மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஊழல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் புதன்கிழமை தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்தான்புல் மேயரும் குடியரசு மக்கள் கட்சியின் (Republican People’s Party – CHP) ஜனாதிபதி வேட்பாளருமான எக்ரெம் இமாமோக்லு ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) துருக்கிய பிரிவான சோசலிச சமத்துவக் குழு, இமாமோக்லு மற்றும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கோருகிறது.
மார்ச் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த குடியரசு மக்கள் கட்சியின் சார்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒரே வேட்பாளராக இமாமோக்லு மட்டுமே இருந்தார். மேலும், அவர் சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனைவிட முன்னிலையில் இருந்தார். ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான வழக்கமாக குறிக்கப்பட்ட ஆண்டு 2028 ஆகும். ஆனால் அரசியலமைப்பின் படி, எர்டோகன் மீண்டும் போட்டியிட அனுமதிக்ககூடிய வகையில் முன்கூட்டியே துருக்கியில் தேர்தல் நடத்தப்படலாம்.
“ஊழல்” குற்றச்சாட்டு சுமத்தப்பட்டே இமாமோக்லு ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால், “ஒரு பயங்கரவாத அமைப்புக்கு உதவிய” குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இரண்டாவது குற்றச்சாட்டு குர்திஷ் தேசியவாத மக்கள் சமத்துவம் மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் CHP இன் சட்டப்பூர்வ தேர்தல் கூட்டணியின் “நகர்ப்புற ஒருமித்த கருத்தை” அடிப்படையாகக் கொண்டது.
இமாமோக்லுவுடன் சேர்த்து 106 பேருக்கு தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இமாமோக்லுவைத் தவிர, இஸ்தான்புல்லில் உள்ள பெய்லிக்டாஸ் மற்றும் சிஸ்லி நகராட்சிகளின் மேயர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 92 பேரில் 48 பேர் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், 41 பேர் “வெளிநாடு செல்லத் தடை மற்றும் நீதித்துறை கட்டுப்பாடு” நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.
இமாமோக்லு மற்றும் இரண்டு மேயர்களை பதவி நீக்கம் செய்ததாக துருக்கி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சிஸ்லி நகராட்சிக்கு ஒரு அறங்காவலர் நியமிக்கப்பட்டார். அதன் மேயர் “ஒரு பயங்கரவாத அமைப்புக்கு உதவியதற்காக” கைது செய்யப்பட்டார்.
இஸ்தான்புல் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில், “குற்றவியல் அமைப்பை நிறுவி வழிநடத்துதல், லஞ்சம் வாங்குதல், மிரட்டி பணம் பறித்தல், சட்டவிரோதமாக தனிப்பட்ட தரவுகளைப் பதிவு செய்தல் மற்றும் மோசடி செய்தல் ஆகிய குற்றங்களுக்காக எக்ரெம் இமாமோக்லுவை கைது செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியது.
மேலும், “ஆயுதமேந்திய பயங்கரவாத அமைப்புக்கு உதவிய குற்றத்தில் அவர் குற்றவாளி என்ற வலுவான சந்தேகம் இருந்தாலும், நிதிக் குற்றங்களுக்காக அவரைக் கைது செய்ய ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த கட்டத்தில் அது அவசியமில்லை என்று கருதப்பட்டு, அந்தக் கோரிக்கையை நிராகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அது தெரிவித்தது.
இமாமோக்லுவை கைது செய்வதற்கான முடிவு எர்டோகன் அரசாங்கத்தால் முன்கூட்டியே எடுக்கப்பட்டது. இந்தக் கைது ஆணை சந்தேக நபர்களுக்கு தெரிவிக்கப்படாமல் அரசாங்க சார்பு ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டு பரவலாக வெளியிடப்பட்டது.
கடந்த புதன்கிழமை இமாமோக்லு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தலைமை அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில் அவரை “ஒரு குற்றவியல் அமைப்பின் தலைவர்” என்று அழைத்தது. நியாயமான விசாரணைக்கான இமாமோக்லுவின் உரிமை மற்றும் அவர் குற்றமற்றவர் என்ற அனுமானம் மீறப்பட்டதாகக் கூறி, அவரது வழக்கறிஞர் மெஹ்மத் பெஹ்லிவன், இந்த விசாரணையின் சட்டவிரோதத்தன்மையை பின்வருமாறு விளக்கினார்:
சட்டவிரோத தடுப்புக்காவல், சான்றுகள் என்று அழைக்கப்படுபவை, ரகசிய சாட்சிகள், சாதாரண சாட்சிகளாக இருந்தாலும் பெயர்கள் குறிப்பிடப்படாத சாட்சிகள், இதனால் மறைக்கப்பட்ட, சட்டப்பூர்வமாக பெறப்படாத மற்றும் திரு இமாமோக்லுவுடன் எந்த தொடர்பும் இல்லாத ஆடியோ பதிவுகள் போன்ற பொய்யான குற்றச்சாட்டுகள்... இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த விசாரணையில் தர்க்கரீதியான, சட்டபூர்வ மற்றும் நம்பத்தகுந்த எதுவும் இல்லை.
இந்தக் கைது குறித்த அதன் அறிக்கை மற்றும் அதை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் ரகசிய சாட்சி அறிக்கைகள் குறித்து, பிபிசி துருக்கி தெரிவிக்கையில், “ரகசிய சாட்சிகள் தங்கள் வாக்குமூலங்களில், வெவ்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்களைக் குறிப்பிட்டு நியாயமற்ற ஆதாயங்களைப் பெறுதல், லஞ்சம், ஊழல், முறைகேடுகள், சில பத்திரிகையாளர்களுக்கு நிதியளித்தல், உள்ளூர் தேர்தல் செயல்பாட்டின் போது பண பரிவர்த்தனைகள், குடியரசு மக்கள் கட்சியின் காங்கிரஸ் இடம்பெற்ற காலத்தில் பிரதிநிதிகளுக்கு பணம் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைச் செய்தனர். மேலும், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இமாமோக்லுவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன” என்றும் பிபிசி குறிப்பிட்டது.
ஒரு வழக்கறிஞரும் குடியரசு மக்கள் கட்சியின் துணைத் தலைவருமான மஹ்முத் தனல், “எக்ரெம் இமாமோக்லுவின் சாட்சியத்திற்குப் பிறகு, 20 பக்க பகுத்தறிவு தீர்ப்பு வெறும் 20 நிமிடங்களில் தயாரிக்கப்பட்டது! நிமிடத்திற்கு 1 பக்கம்... இந்த தீர்ப்பு முன்கூட்டியே எழுதப்படவில்லை என்று நம்பும் வழக்கறிஞர் யாரும் இல்லை. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட சூழ்நிலை மற்றும் நீதித்துறையின் ஆயுதமயமாக்கல் தெளிவாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.
துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் கடந்த சனிக்கிழமை இரவு எக்ஸ்/ட்விட்டரில் தொடர்ச்சியான ட்வீட்களுடன் தீர்ப்பை முன்னறிவித்தார். அதில் அவர், இமாமோக்லுவை தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக சித்தரித்தார். “இந்தக் கட்டத்தில், நாம் இதை மிகத் தெளிவாகக் காணலாம்: தற்போதைய தலைமையின் கீழ், குடியரசு மக்கள் கட்சி, அதன் வாக்காளர்களின் கோரிக்கைகளை பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் கட்சியாக இல்லாமல், ஒரு சிலர் பணத்தைக் கொள்ளையடிக்கும் நகராட்சி கொள்ளையர்களை வெள்ளையாக்கும் ஒரு கருவியாக மாறியுள்ளது,” என்று எழுதிய அவர், “நகராட்சிகளில் இருந்து ஆதாயமடையும் நலன் குழுக்கள் கழுத்து வரை அழுக்கில் புதைந்து கிடக்கின்றன, துரு, சேறு, ஊழல் மற்றும் அராஜகம்” என்று அவர் எழுதினார்.
கைது செய்யப்பட்ட பின்னர் அனுப்பிய செய்தியில், இமாமோக்லு, “துருக்கி இன்று ஒரு பெரிய துரோகத்திற்கு எழுந்துள்ளது. நீதித்துறை செயல்முறை என்பது சட்ட நடவடிக்கை அல்ல. இது ஒரு முழுமையான நீதிக்குப் புறம்பான மரணதண்டனை. உரிமைகளுக்காக பொறுப்புணர்வுடன் போராடுமாறு நமது தேசத்திற்கு நான் அழைப்பு விடுக்கிறேன். உரிமைகளுக்கான இந்தப் போராட்டம் நமது தேசம் மற்றும் நமது குழந்தைகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
குடியரசு மக்கள் கட்சியின் முதல்நிலைத் தேர்தல்களில் பங்கேற்குமாறும், பின்னர் பேரணிகளில் பங்கேற்குமாறும் இமாமோக்லு வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இமாமோக்லுவின் கைதைத் தொடர்ந்து குடியரசு மக்கள் கட்சி, அதன் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் உறுப்பினர்களையும், கட்சி சாராத உறுப்பினர்களையும் ஞாயிற்றுக்கிழமை முதன்மைத் தேர்தல்களில் ஒற்றுமை வாக்குகளைப் பதிவு செய்ய அழைப்பு விடுத்தது.
ஆரம்பத்தில் இருந்தே, குடியரசு மக்கள் கட்சி இமாமோக்லுவின் தடுப்புக்காவல் மீதான பாரிய கோபத்தைக் கட்டுப்படுத்தவும், அதை அடுத்த தேர்தல்களை நோக்கி திசை திருப்பிவிடவும் முயன்று வருகிறது. இதற்காக, குடியரசு மக்கள் கட்சியின் தலைவர் ஓஸ்கர் ஓசெல் கைது முடிவில் கூட, ஒரு “நேர்மறையான புள்ளியை” கண்டுபிடிக்க முடிந்தது: “ஒருபுறம், இது முக்கியமானது, ஏனெனில் இது இஸ்தான்புல் நகராட்சிக்கு ஒரு அறங்காவலரை நியமிப்பதற்கான வாய்ப்பை நீக்குகிறது. இருப்பினும், மேயரை விரைவாக விடுவிக்க தேவையான வேண்டுகோள்கள் செய்யப்படும்” என்று ஓசெல் கூறினார். “பயங்கரவாத” குற்றச்சாட்டுகளின் பேரில் இமாமோக்லு கைது செய்யப்படவில்லை என்ற உண்மையால், ஒரு அறங்காவலரின் நியமனம் தடுக்கப்பட்டதாக ஓசெல் கூறினார்.
வளர்ந்து வரும் பாரிய இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் எர்டோகன் அரசாங்கத்துடன் சமரசம் செய்வதற்குமான அதன் முயற்சிகள், ஒரு சர்வாதிகார ஆட்சியைக் கட்டியெழுப்புவதற்குப் பின்னால் உள்ள சக்தியாக இருக்கும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி நோக்குநிலை கொண்டுள்ள அதே ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவை பிரதிநிதித்துவம் செய்யும் குடியரசு மக்கள் கட்சி, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க இயல்பாகவே திறனற்றது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.
இமாமோக்லு கைது செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் வெடித்த பாரிய போராட்டங்கள், லட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டதானது, எர்டோகன் அரசாங்கத்தை மட்டுமல்ல, குடியரசு மக்கள் கட்சியின் தலைமையையும் பயமுறுத்தியுள்ளது. இளைஞர்களையும் உழைக்கும் மக்களையும் வீதிகளுக்குத் தள்ளுவது வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் நெருக்கடி மட்டுமல்ல, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விருப்பமும் ஆகும். முதலாளித்துவ சமூக அமைப்பு மற்றும் முதலாளித்துவ ஆட்சியின் திவால்நிலை மற்றும் அதற்கு ஒரு புரட்சிகர மாற்றுக்கான தேடல் ஆகியவை குடியரசு மக்கள் கட்சி விரும்பாத கடைசி விஷயமும் ஆகும்.
குடியரசு மக்கள் கட்சிக்கு இடதுபுறம் வெகுதூரம் நகர்ந்துள்ள வெகுஜனங்களை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க, ஓசெல் தீவிரவாத வாய்வீச்சில் இறங்கியுள்ளபோதிலும், அதை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அவரது நடவடிக்கைகளில் ஒன்று, இஸ்தான்புல்லில் நடந்த சரச்சேன் பேரணியில் இருந்து, சனிக்கிழமை மாலை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 300,000 பேர் அல்லது குடியரசு மக்கள் கட்சியின்படி, ஒரு மில்லியன் பேர் கூடியிருந்த மக்களை, இமாமோக்லுவின் சாட்சியம் எடுக்கப்பட்ட Çağlayan நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதாக இருந்தது.
நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி கூடிய நூறாயிரக்கணக்கான மக்கள் இமாமோக்லுவை சிறைக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்கலாம், அதாவது நேரடியாக அரசை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், குடியரசு மக்கள் கட்சி இதைச் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தது.
கடந்த புதன்கிழமை, எர்டோகன் அரசாங்கத்தால் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை கட்டியெழுப்புவதில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கும் இமாமோக்லு உள்ளிட்ட தடுப்புக்காவல்களைத் தொடர்ந்து, இஸ்தான்புல் கவர்னரேட் விதித்த நான்கு நாள் “எதிர்ப்புத் தடையை” மீறி பரந்த மக்கள், குறிப்பாக மாணவர்கள், வீதிகளில் இறங்கினர். இவற்றைத் தொடர்ந்து பல நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. அங்காரா மற்றும் இஸ்மிரில் அறிவிக்கப்பட்ட எதிர்ப்புத் தடைகளும் காகிதத்தில் இருந்தன. இஸ்தான்புல்லில், கவர்னரேட் எதிர்ப்பு தடையை நான்கு நாட்களுக்கு நீட்டித்தது. ஆனால், கடந்த சனிக்கிழமை மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடப்பதை அதனால் தடுக்க முடியவில்லை. அப்போது, ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சரஷானே பேரணியில், மேடையில் இருந்த ஒரு மாணவர், பல்கலைக்கழக புறக்கணிப்புகளை திங்களன்று தொடங்கி ஒரு “பொது வேலைநிறுத்தத்தை, பொது எதிர்ப்பாக” மாற்றுவதற்கு அழைப்புவிடுத்தார். இது, அரசாங்க சார்பு தொழிற்சங்க கூட்டமைப்புகள் மட்டுமல்ல, டி.சி.எஸ்.கே போன்ற குடியரசு மக்கள் கட்சி சார்பு அமைப்புகளும் பொது வேலைநிறுத்தத்தை தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் நடவடிக்கையாக உள்ளது. சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைப்பதென்பது, தொழிலாளர்களைக் கட்டியெழுப்ப அவசியமான சாமானிய தொழிலாளர் குழுக்கள் மூலமாக, அவர்களை அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.
அமெரிக்காவில் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை கட்டியெழுப்பி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் எர்டோகனுக்கும் இடையில் மார்ச் 16 அன்று நடந்த ஒரு தொலைபேசி அழைப்புக்குப் பின்னர், இமாமோக்லுவின் தடுப்புக்காவலும் அதைத் தொடர்ந்து கைதும் நிகழ்ந்தன. மத்திய கிழக்கிற்கான ட்ரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் வெள்ளிக்கிழமை ஒரு நேர்காணலில், இந்த உரையாடலை “மகத்தானது” மற்றும் “மாற்றத்தக்கது” என்று விவரித்தார்.
ட்ரம்ப் நிர்வாகம், எர்டோகன் அரசாங்கத்தை உக்ரேனுக்கான அதன் திட்டங்களுக்கும் மற்றும் ஈரான் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலுமான அதன் கூட்டாளிகளுக்கு எதிரான அதன் ஆக்ரோஷத்திற்கும் முக்கியமானதாக பார்க்கிறது. இந்த சந்திப்பின் போது, துருக்கி மீதான CAATSA (தடைகள் சட்டத்தின் மூலம் அமெரிக்காவின் எதிரிகளை எதிர்கொள்வது) தடையாணைகளை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் F-35 போர் விமனத் திட்டத்தில் துருக்கி மீண்டும் நுழைவது குறித்த பிரச்சினையை எர்டோகன் எழுப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இமாமோக்லுவின் கைது குறித்து வாய்வீச்சுடன் விமர்சித்துள்ள ஐரோப்பிய சக்திகள், ட்ரம்பின் கீழ் அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அங்காரா உடனான உறவுகளை முக்கியமானதாக பார்க்கின்றன. எர்டோகனின் அரசாங்கம் “ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு” துருக்கி இன்றியமையாதது என்று அறிவித்துள்ளதுடன், ஐரோப்பா தலைமையிலான “விருப்பத்தின் கூட்டணியின்” பாகமாக துருக்கி உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்பக்கூடும் என்ற ஆலோசனைகளும் உள்ளன.
ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்கப்பட முடியாததாகும். இந்தப் போராட்டத்தின் சமூகத் தளம் தொழிலாள வர்க்கம் ஆகும். இது, அனைத்து சமூக செல்வத்தையும் உற்பத்தி செய்து போருக்கு விலை கொடுக்கிறது. குடியரசு மக்கள் கட்சி உட்பட முதலாளித்துவ ஸ்தாபக கட்சிகள் இந்தப் போராட்டத்திற்கு எதிராக நிற்கின்றன.
தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி பெற்று வரும் போராட்டத்தை போருக்கு எதிரான போராட்டத்துடன் ஐக்கியப்படுத்தும் ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதே முன்னோக்கிய பாதையாகும். இதன் அர்த்தம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் துருக்கிய பிரிவாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவதாகும்.