இலங்கை அரசாங்கம் கொழும்பில் பாரிய பாதுகாப்பு நடவடிக்கையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வெள்ளியன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் திடீரென கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும், கொழும்பு கோட்டை, காலி முகத்திடல் மற்றும் தலைநகருக்குச் செல்லும் வீதிகள் உட்பட பல பகுதிகளிலும் பாரிய பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்தது.

ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் நீர்தாரை பீரங்கிகளுடன் கூடிய கலகத்தடுப்பு பொலிஸ் படையினர்களும் இந்தப் பகுதிகளில் நிறுத்தப்பட்டு வீதித் தடைகள் அமைக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்காக சுற்றுப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான  பொலிசார் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டனர். மேலும், கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் துருப்புக்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில், நகருக்கு வெளியே வாகனங்ளை நிறுத்தி பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பின்னால் இடதுபுறம் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, மற்றும் வலதுபுறம் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவும் இலங்கையின் 4 பெப்பிரவரி 2023 அன்று கொழும்பில் நடைபெற்ற 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை பார்வையிடுகின்றனர் [AP Photo/Eranga Jayawardena]

ஊடக அறிக்கைகளின்படி, 'புலனாய்வுத் தகவல்களுக்கு' பிரதிபலிக்கும் வகையில் இந்த பாரிய அணிதிரட்டல் முன்னெடுக்கப்பட்ட போதிலும், எகோனொமி நெக்ஸ்ட் இன் தகவலின்படி, கொழும்பு பல்கலைக்கழக உணவகம் ஒன்றுக்கு கிடைத்த வழக்கத்திற்கு மாறான பெரிய எண்ணிக்கையிலான மதிய உணவு கொள்வனவு ஆணை தொடர்பாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படிருந்தது.

'வெள்ளிக்கிழமையன்று உணவகத்திற்கு 1,500 மதிய உணவுப் பொதிகளுக்கான கொள்வனவு ஆணை கிடைத்திருப்பதாக புலனாய்வுப் பிரிவுகளுக்கு தகவல் கிடைத்துள்ளது... இது அரசாங்கக் கட்டிடங்களை நோக்கி பேரணியாகச் செல்வதற்கான பாரிய ஒன்றுகூடலுக்கானது என்று (தவறாக) விளக்கப்பட்டது' என்று ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின.

பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவு கொண்டாட்டத்திற்கு சுமார் 500 முதலாம் ஆண்டு மாணவர்கள் அழைக்கப்பட்டதாகவும், அவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்கள் அல்லது உடன்பிறந்தவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட இருந்ததாகவும் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கும் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், கடந்த ஆண்டு மே மாதம் தீ வைத்து எரிக்கப்பட்டதில் இருந்து விக்கிரமசிங்க அந்த இல்லத்தில் வசிக்கவில்லை.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) நிஹால் தல்தூவ, ஊடகத்திடம் கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பாரிய பாதுகாப்பு நடவடிக்கையானது 'அரசாங்கத்திற்கு எதிரான குழுவொன்று இடையூறுகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது' பற்றிய 'உளவுத்துறை அறிக்கைகளை' பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டது என்றும், 'மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும்' என்றும் வலியுறுத்தினார்.

‘’அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள், வார இறுதியில் நூற்றுக்கணக்கானோரை சேர்த்துக்கொண்டு, நகருக்குள் பேரணி சென்று முக்கிய அரசாங்க நிறுவனங்களை கையகப்படுத்தவும், அரசாங்கத்திற்கு எதிராக புதிய “போராட்டத்தை” நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக உயர் மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியதாக’’ டெயிலி மிரர் இணையம் மேற்கோள் காட்டியுள்ளது.

“இயற்கை அனர்த்தங்கள் அல்லது பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக திட்டமிடப்பட்ட ஒத்திகை உட்பட, பல காரணங்களுக்காக கொழும்பில் அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படும்’’ என்று பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் (ஊடகம்) கேணல் நளின் ஹேரத் சண்டே மோர்னிங் ஊடகத்திற்கு தெரிவித்தார்.

அரசாங்கம் திங்களன்று, அதன் சிறப்பு இராணுவ மற்றும் பொலிஸ் நடவடிக்கையை முடித்துக்கொண்ட போதிலும், அதன் ‘’வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும்’’ என பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்தூவ  அறிவித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைக்கும், 'இயற்கை பேரழிவுகள் அல்லது பயங்கரவாத தாக்குதல்களுக்கு' பதில் நடவடிக்கை எடுப்பதற்கும், அல்லது கொழும்பு பல்கலைக்கழகத்தில் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மதிய உணவு நேரத்தில் ஒன்றுகூடியதாக கூறப்படும் சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

மாறாக, அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் உட்பட எதிர்காலப் போராட்டங்களை நசுக்குவதற்காக, விக்கிரமசிங்க, பொலிஸ் மற்றும் இராணுவத்தை அதிகளவில் பயன்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையின் ஆளும் உயரடுக்கானது, விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக வளர்ச்சியடைந்து வரும் சமூக எதிர்ப்பு கடந்த ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றிய வெகுஜன எழுச்சியாக வளர்ச்சியடையும் என்ற பீதியில், மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கின்றது.

கடந்த செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, இலங்கை முழுவதும் வன்முறைப் போராட்டங்களின் நினைவு நாளான மே 9 அன்று வெகுஜனப் போராட்டங்கள் வெடித்தால் எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து அமைச்சரவை விவாதித்ததாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஏனைய அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்தது உட்பட அந்த எதிர்ப்புக்கள், காலி முகத்திடலில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராஜபக்ஷ சார்பு குண்டர்கள் நடத்திய தொடர்ச்சியான கொடூரமான தாக்குதல்களுக்கு எதிரான பதிலடியாகவே நடந்தன.

எதிர்கால வெகுஜனப் போராட்டங்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதை ஆராய்வதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைப்பது குறித்து அமைச்சரவை அமைச்சர்கள் கலந்துரையாடியதாக குணவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதுபற்றி உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் மேலும் விவரங்கள் எதையும் வழங்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

அதிகரித்துவரும் சமூகத் தாக்குதலால் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகள் அதிகரித்து வருவதையிட்டு அரசாங்கம் பதட்டத்துடன் இருந்தாலும், தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரள்வையும் கடும் தீவிரத்துடன் தடுப்பதற்கு செயற்படுவதால், அது அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தொழிற்சங்கங்களால் தொழிலாளர் எதிர்ப்பை நசுக்குவது பெருகிய முறையில் கடினமாக இருக்கும் சூழ்நிலையில், அரசாங்கம் தொழிலாளர் போராட்டங்களை நசுக்க பொலிஸ் மற்றும் இராணுவ அடக்குமுறையைப் பயன்படுத்த அதிகளவில் தயாராகி வருகிறது.

மில்லியன் கணக்கான இலங்கையர்களுக்கு வாழ்க்கை தாங்க முடியாததாகி வருகிறது. வறுமையில் வாழும் இலங்கையர்களின் சதவீதம் 2021 இல் 13 சதவீதத்திலிருந்து 2022 இல் 25 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது.

பொருட்களின் விலைகள் மற்றும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து, கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் பொதுமக்களின் வாங்கும் சக்தியைக் கடுமையாகச் சிதைத்து வருகிறது. ஆடை மற்றும் கட்டுமானத் தொழில்கள் மற்றும் சிறுதொழில் துறை உட்பட தனியார் துறையில் இலட்சக்கணக்கான வேலைகள் இழக்கப்பட்டுள்ளன.

உழைக்கும் மக்கள் மீதான நேரடி வரிகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண அதிகரிப்பு மற்றும் ஏனைய சீரழிப்புகள் உட்பட சர்வதேச நாணய நிதியம் ஆணையிடும் சிக்கன நடவடிக்கைகள், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவை மேலும் தீவிரப்படுத்துகின்றன.

இவற்றுக்கு மேலதிகமாக, அரச நிறுவனங்களை மறுசீரமைத்து தனியார்மயமாக்குவதன் மூலம் இலட்சக் கணக்கான வேலைகளை வெட்டித் தள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது. இதில் 39 கூட்டுத்தாபனங்கள், 218 கம்பனிகள் மற்றும் 173 அதிகார சபைகள் உட்பட 430 அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் நிதியமைச்சினால் நிறுவப்பட்ட தேசிய முகமையின் கீழ் மறுசீரமைக்கப்படுகின்றன அல்லது தனியார்மயமாக்கப்படுகின்றன.

கடந்த வார இறுதியில் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையானது, தவிர்க்க முடியாமல் வெடிக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க போராட்டங்களை சமாளிக்க பொலிஸ், இராணுவம் மற்றும் அடக்குமுறை அரச இயந்திரத்தின் ஏனைய பிரிவுகளை தயார்படுத்துவதில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.

இந்தத் தயாரிப்புகளுக்கு இணங்க, அரசாங்க துறையில் பிரதான பகுதிகளில் அத்தியாவசிய சேவை சட்டத்தை விதித்துள்ள விக்கிரமசிங்க அரசாங்கம், இந்தத் தொழில் துறைகளில் வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாளர்களால் எடுக்கப்படும் எந்த அரசியல் நடவடிக்கையையும் குற்றமாக்கியுள்ளது. இந்த சட்டங்கள் ஒவ்வொரு மாதமும் அசாதாரண அரசாங்க வர்த்தமானி மூலம் புதுப்பிக்கப்படுவதோடு பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தேசிய அளவில் பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த வார இறுதியில் இராணுவம் மற்றும் பொலிஸ் படைகள் பாரியளவில் நிலைநிறுத்தப்பட்டமை, அரசாங்கத்தின் சமூகத் தாக்குதல்களுக்கு எதிர்த்துப் போராட வேண்டுமெனில், தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்ற எச்சரிக்கையை விடுக்கின்றது. இதற்கு, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கிக்கொண்டு, ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான அரசியல் மற்றும் தொழில்துறை போராட்டத்தை அபிவிருத்தி செய்வது அவசியமாகும்.

Loading