முன்னோக்கு

தீவிர வானிலை மற்றும் காலநிலை மாற்றமும் சோசலிசத்திற்கான காரணங்களும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வார இறுதியில் டென்னிசியின், ஹம்ப்ரிஸ் கவுண்டியில் (Humphreys County) ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 45 பேரை இதுவரை காணவில்லை. சனிக்கிழமை மாலையில் இப்பிராந்தியத்தில் உருவான புயலால் முன்நிகழ்ந்திராத வகையில் 17 அங்குல அளவிற்கு அங்கு கனமழை பெய்ததில் திடீர் வெள்ளம் ஏற்பட்டிருந்தது.

ஆகஸ்ட் 5, 2021, வியாழக்கிழமை, ரஷ்யாவின் யாகுட்ஸிற்கு மேற்கே, கோர்னி உலுஸ் பகுதியில் உள்ள கியூயோரெலியாக் கிராமத்திற்கு அருகே உருவான காட்டுத் தீயை தீயணைப்பு படையினர் அணைக்கின்றனர். (AP Photo/Ivan Nikiforov)

ஆரம்பகட்ட புகைப்படங்கள் ஒட்டுமொத்த சமூகங்களும் பேரழிவிற்குட்பட்டிருப்பதைக் காட்டுகின்றன, ஒரு சூறாவளி, சுழல் காற்று அல்லது காட்டுத் தீ அப்பகுதி ஊடாக கடந்து சென்றதில் பல வீடுகள் சேதமடைந்து போயிருந்தன. மீட்பு முயற்சிகள் தற்போது பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இதில் டென்னிசி அவசர மேலாண்மை நிறுவனம், மாநில போக்குவரத்து துறை, டென்னிசி தேசிய காவல்படை, டென்னிசி நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் மற்றும் டென்னிசி சுகாதார துறை ஆகியவை ஈடுபட்டுள்ளன.

இருப்பினும், டென்னிசியிலும், அத்துடன் மிச்சிகனிலும் ஏற்பட்ட இத்தகைய கொடிய வெள்ளங்கள் வெறும் இயற்கை பேரழிவுகள் அல்ல. காட்டுத்தீ, சூறாவளி மற்றும் துருவ சுழல் காற்றுகளைப் போலவே, மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தால் வெள்ளப் பெருக்குகள் அடிக்கடி ஏற்படுவதுடன், கடுமையான “தீவிர வானிலை” நிகழ்வுகளும் ஏற்படுகின்றன. இந்த காரணமுடைய தொடர்பு பற்றி, காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மிக சமீபத்திய அறிக்கை விவரித்துள்ளது, இந்த அறிக்கை, “மனித நடவடிக்கைகள் தான் வளிமண்டலம், கடல் மற்றும் நிலப்பரப்பை வெப்பமாக்கியது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை,” பின்னர் இதுவே “வெப்ப அலைகள், கனமழை, வறட்சி மற்றும் வெப்பமண்டல சூறாவளிகள் போன்ற தீவிர இயற்கை மாற்றங்கள் உருவாவதற்கு காரணமாகின்றன” என்று அறிவித்துள்ளது.

இதே அறிக்கை குறிப்பிட்ட சமீபத்திய நிகழ்வுகளுக்கு காரணமான காலநிலை மாற்றங்களை கூட நேரடியாக தொடர்புபடுத்தியது, அதாவது, ஐரோப்பா முழுவதும் ஏற்பட்ட வெள்ளங்கள், மேற்கு அமெரிக்காவில் பரவிய காட்டுத்தீ, உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி, மற்றும் ரோட் தீவில் (Rhode Island) நிலச்சரிவை ஏற்படுத்தியதுடன், நியூ இங்கிலாந்து முழுவதும் மின் தடை ஏற்பட காரணமான ஹென்றி சூறாவளி போன்ற வலுவான சூறாவளிகள் ஆகிய இயற்கை சீற்றங்களை இது குறிப்பிட்டது.

காலநிலை மாற்றத்துடன் தொடர்புபட்ட ஏனைய சமீபத்திய தீவிர வானிலை நிகழ்வுகளில் பின்வருவன அடங்கும்:

• கிரேக்கத்தில் 116.8 டிகிரி பாரன்ஹீட் அளவை எட்டிய முன்நிகழ்ந்திராத வெப்ப அலை நாடெங்கிலும் பல இடங்களில் காட்டுத்தீயை தூண்டியதில் இதுவரை 2 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர், பல வீடுகளும் 482 சதுர மைல்கள் பரப்பளவிலான பகுதியும் எரிந்து போயின, மேலும் ஆயிரக்கணக்கான பேர் வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஐ.நா.வைப் போலவே, உலக வானிலை அமைப்பும் (World Meteorological Organization) காட்டுத்தீயை காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலின் தாக்கங்களுடன் இணைத்து பார்க்கிறது.

• அல்ஜீரியாவின் Tizi Ouzou பகுதியில் உள்ள மலைகள் கடந்த இரண்டு வாரங்களில் 100 க்கும் மேற்பட்ட காட்டுத் தீயில் கருகிவிட்டன, இந்த தீயிலிருந்து உருவான வெப்பம் மலைத் தொடர்கள் முழுவதையும் துவம்சம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட பகுதி எரிந்துவிட்டது, மேலும் லர்பா நாத் இராதென் (Larbaa Nath Irathen), பெனி டுவாலா (Beni Douala) மற்றும் அயிட் மெஸ்பா (Ait Mesbah) ஆகிய நகரங்கள் சாம்பாலாகின, 2008 முதல் 2020 வரை உருவான அனைத்து தீயையும் விட இது பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. தீப்பிழம்புகளுடன் போராடி இதுவரை 90 பேர் இறந்துள்ளனர்.

• பொலிவியாவில் உருவான காட்டுத் தீ, நாட்டின் அமசன் மற்றும் சாக்கோ பகுதிகளின் 580 சதுர மைல்களுக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை எரித்துவிட்டது. இந்த பகுதிகளில் தென் அமெரிக்காவின் பழங்குடியின மக்களின் பெரும்பகுதியினர் வசித்ததுடன், பல வகை தாவரங்களும் விலங்குகளும் இருந்தன. மேலும், சுற்றுசூழலை பாதிக்கும் (Greenhouse gases) வாயுக்கள் தடையின்றி சுழன்று கொண்டிருக்கும் அளவைக் குறைக்கும் பல இயற்கையான போக்குகளில் ஒன்றான வளிமண்டலத்தில் இருந்து கார்பனைப் பிரித்தெடுத்து சேமிக்கும் செயல் நடக்கக்கூடிய மிக முக்கியமான பகுதிகளில் இந்தப் பகுதியும் ஒன்றாகும்.

• புவியின் மிகப்பெரிய காட்டுத் தீ தற்போது சைபீரியாவில் ஏற்பட்டுள்ளது, பேரழிவுகரமான 2019-20 ஆஸ்திரேலிய காட்டுத் தீ பருவத்துடன் ஒப்பிடுகையில், இங்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நூற்றுக்கணக்கான தீ உருவாகி 62,300 சதுர மைல்களுக்கு அதிகமான நிலப்பரப்பை எரித்துவிட்டது. இந்த தீ, கோடை காலத்தில் 118 டிகிரி பாரன்ஹீட் வரையிலும் வெப்பநிலை உச்சமடைவதற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது. நெருப்பிலிருந்து எழுந்த புகை மண்டலம் மங்கோலியாவின் தலைநகரான உலான்பாதர் (Ulaanbaatar) செல்லும் வழியையும், முதல் முறையாக வட துருவத்தையும் எட்டும் வகையில் கிழக்கில் இருந்து மேற்காக 2,000 மைல்கள் மற்றும் வடக்கில் இருந்து தெற்காக 2,500 மைல்கள் அளவிற்கு வானத்தை மூடியுள்ளது.

• துருக்கியின் கருங்கடல் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இறப்புக்கள் ஐரோப்பாவின் ஜூலை வெள்ளத்தையடுத்து நிகழ்ந்துள்ளன, ஐரோப்பா வெள்ளத்தின் போது ஜேர்மனி, பெல்ஜியம், ருமேனியா, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா முழுவதும் 230 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், சீனா, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்தில் இன்னும் கடுமையான மற்றும் கொடிய வெள்ளங்கள் ஏற்பட்டுள்ளன, இந்த வெள்ளங்கள் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றதுடன், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்தன.

உலகின் மாறிவரும் காலநிலையின் மற்றொரு அறிகுறியாக, பதிவுகள் தொடங்கியதன் பின்னர் முதல் முறையாக சனிக்கிழமை அன்று கிரீன்லாந்தின் உச்சியில் மழை பெய்தது. ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்தில் மூன்றாவது முறையாக வெப்பநிலை உறைபனி மட்டத்திற்கு மேலாக உயர்ந்தது, இது அசாதாரண மழைப்பொழிவை உருவாக்கியது. ஜூலை மாதம் ஒரு குறிப்பிடத்தக்க பனி உருகும் நிகழ்வைத் தொடர்ந்து மழை பெய்தது, ஒரே நாளில் 8.5 பில்லியன் டன்னுக்கு மேற்பட்ட மேற்பரப்பின் பனி உருகியது. இந்த உருகும் விகிதம் 2019 இல் நிகழ்ந்ததைப் போன்றிருந்தது, அப்போது சூடான நீரூற்றும் ஜூலை வெப்ப அலையும் சேர்ந்து கிரீன்லாந்தில் ஒரே ஆண்டில் 532 பில்லியன் டன் பனியை உருக வைத்தன, இது உலகளாவிய கடல் மட்டம் நிரந்தரமாக 1.5 மில்லிமீட்டர் உயர காரணமாகியது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துக்களின் ஏனைய அளவீடுகளையும் குறிப்பிட முடியும். மேற்குறிப்பிட்ட உதாரணங்களின் புவியியல் அகலம் குறிப்பிடுவது போல, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகளின் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளாத நாடே இல்லை என்று கூறலாம்.

பேரழிவுகளின் போக்கு முதலாளித்துவத்தின் திவால்நிலையையும், தற்போதைய காலநிலை நெருக்கடியின் எந்த அர்த்தமுள்ள போக்கையும் சமாளிப்பது குறித்த அதன் முழு இயலாமையையும் அம்பலப்படுத்துகிறது.

“Exxon நிறுவனத்திற்கு பரவலாக சுற்றுக்கு விடப்பட்ட,” 1982 உட்குறிப்பாணை, வளிமண்டலத்தில் அதிகளவு கார்பன் டை ஆக்ஸைடு (CO2) வெளியாவதால் உலக வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும் என்று தெளிவுபடுத்தியது. இந்த குறிப்பாணை அந்த நேரத்தில் வளிமண்டல சுற்றுசூழலை பாதிக்கும் வாயுக்களின் அதிகரிப்பு பற்றியும் இன்று காணப்படும் உலக வெப்பநிலை பற்றியும் முன்கணித்தது, மேலும் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன்னர் உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸூக்கு அதிகமாகும், 2060 இல் சில நேரத்தில் 2 டிகிரி செல்சியஸூக்கும் அதிகமாகும் என்பதையும் முன்கணித்துள்ளது.

இதேபோன்ற அறிக்கைகள் ஜனநாயகக் கட்சியின் ஜிம்மி கார்ட்டர் மற்றும் குடியரசுக் கட்சியின் ரொனால்ட் ரீகன் ஆகியோரது நிர்வாகங்களுக்கும் முன்வைக்கப்பட்டன. இது, சுற்றுசூழலை பாதிக்கும் வாயுக்களை எரிப்பதன் விளைவாக வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரிப்பு நிகழும் என்றும், மேலும் அதன் விளைவாக உலகளாவிய வெப்பநிலை அதிகரித்து இறுதியில், பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்டம் உயர்தல் மற்றும் முழு கடலோரப் பகுதிகளும் பத்து மீட்டர் நீர்பரப்புக்குக் கீழே மூழ்குதல் போன்ற உலக மக்களுக்கு பேரழிவுகரமான சுற்றுச்சூழல் விளைவுகள் ஏற்படும் என்றும் 1980 களில் எச்சரித்தது.

மிக சமீபத்தில், 2017 கார்பன் மேஜர்ஸ் அறிக்கை, உலகளவில் தற்போது 100 நிறுவனங்கள் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய சுற்றுச்சூழலை பாதிக்கும் வாயு உமிழ்வுகளில் 90 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன என்பதையும், தொழில்துறை புரட்சிக்குப் பின்னர் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை பாதிக்கும் வாயு உமிழ்வுகளில் பாதிக்கு அவை பொறுப்பாகின்றன என்பதையும் காட்டுகிறது. மேலும், புதைபடிவ எரிபொருள் பிரித்தெடுப்பும் வெளியேற்றமும் அடுத்த கால் நூற்றாண்டுக்கு தொடர்ந்தால், உலக சராசரி வெப்பநிலை 2100 ஆம் ஆண்டில் 4 டிகிரி செல்சியஸை எட்டும் போக்கில் இருக்கும் என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டது.

தற்போது உலகம் கண்காணித்து வரும் உலக வெப்பநிலையின் கூர்மையான அதிகரிப்பு என்பது, பேரழிவுகர புயல்கள், நீண்ட வெப்ப அலைகள், உலர வைக்கும் வறட்சி மற்றும் தொடர்ந்து உருவெடுக்கும் காட்டுத்தீ ஆகியவற்றின் முன்னோடியாக மட்டுமே உள்ளது. புவியில் கடல் மட்ட உயர்வினால் ஒவ்வொரு கடலோர நகரமும் மூழ்குவதோடு, உலகெங்கிலும் உள்ள பவளப்பாறைகள் அழிந்துவிடும், இதனால் உணவுச் சங்கிலியின் ஒரு மூலக்கல் அகற்றப்பட்டு, பெரும் வெள்ளத்தில் தப்பிப் பிழைப்பவர்கள் பெரும் பட்டினிக்குள் வீழும் நிலைக்கு அச்சுறுத்துகிறது.

புவியின் தட்பவெப்பம் ஒரு வகையான வேறுபட்ட நிலைக்குள் நுழையும் அபாயமும் அதிகரித்து வருகிறது, அதாவது புவி வெப்பமடைதலின் தற்போதைய கட்டத்தின் நேர்மறையான பின்னூட்ட விளைவுகள் இறுதியில் மனித தொழில்துறை நடவடிக்கைகளிலிருந்து புவியின் காலநிலையை துண்டிக்கின்றன. இந்த நிலைமைகளின் கீழ், மண்திட்டுக்கள் (permafrost) இளகுவதிலிருந்து மீத்தேன் பெரிதும் வெளியேறுவது போன்ற ஏனைய புவிஇயற்பியல் செயல்முறைகள், புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதை விட மேலாக புவி வெப்பமடைவதற்கு அச்சுறுத்துகின்றன. இத்தகைய சூழ்நிலை நவீன விஞ்ஞான நுட்பங்களால் கட்டுப்படுத்த முடியாதளவிற்கு அதிவேகத்துடன் மிகவும் கடினமானதாக இருக்கும்.

எவ்வாறாயினும், முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரை, நாகரிகத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பிரளயங்களை நிறுத்துவது என்பது, அவர்களின் இலாபத்தைப் பாதுகாப்பதை விட மிகக் குறைவான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பல தசாப்தங்களாக, ExxonMobil, BP மற்றும் பிற முக்கிய புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள், அத்துடன் சொந்த பங்குகளைக் கொண்டுள்ள ஹெட்ஜ் நிதிகள் (hedge funds) மற்றும் வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் ஆகியவை, தங்களையும் தங்கள் சக தன்னலக்குழுக்களையும் மேலும் செழிப்பாக்க நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றை தொடர்ந்து சுரங்கங்களிலிருந்து பிரித்தெடுத்து விற்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளன. இந்த முயற்சியில் பூமி நச்சுத்தன்மையடைந்து, எரிந்து போனாலும், இது தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

கொரோனா வைரஸ் நோய்தொற்றுடன் சமாந்திரங்களை வரைய வேண்டும். உலகின் அரசியல்வாதிகளும், ஊடக பிரமுகர்களும் புறக்கணித்த அல்லது பெருநிறுவன இலாபங்களைப் பாதுகாப்பதற்காக குறைந்தது 4.4 மில்லியன் மக்களை கொன்ற ஒரு கொடிய தொற்றுநோயைத் தூண்டுவதற்கு தீவிரமாக முயன்றது போலவே, சுற்றுசூழல் அழிவையும் தீவிரமாக இயக்குகிறார்கள். இலாப விகிதத்தை அதிகரிப்பதற்கான புறநிலை தேவை உலக வளங்களை விரைவாகச் சுரண்டுவதை ஊக்குவிப்பதுடன், தற்போதைய (மற்றும் எதிர்கால) சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கும் நேரடியாக வழிவகுத்துள்ளது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் நெருக்கடியை விளைவித்த தொடர்ச்சியான செயலற்ற தன்மையின் படிப்பினைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தொற்றுநோய் மற்றும் போர் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தைப் போல, காலநிலை மாற்றத்தை தடுக்கும் போராட்டம் என்பதும் அரசியலாக வேண்டும். அதற்கு முதலாளித்துவத்திற்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டல் அவசியம். அதாவது, தொழிலாளர்கள் தங்கள் சமூக நலன்கள், முதலாளித்துவத்திற்கு மற்றும் உற்பத்தி வழிகளின் தனியார் உடமைக்கு, புறநிலையாகவும் நேரெதிரானதாகவும் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான போராட்டம் தேவைப்படுகிறது.

Loading