வர்க்கப் போராட்டங்களை எதிர்வரும் தேர்தல்களுக்கு அடிபணியச் செய்யும் இலங்கை தொழிற்சங்கங்களின் முயற்சியை எதிர்த்திடு! அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தயார் செய்! சோசலிச கொள்கைகளுக்காகப் போராடு!

இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து, பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் பங்குபற்றும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்களில் புகையிரதம், தபால், மின்சாரம், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அரச பாடசாலை ஆசிரியர்களும் அடங்குவர்.

இந்த வாரம், திங்கள் மற்றும் செவ்வாய் நாட்களில் ஆயிரக்கணக்கான அரச பாடசாலை கல்விசாரா ஊழியர்கள் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அதே வேளை, 250,000 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று சுகயீன விடுப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளனர். அரச பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் எட்டாவது வாரத்தை எட்டியுள்ளது. வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் தொடர்ச்சியாக சீரழிந்து வருவது குறித்து தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் கோபத்தின் மத்தியில், தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன.

18 ஜூன் 2024 அன்று பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

இந்த போராட்டங்களில் பல, ஊதிய உயர்வு கோரியும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை (SOE) தனியார்மயமாக்குவதற்கு எதிராகவும், பொது சுகாதாரம் மற்றும் கல்விக்கான நிதியை வெட்டுவதற்கு எதிராகவும் இடம்பெறுகின்றன. இந்தக் கோரிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) உத்தரவிடப்பட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூரமான சிக்கனத் திட்டத்துடன் நேரடியாக முரண்படுகின்றன. சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் நோக்கம், நாட்டில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் சுமையை வெகுஜனங்களின் மீது சுமத்தி, பெரும் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை உறுதிசெய்ய அரச வருமானத்தை குவிப்பதும் மற்றும் பெருவணிகத்தின் இலாபத்தை அதிகரிப்பதுமே ஆகும்.

எவ்வாறாயினும், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், தேர்தல்கள் நெருங்கும் நிலையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்கள், தொழில்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை பாதுகாக்க முடியும் என்று பொய்யாகக் கூறி, இந்த எதிர்ப்புகளை ஒன்றுக்கொன்று தனிமைப்படுத்தப்பட்ட, சிறிய மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட செயல்களாக முன்னெடுத்து வருகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைமையிலான தொழிற்சங்கங்களும் அவற்றின் ஆதரவாளர்களும், தொழிலாளர்கள் தங்கள் தொழில்துறை போராட்டங்களை நிறுத்திவிட்டு, தீர்வுகளைப் பெறுவதற்காக தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) வேட்பாளரை வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என நேரடியாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களைத் தடம் புரட்டி முதலாளித்துவ பாராளுமன்ற கட்டமைப்பிற்கு அடிபணியச் செய்ய மேற்கொள்ளும் முயற்சிகளை நிராகரிக்குமாறு இலங்கை தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினரின் எதிர்ப்புகளும் வேலைநிறுத்தங்களும் விக்கிரமசிங்க ஆட்சியின் சிக்கன நடவடிக்கைகளை தோற்கடிக்க ஒரு பொதுவான போராட்டத்தை நடத்த வேண்டியதன் புறநிலை தேவையை சுட்டிக்காட்டுகின்றன.

தொழிலாளர்களின் ஊதியங்கள், தொழில்கள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் பொது சுகாதாரம், கல்வி மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடவும் ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்தை தயார் செய்யுமாறு தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. விக்கிரமசிங்க ஆட்சிக்கு எதிராகவும் முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறியவும் ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்காமல் இந்த உரிமைகள் எதையும் அவர்களால் பாதுகாக்க முடியாது.

12 ஜூன் 2024 அன்று அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் சிலாபம் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது

இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியம் அதன் 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனில் இருந்து 336 மில்லியன் டொலர்களை மூன்றாவது தவணையாக விடுவித்தது. ஜூன் 14 அன்று, இலங்கைக்கான அதன் சிரேஷ்ட அதிகாரி பீட்டர் புரூயர், சில சாதகமான முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், “பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடியது மற்றும் கடன் நிலைத்தன்மைக்கான பாதை கத்தி முனையிலேயே உள்ளது” என்றார்.

சில அரசியல் கட்சிகள் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை பற்றி “மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று, பிரச்சாரம் செய்வது சம்பந்தமான கேள்விகளுக்குப் பதிலளித்த புரூயர், “சீர்திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கொள்ள எதிர்வரும் காலத்தில் பிரதானமாக முன்னுரிமை கொடுக்க வேண்டும்...” என எச்சரித்தார்.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் (ஐ.ம.ச.) ஜே.வி.பி.யின் தேர்தல் முன்னணியான தே.ம.ச.யும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை பற்றி “மறு பேச்சுவார்த்தை நடத்துவதாக” வாய்ச்சவடால் விடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் இலங்கை தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை முழுமையாக அமுல்படுத்த அர்ப்பணித்துக்கொண்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் உக்ரேனைப் பயன்படுத்தி ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா மற்றும் நேட்டோ போரை உக்கிரமாக்கியமை மற்றும் ஏகாதிபத்திய ஆதரவுடன் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலிய இனப்படுகொலைப் போராலும் தீவிரமாக்கப்பட்ட பூகோள பொருளாதார நெருக்கடியின் கூர்மையான வெளிப்பாடே இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஆகும். இவை, ஏகாதிபத்திய சக்திகள் பேரழிவுகரமான மூன்றாம் உலகப் போரை நோக்கி பூமியை நகர்த்துவதன் ஒரு பாகமாகும்.

நெருக்கடியின் விளைவாக 2021 இல் 13 சதவீதமாக இருந்த இலங்கையின் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகை, 2023 இல் 25 சதவீதமாக இருமடங்காக அதிகரித்துள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. தொடரும் சிக்கன நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கும். சர்வதேச நாணய நிதிய கடனின் மூன்றாவது தவணையுடன், சொத்து வரி உட்பட மேலதிக வரிகளை விதிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது. சொந்த வீடு வாங்குவதற்கு பணம் செலுத்தும் நபர்களுக்கும் வரி விதிக்கப்படும். அத்துடன் சேவைகளுக்கான வரி விலக்கு நீக்கப்பட்டது.

கல்வி சாரா ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்த ஜனாதிபதி, எந்தவொரு அரச துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என்றும், 2025 இல் மட்டுமே அவற்றை பரிசீலிக்க முடியும் என்றும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொழிலாள வர்க்கத்தின் இழப்பில், சர்வதேச மூலதனத்துக்கும் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் 2022 ஏப்ரலில் இருந்து கொடுக்க முடியாமல் போன வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதே முதலாளித்துவ வர்க்கத்தின் ஒருமித்த நோக்கமாகும். அதற்கான பணத்தை திரட்ட, சமூக நலனுக்கு இன்றியமையாத செலவினங்களுக்கான நிதியை அரசாங்கம் மேலும் குறைக்கவும் அரச நிறுவனங்களை விற்கவும் வேண்டும். அத்துடன் வரிகளை உயர்த்த வேண்டும்.

முதலாளித்துவ முறைமையைப் பேணுவதற்காக பயன்படுத்தப்பட்ட, அடுத்தடுத்த முதலாளித்துவ அரசாங்கங்களால் பெறப்பட்ட இந்த பெரும் வெளிநாட்டுக் கடன்களுக்கோ அல்லது முதலாளித்துவ நெருக்கடிக்கோ தொழிலாள வர்க்கம் பொறுப்பல்ல.

தங்கள் ஊதியங்கள், வேலைகள், ஓய்வூதியங்கள், பொது சுகாதாரம், கல்வி மற்றும் பிற சமூக நலத் திட்டங்களை தியாகம் செய்து முதலாளித்துவ நெருக்கடியை ஏன் தொழிலாள வர்க்கமும் ஏழைகளும் சுமக்க வேண்டும்? ஏற்கனவே, சிக்கனத் தாக்குதல்கள், வெகுஜனங்களின் சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகளை தாங்க முடியாத அளவிற்குத் தரைமட்டமாக்கியுள்ளன.

விக்கிரமசிங்க ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்தோ அல்லது எந்த முதலாளித்துவ அரசாங்கத்தின் கீழேயோ தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க முடியாது. ஆயினும், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் இவற்றை மட்டுமே மாற்று வழிகள் என்று வலியுறுத்துகின்றன.

ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்கவேண்டுமாயின் அதன் முன்னணியான தே.ம.ச. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டுமென்று கூறி வருகின்றன. உதாரணமாக, ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள துறைமுக

தொழிற்சங்க கூட்டு மற்றும் அகில இலங்கை துறைமுக தொழிலாளர் பொது சங்கத்தின் தலைவர் நிரோஷன் கொரகான, தொழிலாளர்களுக்கு விடுத்த அறிக்கையில், “உங்களுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே உள்ளன” என்று விக்கிரமசிங்கவை எச்சரித்தார். “அன்பு சகோதர சகோதரிகளே, அந்த நாள் விடியும் வரை எங்களால் முடிந்ததைச் செய்வோம்” என்று அதே மூச்சில் அவர் தொழிலாளர்களிடம் கூறினார்.

இலங்கை மின்சார சபையை கலைப்பதற்கான புதிய மின்சார சட்டமூலம் ஜூன் 6 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது, ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன ஜயலால், “இந்த அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டும், அவர்கள் தோல்விக்கு தகுதியானவர்கள்” என்று கூறி அதற்கு நான்கு மாதங்கள் மட்டுமே உள்ளன என்று நினைவுபடுத்தினார்.

4 ஜனவரி 2024 அன்று இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டம்

ஜே.வி.பி.யின் போக்கை பின்பற்றி இந்த இரண்டு தொழிற்சங்கத் தலைவர்களும், அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக எந்தவொரு வர்க்க நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், ஜனாதிபதி தேர்தல் வரும் வரை காத்திருங்கள் என்று கூறுகின்றனர்.

இலங்கையில் 2022 வெகுஜன எழுச்சியில் இருந்து தொழிலாள வர்க்கம் ஒரு மகத்தான அனுபவத்தைப் பெற்றுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ அரசாங்கம் எழுச்சி பெறும் போராட்ட அலைகளை எதிர்கொண்ட வேளை, தொழிற்சங்கங்கள் இரண்டு ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்ததுடன், முதலாளித்துவ ஆட்சியைக் காப்பாற்ற “இடைக்கால அரசாங்கம்” ஒன்றை அமைக்க ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. விடுத்த அழைப்புக்கு ஆதரவாக தொழிலாளர்களை திசை திருப்பியது. போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சி இந்தப் பிரச்சாரத்தை முழுமையாக ஆதரித்தது. முதலாளித்துவக் கட்சிகளுக்கு தொழிலாளர்களை அரசியல் ரீதியாக அடிபணிய வைத்தமையே வெகுஜன எழுச்சியின் தோல்விக்கு பிரதான காரணமாகும்.

இத்தகைய தோல்வியைத் தவிர்க்க, தொழிலாளர்கள் தங்கள் இன்றியமையாத கோரிக்கைகளுக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு அரசியல் பொது வேலைநிறுத்தத்தைத் தயாரிக்க வேண்டும். தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவர்கள் இணைந்திருக்கும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக, வேலைத்தளங்கள், தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள் ஆகியவற்றில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைக்க நாங்கள் அழைப்புவிடுக்கின்றோம்.

அரசியல் பொது வேலைநிறுத்தத்தின் உந்து சக்தியாக பின்வரும் முக்கிய கோரிக்கைகளை சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிகிறது:

* சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட அனைத்து சிக்கன நடவடிக்கைகளையும் அகற்று!

* அனைத்து தொழிலாளர்களுக்கும் 100,000 ரூபாயில் இருந்து வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப வாழ்வதற்குப் பொருத்தமான ஊதியத்தை உத்தரவாதம் செய்.

* அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்! கடன்களைச் செலுத்துவதற்குப் பதிலாக, உழைக்கும் மக்களுக்குத் தேவையான உணவு, எரிபொருள், மின்சாரம், தண்ணீர், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் வீதங்களையும் குறைக்க நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.

* பயனுள்ள கல்வி, கெளரவமான சுகாதாரம் மற்றும் கிராமப்புற விவசாயிகளுக்கு உரம் மற்றும் விவசாயிகளின் அறுவடைக்கு போதுமான விலையையையும் உத்தரவாதம் செய்ய போதுமான நிதியை ஒதுக்குவதற்கு அனைத்து மானியங்களையும் மீண்டும் வழங்கு!

* உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் தொழில்களை வழங்குவதற்கும் பெருவணிகங்களைக் கைப்பற்றி அவற்றைத் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் வைத்திடு!

* கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வேலைச் சூழலுடன் அனைவருக்கும் தொழில்களை உத்தரவாதம் செய்!

* கிராமப்புற விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் கடன்களை ரத்து செய்!

ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்தின் வெற்றிக்கு, தீவு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை கட்டியெழுப்ப முன்னோக்கிச் செல்வது அவசியம். சோசலிச சமத்துவக் கட்சி முதலாளித்துவத் தாக்குதலை எதிர்கொள்ள இந்த வேலைத்திட்டத்தை 2022 ஜூலையில் வெகுஜன எழுச்சியின் போது தொடங்கி வைத்தது.

தொழிலாளர்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை செயல்படுத்தும் ஆளும் கட்சிகளின் முதலாளித்துவ அரசாங்கம் அல்லது எதிர்கட்சியான ஐ.ம.ச அல்லது ஜே.வி.பி. அல்லது வேறு எந்த அரசாங்கமும் தேவையில்லை. மேற்கண்ட வேலைத் திட்டத்தை செயல்படுத்தும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கமே அவர்களுக்கு அவசியம்.

முதலாளித்துவ அரசை தூக்கியெறிந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் தொழிலாள வர்க்க புரட்சிகர சக்தியை ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாடு தயாரித்து அணிதிரட்டும்.

இந்தப் போராட்டத்தில் தங்களின் சமூக உரிமைகளைப் பாதுகாக்கவும் போருக்கு எதிராகவும் போராடும் சர்வதேச வர்க்க சகோதர, சகோதரிகளுடன் இலங்கையில் போராடும் தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும் என்பதை உணர வேண்டும்.

இந்தப் போராட்டமானது உலக முதலாளித்துவத்தின் பொருளாதார மேலாதிக்கத்திற்கு எதிராகவும், உலகை அணுவாயுத பேரழிவுக்கு இழுத்துச் செல்வதற்கும் எதிரான, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த ஒரு போராட்டமாக உருவாக்கப்பட முடியும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் கூட்டணியுடன் இலங்கையில் உள்ள நடவடிக்கைக் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

இந்த புரட்சிகர வேலைத்திட்டத்திற்காக போராட சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்:

Loading