இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கைப் பொதுச் சுகாதார சேவையானது வைத்தியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள், அத்தியவசிய மருந்துகள், உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறையால் பேரழிவுகரமான முடக்கத்துக்கு முகங்கொடுக்கின்றது. வாட்டு மூடல்கள், சத்திரசிகிச்சை ஒத்திவைப்புக்கள் மற்றும் அடிப்படை மருந்துகளின் பற்றாக்குறை ஆகியவற்றுடன் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்தால் சுமத்தப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளால் மோசமாக்கப்பட்ட ஊதியத்தை ஒத்த வரி விதிப்பு மற்றும் வானளாவ உயரும் பணவீக்கத்திற்கும் பதிலிறுப்பாக பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் மேலும் மேலும் இலங்கையை விட்டு வெளியேறுகின்றனர்.
இலங்கையில் உள்ள 3,700 மருத்துவ நிபுனர்களில் 1000 பேர் அண்மையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதாரத் துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்துக்கு தெரிவித்தார். வெளியேறுவதற்கான விண்ணப்பங்கள் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. வேலை வெட்டுகள் மற்றும் அரசாங்க செலவீனங்களை குறைப்பதற்கான கொடூரமான நகர்வில், விக்கிரமசிங்க அரசாங்கம் மருத்துவர்கள் உட்பட அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 65 இல் இருந்து 60 ஆகக் குறைத்துள்ளது. தற்போது வெளிநாட்டுப் பயிற்சி பெறும் இலங்கை மருத்துவர்கள் நாட்டில் மோசமடைகின்ற பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாடு திரும்ப அச்சப்படுகின்றனர்.
நாட்டின் தெற்கில் உள்ள எம்பிலப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் எந்தவொரு மயக்க மருந்து நிபுணர்களும் இல்லாததால் அவசர சிகிச்சை மற்றும் சத்திரசிகிச்சை செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனையின் இரு மயக்க மருந்து நிபுணர்களும் வெளியேறி தற்போது வெளிநாட்டில் பணிபுரிவதோடு ஒரு மருத்துவர் மேலதிக கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளார். ஏப்ரல் 16 அன்று, மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர், எம்பிலப்பிட்டிய மருத்துவமனையில் இருந்து நோயாளர்களை ஏற்றுக்கொள்ளுமாறு தெற்கில் உள்ள ஏனைய பிரதான மருத்துவமனைகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த மார்ச் மாதம், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இயங்கி வந்த சிறுவர் விடுதியானது, சிறுவர் வைத்திய நிபுணர்கள் நான்கு பேர் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியமையால் மூடப்பட்டுள்ளது. இதனால் ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்கள் மருத்துவமனையின் குறித்த பிரிவில் எந்தவொரு சிகிச்சைப் பயிற்சியையும் பெறமுடியாது உள்ளனர்.
வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மருத்துவ மனையில் உள்ள சத்திர சிகிச்சைப் பிரிவானது சத்திர சிகிச்சை நிபுணர் இல்லாததால் மூடப்பட்டுள்ளதோடு அதன் சிறுவர் விடுதியில் ஒரேயொரு வைத்திய நிபுனரே இருப்பதால் பிள்ளைகளின் நோயறிதலுக்கும் சிகிச்சை வழங்குவதற்கும் பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளது.
கண்டி பொது மருத்துவமனையில் 2022 முதல் பத்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் 21 சிரேஷ்ட மருத்துவர்கள வெளிநாடுகளில் வேலை செய்வதற்கு நாட்டை விட்டு வெளியேறியுள்ள அதேவேளை, பேராதனையில் உள்ள சிறிமா பண்டாரநாயக்க சிறுவர் மருத்துவமனையில் இருந்து அவசரப் பிரிவு மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் உட்சுரப்பியல் நிபுணர்களும் இடம்பெயர்ந்துள்ளனர்.
தனது அனைத்து மருந்துப் பொருட்களில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்யும் இலங்கையிடம் தேவையான 300 அத்தியாவசிய மருந்துகளில் 160 அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை எனவும் தற்போதுள்ள மருந்துகள் இரண்டு மற்றும் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே போதுமானது என்றும் பெப்ரவரி 13 அன்று ஏசியா நியுஸ் தெரிவித்துள்ளது
இந்தப் பற்றாக்குறையானது அறுவைச் சிகிச்சைகளை தாமதப்படுத்துவதோடு மாதக்கணக்காக, சில சந்தர்ப்பங்களில் ஆண்டுகளாக காத்திருக்கும் நோயார்களுடன் ஏற்கனவே இருக்கும் காத்திருப்பு பட்டியல்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. இது மேலதிக சுகாதார சிக்கல்கள் மற்றும் அகால மரணத்துக்கு இட்டுச்செல்கிறது.
பிரசவத்துக்கு பிறகு இரத்தப் போக்கை நிறுத்தும் மருந்துப்பொருட்களுக்கு பற்றாக்குறையும் அதே போன்று மயக்க மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் இன்சுலின், பரசிடமோல் கூட பற்றாக்குறை உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வெளிப்படுத்தியுள்ளது.
காலி மாவட்டத்தில் உள்ள கரப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிடி ஸ்கேன் இயந்திரங்கள் இரண்டும் இயங்காததால் அவற்றை பழுதுபார்க்க வேண்டியுள்ளது. அவற்றில் ஒன்று ஓராண்டுக்கு முன்பே வேலைசெய்யாது போனதோடு மற்றையது ஏப்ரல் மாதத்தில் இருந்து இயங்காமல் உள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் செய்யப்படும் அவசர ஸ்கேன் பரிசோதனைகளுக்காக நோயாளர்கள் பணம் செலுத்த வேண்டியுள்ளதாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அரச கட்டமைப்பில் உள்ள உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் ஏனைய மருத்துவப் பரிசோதனைகளை தனியார் துறையில் மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
பொதுச் சுகாதார சேவைகளின் அதிகரித்து வரும் இந்த முடக்கம், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கண்டியில் உள்ள ஒரு மருத்தவ தாதி விளக்கியதாவது:
“கொரோனா தொற்று நோய்க்கு முன்பு, நாம், ஒரு நாளைக்கு ஐந்து நோயாளிகளுக்கு மாத்திரமே இதயத்தில் இரத்த துணிக்கைகள் அடைப்பைத் தவிர்க்க வளியில் இருந்து குழாயை பதிப்பு செய்யும் சிகிச்சையை (stent treatment) மேற்கொண்டோம். இப்போது, இருபதுக்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கு இதைச் செய்ய வேண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் பின் விளைவாக இதய நோய்களின் அதிகரிப்பின் காரணத்தால் ஏற்பட்டதாக இது இருக்கலாம், ஆனால் எங்களிடம் இதற்குப் பொருத்தமான உபகரணங்கள் கிடையாது. இதன் அர்த்தம், நோயாளர்கள் இத்தகைய உபகரணங்களை வெளியில் இருந்து மிக உயரந்த விலையில் வாங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பதாகும்.
“எங்கள் பிரிவில் சுமார் இருபது செவிலியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் ஆறு பேர் தாங்க முடியாத வேலைச் சுமைகளால் உடல் பிடிப்பு (physiotherapy) சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாம் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போது பாதியளவு இறந்து விட்டதாக உணர்கிறோம், இப்போது எமது ஊதியங்களுக்கு கூட வரி சுமத்தப்படுகிறது. ஆனால் இதில் எதைப்பற்றியும் புகார் செய்வதற்கு எமக்கு யாரும் இல்லை. நான் சகல தொழிற்சங்கங்கள் மீதும் வெறுப்பில் உள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் ஒருவர் கூறுகையில், நோயாளர்களுக்கான இதய வால்வுகளின் கடுமையான பற்றாக்குறை உள்ளது. அவர்கள் வெளியில் இருந்து அந்தச் சாதனங்களை வாங்க முடியாமல் தேவையில்லாமல் மரணிக்கின்றனர்.
சுகாதார ஊழியர்கள் மற்றும் நோயாளர்களின் குடும்பங்கள் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையால் மிகவும் கடினமான நிலைமைகளை எதிர்கொள்வதாகவும் பல நோயாளர்கள் மீண்டும் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு வருவதாகவும் பேராதனை மருத்துவமனையின் மனநல மருத்துவர் ஒருவர் விளக்கினார். “இந்த மனநல நோயாளர்களால் உயர்ந்த விலை மருந்துகளை வாங்க முடியாது” என அவர் மேலும் கூறினார்.
மருத்துவமனையானது தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை வாங்கியதாக கண்டி மருத்துவமனை நிர்வாக ஊழியர் ஒருவர் தெரிவித்தார். “வைத்தியசாலை தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை வாங்குவதற்கு மில்லியன் ரூபாய்களை செலுத்துகின்ற அதே வேளை வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ் போன்றவற்றுக்கான பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றையும் வாங்கவேண்டியுள்ளது. இதன் அர்த்தம், மருத்துவமனையானது சிற்றுண்டி சாலை குத்தகை மற்றும் கடதாசி பெட்டிகளை விற்பதன் மூலம் பணத்தை தேட முயற்சிக்க வேண்டியுள்ளது,” என அவர் தெரிவித்தார்.
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலான கடுமையான வீழ்ச்சியானது உயர்ந்த வரி, பணவீக்கம் மற்றும் கொடுப்பனவு வெட்டுகள் மற்றும் மேலதிக நேர வேலை வெட்டுக்களாலும் ஏற்கனவே கடுமையான சுமைகளில் தாங்கும் மீதமுள்ள தொழிலாளர்களுக்கு பாரிய வேலைச் சுமைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
இலங்கையின் பொது சுகாதார அமைப்பு ஒரு காலத்தில் இதர தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு 'மாதிரி' என்று புகழப்பட்டது, ஆனால் தற்போதைய முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு முன்னரே, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 1.5 சதவிகிதம் மட்டுமே சுகாதார செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலையில், அது கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. 'திறந்த சந்தைப் பொருளாதாரச் சீர்திருத்தம்' மற்றும் சுகாதாரத் துறையில் தனியார் முதலீடும் தனியாருக்குச் சொந்தமான மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார நிறுவனங்கள் காளான்களாக உருவாகுவதற்கு வழி ஏற்படுத்தியுள்ளன.
நாடு முழுவதிலும் உயர்ந்த பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையும் அதிகரிக்கின்ற சூழ்நிலையிலேயே இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறையின் நெருக்கடி அதிகரித்து வருகின்றது. உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வின் படி, 32 சதவீமான இலங்கை குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்மை மற்றும் கடுமையான பட்டினிக்கு முகங்கொடுக்கிறார்கள். வறுமை 2019ல் 13.1 சதவீதமாக இருந்து 2022இல் 25.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் அர்த்தம் மில்லியன் கணக்கானவர்களுக்கு போதுமான ஊட்டச் சத்து இல்லை என்பதாகும். இது ஒட்டுமொத்த பொதுச் சுகாதாரத்தையும் மோசமாக்குகின்றது.
பொதுச் சுகாதார முறைமையின் சீரழிவு பற்றி சுகாதாரத் துறை தொழிற்சங்க அதிகாரிகள் அறிக்கைகளை வெளியிடுகின்றனர், ஆனால் இந்த கொடூர சமூத் தாக்குதலுக்கு எதிராகப் போராட தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்குப் பதிலாக அவர்கள் இதற்குப் பொறுப்பான அதே அரசாங்கத்திடம் முறையிடுகின்றனர்.
மார்ச் 3 அன்று, சுகாதார தொழிலறிஞர்கள் சங்கத் தலைவர் ரவி குமுதேஷ், “அனைத்துச் சுகாதாரத் தொழிலாளர்களும் ஏகமனதாக வேலை நிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கின்றனர், ஆனால் இந்த நேரத்தில் அதைச் செய்ய முடியாது எனக் கூறி நாம் அவர்களை அடக்கிவிட்டோம்” எனப் பகிரங்கமாக அறிவித்தார்.
மூன்று வாரங்களுக்குப் பிறகு, மார்ச் 24 அன்று, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட தொழிலறிஞர்கள் தொழிற்சங்க முன்ணனியானது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அதில் ஊதியத்தை ஒத்த வரியில் ”சலுகை” வேண்டும் என பணிவுடன் கேட்டுள்ள அவர்கள், மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துப்படும் எந்தவொரு ஏனைய கடுமையான சமூகத் தாக்குதல்களையும் எதிர்க்கவில்லை.
உண்மையில், அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத் தலைவர் சமன் ரத்னபிரிய, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கான ஒரு பகிரங்க ஆதரவாளராக ஆகியுள்ளார். பெப்ரவரி 28 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், ”வேலை நிறுத்தங்கள் நாட்டின் ஸ்திரமின்மைக்கு வழிவகுப்பதோடு அமைதியின்மையை உருவாக்குகின்றன. அத்தகைய ஒரு நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் வழங்கப்படமாட்டாது” என அறிவித்தார்.
உலகப் பொருளாதார நெருக்கடி ஆழமடைகையில், ஒவ்வொரு அரசாங்கமும் பொதுச் சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய பிரதான சமூக சேவைகள் மீது பாரிய தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகின்றன. தமது வேலைகள், ஊதியங்கள் மற்றும் சுகாதார சேவைகளைப் பாதுகாக்க முன்வந்துள்ள சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் வரக்கத்தின் ஏனைய பகுதியினரின் வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் வெடிக்க இது வழிவகுத்துள்ளது.
இந்த உலக இயக்கத்தின் ஒரு பாகமாக, இலங்கைச் சுகாதார ஊழியர்கள், விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் அதன் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராக, அரசியல் மற்றும் தொழிற்துறை நடவடிக்கையில் இறங்கி, தமது சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட வேண்டும்.
பில்லியன் கணக்கான ரூபாய்கள் பொதுச் சுகாதார துறையை விரிவாக்கவும் அபிவிருத்தி செய்யவும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு உடனடியாக தேவைப்படும் ஏனைய சேவைகளுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அனைத்து பெரும் நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் பாரிய பொருளாதார மையங்களை தேசியமாக்குதல், அனைத்து வெளிநாட்டு கடன்களையும் தள்ளுபடி செய்தல், பில்லியனர்களின் செல்வத்தை கைப்பற்றுதல், சமூகச் சொத்துக்களை ஜனநாயகப் பொதுக் கட்டுப்பாட்டில் வைத்தல் போன்ற சோசலிசக் கொள்கைகளுக்கான ஒரு பொதுவான போராட்டத்தின் பாகமாக மட்டுமே, இந்த வளங்களை விநியோகிக்க முடியும்.
இதனால் தான், சோசலிச சமத்துவக் கட்சி, ஒவ்வொரு வேலைத்தளங்கள் மற்றும் தொழிலாள-வர்க்க அயற்புறங்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மத்தியிலும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து பிரிந்து, சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கின்றது. அந்த நடவடிக்கை குழுக்கள் விக்கிரமசிங்க ஆட்சியை தோற்கடிக்கவும் சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்குமான போராட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, சோசலிசத்துக்கும் ஜனநாயகத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டுக்கான அடித்தளத்தை அமைக்கும்.
மேலும் படிக்க
- இலங்கை பாராளுமன்றம் சர்வதேச நாணய நிதியத்தின் மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை அங்கீகரிக்கின்றது
- ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! இலங்கை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கியப்பட்ட போராட்டத்தை கட்டியெழுப்ப போராடு!
- அரசாங்கம் நெருக்கடியை மறைக்க முயற்சிக்கின்ற போதிலும் இலங்கையில் கோவிட் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன