முன்னோக்கு

லெபனான் மீது தீவிரமான குண்டுவீச்சுக்கு மத்தியில், ஈரானின் எண்ணெய் வயல்களைத் தாக்குவது குறித்து வாஷிங்டனுடன் இஸ்ரேல் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஆதரவுடன், காட்டுமிராண்டித்தனமான விமானக் குண்டுவீச்சு மற்றும் தெற்குப் பகுதியில் தரைப்படை நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் மூலம் லெபனான் மக்களை இஸ்ரேல் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகிறது.

கடந்த செவ்வாயன்று இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனங்களில் ஈரான் மீதான சியோனிச ஆட்சியின் வரவிருக்கும் தாக்குதல், ஏற்கனவே தொடங்கியுள்ள பிராந்திய அளவிலான போரின் மேலும் தீவிரத்தை பிரதிபலிக்கிறது.

ஈரானின் எண்ணெய் வயல்களை தாக்குவது குறித்து இஸ்ரேலுடன் வாஷிங்டன் கலந்துரையாடி வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடென் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தாஹியேவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் தீப்பிழம்புகள் எழுகின்றன. பெய்ரூட், லெபனான், வெள்ளிக்கிழமை, அக்டோபர் 4, 2024 [AP Photo/Hussein Malla]

ஈரானிய எண்ணெய் வயல்கள் மீதான தாக்குதல், முழு பிராந்தியத்தையும் இரத்தக்களரிக்குள் ஆழ்த்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது. இது, அமெரிக்க ஆதரவுடைய இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே வெளிப்படையான போர் வெடிப்பதை தவிர்க்க முடியாததாக ஆக்குவது மட்டுமல்லாமல், இதர பெரும் வல்லரசுகள் (ஈரானின் அண்டை நாடான சிரியாவில் துருப்புக்களையும் கடற்படைக் கப்பல்களையும் ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளது போல, ஈரானின் மிக முக்கியமான வர்த்தக பங்காளியாக இருக்கும் சீனா, ஈரானின் எண்ணெய் விநியோகத்தை பெரிதும் நம்பியுள்ளது.) போரில் தலையிட அல்லது உலகின் மற்றொரு பகுதியில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக பதிலடி கொடுக்க நிர்பந்திக்கப்படும் அபாயத்தையும் அதிகரிக்கும்.

விஷயம் என்னவென்றால், இப் பிராந்தியத்தில் தீவிரமடைந்துவரும் மோதலில் இஸ்ரேல் சுயாதீனமான செயல்படும் ஒரு நாடல்ல. லெபனான் மீதான அதன் பயங்கரவாதத் தாக்குதல்கள், கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்கள் மற்றும் ஹிஸ்புல்லாவின் ஹசன் நஸ்ரல்லா போன்ற அரசியல் தலைவர்கள் மீதான படுகொலைகள் உட்பட, இஸ்ரேல் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டே எடுக்கப்படுகிறது. எரிசக்தி வளம் மிக்க மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த ஈரானுடனான போரை வாஷிங்டன் விரும்புகிறது. எனவே, இஸ்ரேல், சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கான களமாக செயல்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேகமான பொருளாதாரச் வீழ்ச்சியை ஈடுகட்ட உலகின் இந்த பொறுப்பற்ற மறுபங்கீடு அவசியமாகக் கருதப்படுகிறது.

கடந்த புதன்கிழமை G7 ஏகாதிபத்திய நாடுகள் வெளியிட்ட அறிக்கை ஈரானை பிராந்தியம் முழுவதிலும் பிரதான ஆக்கிரமிப்பாளராக சித்தரிப்பதன் மூலம் யதார்த்தத்தை தலைகீழாக மாற்றியது. இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலைகளை ஆரம்பித்து, குறைந்தது 186,000 பேரைக் கொன்ற ஒரு வருடத்திற்குப் பின்னரும், ஆயிரக்கணக்கான லெபனானியர்களின் உயிர்களைப் பறித்த இரண்டு வார பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் தொடர்ச்சியான குண்டுவீச்சுகளுக்குப் பின்னரும், G7 பின்வருமாறு எழுதியது:

மத்திய கிழக்கில் நிலைமை மோசமடைந்து வருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் ஜி7 நாடுகளின் தலைவர்களாகிய நாங்கள், இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்திய நேரடி இராணுவத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி வலியுறுத்துகிறோம். ஈரானின் பயங்கரவாதப் பினாமிகள் மற்றும் ஆயுதக் குழுக்களான ஹவுதிகள், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் உட்பட, ஈராக்கில் ஈரானுடன் இணைந்த ஆயுதக் குழுக்கள் மூலம் மத்திய கிழக்கு முழுவதும் ஈரானின் தீவிரமான சீர்குலைவு நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப் வேண்டும்.

இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் முன்னணி 'ஜனநாயகங்கள்', அதிதீவிர வலதுசாரி சியோனிச ஆட்சி 'ஏழு முனைகளில் தொடுக்கும் போரை' முழுமையாக ஆதரிக்கின்றன என்பதாகும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞரால் போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோர், தங்களது போரின் முன்னரங்குகள் காஸா மற்றும் மேற்கு கரையில் இருந்து லெபனான், சிரியா, ஈராக், யேமன் மற்றும் ஈரான் வரை நீண்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

நேரடியான உயிரிழப்புகள் ஏற்படாத ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரானைக் கண்டிக்கும் G7 அறிக்கையானது, (இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டாளிகள் ஈரானிய ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதன் விளைவாக, ஏவுகணைக் சிதறல்கள் விழுந்து ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்), பல குடியிருப்பு கட்டிடங்களை இடித்து குறைந்தது 300 உயிர்களை பறித்த ஒரு தாக்குதலில் இஸ்ரேல் சட்டவிரோதமாக நஸ்ரல்லாவை படுகொலை செய்தது பற்றி G7 அறிக்கை ஒரு வார்த்தையும் கூறவில்லை. ஆயிரக்கணக்கான லெபனானியர்கள், குழந்தைகள் உட்பட, கைகள் மற்றும் கால்கள் சிதைந்து, அல்லது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் பயங்கரவாத தாக்குதலின் காரணமாக பார்வை இழந்து, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் பிற சாதனங்கள் வெடித்ததை அது குறிப்பிடவில்லை.

வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய சக்திகளிடமிருந்து இஸ்ரேலுக்கு கிடைத்த ஆயுத மற்றும் அரசியல் ஆதரவு காரணமாக மட்டுமே இந்த தாக்குதல்கள் சாத்தியமாகியுள்ளன. இதில், அமெரிக்காவிலிருந்து கிட்டத்தட்ட வரம்பற்ற பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகளும் அடங்கியுள்ளன. அவை காஸாவை ஒரு பாழிடமாக மாற்றுவதற்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படை பயன்படுத்தியுள்ளது. மேலும், அவை பெய்ரூட்டின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளை அழிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த சக்திகளின் மௌனத்தை இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளுக்கு ஒப்புதல் அளிப்பதாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இது, இஸ்ரேலுக்கு கிடைத்த செய்தியாகும். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில், பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது, உள்ளூர் நிருபர்கள் குறைந்தது 11 வலுவான குண்டு வீச்சுக்களை அறிவித்தனர். டசின் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. லெபனானுக்கும் சிரியாவிற்கும் இடையிலான பிரதான சாலையை துண்டித்து, மஸ்னா எல்லைக் கடக்கும் இடமும் தாக்கப்பட்டது. குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க சமீபத்திய வாரங்களில் சுமார் 300,000 பேர் சிரியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான லெபனானியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

லெபனானில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் ஏற்கனவே 40 மருத்துவ வசதிகளை மூடுவதற்கு கட்டாயப்படுத்தியுள்ளன. 'சர்வதேச மனிதாபிமான சட்டத்தை இஸ்ரேலியர்கள் மீறியதன் மூலம் காஸாவில் என்ன நடக்கிறது என்பது கிட்டத்தட்ட மீண்டும் மீண்டும் வருவதை நாங்கள் காண்கிறோம்' என்று ஐ.நா மக்கள் தொகை நிதியத்தின் பிராந்திய இயக்குனர் லைலா பேக்கர் அல் ஜசீராவிடம் கூறினார்.

கடந்த செவ்வாயன்று, இஸ்ரேலிய இராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய பின்னர் தனது முதல் பொது நிகழ்ச்சியில், ஐந்தாண்டுகளில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை தொழுகைகளை நடத்திய பின்னர், அயத்துல்லா அலி கமேனீ தெஹ்ரானில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். இஸ்ரேலை எதிர்த்து நிற்பதில் ஈரான் 'தனது கடமையை நிறைவேற்றுவதில் தாமதிக்கவோ அல்லது அவசரப்படவோ மாட்டாது' என்று கமேனி அறிவித்தார். அவர் தொடர்ந்தார்:

பாலஸ்தீன மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள, அந்தக் குற்றவாளிகளை-ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்து நிற்க சட்டப்பூர்வமான உரிமை உள்ளது. பாலஸ்தீன மக்கள் தங்கள் தாயகத்தைப் பாதுகாப்பதற்காக, அந்தக் குற்றவாளிகளை குறை கூறக்கூடிய ஒரு நீதிமன்றமோ அல்லது சர்வதேச அமைப்போ இல்லை.

ஹமாஸின் அக்டோபர் 7 எழுச்சி, 'முறையானது மற்றும் தர்க்க ரீதியானது' என்றும், அனைத்து முஸ்லீம் நாடுகளும் ஒரு 'பொது எதிரியை' எதிர்கொள்கின்றன என்றும் தெரிவித்த அவர், பின்வருமாறு கூறினார்.

நமது எதிரிகள் பின்பற்றும் கொள்கை, அனைத்து முஸ்லிம்களிடையே பிளவு மற்றும் கிளர்ச்சியின் விதைகளை விதைப்பதாகும். அவர்கள் பாலஸ்தீனியர்கள், லெபனானியர்கள், எகிப்தியர்கள், மற்றும் ஈராக்கியர்களுக்கு ஒரே எதிரிகள். அவர்கள் யேமன் மற்றும் சிரிய மக்களுக்கும் எதிரிகள்.

முழு மக்களையும் அழித்தொழிப்பதற்காக, சியோனிச ஆட்சிக்கு அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்குவதால், இஸ்ரேலுக்கு மட்டுமே தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்று ஏகாதிபத்திய சக்திகள் இடைவிடாது கூறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டாளிகளின் குற்றத்தை கண்டனம் செய்து பாலஸ்தீனியர்களை பாதுகாக்கும் வகையில் கொமேனியின் கருத்துக்கள், இப்பகுதி மற்றும் அதற்கு அப்பால் உள்ள அரசியல் அனுபவம் இல்லாத தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு செவிசாய்ப்பை பெற முடியும்.

ஆனால், இவை ஒரு திவாலான முதலாளித்துவ-மத ஆட்சியின் தலைவரால் செய்யப்படுகின்றன. இது, பிராந்திய அளவிலான இரத்தக்களரிக்கு விரைவாக இறங்குவதைத் தவிர வேறு வழியை வழங்கவில்லை. 'அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைப்பதில்' இருந்து வெகு தொலைவில் இருக்கும், உலகப் பொருளாதாரத்திற்கு மேம்பட்ட அணுகலைப் பெறுவதற்காக, ஏகாதிபத்திய சக்திகளுடன் சமரசம் செய்து கொள்ள விரும்பும் ஒரு பிரிவுக்கும், இராணுவப் பலத்தைப் பயன்படுத்துதல், சீனா மற்றும் ரஷ்யாவில் உள்ள முதலாளித்துவ ஆட்சிகளுடன் நெருக்கமான உறவுகள் உள்ளிட்ட இன்னும் கடுமையான நிலைப்பாட்டிற்கு அழுத்தம் கொடுக்கும் மற்றொரு பிரிவுக்கும் இடையில் கடுமையாகப் பிளவுபட்டுள்ள ஒரு ஆட்சியை கொமேனி வழிநடத்துகிறார்.

மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பணி, சர்வாதிகார சவுதி ஆட்சி, வாஷிங்டன் மற்றும் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளி மற்றும் ஈரானின் முதலாளித்துவ-மதகுரு ஆட்சியாளர்களை உள்ளடக்கிய அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைப்பது அல்ல. மாறாக, ஏகாதிபத்தியப் போருக்கும் அதைத் தோற்றுவிக்கும் முதலாளித்துவ இலாப அமைப்புக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தில், அனைத்து செயற்கையான தேசிய, மத மற்றும் இனப் பிளவுகளுக்கு இடையே தொழிலாள வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதே அவசரப் பணியாகும்.

அரேபிய, பாரசீக, துருக்கிய, குர்திஷ் மற்றும் யூத தொழிலாளர்களை அத்தகைய போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவது நிரந்தரப் புரட்சி முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும். மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், நீண்டகாலமாக துன்பம் அனுபவித்து வரும் அதன் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும் இப்பகுதியின் தொழிலாள வர்க்கத்திற்கு இருக்கும் ஒரே வழி, அதன் போராட்டங்களை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள அதன் வர்க்க சகோதர சகோதரிகளின் போராட்டங்களுடன் இணைத்து உலக சோசலிச புரட்சியின் வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில் ஈடுபடுத்துவதாகும்.

Loading