முன்னோக்கு

பிரித்தானியாவின் திடீர் பொதுத் தேர்தல்: ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போரை வழிநடத்துவதற்கான ஒரு முன்னோடி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜூலை 4 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று புதன்கிழமை அறிவித்தது அவரது சொந்த பழமைவாத எம்.பி.க்களுக்கு கூட அதிர்ச்சியாக இருந்தது. 

அமைச்சர்களும் பின்வரிசை உறுப்பினர்களும் இந்த முடிவை “பைத்தியக்காரத்தனம்” என்று கூறினர். கருத்துக்கணிப்புகளில் எதிர்க்கட்சியான தொழிற் கட்சியை விட பழமைவாதிகள் 20 புள்ளிகள் பின்தங்கி உள்ளனர். பிரதம மந்திரி தனது அறிவிப்பை வெளியிட டவுனிங் தெருவுக்கு வெளியே கொட்டும் மழையில் நிற்பதற்கு ஒரு மணி நேரத்திற்குள் அமைச்சரவை கூட்டம் அழைக்கப்படும் வரை சுனக்கின் நெருங்கிய அமைச்சரவை கூட்டாளிகளுக்கு இதுபற்றி தெரிவிக்கப்படவில்லை.

ரிஷி சுனக் (நடுவில்) நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்குடன் (இடது) ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார், பின்னர் போலந்தின் வார்சா கவச பிரிகேட் இராணுவ தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டிஷ் படையினர்களை சந்தித்தார், ஏப்ரல் 23, 2024 [Photo by Simon Walker/No 10 Downing Street / CC BY-NC-ND 2.0]

எவ்வாறாயினும், சுனக்கின் முடிவும் அதை செயல்படுத்தும் வேகமும் இரகசியமும் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் மற்றும் அமெரிக்காவில் உள்ள அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளின் கணக்கீடுகளுடன் பிணைந்துள்ளன. அவர்கள் போருக்கு வளர்ந்து வரும் எதிர்ப்பை முன்கூட்டியே தடுக்கவும், ரஷ்யாவுடனான மோதலை பாரிய அளவில் விரிவுபடுத்துவதற்கான அரசியல் கட்டமைப்பை உருவாக்கவும் முன்கூட்டிய தேர்தல்கள் அவசியம் என்று நம்புகின்றனர். 

சுனக் தனது அறிவிப்பில், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் நடைமுறைப் போரின் விரைவான விரிவாக்கம்தான் அவரது கருத்தில் முதன்மையானது என்று தெளிவுபடுத்தினார். “பனிப்போர் முடிவுக்கு வந்ததை விட உலகம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் நேரத்தில் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது” என்று அவர் அறிவித்தார். “புட்டினின் ரஷ்யா உக்ரேனில் ஒரு கொடூரமான போரை நடத்தி வருகிறது, அவர் வெற்றி பெற்றாலும் அத்துடன் நிற்காது” என்று தெரிவித்தார்.

“மத்திய கிழக்கில், இஸ்லாமிய தீவிரவாத சக்திகள் பிராந்திய மற்றும் இறுதியில் உலகளாவிய ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகின்றன”. அதேவேளையில், “சீனா 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்ப முன்னணியைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. மற்றும் புலம்பெயர்வு என்பது நமது எல்லைகளின் ஒருமைப்பாட்டை அச்சுறுத்துவதற்கு விரோதமான நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

இந்த பொதுத் தேர்தலில் போர் மற்றும் தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவது, உக்ரேன் மோதலில் ஒரு புதிய கட்டத்திற்கான முன்னேறிய தயாரிப்புகளால் கட்டளையிடப்படுகிறது. இதில், நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவை நேரடியாக குறிவைப்பது மற்றும் நேட்டோ துருப்புக்களை போர் மண்டலத்திற்கு அனுப்புவது ஆகியவை அடங்கும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய இராணுவ நட்பு நாடாக இருந்து வரும் ஐக்கிய இராச்சியம், தனது சிறப்புப் படைகளை அனுப்புவது மற்றும் ஆயிரக்கணக்கான உக்ரேனிய துருப்புக்களுக்கு பயிற்சி அளிப்பது உட்பட உக்ரேனில் ஒவ்வொரு தீவிர நடவடிக்கைகளிலும் முன்னணியில் உள்ளது. போரிஸ் ஜோன்சனின் தலைமையின் கீழ்தான் மோதல் முதன்முதலில் பிப்ரவரி 24, 2022 அன்று வெடித்தது. ஜோன்சன் தனது அரசாங்கத்தை வரையறுக்க போருக்கான பிரிட்டனின் ஆதரவை விரும்பினார். 

ஆனால் வாஷிங்டன், பிரிட்டனில் ஆழ்ந்த ஸ்திரமற்ற அரசாங்கத்தை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. குறிப்பாக 230,000 க்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற பெருந் தொற்றுநோய்களின் போது பின்பற்றப்பட்ட கொலைகார நோய் எதிர்ப்புச் செயல்திட்டம் மற்றும் கசப்பான கன்னை மோதல்கள் மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் வெறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் ஆட்சியை அது நம்பியிருக்கிறது.

ஜூலை 7, 2022 அன்று பழமைவாதக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய ஜோன்சன் கட்டாயப்படுத்தப்பட்டார். அவர், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் பினாமிப் போரின் போது பதவி விலகிய ஒரு பெரிய ஏகாதிபத்திய சக்தியின் முதல் தலைவரானார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஜூலை 8 முன்னோக்கு பத்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் அடுத்த கட்டத் தாக்குதலையோ அல்லது ஐரோப்பாவில் நேட்டோவின் போரை நடத்துவதையோ ஜோன்சன் நம்பமுடியாத அளவிற்கு பிளவுபடுத்தும் மற்றும் மதிப்பிழந்த நபராக இருப்பது, அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு இட்டுச்சென்ற தலைமைத்துவத்திற்கு எதிரான சவாலை தூண்டுவதிலிருந்த அரசியல் பயமாகும். 

அவரது பலவந்தமான இராஜினாமா, “முன்னாள் இராணுவ பிரமுகர்கள் மேலாதிக்கம் செலுத்திய ஒரு தலைமைத்துவ போட்டியைக் கட்டவிழ்த்து விட்டது” என்று உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது, இறுதியில் வெறித்தனமான போர்வெறியரான ஜோன்சனின் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் தான் வென்றார். லிஸ் ட்ரஸ் அவரது தலைமைத்துவ பிரச்சாரத்தின் போது ரஷ்யாவுக்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்த அவர் தயாராக இருப்பதாக பெருமைபீற்றினார். 

ஆனால், செப்டம்பர் 2022 இல் அவர் பதவியேற்ற பிறகு, பெரிய மற்றும் நிதியளிக்கப்படாத வரி வெட்டுக்களை அறிவித்ததற்காக உலகளாவிய சந்தைகளின் அழுத்தத்தின் கீழ், டிரஸ் அக்டோபர் 20 அன்று விரைவாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

அப்போதிருந்து, சுனக்கை பிரதியீடு செய்வது இறுதியாக அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்ற எந்தவொரு நம்பிக்கையும், பழமைவாதிகளின் சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு எதிரான சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பின் தொடர்ச்சியான வளர்ச்சியால் சிதைக்கப்பட்டது - முதலில் 2022 வேலைநிறுத்த அலையில் வெடித்த இந்த எதிர்ப்பு, பின்னர் காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு பிரிட்டனின் ஆதரவுக்கு எதிரான பாரிய இயக்கத்தில் அரசியல் வடிவத்தை எடுத்தது.

எனவே, பிரதமராக தனது பதவியைக் காப்பாற்றுவதற்கான சுனக்கின் முயற்சிகள், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் மையத்தில் போரை வைப்பதற்கான வாஷிங்டனின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தியிருந்தன.

ஏப்ரல் 23 அன்று, போலந்தின் வார்சாவில் உள்ள ஒரு இராணுவ தளத்தில், பிரிட்டன் தனது இராணுவ செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று அவர் அறிவித்தார். இது “அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக நேட்டோவில் இரண்டாவது மிகப்பெரிய பாதுகாப்பு செலவினமாக இங்கிலாந்து இருப்பதை உறுதிப்படுத்துகிறது.”

அவர் ஐக்கிய இராஜ்ஜியத்தின் “பாதுகாப்புத் தொழில்துறையை ஒரு போர் நிலைப்பாட்டில்” நிறுத்தி வருவதுடன், “400 க்கும் அதிகமான வாகனங்கள், 4 மில்லியன் சுற்று வெடிமருந்துகள், 60 படகுகள் மற்றும் கடலோர தாக்குதல் படகுகள், இன்றியமையாத வான்வழி பாதுகாப்புகள், மற்றும் நீண்டதூர துல்லியமாக புயல் வேகத்தில் தாக்கும் ஏவுகணைகள்” உட்பட “முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு இங்கிலாந்து இராணுவ தளவாடங்களின் மிகப்பெரும் தொகுப்பை” உக்ரேனுக்கு அனுப்பும் என்று அவர் கூறியிருந்தார்.

மே 3 அன்று, உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கியை சந்தித்தபோது, வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன், அங்கீகரிக்கப்பட்ட ரஷ்ய எல்லைக்குள் உள்ள இலக்குகளுக்கு எதிராக விமானத்தில் இருந்து புயல் வேகத்தில் தாக்கும் பிரிட்டனின் குரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனுக்கு பச்சை விளக்கு காட்டினார். 

இறுதியாக, பழமைவாதிகளின் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தை விளக்கி மே 13 அன்று வழங்கிய உரையில், சுனக், “கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு உலகம் ஒரு ஆபத்தான அணு ஆயுத அதிகரிப்புக்கு நெருக்கமாக உள்ளது,” என்று எச்சரித்தார், இதற்கு “ரஷ்யா, ஈரான், வட கொரியா மற்றும் சீனா போன்ற எதேச்சதிகார அரசுகளின் ஒரு அச்சு” மீது பழிசுமத்தினார்.

“ஐரோப்பாவில் போர் மீண்டும் வந்துள்ளது, உக்ரேனில் புட்டின் வெற்றி பெற்றால், அடுத்தது தாங்களாக இருக்கக் கூடும் என்று நமது நேட்டோ கூட்டாளிகள் எச்சரிக்கின்றனர்,” என்று அவர் அறிவித்தார். 

காஸா-விரோத இனப்படுகொலை மற்றும் போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மீது காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட அவர், அவற்றை “நமது தாராளவாத ஜனநாயக விழுமியங்களை” துஷ்பிரயோகம் செய்வதாக கண்டனம் செய்தார். 

ஆனால் வாஷிங்டனோ அல்லது பிரிட்டிஷ் ஆளும் வர்க்கமோ திறம்பட ஆட்சி செய்ய முடியாத மற்றும் அனைத்து சட்டபூர்வத்தன்மையும் அற்ற ஒரு அரசாங்கம் ஒரு கணம் கூட பதவியில் நீடிப்பதை சகித்துக்கொள்ள மாட்டாது. எனவே இந்த அரசாங்கம் அவருக்கு தோல்வியை உறுதி செய்தாலும், சுனக் நாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சேர் கெய்ர் ஸ்டார்மரின் தொழிற் கட்சி இப்போது வெளிநாடுகளில் போர் தொடுப்பதற்கும், போருக்கு பணம் கொடுப்பதற்காக சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்கும், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் ஒரு நம்பகமான மற்றும் மிகவும் பயனுள்ள கருவியாக பார்க்கப்படுகிறது என்பதை ஊடக வர்ணனைகள் தெளிவுபடுத்துகின்றன. அவரது அரசாங்கம் பழமைவாதிகளின் கொள்கையில் இருந்து எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவராது. மாறாக, அதன் தொடர்ச்சியைக் கொண்டுவரும், அதேவேளையில் தொழிற்சங்க எந்திரத்தின் சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளும். 

தொழிற் கட்சி மிகவும் வணிக-நட்பு கட்சி மட்டுமல்ல, மாறாக ரஷ்யாவுக்கு எதிராக போர் தொடுக்க உறுதிபூண்டுள்ள “நேட்டோவின் கட்சியாகும்” மற்றும் காஸாவில் இனப்படுகொலை மற்றும் மத்திய கிழக்கில் ஒரு பரந்த போரை ஆதரிக்க தயாராக இருக்கும் சியோனிச கட்சி என்பதை நிரூபிப்பதற்காக, ஜெர்மி கோர்பின் மற்றும் அவரது பல பிரதான கூட்டாளிகளை நாடாளுமன்றக் கட்சியில் இருந்து வெளியேற்றியதன் மூலமாக ஸ்டார்மரும் அவரது முன்வரிசை உறுப்பினர்களும் பதவிக்கான தங்கள் தயாரிப்புகளைத் தொடங்கினர். 

ஸ்டார்மர் ஏப்ரலில் டெய்லி மெயிலிடம் தனது நேட்டோ-சார்பு கொள்கை (அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தனது விருப்பத்தின் தொடர்ச்சியான அறிவிப்புகள்) “அதிகரித்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்கள் மற்றும் வளர்ந்து வரும் ரஷ்ய ஆக்கிரமிப்புகளை” எதிர்கொண்டு முன்னேறி வருவதாக கூறினார். … “எமது தேசிய பாதுகாப்பு எப்போதும் முதன்மையானது என்பதை நான் வழிநடத்தும் மாற்றத்துக்குள்ளான தொழிலாளர் கட்சிக்கு தெரியும்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஜூலை 4 தேர்தலில் தொழிற் கட்சி வெற்றி பெறுமானால், ஸ்டார்மரின் முதல் சர்வதேசப் பயணம் ஜூலை 9-11 இல் வாஷிங்டனில் நடக்கவிருக்கும் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு செல்வதாக இருக்கும், அங்கு ரஷ்யாவிற்கு எதிரான ஆக்ரோஷத்தை முடுக்கிவிடுவதற்கான திட்டங்கள் விவாதிக்கப்படும். 

தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மிகப்பெரிய அரசியல் அபாயம் என்னவெனில், ஒரு பரந்த போருக்கான தயாரிப்புகளின் முன்னேற்றம் குறித்து தற்போது சிறிதளவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்து சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில், சுனக் மற்றும் ஸ்டார்மர் இருவரும் வெறுக்கப்படுகிறார்கள்.

ஆயினும், போரை நிறுத்துங்கள் கூட்டணி போன்ற இந்த இயக்கங்களின் தலைமை, என்ன நடக்கிறது என்பது ஏகாதிபத்திய சக்திகள் உலகத்தையும் அதன் வளங்களையும் தங்களுக்குள் மீண்டும் பகிர்ந்து கொள்ளும் முயற்சியாகும் என்பதை விளக்க எந்தவிதமான தீவிரமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதில் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போர், பாலஸ்தீனியர்களின் மீதான பாரிய படுகொலை மற்றும் இன அழிப்புக்கு ஆதரவு மற்றும் ஈரான் மற்றும் சீனாவைத் குறிவைத்து தாக்குதல் ஆகியவை ஒரே உலகளாவிய மோதலின் பல்வேறு போர்முனைகளாக உள்ளன.

தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்குவது என்பது, தொழிற் கட்சிக்கான எதிர்ப்பை பிரதானமாக முஸ்லீம் தொகுதிகளில் பாதிப்பில்லாத எதிர்ப்பு வாக்குகளுடனும் மற்றும் அதிக வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் மட்டுப்படுத்தும் முயற்சிகளை மையமாகக் கொண்டுள்ளது, அதேவேளையில் இடதிற்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய டோரிக்களை விட தொழிற் கட்சி “குறைந்த தீமை” என்று ஆதரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. 

இந்த அரசியல் காட்டிக்கொடுப்புக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி போராடி வருகிறது. நாங்கள் இந்த பொதுத் தேர்தலில் டோரி மற்றும் தொழிற் கட்சிகளுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துகிறோம். ஒரு ஸ்டார்மர் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மரண விரோதியாக இருக்கும் என்றும், வெளிநாட்டில் போருக்கும் உள்நாட்டில் வர்க்கப் போருக்கும் பொறுப்பேற்றிருக்கும் என்றும் நாங்கள் எச்சரிக்கிறோம். காஸா இனப்படுகொலை, உக்ரேனிய போர் மற்றும் ஈரான் மற்றும் சீனாவுக்கு எதிரான போர் திட்டங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு பாரிய இயக்கத்தை ஒழுங்கமைப்பதும் மற்றும் இந்த வாழ்வா-சாவா போராட்டத்திற்கு அவசியமான சோசலிச தலைமையைக் கட்டியெழுப்புவதுமே எங்கள் நோக்கமாகும். 

Loading