இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மார்ச் 9 நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ நகர சபை, மத்திய பெருந்தோட்டத்தின் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபை, யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களில் 53 வேட்பாளர்களை கட்சி நிறுத்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) தலைமையிலான அரசாங்கம், இடம்பெற்றுவரும் பரந்த மக்கள் எதிர்ப்பு, தங்களுக்கு அவமானகரமான தேர்தல் தோல்வியை விளைவித்துவிடும் என்ற அச்சத்தில், இந்தத் தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சித்தது.
ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கில் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களின் சுயாதீன இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அதன் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே உள்ளூராட்சித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி தலையிடுகிறது. ஒரு போர்-எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையிலும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டுகிறது.
கடந்த வாரம் சோசலிச சமத்துவக் கட்சியின் குழு ஒன்று கொழும்பின் புறநகர்ப் பகுதியான கொலன்னாவ பகுதியில் உள்ள மீதொட்டமுல்லையில் பிரச்சாரம் செய்தது. 'இலங்கையில் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற மக்களினதும் மாநாட்டிற்காக!” என்ற கட்சியின் அறிக்கை உட்பட அதன் இலக்கியங்களின் பிரதிகளை குழுவினர் விநியோகித்தனர். 20 ஜூலை 2022 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, தொழிலாளர்களதும் கிராமப்புற மக்களினதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டிற்காக பிரதிநிதிகளை அனுப்புவதன் அடிப்படையில், வேலைத் தளங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிப்பதற்கு உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் தேசிய பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினால் உக்கிரமடைந்துள்ள இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் வேர்கள் குறித்து பிரச்சாரகர்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடினர். அவர்கள் பாராளுமன்ற எதிர்க்கட்சிகளின் வகிபாகம், சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிச வேலைத்திட்டம் மற்றும் நடவடிக்கைக் குழுக்களின் தேவை பற்றியும் விளக்கினர்.
மீதொட்டமுல்ல பிரதானமாக குறைந்த வருமானம் கொண்ட மக்கள் செறிவாக வாழும் பிரதேசமாகும். அங்குள்ள குடியிருப்பாளர்களில் பலர் தினசரி கூலித் தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் களஞ்சியசாலைகள், சிறிய பொதியிடல் ஆலைகள் மற்றும் உள்ளூர் சபைகளிலும் வேலை செய்கிறார்கள். மற்றவர்கள் முச்சக்கர வண்டி சாரதிகளாகவும், செருப்பு தைப்பவர்களாகவும், வீதி வியாபாரிகளாகவும் பணிபுரிகின்றனர்.
சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்களுடன் குடியிருப்பாளர்கள் உடனடியாக அரசியல் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பெரும்பான்மையானவர்கள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களின் அரசியல்வாதிகளை கடுமையாகக் கண்டனம் செய்தனர். மோசமாகி வரும் பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவை அவர்கள் எவ்வாறு கையாள்கின்றனர் என்பதை கோபத்துடன் விளக்கினர். கடந்த ஆண்டு இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களில் சிலர் பங்குபற்றியிருந்தனர். கடந்த கால மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை அழித்ததாக பலர் குற்றம் சாட்டினர்.
ஒரு விதவை, வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், தன் குடும்பம் எப்படி வாழ்வதற்குப் போராடுகிறது என்பதை விளக்கினார். “எனது மகனின் கூலியில் [கட்டுமானத் தொழிலாளி] வாழ்கிறோம், ஆனால் சிமெந்து விலை உயர்வால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து வேலை கிடைக்கவில்லை. அவர் ஒரு நாளைக்கு 3,000 ரூபாய் [$US8] சம்பாதிக்கிறார். எங்களுக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவு இல்லை, காலை உணவு மட்டும்தான். நான் எனது நகைகளை அடகு வைத்துள்ளேன், ஆனால் இப்போது அதை விடுவிக்க முடியவில்லை,” என்று அவர் கூறினார்.
நீரிழிவு, அதிக கொலஸ்ட்ரால் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகளுக்காக அந்தப் பெண்மனி சிகிச்சை பெற்று வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருந்துகள் இல்லை எனவும் அவர் முறையிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு இணங்க, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட சுகாதார செலவினக் குறைப்புகளின் விளைவாக மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டதாக சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்கள் அவர்களுக்கு விளக்கினர்.
ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 14 ஏப்ரல் 2017 அன்று, மக்கள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடிக்கொண்டிருந்த போது, அப்பகுதியில் உள்ள ஒரு பெரிய குப்பை மலை சரிந்து விழுந்தது. டசின் கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டதோடு 32 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் சிலர் உயிருடன் புதையுண்டனர். இந்த துன்பம் குறித்து சோசலிச சமத்துவக் கட்சி மேற்கொண்ட ஒரு சுயாதீனமான தொழிலாளர் விசாரணை, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்புகளின் குற்றவியல் பொறுப்பை அம்பலப்படுத்தியது.
ஒரு குடும்பப் பெண்ணான கயானி, குப்பை மேடு இடிந்து விழுந்ததில் மூன்று குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை வருத்தத்துடன் விளக்கினார். கொழும்பு மாநகர சபையின் ஊழியரான இவரது கணவரின் ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. “எனினும் எனது ஊனமுற்ற கணவர் கடினமான சூழ்நிலையில் வேலைக்குச் செல்கிறார். வாழ்க்கை மேலும் மேலும் கடினமாகி வருகிறது. மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை,” என்று அவர் கூறினார்.
'இந்த அரசியல்வாதிகள் எவருக்கும் வாக்களிப்பதில் நம்பிக்கை இல்லை,' என்று கூறிய கயானி, அனைத்து முதலாளித்துவ அரசியல்வாதிகள் மீதும் தனது வெறுப்பை வெளிப்படுத்தினார். “ஆனால் உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும்,” என்று அவர் மேலும் கூறினார். சோசலிச சமத்துவக் கட்சியின் விசாரணை புத்தகத்தின் பிரதியை அவர் வாங்கினார். பிரச்சாரகர்கள் அவரது சுற்றுப்புறத்தில் ஒரு நடவடிக்கைக் குழுவை அமைப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிய பிறகு, அவர் அதில் சேரத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர், அனைத்து அரசியல் கட்சிகளையும் கண்டனம் செய்தார். “உங்களைப் போல் யாராவது வந்து அரசியல் பேசினால் எங்களுக்குக் கோபம் வரும். அவர்களுடன் [அரசியல்வாதிகளுடன்] பேச விரும்பவில்லை என்று அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள்,' என்று அவர் கூறினார்.
'நாங்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளோம், ஏனென்றால் யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது முக்கியமல்ல, அது பயனற்றது. பிள்ளைகளின் பாடசாலை சேர்க்கைக்கு அது தேவை என்பதால் மட்டுமே வாக்களிப்பது ஒரு விடயமாக உள்ளது. அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில்தான் வருகிறார்கள். அதன் பிறகு அவர்களை எங்கும் காண முடியாது.
8ம் வகுப்பு படிக்கும் மகளும், 9ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ள பெண் தொழிலாளி கௌசல்யா கூறியதாவது: “சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே அவர்களுக்கு வேலை கிடைக்கும். என் கணவர் நகரசபையில் பணிபுரிகிறார். அவரது அடிப்படை சம்பளம் வெறும் 20,000 ரூபாய் [$US54] ஆனால் கடன் தவணைகள் கழிக்கப்பட்ட பிறகு, எதுவும் இல்லை.
'பல தொழிலாளர்கள் மற்ற நாடுகளுக்கு இடம்பெயர முயற்சித்தாலும், இதில் ஆபத்துகள் உள்ளன. ஆனால் நாம் எப்படி வாழ முடியும் [வெளிநாட்டு வேலைகளில் வருமானம் கிடைக்காமல்] நம் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவது எப்படி? ஒரு ஜோடி செருப்பு 4,500 ரூபாய். ஒரு பாடசாலை பை 4,000 ரூபாய்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டத்திற்கு உடன்பட்ட அவர், அப்பகுதியில் ஒரு நடவடிக்கைக் குழுவை அமைப்பது பற்றிய கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.
இளம் முச்சக்கர வண்டி சாரதியான ஹசன், முன்னர் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தற்போதைய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும் கூட வாக்களித்திருந்தார்.
இந்தக் கட்சிகள் அனைத்திலும் ஏமாற்றமடைந்த அவர், சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்களிடம், தான் மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி.) வாக்களிப்பதாகக் கூறினார். “[ஜே.வி.பி தலைவர்] அனுரகுமாரவின் [திஸாநாயக்க] கொள்கைகள் நல்லவை,” ஆனால் ஜே.வி.பி. அவற்றை அமுல்படுத்துமா என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஜேவிபி எப்படி ஆதரவளித்தது என்பதையும், 1994ல் இருந்து கிட்டத்தட்ட எல்லா முதலாளித்துவ அரசாங்கத்தின் பங்காளிகளாகவோ அல்லது ஆதரவாளர்களாகவோ அது இருந்ததையும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்கள் விளக்கினர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழர்-விரோத இனவாதப் போருக்கான அதன் உற்சாகமான ஆதரவையும் 1988-90 காலகட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஜே.வி.பி.யின் பாசிச பயங்கரவாதத்தையும் அவர்கள் மீளாய்வு செய்தனர்.
கவனமாக கேட்டுக்கொண்டிருந்த ஹசன், ஜே.வி.பி.யின் அரசியல் வரலாறு 'சிக்கல் நிறைந்தது' என்று பதிலளித்தார். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் தேர்தல் பிரச்சாரம் பற்றி மேலும் கலந்துரையாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மூன்றாவது ஏகாதிபத்தியப் போரின் பெருகும் ஆபத்து பற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் பகுப்பாய்வைப் பற்றிக் குறிப்பிடுகையில், அவர் கூறியதாவது: “ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோவின் போர் முன்னோக்கிச் சென்றால், முழு உலகமும் நாசமாகிவிடும் அபாயம் உள்ளது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது குண்டு வீசியதன் விளைவுகளை ஜப்பானிய குழந்தைகள் இன்றும் எதிர்கொள்கின்றனர். நான் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதற்கும் இளைஞர்களை அணிதிரட்டுவதற்கும் முன் நிற்கிறேன். குறிப்பாக போருக்கு எதிராக ஒழுங்கமைவது பற்றி நான் மற்ற இளைஞர்களுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்வேன்.
“இந்தச் சூழ்நிலையில் ஜே.வி.பி. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடன் கைகோர்த்துள்ளது என்பதை நீங்கள் விளக்கியுள்ளீர்கள். அந்த உண்மைகளை நான் புரிந்து கொண்டேன். ஜே.வி.பி.க்கு முதலாளித்துவ அரசாங்கங்களை கையாள்வதில் ஒரு வரலாறு உண்டு” என்று அவர் கூறினார்.
இலங்கையில் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்: இலங்கை ஆளும் உயரடுக்கு அதன் கொடூரமான சாதனையை கொண்டாடுகிறது
இலங்கை சோ.ச.க. உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகிறது