மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வார இறுதியில் சிடோ (Chido) சூறாவளி ஏற்படுத்திய பேரழிவுக்கு பின்னர், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடந்த வியாழக்கிழமை பிரான்சின் இந்தியப் பெருங்கடலிலுள்ள தீவுக்கூட்டமான மயோட்டுக்கு (Mayotte) வந்தடைந்தார். அவரது விஜயம் தொடங்கியதில் இருந்தே, ஒரு வங்கியாளரான ஜனாதிபதி மக்ரோன் கோபமடைந்த மக்களை எதிர்கொண்டார். இந்த மக்கள் பிரெஞ்சுக்காரர்களாக இருப்பதில் பெருமைப்பட வேண்டும் என்றும், கொமொரான் குடிபெயர்ந்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆணவத்துடன் மக்ரோன் உபதேசம் செய்தபோது, அவர் மக்களின் ஏளனத்துக்கு உள்ளானார்.
மக்ரோன் மயோட்டுக்கு வந்து சேர்ந்தபோது, ரீயூனியன் (Reunion) தீவில் உள்ள ஒரு பொது தொலைக்காட்சி நிலையமான ரீயூனியன்1 (Reunion 1), மயோட்டில் உள்ள மீட்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், சூறாவளி 60,000 பேரை (பதிவு செய்த மக்கள்தொகையில் அண்மித்து ஐந்தில் ஒரு பங்கை) கொன்றிருக்கலாம் என்று நம்புவதாக அறிவித்தது.
ரீயூனியன்1 தொலைக்காட்சி இந்த செய்தியை அதன் வலைத் தளத்திலிருந்து நீக்கியதன் பின்னர், பிரான்சின் முடியாட்சிவாத உள்துறை மந்திரி புருனோ ரெடெய்லியூ, இந்த அறிக்கையை ஒரு “வதந்தி” என்று நிராகரித்தார். ஆனால், லிபரேஷன் பத்திரிகையானது Réunion1 பத்திரிக்கையாளர் ரஃபேல் கானை தொடர்பு கொண்டு கேட்டபோது, நீக்கப்பட்ட அந்த அறிக்கையை ஆதரித்து, இவை உண்மையில் மயோட்டில் மீட்புப் பணியாளர்கள் கூறிய அறிக்கைகள்தான் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.
மணிக்கு 220 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்று, மயோட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் வசிக்கும் தகரக் கொட்டகை வீடுகளை தரைமட்டமாக்கி, தலைநகர் மமூத்ஸோவிலுள்ள (Mamoudzou) மலைப்பகுதி சேரிகளை அழித்துள்ளது. பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டு வந்த மயோட்டின் உள்கட்டமைப்பில் ஏற்பட்ட பேரழிவின் அளவை, பிரெஞ்சு அரசாங்கம் மறைத்துள்ளது. அரசாங்கம், 35 பேர் இறந்ததையும் 2,500 பேர் காயமடைந்ததையும் உறுதிப்படுத்தியிருப்பதாக கூறுகிறது. எவ்வாறாயினும், “100,000 மக்கள் ஆபத்தான வீடுகளில் வசிக்கிறார்கள் என்ற யதார்த்தத்துடன், இந்த சொந்த மதிப்பீடு பொருந்தவில்லை” என்பதை உள்துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டது.
இறப்பு எண்ணிக்கை அப்பட்டமாக குறைத்து மதிப்பிடப்படுவதற்கு மற்றொரு காரணம், மயோட்டின் விமான நிலையம் அமைந்துள்ள சிறிய தீவுக்கும், மற்றும் மயோட்டின் மற்ற பகுதிகள், குறிப்பாக மக்கள் தொகையில் பெரும்பாலோர் வசிக்கும் பெரிய தீவுக்கும் இடையேயான தகவல் தொடர்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. மேலும், மயோட்டின் வெவ்வேறு தீவுகளுக்கு இடையிலான படகு சேவையில் பணியாற்றிய பல படகுகள் புயலிலினால் கடலில் மூழ்கியுள்ளன. சிறிய தீவுக்கு விமானம் மூலம் மட்டுமே உணவும் தண்ணீரும் வரத் தொடங்கியுள்ளன.
மயோட்டின் இழிபுகழ்பெற்ற மோசமான நீர் அமைப்புமுறை அழிந்துவிட்டது. மேலும், தலைநகர் மமூத்ஸோவிலுள்ள கவ்னி (Kawni) சேரியில் வசிக்கும் மக்கள் ஐரோப்பா 1 (Europe 1) இடம், தாம் அழுக்கு நீரைக் குடிப்பதாகவும் அல்லது எதையும் குடிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மழை பெய்த பிறகு உருவான நீரோடையிலிருந்து தண்ணீரைக் குடித்த அமினா (Amina) என்பவர், “எங்களுக்கு வேறு வழியில்லை, இந்த தண்ணீர் சேறும் சகதியுமாக இருந்தாலும், அதைத்தான் குடிக்கிறோம். அதை வடிகட்ட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், ஆனால் அதைச் செய்யாவிட்டால், நாம் இறந்துவிடுவோம்” என்று குறிப்பிட்டார்.
இப்ராஹிம் (Ibrahim) என்பவர், கவ்னி அமர்ந்திருக்கும் மலையின் கீழே உள்ள ஒரு நீரூற்றுக்குச் செல்வதாகக் கூறினார். மேலும், “அங்கே ஒரு நீரூற்று உள்ளது, ஆனால் அந்த நீர் கூட குறிப்பாக சுத்தமாக இல்லை. நான் எப்படியும் குடிக்கப் போகிறேன், இப்போதைக்கு நான் குடிக்க வேண்டும். இப்போதைக்கு எனக்கு உடம்பு சரியில்லை, ஆனால் பிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது” என்று அவர் குறிப்பிட்டார்.
மயோட் தீவுக்கூட்டத்திற்கான மக்ரோனின் குறுகிய இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் மயோட் குடியிருப்பாளர்கள் அவரை ஏளனம் செய்தனர் மற்றும் பகிரங்கமாக விமர்சித்தனர். இது அவரது அரசாங்கத்தின் திறமையின்மையையும் மக்கள் மீதான அவரது அப்பட்டமான அவமதிப்பையும் மேலும் அம்பலப்படுத்தியது.
சூறாவளியால் மோசமாக சேதமடைந்த மயோட்டில் உள்ள மருத்துவமனைக்கு மக்ரோன் விஜயம் செய்தபோது, பால்கனியில் இருந்து ஒரு நபர் அவரை நோக்கி கூச்சலிட்டார். “ஐயா, நான் உங்கள் பேச்சைக் கேட்டேன், நீங்கள் அளித்த பதில்கள் பொருத்தமற்றவை,” என்று அவர் கூறினார். “அவசர சேவைகள் வந்துவிட்டன, தண்ணீர் வந்துவிட்டது என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் வானொலியில் சொல்வது களத்தில் நாம் அனுபவிக்கும் யதார்த்தத்துடன் பொருந்தவில்லை என்பதை உங்களுக்குச் சொல்லுகின்றேன்” என்று குறிப்பிட்டார்.
கணிக்கத்தக்க இந்த பேரழிவில் மக்ரோன் அரசாங்கம் மற்றும் அதன் முன்னோடிகளின் பொறுப்பு குறித்தும் அந்த மனிதர் சுட்டிக்காட்டினார். “குடிசைப்பகுதிகளைப் பொறுத்த வரையில், இது ஒரு பேரழிவாக இருக்கப் போகிறது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். … ஐயா, உங்களது நிர்வாகம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்குப் பின்னர், கடந்த வியாழக்கிழமை இரவு “மக்ரோனே இராஜினாமா செய்,” “இது குப்பை” மற்றும் “தண்ணீர், தண்ணீர்” என்று கோஷமிட்ட ஒரு கூட்டத்தால் மக்ரோன் ஏளனம் செய்யப்பட்டபோது, அவர் ஆணவத்துடன் “மக்களைப் பிளவுபடுத்தாதே! நீங்கள் மக்களைப் பிரித்தால், நாங்கள் திருகப்படுவோம், நீங்கள் பிரெஞ்சு மக்களாக இல்லாமல் இருந்தால், 10,000 மடங்கு அதிக பிரச்சனையை எதிர்கொள்வீர்கள்” என மக்ரோன் கூச்சலிட்டார்.
“சிலர் ஒரு பக்கத்தில் இருக்கிறார்கள், மற்றவர்கள் மறுபுறம் இருக்கிறார்கள் என்று சொல்லாதீர்கள்” என்று தொடர்ந்து அவர் கூறியபோது, கூட்டத்தினர் “ஆம், ஆம், ஆம் அவர்கள் இருக்கிறார்கள்” என்று கோஷமிட்டதன் மூலம் பதிலளித்தனர்.
ஒரு கட்டத்தில், “நான் சூறாவளி அல்ல! அதற்கு நான் பொறுப்பல்ல! என்று அறிவிக்கும் நிலைக்கு மக்ரோன் தள்ளப்பட்டார்.
உண்மையில், மயோட் தீவுப் பகுதிகளில் ஏற்பட்ட பெரும்பாலான மரணங்கள் மற்றும் துன்பங்களுக்கு மக்ரோனும் அவரது முன்னோடிகளும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்பாளிகள் ஆவர். பிரெஞ்சுக் காலனியாக இருந்த நிலையில் 1898 ஆம் ஆண்டு புயல்களால் பேரழிவிற்குள்ளான மயோட், சூறாவளிகளால் பாதிக்கப்படக்கூடியது என்பதை பிரெஞ்சு அதிகாரிகள் நன்கு அறிந்திருந்தனர். உலோகத்திலான வீடுகளின் அபாயங்கள் மற்றும் பொது பயன்பாடுகளின் பேரழிவு நிலை ஆகியவை நன்கு அறியப்பட்டிருந்தாலும், இந்த கணிக்கக்கூடிய பேரழிவைத் தடுக்க அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை.
பொது உள்கட்டமைப்பு கட்டுமானத்தை தனியார்மயமாக்கும் மக்ரோனின் முயற்சி, தண்ணீர் குழாய்களை அமைக்கும் ஒப்பந்தத்தை தனியார் பெருநிறுவனமான வன்சிக்கு (Vinci) ஒப்படைத்தமை, பெருநிறுவன வரப்பிரசாதமாக மாறியது. மேலும், 600 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான அரசு நிதிகள் கையாடல் செய்யப்பட்டிருப்பதை ஐரோப்பிய ஒன்றிய விசாரணையாளர்கள் கண்டறிந்தனர். தீவிர புயல்களைத் தாங்கும் திறன் கொண்ட அவசியமான பயன்பாடுகள் மற்றும் கான்கிரீட் வீடுகளைக் கட்டமைக்கத் தவறியமை எவ்வாறு மக்ரோனின் வலதுசாரி, வணிக-சார்பு கொள்கைகளில் வேரூன்றியுள்ளது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மக்ரோன், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இனவெறியைத் தூண்டுவதன் மூலமாக இந்த முன்வரலாற்றை மூடிமறைக்க முயன்றார். சிடோ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக டிசம்பர் 23 அன்று பிரான்சில் ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவதாக அறிவித்த பின்பு இடம்பெற்ற ஒரு நேர்காணலில், அவர் புலம்பெயர்ந்தோரைக் கண்டித்தார். சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஆவணமற்ற கொமொரான் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றாலும், அவர்கள் பொலிஸாரால் பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக தங்குமிடங்களுக்கு செல்லவில்லை என்றாலும், மயோட்டில் கொமோரன் குடியேறியவர்கள் மீது மேலும் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட மக்ரோன் உறுதியளித்தார்.
2023 இல் 22,000 ஆக இருந்த நாடுகடத்தப்படுபவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு சூளுரைத்த அவர், “சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்த்துப் போராடுவது அவசியம். மேலும், மாயோட் முன்னெப்போதும் கண்டிராத சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள ஒரு பகுதி என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்பதால், ஆவணமற்ற குடியேற்றவாசிகளை நாடு கடத்துவதில் மிகவும் திறமையானவர்களாக நாம் இருக்க வேண்டும். இதை நான் முழு மனதுடன் சொல்கிறேன், இல்லையெனில் எங்களால் மயோட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது” என்று குறிப்பிட்டார்.
பிரான்ஸ் இல்லாமல் மயோட் “10,000 மடங்கு” அதிக சிக்கலில் இருக்கும் என்ற அவர் கூறியதையும் மக்ரோன் பாதுகாத்தார். “பிரான்ஸ் ஒன்றும் செய்யவில்லை என்று கூறி அவமதிக்கும்” அதிதீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சியின் (RN-National Rally) உறுப்பினர்களுக்கு இது அவசியமான பதில் என்று கூறிய அவர், “அதனால் நான் உண்மையைச் சொன்னேன்” என்றும் குறிப்பிட்டார்.
யதார்த்தத்தில், மக்ரோனின் குமட்டல் வெடிப்பானது, மீண்டுமொருமுறை பிரெஞ்சு முதலாளித்துவ ஆட்சியின் இழிந்த குணாம்சத்தையும் உழைக்கும் மக்களின் நல்வாழ்வு மீதான அதன் அலட்சியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. பிரான்சின் மிகப் பெரிய செல்வந்தரான பேர்னார்ட் ஆர்னோவின் தனிப்பட்ட செல்வவளத்தில் ஏற்பட்டுவரும் வருடாந்திர அதிகரிப்பு, மயோட்டின் நீர், போக்குவரத்து மற்றும் மின்சார உள்கட்டமைப்பை நவீனப்படுத்த தேவைப்படுவதை விட பத்து அல்லது நூற்றுக்கணக்கான மடங்கு அதிகமாகும். ஆயினும் மக்ரோன் அவரது ஜனாதிபதி பதவிக்காலம் முழுவதிலும் மயோட் மக்களின் அடிப்படை சமூக தேவைகளைப் புறக்கணித்து, செல்வந்தர்களுக்கு பாரிய வரி விலக்குகளை வழங்க முன்னுரிமை அளித்து வருகிறார்.
மயோட்டில் ஏற்பட்ட பேரழிவானது, அதிவலது RN கட்சியிடம் இருந்து விமர்சனங்களை மட்டும் தூண்டவில்லை. மாறாக ஜோன்-லூக் மெலோன்சோன் தலைமையிலான புதிய மக்கள் முன்னணியில் (NFP) உள்ள பல்வேறு மத்தியதர வர்க்க கட்சிகளிடமிருந்தும் விமர்சனங்களை தூண்டியுள்ளது. பசுமைக் கட்சியின் சான்ட்ரின் ரூசோ (Sandrine Rousseau) மக்ரோனைக் குறித்து, “அவர்கள் பிரெஞ்சுக்காரர்களாக இருப்பதில் பெருமைப்படுகிறீர்களா என்று கேட்கும் சட்டையை அணிந்திருப்பதை நான் பார்த்தேன். … இது பணிக்கு ஏற்றது அல்ல” என்று கூறினார்.
முதலாளித்துவ வர்க்கத்திற்குள் மக்ரோனின் நிதி மற்றும் அரசியல் ஆதரவாளர்கள் அவரை இராஜினாமா செய்வதற்கும் முன்கூட்டிய ஜனாதிபதி தேர்தல்களுக்கு அழைப்பு விடுப்பதற்கும் நிர்பந்திக்கக் கூடும் என்ற ஊகங்கள் பெருகிச் செல்வதன் மத்தியில், தேசிய பேரணி கட்சியின் தலைவர் மரின் லு பென்னை அவரது விருப்ப வேட்பாளராக நிறுத்தி, அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியின் முன்னணி உறுப்பினரான எரிக் கொக்வெரெல் (Eric Coquerel), “[மக்ரோனின் கருத்துக்களுக்கு] உண்மையில் மேலும் வர்ணனை தேவையில்லை.… எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் வெளியேறக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு செய்தி அல்லவா: இது 30 மாதங்கள் நீடிக்கும் என்று யார் கற்பனை செய்ய முடியும்? அதாவது 2027 இல் ஜனாதிபதி பதவிக்காலம் முடியும் வரை?” என்று கேட்டார்.
உண்மையில், மயோட்டில் ஏற்பட்ட பேரழிவு, இறுதியில் மக்ரோனின் திவால் நிலைமை மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த முதலாளித்துவ சமூக ஒழுங்கமைப்பின் திவால்நிலையிலும் வேரூன்றியுள்ளது. கடந்த ஆண்டு மக்ரோனின் ஆழமாக மதிப்பிழந்த ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை இரத்து செய்ததன் மூலமாக அவருக்கு முட்டுக் கொடுத்த புதிய மக்கள் முன்னணியில் உள்ள கட்சிகளும் இதில் உள்ளடங்கும். மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களை நிறுத்த ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான வெகுஜன கோரிக்கைக்காக பிரச்சாரம் செய்ய இவர்கள் அனைவரும் மறுத்துவிட்டனர். மக்ரோனை வீழ்த்துவதற்கு தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதைத் தடுப்பதன் மூலம், அவர்கள் மக்ரோனின் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தனர். இதன் மூலம், மாயோட்டின் மக்கள்தொகை மீதான மோசமான புறக்கணிப்புடன், இந்த சோகத்திற்கான நிலைமைகளை உருவாக்கினர்.