மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் கண்டத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் தீவிரப்படுத்தப்படும் விஷமத்தனமான குடியேற்ற எதிர்ப்பு பிரச்சாரத்தை எதிர்க்க வேண்டும்.
வரலாற்று ரீதியாக பாசிச வலதுசாரிகளுடன் தொடர்புடைய மொழி, ஐரோப்பாவின் பாராளுமன்றங்களிலும் ஊடகங்களிலும் பொதுவானதாகிவிட்டது. வேலை மற்றும் பாதுகாப்பைத் தேடும் நம்பிக்கையிழந்த மக்களை, என்ன விலை கொடுத்தாவது விரட்டியடிக்கப்பட வேண்டிய படையெடுப்பாளர்களாக சித்தரிக்கின்றனர்.
இத்தாலியின் முசோலினியை போற்றும் ஜியோர்ஜியா மெலோனி, பிரான்சில் மரைன் லு பென், ஸ்பெயினின் ஃபிராங்கோவாத வொக்ஸ் கட்சி மற்றும் ஜெர்மனியில் AfD போன்ற பாசிச தனிநபர்களும் மற்றும் அமைப்புகளும் பிரதான முதலாளித்துவ அரசியலில் வரவேற்கப்படுகின்றன. பல தசாப்தங்களாக ஐரோப்பாவில் காணப்படாத, அந்நிய நாட்டினர் மீதான வெறியின் மட்டத்துக்கு அவை தொனியை அமைக்கின்றன.
இந்த வாரம், போலந்து அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடியேற்ற ஒதுக்கீடு பொறிமுறைக்கு பதிலளிக்கும் வகையில், “மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை அனுமதிப்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?” என்ற கேள்வியை முன்வைத்து, ஒரு வெறுக்கத்தக்க, ஆத்திரமூட்டும் சர்வஜன வாக்கெடுப்பை அறிவித்தது.
பிரிட்டிஷ் அரசாங்கம், லெஜோனைரஸ் (legionnaires) தொற்றால் (சுவாசப்பை தொற்று) பாதிக்கப்பட்ட சிறைக் கப்பல்களில் அடைத்து வைக்கப்படுகின்ற புலம்பெயர்ந்தவர்களை மட்டுமன்றி, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களையும் கூட தீய சக்திகளாக சித்தரிக்கின்றது.
எல்லா இடங்களிலும், பாரம்பரிய வலதுசாரிக் கட்சிகளின் குடியேற்ற-எதிர்ப்பு கொள்கைகளுடன், சமூக ஜனநாயக மற்றும் போலி-இடது தலைமையிலான அரசாங்கங்களும் இணைந்துகொண்டுள்ளன. அல்லது இந்த சமூக ஜனநாயக மற்றும் போலி-இடது கட்சிகள் எதிர்க்கட்சிகளாக இருந்துகொண்டு குடியேற்ற-எதிர்ப்புக் கொள்கைக்கு ஆதரவளிக்கின்றன.
ஐரோப்பிய அரசாங்கங்கள், கிரகத்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான எங்கும் காணாத ஒரு உள்கட்டமைப்பின் சிற்பிகளாகும்: இது “ஐரோப்பிய கோட்டை” ஒன்றை உருவாக்குவதன் பேரிலான, கடுமையான கண்காணிப்பு, வேலிகள் மற்றும் மிக கூர்மையான கம்பிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளமை, தடுப்பு முகாம்கள், மற்றும் கண்டத்தின் எல்லைப்புறங்களில் உள்ள கொடூரமான ஆயதப்படைகள் மற்றும் ஆட்சிகளுடன் ஒப்பந்தங்களும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு அமைப்புமுறையாகும்.
இராணுவ பதம் என்பது பொருத்தமானது. ஐரோப்பிய ஆளும் வர்க்கமானது ஏகாதிபத்திய வன்முறை மற்றும் முதலாளித்துவ சமத்துவமின்மையால் மிக அடிப்படையான வாழ்க்கை நிலைமைகள் மறுக்கப்பட்டுள்ள ஒரு மனிதகுலத்துடன் போரில் ஈடுபட்டுள்ளது.
2015 மற்றும் 2016களில் ஐரோப்பாவில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கத் தொடங்கியவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதில் அதிகம் விண்ணப்பித்துள்ளவர்கள், தங்கள் சமூகங்களை அழித்த ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் பினாமி போர்களில் இருந்து தப்பி ஓடிய சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மிகப்பெரிய மக்கள் தொகையினராவர். மற்றவர்கள் மோசமான வறுமை, அரசாங்கங்களின் அடக்குமுறை , வன்முறையான உள் மோதல்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட அழிவிலிருந்தும் தப்பி ஓடியவர்களாவர்.
உக்ரேனிலேயே நான்கு மில்லியன் பேர் அகதிகளாவதற்கு காரணமான, உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போரினால் உந்தப்பட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வுகள் மற்றும் பெரும் தொற்றுநோயினாலும் பூகோளரீதியான வட்டி விகித உயர்வுகளாலும் தீவிரமாக்கப்பட்ட கடன் நெருக்கடி மற்றும் மிகப்பெருமளவிலான சமூக வெட்டுக்களும் இந்த கோரக் காட்சிகளுடன் சேர்ந்து கொண்டன.
ஐரோப்பாவுக்கு பயணிக்க முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் பெருகும்போது, மொராக்கோவின் மேற்குக் கடற்கரையிலிருந்து துருக்கி வரை, ஐரோப்பாவின் எல்லைகளில் இருந்து தெற்கு சஹாரா வரையிலான பரந்த புவியியல் முனைகளில், அவர்கள் பல பில்லியன் யூரோக்களைக் கொண்ட எந்திரத்தை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
நைஜரில் சமீபத்திய ஆட்சிக்கவிழ்ப்பும் ஒரு பிராந்தியப் போரின் அச்சுறுத்தலும் ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் முதல் தற்காப்பு வரிசையை எடுத்துக்காட்டுகிறது – அதனை சஹேலுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி ஏஞ்சல் லோசாடா, ஐரோப்பாவின் “முன்நோக்கிய எல்லை” என்று அழைத்தார். சஹாராவிற்கான இரண்டு நுழைவாயில்களான சஹேலிலும் மற்றும் சூடானிலும், “மனிதாபிமான உதவி” என்று இழிந்த முறையில் முத்திரை குத்தப்பட்ட ஐரோப்பிய பணத்தில், எல்லைக் கட்டுப்பாடுகளுக்கு நிதியளிக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக புலம்பெயர்ந்தோர் மிகவும் ஆபத்தான வழிகளில் செல்ல நிர்ப்பந்திக்கப்படுவதுடன் மனித உரிமை மீறல்கள் குறித்து நிரூபிக்கப்பட்ட சான்றுகள் கொண்ட படைகளால் கண்காணிக்கப்படுகின்றனர்.
முன்னர் சஹாராவில் அகதிகளின் மரண எண்ணிக்கை குறைந்தபட்சம் மத்தியதரைக் கடலில் நடந்ததைவிட இருமடங்காக இருக்கும், என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. தற்போது மத்தியதரைக் கடலில் மரண எண்ணிக்கை 2014 முதல் 27,845 ஆக உள்ளது. குடியேற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பு இது ஒரு தோராயமான மதிப்பீடு என்று ஒப்புக்கொண்டுள்ளது.
ஐரோப்பாவிற்குள் நுழைவதை நிறுத்த துருக்கி மற்றும் வட ஆபிரிக்காவிற்கு இன்னும் அதிக பணம் கொடுக்கப்படுகிறது. அதிகரிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்பிற்காகவும், ஐரோப்பாவிலிருந்து துருக்கிக்கு புகலிடம் கோருபவர்கள் அனைவரையுமே நாடு கடத்துவதற்கும் 6 பில்லியன் யூரோ கொடுப்பதற்கு 2016 இல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் துருக்கிய அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
லிபியா மற்றும் துனிசியாவுடனான நிதியுதவி ஒப்பந்தங்களின் கீழ் எல்லைக் காவலர்களாக சட்டத்துக்கு கட்டுப்படாத ஆயுதபடைகள் பயன்படுத்தப்படுவதாக தெரியவருகிறது. ஆபத்தில் இருக்கும் கப்பல்களை மீட்க முயற்சிக்கும் தன்னார்வ அமைப்புகள் மீது கடலோர காவல்படைகள் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றன. பிடிபட்ட புலம்பெயர்ந்தோர் தாக்கப்படுவதோடு அவர்கள் மீது மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. திருடுவதற்கு ஏதேனும் இருந்தால் அவை கொள்ளையடிக்கப்படுகின்றன. அவர்கள் மீண்டும் தரைக்கு கொண்டு செல்லப்படுவதுடன் சித்திரவதை செய்தல், மிரட்டி பணம் பறித்தல், கட்டாய உழைப்பு மற்றும் அடிமைத்தனம் நிறைந்த தடுப்பு முகாமின் நிழல் வலையமைப்பில் வைக்கப்படுகிறார்கள். பலர் தெற்கே நாடு கடத்தப்பட்டு பாலைவனத்தில் தவிக்க விடப்பட்டுள்ளனர்.
இந்த தலைவிதியைத் தவிர்ப்பதற்காக ஐரோப்பாவிற்குச் செல்லும் கப்பல்கள் மிகவும் ஆபத்தான வழிகளில் கடக்க முயற்சிப்பதால், மத்திய தரைக்கடல் மற்றும் வட ஆப்பிரிக்க கடற்கரையின் நீண்ட பகுதிகள் கல்லறைகளாக மாற்றப்படுகின்றன. இதில் தனது பங்கை வகிக்கின்ற ஐரோப்பாவின் ஃபிரான்டெக்ஸ் எல்லைப் படை, புகலிடம் நாடுபவர்களின் கப்பல்களை சட்டவிரோதமாக ஐரோப்பிய ஒன்றிய கடலுக்கு வெளியே தள்ளுகின்ற அதே சமயம், தெற்கு ஐரோப்பிய நாடுகள், மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்புகள் மீதும் பணியாளர்கள் மீதும் குற்றம் சுமத்த மிரட்டும் சட்டத்தை இயற்றுகின்றன.
ஐரோப்பிய நிலப்பரப்பில், ஒவ்வொரு நாடும் அதன் அண்டை நாடுகளுக்கு எதிராக அதன் எல்லைகளை வலுப்படுத்தி, முள்வேலிகளையும் உலோக வேலிகளையும் உருவாக்கி வன்முறை ரோந்துகளை மேற்கொள்கின்றன. புலம்பெயர்ந்தோர் வெற்றிகரமாக ஒரு எல்லையை கடக்கும் இடத்தில், அவர்கள் ஒரு தொடர் தற்காலிக முகாம்களை கடந்து அடிக்கடி அடுத்த பகுதிக்கு கூட்டிச் செல்லப்படுகிறார்கள்.
இந்தக் கொள்கைகளை வலுப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த ஜூன் மாதம் லக்சம்பேர்க்கில், துரித நாடுகடத்தலை முன்னெடுக்கும் ஒரு புதிய இடம்பெயர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. இதில், ஐரோப்பாவுக்கான பயணத்தில் அவர்கள் பயணித்த நாடுகள் உட்பட, அகதி அந்தஸ்துக் கோருவோருடன் மிக அற்ப தொடர்பை கூட ஏற்படுத்தாத நாடுகளுக்கு கடத்துவதும் அடங்கும். ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் இங்கிலாந்தின் முயற்சிகளும் அதே கொள்கையைப் பின்பற்றுகின்றன.
எந்த குற்றமும் பெரிதல்ல. இந்த ஜூன் மாதம், கிரக்க கடலோர காவல்படையின் நடவடிக்கையின் விளைவாக மீன்பிடி கப்பலில் பயணம் செய்த 600க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கினர். அவர்கள் அதை மறைக்க முயற்சித்த போதிலும், கிரேக்க அதிகாரிகள் தங்கள் நாட்டுக் கடற்பரப்பில் இருந்து படகை பாதுகாப்பற்ற முறையில் இழுத்துச் செல்ல முயற்சித்ததால், அது கவிழ்ந்தது என்பதை விசாரணைகள் நிரூபித்துள்ளன.
இந்தக் கதையும் இது போன்ற பிற செய்திகளும் கூட்டுத்தாபன செய்தி ஆக்கங்களில் மேற்பரப்புக்கு வரவில்லை. பெருமளவானோர் நீரில் மூழ்கும் போது, அவை, ஊடகங்களதும் அரசியல் ஸ்தாபனத்தினதும் “படகுகளை நிறுத்து!” என்ற இனவெறிக் கோரிக்கைகளுக்கு மட்டுமே எரியூட்டியது.
இந்தக் கொலைகள், மனித துன்பத்தின் ஒரு பனிப்பாறையில் புலப்படும் முனை மட்டுமே.
உலகின் 108 மில்லியனுக்கும் அதிகமான பலவந்தமாக இடம்பெயர்க்கப்பட்ட மக்களில் ஒரு சிறு பகுதியினர் ஐரோப்பா அல்லது ஏதாவதொரு பணக்கார நாட்டிற்கும் அருகில் அரிதாகத்தான் செல்கின்றனர். முழுமையாக 70 சதவீதம் பேர் அண்டை நாட்டைவிட அதற்கு மேல் முன்னேற நகரமாட்டார்கள். பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா முழுவதிலும் உள்ள சேரிகளிலும் அகதிகள் முகாம்களிலும் நரக வாழ்க்கை வாழ்கின்றனர்.
இந்த சமூகப் பேரழிவிற்கு மத்தியில், ஐரோப்பிய அரசியல்வாதிகள், இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்தும் யூத இன அழிப்பின் நிழலிலும் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் தீர்மானங்களுக்கான சட்ட ரீதியான கடப்பாட்டை துண்டுக் கடதாசிகளாக கிழித்தெறிந்து வருகின்றனர்.
புலம்பெயர்ந்தோர் மீதான ஐரோப்பாவின் இரக்கமற்ற போர், முழு தொழிலாள வர்க்கத்தையும் இலக்காகக் கொண்ட முதலாளித்துவத்தின் வலதுசாரித் தாக்குதலின் ஈட்டி முனையாகும். உக்ரைன் போரும் பொருளாதார நெருக்கடிகளும் ஆழமடைகையில், வெகுஜனங்களின் மிக அடிப்படையான ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் வன்முறையாகப் பறிக்கப்படுவது சாதாரணமாக்கப்பட்டு வருகிறது. மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களிடம் சிக்கியுள்ள ஒரு சமூகம், மற்றொரு புலம்பெயர்ந்த தொழிலாளியை எடுத்துக்கொள்வதை “தாங்க முடியாது” என்ற வாதம், சமூக சேவைகள் மற்றும் பூர்வீக தொழிலாளர்களுக்கான நலன்களை வெட்டிக் குறைக்கப் பயன்படுகிறது.
இந்த நிலைமைகளின் மீதான சமூக கோபத்தை காட்ட வேண்டிய பெரும் பணக்காரர்களிடம் காட்ட விடாமல், ஏனைய நாடுகளில் இருந்து வரும் வறிய பலிகடாக்கள் பக்கமாக திசை திருப்பிவிடுவதற்கும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையை மற்றும் கண்டம் முழுவதும் எழுச்சி காணும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளை உடைப்பதற்காக பிளவுகளை தூண்டிவிடுவதற்குமே புலம்பெயர்ந்தவர்கள் பிசாசுகளாக காட்டப்படுகின்றார்கள். புகலிடக் கோரிக்கையாளர்களை கொடூரமாக நடத்துவது குறித்த பரவலான சீற்றம், சமூக ஜனநாயக மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் எந்த அரசியல் வெளிப்பாட்டையும் காண முடியாத நிலையில், ஐரோப்பா முழுவதிலும் உள்ள பாராளுமன்றங்களில் கணிசமான வெற்றிகளைப் பெறும் வலதுசாரி அமைப்புகளுக்கு இது கருத்தியல் எரிபொருளை வழங்குகிறது.
புலம்பெயர்ந்தோரை பாதுகாப்பது முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும். அவர்களின் சொந்த எதிர்காலம் அதில் தங்கியள்ளது. அடக்குமுறையில் இருந்து விடுபட்டு தாங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் வாழ்வதற்கான அனைவரின் உரிமையைகளையும் வேலை, வீடு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற வாழ்க்கையின் அனைத்துத் தேவைகளையும் அனுபவிப்பதற்கான உரிமைகளையும் ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்கள் நிலைநாட்ட வேண்டும். ஐரோப்பாவின் ஆளும் உயரடுக்கின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை அனைவர் மீதும் சுமத்துவதை எதிர்ப்பதற்கான ஒரே வழி இதுதான்.
இத்தகைய போராட்டம், சமூகங்களை சிதைத்து, மில்லியன் கணக்கானவர்களை வேரோடு பிடுங்குவதைத் தொடர்ந்துகொண்டிருக்கின்ற, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். உலக வளங்களை சோசலிச வழிமுறையில் ஒழுங்கமைப்பதன் மூலம் மட்டுமே ஏகாதிபத்திய போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
இது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை அர்த்தப்படுத்துகிறது. பூகோளரீதியான பொருளாதாரம் பகைமை தேசிய அரசுகளாகப் பிரித்திருக்கின்ற மற்றும் அத்தியாவசிய உற்பத்தி வழிமுறைகளின் மீதான தனியார் உடைமை கொண்டிருக்கின்ற முதலாளித்துவ முறைமையே போர்கள், பொருளாதார சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கான அடிப்படைக் காரணியாகும். நூறு பில்லியன் டொலர் சொத்துக்களை ஒரு சில தனிநபர்கள் ஒரு முனையில் குவித்து வைத்துக்கொண்டிருக்க, 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மறுமுனையில் ஒன்றும் இல்லாமல் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தித்தில் இருக்கும் ஒரு சமூக அமைப்பு, நீடித்திருப்பதற்கான உரிமையை இழந்து நீண்டகாலமாகிவிட்டது.
“ஐரோப்பா கோட்டை” என்பது முதலாளித்துவத்துடன் கணக்கு தீர்க்கும் பூகோள நடவடிக்கையின் ஒரு பகுதியாக தரைமட்டமாக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் அமைக்கப்பட வேண்டும்.
கிரேக்க கடல் பகுதியில் படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கான அகதிகள் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது
ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள் ஜெனீவா அகதிகள் ஒப்பந்தத்தை கைவிட்டனர்
கிரேக்கம் அருகே 500க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்: ஐரோப்பா கோட்டையும், அகதிகள் நெருக்கடியும்