத்தின் சதி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன. இந்த நிலையில், ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் மற்றும் கமலா ஹாரிசினதும், ட்ரம்பினதும் அறிக்கைகள், அற்பத்தனங்கள், தனிநபர் தாக்குதல்கள் என்பன வாய்வீச்சு பொய்களால் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்றன. அமெரிக்காவில், இன்னும் சொல்லப்போனால் உலகில், மக்கள் முகங்கொடுக்கும் மிக அடிப்படையான பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இல்லை. உண்மையில் அவை செயலூக்கத்துடன் மூடிமறைக்கப்பட்டு வருகின்றன.

போர்ட் பிளிஸ்ஸில் உள்ள 4வது C-17 Globemaster III ரக யுத்த விமானத்தில் (Terminal High Altitude Area Defense) THAAD ஏவு நிலையத்தை ஏற்றுவதற்கு அமெரிக்க இராணுவத்தினர் தயாராகிறார்கள். டெக்சாஸ், பிப். 23, 2019. [AP Photo/Staff Sgt. Cory D. Payne]

அமெரிக்கா ஒரு பாரிய போர் விரிவாக்கத்தின் விளிம்பில் உள்ளது என்ற உண்மை மிகவும் முக்கியமானது.

இந்த வாரத்தின் பிற்பகுதியில், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் அடுத்த கட்டம் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல்களுக்காக பைடென் ஜேர்மனிக்கு விஜயம் செய்வார். பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான ஒரு போர் உச்சிமாநாட்டிற்கு நிகரான ஒன்றில் பைடென் மற்றும் ஜேர்மன் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ் உடன் இங்கிலாந்து பிரதம மந்திரி சேர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

முன்னதாக திட்டமிடப்பட்ட ராம்ஸ்டீன் மாநாடு ரத்து செய்யப்பட்ட பின்னர் இந்த சந்திப்பு வருகிறது. மில்டன் சூறாவளி புளோரிடாவை நெருங்கிவிட்டதால் பைடென் அமெரிக்காவிலேயே இருக்க முடிவு செய்தார். ஆனால், அமெரிக்கா போரை விரிவாக்குவதற்கான திட்டங்களைச் செயல்படுத்த விரும்பியதே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனை மீது குண்டுவீச்சு மற்றும் வடக்கு காஸாவில் வாழும் பாலஸ்தீனியர்களை சீல் வைத்து அழித்து வருவது உட்பட, காஸாவிலும் லெபனானிலும், இஸ்ரேல் ஒரு வருடகால இனப்படுகொலையின் பாரிய விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது. இனப்படுகொலை இப்போது 80 மில்லியன் மக்கள் வாழும் ஈரானுக்கு எதிரான போரின் விரிவாக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக, ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலியப் படைகள் தயாராகி வரும் நிலையில், பைடென் நிர்வாகம் இஸ்ரேலுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்புவதாக அறிவித்தது. THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, இஸ்ரேலில் பேட்ரியாட் ஏவுகணை ஏவு தளங்கள் மற்றும் 100 அமெரிக்க சிப்பாய்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக, இஸ்ரேலின் உடனடி தாக்குதல் நடவடிக்கைக்கு முன்னதாகவே இந்த படைக் குவிப்பு இடம் பெறுகிறது.

ஈரானின் அணுசக்தி அல்லது எண்ணெய் நிலையங்களைக் காட்டிலும் அதன் இராணுவ இலக்குகளை இலக்கு வைத்து இஸ்ரேல் “நிதானத்தை” கடைப்பிடிக்க திட்டமிட்டு வருகிறது என்று ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு எந்த நம்பகத்தன்மையும் கொடுக்க முடியாது. ஈரான்மீது இஸ்ரேலின் எந்தத் தாக்குதலும் ஒரு பாரிய இராணுவ விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றச் செயலாகும். இஸ்ரேல் ஒரு பரந்த போரைத் தவிர்க்கும் நோக்கம் கொண்டிருக்கும் என்ற கருத்துக்களுக்கு விடையிறுக்கையில், செவ்வாயன்று நெதன்யாகு “நாங்கள் எங்கள் தேசிய நலன்களின் அடிப்படையில் எங்கள் இறுதி முடிவுகளை எடுப்போம்” என்று அறிவித்தார்.

“நவம்பர் 5 ஜனாதிபதி தேர்தல்களுக்கு முன்னதாக, அதாவது மூன்று வாரங்களுக்குள்” “இஸ்ரேலின் தாக்குதல் நடத்தப்படும்” என்றும், பைடென் மற்றும் நெதன்யாகுவுக்கு இடையிலான கலந்துரையாடல்களை நன்கு அறிந்த ஒருவரின் ஆதாரத்தின்படி, “தொடர்ச்சியான எதிர்வினைகளில் இது முதலாவதாக இருக்கும்” என்றும் ஹாரெட்ஸ் செவ்வாயன்று அறிவித்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்புதான், ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் படுகொலை செய்தது. இதுவே ஒரு போர் நடவடிக்கையாகும், ஈரானிய அரசாங்கத்தை அகற்ற இஸ்ரேலின் நகர்வுகள் “மக்கள் நினைப்பதை விட மிக விரைவில் வரும்” என்று நெதன்யாகு ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த அச்சுறுத்தல் தற்போது உணரப்பட்டு வருகிறது.

ஈரானுக்கு எதிரான நகர்வுகள் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளன.

ஜேர்மனியில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ள முக்கிய விடயங்களில், ரஷ்ய எல்லைக்குள் ஆழமாகத் தாக்க வடிவமைக்கப்பட்ட, உக்ரேனுக்கு நீண்டதூர ஏவுகணைகளை வழங்குவதும் உள்ளடங்கும். புதன்கிழமை, உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது “வெற்றித் திட்டத்தை” வெர்கோவ்னா ராடாவிடம் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் ATACMS மற்றும் Storm Shadow ஏவுகணைகளை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் மற்றும் ரஷ்யாவிற்குள் ஆழமான தாக்குதல்களுக்கு ஒப்புதல் ஆகியவையும் அடங்கும்.

இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளுடன் தொடர்புபட்ட பத்திரிகைகள் மற்றும் சிந்தனை குழாம்களில், ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வட கொரியாவுக்கு இடையிலான புதிய “தீய அச்சு” அல்லது “குழப்பத்தின் நால்வர்” குறித்து எண்ணற்ற கட்டுரைகள் உள்ளன.

மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்ய பிராந்தியத்தின் மீதான தாக்குதல்கள் பதிலடிக்கு வழிவகுக்கும் என்று மாஸ்கோ பலமுறை கூறியுள்ளது. அதாவது, பைடென்-ஹாரிஸ் நிர்வாகமும் அதன் நேட்டோ கூட்டாளிகளும், தேர்தல்களுக்கு முன்னதாக, உலகை அணுஆயுத போரின் விளிம்பை நோக்கி தள்ளி வருகின்றனர்.

இவை எதுவுமே தேர்தலில் விவாதப் பொருளாக இல்லை. செவ்வாயன்று, துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் டெட்ராய்டுக்கு விஜயம் செய்தார், மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் குறித்தோ அல்லது அமெரிக்காவின் பிரதான எதிரி என்று அவர் அழைத்துள்ள ஈரானுக்கு எதிரான அபாயகரமான போர் ஆயத்தப்படுத்தல் குறித்தோ எதுவும் கூறவில்லை. அதற்கு பதிலாக, ஹாரிஸ் சிறு வணிக வரி சலுகைகள் மற்றும் ஒரு வலதுசாரி, வணிக-சார்பு பொருளாதார கொள்கையான அவரது “வாய்ப்பு பொருளாதாரம்” என்றழைக்கப்படுவதை ஊக்குவிப்பதில் அவரது கருத்துக்களை ஒருமுனைப்படுத்தினார்.

போர் விரிவாக்கம் எழுப்பப்பட்டால், அது மூன்றாம் உலகப் போர் அபாயம் குறித்து வாய்வீச்சு நோக்கங்களுக்காக அவ்வப்போது வெளியிடப்படும் ட்ரம்பின் அறிக்கைகளில் தான் உள்ளது. குடியரசுக் கட்சியினர் பைடெனை ஈரான் பற்றி குறைகூறியுள்ள அளவிற்கு, அது போரை நடத்துவதில் போதுமான ஆக்கிரோஷத்துடன் இருக்கவில்லை.

ட்ரம்ப் மீதான ஒரு படுகொலை முயற்சிக்கு ஈரான் தயாரிப்பு செய்து வருவதாக நெதன்யாகுவிடம் இருந்து வந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த டிரம்ப் ஜூலை மாதம், “அமெரிக்கா ஈரானை நிர்மூலமாக்கும், பூமியின் முகத்தில் இருந்தே அதைத் துடைத்தெறியும்” என்று அவர் நம்புவதாக அறிவித்தார்.

உலக சோசலிச வலைத் தளம் நேற்று குறிப்பிட்டதைப் போல, போர் தீவிரப்படுத்தப்படுவது குறித்த மௌனம், “தேர்தல் நடப்பதற்கு முன்னரே இராணுவ விரிவாக்கத்துக்கான திட்டங்கள் நடந்து வருகின்றன” என்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அதன் விளைவால் பாதிக்கப்பட முடியாது. இது, “ஒரு ‘அக்டோபர் ஆச்சரியத்திற்கு’ பதிலாக, இது ஒரு ‘அக்டோபர் சதியாகும்’.

இது தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் எந்தவொரு மையப் பிரச்சினையையும் பரந்த அளவில் விலக்குவதன் ஒரு பகுதியாகும். பைடென் நிர்வாகத்தின் உலகப் போரின் விரிவாக்கம் அமெரிக்கத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுடன் கைகோர்த்துள்ளது. தேர்தல் நெருங்குகையில், பெருநிறுவனங்கள் அலையென பாரிய பணிநீக்கங்களில் ஈடுபட்டுள்ளன. வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களை அடிபணிய வைக்கும் ஒரு அப்பட்டமான முயற்சியில் போயிங் 17,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இன்டெல் நிறுவனம், உலகளவில் 15,000 வேலைகளை பணிநீக்கம் செய்வதற்கான முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. மேலும், ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம், கடந்த வாரம் 2,300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது, இது தொழில்நுட்பம் மற்றும் வாகனத் தொழில்களில் வேலைகள் அழிப்பின் ஒரு பகுதியாகும்.

கைது நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பெரும் தாக்குதல்கள் உட்பட, காசாவில் இனப்படுகொலையை எதிர்ப்பவர்களை இலக்கில் வைத்து, கல்லூரி வளாகங்களில், ஒரு பொலிஸ் அரசு சூழல் தூண்டிவிடப்பட்டு வருகிறது. வரம்பற்ற வளங்கள் போருக்காகவும் பணக்காரர்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டாலும் (பங்குச் சந்தைகள் சாதனை உயரத்தில் உள்ளன) சமூக சேவைகள் ஆதாரவளங்களின்றி நலிவடைந்து கிடக்கின்றன, சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு முறை சீர்குலைந்துள்ளது, பொதுக் கல்வி இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகிறது.

மூன்று வார காலத்தில் தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும், அது தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள எந்த அடிப்படைப் பிரச்சினைகளையும் தீர்க்கப் போவதில்லை. ஆளும் வர்க்கம் மற்றும் அதன் ஊடகங்களின் மௌனத்தின் சதி, தொழிலாள வர்க்கத்தில் நிலவும் ஆழ்ந்த எதிர்ப்பு குறித்த அச்சத்தை வெளிப்படுத்துகிறது. இந்த எதிர்ப்பு முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான ஒரு நனவான அரசியல் இயக்கமாக மாற்றப்பட்டாக வேண்டும்.

Loading