மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜனநாயக உரிமைகள் மீதான முன்னெப்போதும் இல்லாத தாக்குதலில், ஜனாதிபதி விக்கிரமசிங்க திட்டமிடப்பட்ட மார்ச் 9 உள்ளூராட்சித் தேர்தல்களை இரத்து செய்தார். அரசாங்கம், தேர்தலில் அதன் வேட்பாளர்கள் தோல்வியடைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கான அதன் முயற்சிகளை கீழறுத்துவிடும் என்று அஞ்சி இத் தேர்தலைத் தடுத்தது.
இலங்கை தேர்தல் ஆணையத்தால் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட இத் தேர்தலில் தலையீடு செய்த சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) மற்றும் அதன் பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவினரும், மஸ்கெலியாவிலுள்ள ஓல்டன், ஃபெயர்லோன், கிளனுகி, ஸ்ட்ரப்ஸி மற்றும் கார்ட்மோர் தோட்டங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
அரசாங்கத்தின் சமூகத் தாக்குதல்கள் மற்றும் அதிகரித்து வரும் உலகப் போர் அபாயத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களின் ஒரு சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னெடுத்துச் செல்வதற்காக சோசலிச சமத்துவக் கட்சி இத்தேர்தலில் தலையீடு செய்தது.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா பிரதேச சபை சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிட்ட மூன்று உள்ளூராட்சி சபைகளில் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் வசிப்பவர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர்.
மஸ்கெலியா பிரதேச சபைக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் 19 வேட்பாளர்களில் மூவர் கட்சியின் முன்முயற்சியின் பேரில் ஸ்தாபிக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் (பி.டபிள்யூ.ஏ.சி) உறுப்பினர்கள் ஆவர். சோ.ச.க. வேட்பாளர்களில் ஒருவரான ஏ. பரிமளாதேவி ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்தவர். 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஊதிய உயர்வுக்கான 47 நாள் வேலைநிறுத்தத்தில் தீவிரமாக பங்கு வகித்ததற்காக நிர்வாகத்தால் வேட்டையாடப்பட்டு வேலைநீக்கம் செய்யப்பட்ட 38 தொழிலாளர்களில் ஒருவர் ஆவர்.
பல தோட்டத் தொழிலாளர்கள் விக்கிரமசிங்க அரசாங்கத்தையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் ஏனைய பெருந்தோட்டத் துறை தொழிற்சங்கங்களின் துரோகப் பாத்திரத்தையும் கண்டனம் செய்தனர். கடந்த மாதம், இ.தொ.கா. தலைவர் ஜீவன் தொண்டமான் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சரானார்.
சக தொழிலாளர் குடியிருப்புகளுக்கு விஜயம் செய்த போது சோ.ச.க. பிரச்சாரகர்களுடன் இணைந்து கொண்ட ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு ஓய்வுபெற்ற தொழிலாளி, இ.தொ.கா.வை 'அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக' கண்டனம் செய்தார்.
தோட்ட நிர்வாகம் எங்கள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். நிர்வாகம் அல்லாத ஒரு அரசு சாரா அமைப்பு தோட்டத்தில் நீர் விநியோக வசதியை நிறுவியதானது இதனை நீரூபிக்கிறது. 'பொருட்களின் விலை தாங்க முடியாததால் நாங்கள் பட்டினி கிடக்கிறோம்', என்று அவர் மேலும் கூறினார், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தொழிலாளர்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் விளக்கினார்.
அரசாங்கமும் ஊடகங்களும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் விளைவுகளையும் மூன்றாம் உலகப் போரின் அபாயத்தையும் மூடி மறைக்க தொடர்ந்து முயன்று வருகின்றன. எவ்வாறாயினும், நடந்து வரும் மோதல் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு நேரடியாக பாதித்தது என்பதை பல தொழிலாளர்கள் விளக்கினர்.
நோர்வூட் பேஷன்ஸ் தொழிற்சாலையைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவரும் ஒரு குழந்தையின் தாயுமான அவர் யுத்தம் காரணமாக தானும் மேலும் பல ஊழியர்களும் வேலை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நிர்வாகம் அப்பட்டமாக 'ஐரோப்பாவிலிருந்து ஆடைக்கான கேள்வி நிறுத்தப்பட்டுள்ளன' என்றும் வேலையாட்கள் குறைக்கப்படவேண்டும் என்றும் அறிவித்திருந்தது.
'அந்த தொழிற்சாலையில் இப்போது தொழிலாளர்கள் குறைக்கப்பட்டுள்ளார்கள்' என்று அவர் கூறினார். 'போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதில் நான் உடன்படுகிறேன். உலகம் முழுவதும் போரினால் மக்கள் பாதிக்கப்பட்டும் அவதிக்குட்பட்டுக் கொண்டுள்ளனர். இந்த மோதலால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது’.
ஓல்டன் தோட்டத்தின் 10 வது பிரிவைச் சேர்ந்த தொழிலாளியான ஆறுமுகம் வீரன், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோட்டத்தில் பகுதியளவு அறிமுகப்படுத்தப்பட்ட வருவாய் பங்கீடு முறைமை (ஆர்.எஸ்.எஸ்) என்று அழைக்கப்படுவதன் கீழ் திணிக்கப்பட்ட அதிகரித்த சுரண்டல் குறித்து விளக்கினார். நிர்வாகம், அனைத்து தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், தோட்டத்தின் ஒரு பகுதியைப் பிரித்து, அந்த பிரிவுகளை 45 தொழிலாளர்களிடம் ஒப்படைத்தது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் 1,500 தேயிலை கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்த வேலை முறையால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று எ.வீரன் என்பவர் கூறினார். ‘’தேயிலை பறிப்பது, இடத்தை சுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும். நிர்வாகம் உரம் மற்றும் கிருமிநாசினிகள வழங்கினாலும், முதுகெலும்பு உடைக்கும் அனைத்து வேலைகளையும் நாங்களே செய்கிறோம்’’ என்று அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரிவுகளின் கீழ் இல்லாத தோட்டத்தின் பகுதிகளில் வேலை செய்ய வேண்டியிருப்பதால் தொழிலாளர்கள் தங்கள் ஓய்வு நாட்களை இழந்துள்ளனர் என்று அவர் விளக்கினார். வழக்கமாக ஒரு கிலோ தேயிலைக் கொழுந்தின் விலை 150 ரூபாய் என்ற போதிலும், ஆர்.எஸ்.எஸ் பகுதிகளில் இருந்து ஒரு கிலோ தேயிலைக் கொழுந்துக்கு நிர்வாகம் 50 ரூபாய் மட்டுமே வழங்குகிறது.
'எங்கள் விடுமுறை நாளாகக் கருதப்படும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட இந்த (ஆர்.எஸ்.எஸ்) பகுதிகளில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். முன்பு, நாங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை செய்தால், ஈபிஎஃப் (ஊழியர் வருங்கால வைப்பு நிதி) மற்றும் ஈ.டி.எஃப் (ஊழியர் நம்பிக்கை நிதியம்) நன்மைகளுடன் எங்களுக்கு ஒன்றரை நாட்கள் ஊதியம் வழங்கப்படும். அதை இப்போது இழந்துவிட்டோம் என்றார் வீரன். தொழிலாளர்களின் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிப்பதற்கான சோ.ச.க.யின் அழைப்பு, 'ஒரு நல்ல யோசனையாகும். இது குறித்து ஏனய தொழிலாளர்களிடம் பேச வேண்டும்' என்றார்.
கிளனுகி தோட்டத்தின் டீசைட் பிரிவைச் சேர்ந்த ஒரு இல்லத்தரசியான 37 வயதான எஸ். கிறிஸ்டிலா, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் தொழிலாளர்களுக்கு போதுமான சம்பளம் வழங்கப்படாதது பற்றி குறிப்பிட்டார். 'அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் சாப்பாட்டுக்கு கூட போதுமானதாக இல்லை. வாழ்க்கைச் செலவு அதிகம் என்பதால் உணவில் சேர்க்க கருவாடு கூட அவர்களால் வாங்க முடிவதில்லை. பெருந்தோட்ட தொழிற்சங்கங்களோ அல்லது அரசியல் கட்சிகளோ இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி சிறுதும் கவலைப்படவில்லை,' என்று அவர் கூறினார்.
முதலாளித்துவ அரசியல்வாதிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'அவர்கள் தோட்டத்திற்கு வந்து எங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்கள். அவர்கள் தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்காக இருப்பதாக நாடகமாடுகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த வசதியான வாழ்க்கையை மேம்படுத்த மட்டுமே வேலை செய்கிறார்கள். உங்கள் கட்சி வேறு. ஏனென்றால் அது எப்போதும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் போராட்டங்களை ஆதரிக்கிறது என்பதை நான் அறிவேன்.'
இ.தொ.கா. தலைவர் தொண்டமான் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் இணைந்தது குறித்து அவர் குறிப்பிடுகையில், 'இவர்கள் முன்னர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளனர், ஆனால் எங்களுக்காக எதையும் செய்யவில்லை. இந்த முறையும் தொண்டமான் நமக்காக எதுவும் செய்ய மாட்டார். அதற்கு பதிலாக, குடிநீர் கட்டணத்தை உயர்த்த அவர் முன்மொழிந்துள்ளார்’’ என்று அவர் கூறினார்.
சாமிமலை ஸ்ரப்ஸ்சி தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி எம்.செல்வராணி கூறுகையில், தோட்டப் பகுதிகளில் வழக்கமாக நிகழும் மின்கசிவு காரணமாக தனது வீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் அவரது வீட்டின் பெரும்பகுதியும், விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் உடைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் பள்ளி புத்தகங்களும் எரிந்து நாசமாயின. வானளவில் உயர்ந்துள்ள வாழ்க்கைச் செலவு, தீயினால் ஏற்பட்ட சேதத்தை மீட்டெடுப்பது மிகவும் கடினமாகிவிடும் என்று அவர் கவலைப்பட்டார்.
தனது மகள் சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்ததாகவும், ஆனால் அங்கு கொரோனாவால் இறந்ததாகவும், தனது இரண்டு குழந்தைகளையும் தனது பராமரிப்பில் விட்டுச் சென்றதாகவும் செல்வராணி விளக்கமளித்தார். சவூதி வீட்டு உரிமையாளர் ஒரு வருடம் முழுவதும் அவருக்கான நிலுவையிலுள்ள சம்பளத்தை அனுப்பவில்லை. அனாதைகளாகவுள்ள குழந்தைகளை பராமரிக்க எந்த வருமானமும் இல்லாததால், செல்வராணி தற்காலிக அடிப்படையில் தோட்டத்தில் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
'எனது மகளை வெளிநாட்டுக்கு அனுப்பிய நிறுவனத்திடம் அவரது மரணம் குறித்து நாங்கள் தெரிவித்தோம், ஆனால் எதுவும் நடக்கவில்லை. சவூதி அரேபியாவில் இருந்து எனது மகளுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தைப் பெற உதவுமாறு அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை அணுகினேன், ஆனால் யாரும் எங்களுக்கு உதவவில்லை’’ என்று துயரத்துடன் கூறினார்.
ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த எம்.யோகன் என்பவர், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தோட்டத்தில் பணிபுரிந்ததாகவும், ஆனால் இன்னும் வேலையில் நிரந்தர நியமனம் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
'ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் சம்பளத்தில் வாழ்வது மிகவும் கடினம், அந்த சம்பளத்தைப் பெற, தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 18 கிலோ பறிக்க வேண்டும். என்னுடைய மற்றும் என் சகோதரியின் குழந்தைகள் உட்பட ஐந்து பேரை நான் பராமரிக்கின்றேன். என் சகோதரி மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்கிறார், அவர் எங்களுக்கு மாதத்திற்கு 25,000 ரூபாய் அனுப்புகிறார். என் மனைவிக்கு வேலை இல்லை. எங்கள் குழந்தைகளின் கல்விக்கும் நாங்கள் பணம் செலுத்த வேண்டும்' என்று அவர் கூறினார்.
'தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காக எதுவும் செய்யவில்லை,' என்று அவர் மேலும் கூறினார். 'உங்கள் வேலைத்திட்டத்தைப் பற்றி நான் அறிந்து கொள்வது இதுவே முதல் முறை, எதிர்காலத்தில் அதைப் பற்றி மேலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்' என்று மேலும் அவர் தெரிவித்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தோட்டத்தில் வேலை செய்வதை நிறுத்த வேண்டியிருந்த டி.செல்வராணி என்பவர், தனது மூன்று குழந்தைகளுடன் ஒரு சிறிய குடிசையில் வசிக்கிறார். 'நான் ஒரு இதய நோயாளி, இந்த குடிசையில் வாழ்வது மிகவும் கடினம்' என்று அவர் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்களிடம் கூறினார். 'எனது நிலை குறித்து தோட்ட நிர்வாகம், தொழிற்சங்கங்கள், அரசுசார்பற்ற தொண்டு நிறுவனம் மற்றும் பிற அமைப்புகளிடம் நாங்கள் கூறியுள்ளோம், ஆனால் எங்கள் முறையீடுகள் குறித்து யாரும் கவனம் எடுக்கவில்லை’ என்று குறிப்பிட்டார்.
தனியார்துறையில் மின்சார தொழில்நுட்ப ஊழியராக வேலைசெய்யும் 20 வயதுடைய வசந்தன், ‘தேர்தல் குறித்த உங்கள் துண்டு பிரசுரத்தை படித்தேன். அதில் நல்ல விஷயங்கள் உள்ளன. தேர்தலின் போது அனைத்து கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தோட்டத்திற்கு வருவதை நான் அறிவேன். அவர்கள் எல்லா விதமான வாக்குறுதிகளையும் கொடுக்கிறார்கள், ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எதையும் செயற்படுத்துவதில்லை. நீங்கள் வித்தியாசமானவர்கள் என்று எனக்குத் தெரியும். நான் ஏற்கனவே உங்கள் கட்சியைப் பற்றி [தோட்டத்தில்] இளைஞர்களுடன் விவாதிக்கத் தொடங்கிவிட்டேன்' என்று குறிப்பிட்டார்.
இந்த நிலைமையில், இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், ஏப்ரல் 3 அன்று கொழும்புக்கு அருகில் உள்ள கொலன்னாவவில் 'இலங்கை ஜனாதிபதி உள்ளாட்சித் தேர்தலை தடுப்பதை எதிர்த்திடு! ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!” என்ற தலைப்பில் திறந்தவெளி பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளன.
எங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, எமது புரட்சிகர வேலைத்திட்டம் குறித்த இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்குபற்றுங்கள் என அழைப்பு விடுக்கிறோம்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடம்: கொலன்னாவ சந்தி, இலங்கை வங்கிக்கு முன்பாக.
திகதி மற்றும் நேரம்: ஏப்ரல் 3 மாலை 3 மணி