இலங்கை புகையிரத தொழிற்சங்கம் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் போலி வாக்குறுதிகளுக்குப் பின்னர் சாரதிகள் வேலைநிறுத்தத்தை கைவிட்டுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

13 செப்டம்பர் 2023 புதன்கிழமை, இலங்கை, கொழும்பில் லொக்கோமோடிவ் ரயில் சார்ரதிகள் வேலைநிறுத்தத்தின் போது, கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் நடமாடுகின்றனர். [AP Photo/Eranga Jayawardena]

இலங்கையில் உள்ள லொகோமோட்டிவ் இயக்க பொறியியலாளர்கள் சங்க (Locomotive Operating Engineers’ Union (LOEU) தலைமைத்துவம் கடந்த 12 அன்று இரவு ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தை அது தொடங்கி 48 மணி நேரத்திற்குள் விலக்கிக்கொண்டது. LOEU செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனநாயக்க, புகையிரத அதிகாரிகள் மற்றும் பொது போக்குவரத்து அமைச்சினதும் வெளிப்படுத்தப்படாத “உறுதிமொழிகளை” தொடர்ந்து தொழிற்சங்கம் வேலைநிறுத்த நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

திங்கட்கிழமை நள்ளிரவு தொடங்கிய வேலைநிறுத்தத்தில், 282 ரயில் சேவைகளின் 84 சாரதிகளில் பங்கெடுத்தனர், அவர்களின் பதவி உயர்வுகள் சுமார் 10 ஆண்டுகளாக தாமதமாக்கப்பட்டு அவர்களின் சம்பள அதிகரிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை இரவு விக்கிரமசிங்கவால் விதிக்கப்பட்ட வேலைநிறுத்த எதிர்ப்பு அத்தியாவசிய சேவை ஆணையை மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்களுடன் எந்த கலந்துரையாடலும் இன்றி LOEU தலைமைத்துவம் தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்தியது. இந்த வேலைநிறுத்தத்திற்கு பிரதிபலித்த புகையிரத அதிகாரிகள் 120க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளை இரத்து செய்தனர். ரயில் நிலையம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சாக்குப்போக்கின் கீழ் இராணுவம் நிறுத்தப்பட்டது.

நேற்று, புகையிர திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து சாரதிகளும் பணிக்கு சமூகமளிக்காத பட்சத்தில், அவர்கள் சேவையிலிருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என அறிவித்தது.

மத்திய கொழும்பில் உள்ள மருதானை ரயில் நிலையத்தில் இலங்கை ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது

அதன் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஏற்ப, விக்கிரமசிங்க அரசாங்கம் சாரதிகளுக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தை ஆரம்பித்தது. இந்த வேலை நிறுத்தம் “ரயில் பயங்கரவாதத்தின்” செயல் என விவரித்த பொது போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன, “ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் இந்த வகையான பயங்கரவாதத்திற்கு சரணடையவில்லை,” எனக் கூறினார்.

வேலைநிறுத்தத்தை குற்றமாக்குவதற்கும் வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு எதிராக வலதுசாரி தட்டினரை அணிதிரட்டுவதற்கும், செவ்வாயன்று, விபத்தில் இரண்டு பயணிகள் இறந்ததையும் ரயிலில் இருந்து விழுந்து மற்றொருவர் படுகாயமடைந்ததையும் அரசாங்கமும் ஊடகங்களும் பற்றிக்கொண்டன.

இந்த துரதிர்ஷ்டவசமான மரணங்களுக்கு வேலைநிறுத்தக்காரர்களே பொறுப்பு என்று அரசியல் ஸ்தாபனம் ஆத்திரமூட்டும் வகையில் குற்றம் சாட்டினாலும், அதற்கு பொறுப்பு அரசாங்கமே ஆகும்.

தற்போதைய ஆட்சி உட்பட அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் இரயில் சேவைக்கான நிதியைக் குறைத்துள்ளதுடன் இரயில் ஊழியர்களின் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளன. சாரதிகள், ரயில் பாதுகாவலர்கள் மற்றும் நிலையப் பொறுப்பாளர்களின் பற்றாக்குறையுடன் இந்தச் சேவை மிகவும் மோசமாக உள்ளது. ரயில் பாதைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை.

கொழும்பிலிருந்து கண்டி சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்த மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல பயணிகள், இந்த இறப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில் “மிகவும் வருத்தமாக உள்ளது. மதிப்பு மிக்க உயிர் பறிபோனது. அதற்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும்” என்றார். கோபமாக அரசியல் உயரடுக்கைச் சபித்த ஒரு பெண், “அவர்கள் மீது இடி விழ வேண்டும்” என்றார்.

நிரம்பிய ரயிலில் தொழிலாளர்கள் பயணிக்கின்றனர்

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தம் அல்லது வேறு எந்த தொழிற்துறை நடவடிக்கையும் கடந்த ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் பதவியில் இருந்து அகற்றிய வகையிலான வெகுஜன எழுச்சி ஒன்றை விரைவாக உருவாக்கும் என்று விக்கிரமசிங்க அரசாங்கம் அஞ்சுகிறது. வேலைகள், ஊதியங்கள் வாழ்க்கை நிலைமைகள் மீது சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட தாக்குதல்களுக்கு உழைக்கும் மக்களிடையே பரவலான எதிர்ப்பு வளர்ச்சியடைகின்றது.

தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்க விக்கிரமசிங்க தொடர்ந்து அத்தியாவசிய சேவை உத்தரவுகளை பயன்படுத்தி வருகின்றார். இந்த ஆண்டு மார்ச் மாதம், அரசாங்கத்தின் சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய போராட்ட நடவடிக்கை எடுத்த பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த அரை மில்லியன் தொழிலாளர்களுக்கு எதிராக இந்த சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. எவ்வாறாயினும், தொழிற்சங்கங்கள் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட மறுத்துவிட்டன.

LOEU தலைமை அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவை உத்தரவை கண்டிக்கவில்லை அல்லது வேலைநிறுத்தம் செய்பவர்களை பாதுகாக்க ஏனைய ரயில்வே தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை புகையிரத ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) உட்பட வேறு எந்த புகையிரத தொழிற்சங்கமும் வேலைநிறுத்தம் செய்யும் சாரதிகளைப் பாதுகாக்கவோ அல்லது அரசாங்க அடக்குமுறையைக் கண்டிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

SLRSMU தலைவர் சுமேதா சோமரத்ன, LOEU வேலைநிறுத்தத்திற்கு தனது தொழிற்சங்கம் ஆதரவளிக்கவில்லை என்றும், பதவி உயர்வு பிரச்சினைகள் நிலுவையில் இருந்தாலும், இந்தக் கோரிக்கைகளை எழுப்புவதற்கு இது “நேரம் அல்ல” என்றும் கூறினார்.

அரசாங்கத்தைப் போலவே, தொழிற்சங்கங்களும் இரயில் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் மீதான தாக்குதல்கள் சம்பந்தமாக அதிகரித்து வரும் கோபத்தைக் கண்டு பீதியடந்துள்ளதுடன் மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாள வர்க்க நடவடிக்கையைத் தடுக்க நனவுடன் செயற்படுகின்றன.

ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிமிக்க இயக்கத்தின் ஒரு பகுதியாகும். ஆகஸ்ட் 28 அன்று, ஓய்வூதியங்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த அதே நேரம், ஆயிரக்கணக்கான அரசாங்க அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒரே நாளில் தீவு முழுவதும் பல நகரங்களில் ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரமசிங்கவின் சர்வதேச நாணய நிதிய செலவுக் குறைப்பு மற்றும் வேலை அழித்தல் கொள்கைகளுக்கு இணங்க, புகையிரத துறை உட்பட 430 அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் / மறுசீரமைப்புக்கு இலக்காகின்றன.

ஜூலை 24 அன்று, விக்கிரமசிங்கவின் அமைச்சரவை புகையிரத திணைக்களத்தை ஒரு கூட்டுத்தாபன அதிகார சபையாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தது, இது அதன் தனியார்மயமாக்கலுக்கான முதல் படியாகும். “மிகவும் திறமையான கட்டமைப்பின் கீழ் திணைக்களத்தின் மறுசீரமைப்புக்கு பொருத்தமான முன்மொழிவுகளை முன்வைக்க” ஒரு குழுவையும் அமைச்சரவை நியமித்துள்ளது.

இந்த முன்மொழிவுகள் 18,000 இரயில் தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் என்பன அவர்களது குடும்பங்களை கடுமையாக பாதிப்பதோடு பயணிகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.

இலங்கையில் உள்ள ஏனைய அனைத்து தொழிற்சங்கங்களையும் போன்று, இரயில் தொழிற்சங்கங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டம் மற்றும் தனியார்மயமாக்கலை எதிர்க்கவில்லை. மாறாக, தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே 18,000 பலமான இரயில் தொழிலாளர்கள் மத்தியில் தரம் வாரியாக பிரிவுகளை பராமரிப்பதுடன், அதனை வளர்க்கின்றன. மற்றும் பகுதியான மற்றும் வரையறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதிர்ப்பைக் கலைக்கின்றன. இந்த தொழிற்சங்கங்கள் நேற்றிரவு LOEU அதிகாரத்துவம் செய்தது போல், “பிரச்சினைகளை பரிசீலிப்பதாக” கூறும் அதிகாரிகளின் போலி வாக்குறுதிகளை மேற்கோள் காட்டி, ஆர்ப்பாட்டங்கள் அல்லது வேலைநிறுத்தங்களை கைவிடுவதில் இழிவான வரலாறு கொண்டவை ஆகும்.

ஜூலை 23 அன்று, புகையிரத அதிகாரிகள் சேவையாளர்களை அபிவிருத்தி செய்வது பற்றிய தெளிவற்ற வாக்குறுதிகளை ஏற்று, LOEU எதேச்சதிகாரமாக ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தை விலக்கிக்கொண்ட அதே வேளை, சாரதிகள் மற்றும் இரயில் பாதுகாவலர்களை சேர்த்துக்கொள்ளாமல் ஆறு புதிய ரயில் பயணங்களை அறிமுகப்படுத்தியமை சம்பந்தமாகவே இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

திங்கட்கிழமை, கொழும்பில் உள்ள மருதானை ரயில் நிலையம் முன்பாக தொழிலாளர்கள் பல மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திடீர் போராட்டத்தை நடத்தினர். “பிரச்சினைகளைத் தீர்ப்பதாக” புகையிரத பொது முகாமையாளர் கொடுத்த வாக்குறுதியை ஏற்று நான்கு மணி நேரத்திற்குப் பிறகு தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தை விலக்கிக்கொண்டது.

அரசாங்கத்திற்கும் சர்வதேச மூலதனத்திற்கும் சேவை செய்யும் தொழிற்துறை பொலிஸ்காரனாக செயற்படும் தொழிற்சங்கங்களை நம்புவதன் மூலம், ரயில் தொழிலாளர்களால் அல்லது ஏனைய தொழிலாளர்களால் தங்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகளைப் பாதுகாக்க முடியாது. வேலைத் தளத்தில் உடனடிப் பிரச்சனைகள் அல்லது அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய நடவடிக்கைகளுக்கு எதிரான இந்தப் போராட்டங்கள், தொழிலாள வர்க்கத்தை அரசாங்கத்துடனும் அரச எந்திரம் மற்றும் தொழிற்சங்க எந்திரங்களுடனும் நேரடி மோதலுக்கு கொண்டு வருகிறது.

தங்களின் அனைத்து உரிமைகளுக்கான போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு, தொழிற்சங்க அதிகாரத்துவங்களைச் சாராமல் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் கைகளில் விவகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராகவும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைக்கவும், உழைக்கும் மக்கள் அரசியல் மற்றும் தொழில்துறை போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளின் நோக்கித் திரும்ப வேண்டும்.

தொழில் சட்ட சீர்திருத்தம்பற்றி கலந்துரையாட இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன நிர்வாகம் வேலைகளை அழிக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது

தொழில் சட்ட சீர்திருத்தம்பற்றி கலந்துரையாட இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது

Loading