அணு ஆயுதப் போர் குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

கடந்த திங்களன்று, பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதம மந்திரி ரிஷி சுனக், “கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பிந்தைய எந்தவொரு புள்ளியையும் விட உலகமானது ஓர் அபாயகரமான அணு ஆயுதத் தீவிரப்பாட்டிற்கு நெருக்கமாக உள்ளது” என்று எச்சரித்தார்.

கன்சர்வேடிவ் கட்சியின் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி, ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலை மேற்கோளிட்டு வழங்கிய ஓர் உரையில், “அடுத்த சில வருடங்கள் மிகவும் ஆபத்தானவையாக இருக்கும், ஆனால் நமது நாடு இதுவரை அறிந்திராத வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

பிரதமர் ரிஷி சுனக் கொள்கை பரிமாற்ற நிகழ்வில் பாதுகாப்பு குறித்த தனது உரையை நிகழ்த்துகிறார், மே 13, 2024 [Photo by Simon Dawson/No 10 Downing Street / CC BY-NC-ND 4.0]

கொள்கைப் பரிமாற்ற சிந்தனைக் கூட்டத்தில் பேசிய சுனக், அணு ஆயுத மோதலின் அச்சுறுத்தலுக்கான அனைத்துப் பழியையும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும், பொதுவாகப் போருக்கு “ரஷ்யா, ஈரான், வட கொரியா மற்றும் சீனா போன்ற சர்வாதிகார நாடுகளின் அச்சுகளே காரணம்,” என்று சுனக் குற்றம் சுமத்தினார். “இது நம்மையும் நமது மதிப்புகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்று கூறினார்.

சுனக் பின்வருமாறு அறிவித்தார்: “ஐரோப்பாவில் போர் மீண்டும் வந்துள்ளது, உக்ரேனில் புட்டின் வெற்றி பெற்றால், அவர்கள் அடுத்த இலக்காக இருக்கக்கூடும் என்று எங்கள் நேட்டோ கூட்டாளிகள் எச்சரித்துள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாக முதன்முறையாக ஈரானில் இருந்து நேரடியாக சரமாரியாக ஏவப்படும் ஏவுகணைகளுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதால் மத்திய கிழக்கிலும் போர் உக்கிரமடைகிறது. இப்போது ஆப்பிரிக்காவில், 18 வெவ்வேறு நாடுகளில் மோதல்கள் நடந்து வருகின்றன...”

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளால் ஆக்கிரமிப்புக்கு இலக்கு வைக்கப்பட்ட அரசுகளே கண்டங்கள் முழுவதும் போர் தீவிரமடைவதற்கும் அதனுடன் இணைந்த பயங்கரங்களுக்கும் காரணம் காட்டி சுனக் அனைத்தையும் தலைகீழாக மாற்றுகிறார். ஏனெனில் ஏகாதிபத்திய சக்திகள் உலக இருப்புக்கள் மற்றும் சந்தைகள் மீது சவாலுக்கிடமற்ற கட்டுப்பாட்டை நாடுகின்றன.

எவ்வாறிருந்த போதிலும், இந்த யதார்த்தத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது உரையானது அணு ஆயுதமேந்திய நாடுகளுக்கு இடையிலான ஒரு நேரடி மோதலின் அபாயத்தைக் குறைக்க எந்த நடவடிக்கைகளையும் முன்வைக்கவில்லை. மாறாக என்ன விலை கொடுத்தாவது போர் தொடுப்பதற்கு நம்பத்தகுந்த தரப்பு பழமைவாதிகள்தான் என்று அவர் உறுதியளித்தார்.

“ஒரு கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமை நம் நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதாகும்,” என்று வலியுறுத்திய அவர், “2030 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதற்கான தலைமுறைரீதியான முடிவை நாங்கள் பெருமையுடன் எடுத்துள்ளோம். அப்படியிருந்தும் தொழிற்கட்சி எங்கள் உறுதிமொழியுடன் பொருந்த மறுத்துவிட்டது” என்று கூறினார்.

ஜெரமி கோர்பின் தனது கட்சியின் வலதுபக்கம் சரணடைவதற்கு முன்னர், நேட்டோவுக்கு தனது எதிர்ப்பையும், “நமது அணுவாயுத தடுப்பு, நமது பாதுகாப்பின் இறுதி உத்தரவாதமளிப்பவர்” என்றும் அறிவித்த ஜெர்மி கோர்பினின் கீழ் தொழிற்கட்சியின் குறுகிய கால இடதுசாரி திருப்பத்தின் பூச்சாண்டியை மீண்டும் சுனக் எழுப்பினார்.

“இது அனைத்தும் பழைய வரலாறு என்று தொழிற்கட்சி பாசாங்கு செய்ய விரும்புகிறது, ஆனால் அது அப்படி இல்லை, அது நம்மை கவலைப்பட வைக்க வேண்டும். ஏனென்றால் நமது நாட்டையும் நமது மதிப்புகளையும் பாதுகாக்கும் நோக்கத்தின் தீவிரத்தன்மை, தார்மீகத் தெளிவு மற்றும் அதற்கு நிதியளிக்க வேறு இடங்களில் பெரிய தேர்வுகள் மற்றும் தியாகங்களைச் செய்வதற்கான விருப்பம் ஆகியவை அவசியப்படுகின்றன” என்று சுனக் தெரிவித்தார்.

சுனக்கின் “தார்மீகத் தெளிவு” என்பது போரை நடத்துவதையும் புலம்பெயர்ந்தோர்-விரோத வேட்டையுடன் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் அத்தியாவசிய சமூக சேவைகளை அகற்றுவதுடன் இணைப்பதை உள்ளடக்கி இருந்தன.

“பெரும் மோதல் மற்றும் அபாயம் நிறைந்த உலகம்” என்பது “உலகளவில் இப்போது 100 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்” என்பதை அர்த்தப்படுத்துகிறது என்பதை ஒப்புக் கொண்ட பின்னர், “ரஷ்யா போன்ற நாடுகள் அவற்றின் சொந்த நோக்கங்களுக்காக புலம்பெயர்வை ஆயுதமாக்கி வருகின்றன” என்று சுனக் குற்றஞ்சாட்டினார். சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும், பாதுகாக்க முடியும்” என்று அவர் கூறினார். “அதனால்தான் நாங்கள் ருவாண்டா திட்டத்தின் முன்னோடியாக இருக்கிறோம். எனவே, அவர்கள் சட்டவிரோதமாக இங்கு வந்தால், அவர்கள் விரைவாக தடுத்து வைக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்பதை மக்கள் பார்க்கிறார்கள்... ஸ்ட்ராஸ்பேர்க் நீதிமன்றம் [மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய உடன்படிக்கை] மற்றும் இந்த நாட்டின் பாதுகாப்புக்கு இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க என்னை அனுமதித்தால், ஒவ்வொரு முறையும் நான் எங்கள் நாட்டின் பாதுகாப்பைத்தான் தேர்ந்தெடுப்பேன்,” என்று அவர் தெரிவித்தார்.

இனப்படுகொலை-எதிர்ப்பு மற்றும் போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு வாக்குறுதியளித்த அவர், “மற்றவர்களை மிரட்டுவதற்கும், அச்சுறுத்துவதற்கும், தாக்குவதற்கும், நமது தெருக்களிலும் நமது பல்கலைக்கழக வளாகங்களிலும் யூத-விரோத கோஷங்களைப் பாடுவதற்கும், பேச்சு சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமை ஆகிய நமது தாராளவாத ஜனநாயக விழுமியங்களை மக்கள் துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்...” என்றார்.

“சலுகைகளுக்கு உச்சவரம்பு விதித்தும், மக்கள் பணியில் ஈடுபடுவதற்கு [அதாவது, கட்டாயப்படுத்த] உலகளாவிய கடனை அறிமுகப்படுத்துவதன் மூலமும் நலன்புரி உதவிகளை சீர்திருத்தியுள்ளோம்” என்று அவர் பெருமையடித்துக் கொண்டார்.

இந்த வசைமாரியைக் கேட்ட பிரிட்டன் ஊடக நிருபர்கள் ஒன்றாக... ரஷ்யாவிற்கு எதிராக இறுதிவரை போர் தொடுப்பதில் கன்சர்வேடிவ்கள் தீவிரமாக இருந்தார்களா என்று கேள்வி எழுப்பினர். ஒரு சமாதான உடன்படிக்கையை அடைய முடியும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் வெளியுறவு செயலர் டேவிட் கேமரூன், நவம்பரில் ஜனாதிபதியான பின்னர் டொனால்ட் ட்ரம்பை உக்ரேனுக்கு அதிக நிதியுதவி வழங்க வற்புறுத்தியதாக LBC  வானொலியானது சண்டே டைம்ஸின் அறிக்கையை கேள்வியாக எழுப்பியது. LBC யின் நிருபர் “மேற்கத்திய நாடுகள் உக்ரேனை ஒரு சமாதான ஒப்பந்தத்தை எடுக்க நிர்பந்திக்கப் போவதில்லை” என்பதை உத்தரவாதங்களாகக் கோரினார். மேலும் “நாம் இப்போது ஒரு ஒப்பந்தத்திற்கு ஆதரவாக இருக்கிறோமா?” என்று சேனல் 4 கேள்வியாகக் கேட்டது.

“உக்ரேன் என்று வரும்போது நாங்கள் வழிநடத்தியுள்ளோம்” என்றும், “புதிய திறன்களை முதலில் வழங்குவது உட்பட, நான் எடுத்த முடிவு முக்கிய போர் டாங்கிகள், நீண்ட தூர ஆயுதங்கள்...” என்று இதற்கு சுனக் பதிலளித்தார்,

தொழிற்கட்சி தனது பங்கிற்கு, அதன் தலைவர் ஸ்டார்மர் செய்தியாளர்களிடம், தேசிய பாதுகாப்புக்கு எந்த “நம்பகமான திட்டமும்” இல்லை என்றும், பொது வழக்குத் தொடுப்பு இயக்குநராக பணியாற்றுவதிலிருந்து “தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை” அவர் முதலில் புரிந்துகொள்வதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

“இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பு பற்றி பேசுகிறது, ஆனால் அதன் சாதனை என்ன? இது நமது ஆயுதப் படைகளை வெறுமையாக்கியுள்ளது,” என்று ஸ்டார்மர் எதிர்வாதம் செய்தார். “நாங்கள் அதை விட தீவிரமாக இருக்கிறோம். எங்கள் நாட்டை முதலாவதாகவும், எங்கள் கட்சியை இரண்டாவதாகவும் வைக்கும் ஒரு மாற்றமடைந்த தொழிற்கட்சி நாங்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

இது தொழிற்கட்சியின் ஆரம்ப விடையிறுப்புதான். சுனக் இராணுவ செலவினச் சவாலை தூக்கி எறிந்துவிட்டு, அணு ஆயுத போரில் இருந்து பின்வாங்க கன்சர்வேடிவ்கள் மறுப்பதை வலியுறுத்தினார். தொழிற்கட்சியும் அவ்வாறே செய்யும்.

ஸ்டார்மர் பல மாதங்களாக, தொழிற்கட்சியானது “நேட்டோவின் கட்சி” என்று வலியுறுத்தி வருகிறார். ஏனெனில் உக்ரேனில் இரத்தந்தோய்ந்த படுகொலையை ஆதரித்துவரும் அவர், காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் ஈரான் மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் திட்டங்களை ஆதரித்து வருகிறார். கடந்த மாதம் BAE சிஸ்டம்ஸ் ஆயுத உற்பத்தி நிறுவனத்திற்கு விஜயம் செய்த ஸ்டார்மர், மூன்றாம் முறையாக தான் பதவியில் இருக்கும் போது, அணு ஆயுத ஏவுகணைகளைப் பயன்படுத்த ஒப்புதல் கொடுப்பதாக அறிவித்தார்.

அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளிலும் கன்சர்வேடிவ்களுக்கும் தொழிற்கட்சிக்கும் இடையே உண்மையான வேறுபாடு எதுவும் இல்லை. எது மிகவும் வணிக-சார்பு, சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க மிகவும் தயாராக உள்ளது, புலம்பெயர்வை ஒடுக்குவதற்கு சிறந்த கொள்கையைக் கொண்டுள்ளது, மற்றும் உலகை மறுபங்கீடு செய்வதற்கான பேரழிவை அச்சுறுத்தும் ஓர் உலகப் போரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை யார் வழிநடத்த முடியும் என்பதை நிரூபிப்பதற்காக மட்டுமே அவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக வசைபாடிக் கொள்கின்றனர்.

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு சுனக் மற்றும் ஸ்டார்மரின் ஆதரவை எதிர்த்து, வாரந்தோறும் வீதிகளில் இறங்கியுள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும், இந்த உண்மையை அறிந்துள்ளனர். ஆனால், தொழிலாளர்கள் தங்கள் சொந்தக் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும் மற்றும் எத்தகைய கட்சியை கட்டியெழுப்ப வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு அடிப்படையான முடிவிற்கு வர வேண்டும்.

பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அபாயங்கள் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதை சுனக்கின் உரை மீண்டும் வெளிப்படுத்துகிறது. ரஷ்யாவுடனான அணு ஆயுதப் போர் குறித்து அவர் பகிரங்கமாக பேசுகின்ற அதேவேளையில், ஆயுதங்களுக்கு அதிகம் செலவிடுவதும் அங்கே பேச்சுவார்த்தை மூலமான தீர்வு எதுவும் இருக்காது என்று சூளுரைப்பதுமே அவரது ஒரே விடையிறுப்பாக இருப்பதாக பெருமை பீற்றுகிறார். இதுதான் வாஷிங்டன், பாரிஸ் மற்றும் பேர்லின் மற்றும் உலகெங்கிலுமான ஒவ்வொரு ஏகாதிபத்திய தலைநகரத்தின் விடையிறுப்பாக உள்ளது.

காஸா இனப்படுகொலை, உக்ரேனியப் போர் மற்றும் ஈரான், சீனாவிற்கு எதிரான போர்த் திட்டங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு பரந்த சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியானது வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும். நமது கட்சி கன்சர்வேடிவ்கள் மற்றும் தொழிற்கட்சிகளில் உள்ள போர் குற்றவாளிகளை எதிர்க்கிறது.

நாங்கள் முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கும் சோசலிசத்திற்காகவும் போராடுகிறோம். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஒரு பொதுப் போராட்டத்தில் ஐக்கியப்படுத்துகிறோம். இந்தக் கோடைகால ஐரோப்பிய தேர்தல்களில், ஜேர்மனி உட்பட நமது சகோதரக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறோம், மற்றும் ட்ரம்ப் மற்றும் “இனப்படுகொலை” ஜோ பைடெனுக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி அதன் ஜனாதிபதி வேட்பாளராக ஜோசப் கிஷோரை நிறுத்தி இருக்கின்ற அமெரிக்கா உட்பட, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள நமது அனைத்து தோழர்களுடனும் கூட்டாகவும் நாங்கள் அதைச் செய்கிறோம். ஒரு பூகோள மோதல் தவிர்க்கப்பட வேண்டுமானால் தொழிலாளர்களும் இளைஞர்களும் கட்டாயம் இணைந்து கொள்ள வேண்டிய கட்சி சோசலிச சமத்துவக் கட்சி ஆகும்.

Loading