SEP/IYSSE (இலங்கை) நடத்தும் பகிரங்க விரிவுரை - "இலங்கையில் 2022 வெகுஜன எழுச்சியில் இருந்து இரண்டு ஆண்டுகள்: அரசியல் படிப்பினைகள்"

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், ஜூன் 4 மாலை 4 மணிக்கு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் “2022 வெகுஜன எழுச்சியில் இருந்து இரண்டு ஆண்டுகள்: அரசியல் பாடங்கள்” என்ற தலைப்பில் ஒரு பகிரங்கை விரிவுரையை நடத்துகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2022 இன் முதல் பாதியில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ|விற்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிரான வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களால் இலங்கை அதிர்ந்தது.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரினால் தீவிரமாக்கப்பட்ட நாட்டின் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் சமூகச் சுமையை இராஜபக்ஷ உழைக்கும் மக்கள் மீது கொடூரமாக சுமத்துவதற்கு எதிராக, இந்த அரசாங்க எதிர்ப்பு இயக்கம் வெடித்தது. இந்தப் போராட்டங்கள் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

இந்த எதிர்ப்புக்கள் ஏப்ரல்-ஜூலை மாதங்களில் கொழும்பில் காலி முகத்திடல் ஆக்கிரமிப்புடன் உச்சத்துக்கு வந்ததுடன் இலங்கையின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் இனப் பிளவுகளைக் கடந்து ஏனைய நகரங்களிலும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆகிய திகதிகளில், இரண்டு ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றினர். இந்த எழுச்சி ஜனாதிபதி இராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேறி இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்ததுடன் அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.

எவ்வாறாயினும், முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) போன்ற போலி-இடது குழுக்களின் ஆதரவுடன், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் இந்த வெகுஜன இயக்கத்தை சிதைக்க, முதலாளித்துவ ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் அதன் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றுடன் தங்களை இணைத்துக் கொண்டு, இந்த வெகுஜன எழுச்சியை தடம்புரளச் செய்து பாராளுமன்ற கட்டமைப்போடு அதை கட்டிப்போட்டு வைத்தனர்.

இந்த அரசியல் காட்டிக்கொடுப்பு, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் இலங்கையின் ஆளும் உயரடுக்கிற்கு மதிப்பிழந்த ரணில் விக்கிரமசிங்கவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அமரவைப்பதற்கு வழிவகுத்தது. காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் ஆக்கிரமிப்புகளை கொடூரமாக நசுக்கிய விக்கிரமசிங்க, பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடுமையான சிக்கன நடவடிக்கைகளையும் ஜனநாயக உரிமைகள் மீதான பல்வேறு தாக்குதல்களையும் முன்னெடுத்தார்.

ஏன் இந்த வெகுஜன இயக்கம் காட்டிக்கொடுப்புக்கு உள்ளானது மற்றும் முதலாளித்துவ ஆட்சியின் இந்த தற்காலிக ஸ்திரப்படுத்தல் எப்படி சாத்தியமானது? ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு, கிராமப்புற ஏழைகளின் ஆதரவுகொண்ட ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு ஒரு வெகுஜன புரட்சிகரக் கட்சி இருக்கவில்லை என்பதே இதற்கான பதில் ஆகும்.

இந்தப் போராட்டம் வெடித்த போது, தொழிலாளர்கள் மற்றும் ஏழை வெகுஜனங்களின் சமூக நிலைமைகளைப் பாதுகாப்பதற்கும் குறித்த இயக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் ஒரு வேலைத்திட்டத்தை வழங்கிய ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. அரசாங்கத்துக்கும் இலாப முறைமைக்கும் எதிராக முதலாளித்துவக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றுக்கு வக்காலத்து வாங்கும் போலி-இடது அமைப்புகளில் இருந்தும் சுயாதீனமாக ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை நடத்துவதற்கு, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிந்தது.

சோசலிச கொள்கைகளுக்காகவும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகவும் போராட, அந்த நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் அடங்கிய, சோசலிசத்துக்கும் ஜனநாயகத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஒரு மாநாட்டிற்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கைத் தொழிலாளர்களும் கிராமப்புற மக்களும், அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக மீண்டும் போராட்டத்திற்கு வந்துகொண்டிருக்கின்றனர். எவ்வாறாயினும், போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் உதவியுடன் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள், இந்தப் போராட்டங்கள் கட்டுப்பாட்டை மீறிப் பெருகும் என்ற அச்சத்தில் வேண்டுமென்றே அவற்றைத் தடுக்கின்றன. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் போலவே, தொழிற்சங்கத் தலைமைத்துவமும், முதலாளித்துவ ஆட்சியை சரிவின் விளிம்பிற்கே கொண்டு வந்த 2022 ஏப்ரல்-ஜூலை வெகுஜன எழுச்சி பற்றிய பீதியினால் பீடிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியாக, இலங்கைத் தொழிலாளர்களும், வேகமாக மாறிவரும் அரசியல் சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்ட ஏகாதிபத்திய சக்திகள், ஆழமடைந்துவரும் முதலாளித்துவ நெருக்கடிக்கு மத்தியில், உலகை ஒரு பேரழிவுகரமான மூன்றாம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்கின்றன. இந்தப் பேரழிவைத் தடுப்பதற்கான ஒரே வழி, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்த சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே ஆகும்.

விக்கிரமசிங்க அரசாங்கமும், இலங்கையின் ஆளும் உயரடுக்கின் ஏனைய பிற்போக்கு பிரதிநிதிகளும், 2022 வெகுஜன எழுச்சியை ஒரு “பயங்கரவாத செயல்” அல்லது “சதி” என்று தாக்கும் அதே வேளை, போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சியானது, வளர்ச்சியடைந்து வரும் அரசாங்க விரோத உணர்வை, முதலாளித்துவ பாராளுமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு மக்கள் சபையை கட்டியெழுப்பும் அழைப்பை பிரசித்தப்படுத்துவதற்காக சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றது.

பிற்போக்கு சக்திகளுக்கும் போலி-இடதுகளுக்கும் எதிராக, 2022 வெகுஜன அரசாங்க எதிர்ப்பு எழுச்சியின் முக்கிய படிப்பினைகளைப் பெறுவதற்கே சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் போராடுகின்றன. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியே ஜூன் 4 அன்று நடக்கவுள்ள பகிரங்க விரிவுரை ஆகும்.

தற்போதைய உலகளாவிய அபிவிருத்திகளின் பின்னணியில் சோசலிச சமத்துவக் கட்சியை ஒரு வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புவதற்கான அரசியல் தேவை பற்றி இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படும். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ள அனைவரையும் எதிர்வரும் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த தீர்க்கமான பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இடம்:

பொது நூலக கேட்போர் கூடம், கொழும்பு

திகதி மற்றும் நேரம்: ஜூன் 4 மாலை 4 மணி.

Loading