சோ.ச.க. (இலங்கை) ஜனாதிபதி தேர்தல் கூட்டம்: போருக்கும் சிக்கன வெட்டுக்களுக்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக சர்வதேச சோசலிசத்திற்காகப் போராடுவோம்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், செப்டெம்பர் 18 மாலை 4 மணிக்கு, கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கூட்டத்தை நடத்துகின்றன. தேர்தலானது செப்டம்பர் 21 அன்று நடக்கவிருக்கின்றது.

சோ.ச.க. தனது ஜனாதிபதி வேட்பாளராக, கட்சியின் நீண்டகால தலைவர்களில் ஒருவரான பாணி விஜேசிறிவர்தனவை களமிறக்கியுள்ளது. சோசலிச மற்றும் அனைத்துலகவாத முன்னோக்கில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான சோ.ச.க.யின் வேலைத்திட்டத்திற்காக போராடுவதில், அவருக்கு ஐந்து தசாப்த கால அனுபவம் உள்ளது.

எங்கள் கட்சி மட்டுமே உண்மையைப் பேசுவதோடு தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான சூழ்நிலை பற்றியும் ஒரு புரட்சிகர சோசலிச மாற்றீட்டுக்காக போராட வேண்டியதன் அவசியத்தையும் விளக்குகிறது.

ஜனாதிபதித் தேர்தலானது, இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் முதலாளித்துவ முறைமையின் வேகமாக ஆழமடைந்துவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் மத்தியிலேயே நடைபெறுகிறது.

இலங்கை அரசாங்கமும், உலகெங்கிலும் உள்ள அதன் சமதரப்பினரைப் போலவே உழைக்கும் மக்கள் மீது, சுமைகளைச் சுமத்துகிறது. விலைவாசி உயர்த்தப்படுவதோடு, பரந்தளவில் தொழில்கள் அழிக்கப்படுவதுடன் அத்தியாவசிய சேவைகள் வெட்டித் தள்ளப்படுகின்றன.

இப்போது உக்ரேனில், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், மூன்றாவது ஆண்டிலும் தொடர்வதுடன் உக்கிரமாக்கப்படுகிறது. அமெரிக்க ஆதரவுடன் காஸாவில் நடத்தப்படும் இஸ்ரேலிய இனப்படுகொலைப் போர், ஈரானைக் குறிவைத்து, மத்திய கிழக்குப் போராக விரிவடைந்து வருகிறது. வாஷிங்டன், ஆசியாவில், சீனாவிற்கு எதிரான போருக்கு தயாராகி வருகிறது. இந்த மூன்று போர் முனைகளும் அணுஆயுத சக்திகள் சம்பந்தப்படும் பேரழிவு தரும் பூகோள மோதலாக ஒன்றிணைகின்றன.

கோவிட்-19 தொற்றுநோய், உலகளவில் ஏற்கனவே 28 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது. அனைத்து அரசாங்கங்களும் 'அதைத் தொடர அனுமதிக்கும்' குற்றவியல் கொள்கையை பின்பற்றியதன் விளைவாக அது தொடர்ந்து உயிர்களைப் பறிக்கின்றது.

இலங்கையில் விலைவாசி உயர்வு மற்றும் கடுமையான தட்டுப்பாடுகளின் பேரழிவுத் தாக்கத்தால் எரியூட்டப்பட்ட 2022 ஏப்ரல்-ஜூலை வெகுஜன எழுச்சியானது, தொழிலாள வர்க்கத்தின் பலம், பலவீனம் இரண்டையும் நிரூபித்தது. அவசரகால விதியை மீறி இலட்சக்கணக்கானோர் போராட்டங்களில் இணைந்து, ஜனாதிபதி இராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேறி ராஜினாமா செய்ய நிர்பந்தித்தனர்.

எவ்வாறாயினும், இந்த எழுச்சியானது அரசியல் ரீதியாக, தொழிற்சங்கங்களாலும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடதுகளாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அவை, ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற எதிர்க்கட்சிகளின் 'இடைக்கால அரசாங்கம்', உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரமாண்டமான பிரச்சினைகளை தீர்க்கும் என்ற மாயையை ஊக்குவித்தன.

அதன் விளைவு என்ன? வெகுஜன ஆதரவு இல்லாத, ஒரு சிரேஷ்ட அமெரிக்க-சார்பு மற்றும் சர்வதேச நாணய நிதிய சார்பு அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான மற்றொரு முதலாளித்துவ அரசாங்கம், பாராளுமன்றத்தால் ஜனநாயக விரோதமாக நிறுவப்பட்டது. அவர், எதிர்கட்சிகளான ஐ.ம.ச., ஜே.வி.பி., அத்தோடு தொழிற்சங்கங்கள் உட்பட, முழு கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தினதும் உடன்பாட்டுடன், சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன திட்ட நிரலை திணித்துள்ளார்.

தனியார்மயமாக்கல், வேலை அழிப்பு, மானியங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் வெட்டுக்கள் போன்ற சர்வதேச நாணய நிதியத்தின் (ச.நா.நி.) வேலைதிட்டமானது, பரவலான வேலைநிறுத்தங்களையும் எதிர்ப்புகளையும் விளைவாக்கியுள்ளது. ஆனால், விக்கிரமசிங்கவிற்கும் அவரது அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் எதிராக எந்தவொரு சவாலும் விடுப்பதை எதிர்க்கும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள், மீண்டும் மீண்டும் இந்தப் போராட்டங்களை காட்டிக்கொடுக்கின்றன.

உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரமாண்ட பிரச்சினைகளுக்கு, முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் தீர்வு இல்லை என்று, சோ.ச.க. வலியுறுத்துகிறது. இலாப முறைமையின் அனைத்து பாதுகாவலர்களுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காகவே நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் நிற்கின்றோம்.

தொழிலாள வர்க்கம் தேவையான படிப்பினைகளையும் முடிவுகளையும் எடுப்பதோடு, வரவிருக்கும் போராட்டங்களுக்கு தயாராக வேண்டும். பலம்பொருந்திய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை யார் வென்று அடுத்த அரசாங்கத்தை அமைத்தாலும், அது உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தும்.

தொழிலாள வர்க்கம், விடயங்களைத் தனது கைகளில் எடுத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே, அதன் வர்க்க நலன்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். அனைத்து முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாகி, ஒவ்வொரு வேலைத் தளங்களிலும் புறநகர் பகுதிகளிலும் நடவடிக்கை குழுக்களை நிறுவுமாறு தொழிலாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

சோ.ச.க. பின்வரும் கோரிக்கைகளுக்காக போராட தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது:

ச.நா.நி. சிக்கன நடவடிக்கையை நிராகரி! அனைத்து வெளிநாட்டு கடன்களையும் தள்ளுபடி செய்!

செல்வத்தை பரவலாக மறுபகிர்வு செய்வது அவசியம்: வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதற்காகப் போராடு!

கிராமப்புற விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் மானியங்களும் சமூக திட்டங்களையும் வழங்கு!

சோ.ச.க. தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காகப் போராடுகிறது. அனைத்து வகையான இனவாதம், வகுப்புவாதம் மற்றும் தேசியவாதத்தையும் நிராகரி!

ச.நா.நி. திட்ட நிரலுக்கு எதிராக ஒரு அரசியல் மற்றும் தொழில்துறை பிரச்சாரத்தை ஏற்பாடு செய்யவும், ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கான அடித்தளத்தை அமைக்கவும், நடவடிக்கை குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டிற்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட அதே கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சர்வதேச அளவில் வாழும் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளே இலங்கைத் தொழிலாளர்களின் கூட்டாளிகள் ஆவர். போர், சமூக நெருக்கடி மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் ஐக்கியம் அவசியமாகும்.

எமது தேர்தல் கூட்டத்தில், பேச்சாளர்கள் சோ.ச.க.யின் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை தெளிவுபடுத்துவார்கள். அது இந்த அரசியல் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கு உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்குமான அரங்கம் ஆகும். தங்களையும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading