போர் காய்ச்சலுடன், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்கு நெதன்யாகு அனைத்து முனைகளிலும் தாக்குதல் நடத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய படையினர் வியாழன் அதிகாலையில் இருந்து தொடர்ந்து இரண்டாவது இரவு பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அப்போது 20,000 பாலஸ்தீனிய வழிபாட்டாளர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள், மயங்கச் செய்யும் கையெறி குண்டுகள் மற்றும் இரப்பர் பூசப்பட்ட எஃகு தோட்டாக்கள் சுடப்பட்டன. அதேவேளை, ஆயுதம் ஏந்திய படையினர் ரம்ழான் தொழுகைக்காக அங்கு கூடியிருந்த வழிபாட்டாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதுடன், அவர்களை தடிகளாலும், துப்பாக்கி அடிப்பகுதிகளாலும் தாக்கினர்.

ஏப்ரல் 5, 2023, புதன்கிழமை அன்று, அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் பொலிசார் தேடுதல் நடாத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலிய பொலிசார் பழைய ஜெருசலேமில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் [Photo: Mahmoud Illean/WSWS]

பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கத்தின் கூற்றுப்படி, குறைந்தது 37 பேரை காயப்படுத்திய முதல் மூர்க்கத்தனமான தேடுதலை விட இரண்டாவது தேடுதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க விடாமல் மருத்துவ ஊழியர்களை இஸ்ரேலியப் படைகள் தடுத்ததாகவும் சங்கம் கூறியுள்ளது.

பொலிஸ் சோதனையில் சுமார் 450 வழிபாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டு அகற்றப்பட்டதுடன், 50 வயதுக்குட்பட்ட பாலஸ்தீனியர்கள் மசூதிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட மறுநாளே இரண்டாவது சுற்று வன்முறை நடத்தப்பட்டது. Jewish Power இற்கு தலைமை வகிக்கும் பாசிச தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் பொலிஸாரை இதற்குப் பாராட்டினார். 

ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து பதட்டங்களைத் தணிக்குமாறு  வந்துள்ள வேண்டுகோள்களுக்கு மத்தியில், இஸ்ரேலின் தாக்குதலானது தற்போது அரபு மற்றும் முஸ்லீம் உலகம் முழுவதும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.  

காசாவில் உள்ள போராளிக் குழுக்கள் இஸ்ரேல் மீது பல ராக்கெட்டுகளை வீசியவற்றில் பெரும்பாலானவை சேதம் அல்லது காயம் ஏற்படாமல் இடைமறிக்கப்பட்டன அல்லது தரையில் வீழ்த்தப்பட்டன. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) முற்றுகையிடப்பட்ட பகுதிக்கு எதிராக தாக்குதல்களை நடத்தினர். காசாவைக் கட்டுப்படுத்தும் மதக் குழுவான ஹமாஸ், இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டித்து, பதிலுக்கு ஆர்ப்பாட்டம் செய்ய பாலஸ்தீனியர்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், இராணுவ மோதலுக்கு அழைப்பு விடுப்பதை நிறுத்தியது.

இந்த ஆண்டு பாஸ்கா பண்டிகையுடன் ரமழான் பண்டிகையும் இணைந்தே கொண்டாடப்படுகிறது. கடந்த சில வருடங்களாக ரமழான் தினத்தன்று இஸ்லாமியர்களின் மூன்றாவது புனிதத் தலமான அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேலிய சிப்பாய்கள் வழிபாட்டாளர்கள் மீது வழமையாக தாக்குதல் நடத்துகின்றனர். இந்தச் செயலானது, நோன்பிற்காக இஸ்லாமியர்கள் மசூதிக்குள் இரவைக் கழிக்கும் வழக்கத்தைப் பின்பற்றுவதைத் தடுக்கிறது.   

மே 2021 இல், தீவிர வலதுசாரி குழுக்களின் ஆத்திரமூட்டல்களுடன் நடத்தப்பட்ட இதேபோன்ற தாக்குதல்களும், மற்றும் ஷேக் ஜர்ராவின் அருகே கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஆறு பாலஸ்தீனிய குடும்பங்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும், காஸாவின் பாதுகாப்பற்ற மக்கள் மீது இஸ்ரேலின் 11 நாள் கொலைகாரத் தாக்குதலைத் தூண்டியது. அந்த சமயத்தில், இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் 67 குழந்தைகள் உட்பட 261 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 2,200 பேர் காயமடைந்ததோடு, 113,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்தனர். இது, மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலின் பிரதான அரபு நகர்ப்பகுதிகள் மற்றும் நகரங்களுக்குள் போராட்டங்களுக்கும் கலவரங்களுக்கும் வழிவகுத்தது.

இந்த வாரம் அல்-அக்ஸா மசூதி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலின் சொந்த பாலஸ்தீனிய குடிமக்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்கள், அத்துடன் ஈரான் மற்றும் சிரியாவிற்கு எதிராக நடத்தப்பட்டத் தாக்குதல்கள் ஆகியவை, இஸ்ரேலுக்குள் போர்வெறியைத் தூண்டும் வகையிலான பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் பிரச்சாரத்தின் முன்னோட்டமாகும். 

அவரது தீவிர வலதுசாரி அரசாங்கத்திற்கு சர்வாதிகார அதிகாரங்களை வழங்குவதற்கான அவரது முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்கள் நான்காவது மாதமாக தொடர்கின்ற நிலையில், மேற்குக் கரை நகரமான ஹுவாரா மீதான சிறியதாக ஆனால் வளர்ந்து வரும் இனப்படுகொலை போன்ற குடியேற்றவாசிகளின் தாக்குதலை அடுத்து, அவரது அரசாங்கத்திற்கு எதிரான பாலஸ்தீனிய , இஸ்ரேலிய இளைஞர்களினதும் தொழிலாளர்களினதும் ஐக்கியத்தை தடுப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

இஸ்ரேலின் “வெளிப்புற எதிரிகளான” பாலஸ்தீனியர்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான அரசியல் பதட்டங்களை திசைதிருப்ப இராணுவவாதத்தின் அடிப்படையில் ஒருவித தேசிய “ஒற்றுமையை” உருவாக்க முடியும் என்று நெதன்யாஹூ கணக்கிடுகிறார். ஞாயிற்றுக்கிழமை, ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில் பேசுகையில், “இஸ்ரேலின் உள் விவாதமானது நமது உறுதியிலிருந்து ஒரு துளி கூட விலகாது. எங்கு, எப்போது வேண்டுமானாலும், அனைத்து முனைகளிலும் நமது எதிரிகளை எதிர்கொள்ளும் வலிமையும் திறமையும் நம்மிடம் உண்டு” என்று அவர் கூறினார். பெப்ரவரிக்குப் பிறகு முதல் முறையாக பாதுகாப்பு அமைச்சரவையைக் கூட்டுவதாக அவர் அறிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு தேடுதலின் போது கைது செய்யப்பட்ட சுமார் 450 பாலஸ்தீனியர்களில் குறைந்தது 397 பேரை பொலிசார் விடுவித்துள்ளனர். ஆனால் அவர்கள் ஒரு வாரத்திற்கு அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைய தடை விதித்துள்ளனர். மேற்குக் கரையிலிருந்து தடுத்துவைக்கப்பட்ட 47 கைதிகள் ஓஃபர் இராணுவ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கிழக்கு ஜெருசலேமைச் சேர்ந்த ஆறு பாலஸ்தீனியர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கைதிகள் விவகாரங்களுக்கான பாலஸ்தீனிய ஆணையத்தின்படி, “அங்கு கைது மற்றும் தடுப்புக்காவல் நிலைமைகள் அவமானகரமான மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையானதாகும். மேலும் காயமடைந்த கைதிகளுக்கு மருத்துவ கவனிப்பு வழங்கப்படவில்லை.”

வியாழன் காலை அல்-அக்ஸா மசூதிக்குள் டசின் கணக்கான இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் நுழைந்தபோது பொலிசார் அவர்களுக்கு பாதுகாப்பளித்தனர். இது, ஹெப்ரோனில் உள்ள இப்ராஹிமி மசூதி 1990 களில் பிரிக்கப்பட்டதைப் போல, இந்த மசூதியும் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் பிரிக்கப்படுவதற்கு தயாரிப்புகள் செய்யப்படுகின்றனவோ என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது. 

கோவில் ஆர்வலர்கள் உட்பட தீவிர வலதுசாரி குழுக்கள், வளாகத்தில் யூத பிரார்த்தனைகளை நடத்த உறுதிபூண்டுள்ளன. இந்த இடத்தை நிர்வகிக்கும் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் இது சட்டவிரோதமானது.  அவர்கள் மசூதியை யூத ஆலயமாக மாற்ற முயல்கின்றனர்.  முன்னதாக, அவர்கள் ஒரு வார கால பாஸ்கா விடுமுறை முழுவதும் பாரிய பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்தனர். மேலும் பென் க்விர் பலமுறை அழைப்பு விடுத்த ஒரு பாஸ்கா மிருக பலியை நடத்துவதற்கான தங்கள் விருப்பத்தையும் அவர்கள் அறிவித்தனர். இந்நிலையில், புதனன்று, “பாஸ்கா விடுமுறையில் அந்த இடத்தில் ஆட்டுக்குட்டிகள் அல்லது ஆடுகளுடன் மிருக பலி கொடுக்க நிற்கிறார்களோ என்ற சந்தேகத்திற்கு இடமான” “பலரை” மசூதிக்கு அருகில் பொலிசார் தடுத்துவைத்தனர். 

ஜெருசலேமில் பதட்டத்தை அதிகரிக்கும் வகையில், ஜெருசலேமின் பழைய நகரில் இஸ்ரேலிய குடியேற்றவாசி ஒருவர் 14 வயது பாலஸ்தீனிய சிறுவனை துப்பாக்கியால் சுட்டார். 

மேற்குக் கரையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், நப்லஸ், ஜெனின், துல்கர்ம், ஹெப்ரோன், ரமல்லா, ஜெனின், பெத்லஹேம் மற்றும் ஜெரிகோ ஆகிய இடங்களில், இரண்டாவது இரவில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுடன் ஏற்பட்ட கோபமான மோதல்களையும் ஊர்வலங்களையும் கலைக்க விஷ வாயுவைப் பயன்படுத்தின. அப்போது, நப்லஸில் குறைந்தது 12 பேரும், தெற்கு நகரமான ஹெப்ரோனுக்கு அருகிலுள்ள பெய்ட் உம்மரில் டசினுக்கு மேற்பட்டவர்களும் காயமடைந்தனர். மேலும் மற்றொருவர் நேரடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தார். 

இஸ்ரேலுக்குள், புதன்கிழமை இரவு பாலஸ்தீனிய நகரமான உம் அல்-ஃபஹ்மில் உள்ள அல்-அக்ஸா மசூதி தாக்கப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட கொந்தளிப்பான போராட்டங்களை பொலிசார் மயங்கச் செய்யும் கையெறி குண்டுகளை வீசித் தாக்கி ஒடுக்கியதுடன், குறைந்தது 12 பேரை கைது செய்தனர். மேலும், அருகிலுள்ள வடக்கு நகரங்களான ரெய்னே மற்றும் கபர் மண்டாவிலும் எதிர்ப்புகள் வெடித்தன. 

கடந்த வாரத்தில், இஸ்ரேல் சிரியா மீது நான்கு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத்தாக்குலில் இரண்டு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். சிரியாவில் இருந்து வடக்கு இஸ்ரேலுக்குள் ஆளில்லா விமானத்தை தெஹ்ரான் பதிலடியாக செலுத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படையானது செவ்வாய்க்கிழமை காலை டமாஸ்கஸ் அருகே மற்றொரு வான்வழித் தாக்குதலில் இரண்டு குடிமக்களைக் கொன்றது. 

சிரியாவின் வெளியுறவு அமைச்சகமானது, இஸ்ரேலின் தாக்குதல்கள் பிராந்தியத்தை பதட்டத்தின் “மொத்த விரிவாக்கத்திற்கு” இழுத்துச் செல்லும் அபாயம் இருப்பதாக எச்சரித்ததுடன், டெல் அவிவ் “அதன் எல்லைகளுக்கு வெளியே நடத்தப்படும் ஆக்கிரமிப்புகள் மற்றும் குற்றங்கள் மூலம் அதன் உள் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க” சிரியாவை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளது. 

செவ்வாயன்று, ஈரானிய புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் ரமலான் ஷெரீப், மத்திய தெஹ்ரானில் கொல்லப்பட்ட காவலர்களின் இறுதி ஊர்வலத்தில் பேசுகையில், அவர்களின் மரணத்திற்குப் பழிவாங்குவதாக உறுதியளித்தார். 

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் தலைமைப் பணியாளர் ஹெர்சி ஹலேவி, இஸ்ரேல் ஈரானைத் தாக்குவதற்கு “தயாராக” இருப்பதாகவும், அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் கூட அவ்வாறு செய்ய முடியும் என்றும் பெருமையாகக் கூறினார். i24NEWS செய்தி ஊடகமானது, “ஈரானுக்கு எதிராக நாங்கள் செயல்பட தயாராக இருக்கிறோம். இஸ்ரேலிய இராணுவம் தொலைதூர நாடுகள் மீதும் அண்டை நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தும் திறனைக் கொண்டுள்ளது” என்று ஹலேவி கூறியதை மேற்கோள் காட்டியுள்ளது.

வியாழன் பிற்பகலில், லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது டசின் கணக்கான ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. இதில் இருவர் காயமடைந்தனர் மற்றும் சில இடங்களில் தீயை ஏற்படுத்தியது. எந்த அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை என்றாலும், ஹெஸ்புல்லாவின் ஒப்புதலின் பேரில் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று இஸ்ரேல் கருதியதுடன், தெற்கு லெபனோன் நகரமான அல்-கிலைலே மீது அது குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியது. அல்-அக்ஸாவைப் பாதுகாக்க பாலஸ்தீனியர்கள் எடுக்கும் “அனைத்து நடவடிக்கைகளுக்கும்” ஆதரவளிப்பதாக ஈரான் ஆதரவு ஆயுத மற்றும் அரசியல் குழு கூறியுள்ளது.

ஆயுதப் படைகளின் சில பிரிவுகளுக்குள் ஏற்படுத்திய கோபத்தின் காரணமாக நீதித்துறை மறுசீரமைப்பை நிறுத்துமாறு அழைப்பு விடுத்ததற்காக, மார்ச் 26 அன்று நெதன்யாஹூ பதவி நீக்கம் செய்ய முயன்ற பாதுகாப்பு அமைச்சர் யோவ் கோலன்ட் இப்போது அவருடன் தோன்றியுள்ளார். இஸ்ரேலின் மீட்பாளராக தம்மை தாமே பிரகடனப்படுத்திக் கொண்டவரான எதிர்க்கட்சி இயக்கத்தின் தலைவர் ஈரானை எச்சரித்து, “ஈரானியர்களும் ஹெஸ்பொல்லாவும் எங்களைத் தாக்க இஸ்ரேல் அனுமதிக்காது. நாங்கள் அவர்களை சிரியாவில் இருந்து அவர்கள் இருக்க வேண்டிய இடமான ஈரானுக்கு அனுப்புவோம்” என்று கூறினார். புதனன்று, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையானது “ஒவ்வொரு சாத்தியத்திற்கும்” தயாராகி வருவதாக அவர் வலியுறுத்தினார். 

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான நெதன்யாஹூவின் பாசிசத் தாக்குதலுக்கும், ஹெஸ்பொல்லா, சிரியா மற்றும் ஈரானுக்கு எதிரான அவரது போர்வெறிக்கும் உள்ள கோலன்டின் ஆதரவு என்பது உத்தியோகபூர்வ எதிர்ப்பு அமைப்பானது எந்த வகையிலும் சர்வாதிகாரத்திற்கும், எதேச்சதிகாரத்திற்குமான மாற்றீடு இல்லை என்பதையும், பாலஸ்தீனியர்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான போரைத்தவிர வேறொன்றையும் விரும்பவில்லை என்பதையும் உறுதிப்படுத்துகிறது. 

எதிர்க்கட்சித் தலைவர்களான யாயர் லாபிட், பென்னி காண்ட்ஸ் மற்றும் முன்னாள் தளபதிகள், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தலைவர்கள் மற்றும் இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கும் வணிக நிர்வாகிகள் ஆகியோருக்கும், தனக்கும் அடிப்படைக் கொள்கை வேறுபாடுகள் இல்லை என்பதை நெதன்யாஹூ அறிவார். அவரும் அவருடைய பாசிசக் கூட்டணிப் பங்காளிகளும் இஸ்ரேலின் மெல்லிய ஜனநாயகப் மூடுதிரையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள் மற்றும் முன்னேறிய நாடுகளின் பொருளாதார அமிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பின் (OECD) குழுவில் மிகவும் சமத்துவமற்ற  ஒரு நாட்டில் ஏற்கனவே தீவிரமாக துருவப்படுத்தப்பட்ட சமூகத்தை மேலும் பிளவுபடுத்தும் அபாயத்தை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள் என்ற அச்சம் தான் எதிர்க்கட்சிகளிடம் உள்ளது. 

இந்த எதிர்த்தரப்பினர், இஸ்ரேலிய முதலாளித்துவத்தினதும் சியோனிச அரசினதும் விசுவாசமான பாதுகாவலர்களாக, இஸ்ரேலின் 75 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய எதிர்ப்பு இயக்கத்தை கலைத்து, மக்களுக்கு எதிராக இஸ்ரேலின் தன்னலக்குழுக்களின் ஆட்சிக்கு முட்டுக்கொடுக்க நீதித்துறையை பலமிழக்கவைக்கும் அவரது திட்டங்களில் சில போலியான மாற்றங்களை செய்வதற்கு அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். பாலஸ்தீனிய கிளர்ச்சி அல்லது வெளியுலகப் போர் ஏற்பட்டால், பாலஸ்தீனியர்களை அடைய எதிர்ப்பு இயக்கத்தின் எந்தவொரு முயற்சியையும் தடுப்பதற்கும், இஸ்ரேலுக்குள், இஸ்ரேலிய நிறவெறி ஆட்சிக்கும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இராணுவ ஆட்சிக்குமான எதிர்ப்புக்களை தடுப்பதுக்கும் அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.

இந்நிலையில், இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய தொழிலாளர்களின் எதிர்ப்பு இயக்கத்தை கட்டுப்படுத்த முயலும் முதலாளித்துவ அரசியல்வாதிகளுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும். தீர்க்கமான கேள்வி என்னவென்றால், முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் எதிரான ஒரு உறுதியான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை பாதுகாப்பதற்கு ஒரு புரட்சிகர தலைமையை உருவாக்குவது பற்றியதாகும். அதாவது, இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய தொழிலாளர்களின் போராட்டத்தை பிராந்தியத்தில் உள்ள அரபு, ஈரானிய, குர்திஷ் மற்றும் துருக்கி பகுதிகளிலும் மற்றும் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள சகோதர சகோதரிகளையும் ஐக்கிப்படுத்தி முதலாளித்துவத்திற்கு எதிராகவும், சோசலிசத்திற்கான போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதாகும்.