இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன நிர்வாகம் வேலைகளை அழிக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் (இ.கா.கூ.) நிர்வாகம், முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சுயவிருப்பில் ஒய்வுபெறும் திட்டத்தை தொடர்ந்து, முன்கூட்டிய ஓய்வூதியப் பலன்கள் திட்டத்தை (ERBS) அறிவித்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் இ.கா.கூ. தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளை வெட்டித்தள்ளுவதன் மூலம் அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை மறுசீரமைப்பதை இலக்காகக் கொண்டவை.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன ஊழியர்கள் 8 டிசம்பர் 2022 அன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் திட்டங்கள், 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனுக்காக சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிட்டபடி, விக்கிரமசிங்க அரசாங்கத்தின் செலவுக் வெட்டு, தனியார்மயமாக்கல் மற்றும் நூற்றுக்கணக்கான அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பதன் ஒரு பகுதியாகும். மார்ச் மாதம், விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவை இ.கா.கூ. மற்றும் இன்னும் ஆறு அரச நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்தது. இந்த செயல்முறையை கண்காணிக்கவும் விரைவுபடுத்தவும் மூன்று ஆலோசனை குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதிய குழுவொன்று அதன் சிக்கன வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்ய இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

கொழும்பில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துல்ஹிரியவில் உள்ள MAS பயிற்சி மையத்தில், ஜூன் 16, 17 ஆம் திகதிகளில் நிர்வாகத்துடன் நடத்தப்பட்ட இரகசிய மது மற்றும் உணவு கலந்துரையாடலைத் தொடர்ந்து, தொழிற்சங்க அதிகாரிகள் சுயவிருப்பில் ஒய்வுபெறும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சுயவிறுப்பில் ஓய்வுபெறும் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியும். அவர்கள் சேவைக்காலத்தின்படி, பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஓய்வு பெறும் 60 வயதை அடையும் வரை மீதமுள்ள ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம், ஐக்கிய ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம், பொதுஜன முற்போக்கு சங்கம், அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் மற்றும் சுயாதீனமாக செயற்படும் நான்கு தொழிற்சங்கங்கள் MAS பயிற்சி நிலைய கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தன.

முதல் ஐந்து தொழிற்சங்கங்கள் முறையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.சழ), ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியவற்றை சார்ந்தவை ஆகும். விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐ.தே.க. போன்று, எதிர்க்கட்சியான ஐ.ம.ச., ஸ்ரீ.ல.சுக., மற்றும் ஜே.வி.பி. மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த அர்ப்பணித்துக்கொண்டுள்ளன.

இந்த தொழிற்சங்கங்கள், இ.கா.கூ. ஒரு இலாபகரமான நிறுவனமாக இருந்ததால் அதனை மறுசீரமைக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்ததோடு இந்த இலாபங்களை மேலும் அதிகரிப்பதற்கு தமது ஆதரவை உறுதியளித்திருந்த நிலையில், தற்போது மறுசீரமைப்புத் திட்டத்திற்கு பகிரங்கமாக ஆதரவளிக்கின்றன.

ஜூலை 12 அன்று இ.கா.கூ. தலைவருக்கு எழுதிய கடிதத்தில், தொழிற்சங்கங்கள் சுயவிருப்பில் ஓய்வுபெறும் திட்டத்துடன் தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்திய அதே வேளை, நிறுவனத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனத்தில் பங்குகளை வழங்கவும், ஒவ்வொரு ஆண்டு சேவைக்கும் அரை மாத சம்பளத்தை கூடுதலாக வழங்கவும் வலியுறுத்தியது. ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பங்குகள் வழங்கப்படாவிட்டால், சுயவிருப்பில் ஒய்வுபெறும் திட்டம் தோல்வியடையும் என்று அவை எச்சரித்துள்ளன.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட முன்கூட்டியே ஓய்வுபெறும் நலத் திட்டம் நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடந்த கலந்துரையாடல்களின் விளைவாகும். மேலதிக இரட்டை ஓய்வூதிய முறை ஏன் வழங்கப்பட்டுள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும், பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் சந்தன எல். அலுத்கம, முன்கூட்டியே ஒய்வுபெறும் நலத் திட்டம் பற்றி ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 11 அன்று எழுதிய கடிதத்தில், இ.கா.கூ. சாதாரண மற்றும் ஆயுள் காப்புறுதிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, “தேவையைப் பொறுத்து ஊழியர்கள்” அகற்றப்படுவர் என்று கூறினார்.

உடல்நலம், வணிகம், வாகனம், குடும்பம் மற்றும் பயணக் காப்புறுதிகளை உள்ளடக்கிய கூட்டுத்தாபனத்தின் “இலாபமற்ற” சாதாரண காப்புறுதிப் பிரிவை மூடுவதற்கு நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக இ.கா.கூ. ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

60 வயதிற்கு முன்னர் ஓய்வு பெறுபவர்களுக்கு “கவர்ச்சிகரமான ஓய்வூதியத் திட்டம்” வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு நிறுவனப் பங்குகள் மற்றும் சுகாதார நலன்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்த தொழிற்சங்கங்களுடனான மேலதிக பேச்சுவார்த்தையின் விளைவாகவே முன்கூட்டியே ஓய்வுபெறும் நலன் திட்டம் முன்வைக்கப்பட்டது என்று அலுத்கமவின் கடிதம் கூறுகிறது.

இந்த முன்மொழிவுகள் நிதியமைச்சிலுள்ள அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைக்கும் பிரிவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த “மறுசீரமைப்பு” இ.கா.கூ. ஊழியர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் பணி நிலைமைகளை கடுமையாக பாதிக்கும்.

தற்போது 1,500 தொழிலாளர்கள் பணிபுரியும் சாதாரண காப்புறுதிப் பிரிவை மூடுவதானது அதிக பணவீக்கத்துக்கும் பொது சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவுகளில் கடுமையான வெட்டுக்களுக்கும் மத்தியில், இலங்கையின் அதிகரித்து வரும் வேலையின்மை நிலைமைக்குள் இத்தொழிலாளர்களைத் தள்ளும்.

இந்த நிலைமைகளின் கீழ், ஓய்வூதியம் மற்றும் ஆட்குறைப்பு கொடுப்பனவுகள் அல்லது பங்குகளை வழங்குவது தொழிலாளர்களுக்கு தங்களையும் அவர்களது குடும்பங்களையும் பராமரிக்க போதுமானதாக இருக்காது. அரசாங்கத்தின் கொடூரமான சமூகத் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கலைக்க, கொடுப்பனவு அதிகரிப்புகள் மற்றும் நிறுவனப் பங்குகளைக் கொடுக்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் அழைப்புகள் இழிந்த மோசடியாகும்.

ஒரு இ.கா.கூ. தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது: “முன்கட்டியே ஓய்வுபெறும் நலத் திட்டம் பற்றிய தெளிவான தகவல்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை, தொழிற்சங்கத் தலைவர்களிடம் நாங்கள் விசாரிக்கும்போது, என்ன நடக்கிறது என்று அவர்கள் எங்களிடம் கேட்கிறார்கள். அவர்கள் எதுவும் தெரியாது என்று பாசாங்கு செய்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு எல்லாம் தெரியும். ஆனால் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. தொழிற்சங்கத் தலைவர்கள் எங்களை விற்றுவிட்டு, போராட்டத்துக்கு குழிபறிக்கின்றனர்.

விக்கிரமசிங்கவின் வேலை அழிப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த இ.கா.கூ. நிர்வாகத்துடன் தொடர்ந்த ஒத்துழைப்பது, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மூலம் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாது என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

இது இ.கா.கூ. தொழிற்சங்கங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல, மாறாக இலங்கை மற்றும் சர்வதேச அளவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் செயற்பாட்டு முறையும் இதுவே ஆகும். இந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர் அமைப்புகள் அல்ல, மாறாக தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கும் முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கோரிக்கைகளை செயல்படுத்துவதற்குமான ஒரு தொழில்துறை பொலிஸ் படையாகும்.

இ.கா.கூ. தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பானது நிர்வாகத்தை பலப்படுத்தி, ஊழியர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கான நடவடிக்கைகளைத் திணிக்க அதை ஊக்குவிக்கிறது. மறுசீரமைப்பிற்கு எதிராக 8 டிசம்பர் 2022 மற்றும் மார்ச் 15 இல் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்த காப்புறுதி பொது ஊழியர் சங்கத்தின் (கா.பொ.ஊ.ச.) பொதுச் செயலாளர் திவாகர அதுகல மற்றும் நயோமி ஹெட்டியாராச்சி ஆகியோரின் பலவந்தமான இடமாற்றமும் இதில் அடங்கும்.

பெப்ரவரி 15 அன்று சுமார் 300 தொழிலாளர்களின் புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான மதிய உணவு நேரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக “நிறுவனத்திற்குள் போராட்டம்” செய்ததற்காக கிட்டத்தட்ட 50 தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கைக் கடிதங்களையும் வழங்கியுள்ளது.

15 ஜூன் 2023 அன்று கொழும்பில் உள்ள இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு வெளியே சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. நடத்திய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி.

ஜூன் 6 அன்று, கா.பொ.ஊ.ச. அதிகாரிகள் உட்பட இ.கா.கூ. தொழிற்சங்கத் தலைவர்கள், அதுகல மற்றும் நயோமி ஹெட்டியாராச்சியின் கட்டாய இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இ.கா.கூ. தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தை விரைவாகக் கலைத்தனர். இ.கா.கூ. ஊழியர்கள் நிறுவன வளாகத்தில் வேலைத்தள பிரச்சனைகளை பற்றி பேசுதல், ஒன்று கூடுதல் அல்லது கலந்துரையாடல் செய்வதும் இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

இ.கா.கூ. ஊழியர்கள், தொழிற்சங்கங்களதும் நிர்வாகத்தினதும் அனைத்து ஓய்வு மற்றும் வேலைநீக்கத் திட்டங்களையும் நிராகரிப்பதோடு தனியார்மயமாக்கலையும் எதிர்த்து, அனைத்து தொழில்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதையே இந்த அனுபவங்கள் மறுக்கமுடியாமல் நிரூபிக்கின்றன.

இது, தொழிற்சங்க அதிகாரத்துவத்தை சாராத, அவர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் சொந்த நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதன் மூலம் விடயங்களை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதாகும். இ.கா.கூ. ஊழியர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்திற்கு எதிராக ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கும் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளை நோக்கி திரும்புவது மிகவும் தீர்க்கமானது.

விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொடூரமான நடவடிக்கைகளை, அரசாங்கத்தை வீழ்த்துவதற்கும் தெற்காசியாவிலும் உலகம் முழுதும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிசக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குமான அரசியல் மற்றும் தொழில்துறை போரில் மட்டுமே தோற்கடிக்க முடியும்.

இ.கா.கூ. ஊழியர்களை எங்களை தொடர்பு கொண்டு இந்த வேலைத்திட்டம் பற்றி விவாதிக்குமாறு சோ.ச.க. கேட்டுக்கொள்கிறது.

எங்கள் தொலைபேசி எண்: +9477 356 2327

மின்னஞ்சல் முகவரி: wswscmb@sltnet.lk

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் எஜமான் WSWS கட்டுரையை மேற்கோள் காட்டி, இணையத்தளங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டாம் என, தொழிற்சங்கத் தலைவர்களை எச்சரிக்கின்றார்

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்க கூட்டம்- விக்கிரமசிங்கவின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக எவ்வாறு போராடுவது என்பதை பற்றி கலந்துரையாடியது

சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை குழு கூட்டம்: தனியார்மயமாக்கலை அனுமதிக்கும் கட்டண வாட்டு முறைமையை எதிர்த்திடுவோம்! இலவச சுகாதார சேவையை பாதுகாக்க சுகாதார ஊழியர்களது பொது நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவோம்!

Loading