முன்னோக்கு

பைடென் பிரச்சாரத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இருந்து ஜனாதிபதி ஜோ பைடென் விலகிக்கொண்டமை, அமெரிக்காவின் அரசியல் நெருக்கடியின் பரந்த பரிமாணத்தின் மேலும் ஒரு வெளிப்பாடாகும். ஒன்பது நாட்கள் இடைவெளிக்குள், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ள அதே நேரம், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி தனது மறுதேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

17 ஜூலை 2024 புதன்கிழமை, டெலாவேரில் உள்ள டோவர் விமானப்படை தளத்தில் ஏர் ஃபோர்ஸ் ஒன் படிகளில் ஜனாதிபதி ஜோ பைடென் இறங்கிச் செல்கிறார். [AP Photo/Susan Walsh]

ஜூன் 27 அன்று டிரம்புடனான விவாதத்தில் அவரது பேரழிவுகரமான ஆற்றுகையைத் தொடர்ந்து, பைடென் போட்டியில் இருந்து விலகப் போவதில்லை என்று வாரக்கணக்காக அறிவித்துக்கொண்டிருந்தார். இருப்பினும், அவர் இறுதியாக கட்சியின் உயர்மட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பில்லியனர் நன்கொடையாளர்களின் ஒருங்கிணைந்த அழுத்தத்திற்கு அடிபணிந்தார். துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த பைடென் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இறுதி முடிவு நிதிய தன்னலக்குழு மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் பிரதிநிதிகளின் கைகளிலேயே உள்ளது.

அதன் ஏழாவது மாதத்தில், 2024 ஏற்கனவே வியட்நாம் போர், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் ரொபர்ட் எஃப். கென்னடியின் படுகொலைகள், ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் தனது மறுதேர்தல் பிரச்சாரத்தை கைவிடுவதற்கான முடிவு ஆகியவற்றால் அமெரிக்க அரசியல் தலைகீழாகிய 1968 நெருக்கடி ஆண்டை ஏற்கனவே நினைவுபடுத்துகிறது. எவ்வாறெனினும், இன்று அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி மிகவும் ஆழமானதுடன் இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.

பாசிச பிற்போக்கு, புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு வெறி மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதத்தினதும் களியாட்டமாக இருந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டைத் தொடர்ந்தே பைடென் விலகிக் கொண்டுள்ளார். கலாச்சார, ஒழுக்கம் மிகவும் இழி நிலைக்குத் தள்ளப்பட்ட இந்த மாநாடு, மாகா  (Make America Great Again - MAGA ) இயக்கம் குடியரசுக் கட்சியை கையகப்படுத்தியதை, அதாவது அதை அமெரிக்க பாசிசத்தின் கட்சியாக ஆக்குவதை நிறைவு செய்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அரசியலமைப்பை தூக்கியெறிந்து, பைடென் மற்றும் ஹாரிஸுக்கு அதிகாரம் மாற்றப்படுவதைத் தடுக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால், ட்ரம்ப் அவமானத்துடன் பதவியை விட்டு வெளியேறினார். ஆனால் இன்று, எலோன் மஸ்க் போன்ற பில்லியனர்கள் உட்பட, அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் கணிசமான பகுதியினரின் ஆதரவை டிரம்ப் பெற்றுள்ளார். ஒரு பாசிச ஆட்சி சாத்தியம் என்பது வெகுதூரத்தில் இருப்பதாக ஊகிக்கக்கூடிய விஷயம் அல்ல. இது ஒரு அரசியல் யதார்த்தம் ஆகும்.

டிரம்ப், தற்போது தேசிய வாக்கெடுப்புகளிலும், தேர்தல் வாக்குகள் தீர்க்கமானதாக இருக்கும் “போர்க்களம்” எனக் கூறக்கூடிய மாநிலங்களிலும் முன்னிலை வகிக்கிறார். இது குடியரசுக் கட்சியினரால் பரிந்துரைக்கப்படும் பாசிசக் கொள்கைகளுக்கு வெகுஜனங்கள் ஆதரவு தருவதால் எழவில்லை. மாறாக, ஜனநாயகக் கட்சியின் பிற்போக்குத் தன்மை, வெளிநாடுகளில் அதன் போர்க் கொள்கைகள் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களும், டிரம்பின் துணை ஜனாதிபதி வேட்பாளரான செனட்டர் ஜே.டி. வான்ஸால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வலதுசாரி போலி-ஜனரஞ்சகவாதத்திற்கு பெருமளவிலான தொழிலாளர்களை ஈர்க்கச் செய்துள்ளது.

ஜனநாயகக் கட்சி நீண்ட காலத்திற்கு முன்பே உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை முன்னேற்றும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுடனான தொடர்பைக் குறிப்பிடத்தக்களவு கைவிட்டது. வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை அமைப்புகளின் ஒரு கட்சியான அது, எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறது. இது தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதையும் உயர் மத்தியதர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவினரின் நலன்களை முன்னேற்றுவதையும் இலக்காகக் கொண்ட அடையாள அரசியலை ஊக்குவிப்பதுடன் இணைந்துள்ளது.

பைடெனின் விலகல் பற்றிய ஊடகங்கள் மற்றும் அரசியல் வர்ணனைகளில், ஜனாதிபதியாக அவரது “சிறந்த சாதனை” பற்றிய குறிப்புகள் எங்கும் நிரம்பியுள்ளன.

உண்மையில், ஊதியங்கள், பணவீக்கம் மற்றும் வெளிநாடுகளில் முடிவில்லாத போரின் விளைவுகளை எதிர்கொள்கின்ற தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் பைடென் நிர்வாகத்தை புறக்கணிக்கின்றன.

மாகா அமைப்பிலிருந்து பாசிசத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட அச்சுறுத்தலைச் சமாளிக்க பைடெனின் ஜனாதிபதி பதவிக்கு நான்கு ஆண்டுகள் இருந்த போதிலும் அது மோசமாக தோல்வியடைந்துள்ளது. டிரம்ப்பால் தூண்டப்பட்ட ஜனவரி 6 கிளர்ச்சி நடந்து இரண்டு வாரங்களின் பின்னர் பதவியேற்ற பைடென், உடனடியாக வலுவான குடியரசுக் கட்சி ஒன்று இருக்க வேண்டியதன் தேவையை அறிவித்தார். “இரு கட்சி” ஒத்துழைப்பு, குறிப்பாக ரஷ்யாவிற்கு எதிராக, இருக்க வேண்டியது மிகப்பெரிய முன்னுரிமையாக அறிவிக்கப்பட்டது.

பைடென் குடியேற்ற எதிர்ப்பு சட்டத்தை இயற்ற டிரம்புடன் “ஐக்கியத்தை” நாடியதுடன் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு பல்லாயிரக்கணக்கான பில்லியன் நிதியைப் பெறுவதற்காக, காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர், தீவிர வலதுசாரி மைக் ஜோன்சனை சபாநாயகராக்க ஆதரித்தனர்.

இடமிருந்து, பைடென், சபையின் சபாநாயகர் மைக் ஜோன்சன், சபை பெரும்பாண்மைத் தலைவர் ஸ்டீவ் ஸ்காலிஸ், சபை சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், முன்னாள் சபாநாயகர் நன்சி பெலோசி ஆகியோர் மே 7 அன்று பாராளுமன்றக் கட்டிடத்தில் நடந்த நாஸி மனிதப்படுகொலை நினைவு நாள் விழாவில் கலந்து கொண்டனர். இதில் பைடெனும் ஜோன்சனும் காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை “யூதவிரோதம்” என்று கண்டித்தனர். [AP Photo]

ஏபிசி நியூஸ் உடனான தனது சமீபத்திய நேர்காணலில் பைடென் தனது அரசியல் முன்னுரிமைகளின் தன்மையை மழுங்கடித்தார். “டிரம்பிற்கு சவால் விட உங்களுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் கிடைத்தது. நீங்கள் ஏன் செய்யவில்லை?” என ஜோர்ஜ் ஸ்டீபனோபுலோஸ் கேட்ட போது, “உலகம் முழுவதும் போர்கள் போன்ற பல விஷயங்களை நான் செய்து வருகிறேன்,” என்று பைடென் பதிலளித்தார்.

பைடெனின் பிரச்சாரம் சரிந்த பின்னரும் கூட, ஜனநாயகக் கட்சி மற்றும் பெருநிறுவன ஊடகங்களில் அதன் ஆதரவாளர்களின் உக்ரேனில் போரைத் தீவிரப்படுத்துவதே பிரதான விடயமாக உள்ளது. பைடெனின் முடிவைப் பாராட்டிய நியூ யோர்க் டைம்ஸ், அதற்கு முதலிடம் கொடுத்தது. “திரு. பைடெனின் கீழ் இருந்ததைப் போல, உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்கா நிற்குமா என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும்,” எனக் கூறியது.

ஜனநாயகக் கட்சி இன்னும் வலப்புறம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்திய டைம்ஸ் ஆசிரியர் தலையங்கம், “அடுத்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர், கட்டுப்பாடற்ற குடியேற்றத்தால் ஏற்படும் வலி மற்றும் இடையூறுகளை ஒப்புக்கொண்டு தீர்வுகளை வழங்க வேண்டும்” என்று வாதிட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குடியரசுக் கட்சியின் மாநாட்டின் ஊடாகத் திறந்துவிடப்பட்ட சாக்கடை போல் பாய்ந்த இனவாதம் மற்றும் இனவெறியை ஜனநாயகக் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும், என்பதாகும்.

மேலும், அதன் தலையங்கமானது பாசிச குடியரசுக் கட்சியினருடன் சமரசம் செய்து கொள்ளும் பைடெனின் கொள்கையைப் பாராட்டியது: “தீவிரமான துருவமுனைப்பு சகாப்தத்தில், திரு. பைடென், உறுதியான முன்னேற்றத்தை அடையத் தேவையான சமரசங்களை எட்டுவதன் பேரில், கொள்கை ரீதியான நிலைப்பாடுகளில் திருப்தியடைவதைத் தவிர்த்துத்துக்கொண்டார். அவர் குடியரசுக் கட்சியினருடன் மரியாதையுடனும் மதிப்புடனும் நடந்துகொண்டார்” என அது எழுதியது.

உக்ரேனில் நடந்துவரும் போருடன், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் மத்திய கிழக்கில் பரந்த போருக்கான அமெரிக்க ஆதரவு இரட்டிப்பாகியுள்ளது. பைடென் தனது பிரச்சாரத்தை மூடுவதற்கு முந்தைய நாள் யேமன் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவை. காஸாவில் பாலஸ்தீனியர்களை அழித்தொழிப்பதில் அவர் செய்த சாதனைகள் குறித்து காங்கிரஸின் இரு கட்சிகளின் கூட்டு அமர்வில் விளக்கமளிக்க இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த வாரம் வாஷிங்டன் செல்கிறார்.

காஸாவில் இனப்படுகொலைக்கு ஆயுதம் கொடுத்து ஒத்துழைத்ததன் மூலம், பைடென் நிர்வாகம் அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் கோபமூட்டி ஆத்திரமூட்டியுள்ள அதேவேளை, நெத்தன்யாகுவை ஒரு பங்காளியாகவும் சக சிந்தனையாளராவகவும் பார்க்கும் பாசிச சக்திகளை ஊக்குவித்துள்ளது.

பாசிசத்தின் ஆபத்துக்கும், அதைச் செயல்படுத்தும் ஜனநாயகக் கட்சிக்கும் எதிரான போராட்டத்திற்கு, ஜனநாயகக் கட்சிக்கு முட்டுக் கொடுத்து, தொழிலாள வர்க்கத்தின் பார்வையில் அதற்கு நம்பகத்தன்மையை அளிக்க முயலும் சக்திகளை ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்துவது அவசியமாகும்.

பைடென், வரலாற்றில் தான் மிகவும் “தொழிற்சங்க சார்பு” ஜனாதிபதி என்று நீண்ட காலமாக கூறி வருகிறார். இதன் அர்த்தம், அவர் வேலைநிறுத்தங்களை மூடுவதற்கும் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக கழுத்தை நெரிப்பதற்கும் தொழிற்சங்கங்க அதிகாரத்துவ எந்திரத்தை பெரிதும் நம்பியிருக்கும் ஒரு ஜனாதிபதி என்பதாகும். உக்ரேன் மற்றும் காஸாவில் நடக்கும் போர்களின் முன்னணி ஆதரவாளரான அமெரிக்க ஆசிரியர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவரான ரண்டி வீங்கார்டனுடன், ஹாரிஸுக்கு பின்னால் அணிசேர்ந்து வருகின்ற தொழிற்சங்க அதிகாரிகள், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஹாரிஸை அங்கீகரிக்க தொழிற்சங்க நிர்வாகக் குழு ஏற்கனவே வாக்களித்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தனர்.

தொழிற்சங்க எந்திரத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற பல போலி இடதுகள் உட்பட, ஜனநாயகக் கட்சியின் போலி-இடது ஆதரவாளர்கள், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தையும் தடுக்கும் முயற்சியில் குறிப்பாக படுமோசமான பாத்திரத்தை வகிப்பதன் மூலம், தலைதூக்கும் அபாயகரமான பாசிச வலது வலுப்படுவதற்கு அவகாசம் ஏற்படுத்திக்கொடுக்கின்றனர்.

இந்த முழு சமூக அடுக்குக்காகவும் பேசுகையில், ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ், பைடெனை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு முயற்சியையும் பிடிவாதமாக எதிர்த்தார். பைடென் விலகிக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் கமலா ஹாரிஸ் வேட்பாளராவதை ஆதரித்தார். கடந்த ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் 10 மில்லியன் வாக்குகளைப் பெற்ற வெர்மான்ட் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், தான் வேட்புமனுவுக்கு போட்டியிடுவது ஒருபுறம் இருக்க, வேறு வேட்பாளரை ஆதரிப்பதாகக் கூறவில்லை.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர், பைடென் தேர்தலில் இருந்து விலகியதற்கு பிரதிபலிக்கும் வகையில் டுவிட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவர் எழுதியதாவது:

பாசிசத்திற்கு எதிரான போராட்டம் அவசரமாக அவசியம் ஆகும். ஆனால் ஜனநாயகக் கட்சியின் மூலம் பாசிசத்தை எதிர்க்க முடியாது. உண்மையில், ஜனநாயகக் கட்சியினர் தேர்தலில் வெற்றிபெற முடிந்தால், தீவிர வலதுசாரிகளை மேலும் வலுப்படுத்தும் கொள்கைகளையே அவர்கள் பின்பற்றுவர். பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பானது, பெரும்பான்மையான மக்களான தொழிலாள வர்க்கத்தை, முழு இரு கட்சி முறைமையின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் உண்மையான நலன்களை வெளிப்படுத்தும் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கிற்காக தொழிலாள வர்க்கத்திற்குள் போராடுவது அவசியம் ஆகும். இது சோசலிசத்திற்கான போராட்டம் ஆகும். போரின் மூலகாரணமான முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பை எதிர்க்காமல் ஏகாதிபத்திய போரை எதிர்ப்பது சாத்தியமற்றது. மேலும் இரு அரசியல் கட்சிகளையும் கட்டுப்படுத்தும் பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவுக்கு எதிராகப் போராடாமல் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது சாத்தியமற்றது.

ஆளும் வர்க்கத்தின் மிகப்பெரிய அச்சம் என்னவெனில், அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அரசியல் நெருக்கடியின் வெடிப்பு, பெருநிறுவன அமெரிக்காவிற்கு சமூக எதிர்ப்பின் வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், முழு பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள கட்சி அமைப்பில் இருந்து தொழிலாள வர்க்கம் விடுபடுவதற்கான ஒரு திறவுகோலைக் கொடுக்கும்.

Loading