முன்னோக்கு

ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை: உலகப் போரில் ஏகாதிபத்தியம் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கைவிடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த சனிக்கிழமை அன்று, ஹிஸ்புல்லா தலைவர் ஹாசன் நஸ்ரல்லா மற்றும் பெய்ரூட்டில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடிமக்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் கொலை செய்யப்பட்டதை உலக சோசலிச வலைத் தளம் கண்டிக்கிறது. நஸ்ரல்லாவைக் கொன்ற பாரிய குண்டுவீச்சானது, படுகொலைகள் மற்றும் பொதுமக்கள் பகுதிகளில் கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்கு தடை உட்பட பல சர்வதேச போர்ச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்ட இடத்தை மக்கள் பார்வையிடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 29, 2024. [AP Photo/Hassan Ammar]

நஸ்ரல்லாவின் படுகொலையுடன், ஏகாதிபத்திய வல்லரசுகள் முன்னாள் காலனித்துவ நாடுகளின் மீது மீண்டும் தளைகளை சுமத்தும் தங்கள் தேடலில் எதையும் நிறுத்தப் போவதில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

நஸ்ரல்லா 1992 முதல் ஹிஸ்புல்லாவின் பொதுச் செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். 1979 ஈரானியப் புரட்சியால் ஈர்க்கப்பட்டு, 1982 மற்றும் 2000 க்கு இடையில் தெற்கு லெபனானில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிரான “இஸ்லாமிய எதிர்ப்பாக” இந்த குழு உருவாக்கப்பட்டது. 2006ம் ஆண்டு, ஹிஸ்புல்லாவை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டு, தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்தபோது, இக்குழு பரந்த மக்கள் ஆதரவைத் திரட்டி, இஸ்ரேலையும் புஷ் நிர்வாகத்தையும் ஐ.நா. ஆதரவுடைய போர்நிறுத்தத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தியது. இது பரந்த அளவில் இஸ்ரேலுக்கு ஒரு சங்கடம் என்று கருதப்பட்டது. இந்த சங்கடத்திற்கு பழிவாங்க இன்று, இஸ்ரேல் அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸின் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டது.

கடந்த சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய F-15 போர் விமானங்கள் 85 குண்டுகளை வீசின, அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா வழங்கிய 2,000 பவுண்டு நிலவறைத் தகர்ப்பு குண்டுகள் (bunker busters) ஆகும். நஸ்ரல்லா லெபனானின் மையத்தில் மற்ற தலைவர்களுடன் சந்தித்துக்கொண்டிருந்த ஒரு நிலத்தடி வளாகத்தின் மீது இந்தக் குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதல்கள் பல உயரமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களை முற்றிலுமாக அழித்தன.

“இந்த தாக்குதல் இரண்டு இடங்களில் குறைந்தது நான்கு பெரிய கட்டிடங்களை தரைமட்டமாக்கியதுடன், 1,000 அடி பரப்பளவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது” என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. “ஒரு ஜன்னலில் இருந்து படம்பிடிக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி, பெய்ரூட்டின் தெற்கு புறநகரில் Dahiyeh க்கு மேலே குறைந்தது நான்கு தனித்தனி புகை வரிசைகள் எழுவதைக் காட்டுகிறது. பத்தடி அகலமும் உயரமும் கொண்ட புகை மூட்டங்கள் கீழே உள்ள கட்டிடங்களுக்கு மேலே அலையடித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. பின்னணியில் அலறல் சத்தம் கேட்கிறது” என்று போஸ்ட் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் வெள்ளை மாளிகையின் முயற்சி, தொடக்கத்தில் இருந்தே அபத்தமானது மட்டுமல்ல, விரைவில் முரண்பட்டுள்ளது. இந்தப் படுகொலை “அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது” என்பதற்கான தெளிவான மற்றும் வேண்டுமென்றே சமிக்ஞையை அனுப்பும் வகையில், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் தங்கள் இறக்கைகளின் கீழ் குண்டுகளுடன் புறப்படும் படங்களை இஸ்ரேல் விரைவாக வெளியிட்டது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் விரைவாகவும் பகிரங்கமாகவும் நஸ்ரல்லாவின் கொலைக்கு ஒப்புதல் அளித்து, “இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவரது மரணம் அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கையாகும்” என்று அறிவித்தார். “ஹஸ்புல்லா, ஹமாஸ், ஹவுத்திகள் மற்றும் பிற ஈரானிய ஆதரவு பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா முழுமையாக ஆதரிக்கிறது” என்று பைடென் மேலும் கூறினார். “ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் மற்றும் ஒரு முழு அளவிலான பிராந்தியப் போரின் அபாயத்தைக் குறைக்கவும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவப் படைகளின் பாதுகாப்பு நிலைகளை தொடர்ந்து பலப்படுத்துமாறு எனது பாதுகாப்புச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நெருக்கடிக்கு ஒரு “போர்நிறுத்தம்”, “போர் விரிவாக்கத்தை குறைத்தல்” மற்றும் ஒரு “அமைதியான தீர்வை” நாடுவதாக பைடென் நிர்வாகம் மீண்டும் மீண்டும் கூறுவது, ஈரானை இலக்கில் வைக்கும் ஒரு பிராந்திய போருக்கு எரியூட்டுவதற்கான வெள்ளை மாளிகையின் நிஜமான இலக்கை எளிதாக்கும் நோக்கம் கொண்ட வெறுமனே போர்க்கால தவறான தகவல்களாகும். அமெரிக்காவால் நிதியுதவி மற்றும் ஆயுதம் வழங்கப்பட்டுவரும் நெதன்யாகுவின் அரசாங்கம், ஒரு சுயாதீனமான நடிகர் அல்ல, மாறாக அமெரிக்காவின் பினாமியாக செயல்பட்டு வருகிறது.

விமர்சன ரீதியாக, ஈரானுடனான போரை அச்சுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அவர் போர்வெறிக் கொச்சைப் பிரகடனத்தை வெளியிட்ட நாளில், நியூ யோர்க் நகரத்தில் இருந்து நஸ்ரல்லாவைக் கொலை செய்ய நெதன்யாகு உத்தரவிட்டார். “இஸ்ரேலின் நீண்ட கரம் எட்ட முடியாத இடம் ஈரானில் மட்டும் இல்லை. அது முழு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பொருந்தும்,” என்று அவர் அச்சுறுத்தினார்

ஐக்கிய நாடுகள் சபையில் நெதன்யாகுவின் உரை, மத்திய கிழக்கை மறு ஒழுங்கு செய்வதற்கான அமெரிக்கா தலைமையிலான உந்துதலின் பாகமாக காஸா இனப்படுகொலை மற்றும் லெபனானில் இஸ்ரேலின் படுகொலை தாக்குதலின் பாத்திரத்தை அப்பட்டமாக விளக்கியது.

அக்டோபர் 7, 2023 ஹமாஸின் தாக்குதல்களுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, செப்டம்பர் 22, 2023 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு வருடத்திற்கு முன்பு அவர் காட்சிப்படுத்திய வரைபடத்தை நெதன்யாகு மையமாகக் குறிப்பிட்டார். ஒருவித இஸ்ரேலிய சாம்ராஜ்யத்தில், அமெரிக்காவுடன் இணைந்த மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, சூடான், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியாவுடன் புவிசார் அரசியல் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, பாலஸ்தீனப் பகுதிகள் அனைத்தையும் இஸ்ரேல் உள்ளடக்கியதாக அந்த வரைபடம் காட்டியது.

“இது கடந்த ஆண்டு நான் இங்கு வழங்கிய வரைபடம். இது ஒரு ஆசீர்வாதத்தின் வரைபடம். இஸ்ரேலும் அதன் அரபு கூட்டாளிகளும் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் ஒரு நிலப்பாலத்தை உருவாக்குவதை இது காட்டுகிறது” என்று நெதன்யாகு கூறினார்.

பின்னர் அவர் லெபனான், ஈரான், சிரியா மற்றும் ஈராக் ஆகியவற்றை அடையாளம் காட்டும் இரண்டாவது வரைபடத்தை உயர்த்திப் பிடித்தார். “இப்போது இந்த இரண்டாவது வரை படத்தைப் பாருங்கள். இது ஒரு சாபத்தின் வரைபடம். இந்தியப் பெருங்கடலில் இருந்து மத்திய தரைக்கடல் வரை ஈரான் உருவாக்கி திணித்துள்ள பயங்கரவாத வளைவின் வரைபடம் இது,” இஸ்ரேல் இந்த “சாபத்தை நீக்குவதில் உறுதியாக “ உள்ளது என்று அவர் கூறினார்.

“அமெரிக்காவின் ஆதரவு மற்றும் தலைமையுடன், இந்த பார்வை மக்கள் நினைப்பதை விட மிக விரைவில் பலனளிக்கும் என்று நான் நம்புகிறேன் ‘’ என்று நெதன்யாகு அறிவித்தார்.

நெதன்யாகு விவரித்த “புதிய மத்திய கிழக்கு” என்பது, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போர் மற்றும் சீனாவை இலக்கில் வைத்து பசிபிக்கில் அமெரிக்க இராணுவ ஆயத்தப்படுத்தல் உட்பட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய போர் முனைவின் ஒரு இன்றியமையாத கூறுபாடாகும். அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி பதிலடி கொடுக்க ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை முகங்கொடுக்கும் நிலையில், ரஷ்யாவிற்குள் ஆழமான நேட்டோ ஆயுதங்களின் தாக்குதல்களை அமெரிக்கா அங்கீகரிக்கும் தருவாயில் இருக்கும் போது, நஸ்ரல்லாஹ்வின் படுகொலை நடந்துள்ளது.

உலகெங்கிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னர் உலகளாவிய போர் நடத்துவதற்கு மட்டுப்படுத்தி வைத்திருந்த ஒவ்வொரு “சிவப்புக் கோட்டையும்” வேண்டுமென்றே கடந்து வருகிறது.

இந்த படுகொலையில் பங்கேற்ற இஸ்ரேலிய விமானியின் பிரகடனம், “எல்லோரையும், எல்லா இடங்களிலும் நாங்கள் சென்றடைவோம்” என்பது, உண்மையில், வலிமையின் மூலம் உலகை மீண்டும் கைப்பற்ற முற்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழக்கமாகும். பயங்கரவாதம், படுகொலை மற்றும் இனப்படுகொலை உட்பட ஒவ்வொரு போர்க்குற்றமும் இயல்பாக்கப்பட்டு வருகின்றன.

நஸ்ரல்லாவின் படுகொலை ஹிஸ்புல்லா மற்றும் ஈரானின் மற்ற நட்பு நாடுகளை இலக்கு வைத்து இஸ்ரேல் முடுக்கிவிட்ட தொடர்ச்சியான கொடிய குண்டுவீச்சுக்கள், படுகொலைகள் ஆகியவற்றில் சமீபத்தியது மட்டுமே. செப்டம்பர் 17 மற்றும் 18 தேதிகளில், ஹிஸ்புல்லா தலைவர்கள் பயன்படுத்திய தகவல் தொடர்பு சாதனங்களுக்குள் தான் கடத்தி வைத்திருந்த ஆயிரக்கணக்கான குண்டுகளை இஸ்ரேல் வெடிக்கச் செய்தது. ஒரு வாரத்திற்கு முன்னர், இஸ்ரேல் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி இப்ராஹிம் அகிலை (Ibrahim Aqil) பெய்ரூட்டில் கொன்றது. ஹமாஸின் அரசியல் அலுவலகத் தலைவரான இஸ்மாயில் ஹனியா ஈரானில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வுகள் நடந்துள்ளன.

ஹிஸ்புல்லாவின் மூத்த உறுப்பினர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடந்து கொண்டிருக்கும் வெறியாட்டத்திற்கு மத்தியில், அதன் தலைவர் எப்படி பெய்ரூட்டின் மையத்தில் ஒரு உயர்மட்ட கூட்டத்தை நடத்த முடியும்? அமெரிக்காவும் இஸ்ரேலும் பெய்ரூட்டின் மையப்பகுதியில் இத்தகைய பாரிய தாக்குதலை நடத்தத் துணிய மாட்டார்கள் என்று நஸ்ரல்லா நம்பினார். இந்த தவறான கணக்கீடு ஒரு திவாலான அரசியல் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டது – இந்த முன்னோக்கு லெபனான், சிரியா மற்றும் ஈரான் அரசாங்கங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

காஸா மீதான இனப்படுகொலை மற்றும் லெபனான் மீதான தாக்குதலுக்கு மத்திய கிழக்கு நாடுகளின் விடையிறுப்பு, முதலாளித்துவ தேசியவாதத்தின் திவாலான தன்மையை வெளிப்படுத்துகிறது.

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகளாக இருக்கும் எகிப்து மற்றும் சவூதி அரேபியா போன்ற சில நாடுகள் காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் மத்திய கிழக்கின் காலனித்துவ துண்டாடலுக்கு உதவி வருகின்றன. ஈரான் போன்ற இதர நாடுகள், ஏகாதிபத்திய சக்திகளுடன் தொடர்ந்து சமரசம் செய்து கொண்டு, ஒருவித பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியில், அவற்றை அப்படியே விட்டுவிடுகின்றன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொள்ள அவநம்பிக்கையுடன் இருக்கும் அவர்கள், தமக்கு எதிரான எந்தவொரு தீவிரமான போராட்டத்தின் புரட்சிகர தாக்கங்கள் குறித்து பீதியில் உள்ளார்கள்.

லியோன் ட்ரொட்ஸ்கி, தனது 1927 கட்டுரையில் “சீனப் புரட்சியும் தோழர் ஸ்டாலினின் கோட்பாடுகளும்” என்ற கட்டுரையில், பின்தங்கிய நாடுகளிலுள்ள முதலாளித்துவத்தின் பிரதான அக்கறை தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக அதன் செல்வத்தையும் சலுகைகளையும் பாதுகாப்பதாகும் என்று விளக்கினார். “ஏகாதிபத்தியம் சீனாவின் அனைத்து வகுப்புகளையும் இயந்திரத்தனமாக ஒன்றாக இணைக்கிறது என்று நினைப்பது மிகப்பெரிய தவறு…. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டம் வலுவிழக்கவில்லை, மாறாக வர்க்கங்களின் அரசியல் வேறுபாட்டை பலப்படுத்துகிறது” என்று ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார்.

ஈரானிய, சிரிய மற்றும் லெபனானிய ஆளும் வர்க்கங்கள், சீனாவில் சியாங் கே ஷேக் (Chiang Kai Shek) இருந்ததைப் போலவே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு முறையான போராட்டத்தை நடத்துவதற்கு அதிக இலாயக்கற்றவையாக இருந்து வருகின்றன.

லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாட்டின் அடிப்படையில் மட்டுமே ஒரு புரட்சிகர மாற்றீட்டை உருவாக்க முடியும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரமான தாக்குதல் நாயான சியோனிசத்துடன் கணக்குத் தீர்த்துக் கொள்ளுதல் என்பது மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும் தொழிலாள வர்க்க இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மட்டும்தான் அடையப்பட முடியும்.

போருக்கு எதிரான இயக்கம் சர்வதேச சோசலிச முன்னோக்கினால் கட்டாயம் உயிரூட்டப்பட வேண்டும். அது ஏகாதிபத்தியப் போர், காலனித்துவம் ஆகியவற்றுடன் பிரிக்க முடியாமல் பிணைந்துள்ள காலாவதியாகிவிட்ட தேசிய அரசு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்குப் பதிலாக சோசலிசத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

Loading