டெலிகொம் தொழிற்சங்கத் தலைவர்கள் போனசுக்காக நடந்த வேலைநிறுத்தத்தைக் காட்டிக் கொடுத்தனர்

2023 ஆம் ஆண்டிற்கான போனஸைக் குறைக்கும் நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து சுமார் 7,000ம் ஸ்ரீலங்கா டெலிகொம் ஊழியர்கள் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் செவ்வாய்கிழமை முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் அரை நாள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு டிசம்பர் 16 முதல் தொழிலாளர்களின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டெலிகொம் தொழிலாளர்கள் [Photo: WSWS]

தொழிற்சங்கங்கள் முந்தைய ஆண்டுகளைப் போலவே மூன்று மாத அடிப்படை சம்பளத்திற்கு இணையான ஆண்டு போனஸ் வேண்டும் என்று கோரின. ஊழியர்கள் நான்கு மாத அடிப்படை சம்பளத்திற்கு சமமான வருடாந்திர போனசுக்கு தகுதியுள்ளவர்கள். ஒரு மாதத்திற்கு சமமான தொகை முதல் தவணையானது ஏப்ரல் மாதத்தில் செலுத்தப்படுகிறது. டெலிகாம் ஊழியர்கள் பல தசாப்தங்களுக்கு முன்னர் போராட்டங்கள் மூலமே இந்த போனஸ் தொகையை வென்றனர்.

சம்பள முரண்பாடுகளை சரிசெய்தல், தனியார்மயமாக்கலை நிறுத்துதல் ஆகியவை போராட்டத்தின் மற்ற கோரிக்கைகளாகும். இருப்பினும், இந்த போராட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்த தொலைத்தொடர்பு தொழிற்சங்க முன்னணி (TTUF) முதன்மையாக போனஸ் பிரச்சினையில் கவனம் செலுத்தியது. ஊழியர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிரான தொழிலாளர்களின் கோபத்தைத் தணிக்கவே, கோரிக்கைப் பட்டியலில் தனியார்மயமாக்கலை நிறுத்துதல் என்பது இணைக்கப்பட்டது.

டிசம்பர் 21 அன்று, தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மத்தியில், ஸ்ரீலங்கா டெலிகொம் நிறைவேற்று அதிகாரி ஜனக ஆர் அபேசிங்க, நிறுவனம் 35,000 ரூபாயை போனசாக அல்லாமல், “பொருளாதார கஷ்டங்களைக் குறைப்பதற்காக” கொடுப்பனவாகச் செலுத்தும் என்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். “நிறுவனத்தின் மேம்பட்ட செயல்திறனுக்கு” உட்பட்டு, மேலும் 45,000 ரூபாய் வட்டியில்லா கடனை 2024 பெப்ரவரியில் செலுத்த அவர் முன்மொழிந்தார். இந்தக் கொடுப்பனவு ஒன்பது மாதங்களில் சம்பளத்திலிருந்து கழித்துக்கொள்ளப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரிகள், பிரதானமாக பொறியாளர்களின் போனஸ் முழுமையாக வெட்டப்பட்டதோடு முன்பணமாக 75,000ம் ரூபாய் செலுத்தப்படுவதுடன் அது ஒன்பது மாதங்களில் ஊதியத்தில் கழிக்கப்படும்.

இருப்பினும், தொலைத்தொடர்பு ஊழியர்களின் போர்க்குணத்திற்கு மத்தியில், தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டன. வெள்ளி நள்ளிரவு தொழிற்சங்கத் தலைவர்கள், நிர்வாகத்தின் 35,000ம் ரூபாய் கஷ்டகால கொடுப்பனவை, இரண்டு மாத சம்பளத்திற்கு சமமான கடனாக, அதாவது நிர்வாகிகள் அல்லாத ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 200,000 ரூபாய்க்கு உட்பட்ட கடனாக வழங்க ஒப்புக்கொண்டனர். இது 10 மாதங்களில் கழிக்கப்படுவதுடன் நிர்வாக அதிகாரிகளுக்கு 200,000 ரூபாய் கடன் மட்டுமே கிடைக்கும்.

இவ்வாறு, தொழிற்சங்கத் தலைவர்கள் “கஷ்டகால கடன் கொடுப்பனவை ஏற்றுக்கொண்டு, போனஸ் கோரிக்கையை அப்பட்டமாக காட்டிக்கொத்துள்ளனர். தொழிலாளர்களை கலந்தாலோசிக்காமல் நிர்வாகத்தின் முன்மொழிவை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

நிர்வாகத்துடனான அவர்களின் சமரசத்தை நியாயப்படுத்தி, TTUF இன் ஒரு தொழிற்சங்கத் தலைவரான சுஜீவ மாணகல கூறியதாவது: “நாங்கள் முன்மொழியப்பட்ட கொடுப்பனவை ஏற்றுக்கொண்டு, எங்கள் முன் உள்ள பிச்சினைகளை கருத்தில் கொண்டு, (எங்களுடைய கோரிக்கைகளுடன்) முன்செல்லத் தீர்மானித்தே வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். போனஸ் பிரச்சினைக்காக இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து இந்த நிறுவனத்தை நாம் திவாலாக்க முடியாது.” அவரது கருத்து, தங்கள் கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களே நிறுவனத்தை திவாலாக்குகின்றனர் என்பது போல் உள்ளது.

எவ்வாறாயினும், தொழிலாளர்கள் உலக சோலிச வலைத் தள நிருபர்களுடன் பேசும் போது தொழிற்சங்கத் தலைவர்களைக் கண்டனம் செய்தனர். “இது ஒரு மலைக்கு பிரசவம் ஆனது, ஆனால் பிறந்ததோ ஒரு எலி என்பது போன்றது! இப்போது நாம் “கஷ்ட காலத் தொகையாக” ஒரு கடனைப் பெறுகிறோம். வேறு இடங்களிலிருந்தும் எங்களுக்கு கடன் பெற முடியும். வேலை நிறுத்தம், மறியல் செய்தோம். எங்களது கோரிக்கைகளில் ஒன்று சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பது. அது தீர்க்கப்படவில்லை. அவர்கள் [தொழிற்சங்கத் தலைவர்கள்] இது தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் என்று சொன்னார்கள், ஆனால் எதுவும் நடக்கவில்லை,” என ஒரு ஊழியர் கூறினார்.

மற்றொரு தொழிலாளி கூறியதாவது: “எங்கள் மாத சம்பளம் முன்பு போல் இல்லை. ஏற்கனவே, கடன்களுக்காகக் கழிக்கப்பட்ட, வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கப் போதுமானதாக இல்லாத சம்பளத்தைப் பெறுகிறோம். இன்னொரு கடன் வாங்கினால் அதுவும் நமது சம்பளத்தில் கழிக்கப்படும்.”

போனஸ் தொடர்பான தொழிலாளர்களின் போராட்டம் பற்றி அறிக்கையை வெளியிட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி அபேசிங்க, “நிறுவனத்தின் நிதி சவால்களை” விளக்கிய போதிலும் தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார். 2023 மூன்றாம் காலாண்டு வரையிலான வரிக்கு முந்தைய லாபம் நஷ்டமானது என்றார்.

DailyFtல் எழுதுகையில், வேலைநிறுத்தம் “எதிர்கால முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு நிச்சயமாக ஒரு பெரிய அடி” என்று கவலையடைந்த பெருவணிகங்கள் கூறியதாக தெரிவித்தது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, வியாழனன்று ஊடகங்களுக்கு பேசிய போது, “2022 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் நிதிச் செயல்பாட்டின் அடிப்படையிலேயே அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்கள் போனஸ் கொடுப்பனவுகளுக்கு தகுதியுடையவர்கள்,” எனத் தெரிவித்தார். நிறுவனமானது “வரிக்குப் பிந்தைய இலாபத்தில் குறைந்தது 30 சதவிகிதத்திற்குப் பிறகு, அரசாங்கத்தின் மத்திய திறைசேரியான ஒருங்கிணைந்த நிதிக்கு பங்கு இலாபமாக” இலாபம் ஈட்ட வேண்டும்,” என அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை இரவு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட போது, தொழிற்சங்கத் தலைவர்கள் ஸ்ரீலங்கா டெலிகொம் பிரதம நிறைவேற்று அதிகாரியினதும் அரசாங்க அமைச்சரினதும் அறிக்கைகளுக்கு மௌனமாக உடன்பட்டுள்ளனர்.

டெலிகொம் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜகத் குருசிங்க [Photo: WSWS]

TTUF இன் ஒருங்கிணைப்பாளர் ஜகத் குருசிங்க உட்பட தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்கள் கோருவது போல் போனஸ் வழங்குவதற்கு டெலிகொம் நிறுவனத்திற்கு பெரும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று வலியுறுத்தினர். இருப்பினும், இறுதியில், கடனைப் பற்றிய சிறிய மாற்றங்களுடன் நிர்வாகம் கொடுத்ததையே அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த தலைவர்கள், பெரிய கடனைப் பெறுவதை ஒரு “வெற்றி” என்று வேடிக்கையாகப் பேசுகிறார்கள்.

தொழிற்சங்கத் தலைவர்கள் போனஸ் பெறுவதில் தங்கள் நடவடிக்கையை குவிமையப்படுத்திய அதே வேளை, தனியார்மயமாக்கலுக்கு எதிராக அணிதிரண்ட தொழிலாளர்களின் காலைவாரிவிட்டனர். கடந்த பல மாதங்களாக, TTUF ஒருங்கிணைப்பாளர் குருசிங்கவும் ஏனைய தலைவர்களும், பெரும் அழுத்தத்தை பிரயோகிப்பதன் மூலம் தொலைத்தொடர்பு தனியார்மயமாக்கப்படுவதை கைவிட அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் என்று கூறித்திரிந்தனர்.

மாறாக அரசாங்கம் தனது கொள்கையை துரிதப்படுத்தியுள்ளது. அவர்களின் கூற்று தொழிலாளர்களுக்கு ஒரு பொறியாக மாறியுள்ளது. போனஸ் கோரி தொழிலாளர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது கூட, அந்த நிறுவனத்தின் திறைசேரிக்குச் சொந்தமான பங்கை விற்பது குறித்து இந்திய முதலீட்டாளருடன் அரச அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்தியது தெரியவந்துள்ளது.

போனஸ் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தொழிற்சங்கத் தலைவர்களோ “ஊழல்” தலைவர், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் தொலைத்தொடர்பு நிறுவனத்தை அழிக்க உள்ளனர் என்னும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினர். அவர்களை துரத்துவது ஒரு முன்னுரிமையாகிவிட்டது என்று அவர்களின் துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாக அதிகாரிகளை விரட்ட வேண்டுமென தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் கொடுக்கப்பட்ட பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டெலிகொம் தொழிலாளர்கள் [Photo: WSWS]

ஊழல் செய்தாலும் இல்லாவிட்டாலும், தொலைத்தொடர்பு மற்றும் ஏனைய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அனைத்தினதும் தலைவர்கள், ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆட்சியின் சர்வதேச நாணய நிதிய சிக்கனக் கொள்கைகளையே நடைமுறைப்படுத்துகின்றனர். இந்த நிறுவனங்களில் இருந்து அதிகாரிகளை சுத்தப்படுத்துவது அந்த கொள்கைகளை மாற்றாது.

டெலிகாம் மற்றும் பிற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு முக்கியமான படிப்பினைகள் உள்ளன. அதாவது, தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தைத் தோற்கடிக்கும் அரசியல் பணியை அவர்கள் எதிர்கொள்கின்றனர். இதைத்தான் தொழிற்சங்க தலைவர்கள் திட்டமிட்டு மூடிமறைத்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க தங்களைத் தாங்களே அணிதிரட்டுவதன் மூலமே அரசாங்கக் கொள்கையைத் தோற்கடிக்க முடியும். ஒவ்வொரு வேலைத் தளத்திலும், நிறுவனங்களிலும் மற்றும் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களிலும் தொழிலாளர்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம் இதை முன்னெடுக்க முடியும். தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் முதலாளித்துவக் கட்சிகள் இந்தக் குழுக்களுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.

இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும், அத்துடன் மற்ற தொழில்துறைகளில் உள்ள சக தொழிலாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) முதலாளித்துவத்திற்கு எதிராக, வங்கிகள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் உட்பட பெரிய நிறுவனங்களையும் பெருந்தோட்டங்களையும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குகின்ற, சோசலிசக் கொள்கைகளுக்கான போராட்டத்தில் மட்டுமே தொழிலாள வர்க்கம் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்று வலியுறுத்துகிறது. அனைத்து வெளிநாட்டு கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

இந்த கொள்கைகள் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக போராடுவதன் மூலமே செயல்படுத்த முடியும்.

இலங்கை அரசாங்கம் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியை கொள்ளையடிக்க ஆரம்பித்துள்ளது

இலங்கை புகையிரத தொழிற்சங்கம் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் போலி வாக்குறுதிகளுக்குப் பின்னர் சாரதிகள் வேலைநிறுத்தத்தை கைவிட்டுள்ளது

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன நிர்வாகம் வேலைகளை அழிக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது

இலங்கை தொழிலாள வர்க்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் எவ்வாறு போராட வேண்டும்

Loading