தமிழ் தேசியவாதிகள் இலங்கைத் தொழிலாளர்களுக்கு எதிரான சிக்கன மற்றும் பொலிஸ் அரச நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர்

M.A. Sumanthiran. (AP Photo/Eranga Jayawardena)

கடந்த ஆண்டு, இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பாரிய எழுச்சியால் ஜனாதிபதி கோட்டபாய இராஜபக்சவின் பதவி கவிழ்க்கப்பட்டது. அதன்பின்பு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றி ஒன்றிணைந்த முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக அனைத்து இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது. தொழிலாளர்களின் போர்க்குணத்தை நசுக்குவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சர்வாதிகார அதிகாரங்களை விக்கிரமசிங்க பயன்படுத்துகையில், தொழிலாளர்கள் 'அத்தியாவசிய சேவை' வேலைநிறுத்தத் தடைகளையும், இழிவான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இன்னும் கொடூரமான பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தால் (ATB) மாற்றுவதற்கான அவரது முயற்சியையும் மீறுகின்றனர்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), விக்கிரமசிங்க தலைமையிலான பிற்போக்கு முதலாளித்துவ பொலிஸ்-அரசுக்கு மாற்றீடாக, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின்   ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டைக் கூட்டுவதற்கான போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்தப் போராட்டமானது முதலாளித்துவத்தின் கருவிகளாகவும், மக்களின் எதிரிகளாகவும் செயல்படும் இலங்கையின் தமிழ்-தேசியக் கட்சிகளுக்கு முற்றிலும் எதிரான வர்க்கத் திசையில் செல்கிறது.

மார்ச் 30 அன்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) முக்கியத் தலைவர்களில் ஒருவரான எம்.ஏ.சுமந்திரன், விக்கிரமசிங்க மற்றும் வர்த்தகத் தலைவர்களுடன் ''சர்வதேச நாணய நிதியம் (IMF)  மற்றும் அதற்கும் அப்பால்'' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டார். இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தால் நடத்தப்பட்ட  இந்த நிகழ்வு, கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக IMF உடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் விக்கிரமசிங்கவின் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கை 'சீர்திருத்தங்களுக்கு' தமிழ் தேசியவாதிகளின் ஆதரவை சுமந்திரன் வெளிப்படுத்திக் காட்டினார்.

விக்கிரமசிங்க கலந்துகொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றிய சுமந்திரன், “நாங்கள் வெளிப்படையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் கலந்துரையாடுகிறோம், ஒன்றாகச் செல்கிறோம். இதற்கு ஜனாதிபதியுடன் நானும் உடன்படுகிறேன். இந்த சீர்திருத்தங்களை தள்ளிப் போடாமல் அதில் முன்னேறுகிறோம். வடக்கு மற்றும் கிழக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம், ஏனெனில் அங்கு உயர்ந்தளவில் ஆற்றல் வளங்கள் உள்ளன. இதனை உணர்ந்து கொண்டு செயல்படுவதற்கு ஜனாதிபதியுடன் ஒத்துழைப்போம்” என்று குறிப்பிட்டார்.

வரும் நான்கு ஆண்டுகளில் 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனுக்கு ஈடாக சர்வதேச நாணய நிதியம் கோரிய தாக்குதல்களுக்கு, தமிழரசுக் கட்சி தனது ஆதரவை உறுதியளித்துள்ளது. அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், பல்லாயிரக்கணக்கான பொதுத்துறை வேலைகளை நீக்குதல், சுகாதாரம் மற்றும் கல்வியில் அத்தியாவசிய சேவைகளை அழித்தல் மற்றும் வருமான வரி உயர்வு ஆகியவை இத்தாக்குதலில் அடங்கும்.

சிக்கன நடவடிக்கைகளைப் பாராட்டிய சுமந்திரன், விக்கிரமசிங்கவுடனான அவரது ஒத்துழைப்பு தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சிப் போராட்டங்களைத் தடுக்கும் என நம்புவதாகக் கூறினார். “ஜனாதிபதியுடன் நான் உடன்படுகிறேன், இதை நாம் அனைவரும் ஒன்றாகச் செய்ய வேண்டும், விவாதம் இங்கே நடக்க வேண்டும், தெருக்களில் அல்ல. ஆனால், விவாதம் தெருக்களில் நடக்காமல் இருக்க வேண்டுமானால், அது இங்கே நடக்க வேண்டும்'' என்று அவர் அறிவித்தார்.

விக்கிரமசிங்கவுக்கு எதிராக கடந்த மார்ச் 15ம் திகதி, நாடு தழுவிய போராட்டங்களுக்குப் பிறகு, தமிழ் மொழிப் பத்திரிகையான ஈழநாடு வடக்கில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை இப்போராட்டத்தில் இணைய வேண்டாம் என்று ஒரு தலையங்கத்தை வெளியிட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு ஒரு தடையாக, இது போன்ற தொழிலாள வர்க்க 'எதிர் நடவடிக்கைகள்' இருக்கும் என்று அது தாக்கி எழுதியது.

மேலும், “இத்தகைய எதிர் நடவடிக்கைகள் ரணிலின் நகர்வுகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். ரணிலின் நகர்வுகள் வெற்றியடைய வேண்டுமானால் பொருளாதார வீழ்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் காலவரையின்றி கிடைக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற கிளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், பொருளாதார நிலை மேலும் சிக்கலாகிவிடும்”என்று இப்பத்திரிகை எழுதியது.

சிங்கள ஆளும் உயரடுக்கைப் போலவே, தமிழ் தேசியவாதிகளும் இராஜபக்ஷவை வீழ்த்திய பின்னர் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ந்து வரும் தீவிரமயமாக்கலால் பீதியடைந்துள்ள முதலாளித்துவ அடுக்குகளுக்காகப் பேசுகின்றனர். அனைத்து இனத்தவர்களும் இலங்கை ஆளும் வர்க்கத்தை எதிர்க்கும் நிலையில், தமிழ் தேசியவாதிகள் தேசிய அடிப்படையில் தொழிலாளர்களை பிளவுபடுத்த முயற்சிப்பதன் மூலம் பதிலடி கொடுக்கின்றனர். முதலாளித்துவ அரசு இயந்திரத்திற்கு எதிராகத் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளின் வெகுஜனப் போராட்டங்களில் தமிழ்த் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் இணைந்து கொள்வதைத் தடுக்க அவர்கள் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விக்கிரமசிங்க தனது ஆட்சியை நீடிப்பதற்கு பாவிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கும், புதிதாக கொண்டுவரப்படவுள்ள  பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்துக்கும், தமிழரசுக்கட்சியின் வெறித்தனமான ஆதரவில் இது மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. இந்த புதிய மசோதா சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஜனாதிபதி, காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு ஆதாரம் இல்லாமல் எவரையும் கைது செய்து காவலில் வைக்க அசாதாரண அதிகாரங்களை வழங்கும். அத்துடன், 'பயங்கரவாதம்' என்ற பேரில் குற்றம்சாட்டப்படும் எவருக்கும் மரண தண்டனை, 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்ததால், இப்போது சிங்கள மக்கள் இத்தகைய நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது நியாயமானது என்று வாதிடுவதன் மூலம், தமிழ் தேசியவாதக் கட்சிகள் விக்கிரமசிங்கவின் பொலிஸ்-அரசு கொள்கைகளுக்கு எதிர்வினையாற்றுகின்றனர்.

கடந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வாழ்ந்து வந்த நிலையில், அந்தச் சட்டம் இப்போதுதான் சிங்களவர்களைத் தாக்க ஆரம்பித்துள்ளது என்பதை தென்னிலங்கை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களின் இன்னொருவரான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

அத்தோடு, 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் முடிவில், இலங்கை இராணுவம் வடக்கில் தமிழ் மக்கள் மற்றும் போராளிகளின் மீது படுகொலைகளை கட்டவிழ்த்தபோது, தெற்கில் உள்ள சிங்கள மக்கள் பட்டாசு வெடித்து, பால்சோறு கொடுத்து கொண்டாடினர் என்றும் ஸ்ரீதரன் கூறினார்.

இந்த ஆத்திரமூட்டும் மற்றும் பொய்யான பிரச்சாரத்தின் நோக்கம் வெளிப்படையானது. விக்கிரமசிங்க மற்றும் அவரது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் வளர்ந்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், தமிழ் தேசியவாதிகள் இனவாத வெறுப்பை தூண்டி வருகின்றனர். அவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மற்றும் இலங்கையின் ஒற்றையாட்சி அரசின் இரத்தக்களரி குற்றங்களுக்கு எதிரான சீற்றத்தை பிற்போக்கு திசையில் செலுத்த முயற்சிக்கின்றனர். குறிப்பாக, தொழிலாளர்களையும் கிராமப்புற மக்களையும் பிளவுபடுத்தி, இந்த ஆட்சியை இராணுவமயப்படுத்தப்பட்ட ஜனாதிபதி சர்வாதிகாரமாக கட்டியெழுப்பும் முயற்சிக்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை தடுக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரத்தியேகமாக தமிழர் விரோத நடவடிக்கையாக சித்தரித்து தொழிலாளர்களை பிளவுபடுத்த   மேற்கொள்ளும் சிறீதரனின் முயற்சியானது வரலாற்றுப் பொய்களை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு அரசியல் மோசடியாகும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் முதன்முதலில் 1979 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஐ.தே.க (ஐக்கிய தேசியக் கட்சி) ஆட்சியில் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு எதிராகப் போரிடும் சாக்கில் கொண்டுவரப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 1983-2009 இனவாதப் போரின் போது, இது தமிழர்களுக்கு எதிராக பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் 1980ம் ஆண்டு, இடம்பெற்ற இலங்கைப் பொது வேலைநிறுத்தம் போன்ற தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டங்களை நசுக்கவே முதலில் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது.

1979 இல் பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது, இந்த சட்டம் தற்காலிகமானது என்றும் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் ஜயவர்தன தமிழர் விடுதலைக் கூட்டணியிருடன் (TULF) திரைமறைவில் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டார். அதனடிப்படையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் மீதான பாராளுமன்ற வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது விலகியதன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டனி இந்த சட்டத்தை நிறைவேற்ற அனுமதித்தது.

1983 இல் இனவாதப் போர் தொடங்கிய பின்னரும் கூட, சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டது. 1988 மற்றும் 1990 க்கு இடையில் தீவின் தெற்கில் கிராமப்புற அமைதியின்மையை அடக்க ஐ.தே.க அரசாங்கம் இதைப் பயன்படுத்தி, பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் கொன்றது. அப்போது விக்கிரமசிங்க ஐ.தே.க அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்தார்.

தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் பொலிஸ்-அரச நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதில் தமிழ் தேசியவாதிகள் நீண்ட கால சாதனையைக் கொண்டுள்ளனர். உண்மையில், 1979 ஆம் ஆண்டு முதன்முதலில் பாராளுமன்றத்தில் இக்கொடுமையான சட்டம் முன்வைக்கப்பட்ட போது, தமிழரசுக் கட்சியை உள்ளடக்கிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அதற்கு எதிராக வாக்களிக்கவில்லை.

தமிழ் மற்றும் சிங்கள பேரினவாதத்தை எதிர்க்கும் சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் இலங்கை முதலாளித்துவத்திற்கு எதிராக முழு தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டப் போராடுகிறது. இதில், இனவாதப் போருக்கு எதிராகவும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த போராடும் அதன் சக்திவாய்ந்த பாரம்பரியத்தை சோ.ச.க. அடித்தளமாகக் கொண்டுள்ளது.

உலகில் எந்தவொரு தேசத்தின் தொழிலாளர்களின் மிகவும் சக்திவாய்ந்த கூட்டாளிகள், இதர தேசிய இனங்களின் வர்க்க சகோதர சகோதரிகள். சமீபத்திய வாரங்களில், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மற்றும் குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். பிரான்சில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பொருளாதாரத்தைத் முடக்கி மக்ரோனை வீழ்த்துவதற்கான பொது வேலைநிறுத்தத்தை ஆதரிக்கின்றனர்.

முதலாளித்துவ அரசியல் மற்றும் முதலாளித்துவ அரசின் கட்டமைப்பிற்குள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கம் போராட முடியாது என்பதற்கு இலங்கையின் நிகழ்வுகள் ஒரு உன்னதமான எடுத்துக்காட்டாக இருக்கிறது. தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்திலும் மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியிலும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களைச் சாராமல், தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கும், அதை அரசியல் போராட்டத்தில் அணிதிரட்டுவதற்கும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதுதான் தீர்க்கமான கேள்வியாக இருக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டை கூட்டுவதற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இலங்கை முழுவதும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இது தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சக்திகளை ஒருங்கிணைப்பதற்கும், கிராமப்புற மக்களின் தீவிர ஆதரவைப் பெறுவதற்கும், சோசலிச வழிகளில் சமுதாயத்தை மறுகட்டமைக்க உறுதிபூண்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தின் மூலம், அதன் சொந்த ஆட்சிக்கு அடித்தளத்தை அமைப்பதற்கும் ஒரு அரசியல் மூலோபாயத்தை வழங்குகிறது.

Loading