அரசாங்கம் நெருக்கடியை மறைக்க முயற்சிக்கின்ற போதிலும் இலங்கையில் கோவிட் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஏப்ரல் 20 அன்று, இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நீர்வேலி கிராமத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஒருவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 

COVID-19 பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் இலங்கையில் மருத்துவமனை ஸ்ட்ரெச்சர்களில் வைக்கப்பட்டுள்ளன [Photo: Facebook]

யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்குத் திசையில், 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, அங்கு அவரைப் பரிசோதித்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  இரு நோயாளிகளும் வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 16 ஆம் திகதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக எச்சரித்தார். “இன்று வரை, ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று சமூகத்தில் பரவாமல் தடுப்பதற்காக, முக்கஃ கவசத்தை  அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் நெரிசலான இடங்களை தவிர்க்க வேண்டும்,'' என்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மருத்துவமனை நிர்வாகம் கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியபோது, அரசாங்க அதிகாரிகள் தலையிட்டு, புதிய கொவிட் -19 பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திணிப்பதை எதிர்த்தனர்.

சுகாதார அமைச்சின் அதிகாரிகள் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்துடன் நிலைமை தொடர்பில் கலந்துரையாடினர். பின்னர், கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் அல்லது அவர்களின் அனுமதியின்றி தகவல்களை பகிரங்கமாக வெளியிட வேண்டாம் என்று அவர்கள் வடக்கு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் வைத்தியர் ஜமுனானந்தாவை தொடர்பு கொண்டு, அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் மற்றும் அரசாங்க சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள் குறித்து கேட்டபோது, “கொரோனா வைரஸ் தொடர்பான எந்த தகவலையும் என்னால் வழங்க முடியாது. அதற்கு அனுமதி இல்லை” என்று தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்ட, கோவிட் -19 தொற்றுநோய் பற்றிய அறிக்கைகளின்படி, கடந்த வாரம் (ஏப்ரல் 17-24) இலங்கையில் மூன்று பேர், இந்த நோய்தொற்றுக் காரணமாக இறந்துள்ளதோடு, பரிசோதனையின்போது 32 பேருக்கு தொற்றுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்தத் தரவுகள், எந்த மாவட்டம் அல்லது மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில், சமீபத்திய கொரோனா வைரஸ் இறப்புகள் மற்றும் கடுமையான நோயாளர்களின் அதிகரிப்பு என்பன, கோவிட்-19 தொற்றுநோய் ஒரு சாதாரண காய்ச்சலைப் போன்றது என்று அரசாங்கங்களின் பொய்க் கூற்றுகளை மறுக்கின்றன.

இலங்கையின் உத்தியோகபூர்வ கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை இப்போது 16,800 ஐத் தாண்டியுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை ஒரு தீவிரமான குறைத்து மதிப்பிடலாக இருக்கலாம், ஏனெனில் நீண்ட காலமாக தொற்று பரிசோதனை மற்றும் தடமறிதல் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

விக்கிரமசிங்க அரசாங்கம், உலகெங்கிலும் உள்ள அதன் சகாக்களைப் போலவே, தொற்றுநோயைக் குறை மதிப்பீடு செய்து, 'வைரஸுடன் வாழ்வது' சாத்தியம் என்று பொய்யாகக் கூறி, 'அதை இஷ்ட்டப்படி விடுதல்' கொள்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி விக்கிரமசிங்கவும், தனது முன்னோடியான கோட்டாபய இராஜபக்ஷவைப் போலவே, மனித உயிர்களின் இழப்பின் மீது பெருநிறுவன இலாபங்களை வைக்கும் குற்றவியல் கொள்கையைப் பேணி வருகின்றார்.

2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கொரோனா வைரஸ் உருவானபோது, இராஜபக்ஷ அரசாங்கம் இலங்கையில் அதன் தாக்கத்தை புறக்கணித்து, இந்த நாடு தானாகவே நிலைமையை சமாளிக்க முடியும் என்று கூறியது.

பெருகிவந்த நோய்த்தொற்றுகள் மற்றும் முறையான கோவிட்-எதிர்ப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மத்தியில், மார்ச் 2020 இன் பிற்பகுதியில் நாட்டைப் முடக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இருப்பினும், பெருவணிகர்கள் மற்றும் சர்வதேச நிதி மூலதன உடமையாளர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்குப் பின்னர், அது பொருளாதாரத்தை மீண்டும் திறக்கத் தொடங்கியது.  

கொரோனா வைரஸ் தொற்றுகளின் புதிய பெருக்கங்களை அரசாங்கம் புறக்கணித்ததோடு, பொருத்தமான சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்ற, சுயாதீன சுகாதார நிபுணர்களின் கோரிக்கைகளையும் அது நிராகரித்தது. இதன் விளைவாக, ஆகஸ்ட் 2021 இல், கோவிட்-19 இன் டெல்டா திரிபு ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறிக்கத் தொடங்கியதுடன், பாழடைந்த சுகாதார சேவையை மூழ்கடிக்கத் தொடங்கியது. இதனால் மிகவும் வரையறுக்கப்பட்ட வகையில் ஆறு வார முடக்குதலை அறிமுகப்படுத்த அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டது.

2021 இன் பிற்பகுதியில் இருந்து, அனைத்து கோவிட் பாதுகாப்பு கட்டுப்பாடுகளும் அடுத்தடுத்த அரசாங்கங்களால் கைவிடப்பட்டன. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட பெரும்பாலான மக்கள் முகமூடிகளை அணிவதில்லை.

காய்ச்சல், இருமல் மற்றும் தடிமன் உள்ளவர்கள் முகமூடியின்றி நடமாடுகிறார்கள்.  அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றால், அவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்படுவதில்லை. ஆனால் பொதுவான நோய்களுக்கான சாதாரண சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது.

முதியவர்கள், வீட்டில் இறக்கும் போது, இறப்புக்கான மருத்துவக் காரணம் கண்டறியப்பட முயற்சிக்கப்படுவதில்லை. ஆனால், அது சாதாரண மரணமாகவே பார்க்கப்படுகிறது.

மாணவர்கள், பாடசாலையில் தொடர்ச்சியாக முகக் கவசங்களை அணிவதில்லை, இதனால் அவர்கள் தங்களின் பெற்றோருக்கு  கொடிய வைரஸை கடத்தி, அவர்கள் எல்லோரும் பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கிறது.

மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகள் போன்ற கொண்டாட்டங்கள், அத்தோடு மரணவீடு போன்ற நிகழ்வுகள் என்பன, முகக் கவசங்கள் அணிதல் மற்றும் ஏனைய சுகாதார நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் இன்றி நடத்தப்படுகின்றன. சந்தைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் ஆகியன கோவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாமல் இயங்குகின்றன. அதேநேரத்தில், சுகாதார அதிகாரிகள் எந்தவொரு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அல்லது, பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான கல்வியறிவையும் மக்களுக்கு வழங்கவதில்லை.

இந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள இலங்கை ஆளும் உயரடுக்கும்   மற்றும் அதன் அரசாங்கங்களும் பொது சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதனையும் எடுக்கத் தவறிவிட்டன. உண்மையில், தொடர்ச்சியான வரவுசெலவு திட்ட   வெட்டுக்களுக்கு உட்பட்டு வருவதால், நாட்டில் பொது சுகாதார சேவைகள் மேலும் மோசமடைந்துள்ளன. பாதுகாப்பு மற்றும் பொலிஸ் படைக்கு ஒதுக்கப்பட்ட 539 பில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில், சுகாதாரத் துறைக்கான இந்த ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீடு வெறும் 322 பில்லியன் ரூபாய்கள் (தோராயமாக $1 பில்லியன்) மட்டுமே ஆகும்.

இலங்கையின் தற்போதைய வெளிநாட்டுக் கடன் நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கான, விக்கிரமசிங்கவின் மிருகத்தனமான நடவடிக்கைகள் என்பன பொது சுகாதார அமைப்பை ஒரு பேரழிவு நெருக்கடிக்கு இட்டுச் செல்கின்றன.

பெப்ரவரியில், அனைத்து மருத்துவப் பயிற்சியாளர்களுக்கான உச்ச அமைப்பான, இலங்கை மருத்துவ சபை (SLMA) நாட்டின் சுகாதாரத் துறையானது 'ஒட்டுமொத்த சிதைவை' நோக்கிச் செல்கிறது என்று எச்சரித்துள்ளது. 'மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் பற்றாக்குறை காரணமாக' இலங்கையின் சுகாதாரத் துறை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக SLMA தலைவர் டாக்டர் வின்யா ஆரியரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இலங்கையின் உழைக்கும் மக்கள் இப்போது புதிய, இன்னும் அதிகமாக தொற்றக்கூடிய, கோவிட்-19 வகைகளின் திரிபுகளின் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். வேகமாகப் பெருகும், XBB.1.16 என பெயரிடப்பட்ட ஓமிக்ரான் வைரஸின் பரம்பரையானது, ஏனைய ஓமிக்ரான் துணை வகைகளை விட, மிகவும் தொற்றும் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழிக்கும் திறன் கொண்டது. அது இப்போது, அண்டை நாடான இந்தியா உட்பட, மேலும் 33 நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவின் தீவிர வலதுசாரி நரேந்திர மோடி அரசாங்கம் தொற்றுநோயை 'வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டதாக' கூறினாலும், கடந்த வாரம் புதிய கொரோனா வைரஸ் நோயாளர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையானது, தினசரி 10,000யும் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading