ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள் ஜெனீவா அகதிகள் ஒப்பந்தத்தை கைவிட்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

கடந்த வாரம் லக்சம்பேர்க்கில் நடந்த கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள் அகதிகளுக்கான புகலிட உரிமையை திறம்பட கைவிட்டனர். அதன் உறுப்பு நாடுகளின் கூற்றுப்படி, அகதிகள் எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளில் உள்ள தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவார்கள், அவர்களின் புகலிட விண்ணப்பங்கள் வேகமான செயல்முறையில் முடிவு செய்யப்பட்டு பின்னர் அனேகமாக மூன்றாம் நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள். 

லக்சம்பேர்க்கில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட புகலிட நடைமுறை ஒழுங்குமுறை மற்றும் தஞ்சம் மற்றும் இடம்பெயர்வு மேலாண்மை ஒழுங்குமுறைக்கான சட்ட அடிப்படைகள் தற்போதைய ஸ்வீடன் கவுன்சில் பிரசிடென்சியின் கீழ் உருவாக்கப்பட்டிருந்த போதிலும், அவை அடிப்படையில் ஜேர்மன் அரசாங்கத்தால் முன்னோக்கி தள்ளப்பட்டன.

ட்விட்டரில், ஜேர்மன் உள்துறை அமைச்சர், நான்சி பேசர் (சமூக ஜனநாயகக் கட்சி, SPD), எட்டப்பட்ட உடன்பாட்டை 'ஒற்றுமை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய குடியேற்றக் கொள்கை குறித்து ஐரோப்பிய யூனியனுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி' என்று விவரித்தார். இந்த சட்டத்தை உருவாக்குவதில் தீவிரமாக பணியாற்றிய ஜேர்மனிய வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் (பசுமைக் கட்சி), தற்போது  'பல அகதிகளுக்கு தற்போதைய நிலை மேம்படுத்தும்' என்று கூறி, அதே குறிப்பை ஒலித்தார்.

ஆனால் உண்மை நிலை அதற்கு எதிரானது. எட்டப்பட்ட உடன்படிக்கைகள் தீவிர வலதுசாரி மற்றும் இனவாதக் கட்சிகளின் உணர்வை வெளிப்படுத்துகிறது மேலும் 'ஐரோப்பா கோட்டையை' மேலும் விரிவுபடுத்துகிறது. ஸ்வீடன் குடிவரவு மந்திரி மரியா மால்மர் ஸ்டெனெர்கார்ட் தீவிர வலதுசாரி ஸ்வீடன் ஜனநாயகக் கட்சியினரின் அகதிகளுக்கு எதிரான கோரிக்கைகளை கிட்டத்தட்ட வார்த்தைக்கு வார்த்தை செயல்படுத்தி வருகிறார், அவர்களின் வாக்குகளில் தான் உல்ப் கிறிஸ்டேர்சன்னின் சிறுபான்மை அரசாங்கம் தங்கி இருக்கிறது.

ஜேர்மனி அரசாங்கம் மனித உரிமைகள் பற்றிய அனைத்து உயர்வான  வார்த்தைகளையும் மீறி, ஜேர்மனிக்கான அதிதீவிர வலதுசாரி மாற்று (AfD) கட்சியினரின் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது. அகதிகளுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிட்டு, 'படகு நிரம்பியுள்ளது' என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துவதன் மூலம், பேர்லின் வெற்று பட்ஜெட்கள் மற்றும் மேலும் நீட்டிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளைக் குறிப்பிடுகிறது. 

குறிப்பாக ஜேர்மன் அரசாங்கத்தின் பாசாங்குத்தனம் குறிப்பாக மூச்சடைக்க வைக்கிறது. ஒப்பந்தம் பல ஆண்டுகள் தாமதமாகிவிட்டதாகவும், அது 'மோரியாவில் உள்ளதைப் போன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளில் நிலைமைகளை' தடுக்கிறது என்றும் பேயர்பொக் அறிவித்தார். கிரேக்கத்தின் ஏஜியன் தீவான லெஸ்போஸில் உள்ள முற்றிலும் நெரிசலான மோரியா அகதிகள் முகாம், அங்கு பல மாதங்கள் பயங்கரமான சூழ்நிலையில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டனர். 2020 இல் எரித்து தரைமட்டமாக்கப்பட்ட அந்த முகாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமானமற்ற அகதிகள் கொள்கைகளின் சின்னமாக விளங்குகிறது.

எதிர்காலத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளில் பல மோரியாக்கள் உருவாக்கப்படும். புதிய புகலிட நடைமுறைகள் ஒழுங்குமுறையானது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் வெளி எல்லைகளில் புகலிடச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் குறைந்தபட்சம் 20 சதவீத அங்கீகார விகிதத்தைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டுமே வழக்கமான புகலிட நடைமுறைகளின் கீழ் உரிமை கோரும் வாய்ப்பு வழங்கப்படும். மற்ற அனைவருக்கும், பன்னிரெண்டு வாரங்களுக்குள் முடிக்கப்படும் வேகமான நடைமுறைகள் இருக்கும். இதன் போது அகதிகள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவார்கள். குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் கூட சிறையிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள். பாதுகாப்பைக் கோரும் ஆதரவற்ற சிறார்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

அகதிகள் அமைப்பு Pro Asyl சரியாக சுட்டிக்காட்டுகிறது, அதாவது இது ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லையில் அகதிகளின் தடுப்புக் காலத்தை மிகப்பெருமளவில் நீட்டிக்கும். இது நான்கு மாதங்கள் வரை நீட்டிக்க முடியும். மேலும், நியாயமான புகலிட நடைமுறைகள் இருக்காது. வெளிப்புற எல்லைகளில் உள்ள தடுப்பு மையங்களில் உள்ள அகதிகள் சட்டப்பூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் 'உள்ளே வரவில்லை' என்று கருதப்படுவதால், இதுவரை பயன்படுத்தப்பட்ட தரநிலைகள் இனி பொருந்தாது. மேலும், தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் உதவிப் பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கான அணுகல்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்படும்.

ஐரோப்பிய ஒன்றியம் குறைந்தபட்சம் 30,000 தடுப்புக் காவல் இடங்களை வெளிப்புற எல்லைகளில் அமைக்க விரும்புகிறது, இதன் மூலம் நான்கு மாதங்கள் நீடிக்கும் ஒரு நடைமுறையுடன், ஆண்டுக்கு 120,000 அகதிகள் வரை வேகமான வழியில் திருப்பி அனுப்பப்படலாம். 18 மாதங்கள் வரையில் தடுப்புக்காவலில் வைக்கப்படும் இந்த மக்கள், பின்னர் நாடுகடத்தப்படுவதற்கு அச்சுறுத்தப்படுவார்கள். இதனால் அவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள், ஏனெனில் அவர்கள் போர்கள், துன்பங்கள் மற்றும் கஷ்டங்களிலிருந்து ஆற்றொணா நிலையில் உயிர்தப்பி வந்தவர்களாவர்.

20 சதவீதத்திற்கும் குறைவான அங்கீகார விகிதத்தைக் கொண்ட நாடுகளில் ஏற்கனவே ரஷ்யா, பாகிஸ்தான், எகிப்து, நைஜீரியா, பங்களாதேஷ் மற்றும் பிற நாடுகளும் அடங்கும். மேலும், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அகதிகள் கூட, சரியான கடவுச்சீட்டு இல்லாமல் வந்து வேண்டுமென்றே அதை தூக்கி வீசியதாக  குற்றம் சாட்டப்பட்டால், விரைவு நாடுகடத்தல் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்படுகின்றனர்.

மறுபுறம், மத்திய தரைக்கடல் நாடுகளான கிரேக்கம், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை 'பாதுகாப்பான மூன்றாம் நாடுகள்' என்று அழைக்கப்படுபவை வழியாக நுழையும் அகதிகளும் வேகமான வழி நடைமுறைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று தங்கள் விதிமுறைகளில் எழுதியுள்ளன. கிரேக்கத்தை பொறுத்தவரை, இது அனைத்து அகதிகளுக்கும் பொருந்தும், ஏனெனில் கிரேக்க அரசாங்கம் துருக்கியை பாதுகாப்பான மூன்றாவது நாடாக நியமித்துள்ளது.

நிராகரிக்கப்பட்ட அகதிகளை நாடு கடத்துவது ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு போதுமான பலனைத் தரவில்லை என்பதால், பாதுகாப்புத் தரங்களும் பெருமளவில் குறைக்கப்படும். ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்களின் கூற்றுப்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் வரவேற்கப்படாத அகதிகளை ஏற்றுக்கொள்ளும் மூன்றாவது நாடுகளுடன் விரைவில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.

இந்த நோக்கத்திற்காக, 'பாதுகாப்பான மூன்றாம் நாடுகள்' என்ற வரையறை மிகப்பெரிய அளவில் விரிவாக்கப்படும். எதிர்காலத்தில், ஒரு நாட்டின் சில பகுதிகள் மட்டுமே பாதுகாப்பானவை என குறிப்பிடப்பட்டால், நாடு கடத்தப்படுவதற்கும் போதுமானதாக இருக்கும். ஜெனிவா அகதிகள் ஒப்பந்தத்தை அங்கீகரிக்காத நாடுகளும் இதில் அடங்கும்.

இந்த மூன்றாவது நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவதற்கான ஒரே நிபந்தனை என்னவென்றால், அகதிகள் அந்த நாட்டுடன் 'இணைப்பு' கொண்டிருக்க வேண்டும். இதில் மிகவும் ஏமாற்றுத்தனம் என்னவென்றால், புகலிட நடைமுறையை நடத்தும் ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடும் எந்த 'இணைப்பு' போதுமானதாகக் கருதப்படும் என்பதைத் தானே தீர்மானிக்க முடியும். தப்பிக்கும் பாதையில் ஒரு போக்குவரத்தை கூட 'இணைப்பு' என்று வரையறுக்கலாம். இது கிரேக்கத்தில் இருந்து துருக்கி, ஸ்பெயினில் இருந்து மொராக்கோ அல்லது இத்தாலியில் இருந்து துனிசியாவிற்கு தன்னிச்சையாக நாடு கடத்தப்படுவதற்கான கதவைத் திறக்கிறது.

புகலிடம் மற்றும் இடம்பெயர்வு மேலாண்மை மீதான கட்டுப்பாடும் இத்தகைய தன்னிச்சையான நாடுகடத்தலுக்கு உதவுகிறது. இது அகதிகளுக்குப் பாதகமானதாக இருக்கும்.  நடைமுறையில் தோல்வியடைந்த டப்ளின் ஒழுங்குமுறையை பிரதியீடு செய்யவும், அதை அபாரமான முறையில்  கடுமையாக்கவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டப்ளின் ஒழுங்குமுறையின்படி, முதன்முதலில் (புகலிடம் கோருபவர்) நுழைந்த உறுப்பு நாடு, அகதிகளின் புகலிட செயல்முறை மற்றும் தங்குமிடத்தை நடத்துவதற்கு பொறுப்பாகும். எவ்வாறாயினும், புகலிடக் கோரிக்கையாளர்களைத் திரும்பப் பெற மறுத்ததனால் அல்லது கிரேக்கம்  மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளில் மனிதாபிமானமற்ற வாழ்க்கை நிலைமைகளால் புகலிடக் கோரிக்கையாளர்கள் அச்சுறுத்தப்பட்டதால், அவர்களைத் திரும்பப் பெற மறுத்ததனால் அல்லது நீதிமன்றங்கள் திருப்பி அனுப்பப்படுவதைத் தடை செய்ததனால், புகலிடக் கோரிக்கையாளர்களை, அவர்கள் முதலில் வந்து இறங்கிய நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்ந்து தோல்வியடைந்தது. துணையில்லாத சிறார்களும் டப்ளின் ஒழுங்குமுறையில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இப்போது கட்டாய மறுசீரமைப்பு இருக்கும், சிறார்களுக்கும் திருப்பி அனுப்பப்படுவது நீட்டிக்கப்படும் மற்றும் சட்டப் பாதுகாப்புகள்-அதாவது, நாடு கடத்துவது குறித்து நீதிமன்றத்தில் மறுஆய்வு செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கடுமையாக கட்டுப்படுத்தப்படும். எந்தவொரு வழியையும் பயன்படுத்தி, அகதிகளை விரைவாக அகற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய எல்லை நாடுகள் மீதான அழுத்தத்தை இது பெருமளவில் அதிகரிக்கும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒற்றுமை பொறிமுறையானது' ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு அகதிகளை எடுத்துக் கொள்வதற்கான  வழியை வாங்குவதற்கான வாய்ப்பைத் திறக்கிறது. உள்துறை அமைச்சர்கள் இழிந்த முறையில் ஒரு அகதியின் விலையை 20,000 யூரோக்களாக நிர்ணயித்துள்ளனர். இந்த தொகை எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஈடுகட்டப் பட முடியும். பல்கேரியாவில் உள்ள EU அகதிகள் நிறுவனமான Frontex க்காக பணியமர்த்தப்பட்ட போலந்து அல்லது ஜேர்மன் எல்லைப் பொலிஸ் அதிகாரிகளின் விலையை இங்கே கோரலாம், அதே போல் சுவர்கள் மற்றும் வேலிகள் அமைப்பதற்கான நிதி உதவி மற்றும் அகதிகளை பாதுகாப்பதில் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் மூன்றாம் நாடுகளுக்கான பணத்தையும் கோரலாம்.

”ஒற்றுமை பொறிமுறை” இன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் விநியோகிக்க படவிருக்கும்  அகதிகள், முதல் நுழைவு நாட்டிற்குத் திரும்ப அனுப்பப்படும் மக்களுக்கு எதிராக ஈடுசெய்யப்படலாம். இந்த வழியில், கிரேக்கத்திலிருந்து அகதிகளை அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, ஜேர்மன் அரசாங்கம் அந்த நாட்டிற்கு சமமான எண்ணிக்கையிலான இடமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

லக்சம்பர்க் உள்துறை அமைச்சர்கள் மாநாடு அதன் தீர்மானங்களை தகுதியான பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது. வலதுசாரிகளிடம் இருந்துதான் எதிர்ப்பு வந்தது. போலந்தும் ஹங்கேரியும் எதிர்த்து வாக்களித்தன. மால்டா, ஸ்லோவாக்கியா, பல்கேரியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. போலந்து உள்துறை மந்திரி பார்டோஸ் க்ரோடெக்கி தனது நாடு 'அபத்தமான விதிமுறைகளுக்கு' கட்டுப்படாது என்று அறிவித்தார். பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட ஒற்றுமை பொறிமுறையில் பங்கேற்க விரும்பவில்லை என்று செக் அரசாங்கமும் கூட்டத்திற்குப் பிறகு தெளிவுபடுத்தியது.

ஆயினும்கூட, இடம்பெயர்வு மற்றும் புகலிடத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் யில்வா ஜோஹன்சன், இந்த ஒப்பந்தத்தை 'வரலாற்று நிகழ்வு' என்று அறிவித்தார். உண்மையில், ஐரோப்பிய ஒன்றியம் ஜெனீவா அகதிகள் ஒப்பந்தத்தை கைவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளிலும், தப்பிக்கும் வழிகளிலும் அகதிகளின் துயரத்தை கணிசமாக அதிகரித்து வருகிறது என்ற அர்த்தத்தில் அது வரலாற்று நிகழ்வு தான். 

எதிர்காலத்தில், பல மோரியா முகாம்கள் அங்கே இருக்கும், ஒரு வித்தியாசம் தான் இருக்கும், அகதிகள் வலுக்கட்டாயமாக சேரி முகாம்களில் அடைக்கப்படுவார்கள், குழந்தைகளைக் கூட விட்டு வைக்க மாட்டார்கள். இந்த முகாம்களில் உள்ள நிலைமைகளை ஏற்கனவே கிரேக்க ஏஜியன் தீவுகளில் 'மூடப்பட்ட கட்டுப்பாட்டு அணுகல் மையங்கள்' என்று அழைக்கப்படுவதில் காணலாம். ஐரோப்பிய ஒன்றிய நிதியைக் கொண்டு, போதிய மருத்துவ வசதியோ, சட்ட ஆலோசனையோ வழங்காமல் அங்குள்ள அகதிகளுக்கு உயர் பாதுகாப்பு சிறைகளை கிரேக்க அரசாங்கம் கட்டியுள்ளது.

அவர்களுக்கான உணவு வழங்கல் பெரும்பாலும் முற்றிலும் போதுமானதாக இல்லை.

ஜேர்மனியில் உள்ள Médecins Sans Frontières இன் துணைத் தலைவர் Parnian Parvanta, ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்களின் முடிவு 'பாதுகாப்பு தேவைப்படும் மக்களுக்கு பேரழிவு மிக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார். கிரேக்க தீவுகளில் உள்ள சிறை போன்ற முகாம்கள் ஐரோப்பிய மண்ணில் தரநிலையாக மாறும்.

மேலும் மிருகத்தனமான தள்ளுமுள்ளுகளும் இருக்கும், அதாவது, புகலிடக் கோரிக்கையின்றி அகதிகளை வலுக்கட்டாயமாக நிராகரித்தல். தடுப்பு முகாம்களில் உள்ள விரைவான நடைமுறைகளில் இருந்து தப்பிக்க, அகதிகள் ஆபத்தான மற்றும் அதிக விலையுள்ள தப்பிக்கும் வழிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

உள்துறை மந்திரிகளின் முடிவுகள் குறித்த எழுதியமை இன்னும் உலராத நிலையில், கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஏற்கனவே அவற்றை நடைமுறைப் படுத்திள்ளார். நவீன பாசிச இத்தாலிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி மற்றும் டச்சு பிரதமர் மார்க் ரூட்டே ஆகியோருடன், அவர் ஜனாதிபதி கெய்ஸ் சயீதுக்கு மரியாதை செலுத்த ஞாயிற்றுக்கிழமை துனிசியாவிற்கு சென்றார்.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் சமீபத்தில் Saïed ஐ அவரது சர்வாதிகார பாணி அரசாங்கத்திற்காக கண்டனம் செய்தது. ஜூலை 2021 இல் அவரது ஆட்சி கவிழ்ப்பு சதியில் இருந்து அவர் ஜனாதிபதி ஆணைகளை இயற்றுவதன் மூலம் ஆட்சி செய்து வந்தார், மேலும் 20 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அகதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கவும் மற்றும் எப்படியாவது  அவர்கள் அதைச் செய்தால், அவர்களைத் திரும்ப அழைத்துச் சென்று சிறையில் அடைக்கவும் ஒரு பில்லியன் யூரோக்களுக்கு மேலான தொகையை இப்போது தூதுக்குழு அவருக்கு வழங்கியுள்ளது.

எல்லைகளை சீல் வைப்பதற்கும் புலம் பெயர்ந்தவர்களை திருப்பி அனுப்புவதற்கும் 100 மில்லியன் யூரோக்களை அவருக்கு அனுப்ப  பிரஸ்ஸல்ஸ்  விரும்புகிறது. 150 மில்லியன் யூரோக்கள் பட்ஜெட்டுக்கு  ஆதரவாகவும் மற்றொரு  900 மில்லியன் யூரோக்கள் மேக்ரோ எகனாமிக் நிதி ஊட்டமாகவும் துனிஸுக்கு வர உள்ளது. துனிசியா IMF உடன் ஒரு உடன்பாட்டை எட்டினால் மேலும் 700 மில்லியன் யூரோக்களை சேர்த்து அனுப்ப இத்தாலி விரும்புகிறது.

பெப்ரவரியில் அகதிகளுக்கு எதிராக வன்முறைக் கலவரங்களை சயீத் இனவெறியுடன் தூண்டிவிட்டு அகதிகளுக்கு எதிரான அலையை தூண்டி விட்டார் - துனிசியாவிலிருந்து வந்த 53,800 புலம்பெயர்ந்தோர் ஏற்கனவே இந்த ஆண்டு இத்தாலியில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவரது சர்வாதிகாரம் மற்றும் இனவாதத்திலிருந்து தப்பி ஓடியவர்களை திரும்ப எடுத்துக்  கொள்ளவும் அவருக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

துனிசியாவிலிருந்து, வோன் டெர் லேயன், மெலோனி மற்றும் ரூட்டே ஆகியோர் உள்நாட்டுப் போரால் சூழப்பட்ட லிபியாவிற்குப் பயணம் செய்து, அதேபோன்ற ஒப்பந்தத்தை பிரதம மந்திரி அப்துல் ஹமிட் டிபீபாவுடன் செய்துகொள்ள இருக்கின்றனர். வாக்குகளை வாங்குவதாகவும் மற்றும் பணமோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட அவர், நாட்டின் ஒரு பகுதியை மட்டுமே கட்டுப்படுத்துகிறார்.

Loading