இலங்கை சுகாதார ஊழியர்களின் நடவடிக்கைக் குழு அரச மருத்துவமனைகளில் "கட்டண வார்ட்டுகளுக்கு" (paying wards) எதிரான போராட்டத்தைத் தொடங்குகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அரச மருத்துவமனைகளில் கட்டண வார்ட்டுகளை அறிமுகப்படுத்தும் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக இலங்கையில் சுகாதார தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழு (HWAC) ஒரு பிரச்சார இயக்கத்தை தொடங்கியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அரசியல் முன்முயற்சியில் சுகாதார தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டது.

கண்டி மருத்துவமனை ஊழியர்கள் 28 ஏப்ரல் 2022 அன்று இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு அழைக்கும் பதாகையை அவர்கள் ஏந்தியுள்ளனர்.

கடந்த வாரம் சுகாதார தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையில் தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். பிரச்சாரகர்கள் வைத்தியசாலையில், 'அரசு மருத்துவமனைகளில் கட்டண வார்ட்டுகளை உருவாக்கும் திட்டத்தை தோற்கடி' என்ற அறிக்கையின் பிரதிகளை விநியோகித்தனர். அத்துடன் 'சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து போராட இலங்கை தொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்களை அமைப்பது அவசியம்” என்ற சோ.ச.க. அறிக்கையும் அங்கு விநியோகிக்கப்பட்டது.

விக்கிரமசிங்க அரசாங்கம் அதன் கடுமையான 2023 வரவு செலவுத் திட்டத்தில் கட்டண வார்ட்டுகளை அறிமுகப்படுத்துவதை உத்தியோகபூர்வமாக முன்மொழிந்தது. இலங்கையில் உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை சமாளிக்க வழங்கப்படும் அவசர கடனுக்கு ஈடாக, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கோரிக்கைகளுக்கு இணங்க அரச நிறுவனங்களை பரந்தளவில் தனியார்மயமாக்குவதை இந்த வரவு செலவுத் திட்டம் உள்ளடக்கியுள்ளது.

தொழிலாள வர்க்கம் வென்றுள்ள அடிப்படை நன்மையான இலங்கையின் பொது சுகாதார அமைப்பை அழிக்கும் நோக்கில், அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்ட வெட்டுத் திட்டத்தை தோற்கடிக்க, தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு முன்வருமாறும், போராடுமாறும் சுகாதார ஊழியர்களுக்கு சுகாதார தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தனியார்மயமாக்கல் தாக்குதல் பற்றி வாயை மூடிக்கொண்டிருப்பதன் மூலம் அதற்கு அவற்றின் மறைமுக ஆதரவை சமிக்ஞை செய்துள்ளன. 

கடந்த ஒக்டோபர் மாதம் பணம் செலுத்தும் படுக்கை பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்த போது, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் (அ.இ.தா.ச.) தலைவர் எஸ்.பி. மெத்தவத்த, தமது அமைப்பு இந்த நடவடிக்கையைத் தடுக்கும் என்று கூறினார். ஆனால் இது வெற்று ஆவேசப் பேச்சு மட்டுமே. 

மெத்தவத்தாவின் கருத்துக்கும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒரு உண்மையான போராட்டத்தை தயாரிப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மாறாக, அது தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை கட்டுப்படுத்தும் முயற்சியாகும். தனியார்மயமாக்கல் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்திற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டிலேயே அ.இ.தா.ச. இருக்கின்றது. அதிக பாராளுமன்ற ஆசனங்களை வென்று, அதே சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதை இலக்காகக் கொண்டே ஜே.வி.பி. தற்போது பொதுத் தேர்தலுக்கு போராடி வருகிறது.

கட்டண வார்ட்டுகள் அறிமுகப்படுத்தபடுவதை பற்றி சுகாதார தொழிலாளர் நடவடிக்கை குழு உறுப்பினர்களுடன் பேசிய பல சுகாதார ஊழியர்கள் அது சுகாதார தொழிலாளர்கள் மீது மட்டுமல்லாமல் நோயாளிகள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதும் நடத்தப்படும் ஒரு தாக்குதலாக அடையாளம் கண்டுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியரான தாரக கூறுகையில், “கட்டண வார்ட்டுகளை உருவாக்குவது நோயாளிகளை சுடும் சட்டிக்குள் தள்ளுவது போன்றது. நான் அதற்கு எதிரானவன். இப்போதும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது, நோயாளிகள் பரிசோதனை மற்றும் மருந்து வாங்குவதற்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகளில் பாதி கிடைக்காமல்  பரிசோதனை, அறுவை சிகிச்சை என பல மாதங்களாக காத்திருப்போர் பட்டியல் உள்ளது. கட்டண வார்ட்டுகள் உருவாக்கப்பட்ட பிறகு தற்போதுள்ள இலவச வசதிகள் கூட இல்லாமல் ஆக்கப்படும்.

கட்டண வார்ட்டு அமைப்பு 'சுகாதாரத்தை தனியார்மயமாக்குவதை நோக்கிய ஒரு முக்கிய படியாகும்' என்று தாராக கூறினார். அதன் நோக்கம் இலாபமும் அதற்கான செயல்பாட்டில் அங்கு  இருக்கும் ஏராளமான ஊழியர்களை தூக்கி வீசுவதுமாகும். 

“நிர்வாகம் ஏற்கனவே ஊழியர்களை சோர்வடையச் செய்வதற்கும் எதேச்சதிகாரமாக வேலைநீக்கம் செய்வதற்கும் செயல்பட்டு வருகிறது. சிறு தவறுகளுக்கு கூட எச்சரிக்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று மட்டும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு சேவைக்கு வரக்கூடாது என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலதிக கொடுப்பனவுகள் மேலும் குறைக்கப்படும், ஆனால் எங்களின் ஊதியம் ஏற்கனவே மிகவும் குறைவாக உள்ளது. வாழ்வதற்கு தற்போதைய சம்பளத்தை விட குறைந்தது ஐந்து மடங்கு அதிகம் தேவை” என்று அவர் மேலும் கூறினார்.

சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் ஆற்றி வரும் பங்கு குறித்து கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது: ”இந்த மருத்துவமனையில் ஏராளமான தொழிற்சங்கங்கள் உள்ளன. அவர்களுக்கிடையேயும் இழுபறி நடக்கிறது, அதாவது எங்களைப் போன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இப்பிரச்னையால், தொழிலாளர்களுக்கு போராடும் நம்பிக்கை இல்லை. பெரும்பான்மையான தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிரானவர்கள். ஆனால் தங்கள் சொந்த அரசியல் அமைப்பு இல்லாமல் போராடத் தயங்குகின்றனர்.

சுகாதார ஊழியர்கள் ஒரு சுயாதீனமான நடவடிக்கைக் குழுவை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சுகாதார தொழிலாளர் நடவடிக்கை குழு பிரச்சாரகர்கள் விளக்கியபோது, தாரக உடனடியாக அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

கம்பளை ஆதார வைத்தியசாலை தாதியான நயனா கூறியதாவது: “மருத்துவமனைகளில் கட்டண வார்ட்டு உருவாக்கப்பட்டால் நாங்கள் அடிமைகளைப் போல் வேலை செய்ய வேண்டியிருக்கும். தொழிற்சங்கங்கள் மௌனமாக இருப்பதாலும், ஊடகங்கள் இது குறித்து எந்த தகவலையும் வெளியிடாததாலும், பொது சுகாதார சேவையை தனியார் மயமாக்குவது குறித்து நோயாளிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

வைத்தியர்கள் மற்றும் தாதியர் வெளிநாடு சென்று வேலை பெற்றுள்ளதால் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய நயனா, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் விளக்கினார். கட்டண வார்ட்டு அறிமுகப்படுத்தப்பட்டால், 'கிடைக்கும் வரையறுக்கப்பட்ட நன்மைகள் கூட பணம் செலுத்தாத நோயாளிகளுக்குச் செல்லாது. அது நடந்தால், ஏழை நோயாளிகள் தற்போது பெறும் சேவையை இழக்க நேரிடும். 

'நோயாளிகள் மற்றும் சுகாதார சேவை ஊழியர்கள் இந்த பிரச்சினைகள் பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை. இது இரு தரப்பினருக்கும் ஆபத்தானது. இதன் அர்த்தம், குறைந்த ஆதாரங்களுக்காக நோயாளிகளுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படக்கூடும். இறுதியாக, இலவச சிகிச்சை பெறும் நோயாளிகள், தங்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்காததால் மருத்துவமனைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதனால் பொது சுகாதார அமைப்பு இறந்துவிடும் என்றும் கருதுவார்கள்.

கண்டி தேசிய வைத்தியசாலையின் இளநிலை ஊழியர் ஒருவர் கூறுகையில், “முன்கண்டிராத அழுத்தத்திற்கு உள்ளான சுகாதார ஊழியர்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கு எந்தவொரு தொழிற்சங்கமும் பொறுப்பேற்கவில்லை. எந்த ஒரு தொழிற்சங்கமும் கட்டண வார்ட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை நான் பார்த்ததில்லை. கடந்த தசாப்தங்களில் தொழிலாளர்களின் உரிமைகளை அரசாங்கங்கள் தாக்கி வரும் நிலையில் தொழிற்சங்கங்களால் எதையும் வென்றெடுக்க முடியவில்லை.

அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவுக்கு எதிரான ஏப்ரல்-ஜூலை வெகுஜன எழுச்சியைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், 'ஜே.வி.பி.யும் தொழிற்சங்கங்களும் இராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டங்களின் போது வெளியே வந்த தொழிலாளர்களை தவறாக வழிநடத்துவதற்கும் காட்டிக் கொடுப்பதற்கும் ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டிருந்ததாக நான் நினைக்கிறேன். இராஜபக்ஷவை விரட்டியடித்ததைத் தவிர, அவர்கள் அப்போதும், இப்போதும் எந்த வேலைத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டுவந்ததிற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இதேபோல், தொழிற்சங்கத் தலைவர்கள் ஏதாவதொரு அரசாங்கத்தை ஆதரிக்கிறார்கள். மறுபக்கம் அவர்கள் தொழிலாளர்களின் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்து, பல்வேறு நிர்வாகங்களில் இருந்து உயர் பதவிகள் போன்ற பலன்களைப் பெறுகிறார்கள். அவர்கள் அனைவரும் நண்பர்களாக இருக்கின்றனர்.'

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சுகாதாரப் ஊழியரான ஜயந்த, அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தாம் 'அதிர்ச்சியடைந்துள்ளதாக' தெரிவித்தார். தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனான தனது அனுபவம் மற்றும் கட்டண வார்ட்டுகளுக்கு அதன் மறைமுக ஆதரவு குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

'நான் விரைவில் ஓய்வு பெறுகிறேன், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, தொழிற்சங்கங்களின் தன்மையை நான் நன்கு புரிந்துகொண்டேன். எங்களுக்கு பெரிய பிரச்சனைகள் உள்ளன. புதிய தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படாததால் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. மேலதிக நேரம் குறைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் கடந்தும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய போனஸ் [பணிக்கொடை] கிடைக்கவில்லை.

'நாங்கள் ஒரு நாள் தொழிற்சங்க உறுப்பினர்களாக சுகாதார அமைச்சுக்குச் சென்று இதைப் பற்றி பேசினோம், இங்கு [மருத்துவமனையில்] தொழிற்சங்கத் தலைவராக பணியாற்றிய ஒருவரின் மகனுக்கு அமைச்சகத்தில் வேலை கொடுக்கப்பட்டதை நான் அறிந்தேன்,' என்று அவர் கூறினார். 

'மக்களுக்கு வேலை கிடைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் பலருக்கு வேலை இல்லை என்றாலும், எங்களின் பிரச்சனைகளை பேசுவதே இவர்களின் வேலை என்று கூறி தலைமைக்கு நியமிக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் சலுகை பெற்ற நிலையில் உள்ளனர். அவர்கள் எங்களை காட்டிக்கொடுத்து விட்டார்கள் என்பதை நாங்கள் நன்றாக புரிந்துகொண்டோம். தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்” என்று ஜயந்த மேலும் கூறினார்.

சுகாதார தொழிலாளர் நடவடிக்கை குழு பிரச்சாரகர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் மக்களுடனும் பேசினர்.

ஓட்டல் ஊழியர் கணேஷ் கூறியதாவது: “அரச மருத்துவமனைகளில் கட்டண வார்ட்டுகள் அமைக்கப்படுவதால், தீவிர விளைவுகள் ஏற்படுகின்றன. எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு கட்டண வார்ட்டுகளில் சிகிச்சை பெறுவது சுலபமாக இருக்காது. மக்கள் இறந்தாலும் இந்த அரசாங்கங்கள் கவலைப்படுவதில்லை.

“நான் கிங்ஸ்பரி ஹோட்டலின் பணியாளராக இருக்கிறேன், ஆரோக்கியத்திற்காக செலவிடுவதில் உள்ள சிரமத்தைப் புரிந்துகொள்கிறேன். பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தாலும், எங்களின் கூலி அதிகரிக்கவில்லை. சுற்றுலாப் பயணிகள் வராததால் நஷ்டம் அடைவதாக ஹோட்டல் நிர்வாகம் கூறுவதோடு அந்த சாக்கு போக்கு கூறி ஊழியர்களை பணி நீக்கம் செய்கின்றனர். இந்த நிலைமை எல்லா இடங்களிலும் உள்ளது. தொழிலாளர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், இது அதிக நோய்கள் வருவதற்கான ஒரு பகுதி காரணமாகும்.

இலங்கை: அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்திற்கு எதிராகப் போராடுவது எப்படி?

இலங்கைப் பாராளுமன்றம் கொடூரமான “புனர்வாழ்வு” சட்டத்தை நிறைவேற்றியது

ஆயிரக்கணக்கான இலங்கை சுகாதாரத் தொழிலாளர்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்தனர்