துருக்கி தேர்தல்கள் பற்றிய சோசலிச சமத்துவக் குழுவினது அறிக்கை

போர் வேண்டாம்! துருக்கிய ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய சார்பு கூட்டணிகளை நிராகரி! சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்பு!

போருக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உலகளாவிய வெகுஜன இயக்கத்திற்காக! மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக தீவிரமடைந்துவரும் நேட்டோவின் போர் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் பெருகிவரும் எழுச்சி ஆகியவற்றால் உக்கிரமடைந்துள்ள அணுவாயுத உலகப் போரின் அபாயத்தின் பின்னணியில் மே 14 ம் திகதி, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே பாலமாகவும் கருங்கடலுக்கு செல்லும் ஜலசந்தியை கட்டுப்படுத்தும் துருக்கியின் தேர்தல் முடிவுகள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் கெமல் கிலிக்டாரோக்லு [Photo by AP Photo / துருக்கிய ஜனாதிபதி (இடதுபுறம்), குடியரசு மக்கள் கட்சி / CC BY-NC-SA 4.0 (வலதுபுறம்)] [Photo by [Photo par AP Photo / Présidence turque (à gauche), Cumhuriyet Halk Partisi / CC BY-NC-SA 4.0 (droite)]]

துருக்கி உறுப்பினராக உள்ள நேட்டோ கூட்டணி, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரை தீவிரப்படுத்துவதன் மூலமும், சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்புகளை முடுக்கிவிடுவதன் மூலமும் அணுவாயுத மூன்றாம் உலகப் போரில் மனிதகுலத்தை நிர்மூலமாக்குவதாக அச்சுறுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் இராணுவவாதம் மற்றும் நிதியச் சந்தைகளுக்கு டிரில்லியன் கணக்கான டொலர்களை கொட்டுவதால், வெகுஜனங்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாங்கும் திறன் முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் வீழ்ச்சியடைந்து வருவதுடன், சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்குள் எதிர்ப்புகளும் அதிகரித்து வருகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) துருக்கியப் பிரிவான சோசலிச சமத்துவக் குழுவானது (SEG), ஒரு சமூகப் பேரழிவைத் தவிர வேறு எதையும் உறுதியளிக்காத ஏகாதிபத்தியத்தையும், முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தையும் எதிர்க்கிறது. ஏகாதிபத்தியப் போர், நடந்துகொண்டிருக்கும் கோவிட்-19 தொற்றுநோய், வாழ்க்கைச் செலவு, சமூக சமத்துவமின்மை மற்றும் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு, முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச புரட்சிகர அணிதிரட்டல் தேவைப்படுகிறது.

சோசலிச சமத்துவக் குழுவின் முன்னோக்கு வரலாற்றின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். ஏகாதிபத்திய போரின் உலகளாவிய விரிவாக்கத்தால் உருவாக்கப்பட்ட சூறாவளியில் துருக்கி சிக்கியுள்ளது. துருக்கிக்கு வடக்கே சில நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உக்ரேனில் இடம்பெற்றுவரும் நேட்டோ போர், துருக்கியின் அரசியல் சூழ்நிலையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒட்டோமான் பேரரசின் மரபு தொடர்பாக பல்வேறு அரசுகள் போரிட்டதால் 20 ஆம் நூற்றாண்டில், முதல் பூகோள மோதல் பால்கனில் வெடித்தது. 1912 மற்றும் 1913 ஆம் ஆண்டு பால்கன் போர்கள், ஆஸ்திரிய பேரரசர் பிரான்ஸ் பெர்டினாண்டின் படுகொலையால் முதலாம் உலகப் போர் தூண்டப்பட்டது. ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை சிதைத்து, நவீன துருக்கிய குடியரசு தோன்றிய உலகப் போருக்கு வழிவகுத்த பூகோள அரசியல் மோதல்கள் இன்று, மேலும் வெடிக்கும் வடிவில் திரும்பி வருகின்றன.

விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையிலான போல்ஷிவிக் கட்சி, 1917 அக்டோபர் புரட்சியின் வெற்றியின் மூலம், இந்த முதல் உலகளாவிய படுகொலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலையீட்டால் மட்டும்தான், முதலாளித்துவத்தின் உலகளாவிய முரண்பாடுகள் (20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை மனிதகுலத்தை உலகப் போரில் மூழ்கடித்தது) மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் செல்வதைத் தடுக்க முடியும்.

பிப்ரவரி 6 அன்று, மில்லியன் கணக்கான மக்களை வீடற்றவர்களாக ஆக்கி, பல்லாயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்திய துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்ப பேரழிவானது, சர்வதேச அளவில் அவசர சமூகப் பிரச்சினைகளுக்கு திட்டமிடப்பட்ட மற்றும் பகுத்தறிவுடன் பதிலளிக்க முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறை ஒரு பெருந்த தடையாக உள்ளது என்பதை சோகமாக நிரூபித்துள்ளது. சர்வதேச அளவில், ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் அரசாங்கம் மற்றும் முழு அரசியல் ஸ்தாபனமும், முன்னரே எச்சரிக்கப்பட்ட பூகம்ப ஆபத்திலிருந்து தயாராகுவதுக்கு தவறியதற்கான காரணம், அவர்களது அரசியல் என்பது இலாபம் மற்றும் செல்வக் குவிப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதாகும். பூகம்பங்கள் போன்ற முக்கிய இயற்கை நிகழ்வுகள் செயற்கையான தேசிய எல்லைகளை அங்கீகரிக்கவில்லை என்றாலும், முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கைகள் முற்றிலும் தேசிய அக்கறைகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன.

இதே புறநிலை அடிப்படையானது, கோவிட்-19 பெருந்தொற்று நோய்க்கு பேரழிவு தரும் பதிலான 'உயிர்களுக்கு முன் லாபம்' என்ற கொள்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற பாரிய பெருந்தொற்று, குறைபாடுகள் மற்றும் மரணங்களை ஏற்படுத்துவதுடன், உலக மக்கள்தொகை காலநிலை மாற்றம் மற்றும் புதிய தொற்றுநோய்களால் மேலும் அச்சுறுத்தப்படுகிறது.

சோசலிச சமத்துவக் குழுவின் (SEG) நிலைப்பாடும் முதலாளித்துவ கூட்டணிகளும்

தற்போதைய அரசியல் நெருக்கடியின் மிகக் கூர்மையான வெளிப்பாடாக, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் தொழிலாள வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முற்போக்கான மாற்றீடு எதுவும் இல்லை. மேலும் சோசலிச சமத்துவக் குழு எந்த ஒரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கவில்லை என்று தெளிவாக விளக்குகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு கட்சியும், தொழிலாள வர்க்கத்தின் நலன்களை மிகக் குறைந்த வடிவத்திலும் கூட முன்னேற்றவில்லை.

ஒரு இளம் அரசியல் போக்காக இருக்கின்ற SEG இன்னும் நேரடியாக அதன் சொந்த வேட்பாளர்களை இத்தேர்தலில் நிறுத்த முடியவில்லை. இருந்தபோதிலும், சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மகத்தான வரலாற்று அனுபவம் மற்றும் முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்கக் கட்சிகளிடம் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தை மேற்கொண்டுவரும் SEG, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் மிகவும் நனவான பிரிவுகளுக்கு அரசியல் பிரச்சினைகளை விளக்குவதற்காக இந்தத் தேர்தல்களில் தலையிடுகிறது. அத்துடன், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்து, தேர்தல் நாளில் மட்டுமல்ல, அதற்குப் பிறகும்கூட அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்கும்.

இந்தத் தேர்தல்களில், ஆளும் வர்க்கத்தின் போட்டிப் பிரிவுகள்  இரண்டு முக்கிய கூட்டணிகளாக பிரிந்து போட்டியிடுகின்றன: எர்டோகன் தலைமையிலான இஸ்லாமிய நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி (AKP) மற்றும் பாசிச தேசியவாத இயக்கக் கட்சி (MHP) இணைந்த மக்கள் கூட்டணியும், மற்றும் கெமால் கிலிக்டரோக்லுவின் கெமாலிஸ்ட் குடியரசு மக்கள் கட்சி தலைமையில், MHP யில் இருந்து பிரிந்த நல்ல கட்சி (Good Party) உட்பட, AKP உருவான இஸ்லாமிய மகிழ்ச்சிக் கட்சி, முன்னாள் AKP பிரதம மந்திரியும் வெளியுறவு மந்திரியுமான அஹ்மத் டவுடோக்லுவின் எதிர்காலக் கட்சி (Future Party) மற்றும் AKP முன்னாள் பொருளாதார மந்திரி அலி பாபகானின் DEVA கட்சி ஆகியவை தேசக் கூட்டணியில் இணைந்து போட்டியிருகின்றன.

கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை கெமால் கிலிடரோக்லு முன்னணியில் இருப்பதாகக் காட்டுவதுடன், ஜனாதிபதித் தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு செல்லலாம் என்றும் கூறுகின்றன. 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற மேலும் இரு வேட்பாளர்களும் இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 2018 ம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலுக்கான CHP வேட்பாளரான முஹர்ரெம் இன்ஸ், தேசியக் கூட்டணியில் டவுடோக்லு மற்றும் பாபகான் முன்னிலையில் இருப்பதை விமர்சித்து ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார். ஒரு இனவெறி வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அதிதீவிர வலதுசாரி இயக்கத்தை வளர்க்க முயற்சிக்கும் வெற்றிக் கட்சியின் (Victory Party) தலைமையிலான அட்டா கூட்டணி வேட்பாளர் ஒருவரும் இத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

மூன்றாவது முறையாக அரசியலமைப்பை மீறி போட்டியிட உள்ள எர்டோகனின் ஆளும் குழுவோ அல்லது முதலாளித்துவ எதிர்க்கட்சிக் கூட்டணிகளோ துருக்கியில் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட தொழிலாள வர்க்கத்திற்கு முன்னோக்கி செல்லும் வழியை வழங்கவில்லை. இந்த பிற்போக்கு முதலாளித்துவ கூட்டணிகளுக்கு பொதுவானது ஏகாதிபத்தியத்தின் மீதான விசுவாசம் மற்றும் தொழிலாளர்கள் மீதான அவர்களின் குரோதம் ஆகும். பாரிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மற்றும் தீவிரமடைந்துவரும் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் அபாயத்தை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய அணிதிரட்டல்தான் அவர்களுக்குள்ள மிகப்பெரிய அச்சமாக இருக்கிறது.

போலி-இடது குழுக்களின் ஆதரவுடன் பல தேர்தல் கூட்டணிகள் கிலிக்டரோக்லுக்கு பின்னால் அணிவகுத்து, வெகுஜனங்களின் கோபத்தைக் கட்டுப்படுத்துகின்றன. முதலாவதாக, குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சியின் (HDP) தொழிலாளர் மற்றும் சுதந்திரக் கூட்டணி மற்றும் அதன் கூட்டாளியான துருக்கியின் தொழிலாளர் கட்சி (TİP) ஆகும். எர்டோகன் அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான, மக்கள் ஜனநாயகக் கட்சியின் நடவடிக்கையை நிறுத்தும் அச்சுறுத்தல் காரணமாக, பசுமை இடது கட்சி (YSP) என்ற பெயரில் HDP தனது பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. 

அதே வலதுசாரிக் கொள்கையைப் பின்பற்றிவரும் துருக்கியின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (TKP) மற்றும் இடது கட்சி (முன்னாள் சுதந்திரம் மற்றும் ஒற்றுமைக் கட்சி, ÖDP) ஆகியவை, சோசலிச படைகளின் ஒன்றியம் (SGB) என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. தொழிலாளர் மற்றும் சுதந்திரக் கூட்டணியைப் போலவே, தற்போதுள்ள அரசியல் மற்றும் சமூக ஒழுங்கின் கட்டமைப்பிற்குள் தொழிலாள வர்க்கத்தை சிக்க வைக்க இவை அனைத்தும் முயற்சிக்கின்றன.

கொள்கையற்ற போலி-இடது போக்குகளை சமரசமின்றி எதிர்க்கும் சோசலிச சமத்துவக் குழுவானது, இந்த அனைத்துக் கூட்டணிகளிலும் இணைய வேண்டாம் என்ற பிரச்சாரத்தை ஆதரித்து வேலை செய்கின்றது.

கிரேக்கத்தில் உள்ள தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (EEK) துருக்கிய சகோதர அமைப்பான புரட்சிகர தொழிலாளர் கட்சி (DİP), நேட்டோவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக, புட்டினின் பிற்போக்கு ஆட்சியை ஆதரிக்கும் ரஷ்ய நவ-ஸ்ராலினிச போக்குகளுடன் இவர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். ஜூன் 2018 தேர்தல்கள் வரை நேட்டோ சார்பு மற்றும் ஐரோப்பிய யூனியன் சார்பு, குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சியை ஆதரித்த பிறகு, DİP இந்தத் தேர்தல்களில் துருக்கியின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு (TKH) ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது.  இருப்பினும், TKH ஆனது, சோசலிச படைகளின் ஒன்றியத்துக்குள் (SGB) துருக்கியின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் கிலிக்டரோக்லுவை ஆதரிக்கும் இடது கட்சியுடன் அதன் கூட்டணியைத் தொடர்கிறது.

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரை உற்சாகத்துடன் ஆதரிக்கும் சர்வதேச சோசலிஸ்ட் லீக்கின் (ISL) முன்னாள் துருக்கியப் பிரிவான சோசலிச உழைப்பாளர் கட்சி விஷயத்திலும் இதுவே உண்மையாகும். அங்காராவில் அதன் சொந்த சுயேச்சையான பாராளுமன்ற வேட்பாளரை நிறுத்திய இக்கட்சியானது, தொழில் மற்றும் சுதந்திர கூட்டணிக்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்து கிலிக்டரோக்லுவுக்கு பின்னால் அணிவகுத்து நிற்கிறது. முதலாளித்துவ ஸ்தாபனத்திற்கு எதிரான அதன் எதிர்ப்பு முற்றிலும் பாசாங்குத்தனமான மற்றும் நேர்மையற்ற தன்மை கொண்டது என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இரண்டு வலதுசாரி முதலாளித்துவ கூட்டணிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கூற்றை சோசலிச சமத்துவக் குழு கடுமையாக நிராகரிக்கிறது. தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும், தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் எந்த அடிப்படைப் பிரச்சினைகளையும் இத்தேர்தல்கள் தீர்க்காது. ஏனென்றால், இந்தப் பிரச்சனைகள் எதுவும் தேசிய அடிப்படையிலோ அல்லது நிதி மூலதனத்தின் செல்வத்தின் மீது சமூகத் தாக்குதலின்றியோ தீர்க்கப்பட முடியாது.

இந்த தேர்தலில் பங்கேற்கும் எந்தக் கட்சியும் சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்டவை அல்ல. ஏகாதிபத்திய போர் முகாமில் உள்ள இவர்கள், நேட்டோவிற்கு முழுமையாக விசுவாசமாக இருப்பதோடு, கோவிட் பெருந்தொற்று மற்றும் பாரிய இறப்புக்களை புறக்கணித்து, எதிர்வு கூறப்படும் புதிய பூகம்பங்களின் முகத்தில் மக்களை அழிவுக்கும் மரணத்திற்கும் தள்ளி விடுகின்றனர். தந்திரோபாய வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு இவர்களின் பதில், வங்கிகள் மற்றும் பெருவணிகத்தின் சார்பாக தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையான சமூக சிக்கன திட்டத்தை சுமத்துவதாக இருக்கும்.

சோசலிச தொழிலாளர் கழகமானது, தேசிய முதலாளித்துவத்தை ஏற்பதை நியாயப்படுத்த போலி இடதுகளால் ஊக்குவிக்கப்படும் அவநம்பிக்கையை அடியோடு நிராகரிக்கிறது. ஏகாதிபத்தியப் போர், சமூக எதிர்ப்புரட்சி மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றிற்கு இட்டுச் செல்லும் உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகள், அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய இயக்கத்தின் எழுச்சிக்கு வழிவகுக்கின்றன.

இலங்கையில், புதிய அரச தலைவருக்கு எதிராக தொழிலாள வர்க்கமும் கிராமப்புற ஏழைகளும் மீண்டும் அணிதிரண்டுவரும் ஒரு நிலையில், முதலாளித்துவ ஆட்சி மற்றும் அடிப்படைப் பிரச்சனைகள், கடந்த ஆண்டு நடந்த பாரிய மக்கள் எழுச்சிக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதியை நாட்டை விட்டு தப்பி ஓடுவதுக்கு நிர்ப்பந்தித்த பிறகும் அப்படியே உள்ளது.

ஐரோப்பா முழுவதிலும் உள்ள நாடுகளில் வேலைநிறுத்தங்களும் எதிர்ப்பு போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன. பிரான்சில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் மற்றும் அது எதிர்கொள்ளும் அப்பட்டமான முதலாளித்துவ அரச வன்முறை, மக்ரோனை தூக்கியெறிந்து தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்ற வேண்டியதன் அவசியத்தை எழுப்புகிறது.

ஏகாதிபத்திய அமைப்புமுறையின் மையமான அமெரிக்காவில், தொழிலாள வர்க்கம் பாரியளவில் தீவிரமயப்படுத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் (UAW) தேர்தலில் கிட்டத்தட்ட 5,000 வாக்குகளைப் பெற்ற சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் சாமானிய தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் (IWA-RFC) வேட்பாளரான வில் லெஹ்மனின் பிரச்சாரம் இதன் மிகவும் நனவான அரசியல் வெளிப்பாடாகும். ஒரு சோசலிச வேலைத்திட்ட அடித்தளத்தில் 'அதிகாரத்தை சாமானிய தொழிலாளர்களிடம் மாற்றுவதற்கு' அவர் அழைப்பு விடுத்தார்.

ஈரானிய ஆட்சியை உலுக்கிய பாரிய மக்கள் எதிர்ப்பு போராட்டங்களுக்கு பிறகு, இஸ்ரேலின் வரலாற்றில் மிகப் பெரிய எதிர்ப்புகள் பிரதம மந்திரி நெதன்யாகுவின் நீதித்துறை சதிக்கு எதிராக வெளிப்பட்டன. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள யூத, அரபு, ஈரானிய மற்றும் இதர தொழிலாளர்களின் அரசியல் ஒற்றுமைக்கான நிலைமைகள் முதிர்ச்சியடைந்து வருகின்றன.

துருக்கியில், கடந்த வருடங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழிற் சங்கங்களால் ஒழுங்கமைக்கபடாத திடீர் வேலைநிறுத்தங்களின் அலை இருந்தது, இந்த தேர்தல்களின் முடிவு எதுவாக இருந்தாலும், பெரிய வர்க்கப் போர்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளன.

ஸ்ராலினிசம், பப்லோவாதம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பல தசாப்த காலப் போராட்டத்தில் பொதிந்துள்ள வரலாற்றின் படிப்பினைகள் மற்றும் ஒரு ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் மூலம், தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி பெறும் இயக்கத்தை ஆயுதபாணியாக்குவதே முன்னோக்கிய வழியாகும்.

ரஷ்யா மற்றும் துருக்கிய ஆளும் உயரடுக்கிற்கு எதிரான நேட்டோவின் போர்

கருங்கடலுக்கு வடக்கே உக்ரேனில் ரஷ்யாவுடன் பொங்கி எழும் மோதல், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ சக்திகளின் ஏகாதிபத்தியப் போராகும், இது விரைவில் துருக்கி, ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளை மூழ்கடிக்கக்கூடும்.

இறுதி ஆய்வில், நேட்டோ ஆதரவுடைய உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் எர்டோகன் அரசாங்கத்தின் முயற்சிக்கு, துருக்கிய முதலாளித்துவத்தின் நெருங்கிய பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் உறவுகள் நேட்டோ மற்றும் ரஷ்யா ஆகிய இருதரப்பு நாடுகளுடனும் உள்ளது. எவ்வாறாயினும், போரின் விரிவாக்கமானது, நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் சூழ்ச்சி செய்வதற்கான அங்காராவின் திறனைக் குறைத்து, அதன் கன்னையை வெளிப்படையாகத் தேர்ந்தெடுக்கும்படி கட்டாயப்படுத்துகிறது.

பின்லாந்தின் நேட்டோ உறுப்புரிமைக்கு துருக்கிய முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக ஒப்புதல் அளித்ததானது, ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஒரு தீவிரமான விரிவாக்கம் ஆகும். இது, அதன் ஏகாதிபத்திய சார்பு மற்றும் பிற்போக்குத்தனமான தன்மையின் மறுக்க முடியாத அறிவிப்பாகும்.

இது 1917 அக்டோபர் புரட்சியில் விளாடிமிர் லெனினுடன் இணைத் தலைவராக இருந்தவரும், நான்காம் அகிலத்தின் நிறுவனருமான லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் குறிப்பிடத்தக்க உறுதிப்படுத்தல் ஆகும். சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு ட்ரொட்ஸ்கி பின் வருமாறு விளக்கினார் :

காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ நாடுகளில், தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளைப் பொறுத்தவரை, ஜனநாயகம் மற்றும் தேசிய விடுதலையை அடைவதற்கான அவர்களின் பணிகளுக்கு முழுமையான மற்றும் உண்மையான தீர்வு, அடிபணியப்பட்ட தேசத்தின் தலைவராக, அதன் அனைத்து விவசாய மக்களுக்கும் மேலாக, நிரந்தரப் புரட்சியின் கோட்பாட்டில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் மட்டுமே சிந்திக்க முடியும் என்பதைக் குறிக்கிறது.

துருக்கிய குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட நூற்றாண்டையொட்டி, முதலாளித்துவம் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரம் பெறுவது அல்லது ஒரு ஜனநாயக ஆட்சியை ஸ்தாபிப்பது போன்ற அதன் பணிகளை நிறைவேற்றுவதில் திறனற்று இருந்தது.

கடந்த ஆண்டு உக்ரேனில் தூண்டிவிடப்பட்டு, துருக்கிய முதலாளித்துவத்துடன் கூட்டுச் சேர்ந்த நேட்டோவின் போரானது, 1991ல் சோவியத் யூனியனின் ஸ்ராலினிசக் கலைப்பு மற்றும் நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்திற்குப் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கிட்டத்தட்ட இடைவிடாத ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் விளைவாகும்.

இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பில், ஈராக் முதல் யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான் முதல் சிரியா வரை எண்ணற்ற நாடுகள் அழிந்து, மில்லியன்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, கோடிக்கணக்கானோர் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். இந்த அகதிகள் ஐரோப்பா கண்டத்தை அடைவதை தடுக்கும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியம் 'ஐரோப்பிய கோட்டை' என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தியதால் ஆயிரக்கணக்கான மக்கள் மத்திய தரைக்கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.

இந்தப் போர்களில் துருக்கிய மற்றும் குர்திஷ் முதலாளித்துவ வர்க்கங்கள் உடந்தையாக இருப்பதும் மற்றும் ஏகாதிபத்திய கொள்ளையில் இருந்து சிறு துண்டுகளைப் பிரித்தெடுப்பதற்கான அவர்களின் முயற்சிகளும் பேரழிவு தரும் விளைவுகளைக் கொண்டுள்ளன. 500,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை தூக்கியெறிவதற்காக CIA ஏற்பாடு செய்த 2011 ஆட்சி மாற்றப் போரில் எர்டோகன் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அதே நேரத்தில், 2015ல் அமெரிக்க ஏகாதிபத்தியம் சிரியாவில் மக்கள் பாதுகாப்பு அலகுகளை (YPG) அதன் முக்கிய பினாமி படையாக மாற்றியபோது, ​​குர்திஷ் தேசியவாத குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் (PKK) நேட்டோ ஆதரவுடன் நடைபெற்ற எர்டோகனின் 'சமாதான முன்னெடுப்புக்கள்' பொறிந்து போனது. 

சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் குர்திஷ் அரசு ஒன்று தோன்றுவது துருக்கியிலும் இதேபோன்ற விளைவைத் தூண்டலாம் என்ற அச்சம் அங்காராவை பயமுறுத்தியதால், அதனை மீண்டும் மோதலுக்கு இட்டுச் சென்றது. இதில், PKK-YPG மற்றும் குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) ஆகியவற்றை வன்முறையால் நசுக்க முனைந்த எர்டோகன் அரசாங்கம் பெரும்பாலும் கெமால் கிலிடாரோக்லுவின் குடியரசு மக்கள் கட்சியின் (CHP) ஆதரவைப் பெற்றிருந்தது.

அங்காராவிற்கும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பதட்டங்கள் 2016 இல் எர்டோகனுக்கு எதிராக தோல்வியுற்ற நேட்டோ ஆதரவு சதியில் வன்முறையாக வெடித்தது. இதற்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்கள் காரணமாக ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் இருந்து தப்பிய எர்டோகன், தனது நேட்டோ நட்பு நாடுகளுடன் தொடர்ந்தும் உடன்பாடுகளை செய்ய முயன்றார். இது ஏகாதிபத்தியத்துடன் ஆழமாக பிணைந்துள்ள மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி நடுங்கும் துருக்கிய முதலாளித்துவத்தின் இயலாமையை அம்பலப்படுத்துகிறது.

இருப்பினும், எர்டோகனின் மக்கள் கூட்டணி ஒருபுறம் அமெரிக்க தலைமையிலான நேட்டோ சக்திகளுக்கும் மறுபுறம் ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் இடையே சூழ்ச்சிகளை மேற்கொண்டுவரும் அதே வேளையில், நேட்டோ ஏகாதிபத்தியத்திற்கு சிறப்பாக சேவை செய்வதாக கிளிக்டரோக்லுவின் தேசக் கூட்டணி உறுதியளிக்கிறது. கடந்த அக்டோபரில் கிலிக்டாரோக்லு அமெரிக்காவிற்கு விஜயம் செய்தபோது, ​​எர்டோகனை விட மிகவும் வெளிப்படையாக, 'ரஷ்யா-உக்ரேன் போரில், உக்ரேனுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்' என்று அறிவித்தார்.

எர்டோகனுக்கு எதிராக கிளிக்டரோக்லுக்கு வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்கள் ஆதரவை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி பைடென் மற்றும் அவரது ஐரோப்பிய கூட்டாளிகள், அவரை ஒரு மிகவும் நம்பகமான கூட்டாளியாக பார்க்கின்றனர். உண்மையில், கிளிக்டரோக்லு ஏகாதிபத்திய சக்திகளுக்கு இது குறித்து உறுதியளிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார். பின்லாந்தின் நேட்டோ உறுப்புரிமையை ஆதரித்த அவரது குடியரசு மக்கள் கட்சி அதிகாரத்தை கைப்பற்றினால், ஸ்வீடனின் உறுப்புரிமை விரைவில் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

கிளிக்டரோக்லு தேர்ந்தெடுக்கப்பட்டால், குர்திஷ் தேசியவாதிகள் மற்றும் துருக்கியின் ஏகாதிபத்திய கூட்டாளிகளுடன் மோதலில் முடிவடைந்த எர்டோகனின் கீழ் இருந்த துருக்கிய முதலாளித்துவம், நேட்டோவுடன் எதிர்கொண்ட அனைத்து மோதல்களையும் அவர் எதிர்கொள்ள மாட்டார் என்று நினைப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. எவ்வாறாயினும், ஏகாதிபத்தியத்துடன் உறவுகளை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளார் என்பதை கிளிக்டரோக்லுவின் பிரச்சாரம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு, ‘’21 ஆம் நூற்றாண்டில் ஜனநாயகத்திற்கு நேட்டோ உத்தரவாதம் அளிக்கிறது’’ என்று கிளிக்டரோக்லு குறிப்பிட்டார். உண்மையில், உக்ரேனில் 2014 ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் துருக்கியில் 2016 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி உட்பட 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு எதிரான ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் மையமாக அமெரிக்க தலைமையிலான நேட்டோ சக்திகள் இருக்கின்றன.

அரசாங்கங்களின் ஜனநாயக வடிவங்களின் பொறிவு மற்றும் அதன் மிகத் தாக்கமான வெளிப்பாட்டை முன்னணி நேட்டோ சக்திகளான அமெரிக்கா மற்றும் பிரான்சில் கண்டுள்ளது. ஜனாதிபதி மக்ரோன் நிதிய தன்னலக்குழுவால் கட்டுப்படுத்தப்படும் முதலாளித்துவ அரசின் வன்முறையின் மூலம் முக்கால்வாசி பிரெஞ்சு மக்களால் எதிர்க்கப்பட்ட ஓய்வூதிய வெட்டுக்களை திணிப்பதற்கு முயற்சிக்கிறார். அமெரிக்காவில், டிரம்ப் ஜனவரி 6, 2021 தேர்தல் முடிவுகளை கவிழ்க்க ஒரு சதி முயற்சியை மேற்கொண்டார், அடுத்த தசாப்தத்தில் ஜனநாயகம் இருக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை என்று ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார்.

துருக்கியின் மிகப் பலவீனமான 'ஜனநாயகம்' இந்த பரந்த செயல்முறைகளில் இருந்து விடுபடவில்லை. அது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சதி முயற்சியை எதிர்கொண்டது. அதற்கு எர்டோகன் ஒரு எதேச்சதிகார ஜனாதிபதி ஆட்சியை நோக்கி நகர்வதை துரிதப்படுத்தியதன் மூலம் பதிலளித்தார். துருக்கியில் உள்ள முதலாளித்துவ பிரிவுகள் இந்த தேர்தலை சீர்குலைக்கவோ அல்லது திருடவோ முயற்சி செய்தால், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பாரியளவில் அதனை எதிர்க்க வேண்டும்.

எவ்வாறாயினும், சர்வாதிகார அரசாங்க வடிவங்களை நோக்கி எல்லா இடங்களிலும் ஆளும் வர்க்கத்தின் அதிகரித்து வரும் உந்துதல், முதலாளித்துவ அமைப்பின் சர்வதேச நெருக்கடியில் வேரூன்றி உள்ளதுடன், அரசாங்கத்தை மாற்றுவதால் மட்டும் இந்த வடிவங்களை அகற்றிவிட முடியாது. ஐரோப்பாவில் சர்வாதிகார ஆட்சிகள் தோன்றியதை விளக்கி, ட்ரொட்ஸ்கி 1929 இல் பின்வருமாறு எழுதினார்:

மின்சார பொறியியலுடன் இதனை ஒப்பிடுவதன் மூலம், ஜனநாயகம் என்பது பாதுகாப்பு சுவிட்சுகளின் அமைப்பாக, மற்றும் தேசிய அல்லது சமூகப் போராட்டத்தால் அதிக வலுவை பாதுகாக்கும் மின்னோட்ட பாதுகாப்பின் முக்கிய கருவிகளின் அமைப்பாக வரையறுக்கப்படலாம். இருந்த போதிலும், வர்க்க மற்றும் சர்வதேச முரண்பாடுகளின் அழுத்தத்தின் கீழ், ஜனநாயகத்தின் பாதுகாப்பு சுவிட்சுகள் தீப்பிடிக்கின்றன அல்லது வெடித்து சிதறுகின்றன. அதைத்தான் சர்வாதிகாரத்தின் மின் ஒழுக்கு பிரதிபலிக்கிறது.

எர்டோகன் அரசாங்கம், உலகெங்கிலும் உள்ள அதன் சகாக்களைப் போலவே, COVID-19 தொற்றுநோய்களின் போது தொழிலாள வர்க்கத்திலிருந்து நிதிய தன்னலக்குழுவிற்கு பெரும் செல்வத்தை மாற்றுவதற்கு தலைமை தாங்கியது. உழைக்கும் மக்களில் பெரும்பாலோர் வறுமையில் வாழ்கின்றனர், வருடாந்திர உண்மையான பணவீக்கம் 100 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தாலும், அவர்கள் உண்மையான ஊதியத்தின் இழப்பைத் தடுக்க போராடுகிறார்கள். 2022ல் துருக்கிய வங்கித் துறையின் நிகர லாபம் 350 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பதில் பிரதிபலிக்கும் இந்த சமூக எதிர்ப்புப் புரட்சி, ஆளும் உயரடுக்கின் அனைத்து பிரிவுகளாலும் ஆதரிக்கப்படுகிறது.

எர்டோகனுக்கு நெருக்கமான பெரிய நிறுவனங்களுக்கு எதிரான அவரது வாய்வீச்சு வார்த்தைகளை பொருட்படுத்தாமல், சர்வதேச மற்றும் துருக்கிய நிதி மூலதனத்தின் நலன்களுக்கு சேவை செய்யும் அரசாங்கத்தை அமைக்க தான் திட்டமிட்டுள்ளதாக கிளிக்டரோக்லு தெளிவுபடுத்தியுள்ளார். ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிக்கு கிளிக்டரோக்லுவின் 'தீர்வு', துருக்கி மற்றும் உலகத் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பெரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வறுமைக்கு பொறுப்பான முக்கிய குற்றவாளிகள் அமைந்துள்ள நியூயோர்க் மற்றும் லண்டனில் உள்ள நிதிய வட்டங்களுடனான உறவுகளை இறுக்கமாக்குவதாகும். இந்த நோக்கத்திற்காக, அவர் எர்டோகனின் முன்னாள் தலைமைப் பொருளாதார அதிகாரியான அலி பாபகானை நியமித்துள்ளார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்துவதில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகளைப் பின்பற்றும் கிளிக்டரோக்லுவின் திட்டமானது, பொருளாதார தேக்கநிலை, பரவலான பணிநீக்கங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கையை திணிப்பதை குறிக்கிறது.

சமூக நிலைமைகளை மேம்படுத்துவது, ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பது மற்றும் பாராளுமன்ற முறைக்கு திரும்புவது போன்ற தேசியக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் பயனற்றவை ஆகும். முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி மற்றும் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி என்பன, எர்டோகனின் வலதுசாரி எதேச்சாதிகார ஆட்சியின் நெருக்கடியை உந்தித் தள்ளுவதுடன், தேர்தல் முடிவைப் பொருட்படுத்தாமல் உலகம் முழுவதும் தீவிரமடையச் செய்யும். எப்படியிருந்த போதிலும், தொழிலாள வர்க்கம் புதிய முதலாளித்துவ அரசாங்கத்துடன் மோதலை எதிர்கொள்ளும்.

குர்திஷ் தேசியவாதத்தின் ஏகாதிபத்திய சார்பு பாத்திரம்

சோசலிச சமத்துவக் குழு, குர்திஷ்தான் மக்கள் மற்றும் அதன் அரசியல்வாதிகள் மீதான அரச அடக்குமுறையை சமரசமின்றி எதிர்க்கிறது. குர்திஷ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், ஜனநாயக உரிமைகளுக்கான எமது கொள்கை ரீதியான பாதுகாப்பு என்பது, முதலாளித்துவ-தேசியவாத இயக்கங்களை ஆதரிப்பதாக எந்த வகையிலும் குறிக்கவில்லை. குர்திஷ் தேசியவாதத்தின் ஏகாதிபத்திய சார்பு பதிவுகள், முதலாளித்துவ தேசியவாதத்தின் திவால்நிலை மற்றும் அதற்கு முற்போக்கான உள்ளடக்கம் இல்லாததற்கு ஒரு அப்பட்டமான உதாரணமாகும்.

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரின் தீவிரம், போருக்கு எதிராகவும் அமைதிக்காகவும் குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சியை (HDP) ஆதரிக்க வேண்டும் என்ற கூற்று ஒரு அரசியல் பொறி மற்றும் மோசடி என்பதை மீண்டும் வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. நேட்டோவில் பின்லாந்தின் அங்கத்துவத்தை எதிர்க்காததால் HDP வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. நேட்டோ சக்திகளின் சொல்லாட்சியை எதிரொலிக்கும் வகையில், 'பின்லாந்தின் பாதுகாப்பு கவலைகள் நியாயமானவை' என்று HDPஅறிவித்தது.

HDP யின் இந்த அணுகுமுறை, அதன் தவறான 'ஏகாதிபத்திய எதிர்ப்பு' வாய்வீச்சுடன், குர்திஷ் தேசியவாதத்தின் வரலாற்றுப் பதிவு மற்றும் ஏகாதிபத்தியத்தை நோக்கிய அதன் நோக்குநிலை ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது. HDP 2003 இல் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பை வரவேற்றதோடு, மேலும் சிரியாவில் அமெரிக்காவின் மக்கள் பாதுகாப்பு அலகுகளின் (YPG) கூட்டணியை 'ரோஜாவா புரட்சி' என்று பாராட்டியது. நேட்டோவின் பாராளுமன்ற சபையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரில் முக்கிய பங்கு வகிக்கின்ற ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமைவாதிகளுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் 'அமைதி முன்னெடுப்பு' என்ற பெயரில், எர்டோகன் அரசாங்கத்துடன் HDP அரசியல் ஒத்துழைப்பை 2015 வரை பராமரித்து வந்தது. எர்டோகன் அரசாங்கத்தின் தீவிரமான ஒடுக்குமுறைக்கு மத்தியிலும், இந்த செயல்முறையின் முடிவிற்குப் பிறகும், அது படிப்படியாக கிளிக்டரோக்லுவின் குடியரசு மக்கள் கட்சியை (CHP) நோக்கி திரும்பியதுடன் பெரும்பாலும் அதற்கு ஆதரவாக இருந்தது. எர்டோகனுடனான ஒப்பந்தம் 'அமைதியையும் ஜனநாயகத்தையும்' கொண்டுவரும் என்று அந்த நேரத்தில் கூறிவந்த HDP இப்போது, CHP தலைமையிலான தேசியக் கூட்டணியைப் பற்றி அதே மாயைகளைப் பரப்பி வருகிறது.

தொழிலாள வர்க்கம் மற்றும் குர்திஷ் மக்களுக்கு மேலும் பேரழிவுகளை மட்டுமே உருவாக்கும் ஒரு ஏமாற்றுத்தனமாக இந்த கூற்றுக்களை சோசலிச சமத்துவக் குழு கடுமையாக நிராகரிக்கிறது. குர்திஷ் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் மத்திய கிழக்கில் படுகொலைகளை நிறுத்துவதற்கும் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் முதலாளித்துவ பினாமிகளுக்கு எதிராக, ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.

மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்காக, மத்திய கிழக்கிலும் ஏகாதிபத்திய நாடுகளிலும் உள்ள அனைத்து தேசிய இனங்களின் சகோதர, சகோதரிகளுடன் போர் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள் ஒன்றுபடுவதே முன்னோக்கி செல்லும் ஒரே வழியாகும்.

போலி-இடதுகளின் திவால்நிலை

சோசலிச சமத்துவக் குழுவானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து, எர்டோகன் ஆட்சியையும் கிளிக்டரோக்லுவின் ஜனாதிபதியாகும் சாத்தியத்தையும் எதிர்க்கின்றது. துருக்கிய தொழிற் கட்சி (TİP), தொழிலாளர் கட்சி (EMEP), துருக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (TKP), இடது கட்சி மற்றும் பல்வேறு பப்லோவாத/மொரேனோயிட் போக்குகள் உள்ளிட்ட போலி-இடது சக்திகள், கிளிக்டரோக்லு ஜனாதிபதியானால் சமூக மற்றும் ஜனநாயக நிலைமைகள் மேம்படுத்தப்படும் என்று கூறுவது அப்பட்டமான பொய் என சோசலிச சமத்துவக் குழு நிராகரிக்கின்றது. வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பை தேசக் கூட்டணியின் பின்னால் திருப்பிவிட முயற்சிப்பதன் மூலம், இந்த சக்திகள் மீண்டும் தங்கள் ஏகாதிபத்திய சார்பு, தொழிலாளர் விரோத குணாம்சத்தை வெளிப்படுத்துகின்றன.

2018 தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (HDP) பட்டியலில் பாராளுமன்றத்தில் நுழைந்த துருக்கிய தொழிற் கட்சி, இன்று வலதுசாரி தேசியக் கூட்டணிக்கு வெளியே எர்டோகன் ஆட்சிக்கும் முதலாளித்துவத்திற்குக்கும் ஒரு இடதுசாரி மாற்றீட்டைத் தேடும் வெகுஜனங்களை ஒரு முட்டுச்சந்திற்கு இட்டுச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2014 இல் ஸ்ராலினிச துருக்கிய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்பட்ட பின்னர் 2017 இல் ஸ்தாபிக்கப்பட்ட துருக்கிய தொழிற் கட்சி, கடந்த ஆண்டில் முதலாளித்துவ சார்பு எதிர்ப்பு ஊடகங்களின் ஆதரவுடன் வேகமாக வளர்ந்துள்ளது.

பாராளுமன்ற வாக்கெடுப்பில், பின்லாந்து நேட்டோ உறுப்புரிமையை பெறுவதை எதிர்க்க மறுத்ததில், துருக்கிய தொழிற் கட்சியின் உண்மையான பண்பு மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டது. இது மிகவும் நனவான முடிவாகும். நேட்டோவிற்கு பெரும் எதிர்ப்பு இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் அன்றி, ஏகாதிபத்திய சார்பு மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசக் கூட்டணியின் பக்கம் திரும்பியதன் விளைவே இந்த முடிவாகும்.

எர்டோகன் தேர்தலில் தோற்றால், 'தொழிலாளர்களின் எதிரிகளின் ஆட்சி' முடிவுக்கு வரும் என்று துருக்கிய தொழிற் கட்சித் தலைவர் ஏர்கன் பஸ் அறிவித்தார். உண்மையில், எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும், பொருளாதார நெருக்கடியும், ஆளும் வர்க்கத்தின் சமூகத் தாக்குதல்களும் மேலும் ஆழமடையும். மற்றொரு வலதுசாரி, நேட்டோ-சார்பு முதலாளித்துவ அரசியல்வாதியான கிளிக்டரோக்லு எர்டோகனுக்கு பதிலாக ஜனாதிபதியாக வந்தால் அல்லது எர்டோகன் தனது பாராளுமன்ற பெரும்பான்மையை இழந்தால், துருக்கியை உலுக்கி வரும் முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி முடிவுக்கு வரப் போவதில்லை. நெருக்கடியை நிறுத்துவதற்கு, துருக்கியிலும் சர்வதேச அளவிலும் ஒரு சோசலிசப் புரட்சி மூலம் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை தன் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குடியரசு மக்கள் கட்சியின் (CHP) தொழிலாளர் விரோதத் தன்மை, அது ஆளும் நகராட்சிகளின் கொள்கைகளில் தெளிவாகத் தெரிகிறது. கோவிட்-19 தொற்றுநோய் வெடித்த பிறகு, குடியரசு மக்கள் கட்சி மற்றும் துருக்கிய முற்போக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (DİSK) தொழிற்சங்க கூட்டமைப்பில் உள்ள அதன் ஆதரவாளர்களும் ஆரம்பத்தில் இருந்தே 'மனித உயிரை விட இலாபத்துக்கு முன்னுரிமை' என்ற அரசாங்கத்தின் கொள்கையை ஆதரித்தனர். குடியரசு மக்கள் கட்சியின் இந்த கொள்கையை அது ஆளும் நகராட்சிகளில் அமுல்படுத்திய அதே வேளை, துருக்கிய முற்போக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனம் பாதுகாப்பற்ற நிலையில் பணிபுரியும் தொழிலாளர்களை மேற்பார்வையிட்டது. குடியரசு மக்கள் கட்சி, இஸ்தான்புல்லில் உள்ள அதன் நகராட்சிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது 'அரசாங்கத்திற்கு சேவை செய்வதாக' குற்றம் சாட்டி, வேலை நிறுத்தங்களை முறியடிக்க செயற்பட்டது.

தேசக் கூட்டணிக்கு போலி-இடது அமைப்புகளின் ஆதரவின் மிக மோசமான வெளிப்பாடுகளில் ஒன்று, கிளிக்டரோக்லுவின் இனவெறித் திட்டத்தில் அவர்களின் காது கேளாத மௌனமாகும். அங்காரா உடந்தையாக இருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா மீதான போர்களில் இருந்து வெளியேறும் மில்லியன் கணக்கான அகதிகள், துருக்கியில் மிக அடிப்படை உரிமைகள் இல்லாமல் வாழ்கின்றனர். வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பை அவர்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்போக்கு திசையில் திசை திருப்புவதற்கு கிளிக்டரோக்லு நீண்ட காலமாக முயன்று வருகிறார். இரண்டு ஆண்டுகளாக, அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்போடு அவர்களை 'திருப்பி அனுப்புவதற்கு' அதாவது அவர்களை நாடு கடத்துவதாக உறுதியளித்துள்ளார்.

சோசலிச சமத்துவக் குழுவானது தேசக் கூட்டணியினதும் அதன் பின்னால் உள்ள போலி-இடது சக்திகளினதும் இனவெறிக் கொள்கையை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது. அது அகதிகளைப் பாதுகாப்பதற்கு மாறாக தொழிலாளர்களை அழைக்கிறது. எல்லா இடங்களிலும் ஏகாதிபத்தியப் போரால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு, குடியுரிமை உட்பட சம உரிமைகளுடன் அவர்கள் விரும்பும் நாட்டில் வாழவும் வேலை செய்யவும் உரிமை இருக்க வேண்டும்.

தேசக் கூட்டணியை போலி-இடது சக்திகள் தழுவிக்கொண்டமை, முதலாளித்துவத்தின் கீழ் ஒரு சிறந்த நிலையைத் தேடும் மத்தியதர வர்க்கத்தின் வசதியான பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற உண்மையைப் பிரதிபலிக்கிறது. கிரேக்கத்தில் சிரிசா, ஜேர்மனியில் இடது கட்சி மற்றும் ஸ்பெயினில் பொடெமோஸ் போன்ற அவர்களின் சர்வதேச கூட்டாளிகள், உள்ளூர் அல்லது தேசிய அளவில் அதிகாரத்தில் இருந்த போதான சாதனைகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும்.

ஸ்பெயினில், பெருவணிக சோசலிஸ்ட் கட்சியுடன் அரசாங்கத்தில் இருக்கும் பொடெமோஸ், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரை தீவிரமாக ஆதரிக்கின்றது. அது தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை வன்முறையில் நசுக்குகிறது. இடது கட்சி, ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டும் தலைதூக்குவதை ஆதரிப்பதுடன் அது ஆளும் மாநிலங்களில் கடுமையான சிக்கனக் கொள்கைகளை திணிக்கிறது.

2015ல் ஆட்சிக்கு வந்த சிரிசா, கிரேக்க மக்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெரிய வங்கிகளின் கடுமையான சிக்கனத் திட்டத்தை திணித்தது. எர்டோகன் அரசாங்கத்துடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் இழிந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கிரேக்கத்தில் அகதிகளுக்கு கொடூரமான தடுப்பு முகாம்களை அது அமைத்தது. சிரிசா தலைவரும் முன்னாள் பிரதம மந்திரியுமான அலெக்சிஸ் சிப்ராஸ், இஸ்ரேலில் சியோனிச ஆட்சியுடனும் எகிப்தில் இரத்தக்களரி அல்-சிசி சர்வாதிகாரத்துடனும் இராணுவ மற்றும் அரசியல் உறவுகளை வளர்த்துக் கொண்டார்.

மே 21 அன்று கிரேக்கத் தேர்தல்களில் அதிகாரத்திற்குத் திரும்புவதை இலக்காகக் கொண்டிருக்கும் சிரிசா, கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் ஏஜியன் கடல் தீவுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பாக துருக்கியுடனான மோதலில், பிரெஞ்சு-ஆதரவு கிரேக்கத்தின் சார்பாக, கடும் போக்கு கொள்கைக்கு வக்காலத்து வாங்குகிறது. போலி-இடதுகள் கிளிக்டரோக்லுக்கு பின்னால் அணிதிரண்டுள்ள நிலையில், அவர் துருக்கிய முதலாளித்துவத்தின் பிற்போக்கு நலன்களுக்கு ஏற்ப கிரேக்கத்திற்கு எதிரான ஒரு ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு தனது ஆதரவை அறிவித்துள்ளார். 2017ல், 'நான் வந்து இந்த தீவுகள் அனைத்தையும் எடுப்பேன்,' என்று அவர் உறுதியளித்தார்.

சோசலிச சமத்துவக் குழுவானது தொழிலாள வர்க்கத்திற்குள், ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தை போலி-இடது குழுக்களின் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலில் இருந்து வேறுபடுத்துகின்ற அரசியல் மற்றும் வர்க்க இடைவெளியை வெளிப்படுத்துவதன் மூலம், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிக்க முயல்கின்றது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முதலாளித்துவத்தின் நலன்களிலிருந்து தெளிவாக வேறுபடுத்துவதற்கான இந்தப் போராட்டத்தின் மூலம் மட்டுமே, தொழிலாள வர்க்கத்தை அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்திற்குத் தயார்படுத்த முடியும்.

சோசலிச சமத்துவக் குழு பரிந்துரைப்பது என்ன?

  • நேட்டோ ஏகாதிபத்தியத்துக்கும் அணு ஆயுத உலகப் போர் ஆபத்துக்கும் எதிராக துருக்கிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுங்கள்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு, போருக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உலகளாவிய இயக்கத்தைக் கட்டியெழுப்ப முன்னெடுக்கும் பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் குழு ஆதரிக்கிறது. சோசலிச சமத்துவக் குழு உக்ரைன் மீதான புட்டினின் பிற்போக்கு படையெடுப்பை எதிர்க்கின்ற அதே நேரம், அதை அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்திய போருக்கு ஆதரவளிக்க ஒரு சாக்காக பயன்படுத்தும் போலி-இடது சக்திகளை அது சமரசமின்றி எதிர்க்கிறது.

அணு ஆயுத மோதலுடன் மனிதகுலத்தை அச்சுறுத்தும் உக்ரேனில் நடக்கும் போருக்கும், 'தேசிய பாதுகாப்புக்கும்' எந்த தொடர்பும் கிடையாது. 1991ல் ஸ்ராலினிசம் சோவியத் ஒன்றியத்தை கலைத்துவிட்டதன் பேரழிவுகரமான விளைவான இந்த யுத்தமானது, பால்கன் முதல் மத்திய கிழக்கு வரை, வட ஆபிரிக்காவிலிருந்து மத்திய ஆசியா வரையிலான அமெரிக்க தலைமையிலான 30 ஆண்டுகால ஏகாதிபத்தியப் போரின் தொடர்ச்சியாகும். இறுதி ஆய்வில், பூகோள முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்து தோன்றும் போருக்கு, தேசிய தீர்வு எதுவும் கிடையாது. ஒரே முற்போக்கான தீர்வு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலையீட்டிலேயே உள்ளது.

உலகெங்கிலும் காணப்படுவதைப் போலவே, துருக்கியிலும், பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் உக்ரைன் போருக்கு எதிராக உள்ளனர். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் துருக்கியில் 80 சதவீத மக்கள் போருக்கு எதிராக இருப்பது கண்டறியப்பட்டது. துருக்கியிலும் சர்வதேச அளவிலும் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கம் அடிப்படையாக கொண்டிருக்க வேண்டிய சமூக அடிப்படை இதுவே ஆகும். இந்த இயக்கம், முழு ஏகாதிபத்திய சார்பு அரசியல் ஸ்தாபனத்திற்கு எதிராகவும் சுயாதீனமாகவும், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே கட்டியெழுப்பப்பட முடியும்.

மத்திய கிழக்கில் இருந்து அனைத்து ஏகாதிபத்திய படைகளும் திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்றும், சிரியா மற்றும் ஈராக் உட்பட வெளிநாடுகளில் உள்ள துருக்கியின் துருப்புக்கள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் சோசலிச சமத்துவக் குழு பரிந்துரைக்கின்றது.

  • பூச்சிய கோவிட் கொள்கை

அரசாங்கங்களின் விஞ்ஞானபூர்வமற்ற கூற்றுக்கள் எதுவாக இருந்தாலும், கோவிட்-19 தொற்றுநோய் தொடர்கிறது. சோசலிச சமத்துவக் குழு, பூச்சிய கோவிட் கொள்கைக்காக வாதிடுகிறது. இது செயல்படுத்தப்படும் போது, வைரஸ் பரவுவதை நிறுத்துவதிலும் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்தக் கொள்கையால் உலக அளவிலேயே கோவிட்-19 தொற்றை ஒழிக்க முடியும், மற்றும் அதற்கு வேலைத் தளங்கள் மற்றும் பாடசாலைகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்புக் குழுக்களை அமைப்பதன் மூலம் தொழிலாளர்களை அணிதிரட்டுவது அவசியமாகும்.

கோவிட்-19 தொற்றுநோய் சம்பந்தமாக அனைத்துலகக் குழு தொடக்கி வைத்த உலகளாவிய தொழிலாளர் விசாரணையை சோசலிச சமத்துவக் குழு ஆதரிக்கின்றது. பூச்சிய-கோவிட் கொள்கையின் அவசியத்தை தொழிலாள வர்க்கத்திற்கு கற்பிக்க போராடும் இது, இந்த விசாரணையில் தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை பங்கேற்குமாறு அழைப்புவிடுக்கின்றது.

  • சிக்கன நடவடிக்கைகளுக்கும் அடக்குமுறைக்கும் எதிராக போராடுவதற்கு, தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக நடவடிக்கை குழுக்களை உருவாக்கி, தொழிலாளர்களை ஒழுங்கமைத்திடுங்கள்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே, ஊழல் நிறைந்த, கூட்டுத்தாபன-சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாகவும் அதற்கு எதிராகவும் போராட்டங்களுக்கான வேலைத்தள அமைப்புகளை கட்டியெழுப்பவும் அவற்றை சர்வதேச ரீதியில் இணைக்கவும் முயற்சிக்கும் ஒரே அரசியல் போக்கு ஆகும். அத்தகைய இயக்கத்திற்கான உந்துசக்தியை, எல்லா நிறங்களிலும் ஆன, ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் கீழ், பல தசாப்த காலங்களாக முன்னெடுக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்ட சமூக நிலைமைகள் மற்றும் பொலிஸ்-அரச அடக்குமுறைகள் மீதான தொழிலாளர்களின் கோபத்திலேயே காணமுடியும்.

ஊதியம் வழங்குவதில் எடுத்துக்கொண்டால் ஐரோப்பிய நாடுகளில் துருக்கி மிகக் குறைந்த இடத்தில் உள்ளது. நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் மாதாந்திர வறுமைக் கோடு 33,000 லிராக்களை ($1,700) தாண்டியிருந்தாலும், உழைக்கும் மக்களில் கணிசமான பகுதியினர் குறைந்தபட்ச ஊதியமான 8,500 லிராக்களில் ($435) வாழ முயற்சிக்கின்றனர். உணவுப் பற்றாக்குறை 70 சதவீதமாக இருப்பதால், பல குடும்பங்களுக்கு ஆரோக்கியமான உணவு முறை வெகு தொலைவிலேயே உள்ளது. சமூக சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது. 2022ல், மக்கள்தொகையில் முதல் 20 சதவீதத்தினருக்கு செல்லும் தேசிய வருமானத்தின் பங்கு 48 சதவீதமாக உயர்ந்துள்ளது (இது 16 ஆண்டுகளில் இருந்திராத உயர்ந்த அளவு ஆகும்). பல தசாப்தங்களாக, தொழிற்சங்கங்கள் சமூக உரிமைகளை அகற்றுவதிலும், ஊதியங்களைக் குறைப்பதிலும் அரசாங்கத்துடன் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒத்துழைத்துள்ளன.

அடிப்படை சமூக உரிமைகளை மீட்பதற்கும், கோவிட்-19 இறப்புகளுக்கு முடிவுகட்டுவதற்கும், ஏகாதிபத்தியப் போரை எதிர்ப்பதற்குமான போராட்டத்தை, அரசுடன் கார்ப்பரேட்வாத பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடம் ஒப்படைக்க முடியாது. நாடுகடந்த நிறுவனங்களுக்கு எதிரான எந்தவொரு தீவிரமான தொழில்துறை போராட்டத்திற்கும், தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்தும் தேசிய எல்லைகளுக்கு அப்பாலும் சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அந்த நோக்கத்திற்காக, நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) கட்டியெழுப்புவதற்கான அனைத்துலகக் குழுவின் அழைப்பை சோசலிச சமத்துவக் குழு முன்னெடுக்கிறது.

  • அவசர சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் பேரில் நிதியப் பிரபுத்துவத்தை அபகரிப்பதற்காக

பிரதான மத்திய வங்கிகளால் பொதுப் பணத்தை அச்சடிப்பதன் மூலம் நிதியப் பிரபுத்துவம் டிரில்லியன் கணக்கான டொலர்களால் வளப்படுத்தப்பட்டுள்ளது. நிதிய ஊக வணிகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த நிதிகள், பணவீக்கத்தை தூண்டிவிடுவதுடன் அரச கடனை பெருமளவில் அதிகரிக்கச் செய்தது, ஆனால் பங்குச் சந்தைகளை உயர்த்தியது. பெருநிறுவன இலாபங்களின் அதிகரிப்புக்கு பணவீக்கம் பிரதான உந்துதலாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

தொற்றுநோய்களில் மில்லியன் கணக்கான உயிர்களைப் பலி கொடுத்து, பாதுகாப்பற்ற நிலையில் தொழிலாளர்களை உழைக்கச் செய்து, தங்களின் முறைகேடான மூலதனத்தில் இலாபம் ஈட்டிய ஒரு ஒட்டுண்ணி பிரபுத்துவம், சமூகத்தைச் சூறையாடுகிறது. துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் பாதுகாப்பற்றதாக அறியப்பட்ட கட்டிடங்களில் எண்ணற்ற மக்கள் கொல்லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டமைக்குப் பின்னாலும் இது இருந்தது. மார்மரா பிராந்தியத்திலும் துருக்கியிலும் சர்வதேச அளவிலும் பெரிய பூகம்பங்கள் மற்றும் அதுபோன்ற 'இயற்கை பேரழிவுகள்' எதிர்பார்க்கப்படும் பிற பகுதிகளிலும் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒழுக்கமான மற்றும் பாதுகாப்பான வீட்டு வசதிகளை உடனடியாக வழங்குவதற்கு சோசலிச சமத்துவக் குழு பரிந்துரைக்கின்றது.

தனியார் கைகளால் கொள்ளையடிக்கப்பட்டுள்ள பொது நிதிகள் பறிமுதல் செய்யப்பட்டு, மக்களின் அவசர சமூகத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்கு ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பால் உள்ள தொழிலாள வர்க்கத்தின் கைகளுக்கு அரச அதிகாரம் மாற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

இத்தகைய முன்மொழிவுகள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பலம், அதன் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டம் மற்றும் அது அரச அதிகாரத்தை வெல்வதற்கான போராட்டத்தின் அவசியத்தின் மீதும் கட்டியெழுப்பப்படுவதுடன், சோசலிச சமத்துவ குழுவை தொழிலாள வர்க்கத்தை நோக்கிய மார்க்சிய-அனைத்துலகவாத போக்காக -அதாவது ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பாக- அடையாளப்படுத்துவதோடு, துருக்கியில் உள்ள ஏனைய அனைத்து அரசியல் போக்குகளில் இருந்தும் அடிப்படையில் அதை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புங்கள்! 

தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு சமூக மற்றும் ஜனநாயக பிரச்சனையையும் தேர்தல்கள் தீர்க்கப் போவதில்லை. துருக்கியிலும் உலகளாவிய ரீதியிலும் உள்ள தீர்க்கமான பிரச்சனை, வரலாற்று முன்னோக்கு மற்றும் அரசியல் தலைமைத்துவம் பற்றிய பிரச்சினையாகும். இது அனைத்துலகக் குழுவையும் அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளையும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்னணிப் படையாகக் கட்டியெழுப்புவதாகும்.

தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தேசிய முதலாளித்துவத்திற்குப் பின்னால் தள்ள முற்படும் போலி-இடது சக்திகளுக்கு எதிராக, அனைத்துலகக் குழுவும் சோசலிச சமத்துவக் குழுவும், உலகம் முழுவதும் வளர்ந்து வரும் புறநிலை புரட்சிகர நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை தயார்படுத்த போராடுகின்றன. முதலாளித்துவ அரசுக்கு எதிராக எல்லா இடங்களிலும் தொழிலாளர்களை பெருகிய முறையில் நேருக்கு நேர் நிற்க வைக்கும் மோதலை, அரச அதிகாரத்தை 'சீர்திருத்தம்' செய்வதன் மூலம் தீர்க்க முடியாது, மாறாக அதை சோசலிசப் புரட்சி மூலம் தொழிலாள வர்க்கத்தின் கைக்கு மாற்றுவதன் மூலமே தீர்க்க முடியும். வெகுஜனப் புரட்சிகரப் போராட்டங்கள் வெடிப்பதற்கு முன் ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டிய இந்தப் போராட்டத்திற்கான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடிப்படையானது, போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் 1917 அக்டோபர் புரட்சியில் இருந்ததைப் போலவே ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு ஆகும்.

மார்க்சிஸ்ட்-ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அரசியல் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றுப் போராட்டங்களையே சோசலிச சமத்துவக் குழு அடித்தளமாகக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணைந்து சோசலிச சமத்துவக் கட்சியை அமைப்பதற்கான எங்கள் தீர்மானத்தில் நாங்கள் கூறியது போல், 'இந்த தொடர்ச்சியானது தேசியவாத ஸ்ராலினிசச் சீரழிவுக்கு எதிராக, உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டத்தை பாதுகாக்க, 1923ல் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இடது எதிர்ப்பு இயக்கத்தை ஸ்தாபித்தது வரை பின்செல்கின்றது. விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் ரஷ்யாவில் போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் 1917 அக்டோபர் புரட்சிக்கு வழிகாட்டியது இந்த மூலோபாயமும் வேலைத்திட்டமுமே ஆகும்.

இந்த ஆண்டு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் துருக்கிக்கு முக்கிய இடம் உண்டு. ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஒரு தவிர்க்கமுடியாத எதிர்ப்பாளராக நாடு கடத்தப்பட்டு இருந்த இஸ்தான்புல்லில் தனது மிக முக்கியமான பல படைப்புகளை எழுதியதோடு மட்டுமன்றி, அவர் 1933 இல் பிரிங்கிபோவில் இருந்து நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்கவும் அழைப்பு விடுத்தார்.

1938ல் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்துக்கு 1953ல் இருந்து தலைமை தாங்கிய அனைத்துலகக் குழு, ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், பப்லோவாதம் மற்றும் அனைத்து வகையான குட்டி முதலாளித்துவ தேசியவாதத்திற்கும் எதிராக ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாத்து வந்துள்ளது. இன்று சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமை பற்றிய பிரச்சினையை தீர்க்க போராடும் ஒரே அமைப்பு இதுவே ஆகும்.

துருக்கியிலும் மத்திய கிழக்கிலும் சோசலிச சமத்துவக் கட்சிகளை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில், ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள நான்காம் அகிலத்தின் சகோதர கட்சிகளுடன் நெருக்கமான அரசியல் ஒத்துழைப்பில் வேலை செய்யும் சோசலிச சமத்துவக் குழுவானது, ஏகாதிபத்திய போருக்கு எதிராகவும் உலக சோசலிசப் புரட்சிக்காகவும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடுகிறது.

இந்த அறிக்கையுடன் உடன்படுகின்ற மற்றும் ஏகாதிபத்திய யுத்தம், சமூக எதிர்ப்புரட்சி மற்றும் பொலிஸ் அரசுக்கும் எதிரான போராட்டத்தில் உண்மையான சோசலிச மாற்றீட்டைத் தேடுகின்ற அனைவருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் சோசலிச சமத்துவக் கட்சியையும் கட்டியெழுப்பும் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு சோசலிச சமத்துவக்கு குழு அழைப்பு விடுக்கின்றது.

Loading