மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உச்ச தேர்தல் ஆணையத்தின் (YSK) கூற்றுப்படி, துருக்கியில் ஞாயிறு அன்று நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் அவரது போட்டியாளரான கெமால் கிலிக்டாரோக்லு பெற்ற 44.8 சதவீத வாக்குகளை விட, 49.5 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னேறியுள்ளார். 88.8 சதவீதம் பதிவாகிய வாக்குகள், பல தசாப்தங்களில் மிக அதிகமானதாகும்.
துருக்கிக்கு வடக்கே சில நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் தீவிரப் போருக்கு மத்தியில் நடந்த இந்த தேர்தல்கள், நேட்டோ தலைநகரங்கள், மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டன. முதல் சுற்றில் கிலிக்டாரோக்லுவின் வெற்றியை எதிர்பார்த்து, பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தவறாகக் கணித்த முடிவுக்கு, நிதி மூலதனம் எதிர்மறையாகப் பதிலளித்தது. Borsa இஸ்தான்புல்லின் BIST 100 குறியீடு (BIST என்பது துருக்கியின் ஒரே பங்கு பரிமாற்ற அமைப்பாகும்) கிட்டத்தட்ட 7 சதவீதம் குறைந்துள்ளது. வங்கிக் குறியீடும் 9.5 சதவீதம் சரிந்தது.
எர்டோகனின் இஸ்லாமிய நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி (AKP) பாராளுமன்றத் தேர்தலில் 7 சதவீதம் கடும் பின்னடைவைச் சந்தித்த போதிலும், 35 சதவீத வாக்குகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. AKP தலைமையிலான மக்கள் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டது. AKP ஐத் தவிர, மக்கள் கூட்டணியில் இருக்கும் பாசிச தேசியவாத இயக்கக் கட்சி 10 சதவீதமும், (MHP), இஸ்லாமிய-தேசியவாத புதிய நலன்புரிக் கட்சி 2.8 சதவீதமும் (YRP) மற்றும் இஸ்லாமிய-பாசிச கிரேட் யூனிட்டி கட்சி 1 சதவீதமும் (BBP) குர்திஷ் இஸ்லாமிய அமைப்பான Hüda Par இன் வெளிப்புற ஆதரவுடன் வாக்குகளைப் பெற்றுள்ளன.
பாரிய வாழ்க்கைச் செலவு நெருக்கடி, COVID-19 தொற்றுநோய்க்கு எர்டோகனின் கொடிய பிரதிபலிப்பு, மற்றும் பல்லாயிரக்கணக்கான தடுக்கக்கூடிய இறப்புக்களை ஏற்படுத்திய பிப்ரவரி 6 நிலநடுக்க பேரழிவு ஆகியவற்றிற்கு மத்தியிலும், தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் வறுமை இருந்தபோதிலும் எர்டோகன் தேர்தலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
இது, குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) மற்றும் போலி-இடது கட்சிகளால் ஆதரிக்கப்படும் கிலிக்டரோக்லுவின் குடியரசுக் மக்கள் கட்சி (CHP) மற்றும் அதன் தீவிர வலதுசாரி கூட்டணிக் கட்சியான நல்ல கட்சி (Good Party) ஆகியவற்றின் தலைமையிலான தேசக் கூட்டணியின் திவால் நிலையை அம்பலப்படுத்துகிறது. எர்டோகனின் அரசியல் குற்றங்கள் அனைத்திற்கும் CHP மற்றும் அதன் தேசக் கூட்டணி முழுமையாக உடந்தையாக இருந்தன. தொழிலாள வர்க்கத்தின் பெருகிவரும் கோபம் மற்றும் எதிர்ப்பின் மத்தியிலும் அதே கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இஸ்லாமிய மகிழ்ச்சிக் கட்சி, வலதுசாரி எதிர்காலக் கட்சி மற்றும் DEVA கட்சி ஆகியவைகளுடன் இணைந்து CHP முன்னாள் AKP மந்திரிகளால் வழிநடத்தப்படுகிறது. ஆனால், அவர்கள் CHP பட்டியலில் சட்டமன்றத் தேர்தலில் நின்று 25 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளனர். நல்ல கட்சி 9.7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சியை (HDP) முடக்கும் எர்டோகன் அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான அச்சுறுத்தல் காரணமாக, பசுமை இடது கட்சி என்ற பெயரில் HDP தேர்தலில் போட்டியிட்டது. இக்கட்சியின் வாக்குகள், 3 சதவீதம் சரிந்து 8.8 சதவீதமாக இருக்கிறது.
உக்ரேனில் நேட்டோவின் போருக்கு எதிரான பரவலான எதிர்ப்புக்கள் இருக்கும் துருக்கியில், எர்டோகன் நேட்டோவின் கூட்டாளியாக இருந்தாலும் கூட, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்த உணர்வுகளை பொய்யான 'ஏகாதிபத்திய எதிர்ப்பு' வாய்வீச்சுடன் அவரால் சுரண்டிக்கொள்ள முடிந்தது. தேர்தலுக்கு முந்தைய நாள், ''எர்டோகனை வீழ்த்த வேண்டும் என்று பைடன் உத்தரவிட்டார். நாளை, பைடனுக்கு கருத்துக்கணிப்பு பதில் அளிக்கும்” என்று எர்டோகன் கூறினார்.
குறிப்பாக கிலிக்டரோக்லுவின் தேசக் கூட்டணி வாஷிங்டன் மற்றும் நேட்டோவை நோக்கி தனது வெளிப்படையான நோக்குநிலையை அறிவித்தது. இந்தக் கூட்டணி, எர்டோகனுக்கு 'மாற்று' அல்ல, மாறாக AKP ஆட்சிக்கு வலதுசாரி போட்டியாக இருக்கிறது.
வலதுபுறத்தில் இருந்து எர்டோகனை எதிர்ப்பதன் மூலமும், அகதிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்துவதன் மூலமும், மூன்றாவது ஜனாதிபதி வேட்பாளரான சினான் ஓகானையும், பாராளுமன்றத் தேர்தலில் 2.25 சதவீதத்தைப் பெற்ற அவரது வெற்றிக் கட்சியையும் வலுப்படுத்த கிலிக்டாரோக்லு உதவினார்.
குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் போலி-இடது கூட்டாளிகளான துருக்கியின் ஸ்ராலினிச தொழிலாளர் கட்சி (TİP) போன்றவை கிலிக்டாரோக்லுவின் இனவெறி பிரச்சாரத்திற்கு உடந்தையாக இருந்து, அமைதியாக இருந்தன. ஆயினும்கூட, ஒரு கட்சியாக அதன் முதல் நாடாளுமன்றத் தேர்தலில், TİP 1.73 சதவீத வாக்குகளைப் பெற்றது (சுமார் 930,000 வாக்குகள்). இது நான்கு பிரதிநிதிகளுடன் பாராளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளது.
அதிதீவிர வலதுசாரியும் அகதிகளுக்கு எதிரான ஒரு தீவிரவாதியுமான சினான் ஓகான், எர்டோகன் மற்றும் கிலிக்டரோக்லு ஆகிய இருவருக்கும் எதிரான எதிர்வினை வாக்குகளைப் பெற்றதாகத் தோன்றுகிறது. இவர், கருத்துக் கணிப்புகளையும் மீறி 5.2 சதவீத வாக்குகளைப் பெற்று, தேர்தலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். பாலியல் முறைகேட்டைத் தொடர்ந்து தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு விலகிய ஒரு வேட்பாளரான முஹர்ரெம் இன்ஸ் 0.44 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஞாயிறன்று மாலையில், வாக்கெடுப்புகள் தொடங்கிய பிறகு, எர்டோகன் முன்னிலையில் இருப்பதைக் காட்டுவதற்கு வாக்குப்பதிவு விகிதங்கள் கையாளப்பட்டதாகவும், CHP இன் சொந்தத் தரவுகளின்படி, கிலிக்டரோக்லு முன்னிலை வகிப்பதாகவும் தேசக் கூட்டணி கூறியது. கிலிக்டரோக்லு தெளிவாக வாக்கெடுப்பில் முன்னிலையில் இருந்த நிலையில், எர்டோகனின் பிரச்சாரம் பலமுறை அதனை எதிர்த்ததாகவும் அவர்கள் கூறினர்.
'அவர்கள் ஆட்சேபனை மறுப்புக்கு பின் மறுப்புடன் தேர்தல் பொறிமுறையை தடுக்கிறார்கள். தொடர்ந்து மறுப்புடன் 783 வாக்குப் பெட்டிகள் உள்ளன. வாக்குப்பெட்டிகள் ஆறு முறை, 11 முறை ஆட்சேபிக்கப்பட்டுள்ளன, நீங்கள் துருக்கியின் விருப்பத்தை தடுத்துள்ளீர்கள். ஆட்சேபனையுடன் அதை நிறுத்த முடியாது. இதை ஒரு பொருட்டாக மாற்ற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று கிலிக்டரோக்லு கூறினார்.
ஞாயிறு, நள்ளிரவுக்குப் பிறகு, அங்காராவில் உள்ள AKP தலைமையகம் முன் எர்டோகன் தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றினார். 'இறுதி முடிவுகள் இன்னும் வரவில்லை என்றாலும், நாங்கள் தெளிவான முன்னிலையில் இருக்கிறோம்... தேர்தலில் எங்களின் நெருங்கிய போட்டியாளருக்கு ஏற்கனவே சுமார் 2.6 மில்லியன் வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளோம். நமது தேசம் இரண்டாவது சுற்றுத் தேர்தலுக்குச் சாதகமாகத் தெரிவு செய்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வோம்' என்று கூறினார்,
CHP தலைமையகத்தில், கிலிக்டரோக்லு கூறுகையில், “எர்டோகனின் அனைத்து அவதூறுகளும், அவமதிப்புகளும் இருந்தபோதிலும் அவர் எதிர்பார்த்த பலனைப் பெறவில்லை. எவரும் ஒரு பொருட்டல்ல, ஆசைப்பட வேண்டாம்... நம் தேசம் இரண்டாவது சுற்று என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்கிறோம். இந்த தேர்தல் இரண்டாம் சுற்றில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்றார்.
அதிகாலையில், ஓகன் இரண்டாவது சுற்று தேர்தல்களில் யாரை ஆதரிக்கலாம் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். இரண்டாவது சுற்றில் அவர் ஆதரிக்கும் எந்தவொரு வேட்பாளரிடமும் அவர் கோரும் நிபந்தனைகளில் ஒன்று, “பயங்கரவாத குழுக்களிடமிருந்து தங்களைத் தூர விலக்காத அரசியல் கட்சிகளிலிருந்து அவர் விலகி இருக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்தே, நான் HDP மற்றும் துருக்கி அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அரசியல் கட்சியான ஹுடா பர் (Hüda Par) ஆகியவற்றை எதிர்த்து வருகிறேன்” என்று குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கத்தில் தமக்கு அமைச்சுக்கள் இருக்க வேண்டும் என்று ஓகன் முன்பு அறிவித்தார். அப்போது அவர், “எங்கள் கோரிக்கைகள் குறித்து கட்சியினருடன் விவாதிப்போம். நிச்சயமாக, நாங்கள் இலவசமாக பங்காளியாக இருக்க மாட்டோம். எங்களுக்கு அமைச்சகங்கள் போன்ற கோரிக்கைகள் இருக்கும்” என்று தெரிவித்தார்.
துருக்கிய ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போருக்கு முக்கியமானதாகும். அமெரிக்க அதிகாரிகள் வாக்கெடுப்பை உன்னிப்பாகப் பின்பற்றியதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது: “துருக்கியின் தலைமையின் மாற்றம் இரு நாடுகளுக்கும்-முக்கியமான மூலோபாய நலன்களைப் பகிர்ந்து கொள்ளும்-தங்களது உறவை மீட்டமைக்கவும், துருக்கியை மீண்டும் மேற்கை நோக்கி இழுக்கவும் வாய்ப்பளிக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்' என்று டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
எர்டோகனை விட வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்கள் கிலிக்டரோக்லுவை விரும்புவதற்கான முக்கிய காரணங்களை டைம்ஸ் கோடிட்டுக் காட்டி, “திரு . எர்டோகன், மேற்கிற்கும் மொஸ்கோவிற்கும் இடையில் ஒரு கோட்டைக் கடந்து, உக்ரேன் மீது திரு. புட்டின் படையெடுத்த போதிலும் அவருடன் பணிபுரிவதுக்கும், உறவைப் பேணுவதுக்கும் முயன்றுள்ளார். போர் தொடர்பாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடைகளில் துருக்கி பங்கேற்கவில்லை” என்று குறிப்பிட்டது.
நேட்டோ-ரஷ்யா போர் துருக்கிய தேர்தல்களில் முக்கிய பங்கு வகித்தது. சர்வதேச பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணல்களில், எர்டோகனை விட நம்பகமான நேட்டோ கூட்டாளியாக இருப்பதாக கிலிக்டரோக்லு உறுதியளித்தார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் எந்த ஆதாரத்தையும் வழங்காமல், துருக்கிய தேர்தலில் வேட்பாளர் முஹர்ரெம் இன்சை பின்வாங்கும்படி கட்டாயப்படுத்த ரஷ்யா தலையிட்டதாகக் கூறினார்.
இந்த குற்றச்சாட்டை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 'எங்களிடம் ஆதாரம் உள்ளது' என்று ராய்ட்டர்ஸிடம் கூறிய கிலிக்டரோக்லு, அதனை வெளியிட மறுத்துவிட்டார்.
கிலிக்டரோக்லுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்த பெஸ்கோவ், கிலிக்டரோக்லு தன்னிடம் ஆதாரம் எதுவும் இல்லாததால் அவரது ஆதாரத்தை வெளியிட முடியவில்லை என்று கூறினார். 'கிலிக்டரோக்லுவின் அறிக்கை அட்டுர்க்கின் (கெமால் Atatürk, துருக்கிக் குடியரசின் நிறுவனர்) நட்பு மற்றும் ரஷ்யாவுடனான நெருங்கிய உறவுகளின் பார்வைக்கு முரணானது மற்றும் வெளிப்படையானது’’ என்று அவர் குறிப்பிட்டார்.
கிலிக்டரோக்லுவின் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ சார்பு அறிக்கைகள், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சூழ்ச்சியின் அடிப்படையில் வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றிய எர்டோகனுக்கு எதிராக அவரை வலுப்படுத்தவில்லை. கடந்த ஆண்டு, உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, கிட்டத்தட்ட 80 சதவீத துருக்கிய மக்கள் உக்ரேன் போரை எதிர்ப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. துருக்கியில் பல இராணுவ சதிகளுக்குப் பின்னால் இருக்கும், 1991 இல் சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிசம் கலைத்ததில் இருந்து மத்திய கிழக்கில் மூன்று தசாப்தங்களாக ஏகாதிபத்திய போர்களை நடத்திவரும் வாஷிங்டனுக்கு எதிரான எதிர்ப்பு துருக்கியில் ஆழமாக வேரூன்றி உள்ளது.
மே 14 தேர்தலுக்கான பிரச்சாரமும் அதன் முடிவும், ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய சார்பு பிரிவுகள் இரண்டையும் எதிர்ப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்காகப் போராடுவது என்ற சோசலிச சமத்துவக் குழுவின் முன்னோக்கை நிரூபித்துள்ளது. சர்வதேச அளவில் போருக்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதே முக்கியமான பணியாகும்.