இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.
இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) ஊழியர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் வேட்டையாடலை எதிர்த்து இலங்கையில் உள்ள தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டு (CWAC) ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளது. பெப்ரவரி 1 அன்று மாலை 4 மணிக்கு கொழும்பு 2, ஜே.எம்.சி.இல் (ஜயசேகர முகாமைத்துவ நிலையத்தில்) நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் விக்கிரமசிங்க அரசாங்கம் அமுல்படுத்தும் தனியார்மயமாக்கல் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனவரி 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற 66 ஊழியர்களை கடந்த வாரம் இ.மி.ச. நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
போராட்டத்தை முன்னதாக தொழிலாளர்களின் விடுமுறையை இரத்து செய்வதற்கான தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் வாரத்தில் மேலும் பல ஊழியர்களை இடைநிறுத்துவதற்கு இ.மி.ச. நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கடுமையான விதிகளின் கீழ் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்கின்றனர்.
தொழிலாளர்கள் தங்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாக்க வேலைநிறுத்தங்கள் உட்பட தொழில்துறை போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அடிப்படை ஜனநாயக உரிமையின் மீதான முழு முன்னோடித் தாக்குதலாகும்.
இது இ.மி.ச. தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி, சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவதில் உறுதியாக இருக்கும் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு கூர்மையான எச்சரிக்கையாகும். இது நூற்றுக்கணக்கான அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் அல்லது வணிகமயமாக்கலுக்கு இலக்காகியுள்ளன. இந்த கொடூரமான 'மறுகட்டமைப்பு' திட்டம் சுமார் அரை மில்லியன் தொழிலாளர்களை பாதிக்கிறது.
இ.மி.ச. ஊழியர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறையானது அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களையும் பயமுறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்குமான ஒரு முயற்சியாகும். தொழிலாளர்கள் அனைத்து இ.மி.ச. ஊழியர்களையும், தங்களது சொந்த உரிமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும். “வேட்டையாடலை நிறுத்து!” 'இடைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்து!' என்ற கோஷங்களை உங்கள் அணிதிரள்வுக்கான முழக்கங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இ.மி.ச. தொழிற்சங்கத் தலைவர்களும் ஏனைய அரச நிறுவனங்களில் உள்ள அவர்களது சகாக்களும் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கும் பரந்த சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக ஒரு ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்கப் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதைத் தடுக்கின்றனர்.
தொழிற்சங்க அதிகாரத்துவம் அல்லது ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் அவற்றுக்கு வக்காலத்து வாங்கும் போலி-இடதுகள் உட்பட எந்தவொரு முதலாளித்துவக் கட்சிகளையும் நம்பி தொழிலாளர்கள் தங்கள் தொழில்கள், வேலை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. இந்தக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளன.
துறைமுக ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், புகையிரத ஊழியர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஆடைத் தொழிலாளர்களை உள்ளடக்கிய எமது நடவடிக்கை குழுக்கள், இலங்கை முழுவதிலும் உள்ள எமது வர்க்க சகோதர சகோதரிகளை தங்களுடைய சொந்த நடவடிக்கைக் குழுக்களை நிறுவி, தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னோக்கி கொண்டுசெல்லுமாறு வலியுறுத்துகின்றன.
பெப்ரவரி 1 அன்று நடக்கவுள்ள எங்கள் பொதுக் கூட்டத்தில், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக அரசாங்கமும் இ.மி.ச. நிர்வாகமும் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்கான வேலைத்திட்டம் பற்றியும் கலந்துரையாடப்படும். இந்த முக்கியமான கூட்டத்திற்கு வருகை தந்து, கலந்துரையாடலில் பங்குபற்றி, இந்த தீர்க்கமான போராட்டத்தை அபிவிருத்தி செய்யுமாறு உங்களை அழைக்கின்றோம்.
இடம்: ஜே.எம்.சி. (ஜயசேகர முகாமைத்துவ நிலையம்) கொழும்பு 02, இ.மி.ச. தலைமை அலுவலகத்திற்கு எதிரில்.
திகதி: பெப்ரவரி 1
நேரம்: மாலை 4 மணி