மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ப்ளூம்பெர்க் தொகுத்து வெளியிட்ட தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலகின் செல்வந்தர்கள் தங்கள் செல்வ சொத்து மதிப்பில் 852 பில்லியன் டொலர்களை சேர்த்துள்ளனர். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் ஒவ்வொரு உறுப்பினரும் கடந்த ஆறு மாதங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 14 மில்லியன் டொலருக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளனர்— அதாவது உலக மக்கள் தொகையில் 47 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 6.25 டொலர்களில் மட்டுமே உயிர் வாழ்ந்து வருகின்றனர்.
உலகின் 2,640 பில்லியனர்களின் செல்வத்தின் அதிகரிப்பு 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்குப் பிறகு ஆறு மாதங்களில் மிகப் பெரிய உயர்வாகும். கோவிட் பெருந்தொற்று நோயின் தாக்கத்திலிருந்து பெரும் செல்வந்தர்களின் சொத்துக்களைப் பாதுகாக்க அமெரிக்காவும் உலகெங்கிலும் உள்ள பிற அரசாங்கங்களும் நிதியச் சந்தைகளில் கொட்டிய டிரில்லியன் கணக்கான டொலர்களின் விளைவாக முந்தைய ஏற்றம் ஏற்பட்டது. மார்ச் 2020 முதல் மார்ச் 2023 வரையிலான மூன்று ஆண்டுகளில், நியூயோர்க் பங்குச் சந்தையின் மூன்று பெரிய குறியீடுகளும் 70 சதவீதம் உயர்ந்துள்ளன. நிதிய ஸ்திரமின்மையின் அதிகரித்து வரும் அறிகுறிகள் மற்றும் பொருளாதார மந்தநிலையின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், அவைகள் கடந்த காலாண்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
ப்ளூம்பெர்க் குறிப்பிடுகையில், “மத்திய வங்கி வட்டி விகித உயர்வுகள், உக்ரேனில் நடந்து வரும் போர் மற்றும் பிராந்திய வங்கிகளில் ஒரு நெருக்கடி ஆகியவற்றின் விளைவுகளை முதலீட்டாளர்கள் புறந்தள்ளியதால், இந்த ஆதாயங்கள் ஒரு பரந்த பங்குச் சந்தை ஏற்றத்துடன் ஒத்துப் போயின. செயற்கை நுண்ணறிவு மீதான முதலீட்டாளர்களின் வெறி தொழில்நுட்ப பங்குகளை அதிகரித்ததால் S&P 500 இன் பங்குச் சந்தைக் குறியீட்டின் பங்குகள் 16 சதவீதமும் மற்றும் நாஸ்டாக் 100 குறியீட்டு பங்குச் சந்தை அதன் சிறந்த முதல் பாதியில் 39 சதவீதமும் உயர்ந்தது.
உலகிலுள்ள பில்லியன் கணக்கான மக்கள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், குறைந்து வரும் உண்மையான ஊதியங்கள் மற்றும் அதிகரித்து வரும் வறுமை ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள நிலையில், உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலான் மஸ்க் 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 96 பில்லியன் டொலர்களுடன் பெரும் செல்வந்தர் ஆனார். பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் (ப்ளூம்பெர்க்கின் செல்வந்த 500 பில்லியனர்களின் பட்டியலில் 10 வது இடத்திலுள்ளார்) 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 58.9 பில்லியன் டொலர்கள் அதிகரித்து, 99.2 பில்லியன் டொலர்கள் ஆக தனது செல்வத்தை உயர்த்தியுள்ளார்.
கலிபோர்னியாவிலுள்ள எலான் மஸ்க்கின் டெஸ்லா தொழிற்சாலையின் பதினைந்து தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள், தி கார்டியன் பத்திரிகையின் கூற்றுப்படி, “தலைமை நிர்வாக அதிகாரியின் இலட்சிய உற்பத்தி இலக்குகளை நிறைவேற்றுவதற்காக, கடுமையான அழுத்தத்தின் கீழ், சில நேரங்களில் வலி மற்றும் காயத்தின் மூலம் நீண்ட நேரம் வேலைக் கலாச்சாரத்தை” விவரிக்கின்றனர். டெஸ்லாவின் தயாரிப்பு தொழில்நுட்ப வல்லுநரான ஜொனாதன் கேலெஸ்கு கார்டியனுக்கு அளித்த பேட்டியில், “மக்கள் வெளியேறுகிறார்கள், பான்கேக் போல தரையில் மோதி முகத்தைத் திறந்து விடுகிறார்கள்” என்று விவரிக்கிறார். “அவர் இன்னும் தரையில் படுத்திருக்கும்போது அவரைச் சுற்றி வேலை செய்ய அவர்கள் எங்களை அனுப்புகிறார்கள்”, என்று அவர் மேலும் கூறினார்.
மேலே உள்ள வரைபட விளக்கம்: உலகளாவிய 50 சதவீதம் வாங்கும் திறன் ஒப்புமையில் (PPP- purchasing power parity) அளவிடப்பட்ட மொத்த வருமானத்தில் 8 சதவீதத்தைக் கைப்பற்றுகிறது. உலகளாவிய அடிமட்ட வறியவர்கள் 50 சதவீதம் பேர்கள் 2 சதவீத செல்வத்தை வைத்திருக்கிறார்கள் (வாங்கும் சக்தி ஒப்புமையில் அளவிடப்படுகிறது). உலகின் முதல் 10 சதவீதம் பேர்கள் மொத்த தனிப்பட்ட செல்வத்தில் 76 சதவீத செல்வத்தை வைத்திருக்கிறார்கள், மற்றும் 2021 ஆம் ஆண்டில் மொத்த வருமானத்தில் 52 சதவீதத்தை கைப்பற்றுகிறார்கள். அதிக சொத்து வைத்திருப்பவர்கள் அதிக வருமானம் பெறுபவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஓய்வூதியம் மற்றும் வேலையின்மை அமைப்புகளின் செயல்பாட்டிற்குப் பிறகும், வரிகள் மற்றும் இடமாற்றங்களுக்கு முன்பும் இங்கு வருமானம் அளவிடப்படுகிறது.
கடந்த ஆண்டு எலான் மஸ்க் டெஸ்லாவில் 10,000 ஊழியர்களையும், ட்விட்டரில் 3,700 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தார். தனது பங்கிற்கு, ஜூக்கர்பெர்க் மே மாதத்தில் மெட்டா நிறுவனத்தில் தனது மூன்றாவது சுற்று பணிநீக்கங்களைத் தொடங்கினார், இது இரண்டு ஆண்டுகளில் 21,000 வேலைகளை அகற்றுவதற்கான செலவுக் குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ப்ளூம்பெர்க்கின் பில்லியனர் குறியீட்டில் எலான் மஸ்க்கைத் தொடர்ந்து பேர்னார்ட் ஆர்னோ உள்ளார், அவர் ஐரோப்பிய ஆடம்பர பொருட்கள் தயாரிப்பாளரான LVMH (மோயட் ஹென்னெசி லூயிஸ் வுட்டன்) நிறுவனத்தின் பாதிச் செல்வத்தைக் கட்டுப்படுத்துகிறார்.
அமெரிக்க பொருளாதார மந்தநிலையானது ஆடம்பர பொருட்களுக்கான தேவையை குறைக்கும் என்ற பிரச்சனை காரணமாக ஆர்னோ ஒரே நாளில் 11.2 பில்லியன் டொலர் சொத்து மதிப்பை இழந்தார். ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, பிரெஞ்சு பில்லியனர் இன்னும் 191.6 பில்லியன் டொலர்கள் நிகர மதிப்பைக் கொண்டுள்ளார், மேலும் இந்த ஆண்டு இதுவரையிலும் 29.5 பில்லியன் டொலர்களை குவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டில், ஆர்னோ வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக தனது குடியுரிமையை பெல்ஜியத்திற்கு மாற்ற முயன்றார். ஏப்ரலில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தொழிலாளர்கள் LVMH தலைமையகத்தை முற்றுகையிட்டு, ஓய்வூதியங்களுக்கு நிதியளிக்க அரசாங்கத்திற்கு பணம் தேவைப்பட்டால், அது ஆர்னோவிடமிருந்து அதைப் பெற வேண்டும் என்று கூறினார்கள்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 154 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார், இந்த நிறுவனம், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 47.4 பில்லியன் டொலர்களை அதிகரித்துள்ளன. அமேசான் தற்போது தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத்தால் (OSHA) தொடர்ச்சியான விதிமீறல்களுக்காக விசாரணையில் உள்ளது. 2021 ஆம் ஆண்டில், அமேசான் 100 தொழிலாளர்களுக்கு 6.8 பேர்கள் என்ற விகிதத்தில், கடுமையான காயப்படும் தொழிலாளர்களைக் கொண்டிருந்தது, இது மற்றய அனைத்து கிடங்குகளிலும் ஒவ்வொரு 100 தொழிலாளர்களுக்கும் 3.3 பேர்கள் என்பதைவிட இரு மடங்கு அதிகமாகும்.
இந்த பட்டியலில் பெசோஸுக்கு அடுத்தபடியாக மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் (134 பில்லியன் டாலர்கள், அதாவது 24.4 பில்லியன் டாலர்கள் உயர்வு) உள்ளார். கடந்த ஆண்டு, கேட்ஸ் கனடிய தேசிய இரயில்வே நிறுவனத்தில் தனது 940 மில்லியன் டாலர் பங்குகளை விற்றார், ஆனால் கனடிய தேசிய இரயில்வே நிறுவனத்தில் (CN Rail) இல் 9 சதவீத பங்குகளை இன்னும் வைத்துள்ளார். இது வட அமெரிக்காவின் முதல் ஏழு வகுப்பு 1 இரயில் பாதைகளில் ஒன்றாகும், அவைகள் தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான செலவு குறைப்பு தாக்குதலை நடத்தியுள்ளன மற்றும் உள்கட்டமைப்புகளில் வெட்டுக்களை மேற்கொண்டுள்ளன, இதன் விளைவாக கிழக்கு பாலஸ்தீனம், ஓஹியோ உட்பட பல இடங்களில் மீண்டும் மீண்டும் இரயில்கள் தடம்புரண்டுள்ளன.
ஏழாவது இடத்தில் வாரன் பஃபெட் (113 பில்லியன் டாலர்கள், 5.6 பில்லியன் டாலர்கள் உயர்வு) உள்ளார், அவர் BNSF இரயில் பாதையை வைத்துள்ளார், மேலும் கீகோ, கிளேட்டன் ஹோம்ஸ் மற்றும் டய்ரி குயின் ஆகியவற்றின் உரிமையாளர்களான முதலீட்டுக் குழுவான பெர்க்ஷைர் ஹாத்வே, கோகோ கோலா மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் பங்குகளைக் கொண்டுள்ளார்.
ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்களின் பட்டியலில் ஒரு சிலரின் சமூக விரோத தன்மை இதுவாகும், கோவிட் பெருந்தொற்றின் போது இந்த செல்வம் அதிகரித்துள்ளது. பெருந்தொற்றினால், சுமார் 22 மில்லியன் பேர் இறந்துள்ளனர் மற்றும் இன்னும் பல மில்லியன் கணக்கானவர்கள் நீண்டகால குறைபாட்டால் அனுபவிக்கின்றனர்.
மேலேயுள்ள அட்டவணை விளக்கம்: 2021 ஆம் ஆண்டில், உலகளவில் 62.2 மில்லியன் நபர்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான டொலர்களை வைத்திருந்தனர் (MER இல்- Market Exchange Rate- சந்தை மாற்று வீதம் ). இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 2.8 மில்லியன் டொலர்கள் ஆகும். அதாவது மொத்தம் 174 ட்ரில்லியன் டொலர்கள். குறிப்பு: மில்லியனர்களின் எண்ணிக்கை அருகிலுள்ள பத்துக்கு வட்டமாக உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக பொருளாதார மன்றத்திற்கு (World Economic Forum) முன்னதாக ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி:
“2020 ஆண்டிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட 42 டிரில்லியன் டொலர்கள் செல்வத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை 1 சதவீத செல்வந்தர்கள் கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 99 மனிதகுலம் முழுவதும் இதே காலகட்டத்தில் அடைந்ததை விட இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும். கடந்த தசாப்தத்தில், பில்லியனர்களின் எண்ணிக்கையும் செல்வமும் இரட்டிப்பாகியுள்ளது மற்றும் 1 சதவீதமான செல்வந்தர்கள் புதிய உலகளாவிய செல்வத்தில் பாதியைக் கைப்பற்றியுள்ளனர்.”
‘’சராசரி பில்லியனர்களில் அடிமட்டத்திலுள்ள 90 சதவீதமான நபர்கள் பெற்ற ஒவ்வொரு 1 டொலர் புதிய செல்வத்திற்கும் சுமார் 1.7 மில்லியன் டொலர்கள் சம்பாதித்துள்ளார். உலகின் பெரும் செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பு ஒரு நாளைக்கு 2.7 பில்லியன் டொலர்களாக அதிகரித்து வருகிறது.’’
‘’அடுத்த ஐந்து ஆண்டுகளில், உலகின் முக்கால்வாசி அரசாங்கங்கள் 7.8 டிரில்லியன் டொலர்கள் பொது செலவினங்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளன.”
“உலகில் 820 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது பட்டினியால் வாடுகிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் கடைசியாகவும் மிகக் குறைவாகவும் உணவு உண்பவர்கள் பெண்கள் ஆவர். கூடுதலாக, 339 மில்லியன் மக்களுக்கு இப்போது அவசர ரேஷன் உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.’’
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் இந்த சமூக அடுக்கின் செழுமைக்கு அடிபணிந்துள்ளது. அதன் ஒட்டுண்ணித்தனமும் சீரழிவும், வாரிசு (Succession) என்ற தொலைக்காட்சி தொடரில் முன்னிலைப்படுத்தப்படுவதை காணலாம்.
அமெரிக்காவில், தொழிலாள வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்க கல்லூரி மாணவர்களுக்கு சிறிய கடன் நிவாரணம் வழங்குவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் அறிவிக்கிறது. அதே நேரத்தில், பைடன் நிர்வாகமும் காங்கிரஸும் வங்கிகளை பிணையெடுப்பதற்கும், பங்குச் சந்தைகளுக்கு முட்டுக் கொடுப்பதற்கும், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக போர் தொடுப்பதற்கும் முடிவற்ற வளங்களைக் கண்டறிந்து, உள்நாட்டில் தொழிலாளர்களுக்கு எதிராக போர் தொடுக்கும் அதே பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவிற்கு உலகின் வளங்கள் மீதான கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகின்றன.
ஆளும் உயரடுக்கிற்கும் பெருந்திரளான உழைக்கும் மக்களுக்கும் இடையிலான சமரசமற்ற மோதல் உலகெங்கிலும் வர்க்கப் போராட்டத்தின் வெடிக்கும் எழுச்சிக்கு எரியூட்டி வருகிறது. பிரான்சில் ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான வெகுஜன போராட்டங்கள், பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் இரயில்வே, அஞ்சல், விமான சேவை மற்றும் பிற தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள், இலத்தீன் அமெரிக்க ஆசிரியர் வேலைநிறுத்தங்களின் அலை மற்றும் இலங்கையில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிரான வெகுஜன போராட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
வட அமெரிக்காவில், ஒன்ராறியோவின் ஹாமில்டனில் 7,400 கனேடிய கப்பல்துறை தொழிலாளர்களும் 1,500 தேசிய எஃகு கார் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். அமெரிக்காவில், லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 15,000 ஹோட்டல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், 160,000 க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடந்து வரும் எழுத்தாளர்களின் வேலைநிறுத்தத்தில் சேர முயற்சிக்கின்றனர், ஈரி, பென்சில்வேனியா, வெஸ்ட் கோஸ்ட் துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் நியூயார்க் நகர போக்குவரத்து தொழிலாளர்கள் தொழிற்சங்க ஆதரவு விற்பனை ஒப்பந்தங்களை எதிர்க்கின்றனர், மேலும் அரை மில்லியனுக்கும் அதிகமான UPS மற்றும் வாகனத் தொழில்துறை தொழிலாளர்கள் இந்த கோடையில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
ஆளும் வர்க்கத்திற்குள் தொழிலாள வர்க்கத்தின் முன்னெப்போதையும் விட அதிகமான போர்க்குணம் மற்றும் அரசியல் தீவிரமயமாக்கலின் புரட்சிகர தாக்கங்கள் குறித்து ஒரு அச்சம் வளர்ந்து வருகிறது. கார்டியன் பத்திரிகை சமீபத்தில் லண்டனில் ஸ்பியர் செல்வ மேலாண்மை இதழ் ஏற்பாடு செய்த ஒரு முதலீட்டு மாநாட்டைப் பற்றி செய்தி வெளியிட்டது, அங்கு “எரிசக்தி மற்றும் உணவு விலை உயர்வுகள் ஆகியன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள குடும்பங்களைத் தாக்குவதன் விளைவாக செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மை இடைவெளி விரிவடைய அனுமதிக்கப்பட்டால், உலகளாவிய உயரடுக்கின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் நிதிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு முற்போக்கான ஆலோசகர்களால்“ உண்மையான கிளர்ச்சி” மற்றும் “உள்நாட்டு சீர்குலைவு” ஏற்படும் என்று கூறப்பட்டது.”
எவ்வாறெனினும், சமூக செல்வத்தின் ஒரு தீவிரமான மறுபகிர்வு, ஆளும் வர்க்கத்திற்கு அதிக வரிகளை செலுத்துமாறு வேண்டுகோள் விடுப்பதன் மூலமோ அல்லது பேர்னி சாண்டர்ஸ், ஜெர்மி கோர்பின், ஜோன் லூக் மெலோன்சோன் மற்றும் முதலாளித்துவத்தின் பிற போலி-இடது பாதுகாவலர்களின் வேறு எந்த சீர்திருத்த முன்மொழிவுகளினதும் மூலம் அடையப்பட மாட்டாது.
ஆளும் வர்க்கமும் அதன் அமைப்புமுறையும் வரலாற்று ரீதியாக காலாவதியானவைகள். சமூகத்தின் உயிர்வாழ்விற்காக, நிதிய தன்னலக்குழுவிடமிருந்து செல்வங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் மற்றும் அதன் பரந்த செல்வம் மனித தேவைகளைப் பூர்த்தி செய்ய மறுவிநியோகம் செய்யப்பட வேண்டும். அவர்கள் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் உற்பத்தி சக்திகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
சாமானிய குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) வழிகாட்டுதலின் கீழ், சாமானிய குழுக்களின் விரிவடைந்து வரும் வலையமைப்பின் ஊடாக அதன் மிகவும் நனவான வடிவத்தை எடுத்து வரும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கம், தொழிலாளர்களின் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான நனவான அரசியல் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.