முன்னோக்கு

ஜனநாயகக் கட்சியின் நெருக்கடியும் மற்றும் உள்நாட்டுப் போருக்கான தேர்தலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜனாதிபதி ஜோ பைடென் ஞாயிற்றுக்கிழமை பிலடெல்பியாவில் பிரச்சார அலுவலகத்தில் உரையாற்றுகிறார். July 7, 2024. [AP Photo/Manuel Balce Ceneta]

ஜூன் 27 அன்று, ஜனாதிபதி ஜோ பைடெனுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே விவாதம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, பைடென் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இருப்பதிலிருந்து விலக வேண்டும் என்றும், மேலும் அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அரசியல் ஸ்தாபனத்திலும் ஊடகங்களிலும் வேண்டுகோள்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜனநாயகக் கட்சியின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், கட்சியின் அடிப்படை குழு உறுப்பினர்களுடன் இணையவழி மாநாட்டைக் கூட்டினார். பிரதிநிதிகள் ஜெர்ரி நாட்லர் (நியூ யோர்க்-நீதித்துறை குழு), மார்க் டகானோ (கலிபோர்னியா-படையினர் விவகாரக் குழு), டான் பேயர் (வேர்ஜீனியா-நிர்வாகக் குழு) மற்றும் ஆடம் ஸ்மித் (வாஷிங்டன்-ஆயுத சேவைகள் குழு) ஆகியோர் பைடெனை பதவி விலகுமாறு அழைப்பு விடுத்தனர்.

'Meet the Press' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கலிஃபோர்னியா ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ஆடம் ஷிஃப், வெள்ளிக்கிழமை அன்று ABC இன் ஜோர்ஜ் ஸ்டீபனோபொலோஸுடன் இடம்பெற்ற பைடெனின் நேர்காணல் 'கவலைகள் ஓயவில்லை' என்பதை தெரிவித்தார். விர்ஜினியா செனட்டரான மார்க் வார்னர் பைடெனை தேர்தல் போட்டியிலிருந்து வெளியேற்றும் முயற்சியில், செனட்டர்கள் குழுவை ஒன்று சேர்த்துள்ளார். பிரதிநிதிகளின் சபை புலனாய்வுக் குழுவின் முன்னாள் தலைவரான ஷிஃப் மற்றும் செனட் புலனாய்வுக் குழுவின் தற்போதைய தலைவரான வார்னர் ஆகியோரின் பாத்திரங்கள் என்பன, இந்த விவாதங்களில் உளவுத்துறை அமைப்புகளின் நெருக்கமான ஈடுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

பைடென் ஜனாதிபதிப் போட்டியில் இருந்து வெளியேறினாலும் இல்லாவிட்டாலும், ஆளும் வர்க்கத்தின் கணிசமான பகுதியினர் அவர் மீதான நம்பிக்கையை தெளிவாக இழந்துள்ளனர்.

விவாதத்தில் பைடெனின் செயல்திறன் இந்த சூழ்ச்சிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. ஆனால் இன்னும் அடிப்படை சிக்கல்கள் ஆபத்தில் உள்ளன. உண்மையில், பைடெனின் அறிவாற்றல் திறன் கணிசமாக பலவீனமடைந்துள்ளது என்பது சில காலமாக அறியப்படுகிறது. எவ்வாறாயினும், விவாதத்தில் ஏற்பட்ட தோல்வி, இந்த உண்மையை பகிரங்கமாக மறுப்பதை சாத்தியமற்றதாக்கியது.

டிரம்பிடம் பைடென் தோற்கடிக்கப்படுவார் என்று, ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்த ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுக்குள் உள்ள கவலைகள் பல காரணிகளால் உந்தப்படுகின்றன.

முதலாவதாக, அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கான தாக்கங்கள் இதில் உள்ளன. இந்த வாரம், நேட்டோ அரச தலைவர்கள் வாஷிங்டன் D.C இல் ஒன்று கூடி ரஷ்யாவிற்கு எதிரான போரின் விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்தைத் திட்டமிடுகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான நேட்டோ துருப்புக்களை நேரடியாக அனுப்புவதற்கான தயாரிப்புகளும் அடங்கும். இராணுவம் மற்றும் சிஐஏ உளவுத்துறை எந்திரத்தின் நேரடி முகவர்களாக காங்கிரஸுக்குள் செயல்படும் ஜனநாயகக் கட்சியினரின் பெரும் குழு, ட்ரம்பை நம்பவில்லை. அத்துடன், அவரது ஒழுங்கற்ற வெளியுறவுக் கொள்கையின் நடத்தையானது உக்ரேனிலும், மத்திய கிழக்கு மற்றும் தூரக் கிழக்கு நாடுகளிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகவும் முன்னேறிய போர்த் திட்டங்களை சீர்குலைக்கும் என்று ஜனநாயகக் கட்சியினரின் பெரும் குழு அஞ்சுகிறது.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தனது நிலைப்பாட்டை பாதுகாக்கும் அறிக்கைகளில், பைடென் இந்த பிரச்சினையை வலியுறுத்தியுள்ளார். அவர் ஸ்டெபனோபுலோஸிடம், 'நேட்டோவையும் எதிர்காலத்தையும் ஒன்றிணைத்தவன் நான், அதை விரிவாக்க முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. நான் புட்டினை மௌனமாக்கியவன். அது நடக்கலாம் என்று யாரும் நினைக்கவில்லை. நான்தான் தென் பசிபிக் பகுதியில் AUKUS [இராணுவ கூட்டணி] உடன் ஒரு முன்முயற்சியை அமைத்த மனிதன்' என்று பெருமையாக கூறினார்.

இரண்டாவதாக, ஆளும் வர்க்கத்திற்குள் இன்னும் கூடுதலான அடிப்படைக் கருத்தில் இருப்பது, அமெரிக்காவின் சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கான ட்ரம்ப்பினுடைய வெற்றியின் விளைவுகளைப் பற்றியதாகும்.

கடந்த வாரம் டிரம்ப் எதிர் ஐக்கிய அமெரிக்கா வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது, 'அதிகாரப்பூர்வ' செயல் என்ற போர்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் எந்தவொரு குற்றத்திற்கும் விசாரணையில் இருந்து ஜனாதிபதிக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்தது. இது ட்ரம்பின் ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பை சட்டப்பூர்வமாக்குவது மட்டுமல்லாமல், ஜனாதிபதியை சட்டத்திற்கு மேல் நிலைநிறுத்துகிறது மற்றும் தலைமை நிர்வாகி மற்றும் 'தலைமைத் தளபதியை' ஒரு சர்வாதிகாரியாக மாற்றுகிறது.

இந்த வழக்கில் கருத்து வேறுபாடுள்ள நீதிபதிகளே சுட்டிக்காட்டியபடி, அரசியல் எதிரிகளை படுகொலை செய்வது முதல் இராணுவ சதிப்புரட்சி நடத்துவது வரையிலான ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு இந்த தீர்ப்பு விலக்கு அளிக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தீர்ப்பு, நாட்டின் முழு அரச-கூட்டாட்சி கட்டமைப்பையும் நிர்வகிக்கும் அரசியலமைப்பு ஏற்பாடுகளின் முறிவைக் குறிக்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான பகுப்பாய்வில், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) அதை ஜூலை 1, 2024 இன் எதிர்ப்புரட்சி என்று வகைப்படுத்தி, 'கடந்த நூற்றாண்டின் பாசிச அரசுகளான முசோலினி மற்றும் ஹிட்லரிடம் குவிந்திருந்த அதிகாரத்திற்கு ஒப்பான சர்வாதிகார ஆட்சியின் நிரந்தர நிலை, வெள்ளை மாளிகையில் வசிப்பவரை சூழ்ந்துள்ளது' என்று குறிப்பிட்டது.

அமெரிக்கப் புரட்சி மற்றும் அமெரிக்க உள்நாட்டுப் போரினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளை திறம்பட முறியடித்த இந்தத் தீர்ப்பு, அமெரிக்காவில் நிலவும் மிகவும் நிலையற்ற சமூக மற்றும் அரசியல் நிலைமைகளை மோசமாக்கியுள்ளது. இந்த மோசமான நிலைமைகளின் கீழ், ட்ரம்ப் அதிகாரத்திற்கு வருவது வெடிக்கும் சமூக அதிருப்தியையும், மீளமுடியாத அரசியல் தீவிரமயமாக்கல் செயல்முறைக்கு எரியூட்டும் என்பதை ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் அறிந்திருக்கின்றன.

செய்தி ஊடகங்கள் அதன் செய்தி வெளியீட்டிலிருந்து இந்த தீர்ப்பைப் பற்றிய குறிப்பை பெரும்பாலும் கைவிட்டாலும், புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் சீன் விலென்ட்ஸ், புத்தகங்கள் பற்றிய நியூ யோர்க் மதிப்பாய்வில் எழுதி, தீர்ப்பின் தொலைநோக்கு முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். விலென்ட்ஸ் பின்வருமாறு எழுதினார்,

இந்த தீர்ப்பு அமெரிக்க அரசாங்கத்தின் கட்டமைப்பை தீவிரமாக மாற்றியுள்ளது, டேனி நீதிமன்றம் அடிமை அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கு வழி வகுக்க முயற்சித்தது போலவே, MAGA சர்வாதிகாரத்திற்கும் வழி வகுத்தது. இவை அனைத்தும் டிரம்ப் எதிர் அமெரிக்காவை நம் காலத்தின் ட்ரெட் ஸ்காட் (Dred Scott) ஆக்குகிறது.

ட்ரெட் ஸ்காட் என்பது 1857 ஆம் ஆண்டு தலைமை நீதிபதி ரோஜர் டேனி வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பின் குறிப்பு ஆகும். இது 'அடிமை அதிகாரத்தை' ஒருங்கிணைத்து உள்நாட்டுப் போரை கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாக ஆக்கியது. வரலாற்றாசிரியர் சீன் விலென்ட்ஸ் அதை வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், அதன் தாக்கங்கள் தெளிவாக உள்ளன: அமெரிக்கா மற்றொரு உள்நாட்டுப் போரின் விளிம்பில் உள்ளது.

இது ட்ரம்பின் குணாதிசயங்கள் அல்லது உச்ச நீதிமன்றத்தின் குறிப்பிட்ட அமைப்பு பற்றிய கேள்வி மட்டுமல்ல, இது அடிப்படை ஜனநாயகக் கொள்கைகளை கீழறுக்கும் ஆழமான பிற்போக்குத்தனமான முடிவுகளை தொடர்ச்சியாக செயல்படுத்தியுள்ளது. இது கடந்த கால் நூற்றாண்டில் துரிதப்படுத்தப்பட்ட பல தசாப்த கால செயல்முறையின் உச்சக் கட்டமாகும்.

2000ம் ஆண்டு, தேர்தல்கள் திருடப்பட்ட நேரத்தில், 'வரலாற்றில் இருந்து படிப்பினைகள்: 2000ம் ஆண்டு தேர்தல்களும் புதிய ‘கட்டுப்படுத்த முடியாத மோதலும்”என்ற தலைப்பிலான ஒரு விரிவுரையில், WSWS ன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், தேர்தலை புஷ்ஷிடம் ஒப்படைப்பதற்கான உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது, 'அமெரிக்க ஆளும் வர்க்கம் பாரம்பரிய முதலாளித்துவ-ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகளை உடைக்க எவ்வளவு தூரமும் செல்லத் தயாராக உள்ளது' என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.

தேர்தல் மோசடி மற்றும் வாக்குகளை நசுக்குவதற்கு ஒப்புதல் அளிக்கவும், வெளிப்படையாக சட்டவிரோத மற்றும் ஜனநாயகமற்ற முறைகளால் இந்த பதவியைப் பெற்ற ஒரு வேட்பாளரை வெள்ளை மாளிகையில் அமர்த்துவதற்கும் அது தயாரா?

முதலாளித்துவத்தின் கணிசமான பிரிவினரும், ஒருவேளை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மையினரும் கூட, அதைச் செய்யத் தயாராக உள்ளனர். அமெரிக்காவில், முதலாளித்துவ ஜனநாயகத்தின் பாரம்பரிய வடிவங்களுக்கான ஆளும் உயரடுக்கினரிடையே இருந்த ஆதரவு கணிசமாக அரிக்கப்பட்டுவிட்டது.

ஒன்பது நாட்கள் கழித்து, உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மையானது அதன் பிரபலமற்ற புஷ் எதிர் அல் கோர் தீர்ப்பை வெளியிட்டதோடு, தேர்தலைத் திருடி புஷ்ஷிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது.

இந்த தீர்ப்பை கோர் மற்றும் ஜனநாயகக் கட்சி ஏற்றுக்கொண்டது. 2000ம் ஆண்டு தேர்தல்களைத் தொடர்ந்து, ஜனநாயக உரிமைகள் மீதான முடிவில்லாத மற்றும் விரிவடைந்து வந்த தாக்குதல்கள், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் கீழும், வரம்பற்ற உள்நாட்டு உளவு பார்த்தல், சித்திரவதையை அரச கொள்கையாக அனுமதித்தல், உரிய நடைமுறையின்றி காலவரையற்ற காவலில் வைத்தல் மற்றும் அமெரிக்க குடிமக்கள் உட்பட ட்ரோன் படுகொலைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

ஜனநாயக ஆட்சி வடிவங்களின் முறிவு இரண்டு அடிப்படையான புறநிலை காரணங்களைக் கொண்டுள்ளன: 1) முடிவில்லாத மற்றும் அதிகரிக்கும் போர்; மற்றும் 2) சமூக சமத்துவமின்மையின் தீவிரமான வளர்ச்சி.

2000ம் ஆண்டு தேர்தலைத் தொடர்ந்து 'பயங்கரவாதத்தின் மீதான போர்', புஷ்ஷின் கீழ் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான படையெடுப்பு மற்றும் ஒபாமாவின் கீழ் மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ச்சியான போர்கள் உட்பட, இப்போது நேட்டோ சக்திகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே வெளிப்படையான மோதலாக மாற்றமடைந்துள்ளது. பைடென் நிர்வாகமும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் காஸாவில் இனப்படுகொலையை முழுமையாக ஆதரித்துள்ளன. வெள்ளியன்று தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இந்த இனப்படுகொலையில் தோராயமாக 186,000 பேர் அல்லது மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 8 சதவீதம் பேர் மரணமடைந்துள்ளனர்.

முழு அரசு எந்திரத்தையும் கட்டுப்படுத்துகின்ற முதலாளித்துவ தன்னலக்குழு, பெரும்பான்மையான மக்களின், தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரான நிரந்தர சதியாக உள்ளது. பைடெனின் தலைவிதி பற்றிய ஊடக வர்ணனையில், 'நன்கொடையாளர்கள்' அதாவது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் பிரச்சாரக் கருவூலங்களில் டிரில்லியன் கணக்கான டாலர்களை செலுத்தும் பெருநிறுவன-நிதி தன்னலக்குழுக்கள் பற்றிய தொடர்ச்சியான குறிப்புகள் உள்ளன. இரண்டு முதலாளித்துவக் கட்சிகளின் பிரச்சாரங்களுக்கு நிதியளிக்கும் ஒரு சில கோடீஸ்வரர்களால் இறுதி முடிவு எடுக்கப்படும் என்பது இயல்பான விஷயமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அமெரிக்க ஜனநாயகத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் X ட்விட்டரில் பின்வருமாறு எழுதினார்:

தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை, நெருக்கடியில் அதன் சொந்த வேலைத்திட்டத்துடன் தலையிடுவதே முக்கியமான கேள்வியாகும். முதலாளித்துவத்தின் கட்டமைப்பிற்குள் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் விரிவாக்குவதற்கும் முதலாளித்துவ தன்னலக்குழுக்களை கையகப்படுத்தி, பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்குகளின் சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்டுதல், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஒரு தொழிலாளர் அரசை நிறுவுதல் மற்றும் சமூக மற்றும் பொருளாதார வாழ்வின் சோசலிச மறுசீரமைப்பு ஆகியவை அவசியமாக தேவைப்படுகின்றன.

ஜூலை 24 அன்று, உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் வாஷிங்டன் டி.சி.யில் ஒரு ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தை நடத்துகிறது. இதன் நோக்கம் தொழிலாள வர்க்கத்தில் ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதாகும். எங்கள் வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்கான திட்டங்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading