ஏகாதிபத்தியமும் காஸா இனப்படுகொலையும் உலக சோசலிசத்திற்கான போராட்டமும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 10, 2023 அன்று கொழும்பில் உள்ள புதிய நகர மண்டபத்தில் “லியோன் ட்ரொட்ஸ்கியும் 21ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்” என்ற தலைப்பில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோரால் பின்வரும் அறிக்கை முன்வைக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டு நூற்றாண்டை கொண்டாடுவதற்கே இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டன. இக்கூட்டம் இலங்கை சோ.ச.க. மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது.

டிசம்பர் 7 அன்று பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான சங்கத்தின் அனுசரணையுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இதே கருப்பொருளில் சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஏற்பாடு செய்த மற்றொரு கூட்டத்தில் கிஷோர் உரையாற்றினார்.

இலங்கைக்குப் பயணம் செய்து கொழும்பில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் உரையாற்ற முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நாட்டிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் உரையாடுவதும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் இவ்வளவு நீண்ட மற்றும் இன்றியமையாத பங்கை ஆற்றிய தோழர்களைச் சந்திப்பதும் ஒரு பெரிய கௌரவமாகும்.

36 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வார இறுதியில் இறந்த தோழர் கீர்த்தி பாலசூரிய மற்றும் ஜூலை 27, 2022 அன்று காலமான தோழர் விஜே டயஸ் உட்பட, ஆளும் வர்க்கத்தின் வன்முறை எதிர்ப்பை எதிர்கொண்டு ட்ரொட்ஸ்கிசத்திற்கான கொள்கை ரீதியான போராட்டத்தை முன்னெடுத்தமைக்காக இலங்கை பிரிவின் தலைவர்கள் சர்வதேச சோசலிச இயக்கம் முழுவதும் நியாயமாக மதிக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் உள்ள அனைத்து சோ.ச.க. உறுப்பினர்களும், இலங்கையில் நடந்த மாபெரும் காட்டிக்கொடுப்பு பற்றிய விவாதத்திற்கான கோரிக்கையில் இருந்தே, நமது முன்னோடி அமைப்பான தொழிலாளர் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுவதில் பெருமிதம் கொள்கின்றனர். அதை பற்றி நான் பின்னர் பேசுவேன்.

20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளின் சோசலிசமான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நூற்றாண்டைக் குறிக்க உலகெங்கிலும் நடத்தும் கூட்டத் தொடரின் ஒரு பகுதியாக இந்த கூட்டம் இடம்பெறுகின்றது.

இந்த ஆண்டுவிழாவின் முக்கியத்துவத்தைப் பற்றி நான் கலைந்துரையாடுவேன், ஆனால் சர்வதேச அரசியல் நிலைமையை மறுபரிசீலனை செய்வதோடு தொடங்க விரும்புகிறேன். எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிலும் அந்த நாட்டின் தேசியத் தனித்தன்மையின் அடிப்படையில் நோக்குநிலையை உருவாக்குவது சாத்தியமற்றது என்பது மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கையாகும். அல்லது, மாறாக, இந்த தனித்தன்மைகளிலிருந்து தொடங்குவது சந்தர்ப்பவாதமான மற்றும் திவாலான முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. பூகோள முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பிற்குள் நாங்கள் வாழ்கிறோம், போராடுகிறோம், மற்றும் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒவ்வொரு கட்டத்திலும் உலகளாவிய பிரச்சினைகளையே எதிர்கொள்கிறார்கள்.

அமெரிக்க சோ.ச.க. தேசிய செயலாளர் ஜோசஃப் கிஷோர் 10 டிசம்பர் 2023 அன்று கொழும்பில் ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு கூட்டத்தில் உரையாற்றியபோது

நாம் இன்று உலக நெருக்கடிகள் ஒரு தீர்க்கமான உச்சத்தை எட்டியுள்ள ஒரு தீவிரமடைந்து வரும் நிலைமைகளின் கீழ் சந்தித்துக்கொண்டிருக்கும். இரண்டு அடிப்படைப் போக்குகள் ஆதிக்கம் செலுத்துகின்றன, ஒருபுறம் உலகப் போர் மற்றும் அரசியல் பிற்போக்கு, மறுபுறம் சோசலிசப் புரட்சியை நோக்கிய போக்கு. இவற்றில் எது மேலோங்கும் என்பதைப் பொறுத்தே மனிதகுலத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படும்.

கடந்த இரண்டு மாதங்களாக, காஸாவில் நடத்தப்படும் சம்பவங்கள் மீது உலகின் கவனம் குவிந்துள்ளது. அங்கு வரலாற்றில் குறிப்பிடப்படுமளவுக்கு போர்க்குற்றம் இஸ்ரேலிய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2.3 மில்லியன் மக்கள் திட்டமிட்ட முறையில் குண்டுவீச்சுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர், கொலை செய்யப்பட்டுள்ளனர், பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளனர், மருத்துவ வசதி இல்லாமல், வீடுகளை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 130க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளனர், இது நவீன வரலாற்றில் வேறு எந்தப் போரிலும் இந்தளவு நடந்ததில்லை.

அக்டோபர் முதல் காஸாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 17 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. அவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் பிள்ளைகள் ஆவர். 130 ஐ.நா ஊழியர்கள் மற்றும் 77 பத்திரிகையாளர்களுடன் 200 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்திய கொடூரம் பாலஸ்தீனிய எழுத்தாளரும் கல்வியாளருமான டாக்டர். ரெஃபாத் அல்-அரீர் டிசம்பர் 6 அன்று அவரது முழு குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு சிறிய போர் “இடைநிறுத்தத்திற்கு” பிறகு, இஸ்ரேலிய இராணுவம் தன்னை பலப்படுத்திக்கொண்டு, மீண்டும் ஆயுதபாணியாக்கொண்டதை அடுத்து, இஸ்ரேல் வடக்கில் இருந்து போர் அகதிகளின் வருகையால் கடந்த எட்டு வாரங்களாக மக்கள் தொகை பெருமளவில் பெருகியுள்ள தெற்கில் தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கியுள்ளது.

ஒரு இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் நடத்தப்படுவது மட்டுமின்றி, இதற்கு அமெரிக்காவில் உள்ள பைடன் நிர்வாகம் மற்றும் அமெரிக்க-நேட்டோ கூட்டின் அனைத்து அரசாங்கங்களும் முழு ஆதரவைக் கொடுக்கின்றன என்பதை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. இஸ்ரேலின் ஒவ்வொரு அட்டூழியத்திற்கும் முன்னும் பின்னும் இஸ்ரேலுக்கு “சிவப்பு கோடுகள்” இல்லை என்ற ஆதரவு அறிக்கைகள் வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் இருந்து வெளிவந்துள்ளன. அதாவது இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் “முழு ஆதரவு” உள்ளது.

இஸ்ரேல் கடந்த வாரம் தெற்கில் குண்டுவீசத் தயாராகிக்கொண்டிருந்தபோது, பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, சிவிலியன்களை குறிவைத்ததை ஆதரித்தார். இஸ்ரேல் காஸான்களுக்கு “ஒரு பட்டியலை, ஒரு வரைபடத்தை கொடுத்துள்ளது, இது இணையத்தில் உள்ளது, அவர்கள் மிகவும் பாதுகாப்பாக செல்லக்கூடிய பகுதிகள் அந்த பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன,” பல நவீன இராணுவங்கள், நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னதாக, உண்மையில் இதை செய்வதில்லை, என்று அவர் கூறினார்.

இஸ்ரேலைப் பற்றி என்ன ஒரு சிந்தனை! உண்மையில், தகவல் தொடர்பு அமைப்புகள் அரிதாகவே செயல்படும் சூழ்நிலையில், கியூ ஆர் குறியீடு மூலம் இணையத்தில் பட்டியலை அணுகினால், அவர்கள் எங்கு தப்பி ஓட வேண்டும் அல்லது வெடிகுண்டுகளில் எரிக்கப்படும் அபாயம் எங்கு இருக்கும் என்பதை அவர்கள் பாலஸ்தீனியர்களிடம் கூறுகிறார்கள். உண்மையில், இஸ்ரேலின் (முற்றிலும் சட்டவிரோதமான) வெளியேறும் உத்தரவுகளை பின்பற்ற மறுத்து குண்டுவீச்சுக்கு உள்ளான இடத்தில் பாலஸ்தீனியர்கள் இருந்ததால் தான் அவர்கள் பலியாகினர், என்றவாறாக கிர்பி வெகுஜனக் கொலைகளை நியாயப்படுத்துகிறார்.

பின்னர், வெள்ளிக்கிழமை, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இரத்து செய்தது. பாலஸ்தீனியர்களை காசாவில் இருந்து வெளியேற்றுவது, முழு பிராந்தியத்தையும் இன ரீதியாக சுத்தப்படுத்துவது மற்றும் வெளியேற மறுக்கும் எவரையும் கொல்லும் நோக்கத்துடனான இஸ்ரேலிய கொள்கைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், தீவிரமாக உதவி செய்கிறது.

ஒரு திருப்புமுனை எட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகளை வீசியதில் இருந்து, வியட்நாம் போர் வரை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் அழிவு வரை, போர் மற்றும் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளின் நீண்ட சரித்திரத்தில் பல குற்றங்களுக்கு பொறுப்பாளியாகும்.

ஆனால் இப்போது வியக்கத்தக்கது என்னவென்றால், கொலைவெறி வன்முறைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுகின்றன. அவர்கள் தங்கள் குற்றங்களை மறைப்பதில்லை; அவர்கள் அவற்றைப் பற்றி பொய் சொல்ல கூட முயற்சிப்பதில்லை.

இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கான வெளிப்படையான ஆதரவை, அமெரிக்க-நேட்டோ கூட்டினால் தலைதூக்குகின்ற, முழு உலக மக்களையும் பாதிக்கின்ற பூகோளப் போரின் ஒரு பகுதியாக மட்டுமே புரிந்து கொள்ளப்பட முடியும்.

இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு உலக மேலாதிக்கத்திற்கான வாஷிங்டனின் முயற்சியுடன் பிணைந்துள்ளது. மிக நேரடியாக, பைடன் நிர்வாகம் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை மத்தியதரைக் கடலுக்கு பாரிய இராணுவ தளபாடங்களை நிலைநிறுத்துவதற்கும் வெளிப்படையாக ஈரானைக் குறிவைப்பதற்குமான வாய்ப்பாகப் பயன்படுத்தியது. ஈரானுடனான மோதல் என்பது ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனான அமெரிக்க மோதலுடன் தொடர்புடையதாகவே காணப்படுகிறது.

காசா மீதான போர் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேனில் நடக்கும் அமெரிக்க-நேட்டோ போரும் வேகமாக அதிகரித்து வரும் உலகப் போரின் இரு முனைகளாகும். உக்ரைன் மீதான போருக்கு இப்போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிறது. 2022 பெப்ரவரியில் ரஷ்ய படையெடுப்பின் போது, அமெரிக்காவில் உள்ள பைடன் நிர்வாகமும் ஐரோப்பா முழுவதிலும் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள அரசாங்கங்களும், அவற்றுக்கு சார்பான ஊடக நிறுவனங்களுடன் சேர்ந்து, உக்ரேனில் போரானது “ஆத்திரமூட்டப்படாமல்” தொடங்கியது, உக்ரேனின் “தேசிய இறையாண்மை” மீதான அக்கறையால் இயக்கப்பட்டது, அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகள் “சர்வாதிகாரத்திற்கு” எதிராக “ஜனநாயகத்தை” பாதுகாக்கின்றன, என்ற அமெரிக்காவினதும் நேட்டோ சக்திகளினதும் பதில்களையே வலியுறுத்தி வந்தன.

இதில் எதையாவது யாராவது நம்ப முடியுமா? உக்ரேனில் உள்ள பாசிஸ்டுகளுடனான அமெரிக்க மற்றும் நேட்டோ ஏகாதிபத்தியத்தின் கூட்டணி இந்தப் பொய்களை கூறவில்லை என்றால், காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான அவர்களின் ஆதரவானது, அமெரிக்க ஏகாதிபத்தியம் “மனித உரிமைகள்” மீதான அக்கறைகளால் தூண்டப்படுகிறது என்ற மாயை நிரந்தரமாக அழிந்துபோனதாக அமைந்துவிடும். நேட்டோவின் கிழக்கு நோக்கிய இடைவிடாத விரிவாக்கம், 2014 இல் உக்ரேனிலான ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் ரஷ்யாவை நோக்கி முன்னெடுக்கப்பட்ட பிற நடவடிக்கைகள் மூலம் அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகளால் இந்தப் போர் தூண்டப்பட்டது. உக்ரேனியர்களைப் பொறுத்தளவில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அவர்களை பீரங்கிக்கு இறையாக மட்டுமே பார்க்கின்றது.

விரிவடைந்து வரும் இந்த மோதலில் சிக்காத எந்தப் பகுதியும் உலகில் இல்லை. குறிப்பாக, தெற்காசியாவும், இலங்கை உட்பட முழு இந்தியப் பெருங்கடல் பகுதியும், அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் அதன் பிரதான உலகப் போட்டியாளராக கருதப்படும் சீனாவை சுற்றி வளைப்பதற்கான அமெரிக்க பிரச்சாரத்திற்குள் இழுக்கப்படுகின்றன.

காஸாவில் இனப்படுகொலைக்கு ஆதரவாக, அமெரிக்கா மற்றும் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட அனைத்து தேர்வுகளும் மேசையில் இருக்கின்றன என்று அறிவிக்கின்றன. ஒருவேளை இன்னும் முக்கியமாக, இந்த கொலைவெறி வன்முறை தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும்: ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் உயரடுக்கின் கட்டளைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் நசுக்க இத்தகைய வழிமுறைகள் பயன்படுத்தப்படும்.

போர் என்பது ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் நெருக்கடிகளின் பரந்த தொடரின் ஒரு பகுதியாகும். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக, முழு உலகமும் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற ஒரு உலகளாவிய தொற்றுநோயை அனுபவித்து வருகிறது. உலக அரசாங்கங்கள் உயிர்களைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க மறுத்ததால் இந்த உயிரழிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தடுப்பு நடவடிக்கைகள் தனிப்பட்ட சொத்துக் குவிப்புக்கும் நிறுவன இலாபங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதால் அரசாங்கங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சமூக சமத்துவமின்மையின் நிலை நவீன வரலாற்றில் எந்தக் கட்டத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. மனித தேவைகளை தனியார் இலாபத்திற்கு அடிபணியச் செய்வதன் விளைவாக சுற்றுச்சூழல் அழிக்கப்படுகிறது.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஸ்தாபனங்கள் அழுகிவிட்டன. வரும் ஆண்டு அமெரிக்காவில் தேர்தல் ஆண்டாக இருக்கும். அரசியலமைப்பை கவிழ்த்து சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதை நோக்கமாகக் கொண்டு, டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்து இப்போது மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. அந்த சதி முயற்சியின் முதன்மை சூத்திரதாரி சுதந்திரமாக திரிவது மட்டுமல்லாமல், வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான முன்னணி போட்டியாளராக உள்ளார். நெதர்லாந்தில் கிரீட் வில்டர்ஸ், அர்ஜென்டினாவில் ஜவியர் மலெய் தொடக்கம் இந்தியாவில் மோடி மற்றும் இத்தாலியில் மெலோனி வரை சர்வதேச அளவில் தீவிர வலதுசாரி மற்றும் பாசிச நபர்கள் தலைதூக்கி வருகின்றனர்.

ஆனால், இந்த சக்திகளை ஊக்குவிப்பது என்பது முழு அரசியல் ஸ்தாபனத்தின் வலதுபுறம் நோக்கிய நகர்வின் உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாகும். முழு அரசியல் கட்டமைப்பும் பெரும்பான்மையான மக்களின் நலன்களுக்கு எதிராக இருக்கின்றது. அமெரிக்காவில், காசாவில் நடந்த இனப்படுகொலைக்கு ஆதரவை ஏற்பாடு செய்வதும், ஏகாதிபத்திய வன்முறையின் உலகளாவிய வெடிப்புக்கு தலைமை தாங்குவதும் பைடன் நிர்வாகமே ஆகும்.

தற்போதைய சூழ்நிலையில் மிக குறிப்பிடத்தக்க காரணி, அனைத்து சமூக சக்திகளிலும் மிக அடிப்படையான மற்றும் சக்திவாய்ந்த தொழிலாள வர்க்கத்தின் மீள் எழுச்சி ஆகும். இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் இதன் ஒரு பகுதியாகும். ஆனால், 40 ஆண்டுகளில் பிரிட்டனில் ஏற்பட்ட மிகப் பெரிய வேலைநிறுத்த அலை மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பிரான்சில் மில்லியன் கணக்கான மக்களின் பாரிய எதிர்ப்புக்கள் தொடக்கம், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த போராட்டங்கள் வரை, உலகம் முழுவதும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளைக் காணும் ஒரு காலகட்டத்தின் பின்னணியில் வருகின்றன.

எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சமூக நெருக்கடியின் ஆழம் மற்றும் அமெரிக்காவிற்குள் உள்ள சமூக கோபத்தின் அளவைப் பற்றிய நனவைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது. அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் முன்னேறி, ஒவ்வொரு நாட்டிலும் அதன் நலன்களை வலியுறுத்துகிறது, ஆனால் உள்நாட்டில் அது ஆளும் உயரடுக்கின் அனைத்து திட்டங்களையும், வரைபுகளையும் கவிழ்க்கக் கூடிய மற்றும் தலைகீழாக்குகின்ற ஒரு அமைதியற்ற தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்கிறது.

ஊடகங்கள் மற்றும் பிரபலமான கலாச்சாரத்தில், அமெரிக்கா வரம்பற்ற வாய்ப்புகளின் நிலமாக சித்தரிக்கப்படுகிறது. உண்மையில், இது உலகின் மிகவும் சமூக சமத்துவமற்ற முன்னேறிய முதலாளித்துவ நாடு ஆகும். 12 அமெரிக்கர்களில் ஒருவருக்கு போதுமான உணவு இல்லை. மக்கள் தொகையில் பாதி பேரின் “ஊதியம் மிஞ்சுவதே இல்லை”. வறுமையில் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 60 சதவீதத்தால் 25.6 மில்லியனில் இருந்து 40.1 மில்லியனாக அதிகரித்துள்ளது. டிரில்லியன் கணக்கான டொலர்கள் போருக்காக ஒதுக்கப்படுகின்ற அதே சமயம், மிக அடிப்படையான சமூக திட்டங்கள் அடியோடு சுரண்டப்படுகின்றன.

அமெரிக்காவில் 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆண்டு வேலைநிறுத்தங்களில் பங்கேற்றுள்ளனர். இது 2022 இல் இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாகும். வேலைநிறுத்தங்களால் இழந்த வேலைநாட்களின் எண்ணிக்கை பல தசாப்தங்களில் எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. இதில் 60,000க்கும் மேற்பட்ட திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் அடங்கும். இந்த ஆண்டு இதுவரை, சகிக்க முடியாத நிலைமைகளுக்கு எதிராக சுகாதாரப் பணியாளர்களால் 27 தனித்தனி வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டுள்ளன.

வர்க்கப் போராட்டத்தை அடக்கவும் ஒடுக்கவும் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் தொழிற்சங்க எந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட முயற்சிக்கும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அடக்கிவைக்கப்பட்டுள்ள ஒரு பிரமாண்டமான கோபம் உள்ளது.

எல்லா இடங்களிலும், தொழிலாளர்களும் இளைஞர்களும் உலக அளவில் புரட்சிகர தீர்வுகளுக்கான அவசியத்தை முன்கொணரும் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். ஏதோ ஒரு நாட்டில், ஏதாவதொரு அரசியல் பிரச்சினையையோ இந்த அல்லது ஏதாவதொரு பிரமுகரின் பிரச்சினையையோ நாம் எதிர்கொள்ளவில்லை. அரசியல் ஆளுமைகள் மாற்றமடைவது ஒரு உலகளாவிய அனுபவமாக இருந்த போதிலும் பிரச்சினைகள் அப்படியே உள்ளன. ஒருவர் வெளியேற்றப்பட்டாலும் அவரை அடுத்து ஆட்சிக்கு வருபவர் முந்தைய கொள்கையையே பேணுவதுடன் அதை வேகப்படுத்துகிறார்.

உலகப் பொருளாதார அமைப்பாக, முதலாளித்துவத்தின் சமூக கட்டமைப்பின் தன்மையே பிரச்சினைக்குரியதுதான் என்பதை வெகுஜனங்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், இது அடிப்படை அரசியல் கேள்விகளை எழுப்புகிறது. சோசலிசம் என்றால் என்ன, அதை எப்படி நிறைவேற்றுவது? இந்த மகத்தான பணியை நிறைவேற்றுவதற்கு தேவையான சக்திகளை எவ்வாறு ஒன்றிணைத்து ஒழுங்கமைக்க வேண்டும்? முதலாளித்துவத்தை வீழ்த்துவது சாத்தியமா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களுக்கு, 20 ஆம் நூற்றாண்டின் படிப்பினைகள் மற்றும் அனுபவங்கள், வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளில் அரசியல் போக்குகளுக்கு இடையே நடந்த போராட்டங்கள் மற்றும் சம்பவங்களின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போராட்டங்கள் பற்றிய புரிதல் அவசியமாகும்.

இந்த ஆண்டு முதலில் சோவியத் ஒன்றியத்தில் 1923 இல் இடது எதிர்ப்பை ஸ்தாபித்ததன் மூலம் தொடங்கப்பட்ட ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம். பின்னர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 1938 இல் நான்காம் அகிலம் நிறுவப்பட்டது. ரஷ்யப் புரட்சியில் லெனினுடன் இணைத் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கியால் இடது எதிர்ப்பு ஸ்தாபிக்கப்பட்டமை, 20 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட அரசியல் போரின் தொடக்கத்தைக் குறிக்கின்றது.

இடது எதிர்ப்பு அணி உறுப்பினர்களுடன் லியோன் ட்ரொட்ஸ்கி

சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலினிச எந்திரத்துடனான ஆரம்பப் போர்கள் 1923 இன் இறுதி மாதங்களில் நடந்தாலும், 1924 இன் போக்கில்தான் அடிப்படை அரசியல் பிரச்சினை முன்னுக்கு வந்தது. ஒருபுறம் ரஷ்யப் புரட்சியையே உயிர்ப்பித்த உலக சோசலிசப் புரட்சிக் கோட்பாடான ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டுக்கும், மறுபுறம் ஸ்டாலினிச எந்திரத்தின் அதிகாரத்துவ தேசியவாத எதிர்ப்புரட்சிக்கும் இடையேயான மோதலாக இது இருந்தது.

அனைத்துலகவாதமா தேசியவாதமா? இதுவே 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் எதிரொலித்த அடிப்படைப் பிரச்சினையாக இருந்தது. ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் கைப்பற்றலானது “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்பதற்கு ஆதரவாக, அடிப்படையில் உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கின் மீதான தாக்குதலுடன் இணைக்கப்பட்டிருந்தது. அடிப்படை மார்க்சிசக் கோட்பாட்டை நிராகரித்த இந்த நிலைப்பாடு முதலில் புகாரினாலும் பின்னர் 1924 இல் ஸ்டாலினாலும் முன்வைக்கப்பட்டது.

மார்க்ஸே எழுதியவற்றை திரும்பிப் பார்தால், தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டியெழுப்புவது சாத்தியமற்றது என்பது மார்க்சிசத்திற்கே கேள்விக்கு இடமில்லாத முன்மாதிரியாக இருந்தது. முதலாளித்துவம் ஒரு உலகளாவிய அமைப்பாகும், அதை மாற்றீடு செய்வது உலக அளவில் ஒரு உயர்ந்த சமூக அமைப்பால் மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும். அதன் தேசியவாத முன்னோக்கில், ஸ்டாலினிச எந்திரம், சோசலிசத்திற்கான தொழிலாளர்களின் உலகளாவிய இயக்கத்தின் கழுத்தை நெரித்து ஏகாதிபத்தியத்துடன் சமாதானம் செய்ய முயன்ற ஒரு அதிகாரத்துவ சாதியின் சலுகைகளை பாதுகாத்து வந்தது.

ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தை வழிநடத்திய மைய மூலோபாயக் கொள்கையானது ட்ரொட்ஸ்கியால் 1928 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் அகிலத்தின் வரைவுத் திட்டத்தின் மீதான விமர்சனம் என்பதில் உருவாக்கப்பட்டது. “ஏகாதிபத்தியத்தின் சகாப்தமாக இருக்கும் நமது சகாப்தத்தில், அதாவது உலகப் பொருளாதாரமும் உலக அரசியலும் நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் இருக்கின்ற சகாப்தத்தில்”… “எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியாலும் அதன் சொந்த நாட்டில் நிலவும் நிலைமைகள் மற்றும் போக்குகளில் இருந்து மட்டும் அல்லது அதைப் பிரதானமாகக் கொண்டு தனது திட்டத்தை நிறுவ முடியாது ... பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியானது முதலாளித்துவத்தின் மிக உயர்ந்த வளர்ச்சி மற்றும் சரிவின் சகாப்தமான தற்போதைய சகாப்தத்தின் குணாதிசயத்துடன் தொடர்புடைய ஒரு சர்வதேச வேலைத்திட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ள முடியும்,” என்று ட்ரொட்ஸ்கி எழுதினார்.

இந்தே ஆவணத்தில், ட்ரொட்ஸ்கி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வகிபாகத்தை மீளாய்வு செய்தார். தற்போதைய நிலைமையை பற்றி இன்னும் அதிக பலத்துடன் பேசும் வார்த்தைகளில், ட்ரொட்ஸ்கி அறிவித்ததாவது: “நெருக்கடியான காலகட்டத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம் செழிப்பு காலத்தை விட முழுமையாகவும், வெளிப்படையாகவும், ஈவிரக்கமற்றதாகவும் செயல்படும். இது ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவில், அமைதியான முறையில் நடந்தாலும் அல்லது போரினால் நடந்தாலும் சரி, முதன்மையாக ஐரோப்பாவின் இழப்பிலேயே அமெரிக்கா தனது கஷ்டங்கள் மற்றும் நோய்களில் இருந்து விடுபட முயல்கிறது.”

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிரமங்களைத் தீர்ப்பதற்கான “அமைதியான” முறை இனி இல்லை என்ற எச்சரிக்கையை மட்டும் ஒருவர் சேர்க்கலாம்.

ஸ்ராலினிச அதிகாரத்துவம், உண்மையான சோசலிசத்திற்கு எதிரான அதன் எதிர்-புரட்சிகரப் போரில் முன்னெடுத்த பெரும் பயங்கரத்தில் 1936-39 இல் 8 இலட்சத்துக்கும் அதிகமான சோசலிச தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் கொல்லப்பட்டது உட்பட, வெகுஜன படுகொலை பிரச்சாரத்தை நடத்தியது. 1937 இல் ட்ரொட்ஸ்கி கணித்தபடி, இந்த பிரச்சாரம் “போல்ஷிவிசத்திற்கும் ஸ்டாலினிசத்திற்கும் இடையிலான ஒரு இரத்தக்களரி கோடு அல்ல, மாறாக ஒரு முழு இரத்த ஆறு ஆகும்.” 21 ஆகஸ்ட் 1940 அன்று ட்ரொட்ஸ்கியே ஜி.பி.யு. முகவரால் படுகொலை செய்யப்பட்டார்.

மாவோவாதிகள், காஸ்ட்ரோவாதிகள் மற்றும் முதலாளித்துவ தேசியவாதிகளுடனான ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் கையண்ட பிற்போக்கு அரசியலால், புரட்சிகர இயக்கங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்ட நிலையில், பொதுவாக இந்த போர் ஒவ்வொரு நாட்டிலும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது.

இடது எதிர்ப்பு அணி உருவாகி சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர், இங்கு இலங்கையில் 1930களின் பிற்பகுதியில் ட்ரொட்ஸ்கிசத்திற்குத் திரும்பிய லங்கா சமசமாஜக் கட்சியில் (LSSP) ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டம் தலைதூக்கியது. பின்னர் இந்தியாவில் உள்ள பல அமைப்புகளுடன் லங்கா சமசமாஜக் கட்சி இணைந்து சிலோன், பர்மா மற்றும் இந்தியவுக்குமான கட்சியாக இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி (BLPI) 1942 இல் உருவாக்கப்பட்டது.

அனைத்து மொழிகள், மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் அகில இந்திய புரட்சிகரப் போராட்டத்திற்கான முன்னோக்கின் அடிப்படையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் பி.எல்.பீ.ஐ. சக்திவாய்ந்த முறையில் தலையிட்டது. இது தொழிலாளர்களிடையே வெகுஜன பார்வையாளர்களை வென்றது. பெயரளவிலான “சுதந்திரம்” மற்றும் பிரிவினை ஆகியவற்றின் ஊடாக முதலாளித்துவ தேசிய அமைப்புகளுடன் உடன்பாட்டை எட்டுவதற்கு பிரித்தானியர்கள் விரைந்தமைக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது இதுவே ஆகும்.

இந்த அடிப்படையில், பி.எல்.பீ.ஐ. இந்தியாவின் இனவாதப் பிரிவினையையும், 1948ல் பெரும்பான்மையான தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையைப் பறித்த சட்டங்களை விரைவில் நிறைவேற்றிய இலங்கை அரசியலமைப்பையும் எதிர்த்தது. ஸ்டாலினிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் கட்சி உட்பட முதலாளித்துவ தேசியவாதிகள், தெற்காசியாவை பிளவுபடுத்துவதற்கு ஒத்துழைத்தனர். இது ஒரு சகோதர படுகொலைக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் மரணத்திற்கும் வழிவகுத்தது.

தேசிய, மொழி மற்றும் இனப் பிளவுகளை ஊக்குவிப்பதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்கான போராட்டமே பிரதான விடயமாக இருந்தது. 1948 ஆகஸ்ட்டில் ஆற்றிய ஒரு உரையில், பி.எல்.பீ.ஐ. தலைவர் கொல்வின் ஆர். டி சில்வா, “அரசு தேசத்துடனும், தேசம் இனத்துடனும் இணையாக இருக்க வேண்டும்” என்ற அனுமானத்தை “ஒரு காலாவதியான யோசனை மற்றும் தகர்த்தெறியப்பட்ட தத்துவம்” என்று தாக்கினார். இந்த அடிப்படையில் தமிழ் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறிப்பதை சில்வா எதிர்த்தார். “தேசம் இனத்துடன் இணையாக இருக்க வேண்டும், இனமானது அரசின் அமைப்பில் ஆளும் காரணியாக இருக்க வேண்டியது நிச்சயமாக பாசிசத்தின் கீழேயே ஆகும். …” என்று அவர் மேலும் கூறினார்.

அரசின் இன வரையறையின் மீதான இந்த சக்திவாய்ந்த கண்டனம் குறிப்பிடத்தக்கதாக இருப்பது இலங்கை தொடர்பில் மட்டுமல்ல. 1948 மே மாதம் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் டி சில்வா இந்தக் கருத்துக்களைக் கூறினார். இஸ்ரேலின் அடித்தளத்தை அடித்தளமாகக் கொண்ட சியோனிச முன்னோக்கு தொழிலாள வர்க்கத்திற்கும் யூதர்கள் மத்தியில் சோசலிசத்திற்கான பரந்த ஆதரவிற்கும் விரோதமானதாகவும் ஏகாதிபத்தியத்தை நோக்கி தகவமைக்கப்பட்டதாகவும் இருந்தது. இலங்கை தொடர்பில் டி சில்வா விடுத்துள்ள எச்சரிக்கைகள், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான பாசிச இனப்படுகொலையில் இஸ்ரேலால் இப்போது அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜேம்ஸ் பி. கனன்

இந்த ஆண்டு மற்றொரு முக்கியமான ஆண்டு நிறைவு குறிக்கப்படுகிறது. இன்று சோசலிச இயக்கத்தின் தலைமையாக இருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கான வேலைத்திட்ட அடிப்படையை நிறுவிய அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்ட் ஜேம்ஸ் பி. கனனால் வெளியிடப்பட்ட திறந்த கடிதம் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகும்.

இந்த திறந்த கடிதம் இரண்டாம் உலகப் போருக்கு அடுத்த ஆண்டில் எழுதப்பட்டது. ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்ற நாஜி படுகொலை உட்பட இரண்டு உலகப் போர்களின் ஏகாதிபத்திய படுகொலைக்குப் பிறகு, அமெரிக்க முதலாளித்துவத்தால் உலக முதலாளித்துவத்தின் தற்காலிக மறுசீரமைப்பை ஒழுங்கமைக்க முடிந்தது ஸ்டாலினிசத்தின் உதவியுடனேயே ஆகும்.

இந்த மறுசீரமைப்பானது பல்வேறு வகையான தேசிய சீர்திருத்தவாதம், ஸ்டாலினிசம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதமும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான நிலைமைகளை உருவாக்கியது. இது நான்காம் அகிலத்திற்குள் மைக்கேல் பப்லோ மற்றும் எர்னஸ்ட் மண்டேல் தலைமையிலான திருத்தல்வாதப் போக்கின் வடிவில் வெளிப்பாட்டைக் கண்டதுடன், அது பப்லோவாதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

பப்லோவாதம் ட்ரொட்ஸ்கிசத்தின் ஒவ்வொரு அடிப்படை வேலைத்திட்டக் கொள்கையையும் நிராகரித்தது. அது, நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தின் தொடக்க வாக்கியத்தில் உள்ள, “ஒட்டுமொத்தமாக உலக அரசியல் நிலைமை முக்கியமாக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் வரலாற்று நெருக்கடியால் பண்புமயமப்படுத்தப்படுகிறது” என்ற ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலை நிராகரித்தது. இதிலிருந்து அதன் நோக்குநிலையானது உலகம் முழுவதும் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் பக்கமும் அதை சார்ந்து வாழும் ஆட்சிகளின் பக்கமும் திரும்பியது. அரசுக்கும் கட்சி அதிகாரத்துவங்களுக்கும் ஒரு புரட்சிகர ஆற்றல் இருப்பதாக வலியுறுத்திக்கொண்டு, பப்லோவாதிகள் நான்காம் அகிலத்தை ஒரு சுதந்திர அரசியல் சக்தியாக கலைத்துவிட முயன்றனர்.

இந்த முன்னோக்கிற்கு எதிராகவும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் அமைப்பு ரீதியான இருப்பையும் பாதுகாப்பதற்காக கனனின் திறந்த கடிதம் எழுதப்பட்டது. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.

1948 இல் பி.எல்.பீ.ஐ.யில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எடுத்த நிலைப்பாடு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்குமெனில், அவர்களது இந்த அரசியல் பின்வாங்கல் (பி.எல்.பி.ஐ. ஆனது லங்கா சமசமாஜக் கட்சியில் மறுஇணைப்பு செய்யப்பட்டது.) இலங்கையின் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பேரழிவுகரமான தோல்விக்கு களம் அமைத்தது. லங்கா சமசமாஜக் கட்சி கனனின் பகிரங்க கடிதத்தை நிராகரித்ததுடன் அடுத்த தசாப்தத்தில் பாப்லோவின் முன்னோக்கான வெகுஜன இயக்த்துடன் “ஒருங்கிணைத்தல்” என்று அழைக்கப்படுவதை நடைமுறையில் அமுல்படுத்தியது.

இது 1964 இன் “மாபெரும் காட்டிக்கொடுப்பில்” உச்சக்கட்டத்தை அடைந்தது. பரந்துபட்ட சமூக மறுசீரமைப்பு வெட்டுக்களுக்கு எதிரான பாரிய தொழிலாள வர்க்க எதிர்த் தாக்குதலுக்கு மத்தியில், லங்கா சமசமாஜக் கட்சியானது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் ஸ்ரீமா. பண்டாரநாயக்கவின் கீழ் ஒரு கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்தது. இதைத் தொடர்ந்து, 1970களின் முற்பகுதியில், தமிழ்த் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான மேலும் தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுத்தது. இனத்தின் அடிப்படையில் அரசுகள் அமைக்கப்படுவதைக் கண்டித்த அதே நபர்கள் இப்போது சிங்களப் பேரினவாதத்தை மேம்படுத்துவதற்கு தமது அரசியல் அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.

கீர்த்தி பாலசூரிய

தோழர் கீர்த்தி பாலசூரிய, 1987 டிசம்பரில் தனது அகால மரணத்திற்கு முன் எழுதிய கடைசி அறிக்கையில், “கடந்த கால் நூற்றாண்டில் பப்லோவாத திருத்தல்வாதிகளால் அங்கீகரிக்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியின் சொல்லொணாத் துரோகங்கள் இல்லையெனில், தமிழர்களின் தேசியப் போராட்டத்திலும், இலங்கைப் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்திலும் பிளவு ஏற்பட்டிருக்காது,” என்றார்.

லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பானது சிங்களப் பேரினவாதத்தின் வெடிப்புக்குக் களம் அமைத்த அதே நேரம், தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க சோசலிஸ்ட்டுகள் தலைமையிலான தொழிலாள வர்க்க இயக்கத்தை எதிர்பார்த்திருந்த பல தமிழ்த் தொழிலாளர்களுக்கு குழப்பத்தை உருவாக்கியது. இலட்சக் கணக்கான மக்களைக் கொன்ற மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த தொடர் நிகழ்வுகளுக்கு இது வழிவகுத்ததுடன், சிங்களம் மற்றும் தமிழர்களுமாக தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மொத்தமாக அழிக்கப்படுவதை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையில், சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்தை பப்லோவாத லங்கா சமசமாஜக் கட்சி காட்டிக் கொடுத்ததில் இருந்து உண்மையான படிப்பினைகளைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் அடிப்படையிலேயே இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.

அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோவாதத்திற்கு எதிராக முன்னெடுத்த போராட்டத்தில் பகிரங்கக் கடிதம் ஒரு உயர் புள்ளியாக இருந்தது. பின்னர், சோசலிச தொழிலாளர் கட்சி தனது முந்தைய போராட்டத்தை நிராகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த நிராகரிப்பில் ஒரு பகுதி, லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் குற்றங்களை மூடிமறைப்பதுடன் சம்பந்தப்பட்டிருந்தது. 1964 இல், சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் இருந்த அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள், இந்த மாபெரும் காட்டிக்கொடுப்புக்கும் பப்லோவாதத்திற்கும் இடையிலான உறவு பற்றி விவாதிக்கக் கோரி ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டதை அடுத்து, அவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கை ஸ்தாபித்தனர்.

1953 இல் எழுதப்பட்ட திறந்த கடிதத்தின் உள்ளடக்கத்தைத் திருப்பிப் பார்ப்போமெனில், கனன், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை சுருக்கமாகக் கூறியிருந்தார். அந்தக் கடிதம் அந்த நேரத்தில் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருந்த நிலைமையை மட்டும் பேசவில்லை, நம் காலத்தையும் பற்றி பேசுகிறது.

“முதலாளித்துவ முறைமையின் மரண ஓலம், மோசமடைந்து வரும் மந்தநிலைமைகள், உலகப் போர்கள், பாசிசம் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிப்பாடுகள் மூலம், நாகரிகத்தை அழிப்பதற்கு அச்சுறுத்துகிறது. இன்று அணு ஆயுதங்களின் வளர்ச்சியானது சாத்தியமான அபாயத்தை மிக மோசமான முறையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலக அளவில் திட்டமிடப்பட்ட சோசலிச பொருளாதாரத்தின் மூலம் முதலாளித்துவத்தை பதிலீடு செய்தவன் மூலமும், அதன் ஆரம்ப நாட்களில் முதலாளித்துவத்தால் தொடங்கி வைக்கப்பட்ட முன்னேற்றத்தின் சுழற்சியை மீண்டும் தொடங்குவதன் மூலமும் மட்டுமே, படுகுழியில் இறங்குவதைத் தவிர்க்க முடியும்.”

இன்று உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் நிலைமை என்ன? ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், பனிப்போரின் உச்சத்தின் பின்னர் எந்த ஒரு புள்ளியிலும் இல்லாத அளவிற்கு உலகை அணுசக்தி யுத்தத்திற்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. காசாவில் நடக்கும் இனப்படுகொலையானது ஏகாதிபத்தியம் “பாதாளத்தில் இறங்குவதை” குறிக்கின்றது. பாசிச இயக்கங்கள் தலைதூக்குவதனாது, முழு அரசியல் ஸ்தாபனமும் உலகளவில் வலதுநோக்கி நகர்வதனதும் சர்வாதிகார மற்றும் எதேச்சாதிகார ஆட்சி முறைகளுக்கு திரும்புவதனதும் ஆரம்ப நடவடிக்கைகளாகும்.

முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு மாற்றீடு “உலக அளவில்“ பொருளாதார வாழ்வை மறுசீரமைப்பு செய்யும் சர்வதேச சோசலிசமே ஆகும், கனன் எழுதியதைப் போல் ட்ரொட்ஸ்கிசம் மற்றும் மார்க்சிசத்தின் அடிப்படை முன்னோக்கை மீண்டும் வலியுறுத்துவதாகும். ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உலகப் பிரச்சனைகள் ஆகும், அவற்றிற்கு சர்வதேச தீர்வுகளே அவசியமாகும்.

நாம் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தேசிய தீர்வுகள் இல்லை என்பதை கொரோனா தொற்றுநோய் நிச்சயமாக நிரூபித்துள்ளது. தனி ஒரு நாட்டின் கட்டமைப்பிற்குள் ஆளும் உயரடுக்கின் கொள்கைகளை எதிர்ப்பது சாத்தியமில்லை. இங்கே இலங்கையில், அரசாங்கத்தின் அமைப்பு எதுவாக இருந்தாலும், சர்வதேச நாணய நிதியமே கொள்கைகளை ஆணையிடுகிறது என்பதை கடந்த இரண்டு வருட நிகழ்வுகள் காட்டுகின்றன.

“சமூகத்தில் உண்மையான புரட்சிகர வர்க்கமான தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் மட்டுமே சோசலிசம் நிறைவேற்றப்பட முடியும்,” ஆனால் தொழிலாள வர்க்கமே தலைமைத்துவ நெருக்கடியை எதிர்கொள்கிறது, இருப்பினும் சமூக சக்திகளின் உலக உறவு, தொழிலாளர்கள் அதிகாரத்திற்கு செல்வதற்கு இன்று போல் சாதகமாக இருந்ததில்லை. என்று கூறி கனன் தொடர்ந்தார்.

திறந்த கடிதம் எழுதப்பட்ட 70 ஆண்டுகளில், சர்வதேச தொழிலாள வர்க்கம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. முன்னர் முக்கியமாக விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட உலகின் பரந்த பிரிவுகள் தொழிலாளி வர்க்கமாக்கப்பட்டுள்ளன. வரலாற்றில் முதன்முறையாக, உலகின் பெரும்பான்மையான மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர், இதில் 10 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட பிரம்மாண்டமான மெகா நகரங்ள் அடக்கும்.

முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயமாக்கல், முன்னர் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு முழு உலகத்தின் தொழிலாள வர்க்கத்தையும் ஒருங்கிணைத்துள்ளதுடன் தகவல்தொடர்பு முன்னேற்றங்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை உலக அளவில் ஒருங்கிணைப்பதை சாத்தியமாக்கியுள்ளது. 1996ல் 3 சதவீதமாக இருந்த உலகளாவிய இணைய பயன்பாடு இன்று 65 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

காசாவில் இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜன, சர்வதேச எதிர்ப்புகளின் வெடிப்பு, வர்க்கப் போராட்டம் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, வடிவத்திலும் ஒரு சர்வதேசப் போராட்டமாக வளர்ச்சியடையும் என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள் தங்கள் கைகளில் பிரமாண்டமான, முன்னெப்போதுமில்லாதளவு செல்வத்தை குவித்துள்ளன. அவர்கள் அரசாங்கங்களையும் ஊடகங்களையும் கட்டுப்படுத்துகிறார்கள். ஆனால் சர்வதேச தொழிலாள வர்க்கம் தான் இந்த கிரகத்தின் மிக சக்திவாய்ந்த சக்தி. அவர்களே எல்லாவற்றையும் உற்பத்தி செய்பவர்கள் ஆவர்.

புறநிலை நிலைமைகள் சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய இயக்கத்தின் வளர்ச்சிக்கான அடிப்படையை உருவாக்குகின்றன. இருப்பினும், அதே நேரத்தில், கனன் விளக்கியது போல், தொழிலாளர்கள் “புரட்சிகர தலைமை நெருக்கடியை” எதிர்கொள்கின்றனர். அவர் பின்வருமாறு எழுதினார்:

“இதற்கு பிரதான தடையாக இருப்பது ஸ்ராலினிசம் ஆகும். அது ரஷ்யாவில் அக்டோபர் 1917 புரட்சியின் கௌரவத்தை சுரண்டிக்கொள்வதன் மூலம் தொழிலாளர்களை ஈர்த்துக்கொண்டு, பின்னர், அவர்களின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்து, அவர்களை சமூக ஜனநாயகத்திற்குப் பின்னால், அக்கறையின்மைக்குள் அல்லது முதலாளித்துவத்தின் மீதான மாயைக்குள் தள்ளிவிடுகின்றது.”

தோழர் நோர்த், லண்டனில் நடந்த இந்தத் தொடரின் சமீபத்திய விரிவுரையில், தற்காலத்திற்கும் கனனின் பகிரங்கக் கடிதத்தின் காலத்திற்கும் இடையே உள்ள ஒரு பெரிய மாற்றம், சோவியத் ஒன்றியமும் வெகுஜன ஸ்ராலினிசக் கட்சிகளும் இல்லை என்பதுதான் என்று குறிப்பிட்டார். “ஆனால், அக்டோபர் புரட்சியின் பாரம்பரியம் மற்றும் வேலைத்திட்டத்துடன் ஸ்ராலினிசத்தை தவறான முறையில் அரசியல் ரீதியாக திசைதிருப்பி அடையாளப்படுத்தும் எதுவும் எஞ்சியிருக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

நான்காம் அகிலத்திற்கு வெளியே சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தும் வேலைத்திட்டமும் முன்னோக்கும் எங்கே இருக்கிறது? மாவோவாதிகள், காஸ்ரோவாதிகள், பல்வேறு குட்டி-முதலாளித்துவ தேசிய இயக்கங்களும் இருந்த இடத்திலிருந்து துடைத்தழிக்கப்பட்டுள்ளன அல்லது அபிவிருத்திகளால் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களின் வேலைத் திட்டம் சகாப்தத்தின் புறநிலை பண்புகளுடன் ஒத்துப்போகவில்லை.

எவ்வாறாயினும், புரட்சிகர தலைமையின் நெருக்கடி தீர்க்கப்பட வேண்டியதாக உள்ளது. வெகுஜன, புரட்சிகர எழுச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. புறநிலை வளர்ச்சிகளால் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின், இன்னும் தங்களை தொழிலாளர் அல்லது சமூக ஜனநாயகக் கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் வலதுசாரி அமைப்புகள், பல போலி-இடது மற்றும் தேசியவாத அமைப்புகளின் காட்டிக்கொடுப்பை எதிர்கொள்கிறது. அவற்றில் பலவும் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தை நிராகரித்த பப்லோவாத கொள்கையை தங்கள் தொடக்கமாக கொண்டுள்ளன. மற்ற நாடுகளைப் போலவே அமெரிக்காவிலும், தொழிலாளர்களின் பாரிய கோபத்தை நிர்வாகத்தினதும் அரசின் முகவர்களாகவும் மட்டுமே செயல்படுகின்ற தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் கட்டுப்படுத்துகின்றன.

கனன் அடிப்படைக் கோட்பாடுகளை சுருக்கமாக கூறி முடிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்: “உண்மையில் ட்ரொட்ஸ்கி முன்னறிவித்தபடி ஒவ்வொரு பக்கத்திலும் திறக்கப்படும் புரட்சிகர சூழ்நிலைகள், ஒரு காலத்தில் நடப்பு வாழ்க்கை யதார்த்தத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்படாத சற்றே தொலைதூர சுருக்கங்களாகத் தோன்றியவற்றுக்கு, இப்போது முழு உறுதியையும் கொண்டு வந்துள்ளது. உண்மை என்னவெனில், இந்தக் கோட்பாடுகள் இப்போது அரசியல் பகுப்பாய்விலும், நடைமுறைச் செயல்பாட்டின் போக்கை தீர்மானிப்பதிலும் கூடுதலான பலத்தைக் கொண்டுள்ளன.

இந்த முடிவு தற்போதைய சூழ்நிலைக்கு இன்னும் அதிக சக்தியுடன் பொருந்தும். உலகம் முழுவதிலும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக போராட்டத்திற்குள் நுழைந்து புரட்சிகரமான முடிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர். சமூகத்தின் அடிப்படை மறுசீரமைப்பு அவசியம் என்ற புரிதல் வளர்ந்து வருகிறது. ஊடகங்களையும் அதன் பிரச்சாரத்தையும் யாரும் நம்புவதில்லை. அனைத்து அரசியல் கட்சிகளின் வங்குரோத்து நிலையும் வெளிப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பணி, குற்றவியல் தன்னலக்குழுக்கள் மற்றும் போர்வெறியர்கள், இனப்படுகொலையை தூண்டுபவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றவும் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையை உலக அளவில் சமூக சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு மறுசீரமைக்கவும் போராடும் ஒரு உண்மையான சோசலிச இயக்கத்தை தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் கட்டியெழுப்புவதாகும். இந்தப் பணியை நிறைவேற்றுவதில், தொழிலாளர்களும் இளைஞர்களும் வரலாற்றை ஓரங்கட்ட முடியாது.

நிகழ்காலமானது கடந்த காலத்தால் உருவாக்கப்பட்டதும் வடிவமைக்கப்பட்டுள்ளதுமாகும். இந்த கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், நிகழ்காலத்தின் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும் எதிர்காலத்தில் ஒரு சோசலிச சமூகத்தை உருவாக்குவதற்குமான சவால்களை ஏற்றுக்கொண்டவர்களாக நம்மை நிரூபிப்போம்.

Loading