இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன ஊழியர்கள் வேட்டையாடப்படுவதை எதிர்த்திடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

விக்கிரமசிங்க அரசாங்கமும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் (இ.கா.கூ.) நிர்வாகமும் இணைந்து, அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்தை தனியார்மயமாக்குவதை எதிர்க்கின்ற மற்றும் தங்களின் வேலைகள், நிலைமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க போராடுகின்ற தொழிலாளர்களுக்கு எதிராக அடக்குமுறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டன.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன ஊழியர்கள் 8 டிசம்பர் 2022 அன்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இ.கா.கூ. நிர்வாகமானது கூட்டுத்தாபனத்தின் கொழும்பு தலைமை அலுவலகத்தில் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் உட்பட அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் தடை விதித்துள்ளதுடன் மதிய உணவு இடைவேளையின்போது கூட, அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறும் அனைத்து ஊழியர்களையும் கைரேகை பதிவு இயந்திரத்தில் கைரேகைகளை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்கள் தங்கள் சொந்த வேலைத் தளத்தில் கலந்துரையாடுவதற்கும் ஒழுங்கமைவதற்கும் உள்ள அடிப்படை உரிமை நிர்வாகத்தால் அபகரிக்கப்பட்டுள்ளதோடு இ.கா.கூ. தலைமை அலுவலகம் ஏறத்தாழ ஒரு சிறை முகாமாக மாற்றப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனம் தற்போது இலங்கை முழுவதும் உள்ள 154 இ.கா.கூ. கிளைகளில் 2,500 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளினால் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், காப்புறுதி பொது ஊழியர் சங்கத்தின் (கா.பொ.ஊ.ச.) பொதுச் செயலாளர் திவாகர அத்துகல மற்றும் தொழிற்சங்கத்தின் ஊடகச் செயலாளர் நயோமி ஹெட்டியாராச்சிகே ஆகியோர் ஆவர். இவர்கள் கூட்டுத்தாபனத்தை தனியார்மயமாக்குவதை எதிர்த்து 8 டிசம்பர் 2022 அன்றும் இந்த ஆண்டு மார்ச் 15 அன்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

நிர்வாகம் இந்த அதிகாரிகளுக்கு எதிராக, அவர்கள் 'தொழிற்சங்க விவகாரங்களுக்காக நிறுவனத்தின் மின்னஞ்சல்களைப் பயன்படுத்துகின்றனர்' என்று குற்றம் சாட்டி ஒரு 'ஒழுக்காற்று விசாரணையை' தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட எட்டு நாள் விசாரணையின் இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும், தொழிற்சங்க அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் வேலை இழக்க நேரிடும் என்றும் இ.கா.கூ. தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இ.கா.கூ. இல் சுமார் 15 தொழிற்சங்கங்கள் இயங்குகின்றன. இவை அனைத்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக முன்னர் நிறுவனத்தின் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தியுள்ளன. இ.கா.கூ. நிர்வாகம் இரண்டு தொழிற்சங்கத் தலைவர்களையும் வேட்டையாடுவதற்காக எடுத்த திடீர் முடிவானது ஏனைய தொழிலாளர்களை அச்சுறுத்துவதையும் தனியார்மயமாக்கலுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

இ.கா.கூ. நிர்வாகம், சந்தேகத்திற்கு இடமின்றி, அரசாங்க உத்தரவுகளைப் பின்பற்றி, கிட்டத்தட்ட 50 போராளி ஊழியர்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பியுள்ளது. அவர்கள், பெப்ரவரி 15 அன்று கொழும்பு தலைமை அலுவலகத்திற்குள், ஒரு புதிய பணவீக்கத்திற்கு பொருந்தாத ஒரு மூன்று ஆண்டு கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக ஒரு போராட்டத்தை நடத்திய பின்னர்,  சட்டவிரோதமாக 'நிறுவனத்திற்குள் ஒன்று கூடினர்' என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள முந்தைய ஒப்பந்தத்தின்படி, தொழிலாளர்களுக்கு முதல் ஆண்டில் 20 சதவீத சம்பள உயர்வும், ஒப்பந்தத்தின் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கு 10 சதவீத சம்பள உயர்வும் வழங்கப்பட வேண்டும்.

உத்தேச புதிய ஒப்பந்தத்தின்படி, முதல் வருடத்தில் சம்பள உயர்வு 6 சதவீதமாக இருக்கும், மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில் சம்பள உயர்வு பற்றி எந்த குறிப்பும் இல்லை. கடந்த மாதம் விணைத்திறன்கொண்ட உத்தியோகபூர்வ வருடாந்தர பணவீக்க விகிதம் 35.3 சதவீதத்தை எட்டியதன் மூலம் இலங்கையில் பணவீக்கம் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இ.கா.கூ. தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகள் மீதான பழிவாங்கலானது,  ஒட்டுமொத்த தனியார்மயமாக்கலுக்கும் பல்லாயிரக்கணக்கான தொழில்களை அழிப்பதற்குமான சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை அரசாங்கம் திணித்துவருவதை, பெருகிய முறையில் எதிர்த்துவரும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் மீதான அரச தாக்குதல்களை தீவிரப்படுத்துவதன் ஒரு பகுதியாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இ.கா.கூ. இல் வேட்டையாடலை எதிர்ப்பதுடன் காப்புறுதி நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களினதும் வேலைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் நிபந்தனையின்றி முன்நிற்கின்றது. அதே நேரத்தில், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்று அதுகல மற்றும் ஹெட்டியாராச்சிகே போன்ற தொழிற்சங்க அலுவலர்கள் உட்பட தொழிற்சங்கங்களால் பரப்பப்படும் மாயைகளை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கின்றது.

இந்தத் தாக்குதல்களை நடத்தும் அரசாங்கம் மற்றும் நிர்வாகத்திடம் முறையிடுவதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க முடியாது, மாறாக விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கு எதிரான ஒரு அரசியல் எதிர் தாக்குதலில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கொழும்பின் கொடூரமான திட்ட நிரலில் தனியார்மயமாக்கல் பிரதானமானதாகும். 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனுக்கு ஈடாக சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த உறுதியளித்துள்ள ஜனாதிபதி விக்கிரமசிங்க அனைத்து எதிர்ப்பையும் நசுக்க உறுதி பூண்டுள்ளார்.

தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்க ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் அத்தியாவசிய சேவைகள் சட்டம் போன்ற ஜனநாயக விரோத சட்டங்களுக்கு மேலதிகமாக, விக்கிரமசிங்க கூடிய விரைவில் ஒரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வர முயற்சிக்கிறார். அது செயல்படுத்தப்பட்டால், அவரது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளும் 'பயங்கரவாதம்' என்று முத்திரை குத்தப்பட்டு, கடுமையான சிறைத்தண்டனைகளுடன் இரக்கமின்றி ஒடுக்கப்படலாம்.

இ.கா.கூ. ஊழியர்கள் மீதான தற்போதைய தாக்குதலை இந்த சூழலில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும், மற்றும் இதை தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவினரும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

அத்துகல மற்றும் ஹெட்டியாராச்சிகே மீதான குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ளக் கோரியும், இ.கா.கூ. அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் மற்றும் அரச துறை நிறுவனங்களின் அனைத்து தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கோரியும் தொழிலாளர்கள் மறியல் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட தொழிற்துறை போராட்ட நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க வேண்டும்.

இ.கா.கூ. ஊழியர்களைத் தாக்கும் அதே வேளை, இ.கா.கூ. இன் இரண்டு பிரதான பிரிவுகளில் ஒன்றான பொதுக் காப்புறுதிப் பிரிவை நஷ்டம் அடைவதாகக் கூறி மூடுவதற்கு அரசாங்கம் தயாராகிறது. உடல்நலம், வணிகம், மோட்டார் வாகனம், வீட்டு உரிமையாளர் மற்றும் பயணக் காப்பீடுகள் ஆகியவற்றைக் கையாளும் இந்தப் பிரிவு மூடப்படுவதால் சுமார் 1,500 ஊழியர்களின் தொழில்கள் நேரடியாகப் பாதிக்கப்படும்.

1962 இல் அரச கூட்டுத்தாபனமாக ஸ்தாபிக்கப்பட்ட இ.கா.கூ., 1993 இல் திறைசேரி செயலாளரின் கீழ் ஒரு தனியுடைமை நிறுவனமாக மாற்றப்பட்டது. பின்னர் 2003 இல் தனியார் மயமாக்கப்பட்டது. காப்புறுதி தொழிற்சங்கங்கள், கூட்டுத்தாபனத்தை அரசமயமாக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வெற்றிகரமான சட்ட நடவடிக்கையை மேற்கொண்டன. அதையடுத்து 2009 இல் நிறுவனம் மீண்டும் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

தனியார்மயமாக்கலை முறியடிப்பது எப்படி?

அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்ட நிரலுக்கு எதிரான எந்தவொரு போராட்டமும், சமீபத்திய பெட்ரோலிய கூட்டுத்தாபன தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் நிரூபிக்கப்பட்டவாறு, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசுடனான ஒரு அரசியல் மோதலுக்கு கொண்டு வரும். விக்கிரமசிங்க அரசாங்கம், அதன் போக்கை மாற்றுமாறு கொடுக்கும் அழுத்தத்துக்கு அடிபணியவில்லை. அது, அதற்கு மாறாக, வேலைநிறுத்தத்தை முறியடிக்க ஆயிரக்கணக்கான பொலிஸ் மற்றும் இராணுவத் துருப்புக்களை அனுப்பியதுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட வேலைநிறுத்தம் செய்த 20 தொழிலாளர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பியது.

தொழிற்சங்கங்களும், முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது கட்சிகளும், அந்த முரண்பாடுகளால் முன்வைக்கப்பட்ட அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான பிரச்சினைகளை அல்லது கடந்த ஆண்டு இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்திய வெகுஜன இயக்கத்தின் படிப்பினைகளை தொழிலாள வர்க்கம் புரிந்து கொள்வதை தடுக்க முடிந்த அனைத்தையும் செய்துள்ளன. காப்புறுதி தொழிற்சங்கங்கள் உட்பட எந்த ஒரு தொழிற்சங்கமும், ஆர்ப்பாட்டங்கள் ஒருபுறம் இருக்க, பெட்ரோலியத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையையும் ஏற்பாடு செய்யவில்லை.

இந்த கூட்டுத்தாபனத்தின் தனியார் மயமாக்கலை உயர் நீதிமன்றத்தின் ஊடாக தடுத்து நிறுத்த முடியும் என்று தொழிற்சங்கங்களால் இப்போது பரப்பப்படும் மாயைகளால் இ.கா.கூ. தொழிலாளர்கள் ஏமாறக்கூடாது. இலங்கையின் பொருளாதாரம், நாட்டின் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், ஆளும் வர்க்கத்தால் ஒரு தற்காலிக அவகாசம் கூட வழங்க முடியாது.

அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ ஆட்சிக்கும் சவால் விடும் அரசியல் மூலோபாயத்தின் அடிப்படையில், முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான, தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தால் மட்டுமே அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்ட நிரலும் அதன் பரந்த சிக்கன நடவடிக்கைகளும் தோற்கடிக்கப்பட முடியும். இ.கா.கூ. ஊழியர்கள் மத்தியில் உள்ள ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் தொழிலாளர்கள் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிப்பதோடு நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பின் ஊடாக தங்கள் சர்வதேச சகோதர சகோதரிகளை அணுக வேண்டும்.

ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்த முன்னோக்கிற்கு இலங்கை நடவடிக்கைக் குழுக்கள் போராட வேண்டும். தீவு முழுவதிலும் உள்ள தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்த மாநாடு, விக்கிரமசிங்க ஆட்சிக்கு எதிராகப் போராடுவதற்கும், சோசலிசக் கொள்கைகளை அமுல்படுத்துகின்ற தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் தேவைகளையும் பாதுகாக்கின்ற தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான அடித்தளங்களை அமைக்கிறது.

இலங்கை அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்திடு! தொழில் மற்றும் ஊதியத்துக்காகப் போராட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு!

இலங்கை ஆளும் கட்சி கடந்த ஆண்டு வெகுஜன எழுச்சியை வெறுப்புக்குரியதாக காட்டுகிறது

Loading