மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இஸ்ரேலின் வட மேற்குக் கரையில் இருக்கும் ஜெனின் மீது திங்கட்கிழமை குற்றவியல் தாக்குதல் தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, நகரின் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட அகதிகள் முகாமில் வசிக்கும் பல ஆயிரம் பேரை இராணுவம் அச்சுறுத்தியதாகவும், முகாம் குடியிருப்பாளர்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதால், அவர்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியதாகவும் பாலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் அதிதீவிர வலதுசாரி அரசாங்கத்தின் தாக்குதலால் நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 120 பேர் காயமடைந்துள்ளனர். இது பல ஆண்டுகளில், மேற்குக் கரை நகரத்தின் மீது இஸ்ரேல் நடாத்திய மிகப்பெரிய தாக்குதலாக உள்ளது.
ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) புல்டோசர்கள், மோசமான நாசகார செயல்களை மேற்கொண்டன. அவர்களின் நோக்கம் பல தசாப்தங்களாக இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்களில் இருந்து எதிர்த்துவரும் ஆயுதம் ஏந்திய குழுக்களை கைப்பற்றுவது, முகாமில் வசிப்பவர்களின் வாழ்க்கையை சகிக்க முடியாதளவுக்கு மாற்றுவது மற்றும் மேற்குக்கரை முழுவதும் பொதுமக்களை அச்சுறுத்தி பயமுறுத்துவது என்பதாக இருக்கிறது.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் போர் மற்றும் மனித உரிமைகள் மீதான சர்வதேச மரபுகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கைகளாக இருக்கின்றன. இந்த சட்டங்கள் பொதுமக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை சட்டவிரோதமாக்குகின்றன.
இஸ்ரேலிய இராணுவம், வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்கள், மருத்துவ வசதிகள் மற்றும் மசூதிகளை இடித்து தரைமட்டமாக்கியதுடன், அகதிகள் முகாமைச் சுற்றியுள்ள பெரும்பாலான தெருக்களை உழுது நாசப்படுத்தியுள்ளது. இப்போது பயன்படுத்த முடியாத சாலைகளின் ஓரங்களில் இடிபாடுகளின் குவியல்களை விட்டுவிட்டு, மனிதாபிமான அமைப்புகளை அணுகுவதை கடினமாக்கியுள்ளது. முகாமின் மீதமுள்ள குடியிருப்பாளர்களின் அடிப்படை கட்டமைப்பு, தண்ணீர், மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு என்பன பாழடைந்துள்ளன. இணையத்தள மற்றும் சமூக வலைத்தளங்கள் இல்லாததால் வெளியுலகத்துடனான தொடர்புகளுடன் இப்பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில், இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனிய போராளிகளை ஒடுக்குவதற்கு குறிபார்த்து சுட்டுக்கொல்லும் ஸ்னைப்பர்களுடன் மேலதிக படைகளை, குழிகள் தோண்டப்பட்ட கட்டிடங்களில் நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில், அதன் படையினர்கள் ஒரு மருத்துவ மையத்திற்கு அருகில் நேரடியாக சுட்டதில் மூன்று பேர்கள் காயமடைந்தனர். ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத், லயன்ஸ் டென், பாலஸ்தீன விடுதலை மக்கள் முன்னணி மற்றும் இஸ்ரேலினால் ''பயங்கரவாதிகள்'' என்று அழைக்கப்படும் பிற எதிர்ப்புக் குழுக்களின் உறுப்பினர்களை கைது செய்ய 1,000 க்கும் மேற்பட்ட படையினர்கள் இப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தினர். இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 120 'தேடப்படும்' பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலிய பாதுகாப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அரை சதுர கிலோமீட்டருக்கும் குறைவான பகுதியில் சுமார் 14,000 மக்கள் வசிக்கும் இந்த அகதிகள் முகாம், இஸ்ரேலின் மிருகத்தனமான ஆக்கிரமிப்பிற்கு, ஆயுதமேந்திய எதிர்ப்பின் மையமாக இருந்து வருகிறது. இது, இஸ்ரேலின் அண்டை அரபு நாடுகளிடையே வளர்ந்து வரும் கவலையையும் பதட்டத்தையும் தூண்டியுள்ளதுடன், இவர்கள் அனைவரையும் சமூக வெடிகுண்டு பீப்பாய்களுக்கு மேல் அமர வைத்துள்ளது.
ஜெனின் இராணுவ நடவடிக்கைக்கு கட்டளையிடும் ஒரு இஸ்ரேலிய இராணுவத் தளத்தில் பேசிய நெதன்யாகு, படையினர்களை பாராட்டி, தற்போதைய நடவடிக்கையின் முடிவை சமிக்ஞை செய்ததோடு, மேலும் தாக்குதல்கள் நடவடிக்கைக்கு உறுதியளித்தார். ‘’இந்த நேரத்தில், நாங்கள் பணியை முடிக்கிறோம், மேலும் ஜெனினில் எங்கள் விரிவான நடவடிக்கை ஒரு முறை அல்ல என்று என்னால் சொல்ல முடியும். தீவிரவாதத்தை குறைக்க தேவையான அளவு தாக்குதலை தொடர்வோம்’’ என்று அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலின் பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் போர்க்குற்றங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இது அவர்களின் கொள்கைகள் நெதன்யாகு மற்றும் அவரது பாசிச மந்திரிகளின் கொள்கைகளில் இருந்து சிறிதளவே வேறுபடுகின்றன என்பதைக் குறிக்கிறது.
ஜெனினில் நடவடிக்கை தீவிரமடைந்தபோது, மேற்குக் கரையின் தென் பகுதி நகரமான சாமுவாவைச் சேர்ந்த 20 வயது பாலஸ்தீனியர் ஹுசைன் கலைலா, டெல் அவிவ் குடியிருப்புப் பகுதியில் பாதசாரிகள் குழு மீது தனது காரை மோதித்தள்ளி, வீதியில் சென்றவர்களை கத்தியால் குத்தியதில் ஏழு பேர் காயமடைந்துடன், அதில் மூவர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். காஸாவைக் கட்டுப்படுத்தும் போராளிக் குழுவான ஹமாஸ், தனது உறுப்பினர்களில் கலைலாவும் ஒருவர் என்று பின்னர் அறிவித்தது.
இந்த சம்பவத்தில், ஒரு ஆயுதமேந்திய இஸ்ரேலியர் ஒருவர் கலைலாவை சுட்டுக் கொன்றார். இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் கலைலாவை சுட்டுக் கொன்றவரை புகழ்ந்து ''நிலைமையை கட்டுப்படுத்தியதாக'' திகிலுடன் வர்ணித்தனர். மேலும் இஸ்ரேலியர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு அனுமதிக்கும் சட்டவாக்க உந்துதலை இந்தத் தாக்குதல் உறுதிப்படுத்தியதாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் கூறினார்.
''யூதேயா மற்றும் சமாரியாவில் [மேற்குக் கரையின் விவிலியப் பெயர்] எங்கள் செயல்பாடு காரணமாக, தாக்குதல்களுக்கான உந்துதலும் சாத்தியமும் அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளோம்'' என்று இஸ்ரேலின் பொலிஸ் அதிகாரி யாகோவ் ஷப்தாய் செய்தியாளர்களிடம் கூறினார். யூத இஸ்ரேலியர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவத்தின் கொலைவெறித் தாக்குதல்கள் உண்மையில் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் நெதன்யாகு பதவியேற்றதில் இருந்து, இஸ்ரேல் மேற்குக் கரையில் தினசரி இராணுவத் தாக்குதல்களை நடத்தியதில் இதுவரை 190 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்னர். இஸ்ரேலிய இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ், பாலஸ்தீனிய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு எதிராக இனப்படுகொலை பாணி தாக்குதல்களை நடத்த, பாலஸ்தீனியர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள குடியேற்றவாசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், பாலஸ்தீனிய ஆணையத்தின் (PA) சார்பாக வசூலிக்கப்படும் வரிகள் மற்றும் வருவாயை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியதால், ஆணையம் தனது பணியாளர்களுக்கு பணம் செலுத்தவோ அல்லது மோசமடைந்து வரும் சமூக நிலைமைகளுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்கவோ முடியவில்லை.
ஏற்கனவே பெருமளவில் கீழ்த்தரமான நீதி அமைப்பைக் குறைத்து, சர்வாதிகார அதிகாரங்களைப் பெறுவதற்கான அவர்களின் திட்டங்களுக்கு பரவலான எதிர்ப்பை எதிர்கொண்ட நிலையில், நெதன்யாகுவும் அவரது பாசிச மேலாதிக்கக் கூட்டணியும் வேண்டுமென்றே போரைத் தூண்டி, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலின் அரேபிய குடிமக்கள் மற்றும் அண்டை நாடுகளை குறிவைத்து, எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரான் மற்றும் சிரியாவை குறிவைத்துள்ளனர்.
நெதன்யாகுவின் போர்த் திட்டங்கள், பைடன் நிர்வாகத்துடனான அவரது கருத்து வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், வாஷிங்டனால் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. டெல் அவிவ் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் (உக்ரேனில் ரஷ்யா செய்ததாக வாஷிங்டன் குற்றம் சாட்டுகிறது) எதனையும் பைடெனின் அனுமதியின்றி செய்திருக்க முடியாது.
ஜெனினில் இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கான அதன் நோக்கத்தை அமெரிக்காவிடம் தெரிவித்ததாகவும், அதன் திட்டங்களுக்கு எந்த எதிர்ப்பையும் சந்திக்கவில்லை என்றும் இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. ''ஹமாஸ், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பிற பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் அதன் மக்களை பாதுகாக்கும் உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம்'' என்று கடந்த திங்களன்று, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூறியது.
2026-27 ஆம் ஆண்டுக்குள் இஸ்ரேலின் ரேடாருக்கு அகப்படாத போர் விமானங்களின் ஆயுதக் களஞ்சியத்தை 50லிருந்து 75 ஆக உயர்த்தும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவிடமிருந்து 25 F-35 ஜெட் விமானங்களை வாங்குவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய நிறுவனங்களுடன் இணைந்து லொக்ஹீட் மார்ட்டின் மற்றும் பிராட் & விட்னி ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட விமானங்களுடன், இஸ்ரேலுக்கு அமெரிக்க இராணுவ உதவியின் மூலம் 3 பில்லியன் டாலர்களில் இவற்றை வாங்குவது, மத்திய கிழக்கில் உலகிலேயே அதிக விமானங்களை இயக்கும் ஒரே நாடாக இஸ்ரேலை மாற்றும்.
மேம்பட்ட போர் விமானமான F-35 இன் ரேடாருக்கு அகப்படாத தொழில்நுட்பமானது, பிராந்தியம் முழுவதும் தண்டனையின்றி இலக்குகளைத் தாக்குவதிலும், ஈரானின் ரஷ்ய தயாரிப்பான S-300 விமான எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பையும், மற்றும் S-400 அமைப்பையும் விஞ்சுவதில் மிகவும் திறமையானதாக ஆக்குகிறது.
இந்த அறிவிப்பு கடந்த ஜனவரியில் 25 F-15 EX போயிங் போர் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து கோரியது மற்றும் நான்கு போயிங் KC-46A வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்க நவம்பர் ஒப்பந்தம் ஆகிய இரண்டும் தெஹ்ரானுக்கு எதிராக டெல் அவிவின் திறன்களை மேம்படுத்துகிறது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலின் ஆயுதக் களஞ்சியத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஈரான் மற்றும் சிரியா மற்றும் லெபனானில் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான சாத்தியமான போருக்கான பரந்த அமெரிக்க ஏகாதிபத்திய தயாரிப்புகளின் ஒரு பகுதியாகும். ஈரானிய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு நெதன்யாகு ஏற்கனவே தனது F-35 ஜெட் விமானங்களைப் பயன்படுத்தியுள்ளதோடு, ஈரானிய அணுசக்தி இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்துவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பல ஈரானிய அணுசக்தி வல்லுனர்களைக் கொன்றதுடன், ஈரானுக்குள் உள்ள பல நிலைகளைத் தாக்கி நாசமாக்கியது. மற்றும் தெஹ்ரானுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் எதிராக ஒரு இரகசியப் போரை - வான்வழி மற்றும் கடல்வழி – நடத்தியுள்ள இஸ்ரேல், அமெரிக்கா உளவுத்துறை மற்றும் அதன் இராணுவ ஆதரவுடன், கிட்டத்தட்ட வாராந்திர தாக்குதல்களில் சிரியாவைத் தாக்கியது.
தற்போதைய சிஐஏ இயக்குநராகவும், முன்னாள் துணைத் தலைவராகவும் இருக்கும் வில்லியம் பேர்ன்ஸ், 2003ல் இருந்து ஈரானிடம் எந்த வித அணு ஆயுதத் திட்டம் உள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை பெரும் வல்லரசுகள், சர்வதேச அணுசக்தி ஆணையம் மற்றும் சிஐஏ ஆகிய அனைத்தும் ஒப்புக்கொள்வதுடன், அணுசக்தி விவகாரம் நீண்ட காலமாக புகைப் படலமாக இருந்து வருகிறது என்று தனது சுயசரிதையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
பைடென் நிர்வாகமானது, ஆரம்பத்தில் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பித்தல் மூலம், ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து ஈரானைப் பிரிப்பதற்கும், ஐரோப்பாவிற்கு கூடுதல் ஆற்றல் விநியோகங்களைத் திறப்பதற்கும் ஒரு வழிமுறையாகப் பயன்படுத்த எதிர்பார்த்தது. ஆனால், 2015 ஒப்பந்தத்தை எதிர்க்கும் ஈரானின் பழமைவாதப் பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் கீழ் தெஹ்ரான், ரஷ்யா-உக்ரேன் போர் மற்றும் ரஷ்யா மீதான மேற்குலகத்தின் தடைகளை சாதகமாகப் பயன்படுத்தி, சீனாவையும் மத்திய ஆசியாவையும், இந்தியாவுடன் ரஷ்யாவையும் ஐரோப்பாவுடன் இணைக்கும் போக்குவரத்து மையமாக ஈரானின் முக்கியத்துவத்தை வலியுறுத்த முயன்றது. வாஷிங்டனின் பொருளாதாரத்தை முடக்கிய பொருளாதாரத் தடைகளில் இருந்து ஓரளவு நிவாரணம் பெறுவதற்காக, வாஷிங்டனுடன் கொல்லைப்புற பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய அவர் பல போக்குவரத்துத் திட்டங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம், மத்திய கிழக்கு முழுவதும் செல்வாக்கிற்காக பல வருடங்கள் கடுமையான போட்டிகளைத் தொடர்ந்து, சமீப காலம் வரை அமெரிக்காவின் உறுதியான நட்பு நாடாக இருந்த சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையே சீனா ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. ஈரானின் ஒரு முக்கிய கூட்டாளியான, சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை தூக்கியெறிவதற்கு, இஸ்லாமிய பினாமிகளுக்கு நிதியுதவி மற்றும் ஆயுதம் வழங்கியதன் மூலம் ரியாத் முயன்றது. தற்போது அரபு லீக்கிற்கு மீண்டும் அது வருவதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மே மாதம், தெஹ்ரானும் மாஸ்கோவும் சூயஸ் கால்வாய்க்கு போட்டியாக வடக்கு-தெற்கு சர்வதேச போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்க 1.6 பில்லியன் டொலர் இரயில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. வெள்ளியன்று, ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், அடுத்த மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) முழு உறுப்பினராக ஈரான் அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவுகளை தெஹ்ரானின் நிலையை வலுப்படுத்துகிறது.