பிரிட்டன் வழங்கிய ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்த பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஒப்புதல் அளிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

பிரிட்டன் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்ய பிராந்தியத்தைத் தாக்க உக்ரேன் பயன்படுத்தக்கூடும் என்று பிரிட்டன் வெளியுறவு மந்திரி டேவிட் கேமரூன் வியாழனன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இந்த அறிவிப்பு நேட்டோ-ரஷ்ய பினாமிப் போரில் ஒரு பெரும் தீவிரப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா உடனான விவாதங்களுக்குப் பின்னர் கியேவில் பேசிய கேமரூன், பிரிட்டன் வழங்கிய இராணுவ உபகரணங்களைக் குறிப்பிட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில், “உக்ரேனியர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தவரை, எங்கள் பார்வையில், இந்த ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவர்களின் முடிவாகும், அவர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்கிறார்கள், அவர்கள் புட்டினால் சட்டவிரோதமாக படையெடுக்கப்பட்டனர், அவர்கள் அந்த நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மே 3, 2024 அன்று வெளியுறவு செயலாளர் டேவிட் கேமரூன் தனது உக்ரைன் விஜயத்தின் போது செயிண்ட் மைக்கேல் சதுக்கம் வழியாக நடந்து செல்கிறார். [Photo by British Embassy Kyiv/Flickr / CC BY-NC-ND 4.0]

“அந்த விஷயங்களுக்கு நாங்கள் விதிக்கும் எந்த நிபந்தனைகள் பற்றி நாங்கள் பேசுவதில்லை.

“ஆனால் முற்றிலும் தெளிவாக இருக்கட்டும், ரஷ்யா உக்ரைன் மீது ஒரு தாக்குதலைத் தொடங்கியுள்ளது, ரஷ்யாவை திருப்பித் தாக்க உக்ரைனுக்கு முற்றிலும் உரிமை உள்ளது.”

ரஷ்யாவைத் தாக்க பிரிட்டிஷ் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் இதில் உள்ளடங்குமா என்று வினவிய போது, கேமரூன் பதிலளித்தார், “அது உக்ரேனுக்கான ஒரு முடிவு, உக்ரேனுக்கு அந்த உரிமை உள்ளது.

“உக்ரேனுக்குள் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதைப் போலவே, உக்ரைன் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை ஏன் உணர்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும், அது ரஷ்யர்களை அதன் நாட்டில் இருந்து வெளியேற்றுகிறது, மேலும் அது திருப்பித் தாக்கும் திறனைக் கொண்டுள்ளது.”

வாஷிங்டன் போஸ்ட் பின்னர் கருத்துரைத்ததைப் போல, “இந்தக் கருத்துக்கள் பிரிட்டனின் நிலைப்பாட்டில் ஒரு கூர்மையான தலைகீழ் மாற்றத்தை சமிக்ஞை செய்தன, முன்னர் அது ரஷ்யாவை பிரிட்டன் விநியோகித்த ஆயுதங்களைக் கொண்டு இலக்கில் வைக்க அனுமதிக்கவில்லை.”

உக்ரேனின் மேற்கத்திய கூட்டாளிகள், “ரஷ்யாவிற்குள் உள்ள இடங்களை இலக்கு வைக்க மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் இருந்து உக்ரேனிய படைகளை இதுவரையில் தடை செய்துள்ளன, ஏனெனில் மோதல் தீவிரமடையக்கூடும் மற்றும் அனேகமாக மோதலுக்குள் மேலும் இழுக்கப்படலாம்” என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டது.

உக்ரைனுக்கு பிரிட்டன் வழங்கிய ஏவுகணைகளில் ஸ்டோர்ம் ஷேடோ அடங்கும், இது 250 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லக்கூடியது, இது உக்ரைனின் எல்லைக்குள் ரஷ்ய பிராந்தியத்தில் ஏராளமான இலக்குகளை தாக்க முடியும். கடந்த செப்டம்பரில் 2014 இல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட தீபகற்பமான கிரிமியாவில் உள்ள செவஸ்டோபோல் துறைமுகத்தில் ஒரு பெரிய தாக்குதலை நடத்த இந்த ஆயுதங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்ததாக அறியப்படுகிறது .

கடந்த மே மாதம் ஸ்டோர்ம் ஷேடோ ஏவுகணைகளை அனுப்பும் முடிவை அறிவித்த அப்போதைய பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ், அவை “உக்ரேனிய இறையாண்மை எல்லைக்குள்” மட்டுமே பயன்படுத்தப்படும் என்று வலியுறுத்தினார், கிரிமியாவில் திறந்த இலக்குகளை விட்டுவைக்கும் —கிரிமியாவில் அதன் ரஷ்ய கட்டுப்பாடு உக்ரேன் மற்றும் அதன் கூட்டாளிகளால் போட்டியிடப்படுகிறது— ஆனால் ரஷ்ய கூட்டமைப்பில் அல்ல.

தற்போது இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் மிகவும் ஆத்திரமூட்டுபவையாக இருப்பதால் பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகளும் ராய்ட்டர்ஸ் ஊழியர்களும் இந்த அறிக்கையை ஒளிபரப்பலாமா வேண்டாமா என்பது பற்றி மறு சிந்தனை கொண்டிருந்தனர். செய்தி நிறுவனம் வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அதன் கட்டுரையை திரும்பப் பெற்றது, “பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் டேவிட் கேமரூன் உக்ரேனுக்கு உதவ உறுதியளிப்பதாக கொடுக்கப்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தி திரும்பப் பெறப்படுகிறது, செய்தியில் உள்ள சில விவரங்கள் மறுஆய்வு செய்யப்படும் வரை. செய்தியின் திருத்தப்பட்ட பதிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் ” என்றது.

இந்த விவரங்கள் ஏற்கனவே மற்ற அமைப்புகளால் பரவலாக வெளியிடப்பட்டன, மேலும் கட்டுரை எந்த மாற்றமும் இல்லாமல் மீண்டும் வெளியிடப்பட்டது.

கேமரூனின் அறிவிப்பானது, கனரக டாங்கிகள் மற்றும் எஃப்-16 போர் விமானங்களுடன் சேர்ந்து, முதலில் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகளை அனுப்புவது உட்பட, உக்ரேன் போரில் நேட்டோ ஈடுபாட்டின் முன்னர் கைவிடப்பட்ட மட்டங்களின் பட்டியலில் சமீபத்திய உதாரணம் மட்டுமே ஆகும்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் நேரடியாக கூட்டணி துருப்புகளை ஈடுபடுத்துவதற்கு பிப்ரவரியில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஆலோசனையால் மரணகரமான தாக்கங்களுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வியாழனன்று பிரசுரிக்கப்பட்ட தி எகனாமிஸ்ட் உடனான ஒரு நீண்ட நேர்காணலில் அவர் மீண்டும் இந்த விடயத்தை எழுப்பினார், “நான் எதையும் நிராகரிக்கவில்லை... ரஷ்யா மேலும் முன்னேற முடிவெடுத்தால், எப்படியும் நாம் அனைவரும் இந்த கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கும்,” என்றார்.

ரஷ்யாவுக்கான மக்ரோன் மற்றும் கேமரூனின் கருத்துக்களின் முக்கியத்துவம் கிரெம்ளின் பத்திரிகைச் செயலரான டிமிட்ரி ப்ஸ்கோவ் ஆல் வெளிப்படுத்தப்பட்டது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அவர்களின் அறிக்கைகள் “ஐரோப்பிய பாதுகாப்பிற்கும், ஒட்டுமொத்த ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பிற்கும் ஓர் அபாயத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார், “உத்தியோகபூர்வ அறிக்கைகளில் தீவிரப்பாட்டை நோக்கிய ஓர் அபாயகரமான போக்கை நாங்கள் காண்கிறோம். இது எங்கள் கவலையை எழுப்புகிறது” என்றார்.

ரஷ்யாவுடனான நேட்டோவின் நடைமுறையளவிலான போருக்கு மேலும் மேலும் ஆதாரவளங்கள் அர்ப்பணிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் உக்ரேனுக்கு குறைந்தபட்சம் 3 பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை வழங்குவதற்கான பிரிட்டனின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக கேமரூனின் அறிக்கை வந்தது. வெளியுறவு செயலாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரஷ்யாவின் சட்டவிரோத படையெடுப்புக்கு எதிராக உக்ரைன் தன்னை கடுமையாக பாதுகாத்து வருகிறது, ஒரு போரை பல ஆண்டுகள் நீடிக்கும் என்று புட்டின் நினைத்தார். ஆனால் இந்த போர் எங்கள் தலைமுறையின் சவால், உக்ரைன் தனியாக இதை எதிர்த்துப் போராட முடியாது” என்று குறிப்பிட்டார்.

“உக்ரைன் வெல்லத் தேவையானதை உறுதிப்படுத்த நாம் அனைவரும் முன்வர வேண்டும். எங்களது பல ஆண்டு இராணுவ நிதி, ஆயுத வழங்கல் மற்றும் உக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும் சரிசெய்யவும் முக்கிய ஆதரவு ஆகியவற்றின் மூலம், பிரிட்டன் உக்ரேனுடன் நிற்கிறது, அது தேவைப்படும் வரை நாங்கள் உக்ரேனுடன் நிற்போம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இது, அளவுக்கு அதிகமாக அழுத்தத்துடன் இருக்கும் ரஷ்ய ஆட்சியை உருக்குலைப்பதற்கும் மற்றும் ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை நடத்துவதற்கும், பீரங்கிக்கு இரையாக உக்ரேனிய தொழிலாளர்கள் பயன்படுத்தப்படும் படுகொலைகளுக்கு, தொழிலாள வர்க்கத்திடம் இருந்து செல்வவளம் பிடுங்கப்பட்ட நிலையில், காலவரையின்றி நிதியாதாரம் வழங்குவதற்கான ஒரு சூளுரையாகும்.

ஆண்டுக்கு 3 பில்லியன் பவுண்டுகள் உறுதிப்பாட்டை பிரதமர் ரிஷி சுனக் கடந்த வாரம் 500 மில்லியன் பவுண்டுகள் ஆதரவு தொகுப்புடன் முதன்முதலில் அறிவித்தார். இந்த பணம் “அவசரமாக தேவைப்படும் வெடிமருந்துகள், வான்வழி பாதுகாப்பு, ஆளில்லா விமானங்கள் மற்றும் பொறியியல் ஆதரவை விரைவாக வழங்க” பயன்படுத்தப்படும் என்று டவுனிங் ஸ்ட்ரீட் விவரித்தது. இது பிரிட்டனின் மிகப் பெரிய இராணுவ உபகரணங்களை வழங்குவதுடன் இணைந்ததாக உள்ள பட்டியல் கீழ்வருவன:

  • கடலோர தாக்குதல் படகுகள், திடமான தாக்குதல் படகுகள் மற்றும் நீருக்கடியில் பயன்படும் டைவ் படகுகள் மற்றும் கடல்சார் பீரங்கிகள் உட்பட 60 படகுகள்.

  • 1,600 க்கும் மேற்பட்ட தாக்குதல் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணைகள், அத்துடன் கூடுதல் ஸ்டோர்ம் ஷேடோ நீண்ட தூர துல்லிய-வழிகாட்டபடும் ஏவுகணைகள்.

  • 160 பாதுகாக்கப்பட்டு இயங்கும் ‘ஹஸ்கி’ வாகனங்கள், 162 கவச வாகனங்கள் மற்றும் 78 அனைத்து தரையமைப்பிலும் செல்லும் வாகனங்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட வாகனங்கள்.

  • கிட்டத்தட்ட 4 மில்லியன் சுற்றுகள் சுடக்கூடிய சிறிய ஆயுதங்களுக்கான வெடிகுண்டுகள்.

உக்ரேனில் போரை மேலும் தீவிரப்படுத்துவதில், உக்ரேன் போருக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள லண்டன் மீண்டும் முயன்று வருகிறது.

சுனக் கடந்த வாரம் குறிப்பாக, “ஐக்கிய இராச்சியம் (UK) எப்போதும் ஐரோப்பிய பாதுகாப்பின் முன்னணியில் அதன் பங்கை வகிக்கும்”, என்று வலியுறுத்தினார். அவரது பாதுகாப்பு செயலர் கிராண்ட் ஷாப்ஸ், “ஐக்கிய இராச்சியம் தான் முதன்முதலில் NLAW [டாங்கி எதிர்ப்பு] ஏவுகணைகளையும், நவீன டாங்கிகளையும், மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளையும் முதலில் அனுப்பியது. இப்போது, நாங்கள் இன்னும் மேலே செல்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

ஆனால், அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் ரஷ்யாவுடனான பினாமிப் போருக்கும் மற்றும் அதற்கு அவசியமான இராணுவ செலவினம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பொறுப்பேற்றுள்ளன. கேமரூனின் அறிவிப்பு, அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு நேரடி மோதலை நோக்கி தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்ற ஒரு பொதுவான நேட்டோ தாக்குதலின் சமீபத்திய அடிவைப்பாகும்.

Loading