இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.
இவ்வாரம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு மூலோபாய மீளாய்வு ஆவணம் (DSR), இரண்டாம் உலகப் போர் முடிவுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பைக் கோடிட்டுக் காட்டியது.
விமானப்படை, கடற்படை மற்றும் தரைப்படை உட்பட, 'அனைத்து களங்களிலும் மேம்படுத்தப்பட்ட நீண்ட தூரத் தாக்கும் திறனை' இந்நாடு விரைவாகப் பெற வேண்டும் என்று அந்த மீளாய்வை எழுதியவர்களும், அதை வெளியிட்ட தொழிற்கட்சி அரசாங்கமும் அறிவித்துள்ளனர். இது ஏனென்றால், இந்தோ-பசிபிக் இப்போது 'வல்லரசு மூலோபாய போட்டியின்' அரங்கமாக மாறியுள்ளதால், இது 'மிகப் பெரிய மோதலுக்கான வாய்ப்பை' எழுப்புகிறதாம்.
சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தலைமையில் ஓர் ஆக்கிரோஷமான போரில் பங்கேற்க ஆஸ்திரேலியா தயாராக உள்ளது என்ற பிரகடனம் அல்லாமல் இந்த ஆவணம் வேறொன்றுமில்லை. 'நல்லதோர் எதிர்காலம்' என்ற முழக்கத்துடன் ஓராண்டுக்கும் குறைவான காலத்திற்கு முன்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தொழிற்கட்சி அரசாங்கத்தால் இந்த வேலைத்திட்டம் மக்களின் முதுகிற்குப் பின்னால் முன்னெடுக்கப்படுகிறது. இந்தப் போர் திட்டத்திற்கு மக்கள் ஒப்புதல் எதுவும் இல்லை. உழைக்கும் மக்கள் மத்தியில் போர் எதிர்ப்புணர்வே பரந்தளவில் மேலோங்கி உள்ளது.
ஆஸ்திரேலிய கட்டமைப்பு ஓர் உலகளாவிய இயல்நிகழ்வின் பாகமாக உள்ளது. 1930 களுக்குப் பிந்தைய முதலாளித்துவத்தின் இந்த ஆழமான நெருக்கடிக்கு மத்தியில், அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் மீண்டும் இராணுவமயப்பட்டு வருகின்றன. உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மனி மீண்டும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஜப்பான் அதன் இராணுவ வரவுசெலவு திட்டக்கணக்கை இரட்டிப்பாக்கி உள்ளது. பிரான்சும் பிரிட்டனும் அவற்றின் ஏகாதிபத்திய வேட்கைகளை மீண்டும் உயிர்பித்து வருகின்றன.
புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நாடான ஆஸ்திரேலியா, இந்த செயல்முறையில் இணைந்து வருகிறது என்பது, இராணுவவாத வெடிப்பின் உலகளாவிய தன்மையைக் காட்டுகிறது.
அனைத்திற்கும் மேலாக, இந்த ஆஸ்திரேலிய மீளாய்வு ஆவணம் தனிப்பட்ட முறையில் தீர்மானிக்கப்படவில்லை. அது பைடென் நிர்வாகத்துடனும் அமெரிக்க அரசுடனும் மிக நெருக்கமாக வேலை செய்யப்பட்டு அவற்றின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அதன் பினாமி போரை அமெரிக்கா தொடர்ந்து விரிவாக்கி வருகிறது. இதில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதோடு, உக்ரேனிலேயே சிறப்புப் படைகளும் மற்றும் பிற இராணுவத்தினரும் நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர். இப்போது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரேனை நேட்டோவில் இணைக்க வேண்டும் என்று அழுத்தமளித்து வருகின்றன. இந்த நகர்வு ரஷ்யாவுடன் நேரடிப் போரைத் தூண்டக்கூடிய ஒரு நடவடிக்கையாகும்.
ஆனால் கிழக்கு ஐரோப்பாவில் அவர்கள் பின்தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தக் கொள்கைகள் ஓர் அணுஆயுதப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்றாலும் கூட, அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும், உலகளாவிய போராக அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு புதிய முகப்பைத் திறந்து விட்டு வருகிறார்கள்.
இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் அப்பிராந்தியத்தில் உள்ள மற்ற சிறிய நாடுகளை மையமாக உள்ளடக்கி ஓர் ஆக்ரோஷமான இராணுவ கூட்டணிகளின் வலையை உருவாக்குவது உள்ளடங்கலாக, சீனாவிற்கு எதிராக அமெரிக்கா அப்பிராந்தியம் எங்கிலும் ஒருங்கிணைந்த உத்தியை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, தைவான் தொடர்பான பல தசாப்த கால நிலைப்பாட்டை மாற்றுவது உட்பட, ஒரு கடுமையான போருக்கு இட்டுச் செல்லும் வெடிப்புப் புள்ளிகளை அமெரிக்கா வேண்டுமென்ற தூண்டிவிட்டு வருகிறது.
ஆஸ்திரேலியா குறிப்பாக முக்கிய பங்கு வகிக்கும். இந்தோ-பசிபிக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகவும் நம்பகமான கூட்டாளியான அது, வாஷிங்டனின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப மற்ற நாடுகளை வழிக்குக் கொண்டு வர அவற்றை மிரட்டவும் துன்புறுத்தவும் செய்யும். ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் இந்த நிலைப்பாடுகளுக்கு ஏற்பட கடுமையாக செயல்பட்டுள்ளார். அவர் ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் ஒவ்வொரு பசிபிக் தீவு நாட்டுக்கும் மற்றும் பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பயணித்துள்ளார். அங்கெல்லாம் அப்பெண்மணி இந்தப் போக்கிலிருந்து விலகுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அப்பட்டமாக தெளிவுப்படுத்தி உள்ளார்.
ட்ரம்பின் முன்னாள் கடற்படை செயலர் ரிச்சர்ட் ஸ்பென்சரின் வார்த்தைகளில் கூறினால், இராணுவரீதியில் ஆஸ்திரேலியா 'ஈட்டி முனை' ஆக இருக்கும். அது அப்பகுதியில் இடைவிடாத இராணுவக் கட்டமைப்பிற்கான வேகத்தை அமைக்கும். சீனாவை ஆயுதங்களுடன் முழுமையாக சுற்றி வளைப்பதே இதன் தர்க்கமாகும்.
மேலும் அமெரிக்க இராணுவத்திற்கு அதுவே ஒரு 'தெற்கு நங்கூரமாகவும்' செயல்படும். போர் விமானங்கள், தாக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் உட்பட உயர்மட்ட அமெரிக்க தாக்கும் தளவாடங்களின் தொகுப்பை முன்பினும் அதிகளவில் அந்தத் தீவு கண்டத்தில் நிலைநிறுத்தும். இவை பெரும்பாலான சீன ஏவுகணைகளின் தாக்கும் தூரத்திற்கு வெளியே அமைகின்றன.
இந்தப் பாதுகாப்பு மூலோபாய மீளாய்வு ஆவணம் பரந்த இராணுவக் கட்டமைப்புக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை. அது பொதுவாக குறைந்தபட்சம் 1970 கள் மற்றும் 1980 களுக்குப் பின்னர் இருந்து ஆஸ்திரேலிய பாதுகாப்புக் கொள்கையில் பெயரளவுக்கு உள்ளடக்கப்பட்டிருந்த கோட்பாடுகளையும் மாற்றி அமைக்கிறது.
ஆஸ்திரேலியா, ஓர் ஏகாதிபத்திய சக்தியாக, குறிப்பாக தெற்கு பசிபிக் பகுதியில், அதன் சூறையாடும் நலன்களைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளது. ஈராக் மீதான சமூக படுகொலை படையெடுப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் மீது இருபது ஆண்டுகால நீண்ட ஆக்கிரமிப்பு உட்பட, அமெரிக்கா தலைமையிலான ஒவ்வொரு குற்றகரமான போரிலும் அது இணைந்து செயல்பட்டுள்ளது.
ஆனால் அதன் இராணுவக் கொள்கையானது, குறைந்தபட்சம் காகிதத்திலாவது, ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலிய கண்டத்தையும் அதன் அணுகுமுறைகளையும் பாதுகாப்பதையும் மற்றும் அதன் மிக அருகாமை பகுதியில் சிறியளவிலான மோதல்களுக்குத் தயாரிப்பு செய்வதையும் அதிகளவில் கொண்டிருந்தது. ஆனால் இனி அவ்வாறு இல்லை. இராணுவம் ஒட்டுமொத்த இந்தோ-பசிபிக் முழுவதும், இன்னும் பரந்தளவிலும் கூட, 'பாதிப்பை எதிர்நோக்கி' நிலைநிறுத்தல்களைச் செய்ய வேண்டும் என்றும், ஏனெனில் 'இலக்குகள் நமது எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை' என்றும் இப்போது DSR ஆவணம் அறிவிக்கிறது.
இந்தப் பாதுகாப்பு மூலோபாய மீளாய்வு ஆவணம் மற்றொரு புதிய கோட்பாட்டை அறிமுகப்படுத்தியது. ஒரு 110 பக்க ஆவணத்தில் 37 முறை திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட சொற்றொடர்களில், இராணுவ முயற்சியானது 'ஒட்டுமொத்த அரசின்' முயற்சியாக, 'ஒட்டுமொத்த தேசத்தின்' முயற்சியாக இருக்க வேண்டும் என்று அது அறிவிக்கிறது. இதற்கு 'தேசிய ஒற்றுமையும் நல்லிணக்கமும்' தேவை என்று அந்த ஆவணம் அறிவிக்கிறது.
இது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து, பொருளாதாரம் மற்றும் அனைத்து வேலையிடங்கள் வரையில், சமூகத்தின் ஒவ்வொரு அம்சமும் 'தேசிய பாதுகாப்பு' மற்றும் போர் முயற்சிகளுக்கு கீழ்படியச் செய்யப்பட வேண்டும் என்ற பிரகடனத்திற்குக் குறைவானதில்லை.
இது படைத்துறைசாரா நிர்வாகம் இராணுவத்தின் மீது வைத்திருக்கும் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு மீது கேள்வி எழுப்புகிறது என்பது மட்டுமல்ல, இராணுவத்தைப் பெயரளவிற்கான ஜனநாயக அமைப்புகளுக்கு மேலாக நிறுத்தும் விதத்தில் உறவுகளைத் தலைகீழாக மாற்றுகிறது. 'தேசிய ஒற்றுமையை' குலைப்பதாகக் கருதப்படும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற போராட்ட நடவடிக்கைகளைச் சட்டவிரோதமாக்குவது உட்பட, இது பொலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கான கட்டமைப்பையும் வழங்குகிறது.
இந்த பெரும் மாற்றங்களை நியாயப்படுத்துவதற்காக, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சீனா அதன் மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பை மேற்கொண்டு வருவதாகவும், அது இப்பிராந்தியம் முழுவதும் 'பொருளாதார ரீதியில் நிர்பந்திக்கும்” ஆக்ரோஷமான செயல்முறையில் ஈடுபட்டு வருவதாகவும் வாஷிங்டனின் போலியான கூற்றுக்களையே அந்த மீளாய்வு ஆவணம் ஒப்பிக்கிறது.
இவை அனைத்தும் வெறுமனே சித்தரிப்புகள் தான். இந்தோ-பசிபிக்கிலும் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் உட்பட, அமெரிக்கா அதன் இராணுவ தளங்களைக் கொண்டு உலகையே சுற்றி வளைத்துள்ளது. அனைத்திதற்கும் மேலாக, 2011 இல் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தளத்திலிருந்து ஒபாமா நிர்வாகம் அதன் 'ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை' (pivot to Asia) அறிவித்ததில் இருந்து, பென்டகன் இந்தோ-பசிபிக் பகுதியில் பரந்த இராணுவ விரிவாக்கத்தைச் செய்துள்ளது.
அனைத்திற்கும் மேலாக, இந்தப் பாதுகாப்பு மூலோபாய மீளாய்வு ஆவணத்தில் விவரிக்கப்பட்ட ஒவ்வொரு இராணுவத் தளவாடங்களும் ஆக்ரோஷமானவை. “சக்திவாய்ந்த கடல் வேட்டையன்” (the apex predator of the sea) என்று அழைக்கப்படும், ஆஸ்திரேலியா வாங்க உள்ள அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் தொகுப்பு; பெயரிடப்படாத ஆயுதமேந்திய ட்ரோன்களுடன் சேர்ந்து இராணுவத்திற்கான நீண்டதூர தாக்கும் ஏவுகணைகள்; கடற்படை மற்றும் விமானப்படைக்கான தாக்கும் ஏவுகணைகள் ஆகியவை அதில் உள்ளடங்குகின்றன.
இதற்கும் மேலாக, அந்தக் கண்டத்தின் ஒட்டுமொத்த வடக்கு பகுதியும் நடைமுறையளவில் இராணுவக் களமாக மாற்றப்பட்டு வருகின்றன. பெருநில சீனாவுக்கு எதிராகவும், அப்பகுதி எங்கிலும் ஆக்ரோஷமான அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய நடவடிக்கைகளுக்கு அப்பகுதி தொடக்கப் புள்ளியாக சேவையாற்றும் விதத்தில், அங்கே பரந்தளவில் இராணுவத் தளங்களும் எரிபொருள் நிரப்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மூத்த அமெரிக்கப் பிரமுகர்களால் கூறப்பட்டுள்ளதைப் போல, போர் திட்டங்களின் உண்மையான நோக்கம், சீனாவை எதிர்த்து சண்டையிடுவதற்காகும். ஏனென்றால் அதன் பொருளாதார வளர்ச்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை அச்சுறுத்துகிறது. பூகோள மூலோபாய ரீதியில் இந்த முக்கிய யுரேஷிய பெருநிலத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தைப் பெறும் நோக்கில், ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதல்கள் அதிகரித்தளவில் ஒரே மோதலின் இரண்டு முகப்புகளாகப் பார்க்கப்படுகின்றன.
அனைத்து வல்லரசுகளையும் உள்ளடக்கிய இந்தப் போர் முனைவு, முதலாளித்துவ அமைப்புமுறையின் உடைவில் வேரூன்றி உள்ளது. இந்த அரசாங்கங்கள் அனைத்தும் அவற்றின் எதிரிகளுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட ஆக்ரோஷமான இராணுவ நடவடிக்கைகள் மூலமாக அவற்றின் சொந்த நெருக்கடியைச் சரிக்கட்ட நினைக்கும் அதேவேளையில், வெடிப்பார்ந்த சமூக பதட்டங்களை வெளிப்புறமாக திசைத்திருப்ப முயன்று வருகின்றன.
ஏகாதிபத்தியவாதிகளை போருக்குத் தூண்டும் அதே நிகழ்வுபோக்குகள் தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய சமூகப் போராட்டங்களுக்கும் தூண்டுதலை அளிக்கின்றன. ஏற்கனவே வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி மிகப் பெரியளவில் உள்ளது. ஒவ்வொரு கண்டத்திலும் நடைமுறையளவில் மிகப் பெரிய வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இத்தகைய போராட்டங்கள், பரந்த இராணுவக் கட்டமைப்புக்குத் தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்கச் செய்யும் நோக்கில் சமூகச் செலவினக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் உட்பட போரின் விளைவுகளுக்கு எதிராக வெடித்து வருகின்றன.
முதலாளித்துவத்தையும் அதன் காலாவதியான தேசிய-அரசு அமைப்புமுறையையும் ஒழிப்பதன் மூலமாக மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும். அதாவது சமூக சமத்துவம், ஜனநாயக உரிமை மற்றும் சமாதானத்திற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் உலகெங்கிலுமான தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சோசலிச இயக்கத்திற்கான போராட்டம் என்பதே இதன் அர்த்தமாகும்.
இந்த முன்னோக்கு 2023 மே தின கொண்டாட்டத்திற்கான உலகளாவிய இணையவழி பேரணியில் விவரிக்கப்படும். அது திங்கட்கிழமை மே 1 இல் AEST நேரம் காலை 5 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாகும். இங்கே பதிவு செய்யலாம்.