எதிர்காலம் சோசலிசத்தில் அமைந்திருக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 4 சனிக்கிழமையன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 2019 சர்வதேச இணையவழி மே தினப் பேரணியை நடத்தியது. இது, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் நடத்தப்படும் ஆறாவது ஆண்டு இணையவழி மே தினப் பேரணியாகும். இந்த உலகக் கட்சி மற்றும் அதன் பிரிவுகள் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் அதன் ஆதரவு அமைப்புகளில் இருந்தான 12 முன்னணி உறுப்பினர்களிடம் இருந்து முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களது பல்வேறு அம்சங்கள் குறித்த உரைகள் பேரணியில் நிகழ்த்தப்பட்டன.

பேரணியில் நிகழ்த்தப்பட்ட உரைகளது எழுத்துவடிவத்தை உலக சோசலிச வலைத் தளம் அடுத்தடுத்த நாட்களில் வெளியிட்டு வருகிறது. கீழே வருவது அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலரான ஜோசப் கிஷோர் வழங்கிய உரையாகும். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் இந்த பேரணிக்கு வழங்கிய ஆரம்ப உரையைஉலக சோசலிச வலைத் தளம் சென்ற வாரத்தில் பிரசுரித்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னைய மே தின இணைய வழிப் பேரணிகளுடன் சேர்த்து, இதுவும் ஒரு மிக முக்கியமான மற்றும் ஒரு உலக நிகழ்வாக இருக்கிறது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை, நியூசிலாந்து, பெரு, நெதர்லாந்து, துருக்கி, போலந்து, கோஸ்டாரிகா மற்றும் இன்னும் பல நாடுகளில் இருந்து இன்று பங்கேற்றிருக்கின்றனர். ஒரு பார்வையாளர் அமெரிக்காவுக்கு மேல் வானில் 30,000 அடி உயரத்தில் இருந்து பங்கேற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று வழங்கப்பட்டிருக்கும் அறிக்கைகள் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தில் ஒரு வெகுஜன சோசலிச இயக்கம் கட்டியெழுப்பப்படுவதற்கான ஒரு சக்திவாய்ந்த அடித்தளத்தை வழங்குகின்றன.

எதிர்காலம் சோசலிசத்திலேயே அமைந்திருக்கிறது. ஹெட்ஜ் நிதி மேலாளரான ரேமண்ட் டாலியோவின் வார்த்தைகளில் சொல்வதானால், ஆளும் வர்க்கமே கூட, வரவிருக்கும் சமூக கொந்தளிப்புகள் குறித்து, “ஒரு வகையான புரட்சி” குறித்து மிரண்டு கிடக்கின்றன. அதி-வலதுகளது ஊக்குவிப்பு, பாசிசத்தின் மறுஉயிர்ப்பு, எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கித் திரும்புதல் மற்றும் ஜூலியன் அசாஞ்சை துன்புறுத்துதல் மற்றும் பலியாக்குதல் உள்ளிட ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என ஆளும் வர்க்கம் அதன் சமூக அமைப்புமுறையைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் என்னென்ன பதிலிறுப்புகளை அளித்திருக்கிறது என்பதை இன்று வழங்கப்பட்ட உரைகள் திறனாய்வு செய்திருக்கின்றன.

என்றபோதும் முன்னோக்கிய வேறு ஒரு பாதையை தயாரித்துக் கொண்டிருக்கின்ற ஒரு சக்திவாய்ந்த சமூக சக்தியாக அங்கே சர்வதேசத் தொழிலாள வர்க்கம் நின்று கொண்டிருக்கிறது என்பதையும் இந்த உரைகள் விளக்கியிருக்கின்றன. பிரான்ஸ், அல்ஜீரியா, சீனா, ஜேர்மனி, பெல்ஜியம், போலந்து, போர்ச்சுகல், இஸ்ரேல், ஈரான், எகிப்து, துனிசியா, தென் ஆபிரிக்கா, இலங்கை, இந்தியா, நியூசிலாந்து, சூடான், மெக்சிகோ, மற்றும் அமெரிக்காவிலான மிக முக்கியமான போராட்டங்களில் சிலவற்றையும் அவை திறனாய்வு செய்திருக்கின்றன.

சோசலிசத்தில் ஆர்வம் பெருகிக் கொண்டிருக்கிறது. 1930களுக்குப் பின்னர், ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறைக்கும் எதிராய் வெகுஜனங்களிடையே இத்தகையதொரு பரவலானதொரு வெறுப்புணர்வு ஒருபோதும் இருந்திருக்கவில்லை.

இந்த இரண்டு நிகழ்ச்சிப்போக்குகளும் சக்திவாய்ந்த புறநிலை சக்திகளால் உந்தப்படுகின்றன. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் வெகுகாலத்திற்கு முன்பே கணிக்கப்பட்டு விட்டிருந்த சோவியத் ஒன்றிய கலைப்பின் சமயத்தில், முதலாளித்துவத்தின் சித்தாந்தவாதிகள் வரலாற்றின் முடிவைப் பிரகடனம் செய்தனர். ஸ்ராலினிசத்தை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்த “இடது” மற்றும் போலி-இடது கல்வியறிஞர்களது வட்டாரங்கள், அதிகாரத்துவ எந்திரம் ஒரு புதிய ஒருசிலவராட்சியாக உருமாற்றம் கண்டதை, மார்க்சிசத்தை ஒருபுறம் விடுவோம், சமூக உறவுகளை உருமாற்றம் செய்வதற்கும் கூட எந்த உறுதிப்பாட்டையும் கைவிட ஒரு சந்தர்ப்பமாக பற்றிக் கொண்டன.

சோவியத் ஒன்றியத்தின் பொறிவு முதலாளித்துவத்தின் வெற்றியைக் குறித்ததாகவே பொதுவான கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் மனிதகுலத்தை சூழ்ந்திருந்த மாபெரும் பிரச்சினைகள் நமக்குப் பின்னால் சென்று விட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் இந்தத் தத்துவங்கள் எல்லாம் எத்தனை பொய்யானவையாக நிரூபணமாகியிருக்கின்றன!

ஜனநாயகத்தின் ஒரு புத்துயிர்ப்பைக் காண்பதற்குப் பதிலாய், பாசிசத்தின் ஒரு புத்துயிர்ப்பையே நாம் கண்டிருக்கிறோம். அமைதியின் ஒரு சகாப்தத்திற்குப் பதிலாய், கால் நூற்றாண்டு கால முடிவற்ற போரையே நாம் கண்டிருக்கிறோம். சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பதிலாக, சமூக மற்றும் பொருளாதார சிதைவு மற்றும் நெருக்கடியையே நாம் கண்டிருக்கிறோம்.

அத்துடன், இங்கே அமெரிக்காவில் ட்ரம்ப்பையும் நாம் கொண்டிருக்கிறோம்.

ட்ரம்ப் நிர்வாகம் என்பது, முன்னாள் துணை ஜனாதிபதியும் புதிதாக-அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளருமான ஜோ பைடென் கூறியதைப் போல, “காலப் பிசகான தருணம்” அல்ல. ட்ரம்ப் நிர்வாகத்தில், ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் கூறுவதானால், “முதலாளித்துவ சமூகம் அதன் ஜீரணமாகாத காட்டுமிராண்டித்தனத்தை வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிறது.”

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அத்தனை குற்றங்களும் வெடித்து வெளிவந்திருக்கின்றன. “பயங்கரவாதத்தின் மீதான போர்”, சித்திரவதை, குவாண்டனமோ சிறை, அசாதாரண கைதி ஒப்படைப்பு, படுகொலைகள் ஆகியவை மூலமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பொருளாதாரத் தளத்தில் முடிவற்ற நிதி ஊக நிலையினால் சமூக சமத்துவமின்மை கற்பனை செய்ய முடியாத மட்டங்களுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது; வெறும் மூன்றே மூன்று தனிநபர்கள் மக்களின் கீழிருக்கும் ஐம்பது சதவீதத்தினரைக் காட்டிலும், அதாவது 160 மில்லியனைக் காட்டிலும் அதிகமாய் சொத்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக இது இருக்கிறது.

ஜனநாயகக் கட்சியின் நிலை என்ன? அவர்களும் அதே நோயின் வேறுவித வெளிப்பாடாகவே இருக்கிறார்கள். ட்ரம்புக்கான எதிர்ப்பு அடித்தளமாக சாத்தியமான மிக வலது-சாரி அடித்தளத்தையே அவர்கள் தேர்வுசெய்திருக்கின்றனர். ஜோசப் மெக்கார்த்தி மற்றும் அமெரிக்க கம்யூனிச-விரோத காலகட்டத்து பிற்போக்கான காட்சி, ஜனநாயகக் கட்சி-சிஐஏ இணையின் ரஷ்ய-விரோத பிரச்சாரத்தின் வடிவத்தில் மறுஉயிர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவால் “நமது தேர்தல் ஊழலடையச் செய்யப்பட்டது, நமது ஜனநாயகம் தாக்கப்பட்டது, நமது இறையாண்மையும் பாதுகாப்பும் மீறப்பட்டன”. இப்படித் தான் ஹிலாரி கிளிண்டன் அறிவிக்கிறார்.

கிளிண்டனை பொறுத்தவரை, பெருநிறுவனப் பணத்தால் தேர்தல் ஊழலடையச் செய்யப்படவில்லை. சிஐஏ, FBI மற்றும் NSA ஆல் ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாகவில்லை. பாசிஸ்டுகள் இராணுவத்தில் இருப்பது குறித்தெல்லாம் அவர் அக்கறைப்படவில்லை. கொடூரமான ரஷ்யர்கள் தான் எல்லாவற்றிற்கும் காரணம்! ஆகக்குறைத்துச் சொல்வதென்றால், இது மிக சுயநலத்துடனான ஒரு விவரிப்பு மட்டுமே.

வோல் ஸ்ட்ரீட் மற்றும் சிஐஏ இன் கட்சியான இந்தக் கட்சியின் எதிர்ப்பின் வலதுசாரி தன்மையானது ஜூலியன் அசாஞ்சை நோக்கிய அதன் மனோபாவத்தில் சுருக்கமாய் கூறக்கூடியதாய் உள்ளது.

ஜனநாயகக் கட்சியினரும் ஊடகங்களில் இருக்கின்ற அவர்களது கூட்டாளிகளும் அந்த தீரமிகு பத்திரிகையாளர் துன்புறுத்தப்படுவதை கண்டுகொள்ளாமல் விடுவது மட்டுமல்ல, வோல் ஸ்ட்ரீட் வங்கிகளுடன் ஹிலாரி கிளிண்டனின் ஊழல் உறவுகளை அம்பலப்படுத்திய ஜனநாயகக் கட்சி மின்னஞ்சல்களை கசியவிட்டதற்காக குற்றம் சாட்டப்படும் விக்கிலீக்ஸுக்கு எதிராய் அவர்கள் தான் முன்னால் நிற்கின்றனர்.

ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து அசாஞ்ச் பிடிக்கப்பட்டது, ஊடகங்களில் கண்டனம் செய்யப்படுவதற்கான சந்தர்ப்பமாய் இல்லாமல், கேலி பேசுவதற்கான சந்தர்ப்பமாய் இருந்திருக்கிறது. அரசின் கரங்களில் இத்தகையதொரு அட்டூழியமான நடத்தைக்கு இலக்காகியிருக்கும் ஜூலியன் அசாஞ்ஜின் நிலை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் ஒரு நகைச்சுவைக்கான கருப்பொருளாக முடியும் என்று உண்மையிலேயே யாரேனும் கற்பனை செய்து பார்க்க முடியுமா? கற்பனை செய்ய அவசியமில்லை; இன்று அமெரிக்காவில் நிதர்சனமே அதுவாகத் தான் இருக்கிறது.

இந்த இழிசெயலில் பங்குபற்றுகின்ற ஒவ்வொருவரும் ஒருபோதும் அழிக்க முடியாத ஒரு கரும்புள்ளியை தன்மீதே பூசிக் கொள்கிறார்கள்.

அசாஞ்க்கு எதிராக சாட்சியமளிக்க மறுத்த மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்தமைக்காக சிறையில் வாடுகின்ற செல்சியா மானிங்கின் நிலை, அப்படியே கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது.

சமூக எதிர்ப்பின் ஒரு பயம், தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு பயம், தங்களது செல்வத்திற்கும் சலுகைகளுக்கும் அடித்தளமாயிருக்கிற ஒரு அமைப்புமுறை அதன் கடைசிக் காலில் நின்று கொண்டிருப்பதைக் குறித்த ஒரு பயம் ஆகிய ஒரு தீவிரமான பயம் தான் இவை அத்தனையின் கீழும் அமைந்திருக்கிறது. தவிர்க்கமுடியாத வார்த்தைகளாகி விட்டிருக்கும் “பிளவை விதைக்கின்ற” ரஷ்யர்களது விளைபொருளே அமெரிக்காவுக்குள்ளான பிளவுகள் என்ற ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சிஐஏ ஆதரவாளர்களின் அபத்தமான தத்துவங்களுக்கான விளக்கத்தை வழங்குவதாய் இது அமைந்திருக்கிறது.

நவீன வரலாற்றில் வேறெந்த சமூகத்தை விடவும் மிகவும் சமத்துவமற்றதாக இருக்கிறதொரு சமூகத்தில், ஏதோ பிளவுகளை இனி விதைத்தால் தான் உண்டு என்பதைப் போல! சமூக எழுச்சிக்கான புற நிலைமைகள் முதலாளித்துவத்தினால் விதைக்கப்பட்டிருப்பதுடன் மட்டுமல்ல, அவை உருவாக்கியிருக்கும் பழம் கனிந்து சற்று அழுகவும் கூட தொடங்கியிருக்கிறது.

அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் உலக அரசியலில் தூங்கும் பிரம்மாண்டமான ஜீவனாய் இருப்பதாய் முந்தைய ஒரு மே தினத்தில் குறிப்பிட்டோம். உலகெங்குமான தொழிலாளர்களுடன் சேர்ந்து அந்த ஜீவனும் இப்போது விழிக்கத் தொடங்குகிறது. 2018 இல் அமெரிக்காவில் வேலைநிறுத்த நடவடிக்கையில் பங்குபெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 32 ஆண்டுகளின் மிகப்பெரும் எண்ணிக்கையாகும், இது பெருமளவு 2019 இலும் கூட தொடர்ந்துகொண்டிருக்கும் பொதுப் பள்ளி ஆசிரியர்களது வேலைநிறுத்தங்களால் உந்தப்பட்டதாய் இருந்தது.

பல தசாப்தங்களாய், வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் விட்டுக்கொடுப்புகளை திணிப்பதற்குமாய் வேலைசெய்து வந்திருக்கின்ற தொழிற்சங்கங்களது பிடியில் இருந்து தொழிலாளர்கள் விடுபடத் தொடங்குகின்றனர். சென்ற ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் முன்பாக தொழிற்சங்கம் ஒன்றின் வழக்கறிஞர் கூறிய மறையாத வார்த்தைகளில் சொல்வதானால், “தொழிற்சங்க பாதுகாப்பு என்பது வேலைநிறுத்தங்கள் இன்மைக்கான பிரதியுபகாரமாகும்” - இங்கே பாதுகாப்பு என முன்வைக்கப்படுவது தொழிலாளர்களின் பாதுகாப்பு அல்ல, மாறாக இந்த அமைப்புகளைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பவர்களும் மக்களின் உயர் ஐந்து சதவீதத்தினரில், இன்னும் உயர் ஒரு சதவீதத்தினரிலும் கூட இடம்பெறும்படியான வருவாய் கொண்டவர்களுமான தொழிற்சங்க நிர்வாகிகளது நிதிப் பாதுகாப்பு ஆகும்.

ஐக்கிய வாகன உற்பத்தித் தொழிலாளர் சங்கத்தை (UAW) சூழ்ந்திருக்கும் ஊழல் மோசடிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்தின் ஊதியப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர், நிறுவனங்களுக்கு மலிவான உழைப்பை அளிக்கும் தொழிலாளர் படையை சீராக விநியோகம் செய்வதுடன் நிர்வாகத்தின் ஒரு போலிஸ் படையாகவும் செயல்படும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை ஊர்ஜிதப்படுத்தவே செய்திருக்கின்றன.

அமெரிக்காவில் ஆசிரியர் போராட்டங்கள், பிரான்சில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள், மெக்சிகோவில் மத்தமோரோஸ் வேலைநிறுத்தம், இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களது போராட்டங்கள் ஆகியவை உள்ளிட கடந்த ஆண்டில் நடைபெற்ற மிகக் குறிப்பிடத்தக்க சமூக போராட்டங்கள் ”தொழிற்சங்கங்கள்” என்று சொல்லப்படுவதான முதலாளித்துவ-ஆதரவு தேசியவாத அமைப்புகளுக்கு எதிராய் உருவாகின மற்றும் அபிவிருத்தியடைந்தன என்பது அவற்றின் ஒரு வரையறையான குணாம்சமாய் இருந்தது. இங்கே அமெரிக்காவில், சாமானியத் தொழிலாளர் கமிட்டிகளின் ஒரு கூட்டணியை உருவாக்கும் SEP இன் போராட்டத்திற்கு தொழிலாளர்களிடம் ஆதரவு பெருகியிருக்கிறது.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரானதுமான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளையும் ஒன்றாகக் கொண்டுவருகின்ற புதிய அமைப்புகளை, தொழிற்சாலை சாமானியத் தொழிலாளர் கமிட்டிகள் மற்றும் நடவடிக்கைக் கமிட்டிகளை உருவாக்குவதை அவசியமாக்குகின்ற ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்தை நோக்கியதாக, அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களது போராட்டங்களின் புறநிலைத் துடிப்பு அமைந்திருக்கிறது.

வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தி அதன் ஆரம்ப கட்டங்களிலேயே இருக்கிறது. அமெரிக்காவிலும் சரி சர்வதேச அளவிலும் சரி, புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதே மிக இன்றியமையாத பணியாகும். இந்தப் பேரணியை ஆரம்பித்து வைக்கையில் டேவிட் நோர்த் வலியுறுத்தியவாறாக, முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன இயக்கம் புத்துயிர் பெறுவதற்கான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நமது சொந்த இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகள், வர்க்கப் போராட்டத்தின் புறநிலை இயக்கத்துடன் குறுக்கிடும் புள்ளி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நான்காம் அகிலத்தின் பணி உலக இயக்கத்துக்கு விளக்கம் கொடுப்பது மட்டுமல்ல, அந்தப் புரிதலின் அடிப்படையில், அதனை மாற்றுவதும் ஆகும்.

தொழிலாள வர்க்கத்தில் உண்மையான சோசலிச அரசியலுக்காக சளைப்பற்றுப் போராடுவது என்பதே இதன் பொருளாகும். சமூக அமைதியின்மை பெருகிச் செல்கின்ற நிலைமைகளின் கீழ், ஆளும் வர்க்கம் பாதுகாப்பு வால்வுகளை, எதிர்ப்பை திசை மாற்றி விடுகின்ற, அதனை ஏற்புடைய வகைகளுக்குள் கட்டுப்படுத்தி வைக்கும் அரசியல் பொறிமுறைகளை முன்கொண்டு வருகிறது. இப்படியான ஒருவர் தான் பேர்னி சாண்டர்ஸ், அமல்படுத்தும் எந்த எண்ணமுமற்ற சமூக சீர்திருத்தங்களது ஒரு மெல்லிய பூச்சைக் கொண்டு ஒரு போர்வெறிக்கூச்சல் கட்சிக்கு மறைப்பு வழங்கப் பார்ப்பதுதான் அவரது பாத்திரமாய் இருக்கிறது. அமெரிக்காவில் அலெக்ஸாண்ட்ரியா ஒகசியோ-கோர்ட்டெஸ், மற்றும் சர்வதேச அளவில், ஜெரிமி கோர்பின்கள், கிரீசில் போலி-இடது சிரிசா, ஸ்பெயினில் பொடெமோஸ், ஜேர்மனியில் இடது கட்சி, இவை அனைத்துமே இதே பாத்திரத்தையே வகிக்கின்றன.

அசாஞ்சின் துயர்நிலை விடயத்தில் ஐக்கிய இராச்சியத்தில் கோர்பின் கோழைத்தனமான மௌனம் காப்பதை தோழர் கிறிஸ் குறிப்பிட்டார். இதுதான் அமெரிக்காவில் சாண்டர்ஸினால் செய்யப்படுவதுமாகும், இவர் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை ஒட்டி —கபடவேடத்தில் ஒரு உச்சமான பயிற்சி— பதிவிட்ட ட்வீட்டில், “பத்திரிகையாளர்கள் தங்கள் வேலையைச் செய்யும்போது உயிருக்கு அஞ்சும் நிலை இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார். அசாஞ்ச் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

அவர்கள் சோசலிசம் குறித்துப் பேசுவதைப் பொறுத்தவரை, அது முதலாளித்துவ அரசின் இப்போதைய அரசியல் ஸ்தாபகங்களுக்கு எந்த சவாலும் விடுக்காமலேயே, பொருளாதார வாழ்வின் எந்த அடிப்படை மறுஒழுங்கமைப்பும் இல்லாமலேயே, ஏகாதிபத்தியத்துக்கு எந்த சவாலும் இல்லாமலேயே சாதிக்கப்பட முடியும் என்பதாக அவர்கள் கூறிக் கொள்கின்றனர்.

உண்மையான சோசலிசம் என்பது, சமூக சமத்துவக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், தொழிலாள வர்க்கத்தை சுரண்டியும் வறுமைத்துயருக்குள் தள்ளியும் செல்வந்தர்களால் ஏகபோகமாக்கிக் கொள்ளப்பட்ட மிகப் பெரும் செல்வம் கைப்பற்றப்பட்டு சமூக தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை நோக்கி செலுத்தப்பட்டாக வேண்டும் என்பதையும் சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களும் ஒரே சமூக நலன்களையும் ஒரே வர்க்க எதிரிகளையுமே கொண்டிருக்கின்றனர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சோசலிசம் சர்வதேசியமயமானது. தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிரியாக்கும் விதத்தில் பிளவுபடுத்துவதற்கும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் மீதான மிகப்பெரும் துன்புறுத்தலை நியாயப்படுத்துவதற்கும் ஆளும் வர்க்கத்தால் ஊக்குவிக்கப்பட்டு வருகின்ற நஞ்சான தேசியவாதத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்.

உலகை ஒரு அணு ஆயுதப் பேரழிவு சூழச் செய்ய அச்சுறுத்துகின்ற ஒரு ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டத்தில் இருந்து சோசலிசம் பிரிக்க முடியாததாகும். ஜூலியன் அசாஞ்ச், செல்சியா மானிங் மற்றும் அவர்களுடன், ஏகாதிபத்தியப் போரையும் முதலாளித்துவ உயரடுக்கின் கொள்கைகளையும் எதிர்த்ததற்காக பலியாக்கப்பட்டிருக்கும் அனைவரையும் விடுதலை செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் சோசலிச இயக்கம் அதன் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தும்.

உண்மையான சோசலிசம் உலக மக்களின் மிகப் பெரும்பான்மையான தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகும். வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது, தொழிலாள வர்க்கம் இறந்து விட்டது என்றும், அது இனியும் ஒரு புரட்சிகர சக்தியாக இல்லை என்றும், நவீன சமூகத்தின் மையமான பிளவுகள் வர்க்கப் பிளவுகள் அல்ல மாறாக இனம் அல்லது பால் அடிப்படையிலான பிளவுகள் என்றுமான அடையாள அரசியல் மற்றும் பின்-நவீனத்துவ தத்துவங்களது விநியோகிப்பாளர்களான உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகைபெற்ற பிரதிநிதிகளது பிற்போக்கான தத்துவங்கள் அத்தனையையும் தகர்த்திருக்கிறது.

உண்மையான சோசலிசம் புரட்சிகரமானது. நாங்கள் முன்மொழிவது மெல்லிய சீர்திருத்தங்கள் அல்ல, மாறாக, ஆளும் வர்க்கம் சகித்துக் கொள்ளப் போகாத பிரம்மாண்ட வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் மீதான ஜனநாயகக் கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதன் ஊடாக முதலாளித்துவ சொத்துறவுகளைத் தூக்கிவீசுகின்ற புரட்சியை ஆகும்.

நான்காம் அகிலமானது, ரஷ்யப் புரட்சியில் லெனினின் இணைத் தலைவராய் இருந்த லியோன் ட்ரொட்ஸ்கியால், எண்பது ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு முன்பாய் அது ஸ்தாபிக்கப்பட்டது முதலாக, ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் மார்க்சிசத்தின் அத்தனை திரிப்புகளுக்கும் எதிராய் புரட்சிகர சோசலிச சர்வதேசியவாதத்திற்காக போராடி வந்திருக்கிறது. ட்ரொட்ஸ்கிசமே இன்றைய சோசலிசமாகும், அது, உலகெங்கிலும் சோசலிச சமத்துவக் கட்சிகளைக் கொண்டிருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உருவடிவம் கொண்டிருக்கிறது.

இன்று இந்தப் பேரணியில் பங்கேற்கும் அனைவரையும் ICFI இல் இணைந்து அதனைக் கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு அழைப்பு விடுக்கிறோம்.

Loading