மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், நெதன்யாகு அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானைத் தாக்குவதற்கு பைடென் நிர்வாகம் அமெரிக்க போர் துருப்புகளை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.
அக்டோபரில் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புவதன் மூலம், பைடென் நிர்வாகம் கமலா ஹாரிஸின் தேர்தல் வாய்ப்புகளில் செல்வாக்கு செலுத்தி, தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் இராணுவ விரிவாக்கத்திற்கான திட்டங்கள் நடந்துகொண்டிருப்பதை உறுதி செய்ய முயல்கிறது. இது ஒரு “அக்டோபர் ஆச்சரியத்திற்கு” பதிலாக, மத்திய கிழக்கு எங்கிலும் போரில் அமெரிக்க ஈடுபாட்டை பாரியளவில் விரிவாக்குவதற்கான ஒரு “அக்டோபர் சதி” ஆகும்.
கடந்த புதன்கிழமை, பைடென் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஈரான் தொடர்பான கூட்டுத் திட்டங்கள் குறித்து விவாதிக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்த அழைப்பின் போது, “ஈரானில் உள்ள இராணுவ உள்கட்டமைப்பை குறிவைக்க திட்டமிட்டுள்ளதாக நெதன்யாகு பைடெனிடம் தெரிவித்தார்” என்று ஒரு அமெரிக்க அதிகாரி வாஷிங்டன் போஸ்ட்டுக்கு இந்த தொலைபேசி அழைப்பு குறித்து விவரித்தார். “இஸ்ரேலுக்கு ஒரு சக்திவாய்ந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அனுப்புவதற்கான பைடெனின் முடிவில் பிரதம மந்திரியின் நிலைப்பாடு காரணியாக இருந்தது” என்று போஸ்ட் அறிவித்தது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஈரானைத் தாக்குவதற்கான நெதன்யாகுவின் திட்டங்களில் பைடென் கையெழுத்திட்டதுடன், அத்தகைய நடவடிக்கைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா “களத்தில் பூட்ஸ் கால்களை” வைக்கும் என்பதையும் தெளிவுபடுத்தினார். கடந்த ஞாயிறன்று, அமெரிக்க பாதுகாப்புத் துறை சுமார் 100 அமெரிக்க சிப்பாய்களால் இயக்கப்படும் ஒரு THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்புமுறையை இஸ்ரேலுக்கு அனுப்பவிருப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இந்த போரிடும் துருப்புக்கள் நிலைநிறுத்தப்படுவது மத்திய கிழக்குப் போரில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாட்டை இன்னும் கூடுதலான அளவில் விரிவாக்குவதற்கு கதவைத் திறந்து விட்டுள்ளது. CNN உடனான ஒரு நேர்காணலில், ஓய்வுபெற்ற விமானப்படை கேர்னல் செட்ரிக் லெய்டன், “அந்த துருப்புக்கள் ஏதேனும் பாதிப்புக்கு உள்ளானால், அது அமெரிக்காவை போருக்கு இழுத்துச் செல்லக்கூடும், மேலும் இது இந்த கட்டத்தில் நாம் கற்பனை செய்வதை விட குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று அச்சுறுத்தினார்.
பைடென் உடனான அழைப்பைத் தொடர்ந்து வந்த நாட்களில், இஸ்ரேல் காஸா மக்களுக்கு எதிரான அதன் தாக்குதல்களை மோசமான முறையில் தீவிரப்படுத்தியது. மேலும், லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினரை நேரடியாக தாக்கி, ஐ.நா. ஆணையையும் மீறி லெபனானில் “நீலக் கோட்டை” தாண்டி முன்னேறியது.
புதனன்று, அசோசியேடட் பிரஸ், நெதன்யாகு “வடக்கு காஸாவில் அப்பாவி மக்களை காலி செய்யும் மற்றும் உள்ளே எஞ்சியிருப்பவர்களுக்கான உதவிகளை வெட்டுவதற்கான ஒரு திட்டத்தை பரிசீலித்து வருகிறார்” என்று அறிவித்தது.
மேலும் அது பின்வருமாறு எழுதியது, “இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகு ஹமாஸ் போராளிகளைப் பட்டினி போடும் முயற்சியில் வடக்கு காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை நிறுத்துவதற்கான ஒரு திட்டத்தை ஆராய்ந்து வருகிறார். இந்த திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டால், நூறாயிரக் கணக்கான பாலஸ்தீனியர்கள் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற விரும்பாத அல்லது வெளியேற முடியாத நிலையில் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் சிக்கிக் கொள்ளக்கூடும்.
“எஞ்சியிருப்பவர்கள் போராளிகளாக கருதப்படுவார்கள் —அதாவது இராணுவ விதிமுறைகள் துருப்புகள் அவர்களைக் கொல்ல அனுமதிக்கும்— மற்றும் உணவு, தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருள் என்பன மறுக்கப்படும்.”
அமெரிக்கா அல்லது அதன் பினாமிகள் ஒரு நடவடிக்கை எடுப்பது குறித்து “பரிசீலித்து வருகின்றனர்” என்று அமெரிக்க ஊடகங்கள் அறிவிக்கும் நேரத்தில், அத்திட்டம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது என்பதே அதன் அர்த்தமாகும். உண்மையில், இஸ்ரேல் ஏற்கனவே வடக்கு காஸாவை முற்றுகையிட்டு, எஞ்சியிருக்கும் மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கோரி, எஞ்சியிருப்பவர்களை திட்டமிட்டு கொன்று வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக, உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் நோயாளிகள் இஸ்ரேலிய நெருப்புக் குண்டுகளால் உயிருடன் எரிக்கப்படும் காட்சிகளால் அதிர்ச்சியும் பீதியும் அடைந்துள்ளனர்.
இந்த படுகொலைகளுக்கு மத்தியில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு துருப்புகளை அனுப்புகிறது என்று அறிவிப்பதன் மூலமாக, பைடென் நிர்வாகம் ஜனநாயகக் கட்சி மற்றும் ஹாரிஸ் பிரச்சாரத்தின் முழுமையான விரோதம் மற்றும் வெகுஜன போர்-எதிர்ப்பு உணர்வுக்கு அவமதிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்திக் காட்டுகிறது. தொழில்துறை அளவில் படுகொலைக்கு முற்றிலும் உடந்தையாக இருக்கும் அரசியல் ஸ்தாபனத்தின் எந்தப் பிரிவினருக்கும் முறையீடு செய்வதன் மூலம் இனப்படுகொலையை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளின் பயனற்ற தன்மையையும் இது நிரூபிக்கிறது.
ஆனால், இந்த இனப்படுகொலையே ஒரு பரந்த பிராந்திய மற்றும் உலகளாவிய போருடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளது. அதன் உடனடி இலக்கு ஈரான் ஆகும். கடந்த வாரம் “60 நிமிடங்கள்” என்ற நிகழ்ச்சிக்கு அளித்த ஒரு நேர்காணலில், ஹாரிஸ் ஈரான் “நமது மிகப்பெரிய எதிரி” என்று தான் நம்புவதாக அறிவித்தார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத் தாக்குதலின் சாத்தியக்கூறு குறித்து கேட்கப்பட்டபோது, “இந்த தருணத்தில் அனுமானங்களைப் பற்றி நான் பேசப் போவதில்லை” என்று அவர் அறிவித்தார்.
ஆனால் இது ஒரு கற்பனையான காட்சி அல்ல. இது மிக நீண்டகால மற்றும் பேரழிவுகரமான விளைவுகளுடன், ஈரானுடன் ஒரு போருக்கு எளிதாக்கும் அமெரிக்காவின் ஒரு செயலூக்கமான திட்டமாகும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நோக்கம் மத்திய கிழக்கை ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் முழுமையாக மறு ஒழுங்கு செய்வதாகும். அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி ஷாவின் ஆட்சியை அகற்றிய 1979 ஈரானியப் புரட்சியுடன் அமெரிக்கா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. பல தசாப்தங்களாக, அடுத்தடுத்து வந்த அமெரிக்க அரசாங்கங்கள் தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்திற்கும், ஈரானிய அரசாங்கத்தை ஒரு புதிய அமெரிக்க ஆதரவிலான சர்வாதிகாரத்தைக் கொண்டு பிரதியீடு செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டி வந்துள்ளன.
ஈரானுடனான நேரடி போரை நோக்கிய நகர்வுகளே கூட, ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் சீனாவுடன் அபிவிருத்தி அடைந்து வரும் மோதலுடன் தொடர்புபட்டுள்ளன.
உக்ரேனில் நேட்டோவிற்கு தொடர்ச்சியான ஆழமான பின்னடைவுகள் அதிகரித்து வரும் நிலையிலும், ரஷ்யப் படைகள் முழுப் போர்முனையிலும் முன்னேறி வரும் நிலையிலும், இஸ்ரேலுக்கு அமெரிக்கத் துருப்புக்கள் அனுப்பப்படுகின்றன. இந்த யதார்த்தத்தை எதிர்கொண்டு, உலக மேலாதிக்கத்திற்கான அதன் போரில் அமெரிக்கா ஒரு புதிய போர் முனையைத் திறக்க முயல்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியமானது ஈரானை, ரஷ்யாவின் ஒரு மத்திய கூட்டாளியாகவும், மேலும் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவும் நாடாகவும் காண்கிறது. வெளியுறவுகளுக்கான ஐரோப்பிய கவுன்சிலின் ஒரு சமீபத்திய அறிக்கை, “பிப்ரவரி 2022 க்கு முன்னர் கற்பனை செய்து பார்க்க முடியாத வழிகளில் ரஷ்யா இப்போது ஈரானைச் சார்ந்திருப்பதைக் காண்கிறது. ... ஒரு காலத்தில் இரண்டாம் நிலை பாத்திரம் வகித்த ஈரான், இப்போது உக்ரேன் போரில் ரஷ்யாவின் மிக முக்கியமான ஒத்துழைப்பாளர்களில் ஒன்றாக உள்ளது” என்று குறிப்பிடுகின்றது.
அமெரிக்க மூலோபாயவாதிகள் ஈரானின் எண்ணெய் விநியோகத்தைப் பெற்றவுடன், ரஷ்யா மற்றும் இறுதியில் சீனாவுடன் அதன் போரை அதிகரிக்க அமெரிக்கா சிறந்த நிலையில் இருக்கும் என்று நம்புகிறார்கள். மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் குறிவைக்கப்பட்ட இந்த நாடுகள் அனைத்தையும் “தீமையின் புதிய அச்சு” என்று அமெரிக்க போர் திட்டமிடுபவர்கள் குறிப்பிடுகின்றனர், ஈராக் ஆக்கிரமிப்புக்கு முன்னதாக புஷ் நிர்வாகம் உருவாக்கிய சொற்றொடரை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.
போருக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு புதிய மூலோபாயம் அவசியமாகும், அது அரைகுறை நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்கான தார்மீக முறையீடுகளின் அடிப்படையில் அல்ல. காஸா படுகொலையின் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கடந்த வாரம் சோசலிச சமத்துவக் கட்சியின் இணையவழி கருத்தரங்கில் அவர் வழங்கிய கருத்துக்களில், உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் பின்வருமாறு அறிவித்தார், “ஒவ்வொரு பெரிய காலகட்டத்தையும் போலவே, ஒன்றில் மனிதகுலம் முன்னேறுகிறது, அல்லது அது அழிவை எதிர்கொள்கிறது. சமூகப் புரட்சி சாத்தியமற்றது என்றால், மனிதகுலம் உயிர்வாழ்வது சாத்தியமற்றது என்பதே அதன் பொருளாகும்.”
முழு உலகையும் சூழ்ந்து நிற்கும் இராணுவ பேரழிவைத் தவிர்ப்பதற்கான போராட்டத்தில் “எளிதான பாதை” அல்லது குறுக்குவழி எதுவும் இல்லை. இதற்கு தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றிய மற்றும் சர்வதேச சோசலிச முன்னோக்கைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட்ட ஒரு பாரிய சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.