முன்னோக்கு

அமெரிக்காவை ஒரு ஜனாதிபதி சர்வாதிகார நாடாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

கடந்த திங்களன்று ட்ரம்ப் எதிர் அமெரிக்கா (Trump v. United States) வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அமெரிக்க புரட்சிக்குப் பின்னர் இருந்து வந்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் தன்மையை அடிப்படையிலேயே மாற்றி, ஜனாதிபதியை சட்டத்திற்கு மேலாக நிறுத்தி, நடைமுறையளவில் “தலைமைத் தளபதி”யை தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையுடன் குற்றங்களைச் செய்யக்கூடிய ஒரு சர்வாதிகாரியாக மாற்றுகிறது.

உச்ச நீதிமன்றம் ஜூன் 30, 2022 முதல் தற்போது வரை உள்ள நீதிபதிகள். முன் வரிசை, இடமிருந்து வலமாக: இணை நீதிபதி சோனியா சோடோமேயர், இணை நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ், தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட்ஸ், ஜூனியர்., இணை நீதிபதி சாமுவேல் ஏ. அலிடோ, ஜூனியர்., மற்றும் இணை நீதிபதி எலெனா ககன். பின் வரிசை, இடமிருந்து வலமாக: இணை நீதிபதி ஆமி கோனி பாரெட், இணை நீதிபதி நீல் எம் கோர்சுச், இணை நீதிபதி பிரட் எம் கவனாக் மற்றும் இணை நீதிபதி கேதன்ஜி பிரவுன் ஜாக்சன். [Photo: Fred Schilling, samling av USAs Høyesterett]

தலைமை நீதிபதி ஜோன் ராபர்ட்ஸ் எழுதிய ஒரு கருத்தில், அதிவலது பெரும்பான்மையினர், ஒரு அமெரிக்க ஜனாதிபதி “உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு” ஊகிக்கத்தக்க “விலக்கை” அனுபவிப்பதாகவும், ஆகவே முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவர் முன்னெடுத்துச் சென்ற, ஜனவரி 6, 2021 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியின் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு வழக்குத் தொடுப்பதில் இருந்து “விலக்களிக்கப்பட்டுள்ளார்” என்றும் அறிவித்தார். ட்ரம்ப் தோற்றுப்போன மாநிலங்களில் வாக்காளர்களின் மாற்று இடங்களை நிரப்ப துணை ஜனாதிபதி மைக் பென்ஸை நிர்பந்திப்பதற்கான ட்ரம்பின் முயற்சிகள் உட்பட, ஆட்சிக்கவிழ்ப்பு சதி சம்பந்தமான மற்ற நடவடிக்கைகள் “உத்தியோகபூர்வ நடவடிக்கைகளாக” கணக்கிடப்படுமா என்பதை பரிசீலிக்க நீதிமன்றம் இந்த வழக்கை கீழ் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. நடைமுறை அர்த்தத்தில், நவம்பர் 5 தேர்தலுக்கு முன்னதாக ஜனவரி 6 கிளர்ச்சிக்காக ட்ரம்ப் தண்டிக்கப்பட மாட்டார் என்பதே இதன் அர்த்தமாகும்.

கருத்து வேறுபாடு கொண்ட நீதிபதி சோனியா சோடோமேயரின் வார்த்தைகளில், பெரும்பான்மை கருத்து “எந்த மனிதனும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்ற நமது அரசியலமைப்பு மற்றும் அரசாங்க அமைப்பின் அடித்தளமான கோட்பாட்டை இது கேலிக்கூத்தாக்குகிறது.”

“சர்வாதிகாரி” என்ற சொல் பெரும்பான்மை அல்லது மாற்றுக் கருத்துகளில் எங்கும் காணப்படவில்லை என்றாலும், “சட்டத்திற்கு அப்பாற்பட்ட” ஒரு தலைமை நிர்வாகி ஒரு சர்வாதிகாரி என்று அழைக்கப்படுகிறார். ஜனாதிபதி சர்வாதிகாரம் என்பதன் அர்த்தம் இதுதான்.

“நீதிமன்றம் திறம்பட ஜனாதிபதியைச் சுற்றி ஒரு சட்டம் இல்லாத மண்டலத்தை உருவாக்குகிறது, இது ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து நிலவும் நிலையை சீர்குலைக்கிறது” என்று சோடோமேயர் எழுதினார். “பெரும்பான்மையினரின் நியாயத்தின் கீழ், ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ அதிகாரங்களை எந்த வகையிலும் பயன்படுத்தும்போது, அவர் இப்போது குற்றவியல் வழக்குத் தொடரப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுவார். ஒரு அரசியல் எதிரியை படுகொலை செய்ய கடற்படையின் சிறப்புப்படைக் குழு 6 க்கு உத்தரவு கொடுப்பது? விலக்கு அளிப்பு. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இராணுவ புரட்சிக்கு ஏற்பாடு செய்வது? விலக்கு அளிப்பு. மன்னிப்புக்கு ஈடாக இலஞ்சம் வாங்குவதா? விலக்கு அளிப்பு. விலக்கு அளிப்பு, விலக்கு அளிப்பு, விலக்கு அளிப்பு.

“ஜனாதிபதிக்கும் அவர் சேவை செய்யும் மக்களுக்கும் இடையிலான உறவு மாற்ற முடியாதபடி மாறிவிட்டது” என்று சோடோமேயர் இவ்வாறு எழுதினார். “உத்தியோகபூர்வ அதிகாரத்தின் ஒவ்வொரு பயன்பாட்டிலும், ஜனாதிபதி இப்போது சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அரசர்.”

ஒரு தனி அதிருப்தியில், நீதிபதி கேதன்ஜி பிரவுன் ஜாக்சன், ஜனாதிபதிக்கு இப்போது மற்ற அரசாங்க அதிகாரிகளை தண்டனையின்றி கொலை செய்ய சுதந்திரம் உள்ளது என்று பரிந்துரைத்தார். “உதாரணமாக, சட்டமா அதிபரை நீக்க முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கலாம் என்றாலும்,” “இங்கே கேள்வி என்னவென்றால், சட்டமா அதிபருக்கு விஷம் கொடுத்து அவரை நீக்குவதற்கான தெரிவு ஜனாதிபதிக்கு இருக்கிறதா என்பதுதான்.”

கடந்த திங்கட்கிழமை முடிவானது அமெரிக்க வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாததாகும். 1977 இல், அவமானகரமாக வெள்ளை மாளிகையில் இருந்து இராஜினாமா செய்த மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் பத்திரிகையாளர் டேவிட் ஃப்ரோஸ்ட்டிடம் “ஜனாதிபதி அதைச் செய்யும்போது, அது சட்டவிரோதமானது அல்ல என்று அர்த்தம்” என்று கூறினார். பல தசாப்தங்களாக இந்த அறிவிப்பானது அமெரிக்க அரசியலமைப்பு நீதித்துறை பற்றிய அறிக்கை என்று கருதப்படவில்லை, மாறாக நிக்சனின் குற்றம் சார்ந்த தன்மையை ஒப்புக் கொள்ளும் வகையில்தான் நடத்தப்பட்டது.

ஒரு பொருத்தமான வரலாற்று ஒப்புமையை உருவாக்க, பாசிச சட்டவியலைக் குறிப்பிடுவது அவசியம். உதாரணமாக, 1933ம் ஆண்டு அதிகாரமளிக்கும் சட்டம் (1933 Enabling Act) ஹிட்லருக்கு வைமார் அரசியலமைப்பை ஒருதலைப்பட்சமாக மீறும் அதிகாரத்தை கொடுத்தது, அரசாங்கத்தின் மற்ற பிரிவுகளுக்கு எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை. இதேபோல, திங்களன்று உச்ச நீதிமன்ற பெரும்பான்மையானது அமெரிக்க ஜனாதிபதி “தைரியமான மற்றும் தயக்கமற்ற நடவடிக்கையில்” சுதந்திரமாக ஈடுபட வேண்டுமானால் சட்டபூர்வ விலக்கை அனுபவிக்க வேண்டும் என்று அறிவிக்கிறது.

உச்ச நீதிமன்றம் அறிவித்த ஜனாதிபதி சர்வாதிகாரத்தின் புதிய சட்ட கட்டமைப்பின் கீழ், இடதுசாரி அரசியல் எதிர்ப்பாளர்களை பாரிய படுகொலை செய்வது “பயங்கரவாதம் மற்றும் நாசவேலையை எதிர்த்துப் போராடுவதற்கும்” மற்றும் “நாட்டை கம்யூனிசத்தில் இருந்து காப்பாற்றுவதற்குமான” ஒரு “அதிகாரபூர்வ நடவடிக்கை” என்று ஒகுஸ்டோ பினோசே அறிவித்திருப்பார் என்பதோடு, அவர் குற்றங்களுக்கான வழக்கு விசாரணையில் இருந்து முழு விலக்கையும் பெற்றிருப்பார்.

இன்னும் உடனடியான உதாரணத்தைப் பயன்படுத்தினால், மே மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் டென்னசி குடியரசுக் கட்சியின் ஆண்டி ஓகிள்ஸால் முன்மொழியப்பட்ட ஒரு மசோதா இனப்படுகொலை எதிர்ப்பு மாணவர் ஆர்ப்பாட்டக்காரர்களை காஸாவிற்கு நாடுகடத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கிறது. திங்களன்று உச்ச நீதிமன்றத்தின் முடிவின் கீழ், அதுபோன்றவொரு கொள்கையை முன்னெடுக்கும் ஒரு ஜனாதிபதி, இது ஒரு “அதிகாரபூர்வ நடவடிக்கையாக” இருப்பதால் அதிலிருந்து விலக்கு பெறுவார்.

இந்த முடிவானது ஒருகாலத்தில் “அரசாங்கத்திற்கான அமெரிக்கத் தத்துவம்” என்று அழைக்கப்பட்டதை நடைமுறையளவில் அகற்றுகிறது. அதன்படி, ஒரு அரசர் அல்லது இளவரசர் போன்றவர்களுக்கு எந்த “ஆட்சியாளர்” உரிமையும் இல்லை. அதற்கு பதிலாக, கருத்து வேறுபாடு கொண்ட நீதிபதி ஜாக்சனின் வார்த்தைகளில், “மக்கள்தான் ஆட்சியாளர், சட்டத்தின் ஆட்சி நமது முதலும் இறுதியுமான பாதுகாப்பு ஆகும்.” அமெரிக்க புரட்சியாளர்கள் யார் வேண்டுமானாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கலாம் என்ற கருத்தை “கொடுங்கோன்மை” மற்றும் “எதேச்சதிகாரம்” என்று அழைத்தனர். அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் வார்த்தைகளில், ஒரு மக்கள் அத்தகைய ஆட்சிக்கு உட்படுத்தப்படும்போது, “அத்தகைய அரசாங்கத்தைத் தூக்கியெறிவதும், அவர்களின் எதிர்கால பாதுகாப்பிற்காக புதிய காவலர்களை வழங்குவதும் அவர்களின் உரிமை, அது அவர்களின் கடமையாகும்.”

தீர்ப்பின் மாபெரும் வரலாற்று முக்கியத்துவத்தை விளக்கும் கருத்து வேறுபாடு கொண்ட நீதிபதிகளின் கருத்துக்கள் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவின் ஸ்தாபக ஊடகங்களின் பெரும்பகுதி திங்களன்று அந்த முடிவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தின. ஜனநாயகக் கட்சி தலைமையின் ஒரு ஊதுகுழலான நியூ யோர்க் டைம்ஸ், கீழ் நீதிமன்ற நடவடிக்கைகளில், “ஒரு பெடரல் நீதிபதி மற்றும் பொதுமக்களுக்கு முன்னால் டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான அவர்களின் ஆதாரங்களின் பெரும்பகுதியை விவரிக்க” வழக்குத்தொடுனர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் இந்தத் தீர்ப்பு தலைகீழாக இருப்பதாக கூட பரிந்துரைத்தது.

இந்த தீர்ப்பைக் கண்டிக்க பைடென் திங்களன்று மாலை ஒரு செய்தி ஊடகத்தில் குறுகிய நேரம் தோன்றி, “டொனால்ட் டிரம்ப் உட்பட எந்தவொரு ஜனாதிபதியும் இப்போது சட்டத்தை புறக்கணிக்க சுதந்திரமாக இருப்பார்கள்” என்று கூறினார், இந்தத் தீர்ப்பை “அடிப்படையில் ஒரு புதிய கொள்கை மற்றும் ஆபத்தான முன்னுதாரணம்” என்று அழைத்தார், ஏனெனில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மீதான எந்தவொரு வரம்பும் இப்போது “ஜனாதிபதியால் மட்டுமே சுயமாக விதிக்கப்படும்.” ஆனால் தீர்ப்புக்கு பதிலளிக்கும் வகையில், பைடென் 2024 தேர்தல்களில் டிரம்புக்கு பதிலாக பைடெனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் “டொனால்ட் டிரம்பின் நடத்தை குறித்து அமெரிக்க மக்கள் ஒரு தீர்ப்பை வழங்க வேண்டும்” என்று மட்டுமே அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி சர்வாதிகாரம் என்பது ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே நடக்கும் அபாயம் அல்ல. இது ஏற்கனவே “நாட்டின் மிக உயர்ந்த சட்டமாக” மேல்முறையீடு இல்லாமல், உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை வழங்கிய தீர்ப்புக்கு நன்றி. பைடென் அடிப்படையில் ஒரு தீய சர்வாதிகாரி அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்று வாதிடுகிறார், அதற்கு பதிலாக மற்றொரு சர்வாதிகாரியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், அவர் அதே அதிகாரங்களை எடுத்துக் கொள்வார், ஆனால் அவற்றை மிகவும் “பொறுப்பான” வழியில் பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் சர்வாதிகாரத்தை தடுப்பதற்கு பைடென் எந்தத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை. குறைந்தபட்சம் 1937ல் ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டின் புதிய உடன்பாட்டிற்கு தலைமை நீதிமன்றம் காட்டிய எதிர்ப்பை கூடுதலான நீதிபதிகளை நியமித்ததன் மூலம் முறியடிக்க அச்சுறுத்தினார். இந்த நடவடிக்கையை நீதிமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் மோசடி நிலைமைகளின் கீழ் பைடென் எளிதாக நியாயப்படுத்தியிருக்க முடியும்.

அமெரிக்காவின் 340 மில்லியன் மக்கள் மீது சர்வாதிகாரத்தை திணித்த ஆறு நீதிபதிகளில் ஐந்து பேர், மக்கள் வாக்குகளை இழந்த ஜனாதிபதிகளால் நியமிக்கப்பட்டனர், இதில் மூன்று பேர் (நீல் கோர்சுச், ஆமி கோனி பாரெட் மற்றும் பிரெட் கவனாஹ்) டிரம்ப்பால் நியமிக்கப்பட்டனர். குறைந்தபட்சம் மற்ற இரண்டு நீதிபதிகளான சாமுவேல் அலிடோ மற்றும் கிளாரன்ஸ் தோமஸ் ஆகியோரும் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் உடந்தையாக உள்ளனர்.

ஜனவரி 6 கிளர்ச்சியை அடுத்து ஒரு “வலுவான குடியரசுக் கட்சியை” மறுவாழ்வு செய்ய வலியுறுத்திய நிலையில், ட்ரம்பால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தலுக்கு குடியரசுக் கட்சியினருடன் பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் சமமான பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியில் இருந்து, உள்நாட்டில் வேலைநிறுத்தங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குகின்ற அதேவேளையில், வெளிநாடுகளில் போர் மற்றும் இனப்படுகொலையை நடத்த குடியரசுக் கட்சியினருடன் ஒரு திறமையான கூட்டணியில் அவர்கள் ஆட்சி நடத்தி வந்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும், சர்வாதிகார அபாயம் ட்ரம்பிடம் இருந்து ஒரு தனிநபராகவோ அல்லது பொதுவாக பாசிசவாத குடியரசுக் கட்சியிடம் இருந்தோ கூட வரவில்லை. அதேபோல், ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல, மாறாக ஒரு நீடித்த மற்றும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிப்போக்கின் ஒரு அத்தியாயமாகும்.

இந்த நிகழ்ச்சிப்போக்கு ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்கள் இரண்டிலும் தொடர்கிறது, 2000 தேர்தல்களில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் தேர்தலைத் திருடுவதற்கு உச்ச நீதிமன்றம் தலையிட்டது உட்பட—அதாவது புஷ் எதிர் கோர் (Bush v. Gore) வழக்கில் அதன் இழிபுகழ்பெற்ற தீர்ப்பு ஆகும். அத்துடன் 2010 இல் அன்வர் அல்-அவ்லாகியின் படுகொலையில் அமெரிக்க குடிமக்களைக் கொல்ல உத்தரவிடும் அதிகாரத்தை ஒபாமா நிர்வாகம் வலியுறுத்தியதையும், பாரெட் அவரது உடன்பாட்டு கருத்தில் ஒப்புதலுடன் மேற்கோளிடுகிறார்.

சர்வாதிகாரத்தை நோக்கிய போக்கானது ஏகாதிபத்திய சகாப்தத்தில் முதலாளித்துவ அமைப்புமுறையில் உள்ளார்ந்துள்ளது. இது பொருளாதாரத்தில் நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் மற்றும் உழைப்பு, சந்தைகள் மற்றும் மூலப்பொருட்களை அணுகுவதை மறுபங்கீடு செய்வதற்கான ஏகாதிபத்திய போர்களால் குணாம்சப்படுத்தப்படுகிறது. சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதல், குறிப்பாக விரிவடைந்து வரும் சமூக சமத்துவமின்மை, போர் மற்றும் ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து அடிப்படையில் செல்வாக்கற்ற கொள்கைகளை திணிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

“நிதி மூலதனம் சுதந்திரத்தை விரும்பவில்லை, அது மேலாதிக்கத்தை விரும்புகிறது” என்று ஆஸ்திரிய மார்க்சிசவாதி ருடோல்ஃப் ஹில்ஃபெர்டிங், ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் மிக உச்சக்கட்டம் (1916) என்ற நூலில், லெனின் மேற்கோளிட்ட ஒரு பத்தியில் எழுதினார். நூறாயிரக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகவும் பட்டினியாகவும் இருக்கையில், எலோன் மஸ்க் போன்ற செல்வந்த தன்னலக்குழுக்கள் 45 பில்லியன் டாலர்கள் ஊதியப் பொதியை பெறக்கூடிய ஒரு சமூகத்துடன் ஜனநாயகம் பொருத்தமற்றதாக உள்ளது.

பீரங்கிக்கு இரையாக சேவை செய்வதற்கும், சமூக தேவைகளில் இருந்து பொது நிதிகளை திசைதிருப்புவதற்கும் மற்றும் அனைத்து எதிர்ப்புகளையும் நசுக்குவதற்கும் பெருந்திரளான இளைஞர்களை கட்டாயமாக இராணுவத்தில் சேர்ப்பதை அவசியமாக்கும் ஏகாதிபத்திய போருடன் ஜனநாயகம் இணக்கமற்றது. ரஷ்யா மற்றும் சீனாவின் “எதேச்சதிகாரத்திற்கு” எதிராக “சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக” போரிட்டு வருவதாக அமெரிக்க-நேட்டோ கூட்டணி கூறுகின்ற அதேவேளையில், அமெரிக்க அரசியல் ஸ்தாபனம் தான் உள்நாட்டில் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களைத் திணித்து வருகிறது.

ஜனாதிபதி சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கு எதிரான போராட்டத்திற்கு, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளிலும் மற்றும் உலகமானது, போட்டி தேசிய-அரசுகளாக காலாவதியான முறையில் பிளவுபட்டிருப்பதிலும் அதன் வேர்களைப் புரிந்து கொள்வது அவசியமாகும். சர்வாதிகாரத்தை எதிர்க்கும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையை சவால் செய்யும், அனைத்து முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக ஒரு வர்க்கமாக ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் சோசலிசத்திற்காக போராடும் சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும்.

Loading