மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் குற்றவியல் அலட்சியத்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு ஏழைகள் துன்பப்படுகின்றனர்

தமிழ்நாட்டை கடந்த டிசம்பரில் தாக்கிய மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் இன்னமும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் நிவாரணங்களுக்காக காத்திருக்கின்ற நிலையில் மீண்டும் இந்த வாரம் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இந்த மழை வாரக் கடைசி வரை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

இதே வேளை, தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் கனமழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன் சில பிரதேசங்களில் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புதுச்சேரியிலும், பழனியிலும் மழைவெள்ளத்துடன் கழிவு நீரும் வீடுகளுக்குள் புகுந்துள்ளதை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.

மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சென்னையில் நீரில மூழ்கியுள்ள சாலை (Photo Credit: Ragu R) [Creative common license]

டிசம்பர் 3, 4 ஆம் திகதிகளில் வட தமிழக கடலோர பகுதிகளை மிக்ஜாம் புயல் தாக்கியதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வாழும் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். அதே வேளை, டிசம்பர 17, 18 ஆம் திகதிகளில் பெய்த கனமழையால் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டம் தூத்துக்குடி ஆகும்.

மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள தூத்துக்குடியின் ஒரு பகுதி [Creative common license]

செய்திகளின் படி, டிசம்பர் 17, 18 திகதிகளில் பாய்ந்த வெள்ளப்பெருக்கினால் 44 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஐந்துக்கும் மேற்பட்ட உருக்குழைந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தின் பாதிப்புகள் குறித்து மூன்று வாரங்களின் பின்னர், கடந்த வாரம்தான் பாதிப்புகள் குறித்த உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் வெளிவந்துள்ளன. கிட்டத்தட்ட ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் குடும்பங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த புள்ளி விபரங்களின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 7,762 என கணக்கிடப்பட்டுள்ளதுடன் இதில் பெரும் எண்ணிக்கையிலானவை ஏழைகளின் குடிசைகளாகும்., 4,412 குடிசை வீடுகள் பகுதியாகவும் 2,794 குடிசைகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 472 கல்வீடுகள் பகுதியாகவும் 84 கல்வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தினால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பு உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 1,53,132 ஹெக்டயர் வேளாண் பயிர்களும், 35,592 ஹெக்டயர் தோட்டப் பயிர்களும் நாசமாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மாடுகள், கன்றுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் கோழிகளுமாக 1,17,471 காலநடைகள் கொல்லப்பட்டுள்ளன. சுமார் ஐந்தாயிரம் மாடுகளும் 26 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகளும் வெள்ளத்தால் பலியாகியுள்ளன.

700க்கு மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் சேதமாகியுள்ளதுடன் கிட்டத்தட்ட நான்காயிரம் படகு இயந்திரங்களும் சேதமடைந்துள்ளதோடு 850 மீன்பிடி வலைகள் அழிவுக்குள்ளாகியுள்ளன. இவற்றுக்கு மேலாக 24.75 ஹெக்டயர் மீன் பண்ணைகள் சேதமாகியுள்ளன. சுமார் 5,500 உப்புத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சேகரித்த உப்பு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இன்னமும் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 36 குடியிறுப்பு பிரதேசங்களில் தண்ணீர் இன்னமும் தேங்கி இருப்பதாகவும், சில சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிகளை திறக்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. தூத்துக்குடி கோவளம் எனப்படும் மீனவர் கிராமத்திற்கான பாதை துண்டிக்கப்பட்டு நீர் தேங்கியுள்ளதால், மூன்று வாரங்களாகியும் கிராமவாசிகள் படகில் பயணிக்கத் தள்ளப்பட்டுள்ளதுடன் சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை.

தூத்துக்குடி நிலைமை இவ்வாறிருக்க மிக்ஜாம் புயல் பாதிப்பின் அளைவை அம்பலப்படுத்தும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 550,000 வரையான மக்கள் இரண்டாம் கட்ட நிவாரண நிதிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

புயல் மற்றும் வெள்ளப் பாதிப்பினால் குடும்ப உறுப்பினர்கள், வீடுகள், உடைகள், உடமைகள், பயிர்கள் மற்றும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள மக்களுக்கு தலா அற்பத் தொகை 6 ஆயிரமும், சிலருக்கு ஆயிரமும் மட்டுமே வழங்கப்படுகின்றது. இந்த தொகையை பெறுவதற்கு தாங்கள் தகுதியானவர்கள் என்பதை நிரூபிப்பதற்கான உத்தியோபூர்வ நடவடிக்கைகள் முடியும்வரை பாதிக்கப்பட்டோர் காத்திருக்க வேண்டும். இன்னமும் பல பிரதேசங்களுக்கு துப்புரவான நீர் கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை.

இந்த 6 ஆயிரம் ரூபாயும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என தருவைக்குளம் கிராம மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் முன் திங்கள் கிழமை போராட்டம் நடத்தினர். அதே தினம் கோவில்பட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக உளுந்து, பாசிப்பயறு, மக்காச் சோளம், மிளகாய் மற்றும் பருத்தி விவசாயிகள் தாங்கள் எதிர்கொண்டுள்ள சேதத்துக்கு நிவாரணம் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வெகுஜனங்கள் மத்தியில் வளரும் கோபத்தை தணிப்பதற்கும், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை சுரண்டுவதற்கும் திராவிட முன்னேற்றக் கழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தங்கையும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான மு.க. கனிமொழி வெள்ளத்தின் போது தூத்துக்குடிக்கு சென்று அற்ப உணவு விநியோகம் செய்ததுடன் கடந்த வாரம் சில நிவாரணப் பொதிகளையும் வழங்கி வைக்க அங்கு சென்றிருந்தார்.

பாதிப்புகளுக்கான இழப்பீடுகளைப் பெற மக்கள், குறிப்பாக விவசாயிகள், காத்திருக்க வேண்டியிருப்பதோடு அவற்றைப் பெற்று மீண்டும் தமது வாழ்வாதாரத்தை ஸ்தாபித்துக்கொள்வது எப்போது, அதுவரை அவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வது எப்படி என்ற பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

தனது பொறுப்பில் இருந்து கை கழுவிக்கொள்வதற்காக தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியில் ஏற்பட்ட அழிவுகளை தேசிய பேரிடராக அறிவிக்கும்படி தமிழக அரசாங்கம், இந்து அடிப்படைவாத பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசாங்கத்திடம் கோரியது. இந்த கோரிக்கையை நிராகரித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வேண்டுமென்றால் மாநில அரசாங்கம் அவ்வாறு அறிவிக்கலாம் என்று கூறி நழுவிக்கொண்டார்.

அதே வேளை, தமிழ் நாடு அரசாங்கம் கோருகின்ற பேரிடர் நிதியை வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் இழுத்தடித்து வருவதன் மூலம் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களை துன்பத்துக்குள் தள்ளியுள்ளது. இது, எதிர் கட்சிகளால் ஆளப்படும் மாநில ஆட்சிகளை கவிழ்த்து, தனது ஆட்சியை நிறுவுவதற்கான பா.ஜ.க. திட்டத்தின் ஒரு பகுதியாக, வெகுஜன எதிர்ப்புகளை தமிழ்நாட்டு அரசாங்கத்தின் பக்கமாக திருப்பி விடும் முயற்சியாகும்.

திருச்சியில் பன்னாட்டு விமான நிலைய முனையத்தை நேரில் வந்து திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடியிடம், 21 ஆயிரம் கோடி நிவாரண நிதியை ஸ்டாலின் கோரிய போது, தனது ஆட்சியில் மாநிலங்களுக்கான நிதி பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெருமை பிதற்றிய மோடி, தமிழ் நாட்டுக்கான நிதி 2.5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறி சமாளித்துவிட்டார்.

நிர்மலா சீதாராமன், 900 கோடி தமிழகத்துக்கு கொடுத்துவிட்டதாகவும் மத்திய குழு ஆய்வு செய்த பிறகு வேறு தொகை வழங்கப்படும் எனவும் கூறி, பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தனது அறுவருக்கத்தக்க அலட்சித்தை வெளிப்படுத்தினார். வானிலை ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு புயல் மற்றும் வெள்ளம் வருவதற்கு முன்னதாகவே அந்த நிதியை கொடுத்துவிட்டதாக கூறிய அவர், பேரழிவுக்கான குற்றச்சாட்டை தமிழக அரசின் மீதே சுமத்தினார்.

மத்திய குழு ஆய்வு செய்த பின்னரும் இன்னமும் நிதி கிடைக்காத நிலையில், வெள்ள நிவாரண மற்றும் மறுகட்டமைப்பு நிதியாக 37,907.19 கோடி ரூபாயை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டுமென கோருவதற்காக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.யின் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சனிக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.

இயற்கையின் சீற்றம் எவ்வாறிருந்த போதிலும், அவற்றினால் ஏற்படும் மனித இழப்புகள் மற்றும் பாதிப்புகள் ஒட்டுமொத்த இந்திய ஆளும் வர்க்கத்தின் மீதான ஒரு குற்றப்பத்திரிகை ஆகும். கடந்த பல தசாப்தங்களாக இந்தியாவில் புயல், வெள்ளம், உஷ்ணக் காற்று மற்றும் வரட்சியினால் பல்லாயிரக்கணக்கான உயர்கள் பலியாகி வருவதோடு குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வந்துள்ளன. இந்த இழப்புக்களுக்கான பிரதான காரணம் அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் இயற்கைப் பேரிடரைத் தடுப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளமையே ஆகும்.

நரேந்திர மோடியின் அரசாங்கம் உட்கட்டமைப்புகளை சீர்செய்யவும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யவும் நிதி ஒதுக்குவதற்குப் பதிலாக, இந்திய முதலாளித்துவ நலன்களை தக்க வைத்துக்கொள்வதற்காக சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் திட்டமிடல்களில் தன்னை ஒரு முன்னணி அரசாக இணைத்துக்கொண்டுள்ளதுடன் அதற்காக பில்லியன் கணக்கான நிதியை செலவிட்டு வருகின்றது. இவற்றுக்கு மேலாக இந்து மேலாதிக்கவாதத்தையும் இந்திய தேசியவாதத்தையும் தூண்டி விடுவதற்காக சிலைகள் அமைக்கவும் கோயில்களைக் கட்டவும் பில்லியன் கணக்கில் செலவிட்டு வருகின்றது.

தமிழ்நாட்டில் 2015, 2021 மற்றும் 2023 இல் ஏற்பட்ட பெருமழையின் காரணமாக முறையே 200, 45 மற்றும் 100 பேர் கொல்லப்பட்ட சம்பவங்கள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்த அனுபவங்கள் இருந்தும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தி.மு.க. அரசாங்கங்களும் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கங்களும் காட்டிய அலட்சியத்தையே இம்முறை புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.

இயற்கைப் பேரழிவு மக்களைப் பாதிக்காத வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்யாத ஸ்டாலினின் அரசாங்கம், மறுபக்கம் மாநிலத்தை சர்வதேச மூலதனத்தை ஈர்க்கும் உழைப்புத் தளமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் பாகமாக சென்னையில் ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய முதலீட்டாளர் மாநாட்டில் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதோடு தூத்துக்குடி இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப்பாக மாறி வருவதாக ஊடகங்கள் அறிவிக்குமளவுக்கு ஹட்ரஜன் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்க ஒதுக்கப்பட்ட ரூபா 4,000 கோடிக்கு என்ன ஆனது என்று தி.மு.க. அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க் கட்சிகளும், பா.ஜ.க.யும் கேள்வி எழுப்புவதன் மூலம் தங்களது பொறுப்பில் இருந்து நழுவிக்கொள்கின்றன. அந்த 4 ஆயிரம் கோடியில் செய்த அபிவிருத்தி திட்டங்களால் தான் இம்முறை பாதிப்பு குறைவாக இருந்ததாக தி.மு.க. வஞ்சத்தனமாக சமாளித்துக்கொள்கிறது. எவ்வாறாயினும் இந்தக் கூற்றை பொதுமக்கள் நம்பத் தயாராக இல்லை.

சீதாராமனின் குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் இருக்க, தி.மு.க.வும் ஊழல் மற்றும் மோசடிகளில் வரலாற்று ரீதியில் பேர் போனதாகும். எதிர்க் கட்சியான அ.இ.அ.தி.மு.க. இதில் இருந்து வேறுபட்டதல்ல.

தி.மு.க.வும் அல்லது இந்திய முதலாளித்துவத்துக்கு முண்டு கொடுத்து வரும் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூறிக்கொள்வது போல் இந்த இயற்கைப் பேரழிவை தேசியப் பேரிடர் என மத்திய அரசாங்கம் அறிவித்துவிட்டால் நிதி கிடைத்துவிடுவதோ அல்லது பிரச்சினைகள் தீர்ந்து விடுவதோ இல்லை. இவ்வாறான பேரிடர்களின் போது ஆளும் கட்சிகளும் எதிர்க் கட்சிகளும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டிக்கொண்டு பொறுப்பில் இருந்து தப்பிக்கொள்ளவும் அரசியல் இலாபம் தேடவுமே முயற்சிக்கின்றன. இவற்றில் எந்தக் கட்சியும் இந்த இயற்கை பேரழிவுகளுக்கு விஞ்ஞானப்பூர்வமான தீர்வை வழங்குவதற்கு இலாயக்கற்று இருக்கின்றன.

அதே வேளை இந்த இயற்கைப் பேரழிவுகள் தமிழ் நாட்டுக்கு அல்லது இந்தியாவுக்கு மட்டும் உரியவை அல்ல. காலநிலை மாற்றத்தின் காரணமாக இன்று பின்தங்கிய நாடுகள் முதல் முன்னேறிய ஏகாதிபத்திய நாடுகள் வரை இயற்கைப் பேரிடர் பொது மக்களுக்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. அந்தந்த நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் உட்கட்டமைப்பை அலட்சியம் செய்து போருக்காகவும் இராணுவத்துக்கும் அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்கின்றன.

ஒவ்வொரு வருடமும் காலநிலை மாற்றத்திற்கான மாநாடுகளை ஏற்பாடு செய்கின்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் ஆட்சியாளர்கள் அதில் ஒருமித்த கொள்கைக்கு வரமுடியாமல் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துவிடுகின்றன. அதற்கு காரணம் ஒவ்வொரு தேசிய அரசையும் அடிப்படையாக கொண்டு தத்தமது தேசிய முதலாளித்துவ நலன்களை பாதுகாப்பது குறித்து அவற்றுக்கு இடையில் பகையோடு கூடிய போட்டி நிலவுகிறது.

இயற்கைப் பேரிடரை முன்னறிவிக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் அவற்றில் இருந்து தப்புவதற்கு புதிய தொழில் நுட்பத்திலான உட்கட்டமைப்பு திட்டங்கள் இருந்த போதிலும், இலாபத்துக்காக உற்பத்தி செய்கின்ற, மனித தேவைக்காக அன்றி, முதலாளித்துவ நலன்களுக்காக போர்களுக்கு நிதியை செலவிடுகின்ற, முதலாளித்துவ முறைமைக்குள் அவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்பது பூகோள ரீதியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சோசலிச கொள்கைகளை அமுல்படுத்த அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்-விவசாயிகள் ஆட்சியின் கீழ் மட்டுமே, மனித இனத்தை காக்கும் வகையில் பகுத்தறிவான முறையில் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும்.

Loading